விமலரும் வராகரும்
சமணத்தில் வராகர்
வராகர் -ஒரு கடிதம்
இனிய ஜெயம்,
அண்ணன் அனீஷ் கிருஷ்ணன் அவர்களின் பதில் மகிழ்வளித்தது. நன்றி. மணிபத்ர வீரன். மனதுக்குள் பதித்துக் கொள்கிறேன். கலாச்சார தனித்தன்மைக் கூறுகளில் அவரது ஞானம் பிரமிப்பு அளிக்கிறது.
கோவிலுக்கு வெளியே பூசாரி யை தேடிச் சென்றுதான் முதலில் கேள்வி கேட்டேன். என் வினோத உருவம் அங்கே தடை. எல்லாம் உங்க சாமி மாதிரிதான் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொண்டு வேறு பணி நோக்கி நகர்ந்து விட்டார். புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப் பட்டது எனவே படம் எடுக்க வில்லை. இன்று பதிவில் மணிபத்ர வீரரை கண்டதும் இவர்தான் இவரேதான் என மனம் கூவியது.
நான் அடிப்படையில் ஒரு கலாச்சார துண்டிப்பின் முனையில் நின்று எனது வேர்களை தேடிக்கொண்டிருப்பவன். கூட்டுக்குடும்ப வாழ்வில், குடும்பத் தலையான தாத்தா தீவிர தி க. [சித்தப்பாவுக்கு அவர் இட்ட பெயர் ராவணன்] பின் வயது முதிர, மகள் ஒருவர் வாழ்வு தள்ளாட, முதுமை வந்து கண் மறைக்க,என் தந்தை நோயில் விழ, செந்தில் வேலா நாம் பண்ண தப்புக்கு எம் புள்ளைகள தண்டிசுடாத எனக் கதறத் துவங்கினார்.
இன்றளவும் எங்கள் இல்லத்தில் நீத்தார் சடங்குகள் எதுவும் நிகழ்ந்ததில்லை. என் தலைமுறையில் நான் எங்கள் குலதெய்வத்தை வழிபடுபவனாக [அதை குடும்பத்துக்கும் கொண்டு வந்து] வேருக்கான தேடலை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். இந்த கலாச்சார துண்டிப்பில் நின்று, இந்த துண்டிப்புக்குக் கீழே எனது ஆழத்தை கட்டமைத்திருக்கும் இந்த கலாச்சார வேறுபாட்டின் தனித்தன்மைகளையும், பண்பாட்டின் தனித் தன்மைகளையும் அறிய விழைந்தே இதில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
எளிய அளவே எனினும் வாசித்து,பயணித்து, கண்டறிந்த வகையில் எனது புரிதல் இத்தனை வண்ணமயமான வேறுபாடுகளுக்கு கீழே மானுட அகம் ஒன்றே . உதாரணமாக மீன் வழிபாடு. சிந்து சமவெளி துவங்கி மச்சாவதாரம் வரை அதன் வளர்ச்சி நிலையில், அது எத்தனை தனித்தன்மை கொண்ட கூறுகள் வழியே வளர்ந்திருக்கும். நான் வாசித்த சமண நூல் ஒன்றில் உள்ள ஐதீகக் கதையில் மகாவீரர் பிறக்கும் முன்பு அவர் அன்னை கண்ட கனவில் இரட்டை மீன்கள் துள்ளுகிறது. பௌத்தத்தின் எட்டு மங்கலச் சின்னங்களில் ஒன்று மீன். பண்டைய எகிப்தில் பூனை அளவே மீனும் புனிதம்.ஆகவே மன்னர்களுக்கும் ஆத்மீக குருக்களுக்கும் மீன் உண்பது தடை. இன்னும் இறங்கிப் பார்த்தால் மீன் புனித சின்னமாக இல்லாத பண்பாடே இல்லை எனும் அளவு மீன் வழிபாடு நிறைந்திறுகக் காணலாம். மகாராஸ்ட்ராவில் சென்ற ஆண்டு இறுதியில் கண்டு பிடிக்கப்பட்ட பாறை வெட்டு தொன்மங்கள் [ கி மு பத்தாயிரம் என்கிறார்கள்] வரிசையில் உள்ள முக்கிய தொன்மம் இரட்டை மீன்.
தனித்தன்மைகள் அடிப்படையில் இது எல்லாமே வேறு வேறுதான். பண்பாட்டின் அடிப்படையில், ஆழத்தில் மானுட சித்தம் ஆன்மா ஒன்றே என்பதால் இவை அனைத்தும் ஒன்றேதான். அந்த பொதுத் தன்மை கொண்டே தெய்வங்கள் இங்கே இடம்பெயர்ந்து கொண்டிருகின்றன. அ கா பெருமாள் அவர்கள் கட்டுரை ஒன்றினில் தடபுடல் விழாவில் கிடா வெட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கிறது ஒரு நாட்டுப்புற தெய்வத்துக்கு. அவரது கள ஆய்வில் தெரிய வருகிறது. அந்த தெய்வம் ஒரு தீர்த்தங்கரர். முனி எனும் ஒற்றை சொல் இங்கே தெய்வங்கள் இடம் பெயர போதுமானதாக இருக்கிறது. அவரே வேறொரு கட்டுரையில் லட்சுமணனை நாயகனாக கொண்ட சமண ராமாயணம் குறித்து எழுதி இருக்கிறார்.
அண்ணன் அனிஷ் மடலில் இந்த கலாச்சார தனித்தன்மை அதன் வேர் செல்லும் ஆழத்தில் அவர் நிற்கிறார். அவருக்கு ஜே பதிலில் அந்த வேரின் சாரம் திரண்ட கனிகளை சுட்டிக் காட்டுகிறார்.
இரு ஆசிரியர்களுக்கும் நன்றி.
கடலூர் சீனு
அன்புள்ள சீனு,
காலைமுதல் நாலைந்து தொலைபேசி அழைப்புக்கள். “அதெப்படி நீ வராக அவதாரம் சமண மதத்திலிருந்து வந்ததாச் சொல்லலாம்? மன்னிப்புக்கேள்” . சிலர் புலம்பல். சிலர் கொந்தளிப்பு. ஒருவர் ”வீடு எங்க இருக்குடா? சொல்டா” என்றார். ஒருவர் நல்ல சில வார்த்தைகளும் உரைத்தார். அய்யங்காரெல்லாம் மிரட்டும் நிலை வந்துவிட்டதே என்று ஒரே கவலையாகப் போய்விட்டது. இனி பார்வதிபுரம் சானலில் உள்ள தண்ணீர்ப்பாம்புகள்கூட கடிக்கும்போலும்
நான் பொறுமையாக “எங்க சொல்லியிருக்கேன்? சொல்லுங்க” என்றேன். அவர்களில் சிலர் படித்திருகவே இல்லை. சிலர் அந்தக் குறிப்பைச் சொன்னார்கள். “அதிலே ஜைன மதத்திலே அப்டி சொல்றாங்கன்னுதானே இருக்கு” என்றேன். “அதெப்டி அவன் அப்டி சொல்லலாம்?” என்றார். “அதை நாம் என்ன கேட்பது? சமண நம்பிக்கையின்படி தீர்த்தங்காரர்கள் எல்லாம் பிறந்தே பல லட்சம் ஆண்டுகள் ஆகின்றன.” என்றேன். “நீ எப்டி சப்போட் பண்ணலாம்” என்று ஒருவர் கொதித்தார். “நான் எங்க சப்போட் பண்ணினேன்?’ என்றேன். அதற்கும் வசை
“நீயும் கடலூர் சீனுவும் சமணத்திலே இருந்துதான் இந்துமத தெய்வங்கள் எல்லாம் வந்திருக்குன்னு சொல்றீங்க” என்றார் ஒருவர். “எங்க சொல்லியிருக்கோம்?” என்றேன் “இந்து தெய்வங்கள் சமணத்திலே வணங்கப்படுதுன்னுதானே பக்கம் பக்கமா எழுதியிருக்கேன்” என்றேன். “எழுதிட்டிருக்கே எழுதிட்டிருக்கே” என்று ஒரு வீரிடல். “இல்லீங்க, அப்டி நான் சொல்லவில்லை. அது என் கருத்து இல்லை”. என்றேன் அதற்கும் “நீ சொன்னே சொன்னே” என்று அலறல். “டேய்! பாத்து நடந்துக்கோ!”
உண்மையில் இவர்களுக்கு என்னதான் ஆயிற்று? எதையும் படிக்கவோ புரிந்துகொள்ளவோ முடியாத கும்பல். உள்நோக்கம் கொண்ட வேறு சாதிவெறிக் கும்பலால் தூண்டிவிடப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். உண்மையிலேயே ஒரு தெய்வம் சமணத்திலிருந்து இந்துமதத்தால் எடுத்தாளப்பட்டிருந்தால், அப்படி ஆய்வாளர்கள் சொல்லியோ அல்லது அடையாளங்களிலிருந்து ஊகித்தறிந்தோ சொல்ல முடிந்தால் அதைச் சொல்ல இந்தக்கும்பலின் அங்கீகாரம் வேண்டுமா என்ன?
இந்திய மதங்களுக்குள் பல ஆயிரம் ஆண்டுகளாக பண்பாட்டுப்பரிமாற்றம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தெய்வங்கள் சென்றுகொண்டும் வந்துகொண்டும் உருமாறிக்கொண்டும் இருக்கின்றன. அதைப்பற்றிய விவாதம் பண்பாட்டு –வரலாற்றுவிவாதம் மட்டுமே. அதில் ஒரு கருத்து அல்லது ஊகம் முன்வைக்கப்படும். மறுக்கவும்படும். இரண்டுக்கும் அதற்கான வழிமுறைகள் உண்டு. எல்லா கருத்துக்களுக்கும் மாற்றுத்தரப்பு உண்டு. இதில் மதவெறியர்களுக்கு, சாதிவெறியர்களுக்கு என்ன இடம்? உண்மையிலேயே இங்கே இந்து தாலிபானியம் வந்துவிட்டதா?
ஜெ
அன்ுள்ள ஜெ
நான் இலங்கைத்தமிழன். ஆனால் நான் எந்த புத்தர் ஆலயத்திற்கும் போனதே இல்லை. உங்களுடைய பயணக்கட்டுரைகளில்தான் சமணர்களின் கோயில்களில் விஷ்ணுவின் சிலைகளும் விஸ்வகர்ம போன்ற சிலைகளும் இருக்கும் என்பதை தெரிந்துகொண்டேன். அதன்பின் புத்தர் கோயிலுக்குச் சென்றபோது அங்கேயும் பிள்ளையார் முருகன் ஆகியவர்கள் இருப்பதை தெரிந்துகொண்டேன். இந்தியாவில் சமணக்கோயில்களுக்கு சென்று பார்த்தேன். அங்கேயும் எல்லா இந்து தெய்வங்களும் இருந்தன.
நீங்கள் அமெரிக்காவில் ஒரு கோயிலில் இந்து, சமண, பௌத்த தெய்வங்கள் ஒன்றாக இருப்பதை கண்டதாகச் சொன்னீர்கள். இங்கே ஆஸ்திரேலியாவிலும் பௌத்தர்கோயிலில் எல்லா இந்துக்களும் சென்று முருகனையும் பிள்ளையாரையும் கும்பிடுவார்க்ள். சேர்ந்தே இருக்கிறார்கள் [இப்படி ஒரு இந்து கோயிலில் ஏசுவை வைக்க முடியாது. வைத்தாலும் அவர்கள் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இதுவே இந்த மூன்று மதங்களும் ஒன்றே என்பதைக் காட்டுகின்றன என எழுதியிருந்தீர்கள்]
இந்த கோயில்களில் கேட்டபோது அவர்கள் இந்து தெய்வங்களை அடொப்ட் செய்துகொண்டதாகச் சொல்லவில்லை. அவை முன்பே சமணத்திலும் பௌத்ததிலும் உள்ளன என்றும் இந்துக்களும் அவற்றை வழிபடுகிறார்கள் அவ்வளவுதான் என்றும் சொன்னார்கள். அது ஆச்சரியம் அளிக்கவில்லை.அப்படித்தான் சொல்லமுடியும். சரித்திரம்வேறு வழிபாட்டு நம்பிக்கை வேறு.
அனீஷ் அவர்கள் சொன்னது மிகுந்த தெளிவை அளித்தது. ஆனால் அவரைப்போல ஆய்வாளர்கள்தான் அதைச் சொல்லமுடியும். சமணக்கோயில்களிலோ பௌத்தர்கோயில்களிலோ அதைச் சொல்லமாட்டார்கள். நான் ராஜஸ்தான் சமணர் கோயிலில் விஷ்ணு சிலை இருப்பதைப்பற்றி கேட்டேன். அது ஆதிநாதரின் அவதார வடிவம், அதைத்தான் பிறகு வைணவர்கள் விஷ்ணு என்று கும்பிட ஆரம்பித்தார்கள், சமணமே முதல்மதம் என்றுதான் சொன்னார்கள். அனீஷ அவர்களுக்கு நன்றி
சிவச்செல்வம்