தும்பி

“எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும். சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம், பிறகு நம் வாழ்வின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.”

– யதி

தும்பி சிறார் மாத இதழின் 25வது இதழ் நிறைவுபூத்து வெளிவந்திருக்கிறது. ஏதோவொருவகையில் இவ்வாழ்க்கை மீது தன்விருப்பம் ஏற்படுவதற்கும், வாழ்வின் தருணங்களை இறுகப் பற்றிக்கொள்வதற்கும், மனிதர்கள் மீது சலிப்பு தோன்றாமல் இருப்பதற்கும், வாழ்க்கையை வாழ்க்கைக்காக மட்டும் நேசிப்பதற்கும்… எல்லாவகையிலும் இவ்வாழ்வினை நன்றியாக மனமுணரும் கண்டடைதல்களின் நீட்சியாகவே குக்கூ காட்டுப்பள்ளியையும், தும்பி சிறாரிதழையும், தன்னறம் நூல்வெளியையும் நாங்கள் அர்த்தப்படுத்தி நம்புகிறோம்.

புற்றுநோய் தன்னுடம்பின் பாதிச்சொல்களைத் தின்றுவிட்ட தன்னுடைய இறுதிக்காலத்திலும், இன்றையக் குழந்தைகளின் கதையுலக மகிழ்ச்சிக்காகக் கனவு கண்டுகொண்டிருந்தார் ‘வாண்டுமாமா’. அவருடைய வாழ்வின் இறுதியிழை அறுந்துபோவதற்கு சிலகாலங்கள் முந்திதான் நாங்கள் சென்று அவரைச் சந்தித்தோம். அன்று, அவருடன் நிகழ்ந்த உரையாடலின் விளைவாகவும், அவரால் உண்டான அகநடுக்கத்தை மீறிச்செல்லவும் நண்பர்களிணைந்து உருவாகிய உருவாக்கம்தான் ‘தும்பி’.

நிஜம் சொல்வதென்றால், இம்முயற்சி சரியானதா? இதுசெல்லும் பாதை எத்தகையது? இது கவனிக்கப்படுகிறதா? இவையெதையும் எங்கள் சிற்றறிவு அறிவதில்லை. உள்ளொலித்த குரலுக்கு உண்மைப்பட்டுக் கிடக்கவேண்டுமென்ற உள்ளதிர்வு மட்டுந்தான் இப்போதுவரை அழைத்துவந்திருக்கிறது. குழையாத ஒரு தீர்க்கம் மனதுக்குள் எப்பவுமிருக்கிறது.

எப்போதெல்லாம் எங்கள் அகம் சோர்வுறுகிறதோ, அப்பொழுதெல்லாம் தன்மீட்சி தரும் உங்களுடைய வாக்கியங்களையோ சொற்களையோ மனதில் நினைத்துக் கொள்கிறோம். ‘முடிவிலா பிம்பத்தை உருவாக்க, இரு நிலைக்கண்ணாடிகளை எதிரெதிரே வைத்தால் போதுமானது’ என்ற உங்களின் வார்த்தைகளுக்குள் அவ்வப்போது எங்களை உட்படுத்தி சுயபரிசோதனையை எங்களுக்கு நாங்களே வார்த்துக்கொள்கிறோம். தரிசனப்பூர்வமான தருணங்களைக் காத்திருந்து பெறுகிற அனுபவக்கற்றலை உங்களால் நிறையபேர் அடைந்திருக்கிறோம். அப்படி உங்களின் எழுத்துகளின் வழியாக நாங்களடைந்த ஆதர்சம்தான் நித்ய சைதன்ய யதி. அவருடைய வார்த்தைகளை மேற்குறிப்பிட்டே இக்கடிதத்தை துவக்கியுள்ளோம்.

தும்பியின் இதுவரையிலான கதைப்பயணத்தின் வழியாக நிறைய சாட்சிக்குழந்தைகள் எங்களுக்கு வெளிச்சப்பட்டு உள்ளார்கள். கனவினையும் கற்பனையையும் பேதமையையும் உள்ளுணர்வையும் இழக்காத குழந்தைகளை இக்கணம்வரை தொடர்ந்து அடைந்துகொண்டே இருக்கிறோம். கொண்டிருக்கும் கனவிடன் ஒப்பிடுகையில், 25 இதழ்கள்வரை வந்துசேர்ந்திருப்பது மீச்சிறுதூரமே என்றறிகிறோம். யாரோ நம்மிடம் ஒப்படைத்த கைவிளக்கை, நாம் யாருக்கு ஒப்படைக்க? என்கிற வினாதான் நடக்க நடக்க பின்னால் உருவாகும் பாதாளத்தைப் பார்க்கவிடாமல் முன்னோக்கியே நடத்திச்செல்கிறது.

இக்கணத்தில், இந்த மனநிலையை உங்களோடு பகிரந்துகொள்வதும் அதன்வழி ஒரு அமைதியை அடைவதும் எங்களுடைய விழைவாக உள்ளது. நீங்கள் எங்களுள் உருவாக்கிய சொல்வெளியில் நின்று தும்பியின் துவக்ககாலத்தை நினைத்துப்பார்த்துக் கொள்கிறோம்.

உள்ளத்து நன்றிகள்!

இப்படிக்கு,

தும்பி, தன்னறம் நூல்வெளி

www.thumbigal.com | www.thannaram.in

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63
அடுத்த கட்டுரைமழைக்காலநிலவு