விமலரும் வராகரும்
சமணத்தில் வராகர்
வராகர் -ஒரு கடிதம்
சமணம் வராகர் – கடிதங்கள்
இனிய ஜெயம்
இந்துத் தாலிபானியம் இங்கே வந்து விட்டதா எனும் கேள்விக்கு [ சமணம் வராகர் – கடிதங்கள்]அப்டித்தான் போல என்றே சொல்லத் தோன்றுகிறது. பொதுத் தளத்தில் இது மூன்று அலகுகளை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். ஒன்று இத்துப் பண்பாட்டு இயக்கம் மீதான அறியாமை. அந்த அறியாமையில் நின்று இந்துக் காலாச்சாரக் கூறுகள் அனைத்தையும் உயிர் இயக்கத்திலிருந்து துண்டித்து உறைநிலையில் நிறுத்த முயல்வது. அப்படி நிறுத்த வாக்களிக்கும் அரசியலை துணைக்கோடுவது.
எனக்கும் நிறைய வசைகள் உண்டு. முன்னாள் நண்பர் யாரோ, முகமூடி பூண்டு,போலி மின்னஞ்சல் முகவரி வழியே எனக்கு அனுப்பிய மடலில், முகநூலில் எனக்கு விழுந்த வசைகள் அனைத்தையும் சுட்டி அளித்து, அதை வாசித்து நான் உளம் குலையும் விருப்பம் கொண்டிருந்தார்.
பொதுவாக இத்தகு விஷயங்களில் என் உணர்வுகளுக்கான ரிமோட் கண்ட்ரோலை பிறர் வசம் அளிப்பதில்லை. இருப்பினும் வாசித்துப் பார்த்தேன் பாராட்டுக்கள் வசைகளால் சமன் கண்டால் நல்லதுதானே.கடன் என ஏதும் மிச்சம் இருக்காது அல்லவா ?
இனிய வசைகள் பலவற்றில் ஒன்று இவ்வாறு முடிந்திருந்தது. ஒரு நாயர் பின்னால் ………..அலைய நாடார் ஆகிய உனக்கு அவமானமாக இல்லையா .நீ கடலூர் சீனுவா இல்லை ஜெயமோகன் உடலூர் பேனு வா …
லகுலீச பாசுபதம் கட்டுரையை வாசித்திருந்த அன்பர் [அம்பே சிவம் இல்லையா ஆகவே சைவ அன்பர்] ஒருவர், எப்படி நான் தட்சிணாமூர்த்தி பௌத்தத்திலிருந்து சைவத்துக்குள் வந்த கடவுள் என்று சொல்லலாம் என கொதித்தெழுந்து என் முதல் என் ஏழாம் தலைமுறை தாத்தா வரை குருதி சுத்தமற்றவர்கள் என்பதை ஆய்வுபூர்வமாக தரவுகள் அடிப்படையில் நிறுவி இருந்தார்.
அக் கட்டுரையில் நான் அப்படி சொல்லவே இல்லை. நா.கணேசன் எனும் ஆய்வாளரின் கட்டுரை அது. அதிலும் அவர் தட்சிணாமூர்த்தி பௌத்தத்தில் இருந்து சைவத்துக்கு வந்த கடவுள் என்று சொல்லவில்லை. தமிழ் நிலத்தை மையமாகக் கொண்ட போதிசத்வ வழிபாடு, முன்பே வழக்கிலிருந்த யோக குரு,தட்சிணாமூர்த்தி வழிபாடுகளுடன் கலந்து உள்ளிழுக்கப்பட்டு கரைந்து போனது என்பதை, பண்பாட்டு,இலக்கிய, சிற்ப சாட்சியங்களுடன் பொருந்துகிற ஒரு அடிப்படை ஊகத்தை முன்வைத்திருந்தார். அதற்க்கான ஆய்வு சுட்டியும் எங்கே உள்ளது என்பதை அவ்வாறே வந்தவர் கட்டுரையில் சொல்லி இருந்தேன். எதையுமே படிக்காமல் வந்துதான் இந்த வசை. நல்ல வேளை மானம் என ஒன்று மட்டும் இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருந்திருப்பேன் :)
மற்றொரு வசை உண்மையாகவே அதிர்ச்சி அளித்தது. ஆறு நாள் ஆறு பதிவுகளாக என்னை வசைத்திருந்தவர் எனது நெருங்கிய நண்பர் ஒருவர். அவர் வீட்டில் நானும் என் வீட்டில் அவரும் பரஸ்பரம் உண்டு உறங்கி சுக துக்கங்களை பகிர்ந்திருக்கிறோம். இந்த உண்மைக்கு மேலாக அவரது சைவப் பற்று அவரை இயக்கி இருக்கிறது. அவரது கோபம் எனது சமண வழி கட்டுரை மீது. நான் மதுரா விஜயம் நூலை வாசித்ததே இல்லை. வாசித்தவன் போல உதார் விடுகிறேன். அந்த நூலின் காலக் கட்டம் என நான் குறிப்பிட்ட நூற்றாண்டு முற்றிலும் தவறு இது கூட இந்த சிறு மதியாளனுக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. இருள்முக சைவம் என சொல்லிவிட்டேன். மதுரா விஜயம் நூல் அன்னியர் இந்து நிலத்துக்கு இழைத்த கொடுமையை கூறும் நூல். நான் அந்த கொடுமை எல்லாம் சைவர்கள் செய்ததாக ”திரித்து” விட்டேன். இந்த மூன்று அலகுகளை முன்வைத்து அவரும் என் தந்தை குறித்த சந்தேகத்தை எழுப்பி இருந்தார்.
//உயிர் பலிகள் கோரும் சாக்தமும், சைவத்தின் இருள் முக மரபும் செழித்திருந்த நிலம் இந்த பாரத நிலம். திருவண்ணாமலை தொட்டு, காளஹஸ்தி தொடர்ந்து, காசி கேதார்நாத் வரை இருள்முக சைவம் இயங்கிய நதிவழியை, அதன் தடங்களை இன்றும் காணலாம். பதிமூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த மதுரா விஜயம் நூலில், மண்டை ஓடு செருகிய சூலங்களை கொண்டு எழுப்பிய வேலிக்குள்,ஊருக்கு வெளியே வாழ்ந்த உக்ர சைவர்கள் குறித்த குறிப்புகளை காண்கிறோம். //
இதுதான் அந்தக் குறிப்பு. சைவத்தின் இருள்முக [காளாமுக] மரபு என்றுதான் எழுதி இருக்கிறேன். ஆண்டு எண்ணாக, அந்த எண் ஒரு படமாக 1370 களில் என உள்ளே பதிந்திருந்தது எழுதுகையில் பதிமூன்றாம் நூற்றாண்டு என விழுந்து விட்டது. பிழை எனில் அந்தப் பிழையுடன் இணைந்தவனே நான். மேலும் அன்னியர் செய்த கொடுமை எதையும் அதில் நான் சைவர் மீது சுமத்தவில்லை. அன்றைய மதுரையின் நிலை ஒன்றை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் வகையிலேயே சுட்டிக் காட்டி இருக்கிறேன் அவ்வளவே.
இதில் சில ஆய்வாளர்கள் இடையே நிகழ்ந்த உரையாடல்கள் ஆர்கைவில் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. அதில் நிகழ்த்தப்பட்ட ஊகங்களில் ஒன்று இது. காபாலிகம் காளாமுகம் இந்த மார்க்கங்கள் ஒரு முனையில் செவ்வியல் தன்மையுடனும், இவற்றில் சேராத குழுக்கள் அதே பழங்குடி தன்மையுடனும் தமிழ் நிலத்தில் செழித்திருந்த சித்திரைத்தை அளிக்கிறார்கள். அன்னியர் படையெடுப்பின் போது கோவில் வழிபாடுகள் சிதைந்தன நின்றன. அதே சமயம் இணையாக நாட்டார் காவல் தெய்வங்கள் பெருகின. அதன் இணை செயல்பாடாக மரபான ஓட்டத்தில் இருந்தது விலகி நின்றிருந்த மறைவாக இயங்கிக் கொண்டிருந்த காபாலிகம் காளாமுகம் போல மேலும் இத்தகைய வழிபாட்டு போக்குகளும் வெளித்தெரியத் துவங்கின. அதன் சாட்சியமாக இந்த மதுரா விஜயம் குறிப்பை கொள்ளலாம் என விவாதம் நிகழ்ந்திருக்கிறது. இதில் எங்கே நான் பழியை தூக்கி சைவம் மீது போட்டேன்? மேலும் நான் சொன்ன இந்த குறிப்பு முக்கிய ஆய்வாளரின் ஆங்கில நூலில் பதிப்புக் கண்டிருக்கிறது. ஆதாரம் அளிக்க இயலாது .காரணம். அந்த நூலின் தமிழ் மொழியாக்கம் தமிழின் பிரபல தீவிர இலக்கியப் பதிப்பகத்தில் கிடைக்கிறது. அந்த நூலுக்கு தமிழின் முக்கிய ஆய்வாளர் அறிமுக உரை எழுதி உள்ளார். பெயரை சொன்னால் என்ன ஆகும்? அவர் வீடு தேடி சென்று அவரது குடிப் பிறப்பை அன்பர்கள் ஆராய்ச்சி செய்ய நேரும். அறிவை வழிபடும் நான் அந்த மடத் தனத்தை எவ்வாறு செய்வேன்?
ஆய்வு முறைமைகளில் தகுந்த ஆதாரங்களின் பின்புலத்தில் ஊகங்களை உருவாக்கி முன்னகர்வதும் ஒரு வழி. அந்த வழி இந்த பொது மனம் உறைநிலையில் நிறுத்தி வைத்திருக்கும் ஒவ்வொன்றுக்கும் எதிரானதாகவே இருக்கும். அ கா பெருமாள் போன்ற தமிழின் பெருமிதங்கள் எல்லாம் தூக்கிப் போய் மிரட்டப்படும் நிலை, இந்த உறைநிலை உயிர் பெற்றுவிடக் கூடாது என்பதன் மீதான முனைப்பே.
பொது மனதில் இலங்கும் இந்த உறைநிலைக்கு வரலாற்றுக் காரணி இருப்பதாகவே படுகிறது. முதல் காரணி பக்தி இயக்கம். தாந்த்ரீக சடங்குகளும் பௌத்த சமண தத்துவங்களும் இவற்றின் முன் மங்கி மறைய, உரையாடல் தரப்பின்றி முதல் உறைநிலை இந்து மதத்தில் உருவாகிறது.
அடுத்து வந்த அன்னியர் படையெடுப்பு காலத்தில் இந்த பக்தி இயக்கம் அனைத்தயும் கொண்டு எந்தக் கோவில் பண்பாட்டில் இணைத்ததோ அந்தக் கோவில் பண்பாடு சிதைய, இந்த உறைநிலை இன்னும் இறுகியது.
கிருஷ்ணதேவராயர் காலத்தில் இந்த உறைநிலை உடைந்து இயக்கம் நிகழ்ந்தது. மீண்டும் பெருங்கோவில்கள் வழியே அனைத்தும் மறு தொகுப்பு செய்யப் பட்டன. [என் சைவ நண்பர் ஒருவர் . கொறவன் சோத்து மூட்டை மாதிரி கோவிலை ஆக்கின பயலுவோ என்பார் நாயகர்களை :) ]
வெள்ளையர் காலத்தில் அடுத்த சரிவு. கிட்டத் தட்ட மீளவே இயலாத சரிவு. இதுவரயிலான மதப் பண்பாட்டை கட்டி நிறுத்தியவை, நிலத்தை கைவசம் வைத்திருக்கும் வைசியர், வணிகத்தை கைவசம் வைத்திருக்கும் வைசியர், அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் மறவர் சத்ரியர், இந்த காரணிகள் மீது நின்றிருந்தது. நிலம் ,வணிகம்,அதிகாரம், மூன்றுமே இப்போது கிறிஸ்துவ வெள்ளையர் கையில்.
அவர்கள் உருவாக்கிய சீரமைப்பில் அனைத்தும் கலைந்து. வெறும் சாதியும் சடங்குகளும் என்று இறுகியது. விவேகானதர்கள் தோன்றி இந்து மறுமலர்ச்சி இயக்கம் வழியே இந்திய சுதந்திரத்துக்கு வழிகோலினார்கள்.அடுத்த இடர் சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்தது. சுதந்திர இந்தியா ஐரோப்பிய கல்வியை வைத்துக் கொண்டு, சொந்த நிலத்தைக் கட்டமைக்கும் பண்பாட்டுக்கல்வியை கைவிட்டது. வெள்ளையர் காலத்தில் நிலைபெற்ற உறைநிலை. இதோ இன்று மோதிஜி தலைமையில் ஒளிரும் பாரதம் வரை நீள்கிறது.
நேரு மரண வீட்டில் ஒரு சித்திரம் காணக் கிடைக்கிறது. நேருவின் உடன் படித்தவரும் உடன் போராடியவரும் சிறைத் தோழரும் ஆன டாக்டர் சையத் முகமத் இல்ல வாசலுக்கு வருகிறார், ஜகஜீவன் ராம் அவரை எதிர்கொள்கிறார். இருவரும் கட்டி அணைத்து ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லியபடி,அழுத முகத்துடன் இறுதியாக நேருவை பார்க்க அவரது வீட்டுக்குள் செல்கிறார்கள். ஒருவர் சிறுபான்மை வகுப்பை சேர்ந்தவர். ஒருவர் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர் இருவரும் கட்டி அணைத்தபடி நேரு இல்லத்துக்குப் போகிறார்கள்.
இந்த யதார்த்தம் மீது அமைந்ததே நமது அரசியல் சாசனம். அதை வகுத்தளித்தவர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர். அவருடன் பணி புரிந்தோர் இந்திய சாதி அடுக்கில் கடவுளுக்கு சற்றே கீழே உள்ளவர்கள். எம் தந்தையர் ஈட்டி எமக்களித்த இந்தக் கனவு,ஐரோப்பிய நிலம் இந்தியாவுக்கு அளித்த கொடை இல்லையா? இன்றும் அங்கே அரசியலில் மத ஆதிக்கம் உண்டு என்றாலும் இந்த லட்சியவாதத்தின் மேல்தான் அவர்களின் அரசியல் சாசனம் நிற்கிறது. மதப் போர்கள் வழியே எத்தனை குருதியை உயிர்ப் பலிகளை கொடுத்து அடைந்த ஞானம். அந்த உயிர்ப் பலிகள் மீது எழுந்த லட்சியவாதம் அது.
அதே லட்சியத்துடன் துவங்கிய நமது தேசத்தின் பயணம், காந்தியை கைவிட்டு அந்த பயணத்தின் நேரெதிர் திசையில் திரும்பி நிற்கிறது. ஹிட்லர் வகுத்த அதே வியுகம். சொந்த மண்ணின் மக்களில் ஒரு சாராரை குற்றம் சாட்டி, அதன் வழியே பெரும்பான்மையை திரட்டி, கைப்பற்றிய நாற்காலி ஹிட்லருடயது. இன்று இங்கே இந்தப் பெரும்பான்மை, இந்துத்துவ கருத்தியல் வழியே அதிகாரத்தை அடைந்து நமது சாசனக் கனவின் மேல் அமர்ந்திருக்கிறது. இவர்களுக்கும் இந்துப் பண்பாட்டுக்கும் உள்ள தொடர்பு, திராவிட அரசியலுக்கும் திராவிட பண்பாட்டுக்கும் என்ன தொடர்போ அதே அளவுதான். இந்துப் பண்பாடு குறித்து தெரிந்தோர் எவரும், கீதை நாடு முழுமைக்குமான புனிதநூல் என அறிவிப்போம் என அறைகூவுவார்களா? அது கீதையை உறைநிலைக்கு அனுப்பும் செயல். ஏற்கனவே அனைத்தயும் உறைநிலையில் வைக்க விரும்பும் பண்பாட்டு இயகம்அறியா பொது இந்து மனம் இதை ஆதரிக்கவே செய்யும். பொது இந்து மனமும், இந்த பெரும்பான்மை கொண்டு அதிகாரத்தில் அமர்ந்த இந்துத்துவ அரசியலும் இந்த உறைநிலை அமைப்பு எனும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்.
இந்த இரு முனைகளையும் மட்டுறுத்த வேண்டிய இந்துத்துவ அறிவியக்கம் இன்று பக்கவாதம் வந்து விழுந்து கிடக்கிறது. கடந்த ஐந்து வருட காலங்களில் அவர்கள் செய்ததெல்லாம் செவ்வனே அரசியல் ஜால்ரா அடித்தது மட்டும்தான். நேர்மாறாக தமிழக சிற்பங்களுக்கான கலைக்களஞ்சியத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் அ கா பெருமாள் அவரது ஆய்வு உண்மைகளுக்காக சாதிச் சுமடர்களால் மிரட்டப் படுகிறார். இவர்க்கு ஆதரவாக எந்த இந்துத்துவ அறிவுஜீவியும் குரல் எழுப்பியதாக தெரியவில்லை. இதுதான் இன்றைய நிலை.
ஆம் ஜெ.இப்போது இது இவர்களின் காலம். காவி வண்ணம் பூசி அனைத்தையும் இன்னும் இறுக்கமாக உறையவைக்க முனைந்து கொண்டிருக்கும் காலம். :)
கடலூர் சீனு