வெள்ளையானை – பலராம கிருஷ்ணன்

வெள்ளையானை வாங்க

வெள்ளை யானையை ஏன் எழுதவேண்டும்?

இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒடுக்கப்பட்டவர்கள் முன்னெடுத்து நடத்திய போராட்டம் பற்றிய வரலாறு மற்றும் தமிழ்நாட்டில் 1878 களில் நிகழ்ந்த தாது வருடப் பஞ்சம் பற்றிய வரலாற்றுப் புனைவு. நாவல் வெளியான நாள்முதல் தொடர் கூட்டங்கள் வழியாக நாவலின் வாசிப்புச் சாத்தியங்கள் புதிதாக வந்தபடியே உள்ளன. சமீபத்திய நிகழ்வாக தஞ்சை இலக்கியக் கூடுகையில் வெள்ளையானை பற்றிய விவாதமும் அதற்கு சுரேஷ் பிரதீப் எழுதிய விளக்கத்தையும் சமூக வலைதளத்தில் வாசிக்க நேர்ந்தது.

வெள்ளையானை போன்ற ஒரு சாகசமில்லா அறம் சார்ந்த வரலாற்றுப் புனைவை வாசிக்கும் போது அதன் சிக்கல்களையும் சமகால நிகழ்வுகளில் அதன் பாதிப்புகளையும் கருத்தில் கொண்டே வாசிக்க முடியும். மானுட அறம் சார்ந்த கேள்விகளை தன் படைப்புகளின் மூலம் வாசகர்களின் மனதில் எழுப்பும் ஜெயமோகன், வெள்ளையானை மூலம் பெரும் விசையோடு மறுபடியும் அக்கேள்விகளை எழுப்பியிருக்கிறார். வெள்ளையானையில் மானுடம் சந்திக்கும் பேரழிவினூடாக அக்கேள்விகளை எழுப்பி இருக்கிறார். (1)

வரலாறும் வரலாற்றுப் புனைவும்

வரலாற்று நூலையும் வரலாற்றுப் புனைவையும் எப்படி அணுக வேண்டும் என்ற புரிதல் வெள்ளையானைக்கு மிக அவசியம். நாவலின் காலம் 1870. சமகால சம்பவங்களின் தொடர்ச்சியைத் தெரிந்துக் கொள்ள பின்னே சென்றால், முதலில் அகப்படும் நூற்றாண்டு. நாவலின் சில கதாப்பாத்திரங்கள் வாழ்ந்த மனிதர்களின் சாயலில் பிண்ணப்பட்டது. பின் தொடரும் நிழலின் குரலைப் போல் அரசு மற்றும் அரசியல் நிர்வாகம் குறித்த பல கேள்விகளை எழுப்பி விவாதிக்காமல், நாவலின் மையம் அறம் சார்ந்தே முன்நகர்கிறது. இதனால் வெள்ளையானை வரலாற்றின் ஒரு பக்கத்தை மட்டும் காட்டும் நாவலாகவும் தெரிகிறது (2).

வரலாறு என்பது முழுவதும் தர்க்க மற்றும் தரவுகளின் அடிப்படையில் எழுதப்படுவது. மாறாக வரலாற்றுப் புனைவு வரலாற்றின் தர்க்கங்களையும் தரவுகளையும் எடுத்துக் கொண்டு கற்பனையால் தன்னை நிரப்பிக் கொள்வது (3). வரலாற்றுப் புனைவில் இந்த கற்பனை என்னும் மையச்சரடு புனைவெழுத்தானின் சிந்தனை மற்றும் அவரின் மன எழுச்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல் புறா ஆகியவையும் வரலாற்றின் ஒரு பக்கத்தை மட்டுமே காட்டிச் செல்வது. இந்த நாவல்கள் அனைத்தும் தன்னுள் சாகசத் தன்மையைக் கொண்டதாலும், கதைக்களம் பழங்கால வரலாறு என்பதாலும் இதன் விமர்சனங்களில் இந்தச் சாய்வு பொருட்படுத்தப்படுவதில்லை. சுஜாதாவின் இரத்தம் ஒரே நிறம் நாவலும் நவீன வரலாற்று காலத்தைக் கதைக்களமாகக் கொண்டிருந்தாலும், அதுவும் சாகச நாவல் வகையைச் சார்ந்ததே (1).

கல்கி, சாண்டில்யன் மற்றும் சுஜாதா இவர்களின் வரலாற்றுப் புனைவுகளில் இருந்து ஜெயமோகனின் வெள்ளையானை மாறுபடும் இடம், சாகசம் குறித்தான கற்பனை. வெள்ளையானை வாசகனின் வாசிப்பையும் சேர்த்து, அவனின் சிந்தனயையும் கோரும் படைப்பு. வெற்றுப் பெருமிதங்களை உதறிவிட்டு அனுக வேண்டியது.

நாவலின் முதன்மைப் பாத்திரமான ஏய்டனின் பார்வையில் நாவல் விரிவடைவதால் இந்த ஒற்றைச் சார்பு ஏற்பட்டிருக்கலாம். அனைத்து தரப்பினரையும் பற்றி நாவலில் எழுத வேண்டும் என கோருவது, புனைவெழுத்தானின் சுதந்திரத்திற்கு இடையூறாவே கருதுகிறேன். நாவல் எதை நோக்கிச் செல்ல வேண்டும் எதைச் சொல்ல வேண்டும் என புனைவெழுத்தாளனே முடிவு செய்ய முடியும்.

வெள்ளையானை – ஆங்கிலேய அரசின் காலனியக் கொள்கை மற்றும் இந்திய நிர்வாகத்தை, நீதியுணர்ச்சியுள்ள நிர்வாக விதிகளுக்கு உட்பட்டு செயல்படும் அயர்லாந்தைச் சேர்ந்த ஆங்கிலேய அரசின் நிர்வாகியான ஏய்டனின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளதால், நாவலின் மையம் என்பது ஏய்டனின் வாழ்வில் அவன் அடைந்த மாற்றங்களும் குற்றவுணர்வுகளும் தான். ஏய்டன் வழியாக அவ்வுணர்வு வாசகர்களுக்குக் கடத்தப்படுகிறதே தவிர வரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் விவாதித்து ஒரு முடிவை நோக்கி நகர்வது அல்ல. அது வரலாற்றுப் புனைவின் வேலையும் அல்ல. புனைவு வரலாற்றின் தரவுகளையும் தர்க்கங்களையும் புரிந்து கொண்டு மீளாய்வு செய்வதற்காண ஒரு கருவியே (4).

வெள்ளையானைபடிமங்களும் தருணங்களும்

வெள்ளையானை நாவல் தன்னுள் பல படிமங்களையும் பல நாடகீயத் தருணங்களையும் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இந்த படிமங்கள் நேரடியாகவும் பல இடங்களில் மறைமுகமாகவும் வந்து கொண்டே இருக்கிறது. குதிரை, தொப்பி, சாரட் வண்டி என ஏய்டனின் மனநிலையை விளக்குவதாக உள்ளன (5).

ஏய்டன் கற்பானவாதக் கவிஞனான ஷெல்லியை எப்போதும் மறப்பதில்லை. ஏய்டனை அவன் நம்பிய மாட்சிமைப் பொருந்திய விக்டோரிய பேரரசின் நிர்வாகம் கைவிடுகிறது, அவனின் இந்தியக் காதலி மரிசா கைவிடுகிறாள், காத்தவராயன் கைவிடுகிறான், நாவல் முழுவதும் ஏய்டன் தன் மீட்பராகக் கருதிய ஏசுவை வெள்ளையானை மிதித்துக் கொல்கிறது, இருப்பினும் கையில் மதுவுடன் இருக்கும் போதும், ஷெல்லி கைவிடுவதில்லை. மீட்பராகக் கருதிய ஏசுவை அதிகாரம் என்னும் வெள்ளையானை எந்த இரக்கம் இன்றி மிதித்துக் கொன்றது (5). அதிகார வர்க்கத்தினிடையே தன் கணவுலகப் போராட்டத்தைத் தொடர முடியாமல் தவிக்கும் ஏய்டனுக்கு கற்பனாவாதக் கவிஞனான ஷெல்லி மட்டுமே ஆறுதலாக இருக்க முடியும் (5).

நாவலைப் படித்து முடித்த பிறகு ஷெல்லியின் கவிதையைத் தேடி வாசித்தப் போது, ஒரு கவிதையில் முழு நாவலும் ஓவியமாக தெரிகிறது. ஷெல்லியின் Death கவிதையில் சில வரிகள்,

First our pleasures die – and then

Our Hopes, and then Our Fears – and when

These are dead, the debt is due,

Dust Claims dust – and we die too.

ஏய்டனின் மகிழ்ச்சி அயர்லாந்திலிருந்து அவன் தந்தையைப் பிரிந்து ஆங்கிலேயப் படையில் சேர்ந்ததில் இருந்தே மரணிக்கத் துவங்குகிறது. தன் சொந்த வீட்டிலேயே அந்நியனாக உணரும் தருணத்தில் துவங்கி, நீலமேகத்திடம் தன் அதிகாரம் தோற்கும் போது மகிழ்ச்சியை முழுவதுமாகத் துறக்கிறான். கருப்புநகரில் தனக்கு நுங்களித்த மூதாட்டியிடமும் அவ்வப்போது மரிசாயிடம் மட்டுமே அவன் மகிழ்சியான தருணங்கள் வெளிப்படுகிறது.

மகிழ்ச்சிக்குப் பிறகு தான் நம்பியிருந்த மாட்சிமை பொருந்திய நிர்வாகமும் அவன் நம்பிக்கையை கொல்வதைக் காண்கிறான். காத்தவராயன் அவ்வப்போது ஏய்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றினாலும், தன் மதத்தை அவன் துறக்கும் போதும், பார்மர் தன் நிலையை ஏய்டனுக்கு விளக்கும் போதும் அவன் நம்பிக்கையும் மரணிக்கிறது.

இறுதியாக தொழிலாளர்களின் போராட்டத்திற்கு காரணத்தைத் தேடி, பஞ்சம் பாதித்தப் பகுதிகளை அவன் சென்று பார்க்கும் போது அவன் பயமும் மரணிக்கத் துவங்குகிறது. ஆண்ட்ரூசிடம் சண்டையிட்டு அவனை வண்டியில் இருந்து இறக்கிவிடும் போது, தன் மீட்பர் மீதான நம்பிக்கையையும் பயத்தையும் இழக்கிறான். மனிதர்களை எண்ணிக்கையாக மாற்ற சற்றும் தயங்குவதில்லை ஏய்டன்.

பஞ்சம் குறித்த அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்த பின் தன் பணிமாறுதல் ஆணையைப் பெறும் போது ஏதுவும் அவனை கட்டுப்படுத்தவில்லை. அவனின் கற்பானவாத நம்பிக்கை மட்டுமே அவனுள் உள்ளது. தொழிலாளர் குழுவை நோக்கி தன் கட்டளையைப் பிரப்பிக்கும் போது, அவன் மரணத்திற்கும் அச்சுவதில்லை.

ஜஸ்ஹவுஸ் வெள்ளையானை தொழிலாளர்களை கொல்கிறது, ஐயங்கார் வடிவில் வந்த வெள்ளையானை காத்தவராயனின் மதத்தைக் கொல்கிறது, மரிசா வடிவில் இருக்கும் வெள்ளையானை ஏய்டனுக்கு பாவமன்னிப்பு வழங்க மறுக்கிறது, ஆண்ட்ரூஸ் வடிவில் இருக்கும் வெள்ளையானை பஞ்சத்தால் மரணித்த மக்களுக்காகக் கண்ணீர் சிந்துகிறது, அதிகாரம் என்னும் வெள்ளையானை ஏசுவின் அன்பில் ஏறி நிற்கிறது.

வெள்ளையானைஅரசியல்

நாவலின் காலம் ஏற்கனவே கூறியது போல், நவீன இந்தியா உருவாகி வரும் காலனியமும், சமூக அடக்குமுறைகளும் இயங்கிய தளங்கள் இருந்த காலம். நாவல் இலக்கியப் பரப்பைத் தாண்டி இந்த கால அரசியலைச் சித்தரித்தற்காகவும் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது (2).

அரசியலை அல்லது ஏதேனும் ஒரு அரசியல் தரப்பைப் பற்றிய விவாதத்தை புனைவு முன்னெடுக்கும் போது, புனைவெழுத்தாளனின் அரசியல் தரப்புக் குறித்தப் புரிதலும் தேவையாகிறது. புனைவெழுத்தாளனின் அரசியல் தரப்பும் வாசகனின் அரசியல் தரப்பும் இருவேறு திசைகளில் இருந்தால் கூட, புனைவின் அரசியலுடன் ஒரு உரையாடலை வாசகனால் நிகழ்த்த முடியும். வெள்ளையானை வெளிவந்த நாள் முதல் இந்த உரையாடலை ஏதேனும் ஒருவகையில் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது.

வெள்ளையானை இந்தியாவில் ஒடுக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்ட வரலாற்றையும், அப்போராட்டம் நசுக்கப்பட்ட விதத்தையும் ஒற்றைச் சாய்வுடன் விவாதிக்கும் தன்மை கொண்ட வரலாற்றுப் புனைவு (1,2) என்பதால் இதில் புனைவின் அரசியலுடன் புனைவெழுத்தாளனின் அரசியலும் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது.

ஜெயமோகன் தன் அரசியல் தரப்பை வெவ்வேறு தருணங்களில் விளக்கிக் கொண்டே இருக்கிறார். தேர்தல் நேரத்தில் பொன்பரப்பியில் நடந்த வன்முறைக்கு எதிராக தங்கள் கண்டனத்தைப் பதிவுச் செய்யும் பொருட்டு, ஜெயமோகன் பேசியதன் விளைவாக ஏற்பட்டச் சர்ச்சையினால் தன் தளத்தில் ஒரு விளக்கத்தையும் வெளியிட்டிருந்தார். அரசியல் தரப்பையும் ஒரு இலக்கியவாதியாகவே ஜெயமோகன் பொது வெளியில் முன்வைக்கிறார். நாவலில் உள்ள அரசியலை ஒரு கருத்தியல் தரப்பாக மதிப்பிடுவதைவிட அறம்சார் பொதுப் பரப்பில் வைத்தே மதிப்பிட வேண்டும்.

ஒடுக்கப்பட்டவர்கள் இன்றும் எந்தக் காரணமும் இன்றி தாக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். தங்களுக்கானக் குரலை ஏதோ ஒருவகையில் இன்றும் தேடுக் கொண்டு தான் இருக்கிறார்கள் (6). நீலமேங்கள் மறுபடியும் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். அறம் சார் கேள்வியும் நவீன ஜனநாயக தனிமனித விழுமியங்கள் அவர்களை நோக்கி இன்றும் மவுணமாகவே இருக்கிறது.

இந்திய அரசியலிலும் நிர்வாகத்திலும் குறிப்பிடத் தகுந்த மாற்றம் நிகழ்ந்ததாக வைத்துக் கொண்டாலும், சமூக ரீதியாக இன்னும் செல்ல வேண்டிய தொலைவு அதிகம். காத்தவராயன் மற்றும் ஏய்டன் உரையாடும் பல பகுதிகள் நிர்வாகம் செயல்படும் விதம், இந்திய ஆதிக்க மற்றும் இடைநிலை ஜாதிகள் செயல்படும் விதம் என அடுக்கடுக்கான பல விஷயங்களை விளக்கிக் கொண்டே இருக்கிறது. நாவலின் அரசியலை புரிந்துகொள்ள இந்த உரையாடல்கள் நகரும் விதம் பற்றிய கவனத்துடன் வாசித்தாலே போதுமானது.

இறுதியாக பஞ்சம் பற்றிய குறிப்புகள் போராட்டம் பற்றிய தரவுகள் என வரலாற்றாய்வு ஒரு பக்கம் இயங்கினாலும் பொது வாசகனுக்கு வெள்ளையானை இவ்விரண்டையும் மிக நேர்த்தியாக, கேள்விகள் எழுப்பும் வாசிப்பனுபவத்தைக் கொடுக்கும்.

குறிப்புதவி

  1. புனைவு அறத்தின் வரலாற்று அடிவயிறு: “வெள்ளை யானை” யை முன்வைத்து – அரவிந்தன் நீலகண்டன் எழுதி தமிழ் ஹிந்துவில் வெளியான கட்டுரை.
  2. அழிவின் மௌன சாட்சியங்களில் தடுமாறும் அறம்: “வெள்ளை யானை” யை முன்வைத்து – ஜடாயு எழுதி தமிழ் ஹிந்துவில் வெளியான கட்டுரை.
  3. அந்நியரும் மொண்ணையரும் – ஜெயமோகன் தளத்தில் வெளியான கடிதத்திற்கான (சுரேஷ் பிரதீப்- சமூக வலைத்தளத்தில் எழுதிய விளக்கம்) பதில்.
  4. வெள்ளையானை குறித்து சுரேஷ் பிரதீப் முகநூலில் எழுதிய விளக்கம்.
  5. வெள்ளையானை சில வருடங்களுக்கு பின் – சுனில் கிருஷ்ணன் கட்டுரை
  6. விடுதலை சிறுத்தைகள், திருமாவளவன் – விளக்கம், ஜெயமோகன் தளத்தில் வெளியான கட்டுரை

வெள்ளையானை – கடிதம்

வெள்ளையானை கடிதங்கள்

வெள்ளையானை – கடிதங்கள்

வெள்ளையானை -சிவமணியன்

வெள்ளையானையும் உலோகமும்

வெள்ளையானை -கடிதங்கள்

வெள்ளையானையும் கொற்றவையும்

வெள்ளையானையும் வே.அலெக்ஸும்

வெள்ளையானை, ஐயா வைகுண்டர் -கடிதங்கள்

வெள்ளையானை- பிரதீப் சுரேஷ்

கைவிடப்பட்டவர்களின் கதை – வெள்ளை யானை

கொல்லும் வெள்ளை யானை

தடுமாறும் அறம்: வெள்ளை யானை

அதிகாரமெனும் நுண் தளை – வெள்ளை யானை

முந்தைய கட்டுரைஅர்விந்த் கண் மருத்துவமனை -கடிதம்
அடுத்த கட்டுரைச.துரை -மேலும் நான்கு கவிதைகள்