பி.ராமன் கவிதைகள், மேலும்

பி.ராமன் கவிதைகள்

ஒரு துளி

கூரைக்குமேல் ஒரு துளி விழுவது
கேட்பதற்காக நான் விழித்தெழுந்தேன்
இன்று பெய்யக்கூடும் இன்று பெய்யக்கூடும்
என்னும் கனவுகள் கருமைகொண்டெழுந்தன
இன்று பொழியக்கூடும் என்ற எண்ணத்தான்
மின்னி மின்னி நான் இருந்தேன்

நாளைக் காலையில் மழைக்காலம் வந்தது
என்னும் சொற்றொடரால் மூழ்கும் அனைத்தும்
பாதித்துயிலில் பெய்யும் இரைச்சல் கேட்டு
சாளரவாயில் திறந்தேன்
துயிலில் நனைந்து ஊறிய மழை என்ற
ஒற்றைச் சொல்லில் ஜன்னல் கதவு  நின்றாடியது.
ஆகவே இன்று துயிலாமல் மழைக்காலமாக
இருள்வதற்கு முன்பு மழையாக
விரிவதற்கும் முன்பு தகரக்கூரைமேல்
இப்பிரபஞ்சத்தின் தாகம் கொந்தளிக்க
வைரத்துண்டுகளாக மாறிய மழைத்துளி
அறுந்துவிழுவதைக் காத்திருக்கிறேன்

சட்டென்று போன பகலில்

எல்லா பொருட்களுக்கும் இன்று
சுருள்கம்பிபோன்ற நிழல்கள்
அமைந்து சுருங்கி பாய்ந்து விரிகின்றன
நிழல்கள் ஒவ்வொன்றும்
சூரியன் உதித்தபோதே
பொருட்கள் முடிவுசெய்துவிட்டிருந்தன
தங்கள் நிழலை மிதித்து தாழ்த்தி
பின்னர் பாய்ந்தெழச்செய்யவேண்டும் என்று
எதற்காக?
எனது பகல்
விரைவாக சென்று மறைவதற்காக
ஆம்
என் பதற்றங்களும் மகிழ்ச்சிகளும் சலிப்பும்
கல்லும் மண்ணும் மேகங்களும் புல்முனைகளும்
எல்லாம் சட்டென்று சென்று மறைந்துவிட்டிருக்கின்றன
பதிலுக்கு எனது பகல்
இரவில் கரையும் இடத்தில்
பாய்ந்தெழுந்து நின்றுகூத்தாடுகின்றன
நிழல்கள்

தூசி

கட்டற்ற உள்ளத்தின் தேய்ந்த விரல்களின் எலும்புகள்
எழுதி உருவாக்குகின்றன
உள்ளத்திலேயே வேரோடு பிடுங்கப்பட்டுவிட்ட
உயிர்க்குலங்களின் நீண்ட பட்டியல்

ஒருவன் உள்ளே வந்து
அடுக்கியடுக்கி வைக்கப்பட்டவற்றில் இருந்து
ஒவ்வொன்றாக எடுத்து வீசி உதறினான்
தூசிப்படலம் மூச்சடைக்க வைத்தது
அது கொஞ்சம் அடங்கியபின் நாம் உள்ளே நுழையலாம்

கூரிய தூசி உரசித்தேயவைத்த சிற்பங்களுக்குப் பின்னால்
பதுங்குகின்றன உயிர்க்குலங்கள்
கூரிய தூசி அறுத்துச் சரித்த காட்டின் நடுவில்
உறுமி நிற்கின்றன இடகாலங்கள்

உலகத்தை விரிவாக்கவேண்டும் என நான் விரும்பினேன்
தூசி மட்டும்தான் தடை

எழுந்து செல்பவர்களிடம்…

எழுந்துசெல்லும்போது
கொஞ்சம் திரும்பிப்பாருங்கள்
நீங்கள் இத்தனைநாள்
பதிந்து இருந்து
உரசி உருவான வழுவழுப்பை

இந்த மென்மையை
இனி எத்தனை நாள் சகித்துக்கொள்வேன்?

செல்லுங்கள்
ஆனால் என் முணுமுணுப்பு
உங்கள் பின்னால் இருந்துகொண்டிருக்கும்

’அமரும்போது
குண்டி சென்று
நரகத்தில் முட்டட்டும்’ என்று

ஊட்டி கவிதையரங்கம்:பி.ராமன்
ஊட்டி-கவிதையரங்கு
குற்றாலம் பதிவுகள் இலக்கிய அரங்கு (2001) – அனுபவப் பதிவுகள்
பி. ராமனின் பேட்டி

 

 

 

 

முந்தைய கட்டுரைலண்டன் தமிழ் இலக்கிய குழுமம் சந்திப்பு -கடிதம்
அடுத்த கட்டுரைதோப்பில் முகமதுமீரானின் கலையும் கருத்துநிலையும்- 2