இலக்கியத்தன்மை என்பது…

அன்புள்ள ஜெவுக்கு,

நான் ஒரு இளம் வாசகன், என்னை விட வயதில் மூத்தவர்களால் பரிந்துரைக்கப்பட்ட இலக்கிய படைப்புகளை தொடர்ந்து ஒரு வருடமாக வாசித்து வருகிறேன். தங்களின் அறம் சிறுகதை தொகுப்பு படித்தேன். அதில் நூறு நாற்காலி சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது.

அது மட்டுமின்றி பஷீரின் குறுநாவல்கள், மண்ட்டோ சிறுகதைகள், பூமணியின் வெக்கை, பா.வெங்கடேசனின் குறுநாவல்கள் ,ஜி.நாகராஜின் குறத்தி முடுக்கு, பெருமாள் முருகன்,சுகுமாரன்,தி.ஜாவின் அம்மா வந்தாள்,இமையம் என இலக்கிய படைப்புகளை படித்து இருக்கிறேன்.

ஆனால் என் வயதிற்கு இப்படைப்புகள் எங்கு இலக்கிய தன்மை அடைகிறது என விளங்கவில்லை. இலக்கிய கூறு என்பன யாவை என தங்கள் மூலம் அறிய விழைகிறேன். ஒரு படைப்பு எந்த பகுதியில் இலக்கிய தன்மைய அடைகிறது என நீங்கள் எண்ணுகிறீர்கள். இந்த கேள்வியை ஒரு இளம் வாசகனாக உங்கள் முன்வைக்கிறேன்.

மணி பாபு

***

அன்புள்ள மணிபாபு

இலக்கியத்தை தொடர்ந்து வாசிக்க வாசிக்க உங்களுக்கே பிடிகிடைக்கும். எளிமையாகக் கேட்டால் ஒரு படைப்பை நல்ல படைப்பு என உங்கள் அளவில் எப்படி முடிவுசெய்கிறீர்கள்? நீங்கள் ஏற்கனவே வாசித்தவற்றைக் கொண்டு, இல்லையா? அதைப்போல ஒரு இலக்கியச் சூழலில் முன்னரே உருவாகியிருக்கும் இலக்கியங்களே அடுத்துவரும் இலக்கியங்களின் இடத்தை முடிவுசெய்கின்றன

சென்றகாலகட்டங்களில் ஒவ்வொரு மொழிக்கும் உரிய இலக்கியம் தனித்து இயங்கியது. சென்ற நூறாண்டுகளாக உலக அளவில் இலக்கியம் ஒன்றாகிவிட்டிருக்கிறது. மொழியாக்கங்கள் வழியாக. உலகம் முழுக்கச் செல்லும் கருத்துக்கள் வழியாக. ஆகவே இன்றைய அளவுகோல் உலக இலக்கிய மரபைக்கொண்டு உருவாகி வருகிறது

பொதுவாகச் சொன்னால் ஒருபடைப்பின் இலக்கியமதிப்பை உருவாக்குவன என்னென்ன?

அ. அதன் பன்முக வாசிப்புத்தன்மை. நுண்ணுணர்வுடன் அணுகுந்தோறும் நம் கற்பனையிலும் சிந்தனையிலும் வளர்ந்துகொண்டே இருக்கும் இயல்பு

ஆ. வாழ்க்கைமீதும் பண்பாட்டின் மீதும் அது கொண்டிருக்கும் தொடர்பு. நல்ல படைப்பு வாழ்க்கையில் நாம் அறிந்த உண்மையை, நாம் தேடும் உண்மையை சுட்டிநிற்கும். பண்பாட்டின்மீதான விமர்சனமாகவும் விளக்கமாகவும் நிலைகொள்ளும்

வடிவம், பேசுபொருள் எல்லாம் மாறக்கூடியவை. இவ்விரு கூறுகளுமே அடிப்படையானவை என சொல்லலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஅபி – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-38