‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-59

அர்ஜுனன் அம்புகளால் கர்ணனை தாக்கியபடி களத்தில் முன்னெழுந்தான். “அவனை அல்ல, அவன் தேரை தாக்குக!” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் தேர் இருக்கும் வரை அவனை வெல்லமுடியாதென்று உணர்க! தேரில் முதலில் கொடியை உடைக்கவேண்டும். கொடியில்லாத தேருக்கு எந்த விசையிழப்பும் இல்லை. ஆனால் தன் தேரின் கொடி வெட்டப்பட்டுவிட்டதை உணர்ந்த வீரன் நிலையழிகிறான். கொடியில்லாத தேரில் நின்றிருக்கிறோம் என்னும் உணர்வை அவன் கடக்கவே இயல்வதில்லை.” இளைய யாதவர் அவனுடைய தேர்த்தூண் வளைவில் வந்து ஆணையிட்டார். அவர் முகத்தில் அதே மலர்வு. அது ஆலயச்சிலையின் உதட்டிலிருக்கும் கற்புன்னகை. அது எந்நிலையிலும் மாறுவதில்லை. தருணத்திற்கு ஏற்ப ஏளனம் என்றும் சினம் என்றும் கனிவு என்றும் வஞ்சம் என்றும் விலக்கம் என்றும் தோற்றம் கொள்கிறது.

“தேர்த்தூண்களை தொடர்ந்து அறைக! தூண்கள் அறையப்படுகையில் வீரன் அதை தவிர்க்கும்பொருட்டு அசைகிறான். அது தேரை உலையச் செய்கிறது. தேர் தொடர்ந்து உலையுமென்றால் தேர்ப்பாகன் பதற்றம் கொள்கிறான். அவன் கைகள் வழியாக புரவிகள் பதற்றம் கொள்கின்றன. தேரை நிலைகுலையச் செய். அது வீரனின் வில்லை நிலையழியச் செய்யும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் தன் இலக்கை நோக்கும் கணத்தில் வில்லை மறக்கிறான். தேர்ந்த வில்லவன் இலக்கு நோக்குவது அரைக்கணம்தான். அந்தப் பொழுதில் சென்றறைந்து உன் அம்பு அவன் வில்லின் நாணை உடைக்கட்டும். அவனுடைய தேரில் நாண் எடுத்து அளிக்க ஆவக்காவலன் இப்போதில்லை.”

“அதற்கும் அப்பால் அவனை செயலிழக்கச் செய்யவேண்டும். அவன் செயலிழந்த கணமே அது அவன் உடலில் வெளிப்படும். முகம் அதை தெரிவிக்கும். அப்போது எழவேண்டும் உன் அம்பு. அவனை கொல்வதற்குரிய அஞ்சலிகாஸ்திரம். அது உன் தந்தையால் முன்பு விருத்திரனைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட அம்பிலிருந்து உருவானது.” அர்ஜுனன் விழிகளால் “ஆம்” என்றான். அங்கே போருக்கு எழுவது வரை அவன் அந்த அம்பை நினைவுகூரவில்லை. உபப்பிலாவ்யத்தில் இருந்து கிளம்புகையில் இளைய யாதவர் அவனிடம் அந்த அம்புமுனையை கொடுத்தார். கல்லால் ஆன சிறுபேழைக்குள் செதுக்கப்பட்ட பள்ளத்தில் அது பதிந்திருந்தது. தெய்வவிழிபோல மின்னிக்கொண்டிருந்தது. “இது இக்களத்திற்காக காத்திருந்தது” என அவர் சொன்னார்.

அர்ஜுனன் அந்த அம்பை மாகேந்திர வேள்வியில் உருக்கியெடுத்ததை நினைவுகூர்ந்தான். இந்திரப்பிரஸ்தத்திற்குக் கிழக்கே இருந்த தேவவனத்தில் அந்த வேள்வி நடந்தது. தென்னாட்டிலிருந்து வந்த அதர்வ வைதிகர்களாலான அந்தணர் குழு ஒன்று அதை நிகழ்த்தியது. நாற்பத்தொரு நாள் நடந்த அந்த வேள்வியில் எரிமலைப் பிளவிலிருந்து எடுத்த கரிக்கல்லால் அம்புமுனை வடிவில் செதுக்கப்பட்ட சிற்பம் ஒன்று முதல்நாளே எரிகுளத்தில் இடப்பட்டது. அதை கருங்கல்லில் செதுக்கி எடுத்த சிற்பி தொடுவதற்குமுன் அது இரும்பாலானது என்று நம்பும் அளவுக்கு கூருடன் அமைத்திருந்தான். அதில் ஒரு பக்கம் அர்ஜுனனின் குரங்குக்கொடியும் மறுபக்கம் இந்திரப்பிரஸ்தத்தின் மின்படை முத்திரையும் இருந்தன.

நூற்றெட்டு அவிப்பொருட்கள் அனலில் இடப்பட்டன. அன்னமும் நெய்யும் விறகும் மங்கலங்களும் மட்டுமல்லாது நூற்றெட்டு வேதிப்பொருட்களும் அனலூட்டப்பட்டன. மஞ்சள், நீலம், செந்நீலம், பச்சை, சிவப்பு என பல வண்ணங்களில் எழுந்தது புகை. இந்திரப்பிரஸ்தத்தையே மூச்சடைத்து இருமித் திணறச்செய்தது. நாற்பத்தொன்றாம் நாள் எரிகுளம் அவிந்தபோது அந்த கல்லால் ஆன அம்புமுனையின் பின்பகுதி படிகமென்றாகி பளிங்குபோல் ஒளிகடக்கும் தெளிவுகொண்டிருந்தது. முனைப்பகுதி நீலநிற ஒளிகொண்டிருந்தது. அதை இரும்புக் கிடுக்கியால் எடுத்து வெளியே வைத்தார் வைதிகர். முதலில் அது நீராலானது என்னும் எண்ணம் ஏற்பட்டது. வேள்விச்சாலையின் கூரை அதன்மேல் பாவையாகியிருந்தது. அசைவில் அப்பாவை நலுங்கி பலநூறு பாவைகள் என பெருகியது.

“நீங்கள் விழைந்ததை இதைக் கொண்டு உருவாக்குக! இது இந்திரன் விருத்திரனைக் கொன்ற அம்பின் துளி” என்றார் தலைமை வைதிகர். அதை அவர் ஒரு கல்தாலத்தில் வைத்து அளிக்க இளைய யாதவர் அர்ஜுனனிடம் “பெற்றுக்கொள்” என்றார். அர்ஜுனன் அதை வாங்கிக்கொண்டான். “இது மாய வல்லமை கொண்ட அரக்கர்களை வெல்லுதற்குரியது. மானுடர் என்றேனும் தேவர்களுடன் போரிடுவார்கள் என்றால் அவர்களின் படைக்கலமாகத் தக்கது. வேள்வியால் உறுதிப்பட்டது” என்று வைதிகர்தலைவர் சொன்னார். “இந்த அம்பு அனைத்து உலோகங்களையும் மென்சேற்றுப்பரப்பையும் பட்டுத்துணியையும் என கிழித்துச்செல்லும். மலைப்பாறைகளை பிளக்கும். மண்ணைத் துளைத்து ஆழுலகு வரை செல்லும். அறிக! அனைத்து உலோகங்களும் உச்சத்தில் பொன்னென்று ஆகின்றன. அனைத்து கற்களும் வைரமென்றாகின்றன. கனிந்து ஒளிகொள்வது பொன். சினம்கொண்டு இறுகி ஒளிகொள்வது வைரம். இனியில்லை என செறிவுகொள்வது. கற்களுக்குள் வைரமே தெய்வம்.”

அர்ஜுனன் இளைய யாதவரிடம் “யாதவரே, இத்தகைய அம்பு எதற்காக? நான் ஏதேனும் பேருருவ அரக்கனுடன் பொருதவிருக்கிறேனா?” என்றான். இளைய யாதவர் “பேருருவர்கள் அரக்கர்களாகத்தான் இருக்கவேண்டுமா?” என்றார். “அன்றி தேவர்களா? மூன்று முதற்தெய்வங்களா?” என்றான் அர்ஜுனன். இளைய யாதவர் நகைத்து “பொருதற்கரிய எதிரி… நீ உன்னுடனேயே போரிடவிருக்கிறாய்” என்றார். “அதை உன் படைக்கலநிலையில் தெய்வமென நிறுவுக! ஒவ்வொருநாளும் மலரும் அரியுமிட்டு பூசை செய்க! அதில் வாழும் உபேந்திரன் ஒருகணமும் அகலக்கூடாது. தெய்வம் குடிகொள்ளும் அந்த அம்பு ஒருமுறைதான் போருக்கு எழும். வென்றபின் மீண்டும் மண்ணுக்கே மீளும்…” என்றார்.

கர்ணனை தாக்கவேண்டிய அம்புகளின் நிரையை ஒரே கணத்தில் தன் உள்ளம் வகுத்துவிட்டிருப்பதை அர்ஜுனன் உணர்ந்தான். எரியை பற்றவைப்பதுபோலத்தான் அது. முதல் அம்பாக அவன் மாகேந்திரம் என்னும் அம்பை தொடுத்தான். அது சென்று அறைந்து கர்ணனின் தேரை நிலைகுலையச் செய்தது. அந்த நிலைகுலைவை தக்கவைப்பதற்கென்று இடைவிடாது கந்தர்வாஸ்திரங்களை தொடுத்தான். கர்ணனின் அம்புகளை ஒரு அம்பால் நிறுத்தி மறுஅம்பால் அவன் தேரை அறைந்துகொண்டே இருந்தான். இருகை வில்லவன் என தன்னை அழைப்பதன் மெய்ப்பொருளை அப்போதுதான் உணர்ந்தான். ஒரே கணத்தில் இரு அம்புகள் இரு வேறு இலக்குகளுடன் அவனிடமிருந்து எழுந்தன. கர்ணனின் தேர் அசைந்து நிலையழிந்தது.

கர்ணன் பிருத்விசக்ரம் என்னும் அம்பால் அர்ஜுனனை அறைந்தான். இளைய யாதவர் தேரைத் திருப்பி அதை ஒழிந்தார். அடுத்த அம்பை அவன் எடுக்கும் கணத்தில் அவன் தேரின் கொடியை அர்ஜுனன் அறுத்தான். கர்ணனின் முகத்தில் எவ்வுணர்வும் வெளிப்படவில்லை. எரிந்தபடி எக்காள ஒலியெழுப்பி வந்து அறைந்த காபாலிகம், காளாமுகம் என்னும் அம்புகளால் அவன் அர்ஜுனனை தாக்கினான். மீண்டுமொரு இமைக்கண இடைவெளியில் அர்ஜுனன் கர்ணனின் வில்லின் நாணை அறுத்தான். முதல்முறையாக கர்ணனின் முகத்தில் சினம் தெரிந்தது. அறைகூவுகையிலும் வஞ்சினம் உரைக்கையிலும்கூட குளிர்ந்திருக்கும் அவன் விழிகளில் வெம்மை எழுவதை அர்ஜுனன் கண்டான். அவன் தொடுத்த காலகாலம் என்னும் அம்பு வந்து அர்ஜுனனின் தேரை நீரில் தக்கை என துள்ளச்செய்தது.

“தயங்காமல் தாக்கிக்கொண்டே இரு… அவனுடைய சினம் நற்குறியே” என்றார் இளைய யாதவர். கர்ணன் உதடுகளை மடித்துக் கடித்தபடி, கூர்கொண்ட விழிகள் அர்ஜுனன் மேல் ஊன்றியிருக்க அம்புகளால் அவன் கவசங்களை உடைத்தான். தோளிலைகளும் நெஞ்சக்கவசமும் உடைய அர்ஜுனன் தேர்த்தட்டில் அமர்ந்து பிறிதொன்றை அணிந்துகொண்டான். “அவன் சீற்றத்தை பொருட்படுத்தாதே. உன் கவசங்கள் உடைவதைப்பற்றி அச்சமும் கொள்ளாதே. எட்டுக்கு ஒன்றென்றேனும் உன் அம்புகள் அவனை அறைந்தாகவேண்டும் என்று மட்டும் கொள்” என்றார் இளைய யாதவர். அர்ஜுனன் கர்ணனின் நெஞ்சக்கவசத்தை அறைந்து விரிசலிடச் செய்தான். மீண்டுமொரு அம்பால் தோளிலைகளை உடைத்தான். கர்ணன் அர்ஜுனனை அம்புகளால் அடித்து அடித்து கவசங்களையும் அணிகளையும் அகற்றிக்கொண்டிருந்தான். கர்ணனின் நெஞ்சக்கவசம் உடைந்துவிழுந்தபோது அர்ஜுனன் இடைக்கச்சையும் தோலாடையும் மட்டும் அணிந்து தேரில் நின்றிருந்தான்.

கதிர் சிவந்து நிழல்கள் நீளத்தொடங்கிவிட்டிருந்தன. களம் முற்றமைதி கொண்டிருந்தது. “இனி அவனை நேருக்குநேர் நோக்காதே. அவன் தேரின் நிழலை மட்டும் நோக்கி அவனை அம்புகளால் தாக்கு. அந்நிழல் மேலும் தெளிவுற்று வருவதை காண்பாய்.” அர்ஜுனன் கர்ணனின் தேரின் நிழலை நோக்கியபடி அம்புகளை தொடுத்தான். அதில் அமர்ந்திருந்தவன் அந்நிழலில் தெரியவில்லை. அந்நிழல் கருமை விலகி செம்மை கொண்டது. பின்னர் ஒரு நீண்ட குருதிக்கறைத்தடம் என்றே தோன்றியது. சரிந்து சரிந்து தொடுவான்வரை செல்லும் ஒரு குருதிவிரல் என நீண்டது. அதன் வண்ணம் மாறிக்கொண்டே இருப்பதை அர்ஜுனன் கண்டான். ஏன் அவ்வண்ணம் நிழல்வண்ணம் மாறுகிறது என வியந்தான்.

பின்னர் ஒன்றை உணர்ந்தான். அந்திக்கதிரவன் கர்ணனின் தலைக்குப் பின்னால் இருந்தான். பிற அனைத்து நிழல்களும் கிழக்கு நோக்கி நீண்டு சென்றிருந்தன. கர்ணனின் தேரின் நிழல் மட்டும் மேற்குநோக்கி நீண்டிருந்தது. அவன் விழிவிலக்கி கர்ணனை நோக்கவேண்டும் என விழைவுகொண்ட கணமே இளைய யாதவரின் குரல் எழுந்தது. “நோக்காதே!” அவன் அத்தேரின் தூண்களை அறைந்து உடைத்தான். அதன் தட்டுமுழுக்க அம்புகளால் நிறைத்தான். பின்னர் ஹலாஸ்திரத்தால் அதன் மகுடத்தை உடைத்தான். கர்ணன் உறுமியதை அவன் கேட்டான். தன் தேரை வந்தறைந்த சந்திராஸ்திரம் பம்பரம்போல அதை சுழலச்செய்து அப்பால் வீசியதை உணர்ந்தான். மீண்டு நோக்கு நிலைத்ததும் கர்ணனின் தேர்ப்பாகனின் நெஞ்சத்தை கவசத்துடன் துளைத்தான். ஓசையின்றி விருஷநந்தனன் நுகமேடையிலிருந்து வலப்புறமாக சரிந்து விழுந்தான்.

கர்ணன் கால் நீட்டி கடிவாளத்தை வலக்கால் விரல்களால் பற்றிக்கொண்டான். கடிவாளக் கற்றையை தன் கணுக்காலில் சுழற்றி சுற்றிக்கொண்டு அதை இழுத்து தேரை தானே செலுத்தினான். அர்ஜுனனின் அம்புகள் வந்து அவன் புரவிகள்மேல் பதிய அவை கூச்சலிட்டன. “இழிமகனே, இன்றே உன் இறுதி நாள்!” வெறியுடன் கூவியபடி கர்ணன் மகாருத்ராஸ்திரத்தை எடுத்தான். அவ்வொளியை அவனை நோக்காமலேயே சூழ்ந்திருந்த அனைத்துப் பொருட்களிலும் எழுந்த செவ்வலையால் அர்ஜுனன் அறிந்தான். இளைய யாதவர் தேரைத் திருப்பியபடி விரைந்து அகன்றார். கர்ணன் “நில்! நில், இழிமகனே” என கூவியபடி துரத்திச்சென்றான். குருக்ஷேத்ரக் களத்தை வகுந்தபடி புற்பரப்பில் நாகமென இளைய யாதவரின் தேர் விரைந்தது. அந்தத் தடத்தை ஒட்டி இன்னொரு தடமென பிளந்துகொண்டு கர்ணனின் தேர் துரத்திச்சென்றது.

கர்ணனின் உடல் ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவன் சினம்கொள்ளக் கொள்ள ஒளி மிகுந்து வந்தது. கரிய வைரம் என. பின் ஒளி ஊடுருவும் படிகம் என. பின் கனல் என. அவன் அருணனின் தேரிலேறி களம் வந்த நாளவன் எனத் தோன்றினான். அவன் கடந்துசென்றபோது அணுக்கத்தில் நோக்கிய வீரர்கள் சற்றுநேரம் ஒளியிருளால் விழியிழந்தோர் ஆயினர். அவன் தேர் சென்ற வழியில் ஓடும் பந்தத்தைச் சுற்றி என அவர்களின் நீள்நிழல்கள் நடனமிட்டு சுழன்றுவந்தன. “செங்கதிரோன்!” என்று ஒரு வீரன் கூவினான். “அனல்கொண்டு எழுந்தவன்!” என்றான் இன்னொருவன். அந்தியொளியில் அங்கிருந்த ஒவ்வொன்றும் செஞ்சுடர் கொண்டிருந்தன. வேல்நுனிகளும் வாள்விளிம்புகளும் இளங்குருதியென கதிரொளியில் நனைந்திருந்தன.

இளைய யாதவர் குருக்ஷேத்ரத்தின் வடக்கு எல்லைவரை முழு விரைவில் தேரை ஓட்டிச்சென்றார். கர்ணன் அவரை தொடர்ந்து சென்றான். ஓர் எல்லையில் இளைய யாதவர் தேரை திருப்பிக்கொண்டு அர்ஜுனன் கர்ணனை எதிர்கொள்ளச் செய்தார். விரைந்தோடும் தேரில் நின்றபடியே கர்ணனை அம்புகளால் தாக்கிக்கொண்டிருந்த அர்ஜுனன் தேர் அவனை நோக்கி திரும்பியதும் மேலும் விசைகொண்டு கர்ணனின் கவசங்களை உடைத்தான். நெஞ்சிலும் தோளிலும் கவசங்கள் உடைந்துவிழ கர்ணன் பிளிறலோசை எழுப்பியபடி ஏழு அம்புகளால் அர்ஜுனனை தாக்கினான். அவற்றை அர்ஜுனன் தன் அம்புகளால் காற்றுவெளியிலேயே தடுத்தாலும் அவை உடைந்த துண்டுகள் வந்து பாய்ந்து அவன் உடலில் எஞ்சியிருந்த ஆடைகளையும் அறுத்தன. இடைக்கச்சை அவிழ இறுதி ஆடையும் காலுக்கு நழுவியது.

அர்ஜுனன் உடல்குன்றி தத்தளித்தபோது “தயங்காதே… ஆடையின்றியே நில். அவனை மானுடர் வெல்லவியலாது என்பது அவன் ஆசிரியரின் நற்கூற்று. தேவனாகுக! மானுடர் அளித்த அனைத்தையும் உன் உடலில் இருந்து அகற்றுக!” என்றார் இளைய யாதவர். “உன் குண்டலங்களையும் வெட்டி வீசு. கங்கணங்களும் அகலட்டும். குலக்குறியோ தெய்வக்காப்போ ஒன்றும் எஞ்சலாகாது உன் உடலில்… பிறந்த தோற்றத்தில் நிலைகொள்க!” அர்ஜுனன் ஓர் அம்பை எடுத்து தன் குண்டலங்களை அறுத்தெறிந்தான். கங்கணங்களை, தோளில் அணிந்திருந்த காப்புத்தாலியை, இடையில் கட்டியிருந்த அரைக்காப்பை அறுத்தான். கர்ணன் வெறிக்கூச்சலிட்டபடி ஏவிய பாசாஸ்திரம் நெளிந்து வளைந்து நீரில் செல்லும் நாகமென வந்து அவன் தேரை தாக்கிச் சுழன்றது. அவனைத் தேடிக் கண்டடைய இயலாததுபோல் அப்பால் சென்றது.

கர்ணன் தன் தேரை அரைவட்டமாக திருப்பி உரக்க நகைத்தபடி திரிகாலாஸ்திரத்தை  வில்லில் தொடுத்தபடி அர்ஜுனனை நோக்கி வந்தான். திகைத்தவனாக அர்ஜுனனையும் அவனுக்குத் தேரோட்டிய இளைய யாதவரையும் நோக்கினான். அந்த அம்புக்கான நுண்சொல்லை அவன் உள்ளம் மறந்துவிட்டிருந்தது. மீளமீள அவன் அச்சொற்களுக்காகத் துழாவ மேலும் மேலும் உள்ளம் ஒழிந்து வெறுமைகொண்டது. அவன் வில்தாழ்த்தியபோது வில்லின் நிழல் நேர்முன்னால் நீண்டு விழுந்தது. அதை ஏந்திய கையும் விழிமுன் பெருக அவன் அந்த நுண்சொல்லை நினைவுகூர்ந்தான். ஆனால் தலைதாழ்த்தி “கொள்க, ஆசிரியரே!” என்றான். அவன் வில் தாழ்ந்தமையின்  நிழலை தங்கள் முன்னால் பார்த்த புரவிகள் உடல் தளர்ந்து மூச்சுவிட்டபடி நிற்க அவன் தேர் வலப்பக்கமாக சாய்ந்தது. குருக்ஷேத்ரத்தின் பிலங்களில் ஒன்றின் வாய் திறந்து அவன் தேரின் சகடத்தைக் கவ்வி உள்ளிழுத்துக்கொண்டது.

தேர் அசைவிழந்து மேலும் மேலும் அழுந்த கர்ணன் விஜயத்தை தேர்த்தட்டில் விட்டுவிட்டு பாய்ந்து மண்ணில் இறங்கி தேரின் சகடத்தை நோக்கி சென்றான். “ஒருகணம்தான். ஏவுக அஞ்சலிகத்தை!” என்றார் இளைய யாதவர். “அவர் படைக்கலம் இல்லாமலிருக்கிறார்” என்று அர்ஜுனன் சொன்னான். “ஆம், இதுவே அவன் புதைவுக்கணம். அவன் இதோ மீண்டுவிடுவான். ஏவுக அம்பை!” என்றார் இளைய யாதவர். “படைக்கலம் இன்றி இருக்கையிலா?” என்றான் அர்ஜுனன். “படைக்கலம் இன்றி மட்டுமே அவனை கொல்ல இயலும் என்று உணர்க… ஏவுக!” என்றார் இளைய யாதவர். “யாதவரே!” என்று அர்ஜுனன் உளமுடைந்து கூவினான். “இது என் ஆணை! கொல் அவனை. இக்கணமே கொல்!” என்றார் இளைய யாதவர்.

அர்ஜுனன் மண்ணில் நீண்டுகிடந்த கர்ணனின் நிழலை நோக்கினான். அது இளநீல நிறமாக அதிர்ந்துகொண்டிருந்தது. காண்டீபம் சண்டிக்குதிரை என நின்று துள்ள அதன் நாண் தழைந்து கிடந்தது. அதில் ஓர் அம்பை ஏவும் விசைகூடுமா என அவன் ஐயம் கொண்டான். “யாதவரே, என் வில்…” என்று கூவினான். “ஏவுக! இக்கணமே அம்பை ஏவுக!” என அவன் தேரின் அத்தனை ஒளிவளைவுகளிலும் தோன்றி இளைய யாதவர் ஆணையிட்டார். அவன் கை சென்று அம்பறாத்தூணியில் தொட்டதுமே அஞ்சலிகம் பாய்ந்து விரல்களில் ஏறிக்கொண்டது. அதுவே காண்டீபத்திலமர்ந்தது. நாணை இழுத்து தன்னை இறுக்கிக்கொண்டது. வீறிட்டலறும் ஒலியுடன் எழுந்து மின்னல் என ஒளிவீசியபடி கர்ணனை நோக்கி சென்று அவன் நெஞ்சை தாக்கியது.

கர்ணனின் கவசம் பிளந்து நெஞ்சுக்குள் ஆழ்ந்திறங்கியது அஞ்சலிகம். அவன் வலப்பக்கம் சரிந்து மண்ணில் கையூன்றி உடல் அதிர்ந்தான். இடக்கையையும் ஊன்றியபோது தலை முன்பக்கம் குனிந்து மூக்கிலிருந்து குருதி நெஞ்சில் கொட்டியது. நெஞ்சப் புண்ணில் இருந்து வழிந்த குருதி மடியில் விழுந்து ஆடையை நனைத்து நிலத்தில் ஊறிப்பரவியது. அர்ஜுனன் காண்டீபத்தை தேர்த்தட்டில் வைத்துவிட்டு தலையைப் பற்றியபடி தேரில் அமர்ந்தான். இளைய யாதவர் தேரை பின்திருப்பி பாண்டவப் படைகளுக்குள் கொண்டுசென்றார். படைகள் விலகிப்பிரிந்து அவருக்கு வழிவிட்டன. வாழ்த்தொலிகள் எழவில்லை. அங்கு படைகள் இருப்பதையே செவிகளால் உணரமுடியவில்லை.

மேற்கே சூரியனின் ஒளிவட்டம் எடைமிகுந்து தொடுவான்கோட்டில் அழுந்தியது. கிழித்து மூழ்கத் தொடங்கியது. விரிந்த கதிர்களை ஒவ்வொன்றாக இழுத்துக்கொண்டு நாளவன் மறைய நிழல்கள் கரைந்து மறைந்தன. தேர்மகுடங்களின் உலோகப் பரப்புகளில் மட்டும் வான்வெளிச்சம் எஞ்சியிருந்தது. கதிரணைதலை நோக்கியபடி அனைவரும் அசைவிலாது நின்றிருந்தனர். கதிர்வட்டத்தின் மேல்விளிம்பு அறுதியாக மறைய அக்கணத்தைக் கொண்டாடும் பறவைகள் அப்பால் குருக்ஷேத்ரக் காட்டுக்குள் செங்குத்தாக வானிலெழுந்து சுழன்றமைந்து கூவின. காடெங்கும் பறவையோசைகள் கேட்கத் தொடங்கின. ஒரு பறவை கர்ணனின் தேருக்குமேல் கூவியபடி பறந்தது.

முதிய வீரன் ஒருவன் மெல்ல நடந்து அருகணைந்து குனிந்து கர்ணனை நோக்கினான். பின்னர் கைகூப்பி தொழுது “அங்கர் விண்புகுந்தார்” என்றான். மறு எல்லையிலிருந்து கௌரவ வீரர்கள் சிலர் ஓடிவந்தனர். “கதிர்மைந்தர் விண்புகுந்தார்” என்று முதிய வீரன் உரக்க அறிவித்தான். அவர்கள் கைகூப்பியபடி அருகணைந்து கர்ணனின் காலடியில் நின்றனர். பின்னர் கைவீசி தங்கள் படையினருக்கு கர்ணன் விண்புகுந்ததை அறிவித்தனர். கௌரவப் படையிலிருந்து ஆங்காங்கே சில வாழ்த்தொலிகள்தான் எழுந்தன. அவர்கள் மிகச் சிலரே எஞ்சியிருந்தனர். அவர்களும் ஆங்காங்கே சிதறிப்பரவியிருந்தனர். அவர்கள் வழியாக அச்செய்தி படர்ந்துசெல்வதை காணமுடிந்தது.

முரசுகள் கர்ணனின் விண்ணேற்றத்தை அறிவித்தபடி முழங்கத் தொடங்கின. “அங்கர் விண்புகுந்தார். கதிர்மைந்தர் நிறைவடைந்தார். கர்ண வசுஷேணர் வீழ்ந்தார். எழுக அவர் புகழ்! வெல்க அவர் பெயர்!” ஆனால் கௌரவப் படையில் அது ஒரு கலைவை மட்டுமே உருவாக்கியது. அந்தியை அறிவித்து முரசுகள் முழங்கின. போர் ஏற்கெனவே நின்றுவிட்டிருந்தமையால் இரு படைகளும் பின்னடைந்து விலக குருக்ஷேத்ரம் ஒழிந்து விரிந்து அகன்றது. பாண்டவப் படையினர் ஒரு சொல்லும் இல்லாமல் படைக்கலங்களை ஊன்றியபடி தளர்ந்த நடையுடன் பின்னடைந்தனர். கர்ணனை கொண்டுசெல்வதற்காக பலகைமஞ்சத்துடன் எட்டு படைவீரர்கள் ஓடிவந்தனர். அஸ்வத்தாமனும் கிருபரும் புரவியில் வந்திறங்கி அவர்களுக்குப் பின்னால் வந்தனர்.

அஸ்வத்தாமன் வந்து கர்ணன் அருகே குனிந்து நோக்கினான். கர்ணனின் விழிகள் அரையிமை மூடியிருக்க உதடுகள் புன்னகையிலென திறந்திருந்தன. அஸ்வத்தாமன் அமர்ந்து கர்ணனின் உடலை தொட்டுப்பார்த்தான். இளவெம்மையை உணர்ந்ததும் அவன் இரு கைகளையும் பற்றி ஒன்றன்மேல் ஒன்றென வைத்து ஊழ்க அமைவை உருவாக்க முயன்றான். ஆனால் அவை நழுவி இருபுறமும் சரிந்து விரல்கள் விரிய திறந்து விழுந்தன. இல்லை என்பதுபோல. இருமுறை பற்றி வைத்தும் அவை சரிய கிருபர் “அவை அவ்வண்ணமே இருக்கட்டும்…” என்றார். அஸ்வத்தாமன் நிமிர்ந்து அவரை நோக்கிவிட்டு “ஆம்” என்றான்.

ஏவலர் மரவுரியை விரித்து அதன்மேல் கர்ணனின் உடலை சரித்து படுக்கவைத்தனர். அதை நாற்புறமும் பற்றித் தூக்கி பலகைமேல் வைத்தனர். அவன் இரு கைகளும் இருபுறமும் தொங்கின. அஸ்வத்தாமன் கிருபரை நோக்கிவிட்டு எழுந்துகொண்டான். அவர்கள் அவனை தூக்கிக்கொண்டு சென்றபோது ஆங்காங்கே அமர்ந்தும் விழுந்தும் கிடந்த கௌரவப் படைவீரர்கள் வெறுமனே வெறித்து நோக்கிக்கொண்டிருந்தனர்.

முந்தைய கட்டுரைவாசிப்பு எனும் நோன்பு
அடுத்த கட்டுரைராகுல் -ஒரு கடிதம்