செங்கோட்டை ஆவுடையக்கா -கடிதம்

ஆவுடையக்கா

ஆச்சரியம் தரும் ஆவுடை அக்காள்

செங்கோட்டை ஸ்ரீஆவுடையக்காளின் புகழ்பெற்ற எச்சில் பாட்டு

இனிய ஜெயம்

 

அக்கமாகாதேவி குறித்து பாவண்ணன் கட்டுரை வழியே அவரது பாடல்களை தேடி வாசித்துக் கொண்டிருந்தபோது, சுட்டிகளின் வரிசையில்

 

செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள் பாடல் திரட்டு

 

நாஞ்சில் சார் , செங்கோட்டை ஸ்ரீ ஆவுடை அக்காள்  [பக்தி,யோக,ஞான,வேதாந்த,சமரச] பாடல் திரட்டு  நூலுக்கு எழுதிய அறிமுக உரை வாசிக்கக் கிடைத்தது முன்பே வாசித்ததுதான் எனினும், வாசிப்பு சுவாரஸ்யத்துக்காக மீண்டும் இயல்பாக மனம் கட்டுரையை வாசிக்கத் துவங்கியது. ரமணர் முன்னிலையில் ஆவுடையக்காள் பாடல்கள் பாடப்படும் எனும் குறிப்பு சுவாரஸ்யமாக, இதற்கு முன் இதை படித்த நினைவே இன்றி, புதிதாக இருந்தது.

 

நாஞ்சில் கட்டுரைக்குப் பிறகு வேறு யாரேனும் ஆவுடையக்காள் குறித்து எழுதி இருக்கிறார்களா எனத் தேடினேன்.ஒரு ஐந்து கட்டுரை தேறும். எல்லாமே நாஞ்சிலார் கட்டுரைக்குப் பிறகு எழுதப்பட்டவை.  எல்லா கட்டுரையும் ஆவுடையக்காள் வாழ்க்கைக் குறிப்பில், தவறாமல் நாஞ்சில் எழுதிய ”பாவாடை கட்டத் தெரியாத வயதில் திருமணம் நடந்தது. மஞ்சள் கயிற்றின் மணம் ஆறுமுன் விதவையானார்” எனும் சொற்றொடர் இடம்பெற்றிருந்தது.

 

அதிலும் குறிப்பாக ஒருவர் இச்சொற்றொடர் வழியே ஆவுடையக்காள் வாழ்வை முன்வைத்துவிட்டு மேலும் எழுதுகிறார். ஒரு பெரியாரிய பெண்ணியவாதியாக என்னால் ஆவுடயக்காளின் கருத்துக்களுடன் உடன்பட இயலவில்லை.ஆனால் ஒரு பெண்ணாக அவர் அனுபவித்த வலியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. முற்றிலும் மாறுபட்ட கருத்துத்தளத்தை சேர்ந்தவர் எனினும்,ஒரு பெண்ணின் வலியை,சக பெண்ணாக இருந்தது புரிந்து கொள்ள,இந்த கருத்தியல்கள் அவருக்கு ஒரு தடையாக இல்லை,என்பதை காணும் போது, உளம் விம்மி கண்கள் வேர்த்து விட்டது.

 

சுட்டிகள் வரிசையில் சு.வெங்கட்ரமணன் என்பவர் கட்டுரை ஒன்று சிக்கியது .[இவர் அகிலன் படைப்புகள் மீது முனைந்திருப்பதாக குறிப்புகள் சொல்கிறது] இவர் கிட்ட தட்ட பாரதியாரை கையும் களவுமாக பிடித்து கூண்டில் ஏற்றி விட்டார். கட்டுரையின் சாராம்சமான அறச் சீற்ற வினா ‘ஏன் பாரதியார் ஆவுடையக்காள் பெயரை எங்குமே குறிப்பிட வில்லை?’ என்பதே.  நல்லவேளை இவர் வள்ளலாரை வாசித்ததில்லை என நினைக்கிறேன்.வாசித்திருந்தால் ‘ஏன் பாரதியார் வள்ளலார் பெயரை குறிப்பிடவில்லை ‘ என வினவி மற்றொரு அறச்சீற்ற கட்டுரை வனைந்திருப்பார்.

 

ஷல்லிதாசனான பாரதி,தனது சோதி மிக்க நவ கவிதைக்கான மொழியை,கூறுமுறையை  அவன் போன்ற மேலை நாட்டினர் வசமிருந்தது பெற்றுக் கொள்ளாமல், தனது சொந்த மண்ணின் ஆவுடையக்காள்,வள்ளலாரில் இருந்தது பெற்றிருக்கிறார் எனும் நேர்மறை அம்சமே கண்ணில் படாமல், ஒரு பண்பாட்டுக் கூறே புத்தியில் ஏறாமல், அதை எதிர்மறை கண்ணோட்டத்தில் பார்க்கும் கூறு, இந்த கட்டுரை எழுதியவர் யார்  அவர் உள்ளுக்குள் எப்படிப்பட்டவர்  என்றுதான்   காட்டுகிறதே அன்றி, அது பாரதியின் கள்ள மௌனத்தை  காட்ட வில்லை. funny guy இவர் அகிலன் மீது முனைந்த விதத்தை வாசிக்கும் ஆவலை அவரது மேற்படி கட்டுரை தூண்டி விட்டது.

 

மேலும் சுட்டிகள் வழியே சுற்றி வந்ததில், நாஞ்சில் அறிமுகம் செய்த அந்த ஆவுடையக்காள் பாடல் திரட்டு நூலே இணையத்தில் ஆர்சிவில் கிடைத்தது. காட்சியாக நூல் தெரியாது, தரவிறக்கு சுட்டியை சொடுக்கினால் நூலை தரவிறக்கிக் கொள்ளலாம்.

 

https://archive.org/details/SriAvudaiAkkalPadalThiratu/page/n247

 

 

கடலூர் சீனு

வேதாந்தம், தமிழிலக்கியம்: கடிதங்கள்

பாரதியின் இன்றைய மதிப்பு

தமிழ் ஆன்மிக மறுமலர்ச்சியின் வரலாறு

பாரதி விவாதம் 2 – மகாகவி

 

முந்தைய கட்டுரைகல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்
அடுத்த கட்டுரைஇல்லாத மணிமுடி