வாசிப்புச் சவால் -கடிதம்

 

வாசிப்பு எனும் நோன்பு

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

என் நெஞ்சில் அச்சடித்து வைத்துக்கொள்வதுபோல் ஒரு பதில் கடிதம் எழுதியதற்கு நன்றி. தங்களின் வாசிப்பு நோன்புகளை அறிந்துகொண்டதில் எனக்கு நல்லதொரு மகிழ்ச்சியும் புத்துணர்வும் த ந்துள்ளது. வாசிப்பதையும், வாசிப்பதை பற்றி பேசுவதையும் எழுதுவதையும், என் அடுத்தகட்ட வாழ்க்கையாக அமைத்துக்கொள்ளலாம் என்று இருக்கும்பொழுது, உங்களின் கடிதம் நல்லதொரு கண்திறப்பையும் வழிகாட்டுதலையும் கொடுத்துள்ளது.

நான் தேடி தேடி வாசித்தாலும், என்னிடமிருந்த ஒரு மகத்தான பிழை தெளிவெனத் தெரிந்தது. அலுவலக வேலைகளை ETA (Estimated Time Availability) என்று போட்டு செய்பவன், வாசிப்பதற்கு ஒருETA இல்லாமல் இருந்திருக்கிறேன். உதாரணத்திற்கு உங்களின் இந்த பக்கத்தை(http://www.jeyamohan.in/84) நான் புக்மார்க் செய்து வைத்து இரண்டு வருடங்கள் ஆகிறது. அதில்குறிப்பிட்டிருக்கும் நூல்களை ஊருக்கு வரும் சமயம் வாங்கிவந்து வாசிக்கிறேன். ஆனால் ஒருகாலக்கெடு வைத்துக்கொண்டு வாசிக்கவில்லை. முதலாம் பட்டியல், இரண்டாம் பட்டியல்என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். நான் ஒவ்வொரு பட்டியலாக எடுத்துக்கொண்டு காலக்கெடுவைத்து வாசித்திருக்கலாம்.

 

அடுத்ததாக, தமிழில் தி. ஜா. ரா, கி.ரா, வண்ணதாசன்,வண்ணநிலவன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, லா.சா. ரா, மற்றும் உங்கள்எழுத்துக்களை, ஆங்கிலத்தில் Neil Gayman, Michael Lewis (non fiction) எழுத்துக்களை ஒன்று விடாமல்படிக்கவேண்டும் என்று நினைக்கிறேன். வருடத்திற்கு இத்தனை நூல்கள் என்று வைத்துவாசிக்கிறேன். ஆனால், இத்தனை வருடத்திற்குள், இத்தனை நாட்களுக்குள் வாசித்துவிடவேண்டும் என்று திட்டம் வைத்துக்கொள்ளவில்லை. தங்களின் கடிதத்திற்கு பிறகு ஒரு தெளிவு வந்து எதை எதற்குள் முடிக்கலாம் என்று ஒரு திட்டம் , மன்னிக்கவும் நோன்பு வைத்துக்கொள்கிறேன். சுனிலின் திட்டம் (சவால்) ஒரு பக்க பலம். சுனிலுக்கு இப்படியொருசவாலை ஆரம்பித்ததற்கு பரிசாக , இந்த வருடம் விஷ்ணுபுரம் விழாவிற்கு வரும் சமயம், இரண்டு டீ ஷர்ட்டும் , இரண்டு ஜீன்ஸ் பேன்டும் வாங்கி வரவேண்டும்.

 

நான் அமெரிக்காவில் புலம் பெயர்ந்து ஆங்கில நூல்கள் தெரிய ஆரம்பித்ததால், ரஷ்யநாவல்கள் மீது எனக்கு நாட்டம் வராமல் போய்விட்டதா. இல்லை எனக்கு ரஷ்ய நாவல்கள்பற்றிய ஒரு அறியாமையா தெரியவில்லை. நீங்கள் நிறைய சொல்லியிருக்கிறீர்கள். இந்தக் கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளீர்கள். கண்டிப்பாக ஒரு வருடம் நோன்பு இருந்து ரஷ்ய நாவல்களையும் வாசிக்கிறேன்.

 

அருண்மொழி நங்கை, அஜிதன் சைதன்யா அனைவருக்கும் எனது அன்பைச் சொல்லவும்

 

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்.

 

 

அன்புள்ள சௌந்தர்,

ருஷ்ய பேரிலக்கிய நாவல்களுக்கும் பிரெஞ்சு, அமெரிக்க நவீன நாவல்களுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடுள்ளது. ருஷ்யநாவல்கள் வாழ்க்கையின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசுபவை. ஆன்மிகமான வினாக்களை நோக்கிச் செல்பவை. ஆகவே வடிவக்கூர்மை, ஒளித்துவைத்து சொல்லுதல் ஆகியவற்றை தவிர்ப்பவை. அவை கலைரீதியான மாபெரும் உரையாடல்கள். ஐரோப்பிய நாவல்கள் பண்பாட்டுச்சிக்கல்களை, உறவுப்பிரச்சினைகளைப் பேசுபவை. ஆகவே அவை பூடகமாகவும் கச்சிதமாகவும் கூற முயல்கின்றன. இருவேறு அழகியல்கள். ஒன்றிலிருந்து ஒன்றுக்கு நகர ஒரு மனநிலைமாற்றமும் தேவையாகிறது

இந்த ஆண்டு டிசம்பர் 28, 29 அன்று விழா. ஏற்பாடுசெய்துகொள்ளுங்கள்.

 

ஜெ

1000 மணிநேர வாசிப்பு சவால்

வாசிப்புச் சவால் -கடிதங்கள்

வாசிப்புச் சவால் – கடிதங்கள்

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு –தீயின் எடை
அடுத்த கட்டுரைராகுல்,மோடி -கடிதங்கள்