பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனித வாங்க

பனிமனிதன் மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ வணக்கம்…

தத்துவம், வரலாறு ,அறிவியல் ,அரசியல், ஆண்மீக,பயணக் கட்டுரைகள் என பல தளங்களில் நீங்கள் எழுதினாலும் புனைவு எழுத்தாளராக நீங்கள் தரும் இன்பம் சொல்லிவிட முடியாதது.

பெருங்கனவுகளின் உலகில் நீங்கள் வாழ்கிறீர்கள், இந்த நடைமுறை யதார்த்த உலகில் வலுவாக கால்களை ஊன்றிக் கொண்டே விண்ணில் பறக்கிறீர்கள்.

எந்த ஒரு கலைப்படைப்பும் வெற்றி அடைகையில் மண்ணில் விண்ணை சமைக்கிறது, பனிமனிதன் அவ்வாறான ஒரு ஆக்கம்.

குழந்தைகளை மையப்படுத்திய ஒரு கதையை இதைவிட சிறப்பாக துவங்கி விட முடியாது, பத்தாயிரம் அண்டாக்கள் நிறைய ஐஸ்கிரீமை கொட்டி பரப்பி வைத்திருந்த பனிமலை சரிவு, எனத் துவங்கும் கதை ,பக்கத்துக்குப் பக்கம் அத்தியாயத்துக்கு அத்தியாயம் குழந்தைகளுக்கு (வாசகர்களுக்கு)

  1. மானுடவியல்
  2. புவியியல்
  1. அறிவியல்
  2. விலங்கியல்
  3. உளவியல்
  1. உயிரியல்
  2. உலோகவியல்
  3. பரிணாமவியல்
  4. சூழலியல்
  5. கட்டிடவியல்
  6. ஆன்மிகம்
  1. பனியுகம்

என வாழ்க்கையை செம்மையாக ,ஆழமாக, உயிரோட்டத்தோடு வாழ்வதற்கு தேவையான துறைகளைப் பற்றிய அறிவார்ந்த அறிமுகத்தை வழங்குகிறது. சமநிலையோடு கூடிய அறிவியல் பார்வை இன்மையே பல்வேறு சிக்கல்களுக்கு அடித்தளமிடுகிறது. உதாரணமாக ராமர் பாலம் கட்டினார் என்று ஒரு தரப்பும், ராமாயணம் என்ற ஒரு தொன்ம காவியமே வர்ணாசிரமத்தை புகுத்தி திராவிடத்தை அழிக்க புனையப்பட்ட ஆரிய சதி என்று மற்றொரு தரப்பும் இரு துருவங்களாக எதிர்நிலை எடுக்கின்றனர்.

மாறாக இந்த நாவலில் சிவாலிக் நதி எப்படி மலைத்தொடராக மாறியது, அமெரிக்கரான ஜி.இ.லூயிஸ்ன் அர்ப்பணிப்பு நிறைந்த ஆய்வில்அவர் கண்டறிந்த குரங்கு மனிதனின் எலும்புக் கூடுகளும் அதற்கு அவர் இட்ட ராமபிதாகஸ் என்ற பெயரும். இதைப்பற்றி இந்நாவலில் இடம் பெற்றுள்ள குறிப்புகளும். தொன்மங்களும் ,அறிவியலும் ,நடைமுறை உண்மையும் , ஒன்றிணையும் புள்ளி அற்புதம், எனக்கு அது பல கதவுகளை திறந்து விட்டிருக்கிறது. பழந்தமிழரின் அறிவியல், தமிழன் தான் அனைத்தையும் கண்டு பிடித்தான், தமிழனை அழிக்க உலகமே திரண்டு சதி செய்கிறது, போன்ற உளறல்களை எதிர்கொள்ள, பின்னிருக்கும் உண்மைகளை அறிந்துகொள்ள நல்லதொரு கருவி எனக்கு கிட்டியுள்ளது.

டாக்டரும், பாண்டியனும், கிம்மும், செல்லும் யதிகளின் காடு,கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பரிணாம மாற்றம் நிகழாத இடம், அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் மரம் தாவும் குதிரைகள், பச்சை நிற காகங்கள், யானையளவு பசுமாடு, முயல் அளவு யானை, சிவப்பு நிற மயில்கள், சிறகு முளைத்த அணில்கள்,பூனை முக பல்லிகள் , குரங்கின் கால் ஆட்டுக்கொம்பு கொண்ட மரத்தில் விளையாடும் நாய்கள், மரம் ஏறும் மீன்கள் எட்டுக்கால் எருமைகள், அட்டையின் கால்களைக் கொண்ட மலைப்பாம்பு, பனியுகத்து மாமதயானைகள், குருவியளவுள்ள கொசு, கிளைடர் வடிவில் வவ்வால்கள்,ட்ராகன்கள், பல வண்ண மின்மினிகள், பெரும் பாறையை ஒத்த ஆமைகள் என இப்பகுதி கற்பனையின் உச்சம். ,அதேநேரத்தில் பரிணாமவியல் கோட்பாடுகளின்படி அங்கிருந்து இன்றைய உயிரினங்கள் வரை ஒரு கோடு இழுக்கும்படியான அறிவியல் கூறும் உள்ளது.

எல்லாம் சிவமயம் என்பதைப்போல,சாகசப் பயணத்தில் எதிர்கொள்ளும் அற்புதங்களையும், ஆபத்துகளையும், அழகான தருணங்களையும், புத்தரோடு இணைத்து பொருள் கொள்ளும் கிம்மின் வார்த்தைகள் மகத்தான விரிவு கொண்டவை. வெண்ணிற பனிமலை” புத்தரின் தூய்மையான மனம்” அந்திச் சூரியனை எதிரொலிக்கும் சிவந்த பனி மலைகள் “புத்தரின் புன்னகை” முற்றிலும் ஒளியற்ற பனிமலை”புத்தரின் உறக்கம்” பனிமலையில் வீசும் பெரும் புயல்கள்”புத்தரின் விளையாட்டு” வட்ட வடிவான வானவில்”புத்தரின் தர்ம சக்கரம்” இந்த புவி மொத்தமும்”புத்தரின் ஓவியக்கூடம்”புத்தரில்லா இடமில்லை அழகு ஆபத்து இரண்டுமே “புத்தர் தான்” நாம் நமது கால்களையும் கைகளையும் பற்றி மட்டுமே நினைக்க வேண்டும் மற்றவற்றை “புத்தர் பார்த்துக் கொள்வார்”.நீ யார் என்ற கேள்விக்கு கிம்மின் பதில் இந்த பூமியில் உள்ள புழுவும் எனக்கு சமமானது, ஒரு சிறு கிருமி கூட எனக்கு நிகரானது

“நான் தான் புத்தர்”. கிம் லாமாவாக அறியப்பட்ட கணத்திலேயே வட இந்திய பின்னணி கொண்ட டாக்டர் காலில் விழுந்து வணங்குகிறார்,திராவிட மண்ணின் பாண்டியன் ஒரு மலை ஜாதி பையன் காலில் ஏன் விழுகிறீர்கள் என பகுத்தறிவு கேள்வி எழுப்புகிறார். அவதார் திரைப்படம் வருவதற்கு ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட நாவல் இது,எத்தனை அம்சங்களில் நாவலும் படமும் ஒத்துப்போகிறது பெரும் வியப்பு தான் ஏற்படுகிறது.

“வௌவால்களின் கழுத்தில் இருந்த சதையை இறுக பிடித்தவுடன் பறந்தது”இந்த வரிகளைப் படித்தவுடன் சிலிர்த்துப் போனேன். நாவலில் திருஷ்ணை குறித்து வரும் பகுதிகளிலும் தியானம் ,ஞானம், குறித்தெல்லாம் பேசப்படும் இடங்கள் என்னுள் பரவசப் புயல்களை வீசச்செய்தது.கோடி நன்றிகள் அதற்கு. அவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொண்டேன். பரிணாமவியலின் படி மீன் தான் பல்லியாக, ஓணானாக மாறியது. ஓணானோ,பறவையாய் ,முதலையாய் ஏனைய விலங்குகளாக பரிணமித்தது.(புல்லாகி,பூடாகி, பல் மிருகமாகி) அடிப்படை காரணம் இன்னும் வேண்டும் என்ற நிறைவின்மை, அவா,வேட்கை, முன்னேற வேண்டும் என்ற துடிப்பு ,தவிப்பு.

ஒரு புழுதான் இன்று நான் ஆகியுள்ளது. தொடர்ந்து இயங்கியதால். உண்மையில் துறவு என்பது முற்றிலும் அனைத்தையும் நிறுத்துவது தானே. ஒன்று திருஷ்ணை என்னும் துடிப்பை கடந்து பரிணாமத்திற்கு முந்திய ஆதி நிலைக்குச் செல்வது, அல்லது மேம்பட்ட உயரிய பரிணாமத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாக மலர்வது. விசேஷ வீடுகளுக்குச் செல்லும் பொழுதும் பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளுக்கு பரிசளிக்க நேரும் பொழுதும், நூல்களை அளிப்பது என் வழக்கம். ஆரம்ப காலங்களில் ஆன்மீக நூல்களை கொடுத்து வந்தேன், உங்களை வாசிக்கத் துவங்கிய பின்பு விசும்பு கொடுத்தேன், யானை டாக்டர் வந்த பிறகு பெரும்பாலும் அறம் தொகுதிதான், இவ்வரிசையில் பனிமனிதன் சிம்மாசனமிட்டு அமர்ந்து விட்டான்.எவ்வயதினருக்கும் ஏற்றதொரு பொக்கிஷம் பனிமனிதன்.

ஆசிரியருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள்…

மு.கதிர்முருகன்

கோவை

***

பனிமனிதன் – கடிதம்

பனிமனிதன்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் என்னும் கற்பனை -கடிதம்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -கடிதங்கள்

பனிமனிதன் -ரெங்கசுப்ரமணி

பனிமனிதன் – சுனில்கிருஷ்ணன்

பனிமனிதன்

***

முந்தைய கட்டுரைசெல்பேசித் தமிழ் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஜப்பான், ஒரு கீற்றோவியம் -1