பான்ஸாய்க் கடல்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
ச. துரையின் ‘’தண்ணீர்தொட்டிக்கடல்’’ கவிதையும் தங்களின் பான்ஸாய் மரங்கள் குறித்த பதிவையும் வாசித்தேன். இதை இன்று வாசிக்கும் வரையிலும் பான்ஸாய் வளர்ப்பு குறித்தும் அம்மரங்களைக்குறித்தும் எனக்கும் ஒவ்வாமை இருந்தது. பான்ஸாய் குறித்த வகுப்புக்களிலும் பயிலரங்குகளிலும் அம்மரங்களை வளர்க்கும் நுட்பங்களை சொல்லத்துவங்கும் முன்பே, ஒரு தாவரவியலாளராக இம்முறையில் எனக்கு துளியும் விருப்பமில்லை என்பதையும் இயற்கைக்குக்கு மாறானது இவ்வளர்ப்பு முறை என்றும் சொல்லிவிடுவேன். இலைகளை பரப்பி, கிளை விரித்து மேலுயர்ந்து வரவேண்டிய மரமொன்றை, வேர்களையும் தண்டுகளையும் வளர்நுனிகளையும் தொடர்ந்து கத்தரித்து, மிகக்குறைவாக உணவும் நீரும் அளித்து, ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்த நிமிஷக்கணக்கில் மட்டும் சூரிய ஒளியில் வைத்து, கிளைகளில் கம்பிகட்டி, முறுக்கி, இழுத்து, பிணைத்து என்று இயற்கையான வளர்ச்சியை பலவிதங்களில் கட்டுப்படுத்தி, கஷ்டப்படுத்தி, அழகாக மேசைமீது வைத்துக்கொள்கிறோம் என்னும் அபிப்பிராயம் மட்டுமே இருந்தது. ஜப்பானியர்கள் கொஞ்சம் குள்ளமென்பதால் அவர்களின் மரங்களையும் குள்ளமாக வளர்க்க விரும்புகிறார்கள் என்றும் நினைத்திருக்கிறேன்,
பற்பல வடிவங்களில், பலநூறாண்டுகள் வளர்ந்த, பழங்கள் செறிந்த பான்ஸாய் மரங்கள், கொள்ளை அழகாக இருப்பினும், எனெக்கென்னவோ அவற்றை பார்த்தால் மகிழ்ச்சியே ஏற்பட்டதில்லை எப்போதும்.
எல்லா விதமான தாவரங்களையும் வீட்டுத்தோட்டத்தில் வளர்ந்தாலும் பான்ஸாயை இதுவரை நான் கல்லூரியைத்தவிர வேறெங்கும் வளர்க்க முயற்சித்ததில்லை.
ஆனால், ’குறுகும்போது கூர்கொள்வது ஞானம்’
எவ்வளவு வளரலாம் என அந்த மரத்துக்கு தெரிவிக்கவேண்டும். ஒவ்வொருநாளும். மெல்லமெல்ல மரம் அதைப்புரிந்துகொள்கிறது. அந்த சின்னஞ்சிறு வான்வெளிக்குள் , வான் எனும் குமிழிக்குள் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது/
நோக்குகையில் நாம் சிறிதாகி அதுபெரிதாகத் தொடங்குகிறது. எத்தனைச் சிறிய இடத்தில் நிகழ்ந்தாலும் அரசமரம் அரசமரமேதான். இப்புவியே பிரம்மம் அல்லது மகாதம்மம் தன்னை நிகழ்த்திக்கொண்ட மிகச்சிறிய வெளி அல்லவா? துளிகளெங்கும் விரிவது கடலே
என்று நீங்கள் சொல்லியிருப்பதை வாசித்தபின்னர் பான்ஸாய் வளர்ப்பை இப்படி ஒரு அழகான கோணத்திலும் பார்க்கலாமென்று அறிந்துகொண்டேன். ஆம் நோக்க நோக்க அந்த மீச்சசிறு வடிவில் மரத்தின் வயதும் வயதுக்கேற்ற பிரம்மாண்டமும் தெரிகின்றது. மிகச்சிறிய பாட்டில் மூடி அளவிலான தட்டுக்களிலும் கூட வளர்க்கப்படும் இவற்றை மீச்சிறு மரங்கள் என்று சொல்வதும் மிகப்பொருத்தமாக இருக்கின்றது
Once a teacher ,always a learner என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இன்று உங்களிடமிருந்து ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன்.
இனி பான்ஸாய் மரங்களும் வீட்டில் வளரும். நன்றி
அன்புடன்
லோகமாதேவி