தோப்பிலின் புகையிலை நெட்டு

ஜெ

குளச்சல் மு யூசுப் இதை எழுதியிருந்தார். கூடவே தோப்பிலின் பழைய டிவிஎஸ் 50 படத்தையும் பகிர்ந்திருந்தார்

நூற்றுக்கணக்கான அஞ்சலிகளில் என்னைக் கவர்ந்தது இது. ஏனென்றால் இதில் ‘சின்ன’விஷயங்கள் சில உள்ளன. இவைதான் ஒரு மனிதரை நெருக்கமாகக் காட்டுபவை. பொதுவாக அஞ்சலிகளில் ‘மிகச்சிறந்த எழுத்தாளர். நல்ல மனிதர். பேரிழப்பு’ என்ற டெம்ப்ளேட்தான் இருக்கும். சிலவற்றில் ‘நான் எவ்வளவு முக்கியமானவன் என்று அன்னார் பலமுறை என்னிடம் சொன்னதுண்டு’ என்றவகையான சுயபிலாக்காணம் இருக்கும்

நீங்கள் ராஜமார்த்தாண்டன், லோகிததாஸ் போன்றவர்களைப் பற்றி எழுதிய நினைவுக்குறிப்புகளில் இந்தச் சின்னவிஷயங்கள் நிறைந்திருந்தன. அவை அந்த மனிதர்களை நெருக்கமாகக் காட்டின. சுந்தர ராமசாமி நினைவின் நதியில் ஒரு கிளாஸிக் அந்தவகையில்

டி.எஸ்..ராமச்சந்திரன்

தோப்பிலின் ‘நெட்டு’

நாகர்கோயில் ராமன்புதூர் ரோட்டில் தோப்பிலாருடன் நடந்துகொண்டிருந்தேன். ஒரு முறுக்கான் (வெற்றிலை) கடையைப் பார்த்ததும், “கொஞ்சம் நெல்லுங்கோ ஒரு வெத்திலை போட்டுட்டு” என்றார். கடைக்காரரிடம் “ஒரு வெத்திலைப் போடூதுக்கு. ஒரு வெத்திலையை மடக்குங்கோ” என்று சொல்லிவிட்டு, “நெட்டு இரிக்கா?” என்று கேட்டார். கடைக்காரருக்குப் புரியவில்லை. “நெட்டுன்னா?” என்று திருப்பிக் கேட்டார்.

வெற்றிலைப் பழக்கமுள்ளவர்களில் சிலர் அங்கு விலாஸ், யாப்பாணம் போன்ற புகையிலைகளுக்குப் பதிலாக நெட்டு எனப்படும் புகையிலையின் மூட்டுப் பகுதியைப் பயன்படுத்துவார்கள். குமரி மாவட்டத்தில் பலருக்கு வெற்றிலையுடன் இந்த நெட்டுப் போடும் பழக்கம் முன்பு இருந்தது. மரத் துண்டை ஈறுகளி டையே ஒதுக்கிக்கொண்டது போன்ற உணர்வு மட்டும்தான் இதிலிருக்கும். நெட்டின் கடினத்தன்மை ஈறுகளை அழுத்தும்போது சுண்ணாம்பின் காரத்தை அதிகம் உணரலாமே தவிர, புகையிலைபோல் இதில் சிறு போதை ஏற்படுவதற்குக் காரணங்களில்லை. இதில் கொஞ்சம் மிருதுவான இளம் நெட்டுகள் என்ற ஒரு வகையுண்டு. இதில் கடினத்தன்மை குறைவாக இருப்பதுடன் புகையிலைக்கான வீரியமும் ஓரளவு இருக்கும்.

”நெட்டுன்னா?” என்று திருப்பிக்கேட்ட கடைக்காரரிடம் விவரிக்க விரும்பாமலோ என்னமோ தோப்பிலார் பதில் சொல்லவில்லை. நான் இடையே நுழைந்து நெட்டுக்கு விளக்கம் சொல்லி இருக்கா என்று கேட்டேன். “நான் இங்க கடை போட்டு வருஷம் எட்டாகுது. இப்படியொரு சாதனம் இருக்குற விஷயமே மொதமொதல்ல எனக்கு இப்ப தான் தெரியும்” என்றார் கடைக்காரர். தோப்பிலார் பதில் சொல்லாத காரணத்தைப் புரிந்துகொண்டேன். நான் முறுக்கான் கடை வியாபாரத்தை நிறுத்தி அப்போது இருபது வருடங்கள் கடந்து விட்டன. இதனிடையே நெட்டு மறைந்துபோன தகவல் எனக்கும் தெரியாது.

குளச்சல் மு யூசுப்

அன்புள்ள ராமச்சந்திரன்

முன்பெல்லாம் குமரிமாவட்டத்தில் புகையிலை பலவகை. யாப்பாணம் எனப்படும் யாழ்ப்பாணம் புகையிலை நயமானது. வடக்கன் எனப்படும் மலபார் புகையிலை காரம் கூடியது. தேர்ந்த வெற்றிலைரசிகர்கள் யாழ்ப்பாணத்தையே விரும்புவார்கள். ஆனால் மப்பு ஏறவேண்டுமென்றால் வடக்கன் வேண்டும். கத்துக்குட்டிப் புகையிலைவாதிகள்தான் தடம் புகையிலை அல்லது தடைப்புகையிலை எனப்படும் பதப்படுத்தப்பட்ட களிப்புகையிலையை சேர்ப்பார்கள். அது பசைபோல பதப்படுத்தப்பட்டு வாழைத்தடையில் [வாழைத்தண்டை உலரவைத்து விரித்து எடுப்பது] வந்தமையால் அந்தப்பெயர். கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து பதப்படுத்தப்பட்ட புகையிலை நல்ல வெற்றிலைப் பிரியர்களால் வெறுக்கப்பட்டு கிழவிகளால் விரும்பப்பட்டது.

அன்றெல்லாம் அங்குவிலாஸ் எனப்படும் தடம்புகையிலை பிரபலம். இன்று வெற்றிலை போடுபவர்களே குறைந்துவிட்டனர். முக்குக்கு முக்கு இருந்த வெற்றிலைக்கடைகளும் அருகிவிட்டன. குமரிமாவட்டத்தில் அன்றெல்லாம் பெட்டிக்கடைக்கே முறுக்கான்கடை என்றுதான் பெயர். முறுக்கான் என்றால் தாம்பூலம். நான்கும்கூட்டி முறுக்குவதனால் அந்தப்பெயர். அதில் நெட்டு எனப்படும் புகையிலைத் தண்டு கடினமானது. அதன் உட்பகுதி வெள்ளையாக விறகுபோலிருக்கும். மேலாகச் சீவி மெல்வார்கள். அது நெடுநேரம் புகையிலையை வாயிலிட்டு மெல்பவர்களால் விரும்பப்படுவது. ஒருமணிநேரம் நின்றுவிளையாடும். தோப்பிலுடன் ஒருநாள் புகையிலை வகையறாக்களைப் பற்றி விரிவாகப் பேசியதை நினைவுகூர்கிறேன்

இத்தகைய சிறியதகவல்களினூடாக ஓர் ஆளுமை நினைக்கப்படுவது ஏன்? ஏனென்றால் இதில் அவருடைய ஆளுமையின் ஆழம் ஒன்று தன்னிச்சையாக வெளிப்படுகிறது. தோப்பில் படித்தவர், வசதியானவரும்கூட. ஆனால் அவரிடமிருக்கும் அந்த நாட்டுப்புறத்தன்மையின் அடையாளம் அது. அவர் மானசீகமாக தேங்காப்பட்டினம்காரர் என்பதற்கான சான்று. அதை நாம் உடனடியாக ஒரு படிமமாகவே வாசிக்கிறோம், வள்ர்த்தெடுத்துக் கொள்கிறோம். ஒருவரை அறிவார்ந்து மதிப்பிடுவது, வரையறைசெய்வதுஒருவழி. இது இலக்கியத்தின் வழி.

ஜெ

அண்ணாச்சி – 4
அண்ணாச்சி – 3
அண்ணாச்சி – 2
அண்ணாச்சி – 1
அண்ணாச்சி
முந்தைய கட்டுரைகுமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதுவிழா கருத்தரங்கு- அனோஜன் பாலகிருஷ்ணன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58