சிகண்டி தன்னை வெறிகொண்டு எதிர்த்த கிருதவர்மனை விழிதூக்கி நோக்கவில்லை. அப்போர்க்களத்தில் அவர் பீஷ்மரைத் தவிர எவரையுமே நோக்கவில்லை. பீஷ்மரை எதிர்த்துநின்றபோது முதற்கணம் அவருடைய விற்தொழிலும் உடலசைவும் உள்ளம் செல்லும் வழிகளும் முன்னரே நன்கறிந்திருந்தவை எனத் தோன்றின. முதல் நாள் முதல் அம்பில் அவர் பீஷ்மரின் கால்களை அடித்தார். அத்தனை ஆண்டுகாலம் அவர் தவம்செய்திருந்த வடிவம். அவர் அணுவணுவாக தன்னுள் நிகழ்த்திக்கொண்ட போர்.
ஆனால் ஒவ்வொருநாளும் பீஷ்மர் அவர் அறிந்தவற்றிலிருந்து எழுந்து வளர்ந்தபடியே சென்றார். அவர் அவருடன் சேர்ந்து வளர்ந்தார். எங்கு எவரிடம் போரிட்டாலும் அவர் பீஷ்மரிடமே போரிட்டார். எல்லா அம்புகளையும் அவர்மீதே ஏவினார். அவர் தன் முடிவில்லாச் சலிப்பில் திளைத்துக்கொண்டே எவ்வண்ணம் அவ்வாறு மீண்டும் மீண்டும் புதியவர் எனப் பிறந்தெழுகிறார் என்பதை எண்ணி எண்ணி வியந்தார். அச்சலிப்பிலிருந்து மீளும்பொருட்டு ஒவ்வொரு கணத்தையும் அள்ளிப்பற்றிக் கொள்கிறார் போலும். அக்கணம் அதே சலிப்பில் கரைந்தழிய பிறிதொன்று. அச்சலிப்பே அவரை அனைத்திலிருந்தும் விலக்கியது. அவ்விலக்கத்தால் அவர் முழுமைநோக்கு கொண்டவர் ஆனார். அதிலிருந்து எழுந்தது அவர் ஆற்றல். அந்தப் படைப்பெருக்கு ஓர் ஆலயமென விரிந்திருக்க அதன் கோபுரமுகடு என அவர் நிலைகொண்டிருந்தார்.
பீஷ்மர் களம்பட்ட பத்தாம்நாள் இரவில் சிகண்டி அச்சலிப்பை தானும் உணர்ந்தார். அவரிடமிருந்து எழுந்து வந்து சிகண்டியை பற்றிக்கொண்டது அது. அவரைப் பின்தொடர்ந்து சென்றபடியே இருந்த அவர் வாழ்க்கையில் ஒருகணமும் வீணாகவில்லை. ஒரு அம்பும் கற்பிக்காமல் சென்றதில்லை. அவருக்குப் பின் சிகண்டி முழுமையாக கைவிடப்பட்டவரானார். குருக்ஷேத்ரப் படைக்களத்திலிருந்து கிளம்பி எங்கேனும் சென்றுவிடவேண்டும் என விழைந்தார். பின்னிரவின் குளிரில் அவர் தன் வில்லை மட்டும் எடுத்துக்கொண்டு குறுங்காட்டுக்குள் நுழைந்தார். புதர்களை விலக்கி சென்றுகொண்டே இருந்தார். இருளில் ஓர் உறுமல் ஓசையைக் கேட்டு நின்றார்.
அவர் முன் அந்த அன்னைப்பன்றி நின்றிருந்தது. அவர் அதன் எரியும் விழித்துளிகளை நோக்கியபடி நின்றார். அது தலைதாழ்த்தி பிடரிமுட்கள் சிலிர்க்க முன்வலக்காலால் நிலத்தைச் சுரண்டியபடி மீண்டும் உறுமியது. அவர் “ஆம்” என்று சொன்னார். “ஆம்” என மீண்டும் ஒருமுறை சொன்னபின் வில்லுடன் திரும்பி நடந்தார். தன் குடிலுக்கு வந்து அதன் வாயிலில் அமர்ந்துகொண்டார். கருக்கிருளை நோக்கிக்கொண்டிருந்தார். அசைவிலாது சிலைபோல் இருளில் இரவெல்லாம் அமர்ந்திருப்பது அவர் வழக்கம். இருளை விழியிமைக்காமல் நோக்குவதையே அவர் ஊழ்கமெனக் கொண்டிருந்தார். அது தமோயோகம் என்று சொல்லப்பட்டது.
நாள்தொடங்கும் முரசுகள் எழுந்தன. அவர் எழுந்துகொண்டபோது புரவியில் திருஷ்டத்யும்னன் வந்திறங்கினான். அவரை அணுகி அப்பால் என நின்றான். சிகண்டி விழிதிருப்பாமல் “ம்” என உறுமினார். “தாங்கள் நேற்று கிளம்பிச்சென்றீர்கள் என அறிந்தேன். ஒற்றர் செய்தி உடனே வந்தது. தடை செய்யவேண்டாம் என ஆணையிட்டேன்.” சிகண்டி “ம்” என்றார். “நீங்கள் செல்லலாம், மூத்தவரே. உங்கள் பணி இப்போரில் முடிந்துவிட்டது. இங்கே நீங்கள் ஆற்றுவதற்கொன்றும் இல்லை” என்று திருஷ்டத்யும்னன் சொன்னான். “இந்த அரசியலில் உங்கள் உள்ளம் ஈடுபடவில்லை. இங்கே நீங்கள் கொள்வதற்கும் கொடுப்பதற்கும் ஏதுமில்லை.”
சிகண்டி “ம்” என்றார். பின்னர் “அன்னையின் ஆணை” என்றார். திருஷ்டத்யும்னன் நோக்க “அவள் சொன்னாள். இங்கே ஒரு சொல் எஞ்சியிருக்கிறது” என்றார். திருஷ்டத்யும்னன் “ம்?” என்றான். “அவள் பழி. அவள் என் அன்னையின் பழிமுடிக்க அங்கே நுழைந்தவள்.” சற்று நேரம் கழித்து திருஷ்டத்யும்னன் “நன்று” என்றபின் தலைவணங்கி திரும்பிச்சென்றான். அவன் செல்வதை சிகண்டி நோக்கி அமர்ந்திருந்தார். திருஷ்டத்யும்னன் மேலும் ஏதோ கேட்க விழைந்தான் என சிகண்டி அறிந்திருந்தார். அக்கேள்வியுடன் அவன் மண்மறைவான் என்றும். நீண்ட மூச்சுடன் எழுந்து தன் குடிலுக்குள் சென்று போர்முகப்பு செல்வதற்கான ஒருக்கங்களை தொடங்கினார்.
அக்களத்தில் அதன்பின் எதிர்கொண்ட அத்தனை பேரும் பீஷ்மரே என உளமயக்களித்தனர். அவர் அவர்களை சீற்றம்கொண்டு எதிர்த்தார். பின்னர் அவர்கள் எவரும் பீஷ்மர் அல்ல என்று தனக்கே தெளிவுசெய்துகொண்டார். அவர்கள் பீஷ்மரல்லாமல் ஆனதுமே அவர்களிடம் அவரால் போரிட இயலாமலாயிற்று. ஆகவே அவர்களை நோக்குவதை ஒழிந்தார். அவர்களென்றாகி நின்று தன்னுடன் தான் போரிடலானார். ஒவ்வொரு முறையும் தன்னை தான் வென்றார். தன்னிடம் தானே தோற்று மீண்டார். ஒவ்வொருநாள் இரவிலும் இருளில் தனித்தமர்ந்து நெடுந்தொலைவில் தெரிந்த பீஷ்மர்படுகளத்தின் பந்த வெளிச்சத்தை நோக்கிக்கொண்டிருந்தார்.
கிருதவர்மன் “இழிவிலங்கே, உன் அம்புடன் அகல்க! இன்று உன்னைக் கொன்று என் அம்புக்கு இழிவு தேடிக்கொள்ள விழையவில்லை நான்!” என்று கூவியபடி அம்புகளால் சிகண்டியை அறைந்தான். சிகண்டியை அச்சொற்கள் சீண்டவில்லை என்று கண்டு “ஈருடலனே, பெண்ணென்று ஆகி உயிர்கோரி நில். உன்னை விடுவிக்கிறேன். அல்லது ஆணென்று நின்று என்னிடம் போரிடு” என்று கிருதவர்மன் மேலும் கூவினான். சிகண்டி தொடுத்த அம்புகளை ஒழிந்தபடி அவன் வில்லாடிக்கொண்டிருந்தபோது ஒரு கணத்தில் ஏதோ ஒன்றில் உளம் சென்று தொட திடுக்கிட்டான். எதிரில் நின்று போரிட்டுக்கொண்டிருப்பதும் தானே என உணர்ந்து கைகள் நடுங்க வில் தழைய தேரில் நின்றான். சிகண்டி தொடுத்த அம்பு வந்து அவன் நெஞ்சை அறைந்து உலுக்கி விடுவித்தது.
அவனாகி எழுந்த சிகண்டி “யாதவனே, வஞ்சத்தைச் சுமந்து நலிந்திருக்கிறது உன் உடல். நஞ்சுகொண்டிருக்கிறது உன் ஆழம். இக்களம் ஒரு தவநிலம். வஞ்சத்தை மும்முறை கையொழிந்து பின்னடைக! உன் விடுதலையை இங்கே ஈட்டிக்கொள்க!” என்றார். கிருதவர்மன் கசப்புடன் பல் தெரியச் சிரித்து “வஞ்சத்தை கைவிடுவதைப்பற்றி நீ எனக்கு சொல்கிறாயா? நன்று!” என்றான். “பெருவஞ்சத்தின் பின்னுள்ள வெறுமையை நானன்றி எவரும் உனக்கு சொல்ல இயலாது. அறிவிலி, விலகிச்செல்” என்று சிகண்டி சொன்னார். “வஞ்சத்துடன் வாழ்வது கணந்தோறும் எரிந்துகொண்டிருப்பது. அதை நான் அறிவேன்” என்றான் கிருதவர்மன். “ஆம், ஆனால் வஞ்சத்திற்குப் பிந்தைய வெறுமைக்கு அது மேல்… செல்க!” என்று சிகண்டி சொன்னார்.
“நான் உன்னை அஞ்சவில்லை, பேடியே!” என்று கிருதவர்மன் கூவினான். “உன் சொற்களிலிருக்கும் அந்த இரக்கத்தைக் கண்டு சீற்றம் கொள்கிறேன். இதன்பொருட்டே உன் தலைகொய்து இங்கிருந்து செல்லவேண்டும் என விழைகிறேன்.” அம்புகளைத் தொடுத்தபடி அவன் சிகண்டியின் எல்லைக்குள் நுழைந்தான். அவனுடன் வந்த யாதவப் படையினர் அவனைச் சூழ்ந்து அம்புகளால் காற்றை நிறைத்தனர். அவனுக்குப் பின்னால் அவன் மைந்தன் பாலி வில்லுடன் நின்று புறம் காத்தான். சிகண்டி அவன் அம்புகளை மிக எளிதில் தடுத்தார். அவர் வில்லில் இருந்து எழுந்த அம்புகள் கிருதவர்மனின் கவசங்களை பிளந்தன. அவன் தலைக்கவசம் கீழே விழுந்தது. அது தலை விழுந்ததுபோல் தோன்ற யாதவப் படையினர் கூச்சலிட்டனர். தன் தலை விழுந்ததை தானே கண்டவன்போல் கிருதவர்மன் திடுக்கிட்டான்.
அவன் செவியோர மயிரை அம்புகளால் சீவி எறிந்தார் சிகண்டி. “செல்க! செல்க!” என்று கூவினார். அம்புகளுடன் தந்தையைக் காக்க வந்த பாலியின் கவசங்களை அறைந்து உடைத்தார். அவன் திறந்த நெஞ்சுடன் தேரில் நின்றிருக்க அம்பைத் திருப்பி நாணிலேற்றி அவன் நெஞ்சை அறைந்தார். அம்புபட்டு தேரிலிருந்து பாலி தூக்கி வீசப்பட்டான். தரையில் விழுந்து அங்கிருந்த இறந்த உடல்களுடன் அவன் உடல் மறைய யாதவர்கள் அலறினர். கிருதவர்மன் தன் மைந்தனின் சாவையும் மெய்யென உணர்ந்தான். யாதவப் படை கூச்சலிட்டுச் சிதற “ஒருங்குகொள்க! கூடுக!” என்று கூவியபடி அவன் பின்னடைந்தான். பாலி எழுந்து அப்பால் விலகிச்சென்று புரவியொன்றில் ஏறிக்கொள்வதை கண்டான். நெஞ்சிலிருந்த அச்சமும் விரல்களில் துடித்த பதற்றமும் ஓய பெருமூச்சுவிட்டு மெல்ல தளர்ந்தான். அதற்குள் நாணொலித்தபடி சிகண்டி அப்பால் விலகிச்சென்றுவிட்டிருந்தார்.
சிகண்டி திரும்பி அவந்தியின் படைப்பிரிவை நோக்கி சென்றார். தங்களை சிறிய குழுவென ஒருங்கிணைத்துக்கொண்டிருந்த அவர்கள் பாண்டவப் படைக்குள் ஊடுருவிச் சென்றுவிட்டிருந்தார்கள். ஒருகணம் எரிச்சல் எழ அவர் காறித் துப்பினார். அலுப்பிலிருந்து எழுவது அந்த எரிச்சல் என புரிந்துகொண்டார். ஏமாற்றம் கொண்டதுபோல ஆழம் பொருமிக்கொண்டே இருந்தது. ஏன் ஏன் என அவர் ஆழத்தின் இன்னொரு கூர்முனை துழாவியது. ஏன் சலிப்பு? ஏன் ஏமாற்றம்? அவர் ஒருகணம் பீஷ்மரென ஆகி போர்முகப்பில் நின்றிருந்தார். இன்னமும் குருக்ஷேத்ரம் தொடங்கப்படவே இல்லை. நிகழவிருக்கும் அனைத்தும் விழிநிலை வடிவென இரு படைகளாகி விரிந்திருந்தன. அவர் படைகளை நோக்கவில்லை. படைகளுக்குமேல் கவிந்திருந்த வெளியை, தொடுவான் வில்வளைவை நோக்கிக்கொண்டிருந்தார். அவர் சலிப்புற்றிருந்தார். ஏனென்றால் அவர் போரின் முடிவை நோக்கிவிட்டிருந்தார்.
தொலைவில் சிகண்டியை கௌரவப் படையிலிருந்த அவந்தியின் படைத்தலைவர்கள் கம்சனும் கௌமாரனும் தங்கள் வில்லவர்திரளுடன் எதிர்த்தனர். அவந்தியின் படைசூழ சிகண்டி நின்றிருந்த இடம் சுழியெனத் தெரிந்தது. மிக விரைவிலேயே கம்சனும் கௌமாரனும் கொல்லப்பட்டதை முரசுகள் அறிவித்தன. செயலற்றவன்போல் சற்றுநேரம் நோக்கி நின்றிருந்த கிருதவர்மன் தன் நெஞ்சில் ஓங்கி அறைந்து வீறிட்டபடி தேர்ப்பாகனை நோக்கி கூச்சலிட்டான். “செல்க! செல்க, பாஞ்சாலனை நோக்கி!” தேர்ப்பாகன் “அரசே!” என்றான். “இன்று இத்தோல்வியுடன் மீளப்போவதில்லை. பாஞ்சாலனை நோக்கி செல்க… இக்கணமே செல்க!”
திரிகர்த்த நாட்டு இணையரசன் மித்ரவர்மன் அர்ஜுனனால் கொல்லப்பட்டதை அறிவித்தது முரசு. ஒவ்வொரு அரசராக இறப்புகள் அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருந்தன. படைகள் அழிந்துகொண்டே இருந்தமையால் அரசர்கள் காப்பற்றவர்களாக சென்று போர்முனையில் நின்று உயிர்துறந்துகொண்டிருந்தார்கள் என்று தோன்றியது. “செல்க! செல்க!” என்று கிருதவர்மன் பாகனை நோக்கி கூவினான். வில்லுடன் திரும்பிய சிகண்டி அவனை கண்டார். “கீழ்பிறப்பே, எடு உன் வில்லை” என்று கூவியபடி கிருதவர்மன் அவரை தாக்கினான். முற்றிலும் சினமற்றவராக சிகண்டி அவனை தாக்கினார். அவர் அம்புகள் வந்து கிருதவர்மனின் தேரை தாக்கின. அவனுக்குப் பின் அவன் மைந்தன் பாலி “தந்தையே, வலப்புறம் நோக்குக! வலம் பேணிக்கொள்க!” என்று கூவியபடி வந்துசேர்ந்துகொண்டான்.
களமெங்கும் அந்நாள்வரை நிகழாத பெரும்போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. கர்ணனை விட்டு விலகிச்சென்றுவிட்ட அர்ஜுனன் திரிகர்த்தர்களை கொன்றழித்தான். உசிநாரர்களும் பால்ஹிகர்களும் அவன் அம்புகளால் கொன்றுகுவிக்கப்பட்டனர். கர்ணனின் முன்னாலிருந்து வில்தாழ்த்தி ஒழியவேண்டியிருந்தமையின் சீற்றத்தை முழுக்க அவன் கௌரவப் படையை அழிப்பதில் செலவிட்டான். காந்தாரர்களும் கூர்ஜரர்களும் மாளவர்களும் அவனுக்கு பலியாயினர். அக்குருதியை சூடிக்கொண்டு தன்னை வெறியேற்றிக்கொண்டு மீண்டும் கர்ணனை எதிர்கொண்டான். கர்ணனை அதுவரை இணைநின்று தடுத்து நிறுத்தியிருந்த சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் விலகிக்கொள்ள அவர்களிடையே அந்த முடிவிலாப் போர் மீண்டும் தொடங்கியது.
சிகண்டியின் அம்புகள் கிருதவர்மனை அறைந்து அறைந்து பின்னால் செலுத்தின. சிகண்டியின் பேரம்பு ஒன்று தன்னை தாக்க வருகிறது என எண்ணி கிருதவர்மன் தேரிலிருந்து பாய்ந்து நிலம்படிந்தான். அவன் தேரைக் கடந்துசென்று பாலியின் தேரை அறைந்து மண்ணிலிருந்து தூக்கி வெடிக்கச்செய்தது அந்த வாளி. விழி மயங்கச்செய்யும் பொன்னிற ஒளி. மூச்சை நிறைத்த எரிமணம். அவன் பாலியின் தலை துண்டுபட்டு சுழன்று சென்று விழுவதை கனவுக்குள் கண்டான். திடுக்கிட்டு விழித்தபோது அக்கனவின் தொடர்ச்சியென அவன் தலை நிலம்தொடுவதை கண்டான். தன் தொடை நடுங்கி துள்ளிக்கொண்டிருப்பதை, தன் இரு கைகளும் வலிப்பெடுத்தவைபோல இழுபட்டு விறைத்து நின்றிருப்பதை உணர்ந்தான். “இழிமகனே! இழிமகனே!” என்று கூவியபடி பாய்ந்துசென்று தேரிலேறிக்கொண்டான். சிகண்டியை நோக்கி சென்று அம்புகளால் அவரை அறைந்தபடி கூச்சலிட்டான்.
பித்தன் போலிருந்தான் கிருதவர்மன். “இழிமகனே, உன்னுடன் போரிட்டு தலைகொடுக்கவே வந்துள்ளேன். என்னை கொன்று செல்க… இனி இக்களத்தில் என்னிடம் எஞ்சுவது ஒன்றுமில்லை. கொல்க!” என்று அவன் கூவினான். அவன் தேரை உடைத்தெறிந்தது சிகண்டியின் அம்பு. தன் ஆவநாழியிலிருந்து பேரம்பு ஒன்றை எடுத்து “இந்த அம்பால் உன் தலை கொய்வேன்!” என்று கூவியபடி அவன் நாணேற்றுகையில் சிகண்டியின் உடலில் சலிப்பு தெரியும் அசைவை கண்டான். அந்த அசைவு தன் மைந்தனைக் கொன்ற எரியம்புக்கு முன்னரும் அவ்வாறு அவர் உடலில் எழுந்தது என உணர்ந்து அவன் உள்ளம் செயலழிந்தது. அவனை நோக்கி வந்த சிகண்டியின் அம்பு காட்டெரிபோல் உறுமியது. எரிமலை வாய் திறந்து அனற்குழம்பு பீறிடுவதுபோல் அணுகியது. அவன் தேரின் தூண்களும் தட்டும் சகடங்களும் பற்றிக்கொண்டன.
அவன் தேரிலிருந்து பாய்ந்து இறங்கி நிலத்தில் விழுந்து ஓடினான். அவன் உடலில் தீ நின்றெரிந்தது. அவன் தன் தோலாடைகளை கழற்றி வீசினான். ஆடையற்ற உடலில் மயிரைப் பொசுக்கியபடி எரி நின்றது. மண்ணில் விழுந்து குருதிச்சேற்றில் அவன் புரண்டான். தன் தேர் தழலுருவாக எரிந்தோடுவதை, புரவிகள் உடலெங்கும் தீ எரிய கனைத்தபடி ஓடி கால்தளர்ந்து விழுந்து துள்ளிச்சுழன்று எழுந்தமைவதை அவன் கண்டான். அவனைச் சூழ்ந்து எரி வெள்ளமென அலையடித்தது. எரிநதிப்பெருக்கின் அடியில் மூழ்கிவிட்டவன்போல் உணர்ந்தான். இரு கைகளையும் தலைமேல் வைத்து குனிந்து உடல்குறுக்கி அமர்ந்தான். அவன்மேல் எரி உறுமியது, சீறியது, வெடிப்பொலியுடன் மேலெழுந்தது.
பின்னர் அவன் எழுந்தபோது அவனைச் சூழ்ந்து கருகிய களம் பரந்திருந்தது. கன்மதத்தின் குமட்டும் வாடை. வெந்த ஊனும் பொசுங்கிய தோலும் நெஞ்சடைக்கச் செய்தன. கரி படிந்த மண்ணில் புதுக்குருதியின் குமிழிகள் எழுந்துகொண்டிருந்தன. உலோகப்பரப்புகள் வெம்மைகொண்டு முனகிக்கொண்டிருந்தன. நெடுந்தொலைவில் சிகண்டியை கிருபர் எதிர்கொண்டதைக் கூறி முரசுகள் ஒலித்தன. கேகய இளையமன்னன் விசோகனுக்கும் பீமனுக்குமான போரை அறிவித்து விசோகனை துணைசெய்யும்படி முரசு வீணே மன்றாடிக்கொண்டிருந்தது. அவன் உள்ளம் வெறுமை கொண்டிருந்தது. அதுவரை உள்ளத்தின் பெரும்பகுதியை நிறைத்திருந்த இறந்தகாலமும் எதிர்காலமும் மறைந்தன. ஆகவே ஒளிகொண்ட பெருவெளியில் நிகழ்காலத்து எண்ணங்கள் விசையின்றி தனித்தனியாக தெளிந்தெழுந்தன. அத்தனை அமைதியை அவன் அறிந்ததே இல்லை.
பெருமூச்சுடன் எழுந்து நின்ற கிருதவர்மன் தன் ஆடையற்ற உடல் கருகி தோல் உருகி வழிந்துகொண்டிருப்பதை கண்டான். கைதூக்கி நோக்கியபோது நகங்கள் அனைத்தும் வெந்து உதிர்ந்துவிட்டிருந்தன. மலையருவி பெருகி விழ ஏந்திக்கொள்ளும் அடிப்பக்க மரம் என உடலின் அனைத்து உறுப்புகளும் அதிர்ந்துகொண்டிருந்தன. கால்களைத் தூக்கி வைத்து அவன் வெந்து கிழிந்து சிதைந்து பரவிய உடல்களினூடாக நடந்தான். கால்தடுக்கி அவன் விழுந்தான். மீண்டும் கையூன்றி எழுந்து நோக்கினான். விழிதொடும் தொலைவுவரை பொசுங்கிக்கொண்டிருக்கும் உடல்கள் மட்டுமே தெரிந்தன. அவ்விரிவில் பாலியின் உடலை தன் விழிகள் தேடுவதை உணர்ந்தான். மெல்ல மெல்ல உடலை உந்தி நடந்தான். கால்மடிந்து விழுந்து மீண்டும் எழுந்தான். அனலின் ஓசை மிக அருகே எனக் கேட்டது. திரும்பி நோக்கியபோது விழிகளுக்குள் அனல்விழுந்ததுபோல் ஓர் அம்பு வெடித்ததை கண்டான். மண்மதத்தின் கெடுமணம் அணுகி வந்தது.
அது தன்னை கடந்துசெல்ல விட்டு அவன் மீண்டும் கண்விழித்தான். நான்கு புலன்கள் அத்தனை கூர்கொண்டுவிட்டிருந்தன. செவிகள், விழிகள், மூச்சு, நாக்கு. ஏனென்றால் தோல் முற்றாகவே உணர்வழிந்துவிட்டிருந்தது. புலனறிதல்களில் பெரும்பகுதியை அடைத்துக்கொண்டிருப்பது அதுவே என அப்போது தெரிந்தது. அவன் உடலில் வலியே இருக்கவில்லை. தொடைகளில் தோலுரிந்து வெண்தசை தெரிந்தது. கையூன்றி எழுந்தபோது வயிற்றுத் தோல் வழன்று அகல உள்ளே நரம்புகள் வேயப்பட்ட வெந்த தசை தெரிந்தது. ஆனால் உடலென ஒன்றிருப்பதையே உணரமுடியவில்லை.
அவன் அங்கே நின்றிருந்த புரவி ஒன்றின்மேல் தொற்றி ஏறினான். அதன் கருகிய உடலின் மீதிருந்து வெந்த தோல் கைபட உரிந்து வந்தது. அது வலியை உணரவில்லை. எதையுமே உணராததுபோல் தசைகள் விதிர்க்க நின்றிருந்தது. அதன் மேல் சேணங்களோ கடிவாளமோ இருக்கவில்லை. ஆடையற்ற உடலுடன் அணியற்ற புரவிமேல் அவன் அமர்ந்து சென்றான். வெவ்வேறு இடங்களில் புரவிகள் விதிர்த்துக்கொண்டிருக்கும் உடலுடன் நின்றிருந்தன. சில புரவிகள் தலைதாழ்த்திச் சீறின. சில முன்கால்களால் தரையை அறைந்தன. நின்றிருந்த புரவி ஒன்று அறுந்துவிழுவதுபோலச் சரிந்து பக்கவாட்டில் விழுந்து குளம்புகளை உதைத்துக்கொண்டு உயிர்விட்டது. அவன் ஊர்ந்த புரவி மெல்ல முனகியது. அவன் கடந்துசென்றபோது பின்புறம் இன்னொரு புரவி விழும் ஓசையை கேட்டான்.
செல்லும் தரையெங்கும் பொசுங்கியதும் கருகியதுமான தசைத்துண்டுகள் கிடந்தன. பின்னர் அவன் கண்டான், அவையெல்லாம் பறவைகள் என. காகங்கள், மைனாக்கள், நாரைகள், சிறுகுருவிகள். சிறகுபொசுங்கி விழுந்து உயிர்விட்டிருந்தன. சில பறவைகள் அப்போதும் அலகை தரையிலூன்றி வட்டமிட்டுச் சுழன்று இறகிலாச் சிறகை அடித்து துடித்தன. அனல் அத்தனை உயரத்திற்கா எழுந்தது? நிலமெங்கும் சிறுபூச்சிகள் கருகி விழுந்துகிடந்தன. பின்னர் அவன் தரை விழுந்துகிடந்த பூச்சிகளால் இடைவெளியில்லாமல் நிரம்பியிருப்பதை கண்டான்.
படைகளின் பின்பகுதியை அடைந்தான். அங்கே எவருமிருக்கவில்லை. அந்த வெறுமை அவனை திகைக்கச் செய்தது. திரும்பி படைமுகப்பை நோக்கினான். அது கடலலையின் நுரைவிளிம்பென கொப்பளித்துக்கொண்டிருந்தது. அங்கே அனல்குமிழிகள் எழுந்து எழுந்து அணைந்தன. கௌரவப் படை என எஞ்சுவது போர்முகத்தில் ஆங்காங்கே நின்றிருக்கும் சிறுகுழுக்கள் மட்டுமே என்று உணர்ந்தபோது அவன் அகம் நடுக்கு கொண்டது. அன்று காலை அவன் கண்ட திரள் அப்படியே சென்று ஆழ்ந்த பிலமொன்றில் புகுந்து மறைந்துவிட்டதுபோல. அவன் அங்கிருந்து நோக்கியபோது ஒரு கொடிகூட தென்படவில்லை. அனைத்தும் அனலில் பொசுங்கிவிட்டிருந்தன. அத்தனை தேர்களும் சிதைந்தும் எரிந்தும் மறைந்துவிட்டிருந்தன.
இன்னும் சற்றுநேரத்தில் இங்கே போரிட எவருமிருக்க மாட்டார்கள். முற்றழிவு. இத்தகைய முற்றழிவு இயல்வதுதானா? இது இத்தனை நாள் எங்கிருந்தது? மானுட உள்ளத்திற்குள். மெய்யறிந்தோர் அதை உணர்ந்திருப்பர். அவர்களின் சொல்லில் இருந்து திறனாளர் கற்றிருப்பர். சிற்பிகள் வனைந்திருப்பர். இத்தனை பெரிய அனல் சொல்லில் உறங்கியிருக்கிறது. சித்தவெளியில் நிலைகொண்டிருக்கிறது. வெட்டவெளியில் நிறைந்திருக்கிறது. தன்னை முற்றழித்துக்கொள்ளும் வாய்ப்புடன்தான் இங்கே என்றும் மானுடம் வாழ்ந்திருக்கிறது. தன் கனவுகளில் அதை விழைந்திருக்கிறது. அஞ்சியிருக்கிறது. தற்கொலையை பகற்கனவு காணாத மானுடர் இல்லை. காமமும் ஆணவமும்கூட அதைப்போல் இனியவை அல்ல. மானுடமும் அப்பகற்கனவை மீட்டிக்கொண்டுதான் இருந்திருக்கிறது.
பேரோசையுடன் வானில் விரிந்தது ஒரு மஞ்சள்நிற வெடிப்பு. செவிகள் அதிர்ந்து பற்கள் கூச சீழ்க்கை ஒலி கடந்துசென்றது. விம் என வயிறு அதிர்ந்தது. அதன்பின் அலையலையாக காற்றில் வெம்மை எழுந்து வந்து அறைந்து கடந்துசென்றது. அவன் ஊர்ந்த புரவி ஓசையே இல்லாமல் முகம் மண்ணில் ஊன்ற முன்பக்கம் சரிந்து விழுந்து ஒரு குளம்படியோசைகூட இல்லாமல் உயிர்விட்டது. அதற்கு அடியிலிருந்து தன் உடலை உருவி எடுத்துக்கொண்டு அவன் மெல்ல நடந்தான். மீண்டுமொரு மஞ்சள் வெடிப்பில் அவனுடைய நிழல் நீண்டு துடிதுடித்து வான்வரை சென்று நீலநிறமாகி அணைந்தது. விண்ணிலிருந்து வலையொன்று இறங்குவதுபோல கரிப் படலம் மெல்ல மண்ணை வந்தடைந்தது.
வளைந்து அதிர்ந்துகொண்டிருந்த உடலுடன் அவன் தன் கூடாரம் இருந்த இடத்தை அடைந்தான். அருகிலிருந்த கூடாரத்தின் யானைத்தோல்கூரை பொசுங்கி புகையெழுந்துகொண்டிருந்தது. அவன் கூடாரம் கரித்தடமாக மாறிவிட்டிருந்தது. அதற்குள் பிறிதொரு கரித்தடமாக அவனுடைய மஞ்சம் தெரிந்தது. வெடித்துத் தெறித்த எரிதுளிகளால் அங்கிருந்த அனைத்துக் கூடாரங்களும் புகைவிட்டுப் பொசுங்கி சுருங்கிக்கொண்டிருந்தன. புரவிகள் செல்வதற்கான பாதைப்பலகைகள் பற்றி எரிந்தன. அவற்றில் பட்டு உலர்ந்திருந்த நிணநெய் அவற்றை நின்றெரியச் செய்தது. களஞ்சியங்கள் எரிந்து கரும்புகை எழுந்து வானில் ஊன்றி நின்றிருந்தது.
அவன் தன் கூடாரமிருந்த இடத்தில் தன் படுக்கையின் வடிவிலிருந்த கரிப் பரப்பில் அமர்ந்தான். அப்பால் கிடந்த தாலம் கனல்கொண்டிருந்தது. தன் தலையில் கைவைத்தபோது முற்றாகவே மயிர்பொசுங்கி தலை கலம்போல் தட்டுபட்டது. கால்களை மடித்து அதன்மேல் தலையை வைத்து அவன் அமர்ந்தான். உள்ளிருந்து ஒரு விம்மலென அழுகை எழுந்து வந்து நெஞ்சை உலுக்கியது. அவன் ஓசையில்லாமல் அழத் தொடங்கினான். அவனைச் சூழ்ந்து கனன்றுகொண்டிருந்தது காந்தள் வண்ணம்கொண்ட சிதையெரி.