ச.துரை, ஐந்து கவிதைகள்

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருதை 2019 ஆம் ஆண்டுக்காகப் பெறும் ச,.துரையின்  ‘மத்தி’ கவிதை தொகுதியிலிருந்து சில கவிதைகள்.

 

 

ச. துரை- ஐந்து கவிதைகள்

ச.துரை – நான்கு கவிதைகள்

ச. துரை கவிதைகள்

 

ஓடை பரந்து விரிந்த பழங்கிழத்தியின்

வெளுத்த கூந்தலை மாதிரிக் கிடக்கிறது

கூந்தலின்மேல் ஓடம் நகர்கிறது

ஓடத்தில் பயணித்தபடியே

பழங்கிழத்தியின் வெளுத்த கூந்தலை அள்ளிப்பார்க்கிறேன்

பட்சிகள் விகாந்திரிக்கின்றன

நிலவேந்தர்களாகக் காட்சியளிக்கின்றன

பெரும் நிழல் ஓடத்தின்மேல் அமர்கிறது

பெருந்துளை ஒன்றை ஓடத்தின்மேல் நெய்கிறது

ஓடத்தின்மேல் பழங்கிழத்தியின் வெள்ளைக்கூந்தல்கள்

உதிரிகளாக உள்நுழைகின்றன

எல்லா பட்சிகளும் பறந்துவிட்டன

ஓடையின் தனித்த மத்தியில்

ஒரு கவிதையானது முடிவுக்கு வருகிறது

யாருமே எதிர்பார்க்காத முடிவு

நானுமேகூட விரும்பாத முடிவு இது

*

 

நகரின் வெகு நிசப்தமான சப்வே ஒன்றை

கடக்கையில்தான் அது நடந்தது

உங்களுக்கு இதுமாதிரி நடப்பதில்

அத்தனை பெரிய ஆச்சரியமொன்றும்

இல்லை என்றார்கள்

ஆமாம்

அப்போதுதான் நான் எனது

இடதுகால் கட்டைவிரலால்

இடதுகால் கட்டைவிரலைத் தொட்டேன்

 

*

 

கடற்பாறையொன்றின் மீது

வாழ்வை உலரவைத்தேன்

இரைகிடைக்காத கிழட்டுப்பருந்துகள் வந்தமர்கின்றன

இடைக்கால மீன் தடைகளில்

படகுகள் கட்டப்படுகின்றன

மீன்குஞ்சுகளும் விஷம் மிகுந்த

அஞ்சாலைகளும் உரசிப்போகின்றன

ஆண்டுகளகி உலர்ந்த வாழ்வை மீட்டெடுக்க வந்தபோது

விலாங்கு மீன்பிடி இளைஞன் ஒருவன்

பழுத்த தென்னை ஓலைகளைப்

பின்னியபடியே சொன்னான்

நல்லவாழ்வுதான் ஆனால் வீணாய்ப் போகிறது

 

*

 

ஒரு பூவைத் தொடுவதுபோலத்தான்

எனது பைத்தியக்காரத்தனத்தையும் தொடுவேன்

 

*

 

கண்ணாடிக்கோப்பைக்குள்

தண்ணீரை நிரப்பிக்கொண்டிருந்தவனை

எதேச்சையாகத்தான் பாத்தேன்

படுகவனமாய் அதனுள் விழுந்துகொண்டிருந்தான்

 

 

ச.துரையின் மத்தி கவிதைகள்- லக்ஷ்மி மணிவண்ணன்

ச.துரைக்கு குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது

குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதாளர்கள்.

இருளுக்குள் பாயும் தவளை. ச. துரை கவிதைகள் – கடலூர் சீனு