’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66

வேதியரின் நான்கு எரிகுளங்களிலும் அனல் எழுந்து கொழுந்தாடிக்கொண்டிருந்தது. அதர்வ வேதம் உடனொலித்தது. இடுகாட்டில் ஒலிக்கத்தக்க ஒரே வேதம். ஆனால் அதிலுள்ள சொற்களில் பெரும்பகுதி பிற மங்கல வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. அவை தங்கள் அணிகள் அனைத்தையும் கழற்றிவிட்டு எழுகின்றன. வாளின் உறையில்தான் பொற்செதுக்குகளும் அருமணிநிரைகளும். உருவப்பட்ட வாள் கூர் ஒன்றாலேயே ஒளிகொண்டது. வேதங்களில் அதர்வமே விசைகொண்டது. தெய்வங்களிடம் அது மன்றாடுவதில்லை, ஆணையிடுகிறது, அறைகூவுகிறது. மூன்று வேதங்களின்மேல் ஏறி நின்று அடையப்பட்டது அதர்வம்.

வேதியர் முன் நின்றிருந்த கணியர் சுப்ரதர் அருகே வந்து “எரிகுளங்கள் எழுந்துவிட்டன. பொழுதும் அணைகிறது” என்றார். “இன்னும் சற்றுநேரம்தான்.” சுப்ரதர் “பார்ப்போம்” என்றபின் சென்று சற்று விலகி நின்று விருஷாலியின் அணுக்கப்பெண்டை அருகழைத்தார். அவள் வந்து தலைவணங்க “அரசி உடன்கட்டை ஏறுவதென்றால் அணியாடைகள் பூணவேண்டும்” என்றார். அவள் “எடுத்துவந்துள்ளேன்” என்றாள். சுப்ரதர் வெறுமனே நோக்க “அவர்களின் மணநாள் ஆடையும் அன்று அணிந்த அணிகளும்” என்றாள். “அணிவித்து ஒருக்குக!” என்றார். அவள் “இன்னும் சிறுபொழுதுக்குள்” என்றாள். அவர் அவளை கூர்ந்து நோக்கி “அரசி அதே உறுதியுடன்தான் இருக்கிறார்களா?” என்றார். “அவர் எப்போதுமே உறுதி மாறியவர் அல்ல” என்றாள். “நீ அவருடன் நெடுங்காலமாக இருக்கிறாயா?” என்றார். “அவர் குழவியாக இருக்கையிலேயே அறிந்தவள்” என்றாள் அணுக்கப்பெண்டு.

சுப்ரதர் ஒவ்வொன்றாக நோக்கியபடி நடந்தார். பிரசேனன் சிவதரின் உதவியுடன் வெண்ணிற ஆடை அணிந்துகொண்டிருந்தான். ஏவலர் இருவர் அருகே வந்து நின்றனர். அவர் நோக்க “அனைத்தும் ஒருங்கிவிட்டன…” என்றார் முதிய ஏவலர். “ஆம், தொடங்கிவிடுவோம்” என்றார் சுப்ரதர். “காந்தாரர் கிளம்பிவிட்டார் அல்லவா?” என்று விழியை வேறுபக்கம் திருப்பியபடி கேட்டார். “ஆம், அரசர் மட்டும் இருக்கிறார்.” சுப்ரதர் “என்ன செய்கிறார்?” என்றார். “அருகே அமர்ந்து அங்கநாட்டரசரை பார்த்துக்கொண்டிருக்கிறார். உள்ளம் இங்கிருப்பதுபோல் தெரியவில்லை. புன்னகையுடன் தென்படுகிறார்.” சுப்ரதர் தலையசைத்தார். அவர்கள் வணங்கி பின்னடைந்தார்கள்.

சுப்ரதர் நிலைகொள்ளாமல் நடந்தார். முடிவெடுக்கவேண்டும். வானை நோக்கியபோது முற்றிருளே தெரிந்தது. காத்திருப்பதா, அன்றி அருமணியில் எழும் கதிரொளியே போதுமா? எல்லாமே சடங்குகள்தான். ஆனால் கதிரெழவில்லை என்றால் அது காலநினைவில் நின்றிருக்கும். அவர் அன்றும் போர் நிகழுமா என அறிய விழைந்தார். போர் நிகழாதென்றால் முழுப்பகலும்கூட கதிருக்காக காத்திருக்கலாம். ஆனால் அதை எவரிடம் கேட்கவியலும்? அவர் தொலைவில் நின்று துரியோதனனை பார்த்தார். பின்பக்கத் தோற்றத்திலேயே அவன் வேறு ஒருவன் என தோன்றினான்.

நீள்மூச்செறிந்தவராக அவர் திரும்பி சிதைநோக்கி சென்றார். தொலைவில் விருஷாலி அணியாடை அணிந்து நின்றிருப்பதை கண்டார். மணக்கோலம்தான், ஆனால் முழுமையான அமங்கலத்தன்மை கூடியிருந்தது. ஓர் அணி குறைவில்லை. ஆயினும் அவளிடம் சாவு படிந்திருந்தது. ஏன்? அவள் முகம் கலங்கி வீங்கியதுபோல் தெரிந்தது. விழிகள் மங்கலடைந்து இரு கரிய கூழாங்கற்கள் என உயிரற்றிருந்தன. அக்கணமே அவர் முடிவெடுத்தார். நேராக வைதிகரிடம் சென்றார். வைதிகர்தலைவர் அவரை நோக்க “அருமணியில் கதிரவன் எழட்டும். நாம் அரசரை சிதையேற்றுவோம்” என்றார். அவர் “அதுவே உகந்தது… இன்றும் போர்நிகழும் என்றார்கள்” என்றார். சுப்ரதர் “எவர்?” என்றார். “காந்தாரர்” என்றார் வேதியர். “நான் அவரிடம் கேட்டேன். அரசர் முடிவை அறிவித்துவிட்டுத்தான் இங்கே வந்திருக்கிறார்.” சுப்ரதர் பெருமூச்சுவிட்டு “ஆம், அதை நான் எதிர்பார்த்திருக்கவேண்டும்” என்றார்.

சுப்ரதர் சூதர்கள் பாடிக்கொண்டிருந்த இடத்தை அடைந்தபோது நின்றிருந்த சூதர்களில் ஒருவர் வந்து அருகே நின்றார். “பொழுதணைந்துவிட்டது. அரசரை சிதையேற்றுவோம். கதிரொளியாக அருமணியின் சுடரே போதும் என அந்தணர் சொல்கிறார்கள்” என்றார். அவர் தலையசைத்தார். சுப்ரதர் துரியோதனனிடம் “அரசே, எழுக! சடங்குகள் தொடங்கவிருக்கின்றன” என்றார். “ஆம்” என அவன் எழுந்தான். “சுபாகு எங்கே?” என்று ஆடையை சீரமைத்தபடி இயல்பாக கேட்டான். சுப்ரதர் பேசாமல் நின்றார். அவன் உடனே புரிந்துகொண்டு “ஆம்” என்று தலையசைத்தான். “செல்க!” என்றான். சுப்ரதர் தலைவணங்கி பின்னடைந்தார்.

ஆனால் அங்கிருந்து விலக அவரால் இயலவில்லை. அப்பால் தயங்கி நின்று சூழ நோக்கினார். நிலைகொள்ளாமல் சிதைக்கும் கர்ணணின் உடலுக்குமாக விழிகளை ஓட்டிக்கொண்டிருந்தார். கர்ணனை விழிநிலைக்க நோக்க அவரால் இயலவில்லை. ஆனால் வேறு எதை நோக்கினாலும் விழிகள் கர்ணனை நோக்கியே மீண்டன. ஒருமுறை தொட்டுவிட்டு எழுந்த நோக்கு அதிர்ந்து மீண்டும் சென்று தொட்டது. அவன் தொடைக்கவசத்தின் இடுக்கில் இருந்து குருதி கசிவதுபோல தோன்றியது. அது பந்தங்களின் செவ்வொளிதான் என முதலில் எண்ணினார். விழி திருப்பிய பின்னரும் அக்காட்சி அவ்வண்ணமே எஞ்சியது. மீண்டும் நோக்கியபோது அது மேலும் துலங்கியது.

அவர் மேலும் அருகே சென்று கூர்ந்து நோக்கினார். அது ஒளியின் தோற்றம் என பலமுறை சொல்லிக்கொண்டும் விழி உறுதியாகக் காட்டியது. குருதியேதான். கொழுத்த துளியாக திரண்டு, சொட்டாமல் வழிவை நடித்து நின்றது. அவர் திரும்பி ஏவலனை நோக்கி அருகே வரும்படி அழைத்தார். அவன் வந்ததும் கவசத்தை கழற்றும்படி சொன்னார். அவன் திகைத்தபின் ஒன்றும் சொல்லாமல் தொடைக்கவச அடுக்குகளை ஒவ்வொன்றாக அகற்றினான். கவசங்கள் குருதி நனைந்திருந்தன. உள்ளிருந்த ஆடை குருதியில் ஊறியிருந்தது.

ஏவலன் அச்சத்துடன் கைநடுங்க கவசத்தை நழுவவிட்டான். அது மணியோசையுடன் மண்ணில் விழுந்தது. அவர் சினத்துடன் திரும்பி நோக்க ஏவலன் “அணியர் முழுமையாக நோக்கினர், அமைச்சரே. நாங்களும் நோக்கினோம். இந்தப் புண் எங்கள் விழிகளுக்கு தென்படவே இல்லை” என்றான். அது புதுக்குருதி என்பது அவன் சித்தத்தை எட்டவில்லை. சுப்ரதர் சினத்துடன் ஆடையை அகற்றும்படி கையசைவால் சொன்னார். ஆடை அகற்றப்பட்டபோது அவன் தொடையில் இருந்த சிறு புண் தென்பட்டது. சுப்ரதர் கூர்ந்து நோக்கினார். அது அம்புப்புண் என தோன்றவில்லை கூரிய ஊசி குத்தி துளைத்துச் சென்றதைப்போல தெரிந்தது.

அவர் குழப்பத்துடன் சூதர்களை நோக்கினார். அவர்கள் வேறு ஓர் உலகிலிருந்தனர். அவரைக்கூட அவர்கள் உணரவில்லை. அவர் நோக்குவதைக் கண்டு துரியோதனன் அருகே வந்தான். அவன் குனிந்து நோக்க சுப்ரதர் “புதுப் புண் என படுகிறது. குருதி தூயதாக உள்ளது. அரசர் களம்பட்டு நெடும்பொழுது ஆகிறது. அவர் உடலும் நன்கு குளிர்ந்துள்ளது” என்றார். துரியோதனன் சிலகணங்கள் நோக்கிக்கொண்டிருந்தான். “ஒருவேளை…” என்றபின் கர்ணனின் முகத்தை நோக்கிய சுப்ரதர் “விந்தை” என்றார்.

துரியோதனன் வியப்பற்ற குரலில் “அது அவ்வாறே இருக்கட்டும். நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றான். சுப்ரதர் அவனை ஒருகணம் நோக்கிவிட்டு எழுந்துகொண்டார். கவசத்தை மீண்டும் அணிவிக்கும்படி ஏவலனிடம் சொன்னார். அந்தப் புண்ணை அழுத்திக்கட்டி குருதியை நிறுத்திவிடமுடியாது என அவருக்கு தோன்றியது. ஏவலன் கவசங்களை அணிவிப்பதை நோக்காமல் விழிகளை திருப்பிக்கொண்டார். அது அம்புபட்ட புண் அல்ல. மிகச் சிறிய கூரிய துளை. ஊசியா? ஊசி எப்படி கவசம் கடந்து செல்லமுடியும்? ஆடையை அணிவிக்கையிலா? ஆனால் அத்தனை ஆழமாகவா? அவர் தன் தலையை உதறி அவ்வெண்ணங்களை தவிர்த்தார்.

தொலைவில் நின்றிருந்த காவலன் அவருடைய தலையசைவை அழைப்பு என எடுத்துக்கொண்டு அருகே வந்தான். அவர் அவனிடம் கையசைத்ததும் அவன் கையசைக்க காட்டின் ஓங்கிய மரத்தின் மேலிருந்த முரசுமேடையிலிருந்து முரசொலி எழுந்தது. கொம்புகள் பிளிறியபடி இணைந்தன. தொலைவில் மேலும் மேலும் முரசுகள் ஒலித்தன. ஆனால் வழக்கமாக படைகளிலிருந்து எழும் முழக்கம் கேட்கவில்லை. அங்கே படைகளே இல்லை. சிவதர் பிரசேனனை அழைத்துக்கொண்டு வந்து சிதையருகே நின்றார். பிரசேனனின் விழிகள் சென்ற திசையை நோக்கி தன் விழிகள் திரும்பியபோதுதான் மீண்டும் கர்ணனை பார்த்தார். அவர் உள்ளம் முதல்முறை அவனை பார்க்கநேர்ந்ததுபோல் அதிர்ந்தது. பந்தங்களின் ஒளியில் அணிகள் மின்ன உள்ளத்துள் புன்னகை நிறைந்திருப்பது போன்ற முகத்துடன் அவன் படுத்திருந்தான்.

பேரழகு, பேரழகு, பேரழகு என அவர் உள்ளம் சொல்வடிவாகி பெருகியோடியது. இத்தனை பேரழகை ஏன் அளித்தன தெய்வங்கள்! அவனைப் பார்க்கும் எவரும் அதை கேட்டிருப்பார்கள். தெய்வமாகும்பொருட்டு. தெய்வங்கள் மானுடரை முழுமையாக வென்றே அந்தப் பீடத்தை அடைகின்றன. மானுடரை எச்சமில்லாது வெல்லும் வழி ஒன்றே. அவர்களின் தன்னிலைகளை சிறிதாக்குதல். ஆணவங்களை அணுவாக்குதல். அதனூடாக தான் பேருருவாதல். வாழ்நாளெல்லாம் அவன் இயற்றியது அதுதானா? எத்தனை பேரழகு! பிரசேனனின் விழிகள் கர்ணனின் உடலில் இருந்து அகலவில்லை. ஆனால் சிவதர் தலைகுனிந்து இரு கைகளையும் விரல்கோத்து வயிற்றுடன் சேர்த்து நின்றிருந்தார். அவருடைய தோள்தசைகள் இறுகியசைந்தன. கழுத்துநரம்பு புடைத்திருந்தது. உதடுகள் இறுகியிருந்தன. பேரெடை ஒன்றை தூக்கியிருப்பவர்போல. பெருவிசை ஒன்றை தடுத்துப் பற்றியிருப்பவர்போல.

துரியோதனனும் விழியசைக்காமல் கர்ணனை நோக்கிக்கொண்டிருந்தான். முகம் அதே மலர்வுடன் இருந்தது. விழிகளில் இளமைந்தர்களுக்குரிய ஒளி. அவர் விருஷாலியை பார்த்தார். அவள் முகம் அவரை மீண்டும் அதிரச்செய்தது. அது இறந்துவிட்டிருந்தது. அணுக்கப்பெண்டு கொண்டுவந்த மலர்மாலையை அவள் கழுத்தில் அணிந்தாள். வெண்ணிறப் பட்டால் உடலை முழுக்க மூடினாள். அவள் விழிதூக்கி கர்ணனை நோக்கவில்லை என்பதை சுப்ரதர் உணர்ந்தார். திரும்பி கர்ணனைப் பார்த்தார். இறந்தவன் உயிரொளியுடன் மின்ன இன்னும் இறக்காதவளின் உடல் பிணம்போல் தெரிகிறது.

எண்ணிக்கொண்டு உடல் திடுக்கிட சுப்ரதர் சிதைக்காவலனை நோக்கி சென்று “விஜயம்… அவருடைய வில் சிதையில் வைக்கப்படவேண்டும்” என்றார். “ஆம், அதை கொண்டுவந்துள்ளோம்” என்றான் சிதைக்காவலன். “நன்று” என்று அவர் பெருமூச்சுடன் சொன்னார். “அவருடைய அரசக்கணையாழி மட்டும் மைந்தனுக்குரியது” என்றார். ஏவலன் தலைவணங்கினான். “இங்கிருந்து அவருடன் செல்லப்போவது என்ன?” எவர் அதை கேட்டார்கள் என அவர் திரும்பி சூழ நோக்கினார். “இங்கிருந்து அவருடன் செல்லப்போவது என்ன?” அவர் அக்குரலை எங்கோ ஒலிப்பதுபோல மீண்டும் கேட்டார். எண்ணி எண்ணி நோக்கினார். ஒன்றுமில்லை. எதையேனும் மறந்துவிட்டிருப்போமோ? எனில் அதுவே இறையாணை.

எட்டு சிதைக்காவலர்கள் சென்று கர்ணனின் கால்தொட்டு வணங்கிவிட்டு அவன் படுத்திருந்த பச்சையோலை தட்டோடு சேர்த்து தூக்கினர். சூதர்கள் அனைவரும் இணைந்து குரவையோசை எழுப்பினர். தங்கள் இசைக்கலங்களை முழக்கியபடி குரவையிட்டுக்கொண்டு கர்ணனின் உடலை சூழ்ந்து தொடர்ந்து வந்தனர். வேதத்தின் ஒலியும் இணைந்துகொண்டது. வழக்கமாக உடல்கள் தூக்கப்படும்போது அவை சற்று அசையும். புரண்டு எழமுயல்பவைபோல. கர்ணனின் உடல் அசைவில்லாது காற்றில் மிதப்பதுபோல் வந்தது. உடல்கள் அசைவது அவற்றிலிருக்கும் எடைநிகரின்மையால். தூக்குபவர்கள் அந்த எடையை தோள்களில் நிகர்செய்துகொள்வதுவரை உடல் அசைந்துகொண்டிருக்கும். கர்ணனின் உடல் துலாமுள் என நிகர்கொண்டது.

அக்கணம் அந்தக் குரவை ஒலி சுப்ரதரை பதற்றம் கொள்ளச் செய்தது. காட்டுவிலங்குக் குழு ஒன்றின் ஓசைபோல் அது ஒலித்தது. அத்தனை அணிச்சொற்களுக்குப் பின் அத்தகைய பொருளில்லா ஒலி எழுகிறது. அத்தனை சொற்களும் கலைந்து கலந்து அது உருவானது போலிருந்தது. அல்லது அந்தக் குரவையொலி உடைந்து பிரிந்து உருவானவை அச்சொற்கள். ஊளைகளின் கலவை. மிகமிகத் தொன்மையான ஓசை. நாய்களில் இருந்தும் குரங்குகளில் இருந்தும் எழும் ஓசை. அவற்றின் மொழியின் உச்சம். சொற்களனைத்தையுமே கையாளும் ஒரு பெருங்காவியம் அதன் இறுதியில் இவ்வண்ணம்தான் பொருளிலா உணர்வாக ஒலிக்கக்கூடுமா? அவ்வொலி அணுகும்தோறும் அவர் கைகால்கள் நடுங்க தன் உடலை ஒடுக்கிக்கொண்டார்.

சிதைக்காவலர்கள் சிதைமேல் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஏணிகளினூடாக ஏறி கர்ணனின் உடலை சிதையின்மேல் பரப்பப்பட்டிருந்த தர்ப்பைப்படுக்கையில் வைத்தனர். ஏவலர் இருவர் கர்ணனின் வில்லை எடுத்துவந்தனர். அது அவர்களின் கைகளில் கருநாகம்போல் நெளிந்து வளைந்திருந்தது. ஏணி வழியாக ஏறி அதை கர்ணனின் வலப்பக்கம் இணையாக வைத்தனர். சுப்ரதர் கர்ணனின் தொடைப்புண்ணில் இருந்து வழிந்த குருதியை ஒரு திடுக்கிடலுடன் நினைவுகூர்ந்தார். குருதி சிதையிலும் வழிந்துகொண்டிருக்கிறதா என்ன?

அனைத்து ஒலிகளும் அடங்கின. அவர்கள் இறங்கிக்கொண்டதும் சிதைக்காவலன் திரும்பி சிவதரை நோக்கி தொழுதான். சிவதர் திரும்பி கைகாட்ட அணுக்கப்பெண்டு விருஷாலியை அழைத்துக்கொண்டு வந்தாள். வெண்ணிற ஆடையால் முகத்தையும் உடலையும் மறைத்தபடி விருஷாலி மெல்ல காலடி எடுத்துவைத்து வந்தாள். அங்கிருந்த அமைதியில் அவளுடைய அருமணிகளின் ஓசை எழுந்தது.

அவள் நின்றதும் ஏவலர்கள் ஒரு மரத்தாலத்தை நிலத்தில் வைத்தனர். அவள் அதில் ஏறி நின்றாள். ஏவலர் அளித்த குடுவைநீரை பெற்றுக்கொண்ட பிரசேனன் சிவதர் தாழ்ந்த குரலில் அறிவுறுத்தியதன்படி அவள் கால்களை மும்முறை மஞ்சள்நீர் ஊற்றி கழுவினான். மலரிட்டு பூசை செய்தான். அந்த நீரை தன் தலையில் தெளித்துக்கொண்டு அவள் கால்களைத் தொட்டு தலைசூடி வணங்கினான். அவள் அவன் தலையை தன் வலக்கையால் தொட்டாள். வாழ்த்துரைத்தாளா என்று தெரியவில்லை. பின்னர் திரும்பி சிவதரை பார்த்தாள். சிவதர் சற்றே முன்னகர அவன் கையைப் பிடித்து சிவதரிடம் அளித்தாள். சிவதர் அழுகை விம்மிய உதடுகளை இறுக்கியபடி அவன் கையை பெற்றுக்கொண்டார். அவர் கழுத்தில் தசைகள் இழுபட்டு அதிர்ந்தபடியே இருந்தன.

ஏவலன் திரும்பி துரியோதனனை நோக்கி தலைவணங்கினான். துரியோதனன் முன்னால் சென்று குனிந்து அவள் கால்களைத் தொட்டு தலைசூடி வணங்கினான். அவள் அவன் தலையை தொட்டாள். பின்னர் ஏவலன் வழிகாட்ட, அணுக்கப்பெண்டு பின்தொடர அவள் நடந்து சிதையருகே வந்தாள். கிழக்கு நோக்கி வணங்கியபின் சிதையை மும்முறை சுற்றிவந்து ஏணியின் அருகே நின்றாள். தன் உடலை மூடியிருந்த வெண்ணிற ஆடையை விலக்கி அணுக்கப்பெண்டிடம் அளித்தாள். வைதிகர் இருவர் மரத்தாலத்தில் வேள்விக்களத்தில் இருந்து எடுத்துவந்த மலர்மாலைகளை அவளிடம் நீட்டினர். ஒரு மலர்மாலையை தன் குழலில் சூடினாள். இன்னொன்றை கழுத்தில் அணிந்தாள்.

சூதர்களின் குரவை மீண்டும் எழுந்தது. அனைத்து இசைக்கலங்களும் ஒற்றையொலியென மாறி உடன் ஒலித்தன. அவையும் வெவ்வேறு விலங்குகளும் பறவைகளும் எழுப்பும் ஒலிபோல் கேட்டன. கரடிகள் உறுமின. நாய்கள் குரைத்தன. கருமந்திகள் எக்காளமிட்டன. சிம்மங்கள் அறைகூவின. மரங்கொத்திகள் தாளமிட்டன. சுப்ரதர் தலைசுழல்வதுபோலவும் வயிறு அதிர்வுறுவதுபோலவும் உணர்ந்தார். அங்கிருந்து விலகிச்சென்றுவிடவேண்டும். அங்கே அவர் பணி முடிந்துவிட்டது. ஆனால் அசைவிலாது நின்றார். உள்ளம் தறியில் கட்டப்பட்ட பட்டம்போல் உடலில் நின்று படபடத்தது.

துரியோதனன் வணங்கியபடி சிதையின் காலடியில் நின்றான். சிவதர் இருமி தலைகுனிந்தார். பிரசேனன் திரும்பி அவர் உடலுடன் தன் முகத்தை பொருத்திக்கொண்டான். விருஷாலி படிகளில் ஏறி சிதையின் மேல் கிடந்த கர்ணனை அடைந்தாள். அவன் கால்களைத் தொட்டு வணங்கிவிட்டு அவன் இடப்பக்கம் இணையாக படுத்தாள். சூதர்களின் குரவையோசை வலுத்தது. அதர்வ வேதம் உடனொலித்தது. அதுவும் விலங்குகளின் ஓசை போலிருந்தது.

தலைமைவைதிகர் உடல்குலுங்க சுப்ரதரை அணுகி “அருமணி எங்களிடம் உள்ளது. மிகச் சிறிது. ஆனால் சடங்குகளுக்கு இதுவே போதும்…” என்றார். “ஆகுக!” என்றார் சுப்ரதர். அவர் திரும்பிச்சென்று பிற வைதிகரிடம் சொல்ல ஒருவர் அருமணிக் கல்பதித்த பொன்விரலாழி ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தார். “அகல்விளக்கு… நெய்யகல் இங்கே வருக!” என்று ஒருவர் கூவினார். ஒருவர் அகல்விளக்கை எடுக்கையில் முதிய அந்தணர் “பொறுங்கள்… கதிரெழுகிறது” என்றார்.

“எங்கே? எங்கே?” என குரல்கள் எழுந்தன. சுப்ரதர் மெய்ப்பு கொண்டு விழிநீர் நிறைந்தார். எதையும் நோக்கமுடியவில்லை. “அதோ காட்டுக்குள்…” என்றார் முதிய அந்தணர். “அது ஒளியா? எவரோ வருவது போலிருக்கிறது.” மேலாடையால் விழிகளை துடைத்துவிட்டு சுப்ரதர் நோக்கியபோது வானிலிருந்து சாய்ந்த ஒளி காட்டுக்குள் விழுந்து நீண்டிருப்பதை கண்டார். மரங்களின் நிழல்கள் நீண்டு வந்து சிதைமேல் சரிந்தன. “ஒரு முகில்சாளரம் மட்டும் திறந்திருக்கிறது” என்றார் அந்தணர் ஒருவர். “கதிரவன் வருவது இங்குதான்… பொறுத்து நோக்குக!” என்றார் முதியவர். ஒளி விரிந்ததும் காட்டின் இலைகள் பசுஞ்சுடர்களாயின. வானிலிருந்து அருவியென ஒளி பெய்திறங்கியது.

தளிர்க்கொடிகள் கைநீட்டுவதுபோல் மெல்லமெல்ல அந்த ஒளி அணுகி வந்தது. அது சிதையைத் தொட்டதும் சூதர்கள் அனைத்து இசைக்கலங்களையும் முழக்கியபடி உரக்க குரவையிட்டனர். நிழல்கள் நெளிந்துகொண்டிருந்ததை நோக்கிய சுப்ரதர் விழிமயக்கு என அதை கண்டார். கரிய உடல்கொண்ட அரசநாகம் ஒன்று நெளிந்தபடி சிதையை அணுகியது. அங்கு எழுந்த வியப்பொலி அனைவரும் அதை பார்த்திருந்தார்கள் என்பதைக் காட்டியது. அது சிதைமேல் நெளிந்தேறியது. பாறைமேல் ஆலமரவேர் படிந்திருப்பதுபோல் தோன்றியது. சிதையின் மேலேறி கர்ணனின் தலைமாட்டை அடைந்து விறகுக்குவைமேல் உடல் சுருட்டி படமெடுத்தது. ஒரு சிறிய மரம் அங்கே முளைத்திருப்பதுபோல் தோன்றியது. படம் தாழ்த்தாமல் மெல்லிய அசைவுடன் அங்கேயே நின்றது.

முதிய அந்தணர் கைகாட்ட நான்கு வேதியர் நான்கு எரிகுளங்களில் இருந்தும் அனல் அள்ளி மண்கலங்களில் இட்டு அவற்றை கொண்டுவந்தனர். சிவதர் மெல்லிய குரலில் ஆணையிட பிரசேனன் முன்னால் சென்று வேதியர் கையிலிருந்து முதல் அனற்கலத்தை பெற்றுக்கொண்டான். அதை சிதையின் கால்பக்கம் அரக்கும் நெய்யும் கலந்த மென்விறகின்மேல் வைக்கப்பட்டிருந்த குந்திரிக்கத்தில் வைத்தான். நாய்க்குட்டி இரையைக் கவ்வுவதுபோல் குந்திரிக்கம் அனலை எடுத்துக்கொண்டது. இரண்டாம் அனலை இடைக்கும் மூன்றாம் அனலை நெஞ்சுக்கும் நான்காம் அனலை தலைக்கும் வைத்தான்.

பற்றிக்கொண்ட அனல் நான்கு பக்கமும் இணைந்து ஒரே அனலாக மேலே செல்லும்படி சிதை அமைக்கப்பட்டிருந்தது. வேதமுழக்கமும் குரவையொலியும் இசைக்கலன் நாதமும் முரசொலிகளும் இணைந்து செவிநிறைக்க அனல் பெருகி பொங்கி எழுந்து மேலேறி ஒற்றைச்சுடராக ஆகி கார்கூந்தலை உதறிக்கொண்டது. அத்தனை ஓசைகளுக்கும் அப்பால் தழலோசை தனித்துக் கேட்டது. வானத்திறப்பிலிருந்து பெய்த ஒளி பெருகி காட்டை முழுமையாக நிறைத்தது. அதுவரை இருளுக்குப் பழகியிருந்த கண்கள் கூசின. விழிநீர் வழிய சுப்ரதர் நோக்கை தாழ்த்திக்கொண்டார். கரிய நிலம் ஒளியில் தீட்டிய இரும்புப்பட்டைபோல் சுடர்ந்தது. சிதைச்சாம்பல் கலந்த நிலம்.

தீயின் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. வேறெந்த ஒலியும் எழவில்லை. வைதிகர்கள் வேதம் ஓதியபடியே நிரைவகுத்து வெளியேறினர். ஏவலர் அங்கிருந்த பொருட்களையும் எடுத்து அகற்றினர். அதன்பின் சூதர்கள் இசைக்கலங்களுடன் குரவையிட்டபடி அகன்றனர். சிவதர் பிரசேனனை தன் உடலுடன் அணைத்தபடி நடந்து அகன்றார். ஏவலன் அருகே வந்து “எரியூட்டிய பின் இங்கே எவரும் இருக்கலாகாது, அரசே” என்றான். சுப்ரதர் அப்போதுதான் துரியோதனனை பார்த்தார். அவன் முகம் தூக்கி சிதையை பார்த்துக்கொண்டிருந்தான். முகம் மலர்ந்திருப்பதுபோலத்தான் தோன்றியது. ஏவலன் மீண்டும் “அரசே” என்றான்.

சுப்ரதர் அவனை செல்லும்படி கைகாட்டிவிட்டு “அரசே, இங்கே இருக்க நெறியொப்புதல் இல்லை” என்றார். துரியோதனன் விழித்துக்கொண்டு “என்ன?” என்றான். “இங்கே இருக்க நெறிகள் ஒப்புவதில்லை” என்றார் சுப்ரதர். “ஆம்” என்று அவன் சொன்னான். அவன் சொற்களை உள்வாங்கிக்கொள்ளவில்லை என உணர்ந்தார். மீண்டும் “அரசே, இங்கே எவரும் இருக்கலாகாது. சிதை தனிமையிலேயே எரியவேண்டும். அது ஒரு தவம்” என்றார். “ஆம்” என்று அவன் மீண்டும் சொன்னான். “முழுத் தனிமையையே சிதையில் உயிர் அடைகிறது. எவரும் உடனிருக்கலாகாது. உடன்கட்டை ஏறுவோர் உடனிருக்கலாம். அவர்கள் அறத்துணை, உடற்துணை என்பதனால்” என்றார் சுப்ரதர் மீண்டும்.

துரியோதனன் கனைப்போசை எழுப்பினான். அவன் குரலை திரட்டுவது தெரிந்தது. “நான் இங்குதான் இருக்கப்போகிறேன். அவர் எரிந்தணைவதுவரை” என்றான். “ஆனால்…” என்று சுப்ரதர் சொல்ல அவன் உரக்க “அவர் தனியாக இருந்ததில்லை…” என்றான். மேலும் உரக்க “இங்குதான் இருப்பேன்… இதில் மாற்றுச்சொல் இல்லை” என்றான். சுப்ரதர் “ஆகுக!” என்றார். தலைவணங்கி விலகிச்செல்ல சிதைக்காவலன் அருகே வந்து “அமைச்சரே” என்றான். “அரசர் இங்கே இருக்கட்டும்” என்றார். “அதை தெய்வங்கள் விரும்புவதில்லை” என்றான் சிதைக்காவலன். “அங்கர் அதையே விரும்புவார்” என்றபின் அவன் செல்லலாம் என அவர் கையசைத்தார்.

சாலைக்கு வந்தபோது ஒரு கொடுங்கனவிலிருந்து விழித்துக்கொண்டதுபோல் உணர்ந்தார். புதுக்காற்று வந்து உடலை தழுவியது. மூச்சுக்குள் புகுந்து உள்ளிருந்து கரும்புகையை வெளியேற்றியது. எண்ணங்கள்கூட ஒளிகொண்டவைபோல் தோன்றின. அவர் அதன்பின்னர்தான் தன்னைச் சூழ்ந்திருந்த கருக்கிருளை கண்டார். காடு மையிருளுக்குள் இருட்தடங்களாக அடிமரங்கள் செறிந்து நின்றது. திரும்பி பின்னால் நோக்கியபோது சிதையைச் சூழ்ந்து மட்டுமே வெயிலொளி இருந்தது. நேராக வானிலிருந்து அது சிதைமேல் பொழிந்தது. சிதையில் எழுந்தாடிய அனலுடன் அச்செவ்வொளி இணைந்துவிட்டிருந்தது.

அவர் இருட்டை நோக்கினார். அங்கே அவர் சல்யரை எதிர்பார்த்தார். இறுதிக்கணத்தில் அவர் வந்துவிடக்கூடும் என தோன்றிக்கொண்டே இருந்தது. பின்னர் எண்ணிக்கொண்டார், அந்தக் காட்டில் எங்கோ சல்யர் இருக்கிறார் என. எரியூட்டுவதை அவர் அறிந்திருப்பார். காடு ஒன்றே. உடலெங்கும் மூடியிருக்கும் தோல் ஒற்றைப்புலனாக திகழ்வதுபோல.

பரசுராமர் தன் வில்லையும் அம்பையும் இளைய மாணவனிடம் அளித்துவிட்டு கோதையின் குளிர்ந்த நீரில் இறங்கி முழங்காலளவு நீரில் நின்று குனிந்து நீரள்ளி தலைமேல் விட்டுக்கொண்டு நீர்வாழ்த்தை சொன்னார். அள்ளி முகம் கழுவியபின் அவர் மேலும் ஆழத்திற்குச் சென்றபோது தலைக்குமேல் ஒரு கருங்குருவி வாள் உரசும் ஒலியெழுப்பி கடந்து சென்றது. அவர் நின்று அதை நோக்கினார். பின்னர் கரையில் நின்றிருந்த மாணவனிடம் “உன் தோழரிடம் சென்று சொல்க, நான் நீராடி மீண்டதும் எரிசெயல் இயற்றவேண்டும். கதிரவனுக்கான வேள்வி” என்றார்.

மாணவன் தலைவணங்கினான்.  வில்லையும் அம்பையும் அங்கிருந்த மரக்கிளையில் தொங்கவிட்டுவிட்டு காட்டுக்குள்சென்றான். பரசுராமர் நீரில் மும்முறை மூழ்கி எழுந்து முகத்தில் படிந்த கூந்தலிழைகளை அள்ளி மேலே வழித்து பிடரிக்குப் பின் நீட்டியபின் கைகூப்பியபடி வானை நோக்கிக்கொண்டிருந்தார். முகில்களின் விளிம்புகள் கசிந்து கதிரொளி எழுந்தபோது அவருடைய கூந்தலிலும் தாடியிலும் நீர்மணிகள் சுடர்ந்தன.

[ இருட்கனி நிறைவு]

முந்தைய கட்டுரைசென்னை குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா
அடுத்த கட்டுரைகாலமில்லா கணங்களில்… லிங்கராஜ்