சயந்தனின் ‘பூரணம்’

சயந்தன் – பூரணம்

அன்புள்ள ஜெ,

உங்களுடைய தளத்தில் வரும் கடிதங்களையும் விமர்சனங்களையும் கிரமமாக வாசிப்பவன் நான். நான் ரசித்து வாசித்தவை பற்றி இங்கே எழுத வேண்டும் என்று நினைத்தாலும் என்னுடைய எழுத்தின் போதாமை பற்றிய தயக்கம் இவ்வளவு நாளும் என்னை  தடுத்தபடியே இருந்தது.

இந்த மாத விகடன் தடம் ஈழ எழுத்தாளர்கள் பலரின் படைப்புக்களோடு  முள்ளிவாய்க்கால் நினைவு சிறப்பிதழாக வந்திருப்பதை அறிந்திருப்பீர்கள். அவற்றுள் என்னில்  தீவிரமாக ஓர் மனப்பதிவை உருவாக்கிய ஓர் சிறுகதை “பூரணம்”. சயந்தன் என்பவர் அதனை எழுதி இருக்கின்றார்.  யதார்த்தத்தின் உக்கிரத்தை அப்படியே எழுத்தில் வடிக்கும் வல்லமை அந்த சிறுகதையில் உணரக்கூடியதாக இருக்கின்றது. கனகச்சிதமான மொழியும் ஸ்திரமான வடிவமும் கொண்ட இக்கதை எந்த செயற்கைத்தனத்தையும் கொண்டிருக்காமல் ஓர் ஏதிலிப்பெண்ணின் மனவோட்டமாக இருக்கின்றது.

போர் தின்ற ஓர் சமூகத்தின் நினைத்துப்பார்க்க முடியாத குரூரத்தை வாசித்த அதிர்ச்சியும் வேதனையும் அக்கதை நெடுகிலும் இழையோடியிருக்கும்.

கதையின்  முடிவில் தன்னுடைய இறந்து போன மகனின் குழந்தை தான் அந்த கரு என்று நம்பிய அந்த முதிய பெண்ணின் பெருங்குரலில் வழிகின்ற துயரமும் நம்பிக்கையும்  பலதளங்களுக்கு நகரும்.  தீராத மௌனம் ஒன்று வாசிப்பின் முடிவில் தங்கி விடுகின்றது.

கதையில் வரும் பாத்திரங்களை  புறவயமாக சாதாரணமாகச் சொல்லிக்கொண்டே போகும் இந்த கதை, முடிவில் அக ஆழத்தின் நுண்ணிய உணர்வுகளை அனாயசமாக தீண்டிவிட்டு செல்கின்றது.

போரின் உக்கிரத்தில், கீழ்மையும் நம்பிக்கையீனமும் மனதை ஆக்கிரமித்து கொள்ளும் போது , சொந்த  அண்ணனுடன்  கொண்ட உறவின் நிமித்தம் வயிற்றில் தரித்த கருவுக்கு இராணுவத்தின் பாலியல் வன்முறை தான் காரணம் என்று கதையை முடித்திருக்காமல் , போரில் இறந்து போன புலி வீரன் ஒருவனின் குழந்தை என்று அவனுடைய தாயை கூட நம்பவைத்த அந்த பெண்ணின் மனது யதார்த்தத்தின் உக்கிரம்.

இன்செஸ்ட் பற்றி ஒரு சில கதைகளே வந்துகொண்டிருக்கும் தமிழ்ச்சூழலில் காமத்தை தப்பிப்பிழைத்தலின் வேட்கை சார்ந்ததாக போரின் பின்னணியில்  சித்தரிக்கும் இது போன்ற கதைகள் வாசிக்கப்படவேண்டியவை என்றே கருதுகின்றேன்.

ஆசிரியரின் வேறு கதைகளையும் தேடி வாசிக்க ஆவலாக உள்ளேன்.

அன்புடன்,
ப்ரவீன்

***

சயந்தன் இணையதளம்
முந்தைய கட்டுரைதாக்குதல் பற்றி…
அடுத்த கட்டுரைஅறிவியல் புனைகதைகள் -கடிதங்கள்