லண்டன் தமிழ் இலக்கியக் குழுமம்
இனிய ஆசிரியருக்கு,
இன்று நான் இரண்டு வாரங்களாக எதிர்நோக்கி இருந்த நாள், லண்டன் தமிழ் வாசிப்பு குழுமும் கூடுகே இன்று இனிதே நடந்தது ! ஒன்றிய மனம் உடைய நபர்கள் ஒன்று சேரும் பொழுது வரும் ஒரு விழாக்கால மனநிலையையே நீடித்திருக்குறேன். எங்கே தூங்கினால் நினைவுகளில் நீடிக்கும் ஆளுமைகளும், அவர்கள் முகங்களும் மறந்துவிடுமோ என்று அவசரமான மனநிலையில் எழுதும் மடல். பிழையிருப்பின் பொருத்தாள்க !
விழா அரங்குக்கு நுழையும்பொழுதே – சிவா இன்முகத்துடன் வரவேற்றார். சில வாசகர்களும் வர தொடங்கியிருந்தனர். நான் பேசிய எல்லாரையும் இணைத்த ஒரு சரடு உங்கள் இணையதளம் – எல்லா get together போல இல்லமால் பேசுபொருள் இருந்தது வெண்முரசு நாவலோ, இலக்கியம் சார்ந்ததாகவே இருந்தது. போக்குவரத்து நெரிசல் காரணமாக நண்பர்கள் வர நேரமாயிற்று. ஆனாலும் அதற்கு தகுந்தாற்போல நேரத்தே கட்சிதமாக நகர்த்திக்கொண்டு சென்றது அமைப்பு குழு.
ராய் அவர்களை சந்திக்க முடிந்ததில் ஒரு பெரு மகிழ்ச்சி :-) ஆங்கிலத்தில், “நெவெர் மீட் யுவர் ஹீரோஸ்” என்பர் என்னுடைய இந்த ஹீரோ அதை பொய்யாக்கிவிட்டார் – கூடுகை முடியும் பொழுது நான் புத்தக வாசிப்பின் மூலம் கட்டமைத்த, உருவகித்துக்கொண்ட ஆளுமையை விட மிக அணுக்கமானவராக இருந்தார் . ராய் தமிழ் புத்தங்கள் பொதுவாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதில்லை அது ஒரு பெரிய இழப்பு என்றும், சாதீயம் இன்றும் இந்திய சமூகத்தில் மிக பெரிய சக்தியாக இருப்பது அவரை நெருடுவதாக சொன்னார். அவருடைய அனுபவங்களும், அவர் சந்தித்த ஆளுமைகளையும், அனுபவங்களையும் மிக கோர்வையாக பேசிக்கொண்டு சென்றார். வீட்டிற்கு வந்தவுடன் ராய் அவர்களின் மற்ற மூன்று புத்தகத்தையும் ஆர்டர் செய்துவிட்டேன். சிவா அவர்களது சிறுகதைகளையும் வாங்கினேன். புத்தகங்கள் சேர்ந்துகொண்டு இருக்கிறது – மனம் எல்லாவற்றையும் படிக்க அலைபாய்கிறது.
சிவா, தன்ராஜ், கிரிதரன், சிறில், பிரபு, மணிவண்ணன், பாலாஜி மற்றும் அனோஜன் ஆகியோரை சந்தித்து உரையாடியது மிக மகிழ்ச்சியான தருணம். சிலர்களின் பெயர்கள் மனதில் நிற்கவில்லை (அவர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்). விழா முடிந்ததும் சிலர் உணவகம் சென்றோம். நமது நண்பர்கள் வாங்கிய பதார்த்தங்களை பார்த்து ராய் அசந்துவிட்டார் :-) நாளை காலை நீங்கள் எல்லாரும் கால்பந்தாட்டம் விளையாட போகிறவர்கள் மாதிரி உணவருந்துகிறார்கள் என்று ஹாஸ்யமாக சொன்னார். நகைச்சுவையும் இடையே இலக்கியமுமாக மணிகள் ஓடியது. இன்னும் எழுதி கொண்டே செல்லலாம். எல்லோரிடமும் விடை பெற்று செல்லும் பொழுது ஒரு சிறு வருத்தம். அதே சமயம் இன்னும் சந்திப்புகள் நிகழும் அதில் கலந்துகொள்வோம் என்ற மகிழ்ச்சியும் கலந்தே இருந்தது.
கிரி, சிறில், தன்ராஜ் மற்றும் பிரபு அவர்களது வாசிப்பனுவபம், சொற்பிரயோகம் மற்றும் அவர்களாவது பெர்ஸ்பெக்ட்டிவ்ஸ், ஒரு வாசகனாக நான் இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் இருப்பதே உணர்த்தியது. பொதுவாக சதுரங்கம் விளையாடும் பொழுது தன்னை விட திறமையான பிளேயர் உடன் விளையாடும்பொழுது நம்மளுடைய திறனும் அதிகமாகும். இவர்களை மற்றும் இன்று சந்தித்த திறமையான இதர வாசகர்களே பார்க்கும் பொழுது நானும் ஒரு நல்ல வாசகனாக முதிரவேண்டும் என்று ஒரு தாக்கம் மனதில் ஆழ பதிந்தது.
இந்நாள் மிக இனிதான நாள் ! உங்களின் எழுத்து என்னை, இன்று வந்த நபர்களை எங்கோ ஒரு நாட்டில் இணைத்து புது நட்புகளை எங்கள் வழி செலுத்தியது. அதற்கு நன்றிகள் பல ஒரு எளிய வாசகனிடம் இருந்து. நீங்கள் இன்னும் பல வருடம் எழுதுவதற்கு நல்ல உடல் நலம், மனம் நலம், கட்டற்ற கற்பனை என்றும் இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
பேரன்புடன்,
கோபி