ராகுல்,மோடி -கடிதங்கள்

ராகுல் காந்தி தேவையா?

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

பாரதப்பிரதமர் மோதி அவர்களின் அபிமானியான, நான் சில சூழ்நிலைகளில் அவரின் செயல்பாடுகளைப் பற்றி(பணமதிப்பு நீக்கம்,வரிசீர்திருத்தம்,கஷ்மீர் அரசியல் போன்றவை)முன்பு உங்களிடம் விளக்கம் கேட்டு, சிலநேரங்களில் பதிலும் பெற்றிருக்கிறேன்.இடையில் மோதி மற்றும் பிஜேபி அரசின் செயல்பாட்டை கடுமையாக விமரிசித்து நீங்கள் எழுதியமோடி அரசு, என் நிலைபாடு என்ற கட்டுரையை படித்தபோது மிகவும் அதிர்ச்சியுற்றேன் அது பற்றி தங்களிடம் விளக்கம் கேட்கலாமென்றால் அக்கட்டுரையின் இறுதியில் …….

மேற்கொண்டு எதையும் பேசப்போவதில்லை. இது என் அரசியல் நிலைபாடு. எளிய குடிமகனின் அரசியல் இது. கட்சி சார்பு அரசியல் அல்ல. என் நண்பர்களில் பலர் பாரதிய ஜனதா ஆதரவாளர்கள்பலர் எதிர்ப்பார்கள். எங்கள் நட்புக்குழுமம் முழுக்க இருசாராரும் கொம்புமுட்டி பூசலிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். இருசாராரிடமும் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. என் தளத்தை அவ்விவாதத்தின் களமாக ஆக்கவும் விரும்பவில்லை. எனவே  எவரும் எனக்கு இதுகுறித்து எழுதவேண்டியதில்லை. இதுகுறித்து மேலும் நான் எதுவும் சொல்லப்போவதுமில்லை. இதுகுறித்து எக்கடிதம் வந்தாலும் அதை எழுதியவரை என் மின்னஞ்சல்பட்டியலில் இருந்து விலக்க எண்ணுகிறேன். எனக்கு வேலைகள் நிறைய உள்ளன”

இது மாதிரி எழுதியிருந்ததைப்பார்த்து அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்து எதற்கு உங்களை தொடர்புகொள்வானே என்று வாளாயிருந்துவிட்டேன்.(அது பற்றி எனக்கு தெரிந்தவர்களிடம் விளக்கம் கேட்டு எனது மோதி ஆதரவு நிலை சரியானதுதான் என்ற முடிவுக்கும் வந்தேன்) மேலும் என்னால் முடிந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் மோதி அவர்களுக்கு ஆதரவாக\கருத்துக்கள் தெரிவித்தும்,மற்றும் எனது நண்பர்கள் உறவினர்களிடமும் அவருக்கு ஆதரவு தர வேண்டிய அவசியத்தை எடுத்தும் கூறிவந்தேன்.தங்களின் வலைத்தளத்திற்குள் வருவதையும் குறைத்துவந்தேன்.இனிமேல் மோதி அவர்கள் வெற்றிபெற்று மறுபடியும் ஆட்சி அமைத்த பிறகுதான் இது பற்றி தங்களிடம் தொடர்பு கொள்ளவேண்டும் என்றும் எண்ணியிருந்தேன்.இடையில் நீங்கள் ராகுல் காந்தியை மிகவும் சிலாகித்து இந்தக் காலையின் ஒளி என்ற தலைப்பில் சில கருத்துக்களை  எழுதியிருந்ததை படித்தபோது (“அவர்கள் நடுவே நின்றிருக்கும் நம்பிக்கை கொண்ட  இளைய முகம்).உண்மையில் நான் அருவறுப்படைந்தேன் காரணம் அப்பொழுதுதான் அவர் எந்தவித ஆதாரமுமின்றி மோதி அவர்களைப் பற்றி  வெறித்தனமாக “சௌகிதார் சோர் ஹேஎன்று போகுமிடங்களிலெல்லாம் குரைத்துக்கொண்டிருந்தார்.

இப்பவும் மோதி அவர்கள் பெருவாரியான மக்களின் ஆதரவுடன் மகத்தான வெற்றிபெற்று ஆட்சியில் அமர்ந்த பிறகு எதற்கு இது பற்றியெல்லாம் உங்களுக்கு எழுதவேண்டும் என்று இருந்துவிட்டேன்.ஆனால் இன்று உங்களின் இந்த கட்டுரையை-ராகுல் காந்தி தேவையா?-படித்த பிறகு என்னால் அமைதியாக இருக்கமுடியவில்லை எனவே இந்தக் கேள்விகள்.

1) எந்த தரவுகளின் அடிப்படையில் இதுபோல் எழுதுகிறீர்கள்? “சென்ற ஐந்தாண்டுகளில் மோடியை விளம்பரம் செய்ய அரசு செலவழித்த தொகை எத்தனைகோடிகள் என்று எண்ணிப்பாருங்கள். ஒட்டுமொத்த காங்கிரஸையே விற்றாலும் அந்தத் தொகை கிடைக்காது.”

2)அடுத்து ராகுலைப்பற்றி சொல்லும்போது “ராகுலிடம் இருக்கும் அடக்கம் போன்றவை தனிப்பட்ட முறையில் நற்பண்புகளே.” என்று கூசாமல் எழுதுகிறீர்கள்!அவரின் அடக்கம் எப்படிப்பட்டது.மன்மோகன் சிங்க் ஆட்சி காலத்தில் குற்றசெயல்புரிந்த அரசியவாதிகளை காப்பாற்றும்பொருட்டு கொண்டுவரப்பட்ட அவசரசட்ட வரைவை எல்லோர் முன்னிலும் கிழித்தெறிந்து நாடகமாடி மன்மோகன் சிங்கை தலை குனிய வைத்தார் (பின் அவரே எந்தவித தயக்கமுமின்றி கிரிமினல் லல்லுவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டார்!)

வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் வலிமையாக இருந்த காங்கிரசை இவரின் ‘தன்னடக்கத்தினால்’அப்போது அஸ்ஸாமில் உதவி முதலமைச்சராக இருந்த ஹேமந்த் பிஸ்வாஸ் சர்மா அவர்கள் ஒரு முக்கியமான அரசியல் ஆலோசனைக்காக சந்திக்க சென்றபோது தனது செல்ல நாய் ‘பிடி’ (PIDI )யுடன் மும்முரமாக விளையாடி அவரை ஏளனம் செய்தார்.அவர் காங்கிரசிலிருந்து விலகி பிஜேபியில் சேர்ந்து இன்று வடகிழக்கு மாநிலங்கள் முழுவதையும் வெல்ல உதவியிருக்கிறார்…

இவையெல்லாம் எத்தகைய நற்பண்புகள் ?

3)  நானும் பிஜேபிக்கு மாற்றாக நாடு முழுவதும் செல்வாக்குள்ள -காங்கிரசைபோல்-ஒரு எதிர்க்கட்சி தேவை என்பதை ஏற்றுக்கொள்கிறேன் ஆனால் வாரிசுஅடிப்படையில் பல வாய்ப்புக்கள் ராகுலுக்கு கிடைத்தும் அதற்கு முற்றிலும் தகுதியற்றவர் என்பதை நிரூபித்துவிட்டவரை இன்னும் தூக்கி பிடிப்பது என்னவகை நியாயம்?

4) பிரபலமான தலைவர்களின் குடும்ப வாரிசு என்பதையே அடிப்படைத் தகுதியாகக்கொண்டு எந்தவித நேர்மைத்திறமுமின்றி செயல்படும் ராகுலை ஆதரிக்கத் தயாராகயிருக்கும் உங்களை போன்றவர்கள் அடிமட்டத்திலிருந்து தனது கடின உழைப்பாலும்,நேர்மையாலும்,தேசபக்தியாலும் மற்றும் ,ஊழலின்மையாலும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் மோதியை எந்த அடிப்படையில், “மோடி மீண்டும் வருவார் என்றால் அது இந்திய ஜனநாயகத்தின் அழிவே என்று கூசாமல் எழுதியிருக்கிறீர்கள்?.உங்களைபோன்றவர்களுக்கு அவர் மேல் ஏன் இந்த காரணமில்லா அதீத காழ்ப்புணர்ச்சி?  

அன்புடன் ,

அ .சேஷகிரி.

பி.கு : இதற்கெல்லாம் தங்களிடமிருந்து பதில் வராவிட்டாலும் எனது  மனக்குமுறல்களை எழுதி தீர்த்து விட்டேன் என்பதில் எனக்கு ஒரு ஆறுதல்!

 

 

அன்புள்ள சேஷகிரி,

 

பொதுவாக அரசியலை அரசியல்நிலைபாடு கொண்டவர்களுடன் நான் விவாதிப்பதில்லை.என் நண்பர்களில் பெரும்பாலானவர்கள் பாரதிய ஜனதாக் காரர்கள். அவர்களிடம் அரசியல் ஒருசொல் கூட பேசுவதில்லை. ஏனென்றால் அவர்கள் நிலைபாடு எடுத்துவிட்டவர்கள். அவர்கள் விவாதிப்பது தெளிவுக்காக அல்ல, பிரச்சாரத்திற்காக. நான் விவாதிப்பது பொதுவாக அறுதியான அரசியல்நிலைபாடு அற்றவர்களுக்காக.

 

ராகுல்காந்தி பற்றிய உங்கள் உறுதியான கருத்துக்களை ஓர் அரசியல்நிலைபாடாகக் கொண்டிருக்கிறீர்கள். அதனுடன் விவாதிப்பதற்கு எனக்கு ஒன்றுமில்லை. நான் மோடிமீது அப்படி ஏதும் அறுதியான விமர்சனம் உடையவன் அல்ல, வெறுப்பும் இல்லை.மோடியை எதிர்ப்பவர்கள் மோடிவெறுப்பாளர்கள் என கட்டமைத்துக்கொள்ள உங்கள் அரசியல்நிலைபாடு தூண்டுகிறது. மோடியின் வெற்றிதோல்வி இரண்டையுமே பேசியிருக்கிறேன். ஒப்புநோக்க தோல்விகள் மிகுதி என்பது என் எண்ணம்.

 

அரசியல்நிலைபாடு இருக்கையில் எல்லாவற்றையும் எளிய இருமையாகவே பார்க்கமுடியும். உடனடியாக, இயல்பாக  அப்படித் தோன்றும், அது தர்க்கங்களால் மாறாது. இக்கட்டுரை மோடி தேவையில்லை, ராகுல் வேண்டும் என்று பேசுவது அல்ல. எதிர்க்கட்சி தேவை, அது ஏறத்தாழ ஆளும்கட்சி அளவுக்கே வலுவாக இருக்கவேண்டும் என்று வாதிடுவது. அதற்கான வழி என்ன என்று பேசுவது. ஜனநாயகம் அப்படி நிகர்வல்லமைகளால்தான் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகிறது. உள்ளூர் தாசில்தார் முதல் பிரதமர் வரை.

 

அப்படிக் கட்டுப்படுத்தப்படாத அதிகாரம் ஜனநாயகச்சூழலில் அபாயகரமானது. இந்த கட்டுப்படுத்தப்படாத அதிகாரத்தை நெடுங்காலம் இந்திரா காலம்முதல் காங்கிரஸ் அனுபவித்தது, அதன்விளைவான தன்னம்பிக்கையினால் அது செயலற்றதாகி பல அழிவுகளை உருவாக்கியது என்பதும் அக்கட்டுரையிலேயே ஆணித்தரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இன்னொருவர் கண்ணுக்குப் படாமையால் மோடி மீண்டும் வருவார் என்றால் அது இந்திய ஜனநாயகத்தின் அழிவே”

என்றவரியை

மோடி மீண்டும் வருவார் என்றால் அது இந்திய ஜனநாயகத்தின் அழிவே

என்று நீங்கள் ஏன் வாசிக்கிறீர்கள் என்று பாருங்கள். மிக மிக வெளிப்படையாகத் தெரிவது, நாடெங்கும் அத்தனை அரசுவிளம்பரங்களிலும் உள்ள மோடியின் முகம். அதை முன்பு ராஜீவும் இந்திராவும் செய்தனர் என கட்டுரை சொல்கிறது. அதற்கு ஆதாரம்கேட்கிறீர்கள். இதுதான் அரசியல்நிலைபாட்டின் மனநிலை என்பது. இது அடுத்து எள்ளல்,நக்கல், வசை எனத்தான் வெளிப்படும். அரசியலால் லாபம்  அடையாத ஒருவரிடம் அது வெளிப்பட்டால் அது ஓர் உளவியல்பீடிப்பு. அரசியலில் அது ஓர் உத்தி.

 

அரசியல் நிலைபாட்டை உணர்ச்சிகரமாக எடுப்பது, அதற்கு பலவகை பற்றுகளையும் அச்சங்களையும் அகக்காரணமாகக் கொண்டிருப்பது நம் உலகப்பார்வையையே மாற்றிவிடும். இலக்கியம், கலை என்னும் துறைகளில் மட்டும் அல்ல ஆன்மிகம் போன்றவற்றில்கூட நாம் வேறெதையும் பார்க்கமுடியாதவர்களாக, வெறுப்பின் கசப்பின் மொழியில் மட்டுமே பேசுபவர்களா ஆகிவிடுவோம். முடிந்தால் பரிசீலியுங்கள்.

 

ஜெ

திரு ஜெ,

 

உங்களுடைய கட்டுரை மிகத்தந்திரமானது. சங்கிகளில் இரண்டுவகை உண்டு. சாதா சங்கி, தந்திரச் சங்கி. தந்திரச் சங்கிகள்தான் ஆபத்தானவர்கள். உங்கள் கட்டுரை ராகுல் தலைவராகவேண்டும், மோடியைப்போல ஆற்றல்மிக்கவராக ஆகவேண்டும் என்று பேசுகிறது என தோன்றும். ஆனால் அது இன்றைக்கு மோடிசெய்யும் எல்லா தப்புகளும் முன்பு கருணாநிதியும் இந்திராகாந்தியும் ராஜீவ்காந்தியும் செய்தவைதான் என்று சப்பைக்கட்டு கட்டும் முயற்சிதான் என்பதை எவரும் அறியலாம்.

 

இந்திராகாந்தியும் ராஜீவ்காந்தியும் இந்த நாட்டை ஆபத்தான சூழல்களில் கட்டிக்காத்தவர்கள். அதற்காகத் தங்கள் இன்னுயிரை அளித்தவர்கள். அவர்கள் இல்லாவிட்டால் இந்தியா இல்லை. இந்திராகாந்திதான் வங்கிகளை நாட்டுடைமை ஆக்கி இந்தியப்பொருளியலை கட்டி அமைத்தவர். இன்றைய தகவல்தொழில்நுட்பப் புரட்சி ராஜீவ்காந்தியால் உருவாக்கப்பட்டது. ஒன்றையுமே சாதிக்காமல் வெறும் சத்தம்போடும் மோடியுடன் அவர்களை ஒப்பிடுகிறீர்கள். உங்களுக்கே வெட்கமாக இல்லையா?

 

இனி உங்கள் எழுத்தை வாசிக்கவேண்டுமா என்றே நினைக்கிறேன். இத்தனைக்கும் நானெல்லாம் பன்னிருபடைக்களம் வரை வெண்முரசை வாசித்தவன்

 

ஆர்.ராஜசேகர்

 

அன்புள்ள ராஜசேகர்

 

நீங்கள் வெண்முரசை வாசிப்பது எனக்காக அல்ல. உங்களுக்குத் தேவையிருந்தால் வாசியுங்கள். ஒர் எழுத்தாளனாக ஒரு சிறுவிஷயம், அரசியலில் பொதுவாக  பேசிக்கேட்காத ஒன்று, சொல்லப்படவேண்டும் எனத் தோன்றியது. ஆகவே அக்கட்டுரை. இங்குள்ள அரசியலில் எந்தத் தரப்புக்கானாலும் மாற்றுக்கருத்தை எதிர்த்தரப்பாக சித்தரித்துக்கொண்டே பேசமுடியும். அந்த எல்லைக்குப் போய்விட்டீர்கள் என்றால் நீங்கள் வாசித்தும் பயனில்லை

 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57
அடுத்த கட்டுரைபான்ஸாய் கடல் -கடிதங்கள்