இன்றைய காந்திகள்

காந்தியத் தொழில்முறை: அர்விந்த் கண் மருத்துவக் குழுமம்- பாலா
ஆரோக்கிய ஸ்வராஜ்யம்: மருத்துவர்கள் அபய் மற்றும் ராணி பங் – பாலா
சோனம் வாங்ச்சுக் – காந்தியத் தொழில்நுட்பர் – பாலா
ராஜேந்திர சிங் – தண்ணீர் காந்தி! – பாலா
அருணா ராய்: மக்கள் அதிகாரமும், பங்கேற்பு ஜனநாயகமும்! -பாலா
பங்கர் ராய் எனும் வெறும் பாதக் கல்லூரி – பாலா
லக்‌ஷ்மி சந்த் ஜெயின் – அறியப்படாத காந்தியர்- பாலா
போற்றப்படாத இதிகாசம் -பாலா
ஜான் ட்ரெஸ் – பொருளியல் பேராசிரியர்; மனிதாபிமானி; துறவி!

அன்பின் ஜெ..

இத்துடன் இந்த முதல் முயற்சியை நிறுத்திக் கொள்கிறேன்.

வர்கீஸ் குரியன், லக்‌ஷ்மி சந்த் ஜெயின், ராஜேந்திர சிங், பங்கர் ராய், அருணா ராய், அபய்/ராணி பங், டாக்டர் வெங்கிடசாமி, ஜான் ட்ரெஸ் மற்றும் இலா பட் என நவ காந்தியரின் முதல் வரிசை. ஒரு சிறு வரிசை மட்டுமே. இன்னும் எழுதப்படாத பெரும் மனிதர்கள் இருக்கிறார்கள்.

நான் வேலை செய்யத் துவங்கிய 90களில், இந்தியப் பொருளாதாரக் கொள்கைச் சீர்திருத்தம் துவங்கியது. சுதந்திரச் சந்தை, நாடுகளின் பொருளாதாரச் செயலதிறனை மேம்படுத்தி, வேகமான வளர்ச்சிக்கு உதவுகிறது எனினும், அதனால், எல்லா நாடுகளிலுமே பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்துள்ளன. இந்தியாவிலும் இதே நிலைதான்.

ஆங்கிலேயர் வரும் முன்பு, இந்தியா உலகின் மிகப் பெரும் பொருளாதாரம். வேளாண்மையும், வணிகமும் செழித்த நாடு. ஆனால், ஆங்கிலேயர் வந்த பின்பு, 200 வருடங்கள் தொடர் கொள்ளையின் காரணமாக, சுதந்திரம் பெற்ற காலத்தில், உலகின் மிக ஏழை நாடுகளில் ஒன்றாக மாறியிருந்தது. அத்துடன் அதிக மக்கள் தொகை.

இந்தியாவின் அஸ்திவாரத்தை மிகப் பெரும் கனவுடன், தீர்க்கதரிசனத்துடன் கட்டிய நேரு, மக்கள் தொகை என்னும் விஷயத்தைத் தொடவில்லை. இது ஒரு பெரும் பிரச்சினையாக மாறும் என ஜே.ஆர்.டி. டாட்டா சொன்னதை அவர் கேட்கவில்லை. 1971 ஆம் ஆண்டு நாம் குடும்பக் கட்டுப்பாடுக் கொள்கையை முன்னெடுக்கையில் காலம் கடந்து விட்டது. இந்தியா, அமெரிக்காவின் பரப்பளவில் மூன்றில் ஒரு பகுதி சிறியது. நான்கு மடங்கு அதிக மக்கள் தொகை கொண்டது. எனில், தனி மனித சராசரி பரப்பளவு மிகக் குறைவு. கிட்டத்தட்ட 30 கோடி மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கிறார்கள். இன்னும் 20-30 கோடி, அதன் அருகில் வாழ்கிறார்கள். 130 கோடி மக்கள் தொகை என்பது, இந்திய நிலப்பரப்பின் மீதான பெரும்பாரம்.

இவர்கள் அனைவருக்கும் தனியார் துறை, தனது வளர்ச்சியினால், வேலைவாய்ப்பை உருவாக்க முடியாது. இன்று தனியார் துறை உற்பத்தி அலகுகள், குறைந்த தொழிலாளர்களையும், அதிக இயந்திரங்களையும், கொண்டதாக மாறி வருகின்றன. வருங்காலத்தில், உற்பத்தி அதிகரித்தாலும், வேலைவாய்ப்பு அதிகரிக்காது.

மானியங்களால், செயற்கையாகக் குறைவாக மட்டுறுத்தப்படும் உலக வேளாண் பொருட்கள் விலைகளால், வேளாண்மை ஒரு லாபமில்லாத தொழிலாக உள்ளது. கைத்தொழில்கள், நெசவு போன்றவை நசிந்து கொண்டே வருகின்றன.

நேரு முன்னெடுத்த, நவீன இந்தியாவின் கோவில்களான பெரும் அணைகள், நீர்ப்பாசனத் திட்டங்கள், நவீனத் தொழில்கள் வழியான முன்னேற்றம், பின்னர் வந்த நவ தாராளப் பொருளாதாரக் கொள்கைச் சீர்திருத்தங்கள் முதலியவை, அனைவரின் வாழ்க்கையையும் முன்னேற்றாது என்பது இன்று நாம் அடைந்திருக்கும் நிலை.(வறுமை குறைந்திருந்தாலும்)

இங்கேதான் காந்தி மீண்டும் வருகிறார். ‘நான் அப்பவே சொன்னேனே’, என பொக்கை வாய்ச் சிரிப்புடன்.

ராஜஸ்தான் ஆள்வர் மாவட்டத்தில் இயங்கும், ஆர்வரி நதிநீர்ப் பாராளுமன்றம் – பெய்யும் 600 மில்லிமீட்டர் நீரைச் சேமித்து, அளவாகப் பயன்படுத்தி, 70 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை நீடித்து நிலைக்கும் வகையில் நிலைநிறுத்தியுள்ளது. அந்தக் கிராமங்களில் இருந்து, தில்லிக்குக் கூலி வேலை செய்யப் போய், சேரிகளில் வாழ்ந்த மக்கள் மீண்டு வந்து, கௌரவமான வாழ்க்கையை மீட்டெடுக்க உதவியிருக்கிறது. காந்தியப் பொருளாதாரத்தின் வெற்றிக்கும், நீடித்து நிலைக்கும் தன்மைக்கும் இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.

சுதந்திரச் சந்தை வலுப்பெற்று, ஒரு மதம் போல தன் பல்லாயிரக்கணக்கான கரங்களால், இந்தியச் சமூகத்தை இறுக்கி வருகிறது. பொருளாதாரத்தின் அடித்தட்டில் இருக்கும் ஒரு பெரும் சமூகம், இதனால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுக் கொண்டேயிருக்கும். அவர்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்திக் கொடுக்க, வருமானத்துக்கேற்ப, ஒரு கௌரவமான, நீடித்து நிலைக்கும் வாழ்க்கையை காந்திய வழிகளே உருவாக்கித் தர முடியும் என்பதே இந்த முயற்சியின் வழி நான் அடைந்திருக்கும் மனநிலை. சுதந்திரச் சந்தை, காந்தியை உள்வாங்கினால், உலகம் மேன்மையடையும் என்பது என் நம்பிக்கை.

எழுத ஊக்குவித்த, பண்படுத்திய உங்களுக்குக் கோடானு கோடி நன்றிகள்.

அன்புடன்

பாலா

***

பணமில்லாப் பொருளாதாரம் – பாலா
மேகி நாடகம், இரு கடிதங்கள்- பாலா
அன்னிய முதலீடு- பாலா
தேங்காயும் சில தத்துவச்சிக்கல்களும் -பாலா
எதிர்மறை வருமான வரி- பாலா
என் கந்தர்வன் — பாலா
1991 பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்.. பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-2, பாலா
இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! -பாலா
1991 முதல் பொருளாதாரச் சீர்திருத்தமும், இந்தியப் பொருளாதார வளர்ச்சியும்-3, பாலா
கலையரசனின் கட்டுரை- பாலா
பாலாவின் கட்டுரைகள்
முந்தைய கட்டுரைமீச்சிறு கடல் -கடிதம்
அடுத்த கட்டுரைமாயாவிலாசம்!