வராகர் -ஒரு கடிதம்

விமலரும் வராகரும்

சமணத்தில் வராகர்

திரு ஜெமோ

 

வைணவர்களின் வராகமூர்த்தி சமணத்தில் இருந்து வந்தவர் என்று நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். எந்த ஆதாரமும் இல்லாத இந்த அவதூறு உங்கள் தரம் என்ன என்று காட்டுகிறது.வராகமூர்த்தி வைணவத்தில் அநாதிகாலம் தொட்டு இருந்துவரும் வழிபாடு என்பதை அறியாதவர்கள் இருக்க முடியாது. அதை சமணர்களின் தெய்வத்தை நகல் எடுத்தது என்று சொல்வதற்கு மிகுந்த தைரியம் வேண்டும். ஆதாரங்கள் இல்லாவிட்டால் நீங்கள் மன்னிப்பு கோரவேண்டும்.

 

இந்துவழிபாடுகளும் தெய்வங்களும் சமணத்தில் இருந்தும் பௌத்தத்தில் இருந்தும் வந்தவை என்று சொல்லும் ஒரு கூலிப்படை இன்றைக்கு உள்ளது. அதில் ஒருவர் நீங்கள் என நினைக்கிறேன்.

 

டி.எஸ்.நாராயணன்

 

அன்புள்ள நாராயணன்,

 

உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையிடுகிறீர்கள் என நினைக்கிறேன். கட்டுரைகளை வாசிக்கும் வழக்கமும் உங்களுக்கு இல்லை.இந்துதெய்வங்களோ வராகமூர்த்தியோ சமணத்தில் இருந்து வந்தவை என்னும் கருத்தை நான் முன்வைக்கவில்லை. முதல்கடிதம் எழுதிய கடலூர் சீனுவும் அப்படி எதையும் சொல்லவில்லை. அவர் சமணத்தில் வராகமூர்த்தி வழிபாடு எவ்விதம் வந்தது, அதற்கு அங்கே சடங்குசார்ந்த மரபு உண்டா என்று மட்டும்தான் எழுதியிருக்கிறார்.

 

அதற்கு நான் சமணநூல்களில் இருந்து ஒரு குறிப்பை அளித்து வராகம் விமல்நாதரின் அடையாளம். வராகமாக அவர் வழிபடப்படுவதுண்டு, ‘சில சமணநூல்களில்’ வராக வழிபாடு சமணர்களிடமிருந்து வைணவம் பெற்றுக்கொண்டது என்கிறார்கள் என்று சுட்டிக்காட்டினேன். அந்த வழிபடப்படும் வராகம் விமலராக இருக்கலாமோ என ஊகித்துச் சொன்னேன்.அதற்கு பதிலாக ஆய்வாளராகிய அனீஷ்கிருஷ்ணன் நாயர் விரிவாக சமணத்திற்குள் இந்து தாந்த்ரீக மரபுகளும் தெய்வங்களும் எப்படி ஊடுருவியிருக்கின்றன என்று விளக்கினார்.

 

பொதுவாக பண்பாட்டு ஆய்வுகள் நிகழும் விதம் இதுதான். எல்லாத் தரப்பையும் எடுத்துப் பேசப்படும். எல்லா கோணத்திலும் ஊகங்கள் முன்வைக்கப்படும். ஓர் ஊகத்தை இன்னும் கூரிய ஆய்வு வந்து விளக்கி கடந்துசெல்லும். என்னுடையது பொதுவான ஓர் ஊகம். சமண நூல்களில் இருந்து எடுத்தது. மேலதிக ஆய்வுக் கருத்தை நாடி ஓர் ஐயமாகவே அதை முன்வைத்திருந்தேன். அதற்கு ஆய்வாளரான அனீஷ்கிருஷ்ணன் சொன்னது ஆய்வுசார்ந்த தெளிவான விளக்கம். இப்போதைக்கு அதுவே முடிவானது. அதேசமயம் அதுவும் விவாதத்திற்கு அப்பாற்பட்டது அல்ல. ஒரு சமண ஆய்வாளர் வந்து அதற்கும் மறுப்பும் விளக்கமும் சொல்லலாம்.

 

வராகர் அல்லது வேறு இந்துதெய்வம் சமணத்தில் இருந்து வந்தது என எனக்குத் தோன்றினால் நான் அதை தெளிவாகவே சொல்வேன். அதற்கு எவரையும் அஞ்சவும் மாட்டேன். இங்கே நான் சொன்னது சிலசமண நூல்கள் அப்படி வாதிடுகின்றன என்று மட்டுமே. அது ஒன்றும் அரிய கருத்தும் அல்ல, எவரும் சரிபார்க்கக்கூடியதே.

 

இங்கே மிகையுணர்ச்சிகளுக்கும் நம்பிக்கைசார்ந்த கொந்தளிப்புகளுக்கும் இடமில்லை. இத்தகைய ஆய்வுகள் – விவாதங்களில் நம்பிக்கை சார்ந்த பற்றுகளுடன், சாதிமதக் காழ்ப்புகளுடன், அரசியல்நோக்கங்களுடன், வெற்று வம்புநோக்கங்களுடன் ஊடுருவும் உங்களைப் போன்றவர்கள்தான் எதையுமே விவாதிக்கமுடியாத சூழலை உருவாக்குகிறீர்கள்.

 

நீங்கள் மதநம்பிக்கையாளர் என உணர்கிறேன். அவ்வாறென்றால் அந்நம்பிக்கையை பற்றிக்கொள்ளுங்கள். அதை காழ்ப்பாக மாற்றிக்கொண்டு வம்புகளில் ஈடுபட்டீர்கள் என்றால் பக்தியை இழந்துவிடுவீர்கள். அறிவுத்தளத்தில் எதையும் அடையவும்மாட்டீர்கள்

 

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-55
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா சிறுகதை அரங்கு- பேச்சாளர்கள்