இசையும் வண்ணமும்

[செம்மீன்]

செம்மீன் படத்தின் பெரிய வெற்றி அதேபோல பல படங்களை உருவாக்கும் ஆசையை உருவாக்கியது மலையாளத்தில். பல நாவல்கள் படமாயின. செம்மீன் போலவே சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசையுடன் அவை தயாரிக்கப்பட்டன. பல படங்களை அன்றைய தமிழ், தெலுங்கு, இந்தி படங்களுடன் ஒப்பிட்டுப் பாத்தால் மலையாளப்படங்களில் ஒளிப்பதிவு அபாரமான செவ்வியல்தன்மையுடன் இருப்பதைக் காணலாம்.

அன்று தமிழ்ப்படங்கள் திரைப்படநிறுவனங்களின் வழக்கமான ஒளிப்பதிவாளரால் ஒளிப்பதிவுசெய்யப்பட்டன. அவற்றுக்கு ஒரு இயந்திரத்தனமான இலக்கணம் இருந்தது. மேலும் அன்றைய பொது ரசனை கண்கூசவைக்கும் வண்ணங்களை விரும்பியது. மாறாக மலையாளப்படங்களில் மார்க்கஸ் பட்லே, மெல்லி இரானி போன்ற இந்தியாவின் ஒளிப்பதிவுமேதைகள் பணியாற்றினார்கள். பாலு மகேந்திரா, அசோக்குமார் போன்று பின்னாளில் பெரும்புகழ்பெற்ற இளம்திறமையாளர்கள் வந்தார்கள். வேறுவேறு பின்னணிகொண்ட இசைமேதைகள் இசையமைத்தார்கள்.

ராமு காரியத் [செம்மீன்]

சலீல் சௌதுரி  [செம்மீன்]

 

மார்க்கஸ் பட்லே [செம்மீன்]

பி. வத்ஸலா [நெல்லு] 

ராமு காரியத் செம்மீனுக்குப் பின்னர் 1972ல் வத்ஸலா எழுதிய நெல்லு என்னும் நாவலை அதே.பேரில் படமாக எடுத்தார். பாலு மகேந்திரா அதில்தான் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி தேசியவிருது பெற்றார். சலீல் சௌதுரி இசையில் எல்லா பாடல்களுமே இன்று வரை மலையாளத்தின் உளம்கவர்ந்தவையாக நீடிக்கின்றன.பாலு மகேந்திரா படங்களிலேயேகூட செம்மீன் அளவுக்குச் சிறப்பாக எதுவும் அமையவில்லை என்றே சொல்லவேண்டும்.

வத்ஸலாவின் நாவல் வயநாட்டின் நெல்விவசாயம், அதில் அடிமையாக இருக்கும் பழங்குடிகள் ஆகியவர்களைப் பற்றியது. அது ஒரு ஆவணப்படத்தன்மைகொண்ட பெரிய நாவல். அதில் ஒரு புதிய வாழ்க்கைச்சூழல் இருந்ததே ஒழிய வலுவான உணர்ச்சிக்களும் கதைக்கட்டுமானமும் இருக்கவில்லை.  அதை சீராக திரைக்கதை அமைக்காமல் படமாக எடுத்தமையால் துண்டுதுண்டாக இருந்தது.

கே.எஸ் சேதுமாதவன்

பாறப்புறத்து மத்தாய்

எம்.எஸ்.விஸ்வநாதன்

[மெல்லி இரானி]

கே.எஸ்.சேதுமாதவன் இயக்கத்தில் 1973ல் வெளிவந்த பணிதீராத வீடு ஒரு முக்கியமான முயற்சி. பாறப்புறத்து மத்தாயி எழுதிய ஒரு செவ்வியல்நாவலின் திரைவடிவம் அது.அதில் ஒளிப்பதிவாளர் மெல்லி இரானி. இசை எம்.எஸ்.விஸ்வநாதன். அதுவும் ஒரு மகத்தான இசைதொகுதி.

பணிதீராத வீடு படத்தின் மூலக்கதை நைனிடாலின் பின்னணியில் அமைந்தது. பாறப்புறத்து அவர்களே திரைக்கதை எழுதினார். மலையாள யதார்த்தவாத எழுத்தின் முன்னோடிப் படைப்பாளி பாறப்புறத்து மத்தாயி. ஆனால் படமாக்கத்தில் மூலத்தின் அழகு மறைந்துவிட்டது. மூலக்கதை அதன் நேர்மை, அமைதி ஆகியவற்றால் அழகுகொண்டது. யதார்த்தவாதம் என்பது மிகையின்மையே என காட்டுவது. பாறப்புறத்து மத்தாயியின் எல்லா நாவல்களுமே தன்வரலாற்றுத்தன்மை கொண்டவை. அவர் ராணுவ வீரராக இருந்தவர். இளமையிலேயே வறுமை காரணமாக ராணுவத்தில் சேர்ந்தார். இருபதாண்டுகள் காஷ்மீரில் பணியாற்றினார். அவருடைய “நிணமணிஞ்ஞ கால்பாடுகள்’ ‘அரநாழிக நேரம்’ போன்ற நாவல்களும் படமாகியிருக்கின்றன.

ஒரு ராணுவ வீரன் குறுகியநாள் பணிக்காக நைனிடால் வருகிறான். அங்கே ஒரு பெரிய செல்வந்தரின் விருந்தினர் இல்லத்தின் புறவீட்டில் வாடகைக்கு தங்குகிறான். அந்த வீடு ஒரு காவலரின் பொறுப்பில் இருக்கிறது. அவர்மகள்தான் கதைநாயகி. துடிப்பான சிறுமி. கள்ளமற்றவள். அவளுடைய சிற்றன்னை அவளை அந்த முதலாளிக்கு வைப்பாட்டியாகச் செல்ல கட்டாயப்படுத்துகிறாள். அவர் வந்து தங்கும்போது சென்று உடன் படுத்துக்கொள்ளச் சொல்லி அடிக்கிறாள். சிறுமி  ஒவ்வொருமுறையும் ராணுவ வீரனின் அறைக்கு தப்பி ஓடிவருகிறாள்.

தன்னையும் கூட்டிக்கொண்டு செல்லும்படி அவள் அவனிடம் கெஞ்சுகிறாள். அவனுக்கு அவள் நிலை புரிகிறது. அவளுக்காக அவன் மனம் உருகுகிறது. ஆனால் அவனால் ஒன்றும் செய்யமுடியாது. ஒன்று, ராணுவப்பணியின் கட்டுப்பாடு. அதோடு அவன் தன் பெரிய குடும்பத்தின் வறுமை காரணமாக ராணுவ ஊழியன் ஆனவன்.அவனை சிம்லாவுக்கு மாற்றுகிறார்கள். அவன் அவளை விட்டுவிட்டுச் செல்கிறான்.

நெடுநாள் கழித்து அவளை மீண்டும் காண்கிறான். அவள் அந்த முதலாளிக்கு வைப்பாட்டியாகி, கைவிடப்பட்டு, மேலும் பலருடன் உறவு கொண்டு, கொஞ்சம் பணம் சேர்த்து,  வாழ்க்கையில் ஒரு நிலையை அடைந்திருக்கிறாள். உள்ளம் முதிர்ந்த பெண்ணாக இருக்கிறாள். எவர்மேலும் அவளுக்குப் புகார் இல்லை. எதையும் தவிர்க்கமுடியாது என ஏற்றுக்கொண்டுவிட்டிருக்கிறாள். இயல்பாக பேசி சிரித்து உபசரித்து அவனை வழியனுப்புகிறாள். ஆனால் கதைநாயகனின் உள்ளம் ஏக்கம் கொள்கிறது. எல்லாம் வேறுவகையில் நடந்திருக்கலாமே என எண்ணுகிறான். அதை அவளிடம் சொல்வதில்லை.

அவன் தனக்கென ஊரில் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு வீடுதான் படத்தின் மையப்படிமம். அது கடைசிவரை கட்டிமுடிக்கப்படவே இல்லை. அவன் வாழ்க்கையும் அவள் வாழ்க்கையும் அவ்வாறுதான். வாழ்க்கை முடிந்துவிட்டது, ஆனால் பணிக்குறை தீரவே இல்லை.மலையாளத்தில் எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று இது.வழக்கமான எந்த கற்பனாவாதமும் இல்லாத இலக்கியம். அந்தக் கதையிலிருந்த யதார்த்தம் சினிமாவில் வெளிப்படவில்லை. சினிமா ஊட்டியில் கதை நிகழ்வதாக எடுக்கப்பட்டது. பிரேம்நசீர் ராணுவ வீரனாக நடித்திருந்தார். ரோஜா ரமணி சிறுமியாக. நசீர் ஒரு பெண்ணைக் கைவிட்டுச்செல்கிறார் என்பதை அன்று ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

மலயாற்றூர் ராமகிருஷ்ணன்

ஜி தேவராஜன்

[பாலு மகேந்திரா]

 ரிஷிகேஷ் முக்கர்ஜி

அதைப்போல செய்யப்பட்ட ஒரு பெரிய முயற்சி மலையாற்றூர் ராமகிருஷ்ணன் எழுதிய பொன்னி என்னும் நாவலின் திரைவடிவம். 1976ல் வெளிவந்தது. கமல் நாயகனாக நடித்திருந்தார். லக்ஷ்மி பொன்னியாக. அட்டப்பாடியின் பழங்குடிமக்களின் வாழ்க்கைப்பின்னணியில் ஒரு காதல்கதை. பழங்குடிப்பூசகர்களின் சுரண்டல், சாதிக்கட்டுப்பாடுகள், அவர்களின் நம்பிக்கைகள் ஆகியவற்றைப்பற்றிய படம். ஆனால் எந்த கலையழகும் இல்லாத ஒரு முற்போக்குக் கதை. பாலு மகேந்திரா ஒளிப்பதிவு. தோப்பில் பாசிக்கு இயக்கத்தெரியாது என அறிவிக்கும்படம். ஆனால் ஜி.தேவராஜன் இசையில் எல்லா பாடல்களுமே பெரிய வெற்றிகள்.

1972 ல் வெளிவந்த கரகாணாக்கடல் இன்னொரு முயற்சி. மெல்லி இரானி இதற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி தேவராஜன் இசையில் எல்லா பாடல்களுமே பெரிய வெற்றிகள். சத்யன் நடித்த இறுதிப்படம். ஆகையால் வணிகவெற்றி அடைந்தது. முட்டத்து வர்க்கி எழுதிய நாவலின் திரைப்பட வடிவம். ஆனால் எஸ்.எல்.புரம் சதானந்தனின் வழக்கமான திரைக்கதையில் மூலத்தின் உணர்ச்சிகரம் மிகக்குறைந்தது..

தன் மகளை கௌரவமாக திருமணம் செய்துகொடுக்கவேண்டும் என்பதற்காக தோமா கொச்சி துறைமுகத்தில் இருந்து மலைக்கு குடிபெயர்கிறார். பெண்களை விபச்சாரத்திற்கு இழுத்துக்கொள்ளும் கொச்சியின் ரவுடிகளின் சூழலை தவிர்க்க நினைக்கிறார். ஆனால் மலையில் அதைவிடப்பெரிய சுரண்டல் இருக்கிறது. அவர் மகள் ஏமாற்றப்பட்டு தற்கொலை செய்துகொள்கிறாள். தோமா அங்கிருந்து மீண்டும் கிளம்புகிறார். அவள் தற்கொலைசெய்துகொண்டதையே ஒரு நல்லவிஷயமாக நினைக்கிறார். ஓர் உழைப்பாளியை தன் கௌரவத்தை தக்கவைத்துக்கொள்ள விடாமல் அலைக்கழிக்கும் அமைப்பின் இரக்கமின்மையைச் சொன்ன நாவல் அது. படமும் அந்த உணர்வை ஓரளவு உருவாக்கியது.

மேலே சொன்ன படைப்புக்களில் செம்மீன் தவிர எல்லா படங்களுமே கலைத்தோல்விகள் என்றுதான் சொல்லவேண்டும். பொன்னி, நெல்லு ஆகியவை மாபெரும் வணிகத்தோல்விகளும்கூட. அதற்கு என்ன காரணம் என இயக்குநர் ஐ.வி.சசி ஒருமுறை கோவளத்தில் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார். நெல்லு மோசமான கதை, அதைவிட மோசமான திரைக்கதை. பாலுமகேந்திராவின் படப்பிடிப்பும் ரிஷிகேஷ் முகர்ஜியின் படத்தொகுப்பும் வீணாகியது. பொன்னிக்கு தோப்பில் பாசி மோசமான திரைக்கதை எழுத ஸ்ரீனிவாசலு அதைவிட மோசமான படத்தொகுப்பை அளித்தார்.பணிதீராத வீடு தயாரிப்பின் சமரசங்களால் வீழ்ச்சி அடைந்தது.

முட்டத்து வர்க்கி

தோப்பில் பாஸி

எல்லாவற்றையும் விட ஒன்று இருந்தது, படத்தொகுப்பு. அன்று திரைநிறுவனங்களிலேயே முழுநேர படத்தொகுப்பாளர் இருந்தார். அவரிடம் படத்தொகுப்பை ஒப்படைத்தார்கள். அவர் ஒரு மனித இயந்திரம். எந்தக் கற்பனையும் இல்லாமல் ஒரேவகையாக படத்துணுக்குகளை இணைப்பார். அதுதான் தேவை என்று கருதவும்பட்டது. டி.ஆர்.ஸ்ரீனிவாசலு அன்று கடவுள் போன்ற படத்தொகுப்பாளர். தயாரிப்பாளர்கள் கும்பிட்டு படத்தை வாங்கிக்கொள்வார்கள். படம் எப்படி வந்துள்ளது என்பது கடைசி அச்சு எடுக்கும்போதுதான் தெரியும். அவர் நூற்றுக்கணக்கான படங்களுக்கு படத்தொகுப்பு செய்திருக்கிறார். பொன்னியின் படத்தொகுப்பாளர் எம்.எஸ்.மணியும் அப்படித்தான். அவர் ஒருகட்டத்தில் எல்லா மலையாளப்படங்களையும் படத்தொகுப்பு செய்தார்.

அன்றெல்லாம் படத்தொகுப்பில் இயக்குநருக்கு சொல்லே இல்லை. அவரை கூப்பிடவே மாட்டார்கள். படத்தொகுப்பாளர்களிடமிருந்து படத்தை பிடுங்கி இயக்குநர்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டியது தன் வெற்றி என்றார் ஐ.வி.சசி. “இன்று சில தொழில்முறை மொழிதிருத்துநர்கள் எல்லா எழுத்தாளர்களின் நடையையும் சீராக திருத்தியமைக்கவேண்டும் என நினைப்பதுபோல” என்று நான் சொன்னேன்.

நான் இந்தப்படங்களின் பாடல்களுக்கு அடிமையாக இருந்த காலம் உண்டு. பின்னர் தொலைக்காட்சியில் பாடல்காட்சிகளைப் பார்த்தபோதும் ஓளிப்பதிவு உள்ளம் கவர்ந்தது. இப்படங்கள் தோல்விகள் என நம்பவே முடியவில்லை. இன்று திரும்பிப் பார்க்கையில் ஒரு படம் என்பது எந்தெந்த விசைகளின் சமநிலைப்புள்ளி என்னும் பிரமிப்பே உருவாகிறது.

இன்று வண்ணங்கள் கரைந்து அழிந்துவிட்டிருக்கின்றன. இந்தப்படங்களுக்கு நல்ல பிரதி கிடைப்பதில்லை. இசை மட்டும் எஞ்சியிருக்கிறது. ஆனால் என்னைப்போல் அந்தக்காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இசையே வண்ணங்களையும் அளித்துவிடுகிறது.

[படம் நெல்லு
இசை சலீல் சௌதுரி
பாடல் வயலார் ராமவர்மா
பாடியவர் லதா மங்கேஷ்கர்]

கதலி கண்கதலி செங்கதலி பூ வேணோ
கவிளில் பூமதமுள்ளொரு பெண்பூ வேணோ பூக்காரா?

முகளில் டிலு டிலு டிங்கிலமோடே
முகில்பூ விடர்த்தும் பொன்குடக்கீழே
வரில்லே நீ வனமாலி? தரில்லே தாமரத்தாலி?
தெய்யர தெய்யரத் தாரே

கிளிகள் வள குலுக்கண வள்ளியூர் காவில்
களபம் பொழியும் கிக்கிளிக்கூட்டில்
உறங்கும் நித்யமென் மோகம் உணர்த்தும் வந்நொரு நாணம்

முளய்க்கும் குளிர் முகக்குரு முத்துகள் போலே
முளம்பூ மயங்ஙும் குந்நினு தாழே
நினக்கீ தூவலு மஞ்சம் நிவர்த்தீ வீண்டுமென் நெஞ்சம்
தெய்யர தெய்யர தாரே

கதலிப்பூ. Malabar melastome

தமிழில்  கதலைப்பூ

[தமிழில்]

கதலி கண் கதலி செங்கதலி பூவேணுமா?
கன்னத்தில் பூம்பொடி மணக்கும் பெண்பூ  வேணுமா பூக்காரா?
தெய்யர தெய்யர தாரே

மேலே டிலு டிலு டிலு டிங்கில ஒலியோடு
முகில்பூ விரிக்கும் பொன்குடைக்குக் கீழே
நீ வரமாட்டாயா வனமாலி? தரமாட்டாயா தாமரைத்தாலி?
தெய்யர தெய்யர தாரே

கிளிகள் வளையலோசை எழுப்பும் வள்ளியூர் கோயிலில்
களபம் பொழியும் கிளிக்கூட்டில்
உறங்கும் என்றும் என் மோகம். எழுப்பும் வந்து ஒரு நாணம்
தெய்யர தெய்யர தாரே

முளைக்கும் குளிர் முகப்பரு முத்துக்கள்போல
மூங்கில்பூ மயங்கும் குன்றின் கீழே
உனக்காக இந்த இறகுமஞ்சம் விரித்தது மீண்டும் என் நெஞ்சம்

படம் பொன்னி
இசை தேவராஜன்
பாடல் பி.பாஸ்கரன்
பாடியவர் ஏசுதாஸ்]

மார்கழியில் மல்லிக பூத்தால்
மன்னார்காடு பூரம், மன்னார்காடு பூரம்
காடிறங்கி நீயும் ஞானும்
காணான்போகண பூரம்
காணான்போகண பூரம்

கண்ணே நின் கைபிடிச்சு
காவு சுற்றண நேரம்
சின்னகட பெரிய கட
சிந்தூரக்கட கேறாம்
குப்பிவள வாங்ஙாம் குப்பாயத்துணிவாங்ஙாம்
சிப்பிவள வாங்காம் பின்ன சோப்புசீப்பு வாங்ஙாம்
சோப்பு சீப்பு வாங்ஙாம்!

குந்திப்புழ கரையிலுள்ள குளிரு கோரும் காற்றில்
பந்தலிச்சு பீலி நீர்த்தும் புன்னாகத்தின் சோட்டில்
என்றெ மாறில் நீ மயங்கும் நின்றே மாறில் ஞான் மயங்கும்
கண்டு கண்டு கொதிச்சோட்டே பூமியும் நீலவானும்
பூமியும் நீலவானும்

[பாலக்காடு அருகிலுள்ள மன்னார்காடு தேவி கோயிலில் பூரம் என்னும் திருவிழா]

குந்திப்புழா ஆறு

மார்கழியில் மல்லிகை பூத்தால்
மன்னார்காட்டு திருவிழா
மன்னார்காட்டுத் திருவிழா

காடு இறங்கி நீயும் நானும்

காணப்போகும் திருவிழா

கண்ணே உன் கைபிடித்து

கோயிலைச் சுற்றிவரும் நேரம்

சின்னகடை பெரியகடை சிந்தூரக்கடை போவோம்

கண்ணாடிவளையல் வாங்குவோம். ரவிக்கைத் துணிவாங்குவோம்

சிப்பிவளையல் வாங்குவோம் பின்னர் சோப்புசீப்பு வாங்குவோம்

 

குந்திப்புழை ஆற்றின் கரையில் உள்ள குளிரச்செய்யும் காற்றில்

பந்தலாக விரிந்து நிற்கும் புன்னை மரத்தின் அடியில்

என் மார்பில் நீ மயங்க உன் மார்பில் நான் மயங்க

கண்டு கண்டு ஆசைப்படட்டும் பூமியும் நீலவானமும்

பூமியும் நீலவானமும்

[படம் பணிதீராத வீடு
இசை எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் ஜெயச்சந்திரன்
பாடல் வயலார் ராமவர்மா]

நீலகிரியுடே சகிகளே ஜ்வாலாமுகிகளே
ஜோதிர்மயியாம் உஷஸினு
வெள்ளிச் சாமரம் வீசும் மேகங்ஙளே
சுப்ரஃபாதம் சுப்ரஃபாதம்!

அஞ்சனக் கல்லுகள் மினுக்கி அடுக்கி
அகிலாண்ட மண்டல சில்பி
பணிஞ்ஞிட்டும் பணிஞ்ஞிட்டும் பணிதீராதொரு
பிரபஞ்ச மந்திரமே
நின்றே நாலுகெட்டின்றே படிப்புர முற்றத்து
ஞான் என்றே முறிகூடி பணியிச்சோட்டே

ஆயிரம் தாமர தளிருகள் விடர்த்தி
அரயன்னங்ஙளே வளர்த்தி
வசந்தமும் சிசிரமும் குளிக்கானிறங்குந்ந
வனசரோவரமே
நின்றே நீல வார்முடிக் சுருளின்றே அற்றத்து
ஞான் என்றே பூகூடி சூடிச்சோட்டே

[தமிழில்]

நீலமலையின் தோழிகளே, சுடர்முகத்தவர்களே!
ஒளிவடிவானவளான புலரிமகளுக்கு
வெள்ளிச்சாமரம் வீசும் மேகங்களே!
நல்காலை! நற்காலை!

கரிய கற்களை செதுக்கி அடுக்கி
அகிலத்தைப் படைத்த சிற்பி
கட்டியும் கட்டியும் கட்டிமுடியாத
பிரபஞ்சமெனும் மாளிகையே
உன் நாலுகட்டு முற்றத்தில்
நானும் என் அறையைக் கட்டிக்கொள்கிறேனே

ஆயிரம் தாமரை தளிர்களை விரித்தாய்
அன்னங்களை வளர்த்தாய்
வசந்தமும் பனிக்காலமும்
நீராடுவதற்கு இறங்கும்
காட்டுப் பொய்கையே
உன் நீலக்குழல் சுருளின் ஓரத்தில்
நான் ஒரு மலரைச் சூட்டிக்கொள்கிறேனே

படம் கரகாணாக்கடல்
இசை தேவராஜன்
பாடல் வயலார் ராமவர்மா
பாடியவர் சுசீலா

காற்று வந்நு கள்ளனே போலே
காட்டு முல்லைக்கு ஒரு உம்ம கொடுத்து
காமுகனே போலே

முல்லவள்ளிக்கு ஆசகலம் முத்து கிளிர்த்து
மணிமுத்தினு ஓலக் குட பிடிச்சு விருச்சிக மாசம்

பொன்குரிசின்  குந்நின்மேல் திங்களுதிச்சு
வனமுல்ல நிந்நு நகம் கடிச்சு முகம் குனிச்சு

தென்னல் வீண்டும் வந்நாலோ உம்ம தந்நாலோ
அது வெண்ணிலாவொ தும்பிகளோ கண்டு நிந்நாலோ

[தமிழில்]

காற்று வந்தது கள்வனைப்போல
காட்டு முல்லைக்கு ஒரு முத்தம் கொடுத்தது
காதலனைப்போல

முல்லைக்கொடிக்கு உடலெங்கும் முத்து முளைத்தது
அந்த மணிமுத்துக்கு ஓலைக்குடைபிடித்தது கார்த்திகை மாதம்

பொன்சிலுவை ஏந்திய குன்றின்மேல் திங்கள் எழுந்தது
வனமுல்லை நின்று நகம் கடித்து முகம் குனித்தது

தென்றல் மீண்டும் வரக்கூடுமோ முத்தம் தருமோ
அதை வெண்ணிலவோ தும்பிகளோ பார்த்துவிடுமோ?

*

யட்சிப்பாலை– பாடல்கள்

கரைகாணாக்கடல்

முந்தைய கட்டுரைபூமணியை வாசித்தல் – சென்னை இலக்கிய நிகழ்வு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60