அன்பின் ஜெ,
1000 மணி நேர வாசிப்புச் சவாலுக்காக கிண்டில் படிப்பானில் தொடர்ச்சியாக வாசிக்க ஆரம்பித்தேன். மற்ற கண்டுபிடிப்புகளைப் போல இதையும் abuse செய்ய ஆரம்பித்துவிட்டனர். தினமும் ஆயிரக்கணக்கான குப்பைகள் புத்தகம் என்ற பெயரில் கொட்டப்படுகின்றன. அதை எழுதியவர்களுக்கு எழுத்துப்பிழைகளைத் திருத்தும் அளவு கூட மெனக்கெடல் இல்லை. இணையம், முகநூல் போன்று கிண்டில் வெளியீடும் ஆரவார வெற்றுக் கூச்சல் ஆகிவிடும் போல. சமீபத்தில் நடந்த pen to publish போட்டியே இதற்கு சாட்சி. இந்தக் குப்பைகளை விட அதற்கு கிடைக்கும் வரவேற்பு அச்சத்தைத் தருகிறது.
தமிழ்ச்செல்வன்
திண்டுக்கல்
***
அன்புள்ள தமிழ்ச்செல்வன்,
எந்த ஊடகமும் அப்பண்பாட்டில் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொண்டுவந்து சேர்க்கும். ஊடகம் பெரிது என்றால் அப்பண்பாட்டில் உள்ளவற்றை பெரிதாக்கிக் காட்டும். இதை தொடர்ந்து காணலாம்
1870 வாக்கில் தமிழில் அச்சு இதழ்கள் வரத்தொடங்கின. முதலில் சில ஆண்டுகள் அது அறிவுப்பரவலுக்கான ஊடகமாக இருந்தது. மிகச்சில ஆண்டுகளிலேயே அதில் வணிகக்கேளிக்கை மட்டுமே கிடைக்கும் என்ற நிலை வந்தது. குறிப்பாக ஆரம்பகட்ட அச்சுநூல்களில் பெரும்பகுதி ஆண்மைவிரிவாக்கம் தொடர்பானவை. எஞ்சியவை பாலியல் நூல்கள். அக்கால ஹிக்கிம்பாதம்சின் முதன்மையான வணிகம் என்பது பாலியல்நூல்கள், தெரிந்திருக்கும்.
அக்காலகட்டத்தில்தான் தமிழின் தொன்மையான இலக்கியச் செல்வங்கள் அச்சேறின. தமிழ்மரபே மீட்டு எடுக்கப்பட்டது.ஆனால் அவை மிகச்சில அறிஞர்களால் மட்டுமே அறியப்பட்டன. பணமுள்ளவர்களிடம் நன்கொடை பெற்றுக்கொண்டுதான் அந்நூல்கள் வெளியாயின. [அதற்கு கையெழுத்து பெற்றுக்கொள்ளுதல் என்று பெயர். நூல்களை வாங்கிக்கொள்கிறேன் என உறுதி அளித்தல், முன்பணம் கொடுத்தல்] ஆனால் அவற்றிலும் பெரும்பகுதி கொள்வாரின்றி வெளியீட்டாளரிடமே குவிந்து கிடந்தது. உ.வே.சாமிநாதய்யரின் வீட்டில் அவர் வெளியிட்ட தொல்நூல்கள் எப்படி வெறும்சரக்காக குவிந்து இடத்தை அடைத்து மட்கிக்கொண்டிருந்தன என எஸ்.வையாபுரிப்பிள்ளை எழுதுகிறார்.
அதேபோல சினிமா. அது உருவானதுமே நேராக கேளிக்கை நோக்கியே சென்றது. புராணங்கள், தழுவல்கதைகள். இன்றுவரை அப்படித்தான். அதில் இன்றுகூட நல்ல கலைக்கு இடமில்லை. பார்க்க ஆளில்லை. நீங்களே பார்க்கலாம், ஒரு வணிகசினிமாவுக்கு எத்தனை அறிவுஜீவிகள் மாய்ந்து மாய்ந்து மதிப்புரை எழுதுகிறார்கள் என. கலைப்படங்களை திரும்பிப்பார்க்கவே ஆளில்லை
தொடர்ந்து தொலைக்காட்சி வந்ததும், அது அன்று அரசுத்துறையில் மட்டும் இருந்தமையால், நல்ல இலக்கியங்கள் திரைவடிவம் கொண்டன. தமிழில் சா.கந்தசாமி, வண்ணநிலவன் போன்றவர்களின் நாவல்கள் படமாயின. இந்தியிலும் மலையாளத்திலும் ஏராளமான இலக்கிய ஆக்கங்கள் அதில் வெளிவந்தன. தில்லி தொலைக்காட்சி தரமான கலைப்படங்களை வாங்கித் திரையிட்டது. என் மனைவி உட்பட பலர் அன்றெல்லாம் காத்திருந்து இந்திய கலைப்படங்களை பார்த்திருக்கிறார்க்ள்.
சில ஆண்டுகளில் தனியார்த் தொலைக்காட்சிகள் வந்தன. அவ்வளவுதான், இன்று அதில் என்ன வருகிறது என உங்களுக்கே தெரியும். போட்டியில் நிற்கமுடியாமல் அரசுத்தொலைக்காட்சியும் அதேவழியில் சென்றது. ஏனென்றால் மக்களிடம் இருப்பது, மக்கள் விரும்புவதே அதைப்போன்ற வணிக ஊடகத்தில் வரமுடியும்.
அதன்பின் இணையம். இணையம் வந்ததும் ஒரு சிறு விழிப்புணர்வு. பரவலாக இலக்கியம் அறிமுகமாகியது. நூல்களைப்பற்றிய பேச்சு உருவானது. வலைப்பூக்கள் வந்தபோது பலர் எழுதவும் தொடங்கினர். இன்று பாருங்கள், சினிமா வம்புகள், அரசியல் வசைகள் அன்றி இணையத்தில் ஏதேனும் உள்ளதா? சமீபத்தில் வெளிவந்த ஏதேனும் நூல் பேசப்படுகிறதா? எவராவது ஏதாவது தீவிரமான தலைப்புகளில் பேசுகிறார்களா? ஏற்கனவே என்ன இருந்ததோ அதே விகிதம்தான்.
அதன் தொடர்ச்சியே அமேசான். அது ஒர் ஊடகம். தமிழில் என்ன இருக்கிறதோ, தமிழருக்கு என்ன தேவையோ அதுதான் அங்கே வரும். விகிதம் இப்படி இருக்கும். பெண்களுக்குரிய மென்பாலியல் –மெல்லுணர்ச்சிக் கதைகள், ஆண்களுக்குரிய வன்பாலுணர்ச்சிக் கதைகள், பிழைகள் மலிந்த எளிய பயன்தரு நூல்கள், மாற்றுமருத்துவம் முதல் மாந்த்ரீகம் வரையிலான பொய்நூல்கள், கொஞ்சம் சோதிடம் மற்றும் மதவழிபாட்டு நூல்கள். இலக்கியம், அறிவுத்தள நூல்கள் மிகக்குறைவாகவே இருக்கும். ஏனென்றால் உண்மையில் தமிழ்ப்பண்பாட்டில் அவற்றுக்கான இடமும் தேவையும் அந்த விகிதத்திலேயே
ஆனால் அச்சுநூல்களில் தரமான நூல்களின் விகிதம் உண்மையில் மிகுதி. ஏனென்றால் இங்கே அச்சுநூல் என்பது பெரும்பாலும் கல்விநிலையங்களின் நூலகங்கள் மற்றும் அமைப்புகளின் நூலகங்களை நம்பி அச்சிடப்படுகிறது. ஓரிரு எழுத்தாளர்கள் தவிர பெரும்பாலான எழுத்தாளர்களின் நூல்களில் பத்துபிரதிகள் கூட வாசகர்களால் வாங்கப்படுவதில்லை. அந்த ‘ஸ்பான்ஸர்’கள் அமேஸான் போன்ற மென்பிரதி விற்பனையாளர்களுக்கு இல்லை. ஆகவே அங்கே குப்பைகளின் விகிதம் 99 விழுக்காடு இருக்கும். காலம் செல்லச்செல்ல மேலே கூட செல்லும்.
நல்ல ஆக்கங்களை அமேஸானில் எவரும் இயல்பாக கண்டடைய முடியாது. தேடி அடைவது மேலும் கடினம். ஆகவே அதன்வழியாக எவரும் இலக்கியம் நோக்கி வரமுடியாது. ஒருவர் முகநூல் வழியாக இலக்கியம் நோக்கி வரமுடியுமா என்ன? அதேபோலத்தான்.
அதற்கு மீண்டும் தொடர்ச்சியாக நிகழ்ந்துவரும் அறிவியக்கச் செயல்பாடுகள், இலக்கியச்செயல்பாடுகளையே சார்ந்திருக்கவேண்டும். இங்கே அறிவியக்கமும் இலக்கிய இயக்கமும் மைய ஓட்டச் செயல்பாடுகள் அல்ல, அவை மிகச்சிறுபான்மையினரால் நிகழ்த்தப்படும் மாற்றுச்செயல்பாடுகள் மட்டுமே.
இங்கு மட்டும் அல்ல, உலகமெங்கும் அறிவுச்செயல்பாட்டில், கலை இலக்கியச் செயல்பாட்டில் செல்லுபடியாகும் பொது விதி ஒன்று உண்டு. எது வணிகவெற்றிபெற்றதோ, எது அனைவருக்கும் பிடித்திருக்கிறதோ, எது பெரும்புகழ்பெற்றிருக்கிறதோ அதற்கு எந்த அறிவுமதிப்பும், கலைமதிப்பும் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அது சராசரியானது. சராசரிகளை முன்னால் கண்டு உருவாக்கப்பட்டது. பொதுவான உணர்ச்சிகள், பொதுவான அறிவுத்தரம் ஆகியவற்றைக் கொண்டது.
கலையும் சரி, மெய்யான அறிவும் சரி அரிதானவை. ஒவ்வொருவரும் தங்கள் இயல்புக்கு ஏற்ப தேடிச்சென்று கண்டடைய வேண்டியவை. அவை நம் ரசனைக்கும் அறிவுத்திறனுக்கும் ஏற்ப உருவாக்கப்பட்டவையாக இருக்காது. நம் அறிவுத்தரத்தையும் நம் ரசனையையும் மேம்படுத்திக்கொண்டு, நம் கவனத்தையும் உழைப்பையும் அளித்து நாம் சென்றடையவேண்டியவையாகவே இருக்கும். பிறிதொன்றிலாத தனித்தன்மையே மெய்யான அறிவுக்கும் கலைக்கும் முதற்தகுதி.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பொதுரசனை – பொதுப்புரிதல் சார்ந்த ஆக்கங்கள் தொழில்நுட்பரீதியாக மேம்பட்டவையாக இருக்கும். நூல்களோ சினிமாவோ தொலைத்தொடரோ, அவை இந்தியச்சூழலில் நமக்கு சற்று அறைகூவலை விடுப்பதாகவும் இருக்கும். நமக்கு அவர்களை அறிந்துகொள்வதற்கான வேட்கை மிகுதி. ஏனென்றால் அவர்கள் நம்மை ஆள்பவர்கள். அதை நம் ஆழ்மனம் அறியும். அடிமை எப்போதுமே ஆண்டையை அகத்தால் பின்தொடர்வான். அதோடு நாம் ஒரு சிறு சூழலில் அடைபட்டவர்கள். உலகை அறியும் துடிப்பு நம்மில் எழும்போது ஐரோப்பாவும் அமெரிக்காவுமே உலகமாக நம் காட்டப்படுகிறது.
ஆகவே நாம் அவர்களின் வணிகவெற்றிபெற்ற, புகழ்பெற்ற, பொதுவான நூல்களையும் சினிமாக்களையும் பெருவிழைவுடன் ஏற்கிறோம். உழைப்பை அளித்து புரிந்துகொள்ள முயல்கிறோம்.அதை அறிவுச்செயல்பாடு என்றும் கலைச்செயல்பாடு என்றும் எண்ணிக்கொள்கிறோம். ஒவ்வொரு காலகட்டத்திலும் அவ்வாறு சில மேற்கத்திய வணிகப்படைப்புகள், பொதுரசனை ஆக்கங்கள் இங்கே அறிவுத்தளத்தில் கொண்டாடப்படுகின்றன. நான் அவ்வாறு குறைந்தது நான்கு அலைகள் வந்துசென்றதை இதற்குள் கண்டடைகிறேன். இது ஒரு பின்தங்கிய நாட்டில் வாழ்பவர்களின் அசட்டுத்தனம் மட்டுமே
நாம் ஐரோப்பாவை, அமெரிக்காவைக் கவனித்தால்கூட அங்கிருக்கும் அறிவுச்செயல்பாட்டை, கலைச்செயல்பாட்டை மட்டுமே கருத்தில்கொள்ள வேண்டும். அவை அங்கேயே கூட சிறுபான்மையினருக்குள் புழங்குபவையே. அங்குள்ள கலைப்படங்கள், அங்குள்ள தரமான இலக்கியம், அங்குள்ள அறிவுச்செயல்பாடுகள் அவையே நாம் அறியவேண்டியவை. அவர்கள் உலகுக்காகச் சமைக்கும் கல்யாணச் சமையல்கள் அல்ல.
சென்ற தலைமுறைவரை தமிழ் அறிவியக்கம் அப்படித்தான் இருந்தது. இங்கே சிற்றிதழ்ச்சூழலில் ‘பார்ட்டிஸான் ரெவ்யூ;வும் “என்கவுண்டர்’ரும்தான் பேசப்பட்டனவே ஒழிய ‘நியூயார்க் டைம்ஸ்’ அல்ல. ஐசக் பாஷவிஸ் சிங்கர் பேசப்பட்டாரே ஒழிய ஜான் அப்டைக்கோ ஜான் ஓ ஹாராவோ அல்ல. இணையம் போன்ற பெரிய ஊடகம் அவ்வேறுபாட்டை இல்லாமலாக்கியது. அமேஸான் அதை மேலும் இல்லாமலாக்கும்.
பொழுதுபோகாமல் படம்பார்ப்பவர்கள், படிப்பவர்கள் அதில் விழுந்து கிடப்பதில் பிரச்சினை இல்லை. அவர்கள் வேறு எதையாவது செய்து தொலைக்காமல் இருக்கும் வரை நல்லதும்கூட. ஆனால் அறிவியக்கத்திலும் கலையிலும் ஈடுபடுபவர்கள், அதில் எதையாவது இயற்ற நினைப்பவர்கள் அந்த பொதுப்போக்கு எனும் சருகுப்புயலில் சிக்கிக்கொண்டால் இழப்புதான்.
ஆகவேதான் பெருமுயற்சி எடுத்துக்கொண்டு தொடர்ச்சியாக இலக்கிய அறிமுகநிகழ்ச்சிகளை, இந்த இணையதளம் போன்ற ஊடகங்களை நடத்தவேண்டியிருக்கிறது. இன்றுகூட இந்த இணையதளம் உட்பட அனைத்துமே நன்கொடைகளால்தான் நிகழ்கின்றன – இயல்பான மக்கள் ஆதரவு, வணிகவாய்ப்பு இல்லை என்பதை மறக்கவேண்டாம்.
உங்கள் வீடிருக்கும் பகுதியை, உங்கள் அலுவலகத்தை, உங்கள் கல்விநிலையத்தை சுற்றிப்பாருங்கள். குறைந்தபட்ச அறிவியக்க ஈடுபாடு உடையவர், மிக எளிமையான அளவிலேனும் புதியவற்றை தெரிந்துகொள்ள முயல்பவர் எவர்? ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒருவர். அப்படி இருக்க அமேஸானில் அல்லது முகநூலில் அல்லது தொலைக்காட்சியில் மட்டும் எப்படி அறிவியக்கமும் இலக்கியமும் திகழமுடியும்?
மாற்றம் தொடர்ச்சியான முயற்சிகள் வழியாக உருவாகும் பண்பாட்டுப் பரிணாமத்தால் மட்டுமே நிகழும். அதற்கு பொருளியல், கல்விச்சூழல் போன்ற சில புறக்காரணிகளின் உதவியும் தேவை. எதிர்காலத்தில் வளர்ச்சி நிகழும் என நம்புவோம்.
ஜெ
***