உடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்
பான்ஸாய்க் கடல்
அன்புள்ள ஜெ
போன்ஸாய் கடல் படித்தேன். பெரிதானவற்றை மிகச்சிறியனவாகவும், சிறியனவற்றை மிகப் பிரம்மாண்டமாகவும் காட்டும் கலைப்படைப்புகளைக் காணும்போது எழும் கிளர்ச்சி இயல்பானது. அதுவும் உயிர் உள்ளதாலும், பெரும் உழைப்பால் உருவாவதாலும் போன்ஸாய் நம்மை ஈர்ப்பதில் ஆச்சரியமில்லை. இதைப்படித்த போது இதை மையமாய் வைத்து சுமார் நாற்பது வருடங்களுக்கு முன் சுஜாதா வேறு கோணத்தில் எழுதிய ஒரு சிறுகதை (பெயர் நினைவில் இல்லை) ஞாபகத்துக்கு வந்தது. ஒரு புகழ் பெற்ற போன்ஸாய் ஆராய்ச்சியாளர் சில பார்வையாளர்களிடம் தன் பல வருட உழைப்பால் உருவான போன்ஸாய் தோட்டத்தை காண்பித்து விவரிப்பதாக விரியும் கதை. கடைசியில் தன் மனைவி, மகனை அறிமுகப் படுத்துவார்.அந்த மகனின் உடல்,மன வளர்ச்சி அவன் வயதுக்கேற்றவாறு அல்லாமல் மிகவும் சுருங்கியாதாக இருப்பதாகக் கதையை முடித்திருப்பார்.
அன்புடன்
ரமேஷ் கிருஷ்ணன்
அன்புள்ள ஜெ
பான்ஸாய் கடல், உடலின் ஆயிரம் உருவங்கள் இரு கட்டுரைகளுமே அக்கவிதைகளைப் புரிந்துகொள்ள திறப்புகளை அளித்தன. கவிதையை நீங்கள் முழுக்க விளக்காமல் புரிந்துகொள்வதற்கு தேவையான குறைந்தபட்ச குறிப்புகளை மட்டுமே அளிப்பது மிக முக்கியமானது. கட்டுரையை வாசித்தபின் கவிதை வெறும் பொழிப்புரையாக ஆகிவிடக்கூடாது. கட்டுரை கவிதையை மேலும் துலங்கத்தான் செய்யவேண்டும். நீங்கள் எழுதிய நடனத்தின் சித்திரத்துடன் பொருத்தி வாசித்தபோதுதான் என்னால் அந்தக்கவிதையை சரியாகப் புரிந்துகொள்ள முடிந்தது. பெண்ணுக்குள் இருக்கும் தந்தையும் காதலனும் அவள் உடலாகவும் காலமாகவும் மாறியிருக்கிறார்கள். அழகான கவிதை
டி.நடராஜன்
அன்புள்ள ஜெமோ
கவிதையின் உளவியல் மாதிரிகளைப்பற்றி வாசித்தபோது ஆச்சரியமாக இருந்தது. கலைக்கே இம்மாதிரியான சில உளவியல்மாதிரிகளை ஒரு தொடக்க அடையாளமாக வைத்துக்கொள்ளலாம் என நினைக்கிறேன். நம் சிற்பங்களைப் பார்க்கும் பார்வையையே மாற்றிவிடவேண்டும்.ஆட்டுத்தலைகொண்ட தக்ஷன் புலிநகக் கால்கொண்ட வியாஹ்ரபாதர் என விதவிதமான சிற்பங்கள் நினைவுக்கு வந்தன
ராஜ்