‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54

அஸ்தினபுரியின் வில்லவர் படையொன்றை தலைமை தாங்கி தேர்த்தட்டில் வில்லுடன் நின்று பாண்டவப் படையை நோக்கிக்கொண்டிருந்தபோது சுபாகு தன்னை அறியாமலேயே விந்தையான ஓர் உளமலர்வை அடைந்தான். சிற்றகவையிலேயே அவன் உள்ளத்தில் இருந்த ஆழ்கனவு அது. படைமுகப்பில் நின்று ஒருகையில் வில்லும் மறுகையில் அம்புமென போர்முகம் செல்வது. தன் ஆணைக்கு ஏற்ப பின்புறம் படையொன்று பெருகி வந்துகொண்டிருப்பது. அது உடல் பெருகி பேருருவம் கொள்வதே தான். ஆனால் ஒருபோதும் அந்த வாய்ப்பு அவனுக்கு அமையவில்லை. கௌரவ நூற்றுவரில் அவனை ஒரு போர்வீரன் என எவரும் மதித்ததில்லை. எப்போதும் மூத்தவர்களுக்கு அணுக்கனாக இணையனாகவோ பின்துணையாகவோதான் அவன் களம் வர நேர்ந்தது.

அன்று எழுகதிர் சூழ்கையின் ஒரு கதிரை அவன் தலைமை தாங்கி நடத்த வேண்டுமென்று அஸ்வத்தாமன் வகுத்து அவனிடம் ஆணையிட்டபோது முதலில் அது எவ்வகையிலும் உள்ளத்தை வந்தடையவில்லை. அவன் விழி சுருக்கி “நம்மிடம் வில்லவர் படை எவ்வளவு எஞ்சியுள்ளது?” என்று கேட்டான். அஸ்வத்தாமன் கசப்பு கொண்ட புன்னகையுடன் “வில்லேந்தியவர்கள் அனைவரையும் வில்லவர்கள் என்று கொள்ளவேண்டியதுதான்” என்றான். பின்னர் புன்னகை விரிய “இப்பொழுது படைகள் மிகவும் குறுகிவிட்டன. அம்புகள் செல்லவேண்டிய தொலைவும் குறைவே” என்றான். சுபாகு அதன் பின் மறுமொழி எதுவும் கூறாமல் “நன்று” என்று தலைவணங்கினான். “கவலைவேண்டாம் கௌரவரே, இங்கே அம்பேற்க வருபவர்களுக்கும் நெஞ்சுகாட்டுவதன்றி ஒன்றும் தெரியாது” என்றபின் அஸ்வத்தாமன் வெடித்துச் சிரித்தான்.

படைமுகப்பிற்கு வந்து தன் பாகனை பார்த்தபோதுகூட அவன் தலைமை தாங்கச் செல்வதாகவே எண்ணவில்லை. வழக்கம்போல மூத்தவர்களுக்கு அணுக்கனாக உடன்செல்லும் உளநிலையிலேயே இருந்தான். பாகன் அருகணைந்து தலைவணங்கி “தாங்கள் இக்கதிர் வடிவின் முகப்பில் நின்றிருக்கவேண்டும் என்பது அஸ்வத்தாமனின் ஆணை” என்றான். அச்சொற்கள் புரியாமல் சுபாகு நோக்க “தங்களுக்கு முன்னால் ஏழு தேர்கள் முகப்புக்காவலுக்கென நிலைக்கேடயங்களுடன் செல்லும். தங்களுக்கு இருபுறமும் இவ்வில்லவர்கள் அணிவகுப்பார்கள்” என்றான். அப்போதுதான் முழுக்க புரிந்துகொண்டு சுபாகு உளம் அதிர்ந்தான். பின்னர் அவ்வதிர்வு ஏன் அத்தனை விசைகொண்டிருக்கிறது என புரிந்துகொண்டான். கௌரவர்களில் அவன் மட்டுமே மூத்தவருக்கு இளையோனாக எஞ்சியிருக்கிறான்.

அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். பாகன் “நூறு தேர்வில்லவர்கள், முந்நூறு புரவிவில்லவர், வேலேந்திய காலாட்கள் ஐந்நூறு. ஆயிரமென தகைக்க முயன்றார்கள். படைவீரர்கள் இங்கே மிகக் குறைவு, அரசே” என்றான். தேரில் நின்ற வில்லவர்கள் அனைவருமே ஒவ்வாத கவசங்களை அணிந்திருந்தனர். பலர் பிழையாக அணிந்திருந்தனர். விற்களும் அவர்களுடையவை அல்ல என்று தெரிந்தது. எவருக்குமே ஆவக்காவலர்கள் இல்லை. தேர்ப்பாகன்கள் பலர் சிறுவர்களாகத் தெரிந்தனர். பலர் தலைக்கவசங்களை கையிலேயே வைத்திருந்தார்கள். தேர்களின் கொடிகள்கூட கீழே விழுந்தவற்றை எடுத்து உதறி கட்டிக்கொண்டிருந்தார்கள். ஆகவே அவை குருதியும் சேறும் படிந்து ஆட்டுக்காதுகள்போல் தொங்கிக்கொண்டிருந்தன.

அவர்கள் அனைவருமே அரைத்துயிலில் இருப்பதுபோல் தோன்ற சுபாகு “இவர்கள் அஸ்தினபுரியில் போர் பயின்றவர்களா என்ன?” என்றான். “இப்போது அந்த எல்லைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. மிகச் சில படைக்குழுக்களே நாட்டுக் கொடியுடனும் குலக் குறிகளுடனும் எஞ்சியுள்ளன. மற்றவர்கள் அனைவரும் பல வகையிலும் படைகளிலிருந்து உயிர் எஞ்சியவர்கள். எழுந்து நடக்க ஆற்றல் கொண்டவர்கள் அனைவரையுமே படைக்கு கொண்டுவந்தோம். புரவியூரத் தெரிந்தவர்கள் அனைவருமே வில்லேந்தினர். ஷத்ரியர்கள் அனைவருமே தேர் ஏறினர். வில்லேந்தும் பயிற்சி கொண்டவர்கள் சிலர். அல்லாதவர்களும் இங்குள்ளனர். இவர்களிடையே எந்த பொதுத்தன்மையும் இன்றில்லை” என்றான் பாகன்.

மேலும் அதை பேச விரும்பாமல் கையசைத்துவிட்டு சுபாகு தேரில் ஏறிக்கொண்டான். தேர் அவனுக்காக காத்து நின்றது. அவன் ஏறிக்கொண்டதும் புரவிகள் பொறுமையிழந்தவைபோல் முன்னும் பின்னும் உடலசைத்து குளம்புகளால் நிலத்தை தட்டின. அதற்கேற்ப தேர் பொறுமையிழப்பை தானும் காட்டியது. தேர்த்தட்டில் நின்று வில்லை எடுத்து அருகே ஊன்றியபோது அவ்வில்லுக்கும் தனக்குமிடையே எத்தனை தொலைவு என்பதை சுபாகு உணர்ந்தான்.

வில்லவனாக வேண்டுமென்ற கனவு இளமையிலேயே அவனை விட்டு அகன்றுசென்றது. தன் உடன்பிறந்தாரைப்போல் பெருமல்லராக வேண்டுமென்று பின்னர் விழைந்தான். பல முறை பயிற்சிக்களத்தில் தூக்கி நிலத்தில் அடிக்கப்பட்ட பின்னர் மெல்ல பின்னகர்ந்து போர்க்கலைகளை தவிர்க்கலானான்.

அதன் பின்னர் புரவியூர்தலில் மட்டுமே ஆர்வம் எஞ்சியிருந்தது. புரவியில் உடல் உருகி காற்றென ஆகி மறையும்படி விசையும் விரைவுமாக பாய்வதை அவன் விழைந்தான். அப்போது அடுக்கப்பட்ட எண்ணங்கள் கலைந்து தேவையற்ற அனைத்தும் பின்சிதறி தெறிக்க எஞ்சியவை கூர்கொண்டு ஒளி கொண்டு நின்றிருக்கும். தன் சிறந்த சொல்லாட்சிகளை எல்லாம் அவன் புரவிப்பாய்ச்சலுக்குப் பின்னரே அறிந்தான். மூச்சிளைக்க உடல் வியர்த்துவழிய முகம்மலர்ந்து நின்றிருக்கையில் அச்சொற்றொடர் அந்த விரைவில் எப்புள்ளியில் தன்னை வந்தடைந்தது என எண்ணி வியந்துகொள்வான். ஆயினும் வேட்டையை அவன் வெறுத்தான். அங்கே வேட்டையாடுபவனின் திசையை வேட்டை விலங்கு முடிவுசெய்கிறது. கொல்லப்பட்டு கிடக்கும் விலங்கு கொன்றவனை இறுதியாக வென்றுவிடுகிறது.

நூல்கற்றோன் எனும் அடையாளம் தனக்கு உகந்ததாக அமையக்கூடும் என்று எப்போது புரிந்துகொண்டோம் என்று அவனுக்கு தெரியவில்லை. என்றோ ஒருநாள் சூதரோ நிமித்திகரோ கூறிய எளிய கூற்றொன்றை உடன்பிறந்தார் சூழ்ந்த அவையில் அவன் கூறியபோது துரியோதனன் திகைத்து இரு கைகளையும் விரித்து அவனைப் பார்த்த பின்னர் எழுந்து வந்து அள்ளி நெஞ்சோடணைத்து, முதுகில் தன் பெருங்கையால் ஓங்கி அறைந்து நகைத்து “இவன் நம்மில் அறிஞன். நம்மில் ஓர் அறிஞன் எழுந்துளான்! நோக்குக, நம்மில் ஒரு அறிஞன்!” என்றான். உடன்பிறந்தவர்கள் அனைவரும் கைதூக்கி கூச்சலிட்டு நகைத்தனர். துச்சாதனன் பெருமிதம் ததும்பும் முகத்துடன் அவனை தோள் பற்றி இழுத்து தன் தசைதிரண்ட கைகளால் நெஞ்சோடு சேர்த்து இறுக அணைத்துக்கொண்டான்.

துரியோதனன் “சொல்க இளையோனே, இவர்கள் அறிய மீண்டும் சொல்க!” என்று கூவினான். “எளிய கருத்துதான்” என அவன் நாணி முகம்சிவக்க “எளிய கருத்தா? நீ அதை சொன்னபோது அது அரிதென்று மட்டுமே எனக்கு புரிந்தது. எங்களுக்குப் புரியும்படி மீளச் சொல் என்று கேட்கிறேன்” என்றான் துரியோதனன். கைகளைத் தட்டி “அனைவரும் செவிகொள்க… செவிகொள்க அனைவரும்… இளையோன் அரிய கருத்தை மீண்டும் சொல்லவிருக்கிறான்” என்றான். சுபாகு மேலும் நாணி “ஒரு படை அதன் விலங்குகளை எப்படி நடத்துகிறது என்பதிலுள்ளது அதன் பயிற்சி. விலங்குகளை வன்மையாக நடத்தும் படை முழுக்கப் பயிலாதது. முதற்கட்ட எழுச்சிக்குப் பின் எளிதில் உளம் தழைந்து பின்னடைவது” என்றான்.

“ஏன்?” என்று துச்சாதனன் கேட்டான். “அதையும் அவனே சொல்வான். நீ முந்தாதே” என்றான் துரியோதனன். “அவ்வளவுதான் அக்கருத்து” என்றான் சுபாகு. “ஏன்? அதை சொல்” என்று துரியோதனன் கேட்டான். “விலங்குகள் பிழை செய்தால் என்ன செய்வது?” என்றான் துர்மதன். “விலங்குகள் போலவே ஏவலரும் பிழைகள் செய்கிறார்கள்” என்றான் துச்சகன். “அனைவரும் பிழை செய்தால் அதன்பொருள் நீ பிழையறச் சொல்லவில்லை என்பதே” என்றான் துர்முகன். “அனைவருமே பிழைகள்தான் செய்கிறார்கள். பிழைகள் இணைந்து பெரும்பிழையென படை ஒழுகிச்செல்கிறது” என்று சுஜாதன் சொன்னபோது அனைவரும் திரும்பிப் பார்த்தனர். அவன் சொன்னதும் புரியாமல் திரும்பி சுபாகுவிடம் “ஏன் விலங்குகளை அன்பாக நடத்தவேண்டும்?” என்று துச்சலன் கேட்டான். “இரு, அவனே சொல்வான். அதன்படி நாம் நடந்துகொள்வோம்…” என்றான் துச்சாதனன்.

அவர்களுக்கு தான் சொல்வது சற்றும் புரியவில்லை என்று உணர்ந்து சுபாகு சலிப்படைந்தான். ஆனால் அதை கடந்துசென்று “நான் இவ்வாறு நினைக்கிறேன். பிழையென்றும் இருக்கலாம். விலங்குகளிடமும் பொருட்களிடமும் வன்மையை காட்டுவதென்பது நம்முள் திகழும் வன்மை அறியாமல் வெளிப்படுவதே. பயிலா உள்ளம்தான் அவ்வாறு இலக்கில்லாமல் வன்மையை வெளிக்காட்டும். பயிற்சி என்பது தேவையானபோது தேவையான இடத்தில் தேவையான அளவுக்கு மட்டுமே வன்மையை காட்டுவது. தேவையில்லாமல் வெளிப்படும் வன்மை வீணாகும் உள ஆற்றலே. அடக்காமல், மறைக்காமல், தவிர்க்காமல் உள்ளத்தில் வன்மையை எல்லைகட்டி நிறுத்துபவனையே வீரன் என்கிறோம்…” என்றான்.

“எனில் நம்மில் எவர் வீரன்?” என்று துச்சகன் கேட்டான். அவனால் ஒரு சொல்லையும் புரிந்துகொள்ள முடியவில்லை என எண்ணி சுபாகு பேசாமல் நின்றான். “இனி எவரும் விலங்குகள்மேல் வன்மையை செலுத்தலாகாது. இது என் ஆணை” என்றான் துச்சாதனன். “ஆம், அதை அவன் சொன்னபோதே நான் முடிவுசெய்துவிட்டேன். அந்த இழிவுயிர்கள் என்ன செய்தாலும் பக்கத்திலுள்ள சுவரில் தலையை முட்டிக்கொள்வேனே ஒழிய அடிக்கவோ துன்புறுத்தவோ மாட்டேன்” என்றான் துர்மதன். சுபாகு சலிப்பைக் கடந்து புன்னகையை சென்றடைந்தான். ஒருகணத்தில் அங்கிருந்த நூற்றுவரையும் உள்ளத்தால் அள்ளி ஆரத்தழுவிக்கொண்டான்.

துரியோதனன் “அடக்காமல், மறைக்காமல், தவிர்க்காமல் வன்மையை என்ன செய்ய இயலும், இளையோனே?” என்றான். அவன் முழுக்க உள்வாங்கிக்கொண்டதை உணர்ந்த சுபாகு திடுக்கிட்டான். மூத்தவர் நூற்றுவரில் ஒருவரல்ல என எப்போதுமே அவனுக்கு தோன்றிக்கொண்டிருந்தது. அவர் அவர்களில் ஒருவராக இயல்பாக தன்னை ஆக்கிக்கொள்கிறார். வேறு எங்கிருந்தோ அவர்களை கனிந்து நோக்கிக்கொண்டும் இருக்கிறார். சற்றுமுன் நானும் அவ்வாறே அவர்களை நோக்கினேன். அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன். “மூத்தவரே, நஞ்சை அமுதாக்கும் முறையையே கல்வி என்றும் ஊழ்கம் என்றும் சொல்கிறார்கள்” என்று சுபாகு சொன்னான். துரியோதனன் “ஆம்” என்றான். “படைக்கலப்பயிற்சி கலை என ஆவது அவ்வாறுதான். போர் காவியமாவது அதைப்போலவே” என்றான் சுபாகு. துரியோதனன் பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்து “அது அனைவருக்கும் இயல்வதா எனத் தெரியவில்லை. ஆனால் அதுவே கல்வியும் தவமும் என தெளிகிறது” என்றான்.

அன்று திரும்பிச்செல்கையில் அவன் உள்ளம் மலர்ந்து உடலில் அதை ஒரு மதர்ப்பாக உணர்ந்தான். எங்காவது புரவியில் விரையவேண்டும் என்று, பெண்ணுடன் உடல்கலக்கவேண்டும் என்று தினவெழுந்தது. இடைநாழியில் அவன் குண்டாசியை கண்டான். அவன் “நன்று மூத்தவரே, நூல்நவிலத் தொடங்கிவிட்டீர்கள்” என்றான். அவன் மது அருந்தியிருந்தான். “முதிரா அகவையிலேயே மது எல்லைமீறுகிறது உனக்கு” என்றான் சுபாகு. “ஆம், நீங்கள் கல்வியை நான் மதுவை தெரிவுசெய்துள்ளோம்” என்ற குண்டாசி. “நீங்கள் பேசுவதை கேட்டேன். நான் வெளியே நின்றிருந்தேன். அவைபுகுந்து பேச என்னால் இயலாது” என்றான். “நன்கு சொன்னீர்கள். துரோணர் கல்விச்சாலையில் சொன்னவை வேறு சொற்களில் எழுந்தது போலிருந்தது.”

சுபாகு சீற்றம் கொண்டான். “எங்களை சிறுமைசெய்வதற்கான உன் திறனை நெடுநாட்களாகவே பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்றான். குண்டாசி “என்னை சிறுமைசெய்ய எனக்கு வேறென்ன வழி?” என்றான். “நீங்கள் சொன்னது உயரிய கருத்து. கூரியது. ஆனால் கூரிய கருத்துக்கள் கூரிய அவைகளில் மட்டுமே பயன்தருபவை. அவற்றைக்கொண்டு படைநடத்த இயலாது. போர் வெல்ல இயலாது. ஏனென்றால்… ஏனென்றால்…” அவன் சொல் திக்கும்போது முதிராச் சிறுவனாக ஆவதை சுபாகு கண்டிருந்தான். அதைக் கண்டதுமே அவன் உள்ளம் சினமடங்கி நெகிழ்ந்தது. “ஏனென்றால் பொற்கொல்லனின் பணிக்கலங்களை போருக்கு கொண்டுசெல்ல இயலாது.”

முகம் மலர்ந்து குண்டாசி சொன்னான் “அரிய ஒப்புமை! நானும் இப்போது மெய்யறிந்தோரைப்போல் எண்ணம் ஓட்டுகிறேன். நான் சான்றோன் ஆகிவிட்டேன். இனி மெல்லமெல்ல வளர்ந்து சூதனாகவும் ஆகக்கூடும். நல்லூழ்தான்!” சுபாகு சிரித்து “நன்று, நான் செல்லவேண்டும். பணிகள் நிறைந்துள்ளன” என்றான். “மூத்தவரே, இதைமட்டும் கேட்டுவிட்டுச் செல்க! நுண்ணிய கருத்துக்களின் ஆற்றல் என்னவென்றால் அவை நுண்ணிய கருத்துக்களை திறமையாக எதிர்கொள்ளும் என்பதே. ஆனால் போர்க்களத்தில் வன்மையான கருத்துக்களே படைக்கலங்களாகி வருகின்றன. அவற்றை நுண்மையான கருத்துக்கள் எதிர்கொள்ள நேர்ந்தால் ஒற்றை அடியிலேயே முனைமடிந்து நசுங்கிவிடும்…” சுபாகு அவன் தோளில் தட்டிவிட்டு முன்னால் சென்றான்.

குண்டாசி “இத்தனை எண்ணங்கள் செறிந்த உங்கள் அரிய மண்டையை ஒரு எடைமிக்க கதை வந்து அறைந்தால் அக்கருத்துக்கள் என்ன ஆகும்? அவையும் எல்லா கருத்துக்களையும்போல உடைந்து வெண்கூழாக மண்ணில் சிதறிக்கிடக்கும்…” என்றான். சுபாகு அவனை திரும்பிப்பார்க்காமல் நடந்தான். குண்டாசி கூவியபடி பின்னால் வந்தான். “நோக்குக மூத்தவரே, கதை என்பது என்ன? அது ஒரு மண்டை. இரும்பு மண்டை. அதன் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? அது உள்ளீடற்றது என்பதனால்தான். அதற்கு உள்ளேயும் இரும்புதான். மானுட மண்டைபோல் வெளியே முகம் ஒன்று வைத்து உள்ளே அகம் வேறொன்று வைத்து விளையாடுவது அல்ல கதை. மண்டையை உடைப்பதற்கென்றே இப்படி ஒரு படைக்கலனை கண்டடைந்தவர்கள் மானுடரை நன்கறிந்தவர்கள். அல்லது மண்டையை எங்கேனும் முட்டி உடைக்க விழைந்தவர்கள்.”

அவன் மூச்சிரைக்க நின்றுவிட்டான். “நான் ஒரு படைக்கலம் கண்டுபிடிப்பேன். அது மண்டைகளை பின்னாலிருந்து உடைக்கும். முகம் உடைபடக்கூடாது. பின்பக்கத்தை மட்டும் திறந்துவிடும். உள்ளிருப்பவை பின்பக்க வாயிலினூடாக ஒழுகிச்செல்ல முன்பக்கம் முகம் என்னவாக இருக்கும்? தெரியுமா, என்னவாக இருக்கும்? சொல்கிறேன், நில்லுங்கள். அது ஆழ்ந்த ஊழ்கத்திலிருக்கும். ஆம், முனிவரின் முகம்போல் தெளிந்திருக்கும், மனிதர்களை விடுதலைசெய்ய சிறந்த வழி என்பது அதுவே. கபாலமோக்ஷம். ஆகவேதான் யோகியரை மண்டையை உடைத்து சமாதியில் அமரச்செய்கிறார்கள். மண்டை உடையாமல் எவருக்கும் விடுதலை இல்லை… ஆகவே” அவன் குரலை அவன் நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தான். தன் மஞ்சத்தறைக்கு வந்த பின்னரும்.

அன்று மஞ்சத்தில் படுத்துக்கொண்டபோது சொற்கள் குழம்பி ஒன்றோடொன்று முட்டிச் சலித்து புரண்டு படுத்தான். அக்கணம் ஒன்றை உணர்ந்தான், அவன் முகம் மலர்ந்திருந்தது. அவன் தன்னை கண்டுகொண்டிருந்தான். கருத்துக்கள் மிக எளியவை. பெரும்பாலும் ஓரிரு மையங்கள் கொண்டவை. அவற்றை எடுத்து பயன்படுத்துவதையே அறிவுச்செயல்பாடு என்கிறார்கள். களஞ்சியத்திலிருந்து பொருட்களைப் பெற்று அவற்றை சமைத்து அன்னமாக்குதல். அமைச்சர்கள் அதை செய்கிறார்கள். ஆனால் அதை தானும் செய்யாத அரசன் அமைச்சர்களின் நூலாட்டுபாவை என்று ஆவான். கௌரவர்களில் மூத்தவர் அனைத்தையும் கடந்துசென்று அறிபவர். அதை அமைச்சர்கள் அறிவார்கள். அவருக்கு உரிய சொல்லெடுத்து அளிப்பதே தன் பணி.

அதன் பின் உடன்பிறந்தார் அவையில் நூல்குறிப்பை எடுத்துக் கூறுவதற்கென்றே அவன் பயிலத்தொடங்கினான். பயிலும்தோறும் நூல்களில் ஆர்வம் மிகுந்தது. படைசூழ்கை நூல்களை முதலில் விரும்பிக் கற்றான். ஆனால் படைசூழ்கைகளில் விரைவிலேயே அவன் சுவையிழந்தான். படைசூழ்கைகள் மெய்யாகவே வகுக்கப்படுகின்றனவா, எப்போர்க்களத்திலாவது அவை பயனளிக்கின்றனவா என்ற ஐயம் அவனுக்கு எழுந்தது. போர் ஒழிந்த நாள் பாரதவர்ஷத்தில் இல்லை, என்றாலும் ஒவ்வொரு அரசருக்கும் ஓரிரு ஆண்டுகளுக்கொருமுறை மட்டுமே களம்புகும் வாய்ப்பு அமைகிறது. அவையும் பெரும்பாலும் விரைந்து தாக்கி மீளும் கொள்ளைகளும் ஊடுருவல்களும் மட்டுமே. விரிநிலத்தில் படை நிரத்தி, சூழ்கை அமைத்து, நெறி சமைத்து நின்று பொருதி அந்தியில் மீளும் போர் என்பது பாரதவர்ஷத்தில் முன்பெங்கோ நிகழ்ந்ததுபோல், கதைகளில் எழுந்ததுபோல் அத்தனை அகன்றிருந்தது. ஆகவே எஞ்சிய நேரமெல்லாம் போரை எண்ணி எண்ணி கற்பனையில் சூழ்கைகளை வகுத்து விளையாடிக் கொண்டிருந்தார்கள் என்று தோன்றியது.

அச்சூழ்கைகளையே பின்னர் நாற்களச் சூழ்கைகளாக மாற்றிக்கொண்டனர். மேலும் மேலும் குறுக்கி சிறிய களத்திற்குள் பொருத்தி அல்லும் பகலும் அமர்ந்தாடினர். எதனாலோ அவனுக்கு நாற்களம் சலிப்பை அளித்தது. அதில் எவ்வகையிலும் தன்னைக் கண்டடைதல் இல்லை. அதில் சொற்களே இல்லை. சொற்கள் குறுகி சில அடையாளங்களாகி பொருட்களாகி களத்தில் பரவியிருக்கின்றன. அவன் போரென முதலில் பார்த்தது சகுனியும் யுதிஷ்டிரனும் அமர்ந்து ஆடிய நாற்களமாடலைத்தான். அங்கு ஒவ்வொரு போர்ச்சூழ்கையும் ஆட்டவடிவு கொண்டெழுவதைக் கண்டான். போர்க்களத்தில் படைகளை நிரத்தி சூழ்கையை அமைத்து அமைத்து அறிந்து பின்னர் சூழ்கையை மட்டும் அவற்றிலிருந்து எடுத்து படைகளை தவிர்த்துவிட்டு கருக்களென அவற்றை நிரத்தி களம்பரப்பி விளையாடினர். வென்றனர் தோற்றனர். ஊழை ஒவ்வொருநாளும் தங்கள் முன் வந்து அமரச்செய்தனர். காடுகளை விதைகளாக்கி உள்ளங்கைக்குள் வைத்திருந்தனர்.

நாற்களத்திலன்றி சூழ்கைகளுக்கு பொருளில்லை என்று உணர்ந்த பின்னர் அவன் ஆட்சிநெறிகளை பயிலத் தொடங்கினான். அது அவனை முற்றாக இழுத்து உள்ளே கொண்டுசென்றது. மானுடர் கட்டற்ற விழைவுகளாலும், மூண்டெழும் சினத்தாலும், வெளியே புலப்படாத அச்சங்களாலும் ஆட்டுவிக்கப்படுபவர்கள். அம்மூன்றையும் சற்றும் கருத்தில் கொள்ளாது அவர்களை பெருந்திரளென மட்டுமே கண்டு வகுக்கப்பட்டவை அறநெறிகள். அவ்வாறன்றி வேறெவ்வகையிலும் நெறிகளை வகுக்க இயலாது. ஏனெனில் மானுடரை திரளென ஆக்கும் பொருட்டும் அத்திரளை ஆளும் பொருட்டும் மட்டுமே நெறிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆகவே நெறிகளுக்கும் அடிப்படை உணர்வுகளுக்கும் இடையே ஓயாத பூசலிருந்தது. விழைவுகளுக்கும் உச்சங்களுக்கும் சினங்களுக்குமிடையே இருந்த பூசலுக்குமேல் அப்பெரும்பூசல் அமைந்திருந்தது. நெறியவை என்பது அப்பூசல்களுக்குள் பூசல்களுக்குள் பூசல் என நிகழும் இயக்கத்தின் நடுவே ஒரு நடைமுறைப்புள்ளியை கண்டடைவது. நெறிக்கான எந்தத் தீர்வும் அத்தருணத்திற்குரியது மட்டுமே. ஏனென்றால் நெறியென்பதே அத்தருணத்திற்காகத்தான். அதை உணர்ந்தபின் பதற்றம் கொள்ளாமல் அவையமர இயன்றது.

அஸ்தினபுரியில் பதினைந்து ஆண்டு காலம் அவை அமர்ந்து நெறி நடத்தியவன் அவனே. துரியோதனன் ஒவ்வொரு முறையும் அரியணையில் அமர்ந்து நெறியவையை தொடங்கி வைத்து குடிகளின் கூற்றுகளை செவிகொண்ட பின்னர் “இளையோனே, இதை நீ நடத்து. இனி உன் சொல் இங்கு திகழ்க!” என்று சொல்லி எழுந்து கைகூப்பி “என் இளையோன் என் வடிவாக இங்கிருந்து உங்களுக்கு முறை செய்வான். அவனைவிடச் சிறந்த சொல்லை அஸ்தினபுரியில் எந்தை மட்டுமே எடுக்க இயலும்” என்றபின் அவையை விட்டு நீங்கினான்.

அரியணைக்கு இணையாக போடப்பட்ட சிறிய பீடத்தில் அமர்ந்து சுபாகு நெறியவையை நடத்தினான். அங்கிருந்து அவன் ஒவ்வொருநாளும் கற்றுக்கொண்டான். ஒவ்வொருவரும் தங்கள் உளக்குறைகளை சொல்லும்போது தங்கள் உறவுகளால், சுற்றத்தால், புவியிலுள்ள மானுடரால், தெய்வங்களால் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதாகவே கூறினார்கள். கைவிடப்பட்டவர்களின் கண்ணீர் எனவே எல்லா முறைப்பாடுகளும் இருந்தன. உலகனைத்தையும் எதிர்தரப்பில் நிறுத்தி தன்னந்தனியாக மறுதரப்பில் நின்று விழிநீர் உகுத்தனர். நெறிநின்று அறம் புரந்த தனக்கு மீறியவர்களால் தீங்கிழைக்கப்பட்டதாக கூறியவர்கள் பெரும்பிழை செய்தவர்களாகவும் பழிகொண்டவர்களாகவும் தெளிந்து வந்தனர்.

முதல் சில ஆண்டுகளில் அவர்களின் நடிப்பு அது என்று எண்ணி அவன் சினம் கொண்டதுண்டு. பின்னர் உணர்ந்தான், நடிப்புகள் உச்சம் அடைவது நடிப்பவன் அதை நம்பும்போதுதான் என. ஒரு கூற்று முழுமையாக முன்வைக்கப்பட்டு இறுதிச் சொற்கள் மழை நின்றபின் சாரலென முன்பின் தொடர்பிலாது உதிர, முறைப்பாடு விடுத்தவன் உளம் பின்னடையத் தொடங்குகையில் அவன் உடல்மொழியை கூர்ந்து நோக்கிக்கொண்டிருப்பான் சுபாகு. தன்னைத் தொகுத்து விசையுடன் முன்வைத்தவன் அனைத்தையும் சொல்லி முடித்ததுமே தன்னை அறியாமல் மறு எல்லைக்குச் சென்று தன் உணர்வுகளையும் சொற்களையும் ஐயம் கொள்வதை அவன் முகமே காட்டும். ஊசல் மறு எல்லைக்குச் சென்றுவிடும். அக்கணத்தில் அவன் சொன்னவற்றின் மெய்மையும் பெறுமதியும் துலங்கி எழும். அங்கிருந்து முடிவுகளுக்குச் செல்வது மிக மிக எளிது.

சுபாகு நெறியவையில் பகல் முழுக்க கழித்தான். பெரும்பாலான நாட்களின் அந்தியிலும் பின்னிரவிலும்கூட நெறியவைகளை நடத்தினான். ‘அஸ்தினபுரியில் எட்டுமுறை சீர்த்தூக்கி சொல்லப்படும் அறச்சொல்லே அரசாள்கிறது’ என்னும் கூற்று அவனால் அங்கு நிறுவப்பட்டது. நெறிசூழ் அவையில் அமரும்தோறும் அவன் பூசல்களில், போர்களில் ஆர்வமிழந்தான். படைக்கலங்களை வெறுத்தான். மற்போரிடும் உடல்களை காண்கையில் ஏதோ ஒரு தருணத்தில் உளம் ஒவ்வாது விழிதிருப்பி பின்னடைந்தான். தெய்வங்களுக்கு முன் இம்மானுடர் உடலை உந்தி உந்தி முன்வைக்கிறார்கள். உடலே நான் என கூவுகிறார்கள். ஆம் என்கிறது பொறுமையிழந்த தெய்வம். பலிகொள்ளத் தொடங்குகிறது. போரென்றும் பிணியென்றும் வற்கடம் என்றும் வந்துசூழ்கிறது.

“சொற்களால் மானுடர் உயிர் வாழ்கிறார்கள். உடலென்பதும் ஒரு சொல்லே” என்று ஒருமுறை அவன் துரியோதனனிடம் சொன்னான். அவன் சொல்வதை புரிந்துகொள்ளாமல் வியப்பால் விரிந்த விழிகளுடன் நோக்கிய துரியோதனன் உரக்க நகைத்து “அரிய சொல்! இளையோரே கேளுங்கள்! இவன் மீண்டும் ஒரு அரிய கூற்றை முன் வைத்திருக்கிறான்! நாம் எண்ணவேண்டியது! சீர் தூக்கி தெளிய வேண்டியது!” என்றான். ஊன்தடியை கடித்து இழுத்து மென்றபடி “ஆம், மெய்மையின் கூற்று” என்று துர்மதன் சொன்னான். துச்சகன் உரக்க “ஆனால் நாம் போரிட்டதை எண்ணி சீர்தூக்கி முடிவெடுக்கும் பொறுப்பை அவனிடமே விட்டுவிடலாம். இங்கு மதுக்குடங்களும் ஊன்கலங்களும் நமக்காகக் காத்திருக்கின்றன” என்றான்.

தொடைகளில் அறைந்து வெடித்து நகைத்த துரியோதனன் “ஆம், அதுவே சிறந்த வழி. இளையோனே, உனது இக்கூற்றை நீயே மேற்கொண்டு எண்ணி இறுதியை சென்றடைக! அதுவே எங்கள் முடிவென்று ஆகுக!” என்றான். உரக்க நகைத்து கொந்தளித்தது உடன்பிறந்தார் நிறைந்த அஸ்தினபுரியின் அரண்மனை உள்ளவை. “நாம் இவனையே நமது நாவென அமைத்துக்கொள்ளலாம்” என்றான் துச்சகன். “ஆனால் இவனுக்கு சுவை தெரியாதே? சொற்சுவை அறிந்தவன் ஊன்சுவையை அறிவதில்லை” என்றான் துர்மதன். அவை சிரிப்பால் அதிர்ந்ததைக் கண்டு கர்ணன் உள்ளே வந்து “என்ன நிகழ்கிறது?” என்றான். “ஒன்றுமில்லை மூத்தவரே, யானையின் மிக மென்மையான உறுப்பு எது என சொல்லாடினோம். நாவு என இவன் சொன்னான்… அதை சுட்டுத்தரச் சொன்னோம்” என்றான் துச்சலன். மீண்டும் நகைப்பு.

கர்ணன் “உங்கள் நகைப்பை புரிந்துகொண்டால் நான் பிரம்மத்தை புரிந்துகொண்டவன் ஆவேன்” என்றான். “கள்ளமற்றோர் புரிந்துகொள்ள இயல்வதே இரண்டும்” என்றான் துரியோதனன். “யானையின் நாக்கு!” என கள்மயக்கில் துச்சலன் கைதூக்கினான். “மிக மென்மையானது… ஆம்.” அவன் கை காற்றில் அசைந்தது. “ஏன் என்றால் யானை பேசுவதில்லை…” அவனே குழப்பம் அடைந்து சிவந்த கண்களால் நோக்கி “ஆம், ஆனால் யானை தன் பெருவயிற்றால் நேரடியாக பேசுகிறது” என்றான். “அவன் மேலும் பெரிய கொள்கைகளை நோக்கி செல்கிறான். அவனுக்கு ஒரு குடம் கள்ளை ஊற்று” என்றான் துரியோதனன். “அதைவிட இது எளிது” என துச்சாதனன் ஓங்கி அவன் மண்டையை அறைந்தான். “ஆனால் நாக்கு…” என்னும் சொற்றொடர் அறுந்து துச்சலன் கீழே விழுந்தான். அவை சிரிப்பில் கொந்தளித்தது.

சுபாகு விழிகளிலிருந்து நீர் பெருக தேர்த்தட்டில் நின்றான். எங்கு சென்றுவந்தேன்? எவ்வுலகில் வாழ்ந்து மீண்டேன்? அவன் உள்ளம் விம்மிக்கொண்டிருந்தது. அன்று தான் களம் மீளப் போவதில்லை. நான் ஏற்கெனவே இறந்துவிட்டிருக்கிறேன். இன்று மாலை என் மூத்தவர் தன் குடிலில் தனித்திருப்பார். நினைவறிந்த நாள் முதல் தனித்திருக்காதவர். “எந்தையே, என் இறையே, இன்றிரவு என் உடன்பிறந்தாருடன் நுண்வடிவில் உங்களை வந்தடைவேன். உங்களை இருளென சூழ்ந்திருப்போம், தன்னந்தனியனாக நாளை இக்களத்தில் எழுவீர்கள். ஒருவேளை இந்த மண்ணில் தனித்து உடல் உடைந்து இறந்துகிடப்பதுதான் உங்கள் ஊழ் போலும். அதன் பொருட்டுத்தான் நூறு தலைகொண்டவராக, இருநூறு கைகள் எழுந்தவராக உங்களை மூதாதையர் நிலத்தில் வாழவைத்தனர் போலும்.” அவன் விழிநீர் பெருக களமுகப்பை நோக்கியபடி நின்றான்.

முந்தைய கட்டுரைஇடதுசாரிகள் கேரளத்தில் நீடிப்பார்களா?
அடுத்த கட்டுரைகுமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா, சென்ற ஆண்டுகளில்…