மூவகைத் துயர். ச.துரை கவிதைகள் மூன்று

[2019 ஆம் ஆண்டுக்கான குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது பெறும் ச.துரையின் கவிதைகள் குறித்த ஓரு ரசனை.

கடலூர் சீனு

ச.துரை விக்கி

குமரகுருபரன் விக்கி

வெடிகுண்டு நகரத்திடம் சொன்னது

”நான் விழுந்துகொண்டிருக்கிறேன்”

நகரம் கேட்டது
”நீ யாருடைய பக்கம்”

வெடிகுண்டு சொன்னது
”நான் யாருடைய பக்கமும் இல்லை
நான் விழுந்துகொண்டிருக்கிறேன்”

நகரம் சொன்னது
”உன்னை சுற்றிப் பார்”

வெடிகுண்டு கூறியது
”காலம் கடந்துவிட்டது ”

நகரம் எதுவும் சொல்லவில்லை.

-நினா கோஸ்மான்- ரஷ்யா-

[தமிழில்  வெ.நி. சூர்யா]


சமீபத்தில் நண்பர் அனுப்பியிருந்த வெ நி சூர்யா அவர்களின் முகநூல் பக்கசுட்டிகளில் நான் வாசிக்க நேர்ந்த கவிதைகளில் ஒன்று இது.

வாசித்த அக் கணமே இதே உலகை இந்த நாணயத்தின் மறு பக்கத்தை இவ்வண்ணமே கூறிய சா. துரை கவிதை ஒன்று நினைவில் எழுந்தது. மேற்கண்ட கவிதையில் மௌனமான நகரத்தின் பதுங்கு குழிக்குள் எட்டிப் பார்க்கிறது ச.துரையின் கவிதை ஒன்று.

மொத்தமாகப் பதுங்குழிகளில் வந்து விழுந்தார்கள்

“அப்பா நாம் ஏன் பாம்பைப்போல
படுத்தபடியே நகர்கிறோம்?”
இறைவன் வானிலிருந்து
திராட்சிகளை வீசிக்கொண்டிருக்கிறார் மகளே
அவை புளிக்கும் திராட்சைகள்
உனக்குப் பிடிக்காதல்லவா?

ச.துரை.

உலகப்பொது மானுடத் துயரின் கரிக்கும் சுவையை கவிதையில் தொட்டெடுக்கும் உலகக் கவி மனங்கள் எல்லாம், பொதுமனங்கள் அறிய இயலாதொரு உயரத்தில் நின்று, ஒன்றுக்கொண்று சந்தித்துக் கொள்ளுமோ ? உலகக் கவிதைகளை தொகுத்துத் தொகுத்தே மானுடத் துயரின் சாரத்தை கண்டடைந்து விட முடியுமோ?

துயரம்தான் பொது. அந்தப் பொதுவில் இருந்து உலகக் கவி மனங்கள் தங்கள் கவிதை வழியே தொட்டெடுக்கும் ஒவ்வொரு துளியும் தனித்துவமான துயரம் கொண்டது. இந்தத் துளி சாரமான அந்த துயரக் கடலை சுட்டி நிற்பது.

எக் கணமும் கரையை உடைக்கக் காத்திருக்கும், அல்லது கரை மீறும் அக் கடலை குறித்த, அந்தப் பிரளய நாள் குறித்த கவிதைகள் உலக மரபில் எத்தனையோ இருக்கக் கூடும் அதில் ஒன்று இது.

கடலும் கரையும்

எஹுதா அமிக்ஹாய் -இஸ்ரேல்.

[தமிழில் வெ.நி.சூர்யா]

கடலும் கரையும்
எப்போதும்
ஒவ்வொன்றுக்கும் அடுத்ததாக உள்ளன.

இரண்டும்
ஒரு வார்த்தையை மட்டும்
பேசவும் சொல்லவும்
கற்றுக்கொள்ள விரும்புகின்றன.

கடல் ”கரை” என்று சொல்லவிரும்புகிறது.
கரை ”கடல்”என்று சொல்லவிரும்புகிறது.

மில்லியன் வருடங்களாக
அவை நெருங்கிவந்துகொண்டிருகின்றன
அந்த ஒரு வார்த்தையை பேசுவதற்காகவும்
சொல்லுவர்தற்காகவும்

கடல் ”கரை”என்றும்
கரை ”கடல்” என்றும் சொல்லும்போது

மீட்சி உலகத்துக்கு வருகிறது.
உலகமோ
பெருங்குழப்பத்திற்கே திரும்புகிறது.

கடல் கரை மீறிய இந்தப் பெருங்குழப்ப உலகில், ஏதேனுமொரு கண்டத்தில் கடல் பின்வாங்கி இருக்கும் தானே. அப்படிக் கடல் பின்வாங்கிச் செல்லும் குழப்ப உலகில் ஸ்தம்பித்து நிற்கிறது ச.துரையின் இந்தக் கவிதை.

கூரையின் மீது மீன்களை வீசிப்போகிற காகங்களை
சமுத்திரம்
தூண்டிலிட்டு தன்னுள் இழுத்துக் கொள்வதைப்போல
வினோத மீனவன் கனா கண்டான்.

பின்னிரவு அவனிடத்தே பிடிபட்ட
எல்லா மீன்களுமே
காகங்களின் சாயலை ஒத்திருந்தன.

பரப்பி விலையை கூவத்தொடங்கியவன்
சமயத்திற்கு மேல்
கிலோ காகம் எழுபதுவென
பலத்து அலறத் தொடங்கினான்.

சந்தையே அவனைத்தான் பார்த்தது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.

எங்களூர் சமுத்திரம் கூட
சிலநூற்றாண்டுகளுக்குப் பிறகு,
அன்றுதான்
படுவேகமாக பின்னோக்கியும் நடந்தது.

எங்களூரில் சில சுனாமிப் பைதியங்களுண்டு. சில சமயம் தன்னிலை சிதற சுனாமி எழ வேண்டி இருக்க, சில சமயம் அத் தன்னிலை பிறழ தவறாக உடலைக் கிடத்தி நிகழ்த்தும் தூக்கம் எனும் எளிய காரணியே போதுமானதாக இருக்கிறது.

பெயர்

-தாமஸ் ட்ரான்ஸ்ரோமர்-

[தமிழில் வெ.நி. சூர்யா.]

காரோட்டும்போது எனக்கு
தூக்கம் சொக்கிகொண்டு வர
சாலையோரத்திலிருந்த ஒரு மரத்தினடியில் நிறுத்தி
பின்னிருக்கையில் சுருண்டு உறங்கினேன்.

எவ்வளவு நேரத்திற்கு?
மணிநேரங்களுக்கு.

இருட்டிவிட்டிருந்தது .

திடீரென எழுந்தேன்.
எனக்குத் தெரியவில்லை
நான் எங்கிருக்கிறேனென்று.

முழுப் ப்ரக்ஞ்சையுடன்தான்
ஆனாலும் அது உதவவில்லை.
நான் எங்கேயிருக்கிறேன்?
நான் யார்?

நான் பின்னிருக்கையொன்றில் விழித்து
கோணிப்பையொன்றில் சிக்கிக்கொண்ட பூனையென
திகிலில் தத்தளிக்கும் ஏதோ ஒன்று.
நான் யார்?

கடைசியில் என்னிடம் திரும்பி வருகிறது
வாழ்வு.

என் பெயர்
ஒரு தேவதையைப் போல எதிர்படுகிறது
சுவர்களுக்கு வெளியே
எக்காளமொன்று சமிக்ஞ்சையிடுகிறது
முழக்கங்களை.[லயோனரா ஆலாபனையில் உள்ளதைப்போன்று]

என்னை மீட்கவரும் காலடிகள்
நீளமான படிக்கட்டில்
சாதுர்யமாக இறங்கி வருகின்றன.
அது நான்தான்…
அது நான்தான்…

இருந்தாலும்
ஒளிரும் விளக்குகளுடன்
போக்குவரத்து சறுக்கிக் கடக்கும்
முக்கிய சாலைக்கு சிலமீட்டர் தூரத்திலுள்ள
மறதியின் நரகத்தில்
நடந்த பதினைந்து நொடி இழுபறியை
என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.

இதில் உள்ளது தன்னிலை மீளும் ஆசுவாசம் எனில், ச.துரை கவிதையில் இலங்குவது தன்னிலை பிளவுறும் முதல் கணத்தின் பீதியூட்டும் சித்திரம்.

நகரின் வெகுநிசப்தமான சப்வே ஒன்றை
கடக்கையில்தான் அதுநடந்தது
உங்களுக்கு இதுமாதிரி நடப்பதில்
அத்தனைபெரிய ஆச்சரியமொன்றும்
இல்லையென்றார்கள்
ஆமாம்
அப்போதுதான் நான் எனது
இடதுகால் கட்டைவிரலால்
எனது இடதுகால் கட்டைவிரலை தொட்டேன்.

ச.துரை

மானுடத் துயர் மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டதென இந்திய மரபு வகுக்கிறது. ஆதி ஆத்மீகம் [அகக் காரணங்கள்],ஆதி லௌகீகம் [சமூகக் காரணிகள்],ஆதி தெய்வீகம் [இயற்கையால் நிகழ்வது] என்பவை அக் காரணிகள்.

மிகப் பொதுவானதொரு நோக்கில்,முதல் கவிதையை ஆதி லௌகீக துயரையும், இரண்டாவது கவிதை ஆதி இயற்கை துயரையும், மூன்றாவது கவிதை ஆதி ஆத்மீக துயரையும் மையம் கொள்வதாகக் கொள்ளலாம் .

எனில் அந்த துயர நாணயத்தின் ஒரு பகுதியை சுட்டும் உலகக் கவி மனங்கள் ஊடே அந்த நாணயத்தின் மறு பகுதியை சுட்டுவதாக [அல்லது ஆரோகணத்துக்கு இப்புறம் இலங்கும் அவரோகணமும் போல] இருக்கிறது ச.துரையின் மேற்கண்ட கவிதைகள்.

முந்தைய கட்டுரைகுமரகுருபரன் நினைவலைகள்
அடுத்த கட்டுரைசந்தன நதியில்…