சாங்கிய யோகம் : ஆழியின் மௌனம்

நடராஜகுருவும் நித்யசைதன்ய யதியும் சேர்ந்து பயணம் செய்யும்போது ஒரு குருத்வாராவுக்குள் செல்கிறார்கள். அங்கே இருக்கும் கியானிகள் நடராஜகுருவுக்கு குரு கிரந்த சாஹிபை வாசித்துக்காண்பிக்கிறார்கள். நடராஜ குரு அந்த நூலை அதற்கு முன்னதாக கேடதில்லை. அது குர்முகி மொழியில் இருக்கிறது. ஆனால் கேட்கக் கேட்க நடராஜகுரு அந்நூலின் வரிகளுக்கு பொருள்சொல்லிக்கோண்டே இருக்கிறார். நித்யாவுக்கு ஆச்சரியம். ‘இதில் ஒன்றுமில்லை. இந்நூலின் அடிப்படைக் கலைச்சொற்கள் எல்லாமே சம்ஸ்கிருத மூல்த்தின் சிறிய உச்சரிப்புவேறுபாடுகள் மட்டுமே ‘ என்று நடராஜகுரு சொல்கிறார்.

வாசித்துமுடிந்ததும் நித்யாவுக்கு நடராஜகுரு ”இது ஒரு சுருதிதான்…”என்று சொல்கிறார். இந்த நிகழ்ச்சி நித்யா எழுதிய  குருவும் சீடனும் என்ற நூலில் வருகிறது.ஒரு நூலைப்பற்றிச் சொல்லும்போது அது ஒரு சுருதி என்று சொல்வது மிக முக்கியமான ஒரு மதிப்பீடாகும். சாதாரணமாக நம் வைதீக மத விவாதங்களில் சுருதி என்று வேதங்களை மட்டுமே சொல்வது வழக்கம். சில சமயம் ஆகமங்கள் போன்ற , முனிவர்களால் எழுதப்பட்ட, அதிபுராதனமான நூல்களை அவ்வாறு சொல்வதுண்டு. சுருதி என்றால் ‘எவராலும்  இயற்றப்படாமல் அந்தரவெளியில் எப்போதும் இருப்பது, ரிஷிகளால் இறைவசனமாக ஆத்மாவால் கேட்கப்படது’ என்று மீமாம்சகர்களான வைதிகர் சொல்வதுண்டு.

அதேபோல  அறிதலின் மூன்று அடிப்படைகளில் பிரத்யட்சம் [புலனறிதல்] அனுமானம் [ஊகம்] ஆகிய இரண்டுக்கும் பிறகு ‘முன்னோர் ஞானம்’ என்ற பொருளிலும் ‘முன்நறிவு’ என்ற பொருளிலும் சுருதி என்ற சொல் வழங்கப்படுவதும் உண்டு. ஆனால் அதிகம் தொன்மை இல்லாததும் ஒரு தனிமனிதரால் எழுதப்பட்டதுமான ஒரு நூலை சுருதி என்று சொல்வது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஆனால் சுருதி ஸ்மிருதி என்ற பகுப்பைப்பற்றிப் புரிந்துகொண்டபின் அந்த ஐயம் இல்லாமல் ஆகியது. சுருதி என்பது மானுட ஆதிஞானத்தின் இயல்பான வெளிப்பாடு ஆகும்

ஸ்மிருதியா ஸ்ருதியா?

அடிப்படை நூல்களைப்பற்றி மதிப்பிடுவதற்கு அதை முதலில் ஒரு பகுப்புக்கு ஆளாக்க வேண்டும் என்று நடராஜகுரு தன் நூல்களில் கூறுகிறார். ஒரு நூல் ஸ்மிருதியா இல்லை ஸ்ருதியா என்று பகுப்பதுதான் அது. ஸ்ருதி என்பது அடிப்படையான தரிசனங்கள் மட்டும் அடங்கிய மூலநூல். ஒரு சமூகம் இயல்பிலேயே திரட்டிக் கொண்ட ஞானத்தின் தொகுப்பு அது. ‘கூறக்கேட்டது’ என்ற பொருளில் அது ‘ஸ்ருதி’ என்று கூறப்படுகிறது. வேதங்கள், உபநிடதங்கள், தம்மபதம் முதலியவை ஸ்ருதிகளே. அவற்றில் உலகியல் சட்டதிட்டங்கள் ஏதும் பேசப்படவில்லை.

அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நெறிகளையும் சட்ட திட்டங்களையும் முன்வைக்கும் நூலே ஸ்மிருதி. ‘நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியது’ என்ற பொருளில் அப்பெயர் பெற்றது. மனுஸ்மிருதி நாம் அறிந்ததே. மோசேயின் பத்துக்கட்டளைகள் ஸ்மிருதிதான். குருகிரந்த சாகிப் ஒரு ஸ்ருதி என்று பகுக்க்கும் நடராஜ குரு குர் ஆன் ஒரு ஸ்மிருதி மட்டும்தான் என்கிறார்.

கீதை ஒரு ஸ்ருதியா இல்லை ஸ்மிருதியா? கீதையில் அர்ஜுனனிடம் கிருஷ்ணன் உலகியல் சார்ந்து சில விஷயங்களை அறிவுறுத்தும் வரிகள் பல வருகின்றன. அவ்வரிகளை மட்டும் பெயர்த்தெடுத்து சிலர் கீதை ஒரு ஸ்மிருதிதான் என்று காட்ட முயல்வதுண்டு. கீதையை ஒரு சமூக — மதச் சட்டம் மட்டுமாக காட்டும் உள்நோக்கம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் கீதைவரிகளைப் பெயர்த்தெடுத்து மதக்கட்டளைகளாக அவற்றை ஆக்கவும்செய்கிறார்கள். கீதையை எதிர்ப்பவர்களும் பெரும்பாலும் அதை ஒரு மதச்சட்டநூலாக எண்ணியே எதிர்க்கிறார்கள்

கீதையில் ஒரு கட்டளையிடும் தொனி இருப்பதைவைத்து அது நெறிகளைப்பற்றி அறிவுறுத்தும், ஆணையிடும் நூல் என்று மேலோட்டமாகச் சொல்லிவிடலாம்தான். ஆனால் கீதையின் அந்தத்தொனி அதன் நாடகீயத்தன்மையின் ஒரு அம்சம் மட்டுமே. கீதை நாடகீயத்தன்மையுடன், கவித்துவத்துடன் தத்துவவிவாதம்செய்யும் நூல்மட்டுமே. அறிவுறுத்தும்  நீதிநூல் அல்ல. கட்டளையிடும் சட்டநூலும் அல்ல.  ஆகவே கீதை ஒரு ஸ்ருதியே என்று கூறும் நடடராஜகுரு அதற்கு ஆதாரமாகக் காட்டும் இடங்களில் ஒன்று சாங்கிய யோகத்தின் இந்த இறுதிப்பகுதி.

இங்கு ஒழுக்கத்தைப்பற்றி கிருஷ்ணன் பேச முற்படவில்லை. செய்யத்தக்கது இது, தகாதது இது என்று கூட முற்படவில்லை. மாறாக பிரச்சினை என்ன என்று மட்டுமே கூறிவிளக்குகிறார். நடைமுறை வாழ்வில் பிரிந்து பலவாகி நம்மைச் சுற்றி இயங்கிக் கொண்டிருக்கும் பிரபஞ்ச வெளியில் ஒரு ஒருமையையும் அழியாமையையும் கண்டடைவது சாங்கியஞானம். அந்த ஞானத்தில் கருத்தூன்றி, செயலின் விளைவுகளில் மனம் சஞ்சலம் கொள்ளாமல், முழுமையான ஒன்றுதலுடன், சமநிலையுடன் செயலாற்றுதல் சாங்கிய யோகம்.

அந்த யோகத்தை ஆற்றுவதற்கு தடையாக இருப்பது பரந்து சிதறியபடியே இருக்கும் மனம். அந்த மனதைக் கட்டுக்குள் வைப்பதற்கு மனதின் வாயில்களான புலன்களை கட்டுப்படுத்த வேண்டும். இதுதான் இந்த அத்தியாயத்தில் புலனடக்கம் குறித்து கீதை கூறும் கருத்தாகும். அதாவது இங்கே புலனடக்கம் வலியுறுத்தப்படவில்லை, ஆணையிடப்படவும் இல்லை. இந்த விவாதத்தில் அதன் இடம் சொல்லப்படுகிறது, அவ்வளவுதான்

கீதையின் 62 ஆம் பாடல் முதல் படிப்படியாக புலனடக்கம் குறித்து கூறப்படுவதை வாசகர்கள் தனியாக எடுத்துப் படித்து இதை ஆராயலாம். புறவய உலகை நாம் எண்ணும் தோறும் பற்றும் மேலும் மேலும் வலுக்கிறது. அது ஆசையாகிறது. ஆசை நிறைவேற்றம் நம் கையில் இல்லை. பலநூறு நிபந்தனைகள் அதற்கு. ஆகவே ஆசை இயல்பாகவே சினமாக உருவெடுக்கிறது. சினத்திலிருந்து மனக்குழப்பம். அதிலிருந்து ஆளுமைச் சிதைவு.

ஆகவே புற உலகில் சென்றுபடியும் நம் புலன்களை கட்டுப்படுத்துவதே ஒரே வழியாகும். புலன்களை அப்புலன்கள் அறியும் இன்பங்களிலிருந்து விலக்கி நிறுத்துவதே அதற்கான வழி. உயிர்கள் அனைத்தும் எங்கு சென்று இன்பம் நுகரத்துடிக்கின்றனவோ அங்கு தன்னை விலக்கிக் கொள்கிறவனே யோகி. ஆசைகளை அறுத்து தன்னகங்காரத்தைத் துறந்து செயலாற்றுபவனுக்கு மனச்சஞ்சலம் இல்லை. அவனுக்கு அமைதி உள்ளது.

இவ்வாறு கீதை ஒர் ஆய்வுக்கருத்துக்குரிய நிதானத்துடன் இதை முன்வைக்கிறது. இந்த நிதானம் கீதை முழுக்க உள்ளது. ஆகவேதான் நடராஜகுரு ‘கீதையை பாடலாகப் பாடப்பட்ட அறிவியல்’ என்று கூறுகிறார். (‘அறிவியலைப் பாட முடியுமா?’ என்ற கட்டுரை. ‘wisdom’ என்ற நூல்)

நாம் பிற நீதிநூல்களுடன் இதை ஒப்பிட்டு உணரலாம். ஒழுக்க நூல்கள் இவ்வாறு புலனடக்கம் பற்றிப் பேசும் போது அதை மனிதனை விட மேலான ஒரு சக்தியால் மனிதனுக்கு விடப்பட்ட கட்டளை அது என்றே முன்வைக்கும். மனிதனால் மீறமுடியாத விதி என்றே சொல்லும். கீதையில் அந்தப் பேச்சே இல்லை. அதை தத்துவக்கருத்தாக மட்டுமே அது சொல்கிறது ஆகவேதான் கீதை ஒரு ஸ்ருதிதான் என்று குறிப்பிடப்படுகிறது.

பரத்தை கண்டறிதல்

புலனடக்கம் பற்றிய கீதையின் விளக்கத்தில் புலன்களை வெல்லும் வழி என்று கூறப்பட்டிருப்பது என்ன? பொதுவாக கீதை உரைகளில் ‘இறைவனை மையமாகக் கொண்டு மனதை குவித்தல்’ என்றே கூறப்படிருக்கும். கீதை பரம்பொருளால் கூறப்பட்ட வேதம் என்ற நம்பிக்கையில் இருந்து தொடங்கினால் அது இயல்பான ஒரு முடிவுதான். ஆனால் வேதாந்த நூலாக கீதையை எடுத்துக் கொணடால் அப்படிக் கூறமுடியாது.

கீதை 45 ஆம் பாடலில் முக்குணமயமான வேதங்களைத் தாண்டி நீ ‘ஆத்மவானாக’ இரு என்று கிருஷ்ணன் குறிப்பிடுகிறார். ஆத்மாவில் நிலைபெற்ற நோக்கு உடையவனை ‘ஸ்ருத பிரதிக்ஞன்’ என்கிறார். நிலைபேறு உடையவன் புலன்களை வெல்கிறான். தன் ‘ஆத்ம ஸ்வரூ ப’த்தை உணர்ந்து அதில் மனதின் நிலைநிறுத்தி அதனூடாக புலன்களை வெல்லுதலைப் பற்றியே கீதை பேசுகிறது என்பது தொடர்ந்துவரும் பாடல்களை கூர்ந்து வாசிப்பவர்களுக்குப் புரியும். கீதை 53ஆம்பாடலில் நேரடியாக இது கூறப்படுகிறது. ‘உன் அறிவு என்று ஆத்மாவில் உறுதி பெறுமோ அன்று நீ யோகம் அடைவாய்’ என்கிறார் கிருஷ்ணன்.

தத்துவார்த்தமாகக் கூறப்போனால் இப்பிரபஞ்சம் முழுக்க நிறைந்துள்ள ஒன்றின் ஒருதுளியினும் துளியான வெளிப்பாடே நாம் என்ற உணர்வு மூலம் உருவாகும் அளவிட முடியாத மனவிரிவையே இங்கு ‘ஆத்மாவான் ஆதல்’ என்கிறார் கிருஷ்ணர். அந்த மன விரிவுடன் நோக்கும் போது நம்முள் ஒரு கணம் கூட நிலைக்காமல் ஓடிக்கொண்டிருக்கும் தன்னை மையப்படுத்திய மன ஓட்டங்களும் அதன் பற்பல விளையாட்டுகளும் மிக அற்பமானவையாக ஆகிவிடும். இவ்வாறு அகங்காரம் அடக்கப்படும்போது அகங்காரத்தால் பூதாகரமாக வளர்க்கப்படும் புலனின்ப நாட்டம் இயல்பாகவே கட்டுப்படுத்தப்படும்.

புலன்களை கட்டுப்படுத்தினாலும் இன்ப விழைவு என்பது ஆத்மாவில் பிறந்தது என்பதனால் அதன் தொடக்க எழுச்சி நம்மில் இருந்து கொண்டே இருக்கும் என்பது கிருஷ்ணன் கூற்று. 59 வது பாடலில் கீதை இதைக்குறிப்பிட்டு ‘பரம் திருஷ்ட்வா’ – அந்த எஞ்சிய எழுச்சியும் அழிகிறது என்கிறது. பரம் திருஷ்ட்வா என்ற சொற்களை ‘பரம்பொருளைக் கண்டபின்’ என்று மொழிபெயர்த்திருக்கிறார்கள் கீதை உரைக்காரர் பலரும். அதைத்தொடர்ந்து 61 ஆவது பாடலில் கிருஷ்ணன் ‘என்னையே (மத்பர) பரமாகக் கொள்க!’ என்று கூறியிருப்பதனால் அப்படிப் பொருள் கொள்ளுதல் இயல்பே.

ஆனால் இங்கு பரம் என்பதை பரம்பொருள் என்றும் இறைவன் என்றும் கொண்டாக வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. பரம் என்பது தமிழில் ‘பிற’ என்றே பொருள். இதம் என்பது ‘இங்குள்ள அனைத்தும்’ என்னும்போது பரம் என்பது இவையனைத்தும் கடந்து அப்பால் உள்ள என்று பொருள்படும். வேதாந்த நோக்கில் ‘முழுமுதல் உண்மையை, உண்மையின் முடிவிலாப் பிரம்மாண்டத்தை’ என்று பொருள் கொள்ளலாம். நாராயண குருவின் வேதாந்த மரபு கொள்ளும் பொருள் அதுவேயாகும்.

ஒருவனின் இச்சைகள் அவன் ஆத்மாவில் இருந்து பிறப்பவை. ஆத்மா தன்னை தனித்ததாக உணரும் இயல்பு கொண்டது. அதுவே மாயை. மாயையில் இருக்கும் போது இவ்வியல்பினை அது அகங்கரமாக வளர்த்து எடுக்கிறது. அகங்காரம் மூலம் தன் இச்சைகளை பூதாகரமாக வளர்த்தெடுத்து, அந்த பூதங்களின் விளையாட்டுப் பொம்மையாக தன்னை ஆக்கிக் கொள்கிறது. தன்னுடைய இயல்பான ஆத்மவடிவினை, பிரபஞ்ச வடிவினை அது உணர்ந்து ஆத்மவானாக நிலைபெறும் போது அகங்காரம் அடங்கி புலன்கள் கட்டுப்படுகின்றன. ஆயினும் அது தன்னை ஆத்மாவாக உணரும் வரை, அது இகத்தில் இருக்கும் வரை, அதில் இச்சைகள் இருக்கும். அந்தத் தனித்துவத்தை உதறி அது பர உண்மையை கண்டடையும் போது அதன் தனித்தன்மை இல்லாமலாகும். அப்போது இச்சைகளும் அழியும். இதுவே இப்பகுதியில் கீதை குறிப்பிடும் கருத்து எனலாம்.

ஐந்து உவமைகள்
சாங்கிய யோகத்தில் இப்பகுதியில் கூறப்பட்டுள்ள ஐந்து உவமைகள் இந்து ஞானமரபில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டவை.  நம் மரபில் உள்ள உவகைகளைப்பற்றி நாம் சற்று சிறப்புக்கவனம் கொள்ளவேண்டியிருக்கிறது. நடராஜ குரு அவரது ‘குருவும் சீடனும்: ஞானத்தேடலின் கதை’ என்ற நூலில் மேலைச் சிந்தனையில் உள்ள உதாரணங்கள் அந்த ஆசிரியரால் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை தெளிவுபடுத்தும் பொருட்டு கூறப்படுபவை என்றும், நேர்மாறாக கீழைச்சிந்தனையில் உதாரணங்கள் ஒரு குறிப்பிட்ட கருத்துநிலையின் புறவய வடிவங்களாகவே கருதப்படுகின்றன என்றும் கூறுகிறார். ஆகவே நம் மரபில் அறிஞர் உதாரணங்களை நாம் மாற்றி மாற்றிக் கூறுவதில்லை. பெரும்பாலான உதாரணங்கள் அவற்றின் கருத்தியல் நிலைப்பாடு போலவே நிரந்தரமானவை. அத்வைதத்தில் இருந்து ‘கயிற்றரவு’ உதாரணத்தைப் பிரிக்க முடியாது. அக்கருத்துநிலையை விரிவாக்கவும் மறுக்கவும் அதே உதாரணம் தான் எல்லாதரப்பினராலும் பயன்படுத்தப்படும்.

ஏனெனில் இந்திய ஞானத்தின் பொதுவான தர்க்கவியலான நியாய சாஸ்திரத்தில் கோட்பாடுகளின் படி உதாரணம் என்பதும் ஒரு பிரமாணம் (அறிதல் முறை) ஆகும். உதாரணத்தை தவறான நிரூபித்தால் அக்கோட்பாடும் தவறாக ஆகும். நியாயவியலின் மூலகுருவான கோதமன் ‘தள நியாய சூத்திரம்’ என்ற நூலில் பிரமாணங்கள் நான்கு என்று வகுக்கிறார். பிரத்யட்சம் (தூலமாக தெரியக் கூடியது. புலன் வழியாக அறியக்கூடியது) அனுமானம் (ஊகித்தறிதல்) உபமானம் (உவமை) சப்தம் (முன்னால் இருந்த ஞானம். வழிவழியாக வரும் ஞானம். இயல்பிலேயே மனிதனுக்குள் இருக்கும் ஞானத்தின் விதை) என்பவை அவை.

இவற்றில் உவமை ஒரு முக்கிய இடத்தை வகிப்பதைக் காணலாம். ஒரு பொருளை நாம் காணும்போது இந்நான்கும் இணைந்தே அதை அறியவைக்கின்றன. குடத்தைப் பார்க்கையில் அதைத் தொட்டும் பார்த்தும் அதன் வடிவத்தை அடைகிறோம். அது பொருட்களை போட்டு வைக்க உதவக்கூடும் என ஊகிக்கிறோம். ஒரு பெரிய காய்போன்றது என்று உவமிக்கிறோம். அத்துடன் குடம் குறித்து நாம் அறிந்துள்ள முன் ஞானம் வந்து இணைகிறது. இவ்வாறே அறிதல் நிகழ்கிறது. இப்படி உருவாவதுதான் நம்முடைய குடம் என்னும் அறிதலின் துளி.

இக்காரணத்தால் இந்து ஞானமரபில் உவமைகளை உவமிக்கப்படும் அக்கருத்தின் புற வடிவங்களாகவே கண்டு விவாதிக்கிறோம். இங்கு கீதை அளிக்கும் நான்கு உவமைகளையும் அவ்வாறே வாசகர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். கற்பனை மூலம் உவமையை விரித்து எடுக்கவேண்டும். கீதை 22 ஆம் பாடலில் ஆத்மா தன் உடல்களை கிழிந்த உடைகளை மாற்றுவது போல மாற்றிக் கொள்கிறது என்று கூறப்படுகிறது. மறுபிறப்புக் கோட்பாட்டின் அடிப்படை உவமையாக இன்றுவரை இது திகழ்ந்து வருகிறது.

இந்த உவமை பல தளங்களில் விரிவாக்கம் செய்யத்தக்கது. ஒரு சட்டையின் வடிவம் என்பது என்ன? அதை அணியும் உடல்தான் அதை தீர்மானிக்கிறது. சட்டைக்கென எவ்விதமான தனித்தன்மையும் இல்லை. அந்த உடல் ஆற்றும் பணிகளை சட்டை ஆற்றுகிறது. உடலுக்கு ஏற்படக் கூடிய வெப்பத்தையும் குளிரையும் தான் ஏற்று பழுதுபடுகிறது. இந்த உவமையை இன்றும் விரிவுபடுத்தினால் லெளகீக உலகில் ஆடையை வைத்தே உடல் மதிப்பிடப்படுகிறது என்பதைக் காணலாம். உயர்தர உடை, உழைப்பாளியின் உடை, பிச்சைக்காரனின் உடை என உடைகள் உடலை அடையாளப்படுத்தி பாகுபடுத்துகின்றன.

உடல் உடைகளை களைவதுபோல உடலை ஆத்மா களைகிறது எனும் போது ஆடையில் உள்ள இவ்வியல்புகள் அனைத்துமே உடல்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. ந்த்ம்வாஇ உடல் பாதுக்காக்கிறது. ஆத்மாவுக்கு அணிகலாக ஆகிறது. ஆத்மா உடலை வைத்து லௌகீகமாக மதிப்பிடப்படுகிறது. அடையாளப்படுத்தப்படுகிறது.

இரண்டாவது உவமை ( கீதை 46) கிணற்று நீரையும் பெருவெள்ளத்தையும் பற்றியது. அந்த உவமையையும் நாம் பலவாறாக விரித்தெடுக்கலாம்.  நீர் என்று கிணற்றை மட்டுமே அறிந்த ஒருவனுக்கு பெருவெள்ளம் என்ன உணர்வைத்தரும்? அதைக் கண்டபின் அவன் கிணற்று நீரின் தேங்கிய தன்மையை எப்படி மதிப்பிடுவான்? மகத்தான ஒன்று நிகழ்கையில் அன்றாடம் நாம் அறிபவை அற்பமானவையாகிவிடும் என்று கூற பெருவெள்ளம் – கிணறு என்ற உவமை கூறப்பட்டதில் ஆழ்ந்த பொருள் இருக்கிறது.

மேலும் சொல்லலாம். பெருவெள்ளம் அபூர்வமாக நிகழ்வது. உடனே வற்றிவிடுவது. பெருவெள்ளத்தில்  வெள்ளம் தவிர வேறெதையும் சிந்திக்க இயலாது. அது நம் தாகத்திற்கு நீர் அல்ல. நம்மை சுழற்றி அடித்துச் செல்லும் பெரும் பிரவாகம் அது. மெய்ஞானம் என்பது பெருவெள்ளம். ஆனால் உலகியல் செயல்பாடுகள் கிணறு போன்றவை. நீரற்ற நிலத்தில் நம் உழைப்பால் தோண்டித் தோண்டி ஆழத்தில் இருந்து நாம் மொண்டு எடுப்பவை அவை. ஒவ்வொரு நாளும் நம் தாகம் தீர்ப்பவை. ஒரு கிணற்றுக்குள் குனிந்து பார்க்கையில் ஆழத்தில் கண்ணிமைக்கும் அந்த வட்டவடிவ நீர் ஒரு தருணத்தில் பெருவெள்ளமாக மாறி பூமியை மூழ்கடித்து விடக்கூடியது என்று நாம் நினைவு கூ ரவேண்டும் என்கிறதா கீதை?

கீதையின் இவ்வரிக்கு நேர் எதிரான ஒரு பழமொழி நம்மிடம் புழங்குகிறது- ‘கிணற்று நீரை வெள்ளம் கொண்டு போகுமா?’ அதன் உட்பொருள் என்ன என்றும் நாம் யோசிக்கலாம்.

மூன்றாவது உவமை, ஆமை தன் உறுப்புகளை உள்ளடக்கி கொள்வது போன்றது. புலனடக்கம் பயில்வதைப் பற்றியது இந்த உவமை. (கீதை 58.) புலனடக்கத்திற்கு ஆமையை உதாரணம் காட்டுவது பல மூலநூல்களில் உள்ளது. திருகுறளில் கூட அதைக் காணலாம். ஆமை தன் கைகால்களையும் கைகளையும் தன்னுள் இழுத்துக் கொள்வது போல ஐம்புலன்களையும் உள்ளிழுத்தல் யோகப் பயிற்சியின் ஒரு படிநிலை. இவ்வுவமையும் பலவாறான நுண்ணிய பொருள்கள் உடையது. ஆமை தன் உறுப்புகளை எப்போதும் தனக்குள்  ஒடுக்கி வைத்திருப்பதில்லை. அது நடமாடுவதும் இரைதேடுவதும் எல்லாம் அவ்வுறுப்புகளின் மூலம்தான். ஆபத்து என்று உணரும்போது மட்டுமே புலன்களை உள்ளே இழுத்துக்கொள்கிறது. அதுபோல புலனடக்கம் என்பது புலன் மறுத்தல் அல்ல. புலன்கள் மீதான கூரிய கண்காணிப்பு மட்டுமே.

அதேபோல புலன்களால் ஒரு மனம் அலைக்கழிவதற்குக் கூறப்படும்  உவமையும் குறிப்பிடத்தக்கது (கீதை 67.) கடல்மீது செல்லும் கப்பலை காற்று அலைக்கழிப்பதுபோல புலன்கள் மனதை அலைக்கழிக்கின்றன. இங்கு கப்பலுக்கு மனித மனம் உவமை. புலன்சார்ந்த அறிதல்கள்தான் காற்று. கடல் என்பதை உலகமாகக் கொள்ளலாம். கடலில் உருவாகும் காற்று கடலை கொந்தளிக்கச் செய்கிறது. அக்கொந்தளிப்பின் மீது கப்பலை தூக்கி சுழற்றி அலைக்கழிக்கிறது.  புயலடிக்கும் போது அதை எதிர்கொள்வதற்கு கப்பலுக்கு இருக்கும் ஒரே வழி பாய்களை அவிழ்த்து விட்டு கடலின் ஆழம் நோக்கி நங்கூரத்தை பாய்ச்சுவதே . அப்படி பலவகையான கற்பனைகள் மூலம் இத்தரிசனத்தை நாம் விரிவாக்கலாம்.

இதைத் தொடர்ந்து வரும் உவமை ஆத்மவானின் இலக்கணத்தைக் கூறவதாகும். (கீதை 70.) கடலில் நதிகள் கலப்பதுபோல ஆத்மவானின் ஆழத்தில் அனைத்து காமங்களும் சென்று ஒடுங்க வேண்டும். காமம் மண் மீதான ஆசை, உடல் தொடர்புகள் மீதான ஆசை, செல்வம் மீதான ஆசை. இவ்வாசைகள்தான் மனிதனை அலைக்கழிக்கின்றன. இங்கு கீதை இவ்வாசைகளில் இருந்து நம்மை நாம் எப்படி துண்டித்துக் கொள்வது என்று பேசவில்லை. துண்டித்துக் கொள்ள இயலாது. ஏனெனில் அவை நம்முள் இருந்தே பிறந்தவை. நாம் அவற்றை நம்முள் இழுத்துக் கொள்ள வேண்டும். ஆறுகள் ஒடைகள் நதிகள் என எல்லா நீரும் கடலில் இருந்து பிறந்தவைதான். அவை மீண்டும் கடலுக்கே சென்று சேர்கின்றன. லட்சோப லட்சம் நீர் வழிகள் சென்று சேர்ந்தாலும் கடல் நிரம்பிவிடுவதில்லை. அதேபோல நம்மில் உதித்த காமங்கள் நம்முள் அடங்கும்போது அவை நம்மை நிரப்பிவிடுவதில்லை.

இந்த உவமையில் இரு விஷயங்கள் கவனப்படுத்தப்பட வேண்டும். ஒன்று, ‘முழுமுற்றாக நிறைந்ததும்’ என்ற கீதை வரி. அலைகடலின் ஆழத்தில் நாம் உணரக்கூடிய ஆழியை இங்கு இப்பாடல் சுட்டுகிறது. அதுதான் அசைவற்று, நிரந்தரமாக நிரம்பி, அப்படியே நின்று கொண்டிருப்பது. கடல் முழுக்க நிரம்பியுள்ளது. அதிலிருந்து எத்தனை நதிகள் பிறந்தாலும் அது குறைவதில்லை. எத்தனை நதிகள் இணைந்தாலும் அது கூடுவதில்லை. இது புகழ்பெற்ற வேத சூக்தமான ‘ஓம் அது முழுமை: ஓம், இது முழுமை, முமுமையிலிருந்து முழுமை பிறக்கிறது. முழுமையிலிருந்து முழுமை பிறந்தபிறகும் முழுமையே எஞ்சியுள்ளது’ என்ற வரிகளுக்கு உதாரணமாக அமைகிறது.

இன்னொன்று கடலில் பிறந்த எல்லா நீருக்கும் கடலைச் சென்றடையும் அவா அதன் இயல்பிலேயே உள்ளது. மண்ணில் உள்ள ஒவ்வொரு நீர்துளியும் கடலுக்குப் போய்சேரும் துடிப்புடன் உள்ளன . அதே போல புலனிச்சைகள் அனைத்தும் மீண்டும் ஆத்மாவில் சென்று கரையும் விழைவுடன் உள்ளன. புலன்சார் இன்பங்களுக்கான விழைவு ஒவ்வொரு கணமும் நம்மில் இருந்து  முளைவிட்டபடியே உள்ளது என்று நாம் அறிவோம். ஆனால் சற்று முக்கியமான ஒரு விஷயத்தை நாம் செய்ய ஆரம்பித்த கணமே அத்தனை விழைவுகளும் திரும்ப நமக்குள்ளேயே சென்று ஒடுங்கி விடுகின்றன. அதை அந்தச் செயலில் இருந்து வெளியே வந்த பிறகுதான் நாம் உணர்கிறோம். அந்த சென்றொடுங்கும் இயல்பானது புலனறிதல்களின் அடிப்படைப்பண்பாகும்.

ஆகவே கீதையின் உதாரணங்களை அந்தக் கருத்தை விளக்குபவையாக மட்டுமே எடுத்துக் கொள்ளலாகாது. அது இரு வழிப்பாதை. கீதையுடன் விவாதிப்பதற்கே அந்த உதாரணங்களை நாம் பயன்படுத்தவேண்டும்.

கடைசிமுனை

சாங்கிய யோகத்தை முழுமை செய்யும்போது ‘மரண காலத்திலேனும்’ என்று கிருஷ்ணன் சொல்வதை பல விரிவுரையாளர்கள் பலவாறாக விவாதித்திருக்கிறார்கள். சாங்கியம் என்பது நடைமுறை யோகம். நடைமுறை யோகத்துக்கு ஆகப்பெரிய தடையாக இருப்பது புலனிச்சைகளே என்று சொல்லும் கிருஷ்ணன் அதன்பொருட்டே ‘மரணகாலத்திலேனும்’ என்கிறார். புலனிச்சைகள் அவற்றின் மிகமிகப்பலவீனமான தருணத்தில் இருப்பது மரணகாலத்திலேயே. நோயினாலோ மூப்பினாலோ உடல் தன் வலிமையை இழந்து தன் கடைசி ஆற்றலை பயன்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கும்போதே. சாங்கிய யோகம் கூறும் நடைமுறை யோகத்துக்கு ஒருவனுக்கு இருக்கும் கடைசி வாய்ப்பு அதுவே.

ஆனால் அந்த நடைமுறை யோகத்தைத்தாண்டி ஒருவனுடைய தேடல் செல்லுமென்றால் என்ன என்னும் வினாவுக்கான விடையாகவே கீதையின் அடுத்த அத்தியாயம் நீள்கிறது.

அலையறியா கடல்:சாங்கிய யோகம்-5

முந்தைய கட்டுரைஏழாம் உலகம் :கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅ.மார்க்ஸின் திரிபுகளும் தீராநதியும்