‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58

ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த சொல்லற்ற வஞ்சத்துடன், தெய்வ ஆணைகளுக்குரிய மாற்றமின்மையுடன், பருப்பொருட்கள் இலக்குகொள்கையில் அடையும் பிசிறின்மையுடன், காலம் முனைகொள்கையில் எழும் விசையுடன். பாண்டவப் படையினர் பின்னால் சென்று அர்ஜுனனையும் இரு மைந்தரையும் தனித்து விட்டனர். கௌரவப் படையினர் கர்ணனையும் மைந்தரையும் விட்டு பின்னகர்ந்தனர். இருவரும் தாங்களே பலவாகி பெருகி அம்புகளென ஆகி விண்ணிலெழுந்து மோதிக்கொண்டனர். வெடித்து அனலுமிழ்ந்தனர். சுழித்து குருதிச்சகதிப் புழுதிக்குப்பையை அள்ளி சுழற்றிவீசினர். உறுமியபடி சென்று ஒவ்வொன்றையும் பற்றி உலுக்கினர். ஆற்றாது திரும்பி வந்தனர். மீண்டும் சீறி எழுந்தனர்.

ஒவ்வொரு அம்பும் ஓர் அகச்சொல். ஒரு சொல்லா உணர்வு. மானஸாஸ்திரம் கர்ணனை இரவுதோறும் சூழ்ந்த சொற்களை தன்னிலேற்றிக்கொண்டிருந்தது. செல்லும் வழியெங்கும் வெடித்து அனல்பாதையொன்றை காற்றில் சமைத்தது. அவன் சொல்லிச் சொல்லி அகற்றியவை. கனவில் கண்டு அதிர்ந்தவை. நினைவுகூரக் கசந்தவை. தன்னியல்பாக எழுகையில் தலையிலறைந்து கண்ணீர்விட்டவை. மறந்துவிட்டவை. மறதியிலிருந்து புளித்து நஞ்சென்றானவை. நாவிலெழும் சொற்களில் ஒட்டிக்கொண்டு எழுந்தவை. அவைகளில் நின்று கனன்றவை. அவனை திகைப்பூட்டி திரும்பி நோக்கி நகைத்தவை. அஞ்சி ஓடச்செய்தவை. அவன் சென்றணைந்த இருளுக்குள் உடனிருந்தவை. செவிகளில் முணுமுணுத்தவை. “அகலோம்” என்றவை. “கொண்டே செல்வோம்” என்றவை. “நீ நாங்களே” என்றவை. “நீயே நாங்கள்” என வீறிட்டவை.

அர்ஜுனனைச் சூழ்ந்து தீப்பறக்கச் செய்தது அது. பல்லாயிரம் விண்மீன்பெருக்கென அவனை வளைத்துக்கொண்டது. அர்ஜுனன் அவற்றை நோக்கி தன் அம்புகளால் அறைந்து கை சலித்து உளம் சோர்ந்தபோது இளைய யாதவர் “போரிட வேண்டாம். அவற்றை நோக்கவே வேண்டியதில்லை. அவை இல்லையென்றே எண்ணுக!” என்றார். அர்ஜுனன் வில் தாழ்த்தியதுமே அவை இலக்கழிந்து நிலம் பொழியலாயின. ஒவ்வொன்றும் ஒன்றை உரைத்து உதிர்வதாக அர்ஜுனன் எண்ணினான். அனைத்தும் ஒற்றைச்சொல்லே என பின்னர் கண்டான். ஒற்றைச்சொல்லின் ஒரு கோடி உச்சரிப்புகள். ஊழ்கநுண்சொல்லா அது? நாம் சென்று பற்றிக்கொள்வது ஊழ்கநுண்சொல். நம்மை வந்து பற்றிக்கொள்ளும் சொல் தெய்வங்களின் தீச்சொல் போலும்.

மானஸாஸ்திரம் ஒளியிருண்டது. நீலமாகியது. சாம்பலாகியது. இருளென்றாகியது. அவனை சுற்றிச்சுழன்று களத்தில் அலைந்தது. அத்தனை பருப்பொருட்கள் மீதும் விழியற்ற யானை எனச் சென்று மோதியது. அனைத்தையும் முட்டிமுட்டி உலுக்கியது. மறுமொழி ஒன்றை தேடுவதுபோல. பின்னர் சலித்து நிலத்திலமைந்தது. எடைமிக்க கருநாகம் என ஊர்ந்து நெளிந்தது. படம் விரித்து அறைந்தது. சீறி மீண்டும் எழுந்தது. வளைந்து கொந்தளித்தபடி கர்ணனையே சென்றடைந்தது. அவன் தேரை அறைந்து உலுக்கியது. அவன் தலையை சுற்றிக் கவ்வியது. உடலைப் பற்றி கைகளை செயலிழக்கச் செய்தது. அவன் ஒற்றைச் சொல்லால் அதை சிறிதாக்கினான். தன் தலையணியில் ஒரு கரிய அருமணி என அதை அணிந்துகொண்டான். துயர்கொண்ட ஒற்றைவிழி என அது அங்கிருந்தது.

கைசுழற்றி அவன் எடுத்துத் தொடுத்த ஸ்வப்னாஸ்திரம் கர்ணன் கொண்ட விழைவுகளை சூடியிருந்தது. அது பொன்னென மின்னும் உடல்கொண்டிருந்தது. சுழன்று திரும்புகையில் அதன் பொன்னரிந்த மடிப்புகளின் ஒளி நூறுநூறு அம்புகளென ஆகி அதை சூழ்ந்தது. அவன் அதை எடுக்கையில் முதிர்ந்தவனாகத் தெரிந்தான். தொடுக்கையில் இளையவன் ஆனான். விடுகையில் அகவை குறைந்தான். எழுந்த அம்புக்கு அப்பால் நின்று விழிமலர்ந்து சிரித்து மகிழும் சிறுவனை அர்ஜுனன் கண்டான். அவனுடைய அம்புகள் எவையும் அதை தொடவில்லை. “அதை சிரித்தபடி எதிர்கொள்க… அஞ்சாதே” என்று இளைய யாதவர் சொன்னார். “அது முதன்முதலாக மானுடரைக் கண்டு விளையாடவரும் வேங்கைக்குருளை. அதற்கு துளிக்குருதியின் மணம் கிடைப்பதுவரை அது குழந்தை. அதை நோக்கி புன்னகை செய். அதை குழவியென்றே நினை. ஒருபோதும் அதன் ஒரு நகக்கீறலும் உன்மேல் விழ இடமளிக்காதே.”

சித்தாஸ்திரம் இடித்தொடர்களை எழுப்பியது. வானம் இருண்டு கருமைகொண்டு வளைந்த தகடுபோலாகியது. அதில் மின்னல்கள் நெளிந்தன. நூறுநூறு முகங்கள் தெளிந்து தெளிந்து அணைந்தன. உறுமல்கள். ஓலங்கள். விந்தைமொழியிலமைந்த கூக்குரல்கள். இருண்ட சிறகுகளுடன் விழிகள் மின்ன பறந்தன கழுகுகள். நெளிந்து நெளிந்து நிறைந்தன நாகங்கள். விழிகளெரியும் பேயுருவங்கள் வெண்பற்களைக் காட்டி நகைத்தன. சிறகுகள் எழுந்த, கைகள் பெருகிய, நச்சுக்கொடுக்குகள் கொண்ட பாதாளமூர்த்திகள் பறந்தணைந்தன. “அஞ்சாதே. ஒருகணமும் அஞ்சாதே. அதில் உன்னை பார். உன்னுருவை அங்கே கண்டால் அதில் உன்னை பொருத்திக்கொள்.”

அர்ஜுனன் விழிகளை ஓட்டி அந்தக் கொடிய வெளியை நோக்கினான். கோள்கள் சுழலும் கடுவெளி. உருகிமறைந்தன உலகுகள். தெளிந்தெழுந்தன புதிய உலகங்கள். இருண்ட நீர்கள். எல்லையற்ற இருளில் எழுந்து எழுந்து அமைந்தன எரிவிண்மீன்கள். எத்தனை முகங்கள்! எத்தனை முகங்கள்! எவரெவர் இவர்? என் மூதாதையரா? என் ஆசிரியர்களா? என் எதிரிகளா? என் குடிக்கு விந்து அளித்தவர்கள் போலும். என் குடிக்குரிய சொல்லளித்தவர்கள் போலும். என் முகம் எது? இதோ எந்தை முகம். அது என் மூத்தவரின் முகம். அதோ பீமன். அதோ நகுலனும் சகதேவனும். கனிந்து புன்னகைத்து வருபவன் துரியோதனன். உடனிருப்பவர்கள் அவன் இளையோர். பீஷ்மர் மணிமுடி சூடியிருக்கிறார். துரோணர் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கிறார். பள்ளிகொண்டிருக்கிறார் சல்யர். நான் யார்?

அவன் பதைப்புடன் விழியலைத்து தேடினான். பொழுது செல்கிறது. இது ஒருகணம். கனவுகள் எல்லாமே ஒரு கணங்கள். அவர் சொன்னதும் நான் கேட்டதும். நான் தேடுவதும் தேடத்தேட இவ்வெளி விரிந்தகல்வதும். யார் நான்? அதோ அக்கரிய உடல். ஆம், அது நான். அவன் அதை நோக்கி பாய்ந்து செல்வதற்குள் உணர்ந்தான் அது கர்ணன் என. ஆனால் அங்கு சென்று கர்ணனாக நின்று திரும்பி நோக்கினான். அங்கே காண்டீபம் ஏந்தி நின்றிருந்த கரிய உடல்கொண்ட அர்ஜுனனை கண்டான். “கீழ்மகனே!” என்று கூவியபடி தன் அம்புகளால் அவனை அறைந்தான். அர்ஜுனனின் தலையை கொய்துசென்றது சித்தாஸ்திரம். கூந்தல் வேர்களென நிலத்தில் பரவ தலை கிடந்தது. “ஆம், நீ அதை வென்றாய்!” என்றார் இளைய யாதவர்.

துரியாஸ்திரம் ஓசையற்றிருந்தது. உருவமும் இல்லாமலிருந்தது. ஒரு விழியதிர்வென மட்டுமே அதை உணரமுடிந்தது. “அதை நோக்காதே. அதை நாவோ செவியோ அறியலாகாது. அது நஞ்சு. ஒரு துளியால் மாமலைகளை கரைத்தழிக்கும் ஆற்றல்கொண்டது. அதை வெல்லும் வழி ஒன்றே. கருக்குழவி என சுருண்டுகொள். உன் கைவிரலை வாய்க்குள் விட்டு உன்னையே சுவைத்து உன்னை மட்டுமே அறிந்து பிறிதொன்றிலாது இரு!” அத்தேரே கருப்பை என்றாக அர்ஜுனன் சுருண்டு விழுந்தான். தன்னை அன்றி வேறெதையும் அறியாதவனானான். மீண்டெழுந்தபோது அனைத்தும் வெளுத்திருந்தது. புன்னகையுடன் இளைய யாதவர் சொன்னார் “நச்சுக்கொடியால் உணவூட்டப்படுவது கருக்குழவி. நஞ்சை வென்று உயிரெழும் வழி அறிந்தது அது மட்டுமே.”

சூதரே, மாகதரே, நான் கண்டேன். அங்கே வடவைப் பேரனல் எழுந்திருந்தது. அனைத்தையும் உண்டு உண்ன உண்ண பசிகொண்டு எழும் ருத்ரன். இங்குள்ள ஒவ்வொன்றும் தங்கள் ஆழத்தில் அவனுடைய ஒரு துளியை கொண்டுள்ளன. அதற்கு எதிராக அவை கொண்டுள்ள ஈரமே உயிர் என்க! ருத்ரனை வாழ்த்துக! மூவிழியன் நுதலென விளங்கும் அவனை வணங்குக!

கர்ணனும் அர்ஜுனனும் போரிட அவர்களின் மைந்தர்கள் இருபுறமும் நின்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். விருஷகேதுவும் சுஷேணனும் சத்ருஞ்ஜயனும் திவிபதனும் பாணசேனனும் அரைவட்டமாக நின்று சுருதகீர்த்தியையும் சுருதசேனனையும் எதிர்த்தார்கள். சுருதசேனனின் உடலில் அபிமன்யு தோன்றினான். “செல்க! கொன்று வீழ்த்துக!” என அவன் ஆணையிட சுருதசேனனின் வில்திறன் பெருகிக்கொண்டே சென்றது. சுருதகீர்த்தி சினம்கொண்டிருந்தான். அது தன்மேல் அவன் கொண்ட சினம். தன்மீதான சினத்தை வெல்ல மானுடர் அதை பிறர்மேல் பெருக்கிக்கொள்கிறார்கள். சுருதகீர்த்தியின் விழிமுன் விருஷசேனனின் உருவாகவே கர்ணனின் மைந்தர் நின்றிருந்தனர். கொல்லும் வெறியுடன் அவன் அவர்களை அம்புகளால் அறைந்தான். விருஷகேது பின்னடைய மெல்ல தேர்மாறி அங்கே திவிபதன் வந்தமைந்தான். திவிபதனின் அம்புகள் சுருதகீர்த்தியை நிகர்செய்தன. சுருதசேனனை எதிர்த்துச்சென்ற சத்ருஞ்சயனும் பாணசேனனும் பின்னடைய அவர்களுக்கு சுஷேணன் சென்று துணையளித்தான்.

கர்ணனின் அம்புகள் விசையெழுந்தபடியே வந்தன. அர்ஜுனன் அணுவணுவென பின்னடைந்தான். அம்புகளால் ஒரு வேலியை எழுப்பியதுபோல் அவனை வளைத்துக்கொண்டிருந்தான் கர்ணன். அர்ஜுனன் வீழ்ந்துகிடந்த யானை ஒன்றை நோக்கியபோதுதான் அவன் எத்தனை பின்னடைந்திருந்தான் என்பதை உணர்ந்தான். எஞ்சிய வெறியை திரட்டிக்கொண்டு கர்ணனை கருடாஸ்திரத்தால் தாக்கினான். அதை அவன் கிரௌஞ்சாஸ்திரத்தால் உடைத்தான். சீற்றத்துடன் பற்களை நெரித்தபடி அர்ஜுனன் வருணபாஷாஸ்திரத்தை எடுத்தான். அது நகைப்பொலி எழுப்பியபடி அலையலையெனச் சென்று கர்ணனை தாக்கியது. அவன் தாபாஸ்திரத்தால் அதை பல துண்டுகளாக பிளந்தான்.

வெறியுடன் அஞ்சலிகாஸ்திரத்தை அர்ஜுனன் எடுக்க இளைய யாதவர் கைநீட்டி அவனை தடுத்தார். “அந்த அம்பை வீணாக்காதே. அது இப்போது அவனை கொல்லாது. ஆற்றல்மிக்க அவனுடைய அம்புகள் அனைத்தும் வெளிவரட்டும். அதிலுறையும் தெய்வத்தை வணங்கி மீண்டும் ஆவநாழியில் வை.” அர்ஜுனன் “எழுந்த தெய்வமே அமைக! உங்கள் இலக்கு துலங்குவது வரை என் ஆவநாழியில் கோயில்கொண்டமர்க!” என்று சொல்லி அதை மீண்டும் வைத்தான். கர்ணனின் துவஷ்டாஸ்திரமும் பர்வதாஸ்திரமும் வந்து அவனை அறைந்தன. அவன் தேர் அலைகளிலென துள்ளி நிலைமறிந்தது. புரவிகளை ஆணையிட்டு தாவவும் அமையவும் வைத்து அந்தக் கொந்தளிப்பை இளைய யாதவர் தவிர்த்தார்.

“அவன் இறப்பை தேரவேண்டும்… விழையாது உயிர்துறப்பதில்லை சான்றோர்…” என்று இளைய யாதவர் கூறினார். “அவன் இனி இழக்க இருப்பது மைந்தர்செல்வத்தை மட்டுமே. அதை வெல்க!” அர்ஜுனன் “நமது மைந்தர்கள் களம் நின்றிருக்கிறார்கள்” என்றான். “அவன் நம் மைந்தரை கொல்லப்போவதில்லை” என்றார் இளைய யாதவர். “ஏன்?” என்று அர்ஜுனன் கேட்டான். “கொல்வதென்றால் முன்னரே அவனால் கொன்றிருக்க முடியும்” என்றார் இளைய யாதவர். “அவன் மைந்தர் சினந்தெழுந்து நம் மைந்தரை கொல்லக்கூடும்” என்று அர்ஜுனன் சொன்னான். “அவர்கள் அவன் உள்ளத்தின் ஆணையை கடக்கமாட்டார்கள்” என்றார் இளைய யாதவர். “மைந்தர் என அவன் பெருகியிருக்கிறான். ஒவ்வொரு மைந்தர் இறக்கையிலும் ஒருமுறை அவன் இறப்பான். இறந்து இறந்து இறப்பு நோக்கி வருவான்… கொல்க!”

அர்ஜுனன் கர்ணனை கௌமோதகம் என்னும் அம்பால் அறைந்தான். அதை வெல்ல கர்ணன் சூர்யாஸ்திரத்தை தொடுத்தான். நீலநிறமான சுடர்வெடித்து களம் ஒளியால் இருண்ட கணத்தில் முன்னரே இடம்குறித்து உளத்தில் பதித்துவைத்திருந்த அர்ஜுனன் சாம்பவி என்னும் அம்பால் திவிபதனை தாக்கினான். ஒளிக்குள் ஒளியென அவன் தேர் வெடித்து எழுந்து தெறித்தது. ஒளியிருண்டு உலகென மாறியபோது எரிந்துகொண்டிருந்த திவிபதனின் தேர் உடல்பற்றிக்கொண்ட புரவிகளுடன் பாய்ந்தோடிக்கொண்டிருந்தது. அள்ளி வீசப்பட்ட திவிபதனின் உடல் துண்டுகளென நிலத்தில் கிடந்தது. கால்கள் வலிப்புற வெட்டுண்ட இடைக்கீழ் உடல் துள்ளியது.

“அங்கனே, இக்களத்தில் இதோ நீ மீண்டும் இறந்தாய்” என்று கூவியபடி அர்ஜுனன் கர்ணனை அசனி என்னும் பெருமுழக்கமிடும் அம்பால் அறைந்தான். திவாகராஸ்திரத்தால் அதை உடைத்தெறிந்தான் கர்ணன். அவன் சினம்கொள்ளவில்லை என்பதை, சிறுநடுக்குகூட அவன் உடலில் எழவில்லை என்பதை அர்ஜுனன் கண்டான். “அதை கருதாதே… அவன் சினந்தால், அழுதால் அது வெளியேறுகிறது. இப்போது அது உள்நுழைந்து இறுகுகிறது. அவன் மைந்தர்களை வீழ்த்து” என்று இளைய யாதவர் கூறினார். திரண்டு எழுந்து தாக்க வந்த விருஷகேதுவையும் சுஷேணனையும் சுருதகீர்த்தி தன் முழு விசையாலும் அறைந்து தடுத்தான். சத்ருஞ்ஜயனும் பாணசேனனும் சுருதசேனனால் தடுக்கப்பட்டார்கள். அப்பால் வட்டமிட்டு நின்றிருந்த படைவீரர்கள் சொல்லடங்கி விழிகளென்று நின்றிருக்க அங்கே அவர்கள் சிறிய சுழல்காற்றென ஒருவரையொருவர் சுற்றிக்கொண்டு போரிட்டனர். அவர்களின் வட்டத்திற்குமேல் அம்புகள் எழுந்து ஒன்றுடன் ஒன்று முட்டி அங்கேயே உதிர்ந்துகொண்டிருந்தன.

அர்ஜுனன் கர்ணனை நோக்கி வித்யுத் என்னும் அம்பை தொடுத்தான். விழியதிர அது மின்னி கர்ணனை தாக்க அவன் பானு என்னும் அம்பால் அதை தடுத்தான். ஒளியை ஒளி தடுக்க உருவான கணப்பொழுதில் அர்ஜுனன் துஜாஸ்திரத்தால் விருஷகேதுவை தாக்கினான். வெடித்தெழுந்த தேரிலிருந்து விருஷகேதுவின் உடல் தெறித்து விழுந்தது. கர்ணன் அரைக்கணம் விழிதிருப்ப அந்த இடைத்தருணத்தில் அர்ஜுனன் இருண்ட அலையெனச் சுருண்டெழுந்து உறுமிச்சென்று தாக்கிய வாரிதாஸ்திரத்தால் சுஷேணனை தாக்கி கொன்றான். இருளகன்றபோது கவிழ்ந்த தேரின் கீழ் சுஷேணன் மண்ணில் விழுந்து கிடந்தான். விழிமீண்டு திகைத்த புரவிகள் தேரை இழுத்தபடி அப்பால் செல்ல உயிரிழந்த பாகனின் உடல் இழுபட்டபடி பின்னால் சென்றது.

கர்ணன் மோகனாஸ்திரத்தை ஏவினான். அக்கணமே அங்கிருந்த அனைத்துக் காட்சிகளும் மறைந்தன. “அவன் அஞ்சிவிட்டான். எஞ்சிய மைந்தரை காக்க எண்ணுகிறான். அவ்வச்சமே நமக்கெனத் திறந்த வாயில். அதில் நுழைக!” என்று இளைய யாதவர் கூவினார். “சம்மோஹனாஸ்திரத்தை ஏவுக… அது நாம் விழைந்த காட்சியை இம்மாயையில் உருவாக்கி அளிக்கும்…” சம்மோஹனாஸ்திரத்தால் தெளிந்த காட்சியில் கர்ணன் ஒளிரும் அருமணிகள் கொண்ட மும்முடி சூடி பொற்தேரில் நின்றிருந்தான். அவனுக்கு இருபுறமும் சுருதகீர்த்தியும் சுருதசேனனும் படைத்துணைவர்களாக வந்தனர். கர்ணனின் அம்பு வந்து அர்ஜுனனின் தேரை அறைந்து அதிரச்செய்தது.

அந்த உலுக்கலில் அர்ஜுனன் அக்கனவிலிருந்து வேறெங்கோ விழித்தெழுந்தான். அங்கே சித்ரகூடத்தின் ஏரிக்கரையில் அவன் தன் நீர்ப்பாவையை நோக்கி அம்புகளை தொடுத்துக்கொண்டிருந்தான். அருகணைந்த முனிவர் ஒருவர் அவனிடம் “ஆம், அவ்வாறே. தன்னை வெல்பவனே அறுதியாக கடந்துசெல்கிறான்” என்றார். அது கனவென உணர்ந்து அவன் உலுக்கிக்கொண்டபோது கர்ணனின் அம்புகளால் உடைந்து அதிர்ந்துகொண்டிருந்த தேரில் குருக்ஷேத்ரத்தில் நின்றிருந்தான். மீண்டுமொரு உளப்புரளல் வழியாக அவன் மாயைக்குள் நுழைந்தான். வெறியுடன் கூச்சலிட்டபடி சுருதகீர்த்தியையும் சுருதசேனனையும் தாக்கினான்.

கூரிய அம்புகளால் அவர்களை அவன் அறைந்தான். “தந்தையே! தந்தையே!” என அவர்கள் கூச்சலிட்டார்கள். கவசங்கள் உடைந்து தெறித்தன. தோளிலைகளும் தொடைக்காப்புகளும் சிதறின. தலைக்கவசம் பிளந்தது. நெஞ்சில் பாய்ந்த அம்புடன் சுருதசேனன் தேரிலிருந்து பின்னால் விழுந்தான். அவன் தேர்ப்பாகன் தேரை இழுத்து நிறுத்த தேரின் தூணில் சிக்கிய வில்லுடன் அவன் உடல் இழுபட்டு வந்தது. சுருதகீர்த்தி “தந்தையே! வேண்டாம்!” என்றான். அவன் இளமைந்தனாக தெரிந்தான். அர்ஜுனன் நாணை செவிவரை இழுத்து அம்புதொடுத்து அவன் தலையை துண்டித்தான். மூளியுடல் ஆடி முன்விழ தலை பின்னால் விழுந்து தேரிலிருந்து உருண்டது.

அர்ஜுனன் தள்ளாடியபடி தேரில் பின்னடைந்து தூணை பற்றிக்கொண்டான். விழிகள் மீண்டபோது சத்ருஞ்சுருசயனும் பாணசேனனும் தேரிலிருந்து விழுந்துவிட்டிருப்பதை கண்டான். கர்ணனின் விழிகளை சந்தித்தபோது அவன் உள்ளம் திகைப்படைந்தது. அவை கனிந்திருந்தன. நோயுற்ற குழவியை நோக்கும் அன்னைபோல. அவன் கைகள் காண்டீபத்திலிருந்து நழுவின. “கொல்க அவனை… எதிர்த்து நில். உளம் பின்னடைகிறது உனக்கு. எழுக… எதிர்த்து எழுக!” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் விழிகளை நோக்காதொழிக… அவனை எந்நிலையிலும் நேர்விழிகொண்டு பார்க்காதே… அவன் கைகளை நோக்கு. நீ பிளக்கவேண்டிய அவன் நெஞ்சை மட்டும் நோக்கு.” அர்ஜுனன் அப்போதும் உள்ளம் செயலற்றிருந்தான்.

அவன்மேல் தாக்கவந்த அம்புகளை தேர்சுழற்றி ஒழிந்தபடி இளைய யாதவர் சொன்னார் “மைந்தர் விலகிச் செல்லட்டும்… மைந்தருக்கு இனி இங்கு போரில்லை. இது உங்கள் இருவருக்குமான போர் மட்டுமே.” சுருதகீர்த்தியும் சுருதசேனனும் அர்ஜுனனின் கையின் ஆணைக்கேற்ப பின்னடைந்தனர். சுருதகீர்த்தியின் முகம் கசப்புகொண்டு சுருங்கியிருந்ததை அர்ஜுனன் கண்டான். வில்லை தேர்த்தட்டில் ஓங்கி வீசிவிட்டு அவன் தேர்ப்பீடத்தில் அமர்ந்தான். சுருதசேனன் களைத்தவனாக தேரிலிருந்து இறங்கி தள்ளாடி நடந்து கீழே விழுந்தான். ஏவலர் அவனை நோக்கி ஓடிவந்து தூக்கிச் சென்றார்கள்.

அர்ஜுனன் கர்ணனை அம்புகளால் அறைந்தபடியே இருந்தான். ஒரு கட்டத்தில் மலையை நோக்கி அம்புகளைத் தொடுப்பதாக உளமயக்கு தோன்றியது. அல்லது நீரில் தெரியும் மலையின் பாவை நோக்கி. அவன் செலுத்திய அவனுடைய அனைத்து அம்புகளும் வீணாகிக்கொண்டிருந்தன. அவன் மீண்டும் அஞ்சலிகா அம்பை எடுக்க முயல அதை முன்னுணர்ந்து இளைய யாதவர் கூவினார் “வேண்டாம். வேழம் உளைச்சேற்றில் சிக்கவேண்டும்… இப்போது உன்னிடமிருக்கும் எந்த அம்பும் வீணாகிவிடும்…” அர்ஜுனன் ஐராவதாஸ்திரத்தால் கர்ணனை அறைந்தான். மத்தகத்தால் முட்டப்பட்டதுபோல் கர்ணனின் தேர் அதிர்ந்து நிலைகொண்டது. தேரைச் செலுத்திக்கொண்டிருந்த கர்ணனின் குடிமைந்தன் சம்பரன் அர்ஜுனனின் அம்புகள் பட்டு விழுந்தான். அவனுடைய இளையோனாகிய விருஷநந்தனன் அக்கணமே பாய்ந்து தேரிலேறிக்கொண்டு கடிவாளத்தை இழுத்துப்பிடித்து மீண்டும் செலுத்தினான்.

அர்ஜுனன் ஒவ்வொரு அம்பாக செலுத்தியபடி மேலும் மேலுமென பின்னடைந்தான். கர்ணன் ஊழ்கத்தில் இருப்பதுபோலத் தோன்றினான். அவனுடைய கைகள் சுழன்று அம்புகளை தொடுத்தன. அவை வந்து அறைந்து அர்ஜுனனின் அம்புகளை சிதறடித்தன. கர்ணன் பார்கவாஸ்திரத்தை எடுத்தபோது இளைய யாதவர் “தேரில் தலைகுனிந்து அமர்க… தேரில் அமர்க!” என்று கூவினார். அந்த அம்பை எடுத்தபோது கர்ணன் வஞ்சினம் உரைக்கவில்லை. அவன் விழிகளிலும் சினம் தெரியவில்லை. ஆகவே அர்ஜுனன் அதை முற்றுணரவில்லை. “விரைந்து அகல்வதொன்றே வழி… அமைந்துகொள்க!” என்று கூவியபடி இளைய யாதவர் தேரை பின்னடையச் செய்து திருப்பி விரைந்தோட வைத்தார்.

பார்க்கவாஸ்திரம் அவர்களை துரத்தி வந்தது. புயல் அணுகுவதுபோல் அது எழுந்து வந்து அலையலையாக நிலத்தை அறைந்தது. துணிப்படலம்போல் நிலம் நெளிந்து வளைந்தது. அலைகடல்மேல் நின்றிருக்கும் கலங்கள்போல் அங்கிருந்த தேர்களெல்லாம் எழுந்தமைந்தன. “பிறிதொரு தேருக்கு பாய்ந்துவிடு… செல்” என இளைய யாதவர் கூவினார். அர்ஜுனன் காண்டீபத்தை ஊன்றி எழுந்து பாய்ந்து அப்பால் நின்ற போராளி இல்லாத பாகனில்லாது ஒழிந்த தேரில் தொற்றிக்கொண்ட கணத்தில் பார்க்கவாஸ்திரம் தேரை அறைந்தது. தேர் எழுந்து விண்ணுக்கென பாய்ந்து மேலேறி அதே விசையில் கீழே விழுந்தது. இளைய யாதவரின் உடல் எரிபடர்ந்து தழல்கொண்டது. செங்கனலென அவர் உருவம் தெரிந்தது.

“யாதவரே!” என அர்ஜுனன் கூவினான். விழுந்த தேரிலிருந்து புரவிகள் நான்கு பக்கமும் சிதறிப்பரந்தன. அமரத்தில் அமர்ந்திருந்த இளைய யாதவர் பொன்னுருக்கி வடிக்கப்பட்ட சிலைபோல் தோன்றினார். “யாதவரே” என்று கூவியபடி அர்ஜுனன் அவரை நோக்கி ஓடினான். பொன்வடிவமாக இளைய யாதவர் சிரித்தார். “இனி அவனிடம் அரிய அம்புகள் இல்லை” என்றார். “யாதவரே… நீங்கள்தானா இது?” என்றான் அர்ஜுனன். “ஏறிக்கொள்க!” என்றார் இளைய யாதவர். அவர் குளிர்ந்து மெய்வண்ணம் கொண்டபடியிருந்தார். புரவிகள் எழுந்து உடலை உதறிக்கொண்டு கனைத்தன. “இனி அவனை எதிர்கொள்க… இனி எஞ்சியிருப்பது அஞ்சலிகாஸ்திரம் ஒன்றே” என்று இளைய யாதவர் சொன்னார்.

அர்ஜுனன் தேரிலேறிக்கொண்டான். இளைய யாதவர் சவுக்கை காற்றில் சுழற்றி ஆணையிட புரவிகள் விசைகொண்டு முன்னேறின. விஜயத்தை நிலையூன்றி அம்புகளைத் தொடுத்தபடி அணுகிய கர்ணனை நோக்கி அர்ஜுனன் சென்றான். முதல்முறையாக அவன் உள்ளத்தில் கர்ணனை கொல்லமுடியும் என்னும் உறுதி எழுந்தது.

நான் அந்தப் போரை பார்த்துக்கொண்டிருந்தேன், தோழர்களே. விழியிழந்தோன் பார்க்கும் போருக்கு நிகரென ஏது இங்கு நிகழமுடியும்? பொருள்மயக்கு அளிக்கும் பொருட்களேதும் அங்கில்லை. பொருளென்று மட்டுமே பொருட்கள் அமைந்த அவ்வெளியில் பொருள்கொள்ளாத ஒன்றும் இல்லை. நான் அப்போரை கண்டேன். விண்ணில் திகழ்ந்த சூரியனும் இந்திரனும் தவிப்பதை நோக்கினேன். தேவர்களும் மூதாதையரும் நின்று பதைப்பதை கண்டேன். யயாதி முதலாய சந்திரகுலத்தவர் அனைவரையும் கண்டேன். பிரதீபனை சந்தனுவை விசித்திரவீரியனை கண்டேன். பாண்டுவை கண்டேன்.

தோழரே, அங்கே நான் சத்யவதியை கண்டேன். அம்பிகையை அம்பாலிகையை பார்த்தேன். தழலென குழல் எரிந்துகொண்டு நின்றிருந்த அம்பையையும் கண்டேன். சுனந்தையை, தபதியை கண்டேன். அவர்களுக்குப் பின்னால் நின்றிருப்பவர் எவர்? ஆம், அவர்கள் விண்ணுறை தேவியர். நான்முகி, எரிவிழியள், இளையோள், ஆழியள், பன்றியள், தேவதேவி, மண்டைமாலையள். தோழரே, தந்தையரும் தேவரும் தவிப்பு கொண்டிருக்க அன்னையரும் தேவியரும் மட்டும் வஞ்சம் எரியும் விழிகளுடன் நின்றிருப்பது ஏன்? அவர்களின் நாவுகளில் குருதிவிடாயை காண்கிறேன். அவர்கள் அனைவரையும் தன்னிலேந்தியவள்போல் நின்றிருக்கும் பேருருக்கொண்ட அவள் யார்?

எங்கு கண்டுள்ளேன் அவளை? ஆயிரம் தலைகொண்டவள். பல்லாயிரம் கைகொண்டவள். உடலெங்கும் முலைகள் கனிந்து செறிந்தவள். அவள் புவிமகள். அவளை இங்ஙனம் கண்டதில்லை. அளிபெருகும் இன்விழிகொண்டவள் அல்லவா? குருதிவிடாய்கொண்ட நாவு அவளுக்கும் உண்டா? இங்கு அனைவருடனும் போரிட்டுக்கொண்டிருந்தவள் அவள்தானா? அனைவரும் போரிட்டது அவளுடன்தானா? அனைவரும் சென்றுவிழுந்தது அவள் மீதா? தோழரே, இக்குருதிப்பெருக்கை எல்லாம் குடித்துக்குடித்து களிகொண்டவள் அவளா என்ன?

உறுமி மீது மூங்கிலோட்டி கும்பகர் பாடினார். “கதிர் அணையும் போர். இடியெழுந்து மின்னல்சூடி வென்று நின்றிடும் போர். எஞ்சாது ஒளியழிய இருள்சூடி புவிமகள் நின்றிருக்கும் போர்… என்றுமுள்ள பெரும்போர். நான் காண்கிறேன். அதை இதோ நான் காண்கிறேன்!”

முந்தைய கட்டுரைதோப்பிலின் புகையிலை நெட்டு
அடுத்த கட்டுரைகாத்திருக்கிறாள் இரவுமகள்