கோடைநாளில்…

சென்ற ஒருவாரமாக அருண்மொழி ஊரில் இல்லை. அவள் இப்போதெல்லாம் உலகப்பயணி. ஜப்பானிலிருந்து வந்து துணிகளை துவைத்து அடுக்கி பெட்டியைத் தூக்கிக்கொண்டு சிங்கப்பூர் சென்றுவிட்டாள்.  கூட அஜிதனும் சைதன்யாவும். அங்கே நண்பர்களுடன் தங்கி சிங்கப்பூரை கழற்றி மாட்டிக்கொண்டிருக்கிறாள். நான் இங்கே வீட்டில் டோராவுடன் தனியே. வெண்முரசு எழுதுவது வாசிப்பது பாட்டுகேட்பது வாயைப்பிளந்தபடி சும்மா உட்கார்ந்திருப்பது என்று பொழுது கடுகிச்செல்கிறது

உச்சகட்ட வெயில். ஆகவே வெளியேபோய் சாப்பிடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அருண்மொழி தோசைமாவு வைத்திருந்தாள். முதல் ஆறுநாட்களுக்கு அது இருவேளைக்கு போதுமானதாக இருந்தது. காலை இரண்டு தோசை. அற்றகைக்கு மாலையிலும் இரண்டு. சாதாரணமாக மதியம் சோறு. கூட கொஞ்சம் தயிர். முதல் மூன்றுநாள் குளிர்சாதனப்பெட்டியை அகழ்ந்து பழைய சாம்பார், மோர்க்குழம்பைக் கண்டடைந்தேன். சாப்பாடு முக்கியம் அல்லதான். ஆனால் அதைப்பற்றி நாம் நினைக்காமல் இருக்கவேண்டும்.

அரைமணிநேரம் சமையலுக்குச் செலவாகும். அந்நேரத்தில் கிருஷ்ணனுடன் இலக்கிய உரையாடல். முக்கியமான சமையல் டோராவுக்கு கோழிக்கால் இறைச்சி கலந்து கேழ்வரகுக் கஞ்சி சமைப்பது. முகத்தைப் பார்த்தால் பிடித்திருக்கிறது என்றுதான் தோன்றியது. மொத்தமாகச் சொல்லப்போனால் நான் ஒருமுறைகூட ஓட்டலில் சாப்பிடவில்லை. எதிர்காலத்தில் இமையமலைச்சாரலில் தன்னந்தனியாகக் குடிலில் வாழ்வது ஒன்றும் அவ்வளவு கடினம் அல்ல என உறுதியடைந்தேன்.

காலைநடையை ஐந்துமணிக்கே தொடங்கினேன். ஏழுமணிக்கு எரிக்கும் வெயில். செல்லும்வழி முழுக்க மீண்டும் காய்ந்து கிடந்தது. வயல்களை பொடியுழவு செய்து காயப்போட்டிருந்தனர். காலைவெயில் படும்போது ஒருமாதிரி கடலைப்பிண்ணாக்கு வாசனை வந்தது. கொக்குகள் இல்லை. அவை சேறுமண்டிய ஏரிக்குள் நிறைந்திருந்தன. ஆனாலும் எங்கும் தனியர்கள் உண்டு. ஒற்றைக்கொக்கு ஒன்று வயலில் எதையோ கொத்திக்கொண்டிருந்தது.

வடக்கே மலை காய்ந்து நின்றது எருமைகள் பகல் எல்லாம் வெயிலில் மேய்ந்து உடல் சூடாகி நீருக்கு ஏங்கி நிற்பதுபோல. புட்டத்தில் ஒரு அடி அடித்து உந்தி கொண்டுசென்று கிழக்கே கடலுக்குள் இறக்கிவிட்டுவிடலாம். மேலே முகில்களே இல்லை. இவ்வளவு வெறுமையாக குமரிமாவட்ட வானம் இருந்ததில்லை.

மழை அளவுக்கே வரவிருக்கும் மழையும் முக்கியமானது. விவசாயிகள் மிக பரபரப்பாக இருப்பது தெரிந்தது. வயல்களில் மாயக்கைகள் வருடிச்சென்றதுபோல தடங்கள்.  ஒட்டுமொத்தமாக கன்யாகுமரிமாவட்டம் எப்போதும் பசுமைதான். காய்ந்திருப்பது என நாங்கள் சொல்வது புல்லைத்தான். இன்னும் நாலைந்துநாட்களில் இடவப்பாதி மழைக்காலம் தொடங்கும். ஜூன் ஆறு அன்று அந்தமானில் தொடங்கும் என்பது கணிப்பு. இங்கே பத்துக்குள் வந்துசேரும். அது கொஞ்சம் ஓய்ந்தால் ஆனியாடிச் சாரல். அதன்பின் ஓணம் பொன்னோணம்.

ஏஸி அறைக்குள் இருந்து வெண்முரசு எழுதினால் பொழுதுசெல்வது தெரியாது. வயிற்றை வைத்துத்தான் காலக்கணிப்பே. டோரா பசித்தால் ஓசையிடும் வழக்கம் கொண்டது அல்ல. என் வயிற்றைக்கொண்டுதான் அவள் வயிற்றை நினைவுகொள்ளவேண்டும். எல்லாம் ஒழுங்காகச் சென்றுகொண்டிருந்தது. நேற்று நள்ளிரவில் ஓர் அமைதியின்மை. படுத்து பதினைந்து நிமிடம் தூங்கி எழுந்தபோது கண்ணாடியை காணோம் என நினைவுக்கு வந்தது. தேட ஆரம்பித்தேன். இரவு பன்னிரண்டு மணிக்கு தேட ஆரம்பித்து இரண்டரை வரை. கண்ணாடி சிக்கவில்லை. வீட்டை அணுவணுவாக பார்த்துவிட்டேன்

கண்ணாடி இல்லாமல் கண்ணாடியைத்தேடுவது பெரிய சிக்கல். அழகான பொன்மொழி, எங்காவது பயன்படுத்தவேண்டும். மாற்றுக் கண்ணாடியை போட்டுக்கொண்டேன். துலங்கியது கண்ணாடி எங்கும் இல்லை என்னும் உண்மைதான். பொருட்கள் ஒளிந்து கொள்வதற்குரிய இடங்களைக் கண்டடைகின்றன. பெரும்பாலும் அவை எங்கு இருக்கக்கூடாதோ அங்கேதான் சென்று மறைந்துவிடுகின்றன. இந்தக் கண்ணாடி ஒருமுறை கருப்பட்டி டப்பாவுக்குள் கிடந்தது

மீண்டும் படுத்தால் அதே நிலைகொள்ளாமை. எழுந்து அமர்ந்தேன். பொதுவாக இரவில் வெண்முரசு எழுதுவதில்லை. நாளெல்லாம் ஓடிய சொற்களின் சலிப்பு தலைக்குள் இருக்கும். ஆனால் அரிதாக தூண்டுதல்கொண்டு எழுதுவதும் உண்டு. கர்ணனின் இறப்புநாளை எழுதினேன். முடிக்கையில் நாலரை மணி. மீண்டும் சென்று படுத்தேன். ஆறரைக்கு எழுந்து எழுதியதை மீண்டும் படித்தேன். ஒட்டுமொத்தமாக ஒருமுறை வாசித்தேன்

மீண்டும் கண்ணாடி தேடுதல். எட்டரை மணிக்கு வீட்டில் கண்ணாடி இல்லை என்பது உறுதியாகியது. எங்கும் போகவுமில்லை. டோரா எடுத்திருப்பாளோ? முன்பொருமுறை ஒரு கண்ணாடியை எடுத்துச்சென்று கடித்து ஒடித்திருக்கிறாள். “டோரா கண்ணாடிய பாத்தியாடி?” என்றேன். டோராவுக்கு ஒரு நற்பண்பு உண்டு. வெளியே சென்று கேட்டால் அவள் இயற்றியிருக்கும் நல்ல கெட்ட செயல்கள் எல்லாவற்றையும் அவளே மிகையுற்சாசகத்துடன் கூட்டிச்சென்று காட்டுவாள்.  ‘இதோ எக்ஸாட்டா இங்கதான் ஓணான கடிச்சேன்… இதோ இங்க ஒரு தவளை” என கொண்டு சென்று காட்டினாள்.

வீட்டுக்கு வெளியே நாம் என்ன செய்தாலும் டோராவுக்கு பிடிக்கும். வீட்டுக்கு வெளிப்பக்கம் அவளுடைய வீடு. அங்கே நாம் அவளுடைய விருந்தினர். உவகையில் பம்பரம்போல தன்னைத்தானே சுற்றினாள். மொட்டைமாடி இடுக்குகள் பல. அவை டோராவின் சேமிப்பிடங்கள். பல ஸ்பூன்கள், இரண்டு டீ அரிப்பான்கள், என்னுடைய ஜட்டிகள் சில என டோரா சேர்த்துவைத்தவை வந்துகொண்டே இருந்தன. என்னென்ன வைத்திருக்கிறாள். ஒரு சடைப்பில்லை. இது எங்கே இருந்து வந்தது? இங்கே எவரும் அதைப் பயன்படுத்துவதில்லை.

மொட்டைமாடிக்குச் சென்று நீண்டநாட்களாகின்றன. ஆகவே அதை புதிதாகக் கண்டடைந்தேன். குப்பைகளை அள்ளினேன். சில்லறைப் பராமரிப்புகளைச் செய்தேன். மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தால் டோரா “அவ்வளவுதானா?” என்று வெளியே நின்று கேட்டாள். ஏராளமான பொருட்களை புதைத்தும் வைத்திருப்பாள். அவ்வளவையும் தேடி எடுக்கப்போனால் மரியாதை கெட்டுப்போய்விடும். இரவு தூக்கமில்லாததனால் குமட்டி வந்தது. சமையலாவது ஒன்றாவது. டோராவுக்கு கேழ்வரகுக் கூழ் காய்ச்சி வைத்துவிட்டு படுத்தேன்.

அப்படியே தூங்கி மாலையில் எழுந்தேன். கழிப்பறை சென்றேன். எப்போதும் கழிப்பறை செல்கையில் முன்னாலேயே இருக்கும் ஜன்னல்கட்டையில் கண்ணாடியை வைப்பேன். அங்கு கண்ணாடி இருந்தது. இயல்பாக எடுத்து போட முயல்கையில் மூக்கின்மேல் இன்னொரு கண்ணாடி இருந்தது. திகைத்தபின் நிலைமையை புரிந்துகொண்டேன். வீடு என்பது நம் உள்ளம். அதற்கு ஸ்வ்பனம் சுஷுப்தி துரியம் எல்லாமே உண்டுபோலும். தனிமையில் இருக்கையில் ஜாக்ரத் மறைந்து வீடு பேருரு கொண்டுவிடுகிறது.

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- எஸ்.சுரேஷ்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57