ராகுல் -ஒரு கடிதம்

ராகுல் காந்தி தேவையா?

ஆசிரியருக்கு,

 

இருப்பதை அகற்ற சாத்தியமான உடனடி மாற்று அது மலிவாக இருந்தாலும் சரி அதை தேர்வு செய்வோம்  என்பது  அரசியல் விமர்சகர்களின் குறுகிய காலப் பார்வையாக இருக்கும் என  நான் எண்ணுகிறேன்.

தற்கால அரசியல் நெருக்கடிகளில் இருந்து விடுபட்டு  சாத்தியமான லட்சிய ஜனநாயகத்தை  குறித்து தத்துவர்த்தமாகவும் சித்தாந்த ரீதியாகவும் சிந்திப்பது  சிந்தனையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் நோக்கமாக இருக்கும் என  நான் எண்ணுகிறேன். ஆனால் உங்களின்  ராகுல் காந்தி தேவையா ? என்கிற கட்டுரையில் அவ்வாறு நிகழவில்லை.

ஒரு அரசை மதிப்பிடும் பொழுது இப்பொழுது நாம் வாழும் காலகட்டம் அமைதியான காலகட்டமா அல்லது பிரச்சினைக்குரிய ஆபத்தான காலகட்டமா  என நோக்க வேண்டும் என்கிற  மாக்கியவெல்லியின்  கருத்து ஒரு ஜனநாயக அரசை மதிப்பிடும்போதுகூட  பயன்தருவது என எண்ணுகிறேன்.

கடந்த  இருபத்தைந்து ஆண்டுகளாக  இந்தியாவில் ஒரு அமைதியான சூழ்நிலை நிலவுகிறது,  நாடு அந்நிய முற்றுக்கைக்குள்ளாகும் என்றோ, உள்நாட்டு யுத்தம் வெடிக்கும்  என்றோ, நிதி நெருக்கடியில் நாடே திவாலாகிவிடும் என்பது போன்றோ ஒரு பொருட்படுத்தக்கூடிய அச்சம் இப்பொது இல்லை.  கடந்த 5 ஆண்டுகால ஆட்சியை சீர்தூக்கினால் பா ஜா க அப்படியொன்றும் மீளமுடியாத சேதத்தை  இந்தியாவிற்கு இழைக்கவில்லை, ஆகவே இதே போல இனி 10 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் இந்தியாவிற்கு அப்படியொன்றும் தீங்கு நேரப்போவதில்லை.   ஆகவே எப்பாடுபட்டேனும் இந்த அரசு அகற்றப்படவேண்டும் எனவும் எவ்வளவு மலிவாக இருந்தாலும் மாற்று அரசு வரவேண்டும் எனவும் நாம் எண்ண  முடியாது.

 

ஒரு நூறாண்டுகள் ஆனாலும் சிறிது சிறிதாக ஒரு அதிசிறந்த அரசியலை நோக்கி நாம் நகரவேண்டும். ஒரு சிறந்த அரசியல் என்றால் :

 

  1. அரசதிகாரத்தை நிர்வகிப்பதில் நேர்மை

 

  1. அதிகாரத்தை அடைய தகுதியே அடிப்படையாக அமைவது, அவர்களையே வேட்பாளர்களாக களம் இறக்குவது.  வாரிசு, பிரபல்யம் போன்ற சாதகங்கள் எடுபடாமல் போவது

 

  1. தனி நபரை முன்னிறுத்தி அரசியல் செய்யமல் இருப்பது, சித்தாந்த அடிப்படையை பிரதானமாக கொள்வது , உட்கட்சி ஜனநாயகம்,

 

  1. இதற்கு அடிப்படையாக வெகுஜனம் கவனமானமுதிர்ந்த அரசியல் அறிவு பெற்று இருப்பது

 

 

அரசு நிர்வாகத்தில் ஒப்புநோக்க கடந்த ஆட்சியை காட்டிலும் பா ஜ  க  மிக நேர்மையாக இருந்தது எனவே சொல்லலாம்.  பிரதம வேட்பாளரும் படிப்படியாக மேலே வந்த தகுதிவாய்ந்தவர் என சொல்லலாம். ஆனால் தனி நபரை முன்னிறுத்துவது, வாரிசுகள், பிரபலங்கள் மற்றும் குற்றப்பின்னணி  உடையவர்கள் ஆகியோரை தவிர்ப்பதில் இது வெற்றி பெறவில்லை. வெகுஜனத்தின் அரசியல் முதிர்ச்சி நம்பிக்கையளிக்கும் அளவில் வளர்ந்துள்ளது. தமிழகத்திலும் ஒடிசாவில் பகுத்தறிந்து மத்திக்கு வேறு மாநிலத்திற்கு வேறு என வாக்களித்துள்ளனர். வாரிசு அரசியலை ஏற்கமாட்டோம் என்கிற செய்தியை சோனியா, ராகுல் மற்றும் ப்ரியங்காவிற்கு தெரிவித்துள்ளார்.  கடந்த 72 ஆண்டுகளாக கல்வியறிவு இந்தியாவில் தொடர்ந்து மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது, வாக்காளர்களை குறைத்து  மதிப்பிடுவதற்கு நியாயமான காரணிகள் ஏதும் இல்லை. ஒரு சராசரி வாக்காளர் அதி புத்திசாலி இல்லை கூடவே அடி முட்டாளும் இல்லை.  ஆகவே  என்னதான் அரசு இயந்திரத்தை கைக்கொண்டு தொடர் பிரச்சாரத்தை நிகழ்த்தினாலும் இந்த அரசு சரியாக இயங்கவில்லை என்றால் மாற்றை தேர்வு செய்ய நல்ல சத்தியம் உண்டு, இன்றைய தேதியில் உள்ள ஜனநாயகத்திற்கு ஆபத்தில்லை. ஆனால் இதுவரை மாற்று என்பது  தற்போதைய  ஊழலுக்கு  பழைய ஊழல் மாற்று என வாக்களிப்பதை நாம் வழக்கமாக கொண்டுள்ளோம்.

 

ராகுலை முன்னிறுத்துவோம் என்கிற உங்களின் பரிந்துரையை விட,

 

 

  1. பா ஜ க விற்கு – தனிநபர் முன்னிறுத்து அரசியலில் இருந்து வெளி வரவேண்டும், மேலிருந்து கீழே செலுத்தப்படும் அரசியலை மாற்றிக்கொள்ளவேண்டும், தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் களமிறக்கப்படவேண்டும், துருவப்படுத்துதல் என்கிற அச்சத்தை போக்க வேண்டும், இடித்த பாபர் கும்மட்டத்தை அவர்களே மீண்டும் கட்டித்தரவேண்டும் என்கிற பரிந்துரைகளையும்

 

 

  1. காங்கிரஸ்சுக்கு –  ஜெய்ராம் ரமேஷ் போன்ற தகுதி வாய்ந்தவரை தலைமையேற்க வைக்கவேண்டும், மேலிருந்து கீழே செலுத்தப்படும் அரசியலை மாற்றிக்கொள்ளவேண்டும், தகுதிவாய்ந்த வேட்பாளர்கள் களமிறக்கப்படவேண்டும், போலி மதச்சார்பின்மை மற்றும் மென்மையான இந்துத்துவா ஆட்டத்தை நிறுத்தவேண்டும், நேர்மையான கட்சி காங்கிரஸ் என்கிற பெயரை ஈட்டிக்கொள்ளவேண்டும் போன்ற இடதுசாரிகளுக்கும் பொருந்தக்கூடிய  பரிந்துரைகளையும்

 

 

  1. வெகுஜனத்திற்கு – தகுதிவாய்ந்த வேட்பாளர்களை முன்முயற்சி எடுத்து அறிந்துகொண்டு வாக்களிக்கவேண்டும், வாக்களித்தலில் லஞ்சம் வாங்குவது அவமானம், சாதிய மற்றும் வெறுப்பரசியலுக்கு பலியாகாமல் இருக்கவேண்டும், மாற்றாக புதிய ஒரு ஆட்சியை கொண்டுவர தயங்க கூடாதுபோன்ற பரிந்துரைகளையும் இது உங்களின் /என்னின்  வாழ்நாளில் சாத்தியமில்லை என்றாலும் நாம்  வழங்கலாம்.

 

கிருஷ்ணன்,

ஈரோடு.

 

 

அன்புள்ள கிருஷ்ணன்

 

ஓர் இலட்சிய அரசியலைப் பேசுமிடம் வேறு, உடனடியாக நடைமுறையில் சிலவற்றைப் பேசும் தருணம் வேறு. இலட்சிய அளவில் இங்கே அரசியலில் என்ன நிகழவேண்டும் என்ற கேள்வி எழுந்தால்தான் காங்கிரஸ், பாரதிய ஜனதா, இடதுசாரிகள் மூவரைப் பற்றியுமே வேறுகோணங்களில் பேசமுடியும். என்ன சிக்கல் என்றால் இடதுசாரிகள் அன்றி பிறரிடம் பெரும்பாலும் எளியநடைமுறை அரசியலே உள்ளது. திருமாவளவனின் அரசியல் உட்பட நான் பொதுவாக அரசியலைப்பற்றிப் பேசும்போது நடைமுறையில் இங்கே என்ன நிகழ்கிறது, என்ன நிகழலாம் என்றே பேசுகிறேன். அரசியலை ஒட்டுமொத்தமாகப் பேசுகையில் ஒர் இலட்சியத்தை முன்வைத்துப் பேசலாம்.

 

உலகமெங்கும் ஜனநாயக அரசியலைக் கூர்ந்து நோக்கும் எவருக்கும் மாற்று என ஒன்று சமீபத்தில் இல்லை என்னும் எண்ணம் ஆட்சியாளர்களை எத்தகைய பிழைகளை நோக்கிக் கொண்டுசெல்கிறது என்று தெரியும். பாரதிய ஜனதா அரசு நிதானமற்ற நடவடிக்கைகளால் தேசத்தை உள்நாட்டுப்பூசல்,  பொருளியல் அழிவு நோக்கிக் கொண்டு செல்லக்கூடும். அல்லது அதற்கான தொடக்கத்தையாவது உருவாக்கிவிட்டுவிடக் கூடும். ஆகவே இன்றைய சூழலில் அரசை கட்டுப்படுத்தும் விசையாக வலுவான எதிர்க்கட்சி, மக்களால் இணையான மாற்று எனக் கருதப்படும் ஒன்று, சற்று முயன்றாலும் ஆட்சியைப் பிடிக்கக்கூடும் என ஆளும்கட்சியால் அஞ்சப்படும் ஒன்று இன்றியமையாதது என நினைக்கிறேன்.

 

அது அடித்தளத்திலிருந்து எழுந்துவரும் ஒரு தலைவரால் வழிநடத்தப்படும் என்றால் அது நன்று. ஆனால் உடனடியாக, அதாவது ஓராண்டுக்குள், அதற்கான வாய்ப்பு இல்லை. எனில் என்ன செய்வது என்பதே அக்கட்டுரை. மாற்று எழுந்துவருமென்றால் வரட்டும். ஆனால் இப்போது உடனடியாக நிகழவேண்டியது இது. காங்கிரஸ் இந்தியாவை கட்டியிணைக்கும் அமைப்புக்களில் ஒன்று. பாரதிய ஜனதா இல்லையென்றால் காங்கிரஸ் காங்கிரஸ் இல்லையென்றால் பாரதிய ஜனதாதான் இந்திய அரசியலில் மாற்றாக அமையவேண்டும். காங்கிரஸ் இடதுசாரிகளை இணைத்துக்கொண்டு ஒரு இடதுசாரித்தன்மை கொண்ட கட்சியாக அமையும் என்றால் அது இந்திய ஜனநாயகத்திற்கு மேலும் நல்லது.வலதுசாரிப் பொருளியலால் மக்கள் நிறைவின்மையை அடைந்தார்கள் என்றால் அருகிலேயே இடதுசாரிப்பொருளியல் நம்பிக்கை கொண்ட, அதேசமயம் தேச ஒருமைப்பாட்டில் நம்பிக்கையும் நாடளாவிய ஆதிக்கமும்கொண்ட, ஒரு கட்சி இருந்தாகவேண்டும்.இதுவே ஜனநாயகத்தின் அடிப்படை நடைமுறை. இதையே என் கட்டுரை குறிப்பிடுகிறது

 

ஒந்த ஒரு வரலாற்றுத்தருணத்தில் இப்படித்தான் சிந்திக்கமுடியுமே ஒழிய ஓர் இலட்சியத்தலைவர், இலட்சியக் கட்சி உருவாகி வருவதுவரை பாரதிய ஜனதாவே ஆளட்டும், அப்படி என்ன நடந்துவிடும் என வாதிடுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை

 

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-59
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருதுவிழா அழைப்பாளர்- பி.ராமன்