போதைமீள்கையும் வாசிப்பும்

இனிய ஜெயம்

உதகை முகாமில் நண்பர் ஒருவர் நான் ஆயிரம் மணிநேர வாசிப்பு சவாலில் இருகிறேனா என வினவினார். இல்லை என்றேன். காரணம் சொன்னேன்.  பொதுவாக என் மூளை அமைப்பு வாசிப்பில் ஒரு மணிநேரம் ஊன்றி நிற்கும். இயல்பாக விடுபட்டு,  கால்மணி நேரம், வாசித்தது புனைவு எனில் கனவிலும், அபுனைவு எனில் எண்ணங்களிலும் திளைத்துக் கிடக்கும் பின்னர் வாசிப்பு தொடரும். பலவருடம் இதே நிலைதான்.  அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும் வண்டியை த்ராட்டிலை முறுக்கிப் பார்க்க நான் விழையவில்லை.

மேலும் இப்போது வேறு களங்கள்  என்னை வழிநடத்திக் கொண்டு இருக்கிறது. உதாரணமாக இப்போது நான் வாசித்துக் கொண்டிருப்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்ட ஒரு விழா மலர். மலருக்கு ஆடல் வல்லான் என்று தலைப்பு.

நடராஜ மூர்த்தம் குறித்த முழுமையான நூல். சிவனின் ஏழு வகை நடனம், இவர்களிடையேயான பேதம், நூற்றி எட்டு கரண நிலைகள், இவை குறித்த புராண,தத்துவ அடிப்படைகளை முழுமையாக விளக்கும் நூல். என் அறிதலின் எல்லைக்கு மேலாக நிற்கும் நூல். ஆகவே நிறுத்தி நிதானமாகவே வாசித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்து வாசிக்க எடுத்து வைத்திருக்கும் நூல் சோ.நா.கந்தசாமி அவர்கள் எழுதிய இந்திய தத்துவக் களஞ்சியம் என்ற ,மூன்று நூல்களாக அமைந்த ஆயிரம் பக்க  நூல். [மெய்யப்பன் தமிழாய்வகத்தில் கண்டடைந்தேன்]  இந்து சிந்தனை மரபின் ஆறு தரிசனங்கள்,பௌத்த சமண தரிசனங்கள் தமிழ் நிலத்தில், சங்க இலக்கியம் துவங்கி,சிற்றிலக்கியம் வரை எங்கெங்கெல்லாம் பயின்று வருகிறதோ, அதன் மீதான ஆய்வுகள் அடங்கிய நூல். ஜெயமோகனின் இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் முதல் பதிப்பு இரண்டாயிரத்து இரண்டு இறுதியில் வெளியாகிறது. இந்த நூல் இரண்டாயிரத்து மூன்றின் துவக்கத்தில் வெளியாகி இருக்கிறது. அடுத்து காத்திருப்பது வழமை போல கவிதைகளும் புனைவுகளும்.

முதற்கண் இந்த ஆயிரம் மணிநேர வாசிப்பு சவாலில் இறங்க வேண்டியவர்கள் யாரென்றால்.முன்னாள் தீவிர இலக்கிய வாசகராக இருந்து, தற்போது ரிடையர் ஆகி, தீவிர கேம் ஆப் த்ரோன் பார்வையாளராக இருப்பவர்கள்தான்.[விஷ்ணுபுரம் குழுமத்திலேயே இரண்டு மூன்றுபேர் இருக்கிறார்கள் :) ]  இந்த வாய்ப்பு என்பது   அவர்கள் மீண்டும் வாசிப்பு நோக்கி  திரட்டிக் கொள்ள ஒரு தருணமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

சென்ற வாரம் ஒரு முன்னாள் தீவிர வாசக நண்பர் என் பக்கத்து ஊர் காரர். ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். கஹாலியின் முடிவு என்னால் தாளவே இயல வில்லை என கண்டிருந்தது. எதோ வெளிநாட்டு நாவல் படிக்கத் துவங்கி விட்டார் என நம்பி, அவருக்குத் தொலைபேசினேன். அந்த கதாபாத்திரம் கேம் ஆப் த்ரோனில் வரும் ஒரு பாத்திரம். எட்டு சீரிஸ் கொண்ட தொடர். ஒவ்வொரு சீரிசும் பத்து எபிசோடுகள் அடங்கியது. ஒரு வாரம் விடுமுறை எடுத்து அதிலேயே மூழ்கி கிடந்தது முழு தொடரையும் முடித்து மீண்டிருக்கிறார்.  எத்தனை உட்சிக்கல்கள் நிரம்பிய, அறிவுச் சவால்கள் கொண்ட, பல நூறு பன்மைப் பரிமாணங்கள் அடங்கிய கதாபாத்திரங்கள் கொண்ட, இணையற்ற பிரும்மாண்ட காட்சிகள் கொண்ட தொடர் அது  என்று விளக்கினார்.  என்னையும் அவசியம் பார்க்க சொன்னார்

நல்லதுதான் பார்க்க வேண்டும். அது என்னை அழைக்கும் போது. இப்போது ஆடல் வல்லானே எனக்கு போதும். நான் கேளிக்கைகளுக்கு எதிரானவன் அல்ல. டெக்ஸ் வில்லர், [இன்றும் கூட] ஜாக்கி சான் ரசிகன் நான். எனது நேரத்தை எவ்வாறு கொலை செய்வது என்பதை எனது கட்டுப்பாட்டில்தான் வைத்திருப்பேனே அன்றி, உலகம் மொத்தமும் ஓடிச் சாடும் வழியில், அக்கணமே நானும் சாடவேண்டும் என்று விழைய மாட்டேன். அடுத்ததாக இந்த தொடர்கள் முன்வைக்கும் பாவலாக்களை ”நம்பி” எல்லாம் ஏமாற மாட்டேன். இந்த கேளிக்கையில் ஈடுபடத் தோன்றினால், இந்த பாவலாகளை அள்ளிச் சூடிக்கொள்ள மாட்டேன்.

நண்பரின் சிக்கல் அந்த கேளிக்கைத் தொடர் ஏதோ அவருக்குள் இலங்கும்  அறிவார்ந்த ஒன்றை நோக்கி பேசிக்கொண்டிருப்பதாக நம்பியதே.   அன்று இன்ஸ்டாஸ்டெல்லார், இன்செப்ஷன் எல்லாம் பார்த்து ஆர்கசம் கண்டு கூவிக் கொண்டிருந்த உலகப் பொது சராசரிக்கு இன்று சிக்கி இருப்பது இந்தத்தொடர். இத்தகு விஷயங்களுக்குப் பின்னே ஒரு பெரிய வளர்சிதை மாற்றம் உண்டு. உதாரணமாக பியர்ஸ் பிராஸ்னன் ஜேம்ஸ் பாண்டாக வந்த காலம் வேறு, டேனியல் க்ரிக் ஜேம்ஸ் பாண்டாக வரும் போது காலம் வேறு.  ரேம்போ எதிரியின் எல்லையைக் கடந்து சாகசம் செய்த காலம் வேறு, எக்ஸ்பாண்டபெல்ஸ் வந்த இந்த காலம் வேறு.

என்ன வித்யாசம்? கேளிக்கை இன்னும் இன்னும் என டோசெஜை ஏற்றிக் கொண்டே செல்லும் தன்மை கொண்டது. பார்வையாளன் மூளையின் டோபாமைன் சுரப்பு சீரான இடைவெளியில் நகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் அதுவே கேளிக்கையின் இயல்பு. இந்த இயல்பு நோக்கி டோசெஜை ஏற்றி ஏற்றி அது வந்து நிற்கும் இடமே, இந்த தொடர்.  இத்தகு கேளிக்கை  தொடர்களின் முதல் அபாயம் அது வீடியோ கேம் போல,எழுத்துக்கு எதிரானது என்பதே.  டான் ப்ரௌன், ஹாரி பாட்டர், சிவா திரையாலஜி போன்ற எழுத்துக்களை இடம்பெயர்த்தே இத்தகு தொடர்கள் தம்மை நிறுவிக் கொள்கிறது. இந்த தொடரை முந்தும் கேளிக்கை எழுத்து என்பது சாத்தியம் அல்ல. காட்சி நேரடியாக பார்வையாளரை வாய் பிளக்க வைக்க, மாறாக எழுத்து மொழியை படமாக உள்ளுக்குள் மாற்ற வேண்டிய பிராசசை தன்னுள் கொண்டிருக்கிறது.

இத்தகு தொடர்கள் அழிப்பது அந்த செயல்பாட்டுக்கான திறனைத்தான். இன்றைய சூழல் மொத்தமுமே காட்சி நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. சராசரிகளின் தின்னையான முகநூல் மொத்தமுமே எழுத்தை விடுத்து யு ட்யுப் போல ஆகிக்கொண்டிருக்கிறது.ஏதேனும் ஒரு நேர்மறை அம்சமாக   இத்தகு தொடர்களால் சராசரி ரசிகனின் காட்சிமொழி  சார்ந்த நுண்ணுணர்வு மேம்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. இப்போதும் ஒரு டேவிட் லீன், குரோசாவா முன்வைக்கும் காட்சிக் கோவைகளை பேச அத் துறை சார்ந்த நிபுணர்களே வர வேண்டியது இருக்கிறது.

திருவனத்தபுரத்தில்  உலக சினிமா பார்த்து சீட்டிலேயே உருகி ஊற்றிய எவரும், அவர்களின் முக நூல் பதிவுகளில் தமிழின் டூ லெட் சார்ந்து ஒரே ஒரு குறிப்பை கூட எழுதியதில்லை.  இதுதான் சூழல். ஆக கலையை விட்டுத் தள்ளுவோம்  கேளிக்கை நோக்கி சென்றால் ஆம் என்ற நேர்மையான பதிலுடன் செல்ல வேண்டும். அந்த நேர்மையே மீண்டும் நாம் இழந்தவற்றை நோக்கி நம்மை கொண்டு வரும். இல்லாவிட்டால் அந்த முட்டாள்களின் சொர்கத்திலேயே தங்கிவிட நேரும்.

பெருவலி என்றொரு நாவல் சுகுமாரன் எழுதியது. வருடமே முடிந்து விட்டது. காத்திரமான ஒரு வாசகர் கடிதத்தினை இனைய வெளியில் காண முடியாது. ஜோ டி க்ருஸ் அஸ்தினாபுரி என்றொரு நாவல் எழுதி இருக்கிறார் என்பது செய்தியாகவேனும் இலக்கிய உலகுக்கு தெரியுமா என்பது சந்தேகமாக இருக்கிறது. மாறாக இந்த தொடர் குறித்து இப்போது இணையத்தில் தேடினால் தீவிர இலக்கிய தளங்களில் இருந்தது ஒரு நான்கு கட்டுரையாவது எடுத்து விட முடியும்.

இந்தச் சூழலில்தான் சுனில் முன்வைக்கும் ஆயிரம் மணிநேர வாசிப்பு சவால் முக்கியம் பெறுகிறது. பாரி தனக்குத் தானே விதித்துக் கொண்டு மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் கதைகள் முக்கியமாகிறது.ஆயிரத்தில் ஒருவரே ஏதேனும் வாசிக்கலாம் எனும் எண்ணம் கொண்டவராக இருக்கிறார். அதிலும் ஆயிரத்தில் ஒருவரே அதில் தீவிரமாக ஈடுபடுபவராக இருக்கிறார். ரசனைக் கொம்பு தனக்கிருக்கிறது. ரசனையில் தானொரு கொம்பன் என நினைப்போர் எல்லாம் அந்த போதையை தூக்கி எரிந்தது விட்டு இந்த சவாலுக்கு வாருங்கள். உங்களை நிரூபிக்க வேண்டிய களம் இதுதானே அன்றி, இத்தகு தொடர்கள் சார்ந்து ஆள் சேர்ப்பது அல்ல

கடலூர் சீனு

***

முந்தைய கட்டுரைகாந்தியும் மார்க்சும்
அடுத்த கட்டுரைசென்னை குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா