வணங்கான் [சிறுகதை] – 1

என் பெயர் வணங்கான். ஆமாம் பெயரே அதுதான், முழுப்பெயர் என்றால் கெ.வணங்கான் நாடார். இல்லை, இது என் குலச்சாமியின் பெயரெல்லாம் இல்லை. இந்த பெயர் என் குடும்பத்தில் எனக்கு முன் எவருக்கும் போடப்பட்டதில்லை. என் சாதியில், சுற்றுவட்டத்தில் எங்கும் இப்படி ஒரு பெயர் கிடையாது. இந்த பெயருள்ள இன்னொருவரை நான் சந்திததே இல்லை. ஏன், இந்தப் பெயரைக் கேள்விப்பட்ட ஒருவரைக்கூட நான் பார்த்ததில்லை.

என் அப்பாதான் இந்தப் பெயரை எனக்கு போட்டார். அந்தப் பெயரைப் போட்ட நாள் முதல் அவர் சாவதுவரை இருபத்தேழு வருடம் இந்த பெயரைப்பற்றித்தான் அவர் பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. நான் பொறியல் படித்துவிட்டு முதலில் வேலைக்குச்சென்றது பிலாயில். அங்கே அவர்களுக்கு எல்லா பேரும் ஒன்றுதான். ஆனால் அங்கே உள்ள அத்தனை தமிழர்களும் மலையாளிகளும் இந்தபெயர் பற்றி என்னிடம் கேட்டிருப்பார்கள்.

தமிழ்நாட்டுக்கு ஓய்வுபெற்று வந்து நான்கு வருடங்களாகிறது. இப்போது நெல்லை புறநகரில் வீடுகட்டி நானும் என் மனைவியும் மகளும் குடியிருக்கிறோம். என் மகளுக்கும் மருமகனுக்கும் நான் தேவையில்லாத இடங்களில் எல்லாம் இந்தப் பெயரைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன் என்று மனக்குறை. பேசாமல் கெ.வி.நாடார் என்று சொல்லுங்கள் என்கிறார்கள். அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். நான் அதைச் சொல்வதில்லை. எங்கும் என்பெயரைச் சொல்வேன். கொஞ்சம் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து ஒருவர் கேட்டார் என்றால் என் பெயரின் கதையை நான் சொல்ல ஆரம்பிப்பேன்.

என் அப்பன் பெயர் கறுத்தான். கூட நாடார் உண்டா? என்று கேட்கிறீர்கள். உங்களுக்கு அன்றைய சாதியடுக்குகளைப்பற்றி தெரியாது. நாடாரிலேயே பல தரங்கள் உண்டு. சொந்த நிலமும், குடும்பப் பெருமையும் உடையவர்கள்தான் நாடார் என்று சாதிப்பெயர் வைத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு அங்கணம் வைத்த சுற்றுவீடும், முற்றமும் தோப்புகளும், வயல்களும், வைக்கோல்போர்களும், தொழுவங்களும் இருக்கும். அவர்கள் மன்னருக்கு வரிகட்டுவார்கள்.

பிறருக்கெல்லாம் சொந்தமாக ஒரு பெயர் இருப்பதேகூட ஓர் ஆடம்பரம். கறுப்பாக பிறந்ததனால் என் அப்பா கறுத்தான் ஆனார். அவரது தம்பிக்கு உதடு பெரியது ஆகவே அவர் சுண்டன். அவரது தங்கை கொஞ்சம் சிவப்பு. ஆகவே வெள்ளக்குட்டி. நாய்க்குட்டிகளுக்கு பெயர் வைப்பதுபோலத்தான். சாதியுள்ள பண்ணையார்களின் வீட்டு நாய்களைச் சொல்லவில்லை. அவற்றுக்கு நல்ல பெயர்கள் இருக்கும். தெருநாய்களைச் சொன்னேன்.

என் அப்பாவுக்கு அப்பா பெயர் ஏழான்.அவர் ஏழாவது குழந்தையாக இருக்கலாம். அவரது அம்மா ஒன்பது பிள்ளை பெற்றதில் இரண்டுதான் மிஞ்சியது, ஆம், நாய்க்குட்டிகளைப்போலவே. தாத்தாவின் தங்கை குஞ்சியை நான் சிறியவயதில் பார்த்திருக்கிறேன். குறுகிப்போன கரிய கிழவி. ஆனால் இறுகிய உடம்பு. தளர்ந்து ஒடுங்கி சுருங்கினாலும் எண்பது வயதுவரை இருந்தாள். சாவதுவரை சாணி சுமந்தும், காக்கோட்டையில் காய்கறிகளுக்குத் தண்ணீர் சுமந்தும், வாழைக்குத் தடம் வைத்தும் உழைத்தாள். சந்தைக்கு வாழைக்குலை சுமந்து சென்றிருந்தபோது நெஞ்சுவலிக்கிறது என்று கருப்பட்டிகடைத் திண்ணையில் படுத்துக் கண்மூடித் தென்றலை அனுபவிப்பவள் போன்ற முகத்துடன் செத்துப்போனாள்.

என் தாத்தா உள்ளூரில் உள்ள கரைநாயர் வீட்டில் வருஷக்கூலிக்கு வேலைசெய்தார். அவர்களுக்கு ஊரெல்லாம் வயல்களும் தோப்புகளும் இருந்தன. அதைப்பார்த்துக்கொள்ள இரண்டு காரியஸ்த நாயர்கள். தேங்காய் பறிக்கவும் தென்னையோலை முடையவும் கைப்பள்ளிகள். நெல்லுகுத்த ஆசாரிச்சிகள். நெல்விவசாய வேலைகளுக்குப் புலையர்கள். பிற வேலைகளுக்கு நாடார்கள். ஒவ்வொரு சாதி வேலைக்காரர்களுக்கும் ஒரு தலைவன். அவன் அவனுடைய கோழிமுட்டை வட்டத்திற்குள் கொல்லவும் புதைக்கவும் அதிகாரம் கொண்ட மன்னன். பிறர் அவனுடைய காலடிமண்ணுக்கும் கடையர்களாக வாழவிதிக்கப்பட்டவர்கள்.

அத்தனைபேரும் அதிகாரத்தால் கீழ்கீழாக அடுக்கப்பட்டிருந்தார்கள். அடுக்குகளுக்கு எச்சில் ஓர் அடையாளமாக இருந்தது. கூலியடிமை மீது குலமேலாள் காறித்துப்பினால் அவன் முன்னால் நிற்பதுவரை அடிமை அதைத் துடைத்துக்கொள்ளக் கூடாது. காரியஸ்தன் கோபம் கொண்டு வெற்றிலைச்சாற்றை மேலாட்கள்மேல் துப்பினால் அவர்கள் பணிவுடன் சிரிக்கவேண்டும். காரியஸ்தன் அந்த நாயர் வீட்டு உறுப்பினர் யார் வெற்றிலை வாயை குவித்தாலும் பணிவுடன் கோளாம்பியை எடுத்து முன்னால் நீட்டவேண்டும். அந்த குடும்பத்திற்கு மன்னர் குலத்தில் இருந்து யாராவது வந்தால் கையில் கோளாம்பியுடன் கரைநாயரே பின்னால் பணிந்து நடந்து செல்லவேண்டும்.

அந்தக்காலத்தில் தினசரிக்கூலி கிடையாது. வருடத்தில் இருமுறை அறுப்பு காலத்தில் நெல்தான் கொடுப்பார்கள். அதை வாங்கி வந்து உலர்த்தி பானையில் போட்டு வைத்துக்கொண்டால் இரண்டுமூன்று மாதங்களுக்கு அவ்வப்போது எடுத்து தொலித்து பொங்கி சூடுகஞ்சி குடிக்க முடியும். அதை பஞ்ச மாசமான ஆடி வரை சேர்த்து வைத்துக்கொள்வதற்கு அபாரமான மன உறுதி தேவைப்படும். மிச்சநாளெல்லாம் ஏமான் வீட்டில் பெரிய அண்டாக்களில் காய்ச்சிக்கொடுக்கப்படும் கஞ்சியும் மரச்சீனி மயக்கும் புளிக்கீரைக்குழம்பும்தான். அது மதியம் மட்டும். அந்திவேலை முடிந்து திரும்பும்போது காட்டுக்குள் நுழைந்து எதையாவது பொறுக்கிக் கொண்டுவந்து சுட்டுத் தின்பதுதான் இரவுக்கு. பெரும்பாலும் கிழங்குகள். சிலசமயம் கீரைகள். அதிருஷ்டம் இருந்தால் முயலோ, கீரியோ, பெருச்சாளியோ.

உடம்பில் வயிறுதவிர வேறு உறுப்பிருக்கிறது என்ற நினைப்பே இல்லாத வாழ்க்கை. கோபமே அடங்காத துர்தேவதை மாதிரி வயிறு பொங்கிக்கொண்டே இருக்கும். கூரைக்கு பிடித்த தீ போன்றது பசி என்று என் பாட்டி சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதில் கைக்குக் கிடைத்ததை எல்லாம் அள்ளி போட்டு அணைக்க வேண்டியதுதான். அது நல்லதா கெட்டதா என்றெல்லாம் பார்க்க வேண்டியதில்லை. பசியை விட வேறு எதுவும் கொடியது அல்ல.

என் தாத்தா நடக்க ஆரம்பித்த வயதிலேயே வேலைக்குபோகவும் ஆரம்பித்தார். வேலைசெய்யாத நாளின் ஞாபகமே அவருக்கு இருந்ததில்லை. அடிவாங்கி வசைவாங்கி வேலைசெய்து களைத்து சோர்ந்து கண்ட இடத்தில் விழுந்து தூங்கி விடிவதற்குள் உதைவாங்கி எழுந்து மீண்டும் வேலைசெய்வதுதான் அவர் அறிந்த வாழ்க்கை. வாழ்க்கையில் அவருக்கு கிடைத்த சமூகக் கல்வி என்பது யார் யாருக்கு எப்படி எப்படி பணிவது என்றுதான். பணிவின் அடுக்குகள்தான் சமூகம் என்று அவருக்கு தெரிந்திருந்தது.

ஒருநாள் என் தாத்தா வேலைக்கு நடுவே காராம்புதருக்குள் ஒளிந்து அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அறுப்பு கழிந்த மாதமானதனால் பாட்டி கொஞ்சம் கஞ்சியை காய்ச்சினாள். முந்தையநாள் குடித்த மிச்சத்தை பழையதாக்கி சட்டியில் கையோடு கொண்டுவந்திருந்தாள். தாத்தாவுக்கு புளித்தசோறு மேல் அத்தனை பிரியம் இருந்தது. அவசரமாக அள்ளி வாயில் போட்டுக்கொண்டு இருந்தபோது காரியஸ்தனுடன் கரைநாயரின் பேரன் அவ்வழியாக சாஸ்தா கோயிலுக்குச் செல்வதற்காக வந்திருக்கிறான். பதினைந்து வயதானவன். அவன் கண்ணில் தாத்தா சாப்பிடுவது பட்டுவிட்டது.

அவனைப்பார்த்ததும் தாத்தா எழுந்து கைகளை மார்போடு சேர்த்துக்கொண்டு தளைபோல உடல் வளைத்து அமர்ந்து கண்களை தாழ்த்திக்கொண்டார். அவர் அருகே அந்த கஞ்சி இருந்தது. என்ன நினைத்தானோ அந்தப்பையன் காலால் கொஞ்சம் மண்ணை அள்ளி அதில் போட்டுவிட்டு ‘குடிக்கெடா’ என்றான். தாத்தா கொஞ்சம் தயங்கியதும் அப்பால் வந்து நின்ற மேலாள் பெரிய பிரம்பால் அவரை மாறிமாறி அடிக்க ஆரம்பித்தான்.

தாத்தா சாமி வந்தவர் போல அப்படியே சட்டியுடன் பழையதை எடுத்து ஒரே மிடறாக குடித்துவிட்டு குனிந்து அமர்ந்து குமட்டி உலுக்கும் உடம்பை வளைத்து மண்ணோடு ஒட்டிக்கொண்டார். அவன் மீண்டும் காலால் மண்ணை அள்ளி அவர்மேல் வீசிவிட்டு சிரித்துக்கொண்டே சென்றான். அவனைப்பார்த்து காரியஸ்தனும் மேலாளும் சிரித்தார்கள்.

தூரத்தில் என் அப்பா வயலில் நாற்று சுமந்துகொண்டிருந்தார். அவர் கண்ணில் தாத்தாவின் கூனிக்கூடிய உடம்பு ஒரு சாணிக்குவியல் போல தோன்றியது. அதிலிருந்து அவிந்த வாடையும் புழுக்களும் எழுவதுபோல பிரமை ஏற்பட்டது. அப்போது அவருக்குத் தன் தந்தைமீது தாளமுடியாத வெறுப்புதான் எழுந்தது. அவர் அங்கேயே செத்துப்போகமாட்டாரா என்று மனம் ஏங்கியது. கண்ணீர் நாற்றுச்சேறுடன் கலந்து கொட்ட அவர் திரும்பி நடந்தார்.

அன்று இரவு அவர் தன் அப்பா கேட்க அம்மாவிடம் ‘நான் போறேன்’ என்றார். ‘எங்கண்ணு கேளு உனக்க பிள்ளைக்ககிட்ட’ என்றார் தாத்தா. ‘இனி இஞ்ச எனக்கு எடமில்ல. எனக்க சோறு வெளியயாக்கும்’ என்றார் அப்பா. ‘ஆமலே உனக்கு வச்சிருக்கு சோறு. லே, நீ செய்த புண்ணியத்தினாலயாக்கும் இஞ்ச உனக்குக் கஞ்சியும், காடியும் கிட்டுதது. பட்டினி கெடந்து தெருவிலே சாவாம உள்ள சோலியப்பாத்து இங்க கெடலே’ என்று தாத்தா அவரைப் பார்க்காமலேயே பதில் சொன்னார்.

’கண்ட நாயெல்லாம் கஞ்சியிலே மண்ண வாரி போடுகத நான் குடிக்கணுமோ?’ என்று அப்பா சொன்னார். ‘லே, மகாபாவி. ஏமானையா சொல்லுதே? அன்னம் போடுத ஏமானையாலே சொல்லுதே?’ என்று வெறிகொண்டு பாய்ந்து வந்த தாத்தா கையில் கிடைத்த வாரியலால் அப்பாவை மாறி மாறி அடித்தார். ‘லே நீ மகன் இல்லலே…நண்ணி கெட்ட நாயே..நீ எனக்க மகன் இல்லலே’ என்று மூச்சிரைத்துக் கூவினார்

உடம்பெல்லாம் வாரியல்குச்சிகள் குத்தி எரிய அப்பா குடிசைக்கு வெளியே சென்று குட்டித்தெங்கின் குழிக்குள் அமர்ந்துகொண்டார். இருட்டு ஏறியபின் பாட்டி வந்து ‘போட்டு மக்கா…அவருக்க குணம் தெரியுமே…நீ வா..அம்மை உனக்கு சுட்ட கெளங்கு தாறேன்’ என்று அணைத்து உள்ளே கூட்டிச்சென்றாள். சுட்டகிழங்கு சாப்பிட்டு பசியாறி தூங்கினார்கள். ஆனால் நள்ளிரவில் எழுந்த என் அப்பா வீட்டைவிட்டு வெளியேறினார்.

ஆனால் அவரைச் சுலபமாக பிடித்துவிட்டார்கள். அவர் நட்டாலம் பெருவழியில் நுழைந்தபோது அங்கே பெரிய வைக்கோல்போர் மீது காவலுக்கு தூங்கிக்கொண்டிருந்தவன் அவரை பார்த்துவிட்டான். அதே நேரம் அவனுடைய நாயும் அவரை பார்த்துவிட்டது. அது முதலில் குரைத்துக்கொண்டே வந்து அவரை பிடித்துக்கொண்டது. அவன் பின்னால் வந்து அவரை இழுத்து இடுப்புக்கச்சையால் கட்டி இழுத்துச்சென்று எஜமானின் வீட்டு முன்னால் போட்டான்

காலையில் எழுந்து வெளியே வந்த ஏமான் பார்த்தது உடம்பெல்லாம் சிராய்ப்பும் மண்ணுமாக கிடந்த அப்பாவை. அப்பாவின் மேலாள் வரவழைக்கப்பட்டு அவனுக்கு புளியமாறால் இருபது அடி கொடுக்கப்பட்டது. தாத்தாவை இழுத்து வந்து எருக்குழியில் இடுப்பளவு புதைத்து வைத்தார்கள். அவர் கைகூப்பி ‘ஏமானே பொன்னேமானே… ஒண்ணுமறியா பயலாக்கும் ஏமானே…கொண்ணு போடப்பிடாது ஏமானே’ என்று கதறினார்.

எஜமான் அவரது செல்ல யானையாகிய கொம்பன் கொச்சய்யப்பனை காலையில் கொஞ்சநேரம் கொஞ்சுவதுண்டு. அதைக் காலையில் அவரது வீட்டு முற்றத்தில் கொண்டுவந்து கட்டி மாலையில்தான் கொண்டு செல்வார்கள். அன்றெல்லாம் வீட்டுமுகப்பில் ஒரு கொம்பன் யானை காதாட்டி நிற்பது ஐஸ்வரியம் என்று கருதப்பட்டது. யானைக்குக் கொடுப்பதற்காக வெல்லம் கொட்டைத்தேங்காய் போன்றவற்றை ஒரு பெரிய தட்டில் வைத்து வேலைக்காரன் நாணன்நாயர் கொண்டு வைத்தான். ஏமானுக்கு அதை பார்த்தபோது அவருக்கு ஓர் எண்ணம் வந்தது

‘அவனே கொண்டு வாடே’ என்றார். அப்பாவை கையையும் காலையும் கட்டி இழுத்து தூக்கி வந்தார்கள். எஜமானின் ஆணைப்படி யானையின் நான்கு கால்களுக்கு நடுவே மாடுகட்டும் தறி ஒன்றை ஆழமாக அறைந்து அதில் அப்பாவை கட்டிப்போட்டார்கள். அப்பா அலறி திமிறி துடித்தார். யானைக்கு அடியில் சென்றதும் அச்சத்தில் மூச்சு நின்றது போல உடம்பு மட்டும் அதிர்ந்துகொண்டிருந்தது. சற்றுநேரத்தில் மலமும் சிறுநீரும் வெளியேறியது.

கொஞ்சநேரம் சிரித்துவிட்டு எஜமான் எழுந்தார் ‘வைகும்நேரம் வரே அவன் கிடக்கட்டே. அவனே கொல்லணுமா வேண்டியாந்நு கொச்சய்யப்பன் தீருமானிக்கட்டே’ என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றார். அப்பா மெல்ல நிதானமடைந்தார். கொஞ்சநேரத்தில் பயமெல்லாம் போயிற்று. எப்படி அந்த அளவுக்கு மனம் தெளிவடைந்தது, எப்படி அந்த நாளின் ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்ள முடிந்தது என்று அப்பா கடைசி வரை சொல்லிச்சொல்லி ஆச்சரியப்படுவார்

யானையின் கால்கள் ஒவ்வொன்றும் காட்டுகோங்கு மரத்தின் அடிப்பட்டை போல வெடிப்புகளும் மடிப்புகளுமாக, வெட்டி எடுத்து வைத்த தடி போல உருண்டு பெரிதாக இருந்தன. கிளைவேர்களை வெட்டி எடுத்த வெள்ளைத் தடம் போல நகங்கள். கொஞ்ச நேரம் நகங்களைப்பார்த்தபோது அவை ஒவ்வொன்றும் ராட்சதப்பல்வரிசை என்று தோன்றியது. அப்பாவை அவை ஏளனமாகப் பார்த்து சிரிப்பதைப்போல. தலைக்குமேல் குகையின் அடிக்கருங்கல் பரப்பு போல அதன் அடிவயிறு. பெரியதோர் கலப்பைபோல அதன் ஆண்குறி.

யானை இருமுறை துதிக்கையை நீட்டி அப்பாவை தொட்டது. ஒரு முறை அது அடி போல பட்டு அப்பா தெறித்து விழுந்தார். அதன்பின் யானை அவரை பொருட்படுத்தவில்லை. அதன் மூன்று கால்கள் நிலத்தில் ஊன்றியிருக்க நாலாவது கால் இலகுவாக எடுத்தும் அசைத்தும் வைக்கப்பட்டபோது காலின் அடிப்பகுதி தெரிந்தது. பெரிய துணிமூட்டை போல இருந்தது அது. அடிக்கடி அது காலை மாற்றுவதையும் பெரிய காலைத் தரையில் தப் தப் என அடித்துக்கொள்வதையும் அப்பா கவனித்தார். பேய்க்கரும்பை பிய்த்து அது தன் காலில் அடித்தபோது மண் தெறிக்கவே அப்பா ‘அய்யோ’ என்றார். அதன்பின் அது மிகக் கவனமாக காலில் தட்டுவதை கொஞ்சநேரம் கழித்தே கவனித்தார். பின்பக்கம் தப்தப்தப் என்று சூடான பச்சைத்தழை ஆவியுடன் பிண்டங்கள் விழ அதன்மேல் சிறுநீர் பாறைஓடை போல பாசிப்பச்சை நிறத்தில் கொட்டியது. அப்பாவின் உடம்பெங்கும் யானைச்சிறுநீர் வீசியது.

சாயங்காலம் யானையை அவிழ்த்துச்சென்றபோதும் அங்கேயே கிடந்தார் அப்பா. அவரை இழுத்துச்சென்று கயிற்றால் ஒரு தென்னைமரத்தில் கட்டி வைத்தார்கள். எருக்குழியில் கழுத்துவரை புதைந்திருந்த தாத்தாவை தூக்கி ‘போலே’ என்று அடித்து துரத்தினார்கள். எருக்குழியின் சூட்டில் வெந்து சுருங்கி சுட்ட கொக்குபோல தோல்வழிந்த உடலுடன் அவர் மார்பில் அறைந்து கதறினார் ‘எனக்க பயல ஒண்ணும் செய்யப்பிடாது பொன்னேமானே…உடயதே..தெயவ்மே..என் பயல விட்டிருங்க தம்புரானே’ என்று கத்திக்கொண்டே அடிவாங்கிக்கொண்டு சென்றார் அவர்.

இரவு முழுக்க தன் கையின் கட்டை,  பல்லால் கடித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கிழித்து பிரித்து எடுத்துவிட்டார் அப்பா. கூரிய சில்லாங்கல்லை எடுத்து பிறகட்டுகளை அறுத்தார். நள்ளிரவில் இருளில் அங்கிருந்து தப்பி சென்றார். இம்முறை எங்கும் சாலைக்கோ இடைவழிக்கோ ஏறவில்லை. முழுக்கமுழுக்க தோட்டங்கள் புதர்கள் வயல்வரப்புகள் வழியாகவே சென்றார்.

செல்லும்போது தன் அப்பாவைப்பற்றிய அருவருப்பே அவர் மனமெங்கும் நிறைந்திருந்தது. காறிக்காறி துப்பிக்கொண்டே சென்றார். மறுநாள் தன் அப்பாவுக்கு என்ன ஆகும் என்று நினைத்தார். ‘தாயளி சாவட்டு’ என்று சொல்லிக்கொண்டார். மேலும் பதினாறு வருடம் கழித்து ஒருமுறை சேர்ந்து அமர்ந்து பழையது சாப்பிடும்போதுதான் தன் அப்பா அந்த நாள்முதல் கொடும்பட்டினியிலும் பழையசோறை கையால் தொட்டதில்லை என்று தெரிந்து கண்ணீர் விட்டார். ‘பாவப்பெட்டவனுக்கு பழிவாங்கணுமானா அவனுக்க சொந்த தேகமும் வயறும் ஆன்மாவும் மட்டும்தானேலே இருக்கு?’ என்பார் அப்பா.

அப்பா நட்டாலத்தில் இருந்து கருங்கல்லுக்கும் அங்கிருந்து திங்கள்சந்தைக்கும் சென்றார். அங்கிருந்து நாகர்கோயிலுக்கு. அப்போது அவருக்கு எட்டு வயது. எழுத்துபடிப்பு வாசனை கிடையாது. அவர் வாழ்ந்த நட்டாலம் ஊரைத்தவிர வெளியுலகம் பற்றி கேள்விப்பட்டதுகூட கிடையாது. அன்று அந்த ஊர்களுக்கு புழுதிநிறைந்த வண்டிப்பாதைகள்தான். இரு மருங்கும் வயல்களும் அவ்வப்போது சிறு ஊர்களும் உண்டு. ஆனால் பெரும்பாலான இடங்களில் பாறைகள் நிறைந்த புதர்க்காடுகள். நரிகளும் செந்நாய்களும் நிறையவே உண்டு என்பதனால் இரவில் மனிதர்கள் நடமாடுவதே இல்லை.

ஆனால் புனிதமான அறியாமை என்று ஒன்று இருக்கிறது. அதற்கு நம்பமுடியாத அளவுக்கு ஆற்றல் உண்டு. என்னுடைய இத்தனைநாள் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட பாடங்களில் ஒன்று அது. மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு. அந்த சக்தியால்தான் அப்பா அவ்வளவுதூரம் சென்றார்.

அதை நான் ஒருமுறை சொன்னபோது அப்பா சிரித்தார் ‘போலே, அறிவுகெட்ட மூதி. ஏலே எனக்க உடம்பு முழுக்க ஆனைக்க வாசனையாக்கும். ஆனைமணம் கேட்டா ஒரு நாயிநரி அருவில வருமாலே? நான் பின்ன எப்டியாக்கும்லே ஏமானுக்க முற்றத்திலே இருந்து தப்பினென்? பன்னிரண்டு நாயாக்கும் காவலுக்கு. எல்லாம் எனக்க ஆனைவாசன கேட்டு வால கவட்டைக்கெடையிலே வச்சுகிட்டுல்லா ஓடிச்செண்ணு மூலையிலே இருந்துபோட்டு” அப்பா கடைசிவரை அப்படித்தான். எந்நிலையிலும் அவரது தர்க்க புத்தியை விட்டுக்கொடுப்பதில்லை.

மறுநாள் மாலையில் நாகர்கோயிலை அடைந்தார் அப்பா. கிட்டத்தட்ட முப்பத்தைந்து கிலோமீட்டர் தூரம் நடந்திருப்பார். பட்டினி அவருக்கு நன்றாக பழகியதுதான். எல்லாவிதமான வதைக்கும் பழகிப்போன மெலிந்த கரிய உடம்பு. அப்பாவே சொல்வார், காடுகளில் தீப்பிடித்தால் சில குச்சிகள் எரியாமல் கருகி கிடக்கும். அவற்றை தேடி கொண்டுவந்து வயலில் தொழி ஊன்றுவதற்கு பயன்படுத்துவார்கள். அவை வைரம் மட்டுமெ ஆனவை. என்ன செய்தாலும் ஒடியாது, வளையாது. அதைப்போல அவர் இருந்தார்.

நாகர்கோயிலைப் பார்த்து அவர் என்ன நினைத்தார் என்றெல்லாம் அவருக்கு ஞாபகம் இல்லை. மிருகம் போல தின்பதற்கு என்ன கிடைக்கும் என்று மட்டும் பார்த்துக்கொண்டு நடந்திருப்பார். உடம்பெல்லாம் மண்ணும் சேறும். இடையில் கமுகுப்பாளையை கீறி கட்டிக்கொண்ட கோவணம். ஆனால் என் அப்பாவை நீங்கள் பார்க்க வேண்டும். அவரைப்போல லட்சணமான மனிதரை நீங்கள் குறைவாகவே பார்திருப்பீர்கள். கொஞ்சம் டென்சில் வாஷிங்டனின் சாயல் உண்டு அவருக்கு. இனிமையான நிதானமான கண்கள் கொண்டவர். அன்று அவரது கண்கள் இன்னும் அழகாக இருந்திருக்கும். காட்டு ஓடையில் கிடக்கும் கூழாங்கற்கள் போல கருமையாக, மினுமினுப்பாக, குளுமையாக இருந்திருக்கும்.

பார்வதிபுரம் அருகே கணேசன் என்பவர் நடத்திவந்த இட்டிலிக்கடைக்கு வெளியே போடப்படும் எச்சில் இலைகளில் இருந்து அகப்பட்டதை எல்லாம் வழித்துத் தின்றுகொண்டு அங்கேயே படுத்து தூங்கிவிட்டார். கணேசன் நல்ல வியாபாரி. பார்த்ததுமே தெரிந்துவிட்டது, இது ஒரு சரியான உழவுமாடு என்று. உள்ளே கூப்பிட்டு குண்டான் நிறைய பழையசாதமும் பழங்கறியும் விட்டுக் கொடுத்தார். வயிறு தெளிந்ததும் அப்பா நிமிர்ந்து நின்றார். பெயரைச் சொன்னார். ஆனால் ஊரையும் பிற தகவல்களையும் எவ்வளவு கேட்டும் சொல்லவில்லை. சொல்லக்கூடிய ஆள் இல்லை என்று கணேசனுக்கும் தெரிந்துவிட்டது

நான்கு வருடம் அங்கேயே அப்பா வேலைபார்த்தார். தினமும் காலையில் எழுந்து ஒரு ஃபர்லாங் தூரமுள்ள ஓடையில் இருந்து குடம்குடமாக நீர் கொண்டுவந்து பெரிய மரத்தொட்டியை நிறைப்பார். பத்துமணிக்கு இட்டிலிக்கடை முடிவது வரை அந்த வேலை. அதன்பின்ன அந்த பாத்திரங்களை எல்லாம் சுமந்து கொண்டு வந்த நீரில் மண்ணும் சாம்பலும் போட்டு கழுவுவார். மீண்டும் நீர் கொண்டு வருவார். மாலையில் சோற்றுக்கடைமுடிந்ததும் மீண்டும் பாத்திரங்கள் தேய்ப்பார். மீண்டும் தண்ணீர். மீண்டும் பாத்திரங்களை கழுவி முடிக்கையில் நள்ளிரவாகிவிடும். கடையையே அவர்தான் மூடுவார்.

களைத்து சோர்ந்து பின்பக்கம் ஒட்டுத்திண்ணையில் விழுந்து அப்படியே தூங்கினால் காலையில் வேதக்கோயில் மணி கேட்டதும் எழுந்துவிடுவார். ஒருமுறை மழை கொட்டிக்கொண்டிருக்க மழைக்குள்ளேயே கிடந்து அப்பா தூங்கிக்கொண்டிருப்பதை கணேசன் கண்டு பலவருடம் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறார். அப்பாவுக்கு எந்த நோயும் வருவதில்லை. மிஞ்சியது மட்டும்தான் அவருக்கு உணவு. அவரே பாத்திரங்களில் இருந்து வழித்தும் சுரண்டியும் சாப்பிட்டுக் கொள்வார். அவருக்கென எவரும் சாப்பாடு எதுவும் கொடுப்பதில்லை.

அப்பா அடி உதைகளில் இருந்தும் வசைகளில் இருந்தும் வெளியே வந்தார். வயிறு புடைக்க உண்டு அவரது கைகால்கள் இரும்புலக்கை போல ஆயின. ’மாடன்சிலை மாதிரி இருக்கேலே மயிரே’ என்று வெற்றிலைக்கடை செல்லப்பன் சொல்வாராம். ஆனால் புதுவகை அவமரியாதைகளை அவர் சந்தித்துக்கொண்டே இருந்தார். சமைத்த உணவை தொடுவதற்கு அவர் ஒருபோதும் அனுமதிக்கப்பட்டதில்லை. ஒருமுறை குவிக்கப்பட்டிருந்த சோற்றின்மேல் இருந்த இலை பறந்து போனபோது அவர் ஓர் இலையுடன் அதை நோக்கிச் சென்றார். கணேசன் பாய்ந்து வந்து ‘லே, லே, தொடாதேல…வெளியே போலே..லே, வெளியே போ’ என்று கூச்சலிட்டான்.

அன்று முதல் அவருக்கு புதிய எல்லைகள் தென்பட ஆரம்பித்தன. அவர் தன்னுடைய கொல்லைப்பக்க திண்ணை தவிர வேறெங்கும் எவர் முன்னாலும் அமர அனுமதிக்கப்பட்டதில்லை. அவரிடம் எவரும் எதையும் நேரடியாக கொடுப்பதில்லை. கீழே வைக்கும் பொருட்களை அவர் எடுத்துக்கொள்ள வேண்டும். தெருவில் அவர் செல்லும்போது எதிரே வரக்கூடியவர்கள் சிலர் ‘டேய் தள்ளி போடா’ என்று கூச்சலிடுவார்கள்.

ஆனால் அப்பா மகிழ்ச்சியாகத்தான் இருந்தார். அவர் வளர்ந்து கொண்டிருந்தார். உடம்பாலும் மனத்தாலும். அவரே எழுத்துகூட்டி படிக்க கற்றுக்கொண்டார். கையில் சிக்கிய எல்லா காகிதங்களையும் வாசித்தார். கணக்குகளை போட பயின்றார். ஆங்கில எழுத்துக்களைக்கூட கற்றுக்கொண்டு உதிரி வார்த்தைகளை வாசிக்க ஆரம்பித்தார். தன் பதிமூன்றாம் வயதில் அவர் நாகர்கோயில் நீதிமன்றத்துக்கு எதிரில் இருந்த அம்புரோஸ் டீக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே அவர் பரிமாறுபவனாக இருந்தார். அவ்வப்போது சமையலும் செய்தார்.

அவரது பதினைந்தாம் வயதில் டீக்கடைக்கு வந்து அறிமுகமாகியிருந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் அவர் கிழிந்த ஆங்கில செய்தித்தாளின் ஒருபக்கத்தை வாசிப்பதைக் கண்டு ‘தம்பி எத்தனாம் கிளாஸ் வரை படிச்சே?’ என்றார். ‘படிக்கேல்ல’ என்றார் அப்பா. ‘பள்ளிக்கொடமே போனதில்லியா?’ ‘இல்ல’ அவர் கொஞ்சநேரம் அவரை உற்றுப்பார்த்துவிட்டு ‘பின்ன எப்பிடியாக்கும் இங்கிலீஸு படிச்சே? வல்ல சாயிப்புகிட்டயும் வேல பாத்தியோ?’ ‘இல்ல,நானாட்டு படிச்சேன்’

அவரால் நம்ப முடியவில்லை. ஆனால் நம்பத்தான் வேண்டியிருந்தது. அவர் சொன்னார் ‘லே கறுத்தான், உனக்கு என்னல பிராயமாச்சு?’ அப்பாவுக்கு அப்போது இருபது. ‘லே நீ ஒண்ணாம்ஃபாரம் பரிச்சை எளுதலாம் பாத்துக்கோ. நான் உனக்கு பாடபுஸ்தகங்கள கொண்டு வந்து தாறன். நீ ஒருநாலஞ்சுமாசம் இருந்து படிச்சாபோரும்’ அவர் கொண்டுவந்த புத்தகங்களை அப்பா ஒரே மாதத்தில் துப்புரவாக வாசித்து மனப்பாடம் செய்துவிட்டார். அவரது மூளைத்திறமையை நான் கடைசிவரை நினைத்து ஆச்சரியப்பட்டேன். எண்பதிரண்டு வயதில் அவர் சாவதற்கு எட்டுமாதம் முன்னால் சர்ச்சுக்கு வந்த புதிய ஃபாதரிடம் போய் லத்தீன் படிக்க ஆரம்பித்தார். இரண்டு வருடம் இருந்திருந்தால் லத்தீனில் பெரிய அறிஞர் ஆகியிருப்பார் என்று ஃபாதர் என்னைப்பார்க்கும்போதெல்லாம் சொல்வார்.

அப்பா ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் ஆறாம் வகுப்பு , அதாவது ஒன்றாம் ஃபாரம் எழுதி முதல்தடவையிலேயே வெற்றிபெற்றார். தொடர்ந்து அதே டீக்கடையில் வேலைசெய்துகொண்டே இ.எஸ்.எஸ்.எல்.சியும் எழுதி வென்றார். அதாவது எட்டாம் வகுப்பு. அடுத்து மெட்ரிக்குலேஷன் எழுத ஃபீஸ் கட்டியிருந்தார். கடையில் அவர் பொறுப்பாக இருந்து வியாபாரம்செய்வதனால் அம்புரோஸுக்கும் அவர் மேல் நல்ல நம்பிக்கை இருந்தது.

1921ல் அப்பா அவரது வாழ்க்கையில் கடைசிநாள் வரை ஒவ்வொருநாளும், ஒவ்வொரு மணிநேரமும் வியந்து போற்றி பேசிவந்த மனிதரைச் சந்தித்தார். ஜூலை பன்னிரண்டாம் தேதி காலை பதினொரு மணிக்கு. வெளியே வெயில் கொளுத்திக்கொண்டிருந்தது. கறுப்பு கோட்டும் கீழே கச்சவேட்டியும் அணிந்து வக்கீல்களுக்குரிய வெள்ளை போ டை கட்டி இருபத்தைந்து இருபத்தாறு வயதுள்ள ஓர் இளைஞர் அவர் கடைக்குள் நுழைந்து பெஞ்சில் உட்கார்ந்து ‘சூடாட்டு ஒரு சாயா எடுலெ மக்கா‘ என்றார்.

அன்று நாடார்கள் மட்டும்தான் அந்தக்கடைக்கு வருவார்கள். நாடார்களில் அன்று வழக்கறிஞர்கள் மிகவும் குறைவு. இருக்கும் சில நாடார்வக்கீல்களும் பங்களாத்தெருவைச்சேர்ந்த லண்டன்மிஷன் கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் நடை உடைகள் எல்லாமே ஆங்கிலோ இந்தியர்களைப்போல இருக்கும். மற்ற நாடார்களை அவர்கள் உயர்சாதியினரை விடவும் கேவலமாக நடத்துவார்கள். இவர் தெற்கே விளவங்கோடு பக்கம் என்று பார்த்தாலே தெரிந்தது. அசைவில் தோற்றத்தில் எல்லாம் நாட்டுப்புறத்தனம். வெயிலுக்கு கோட்டின் பித்தான்களை கழற்றி காலரை நன்றாக மேலே ஏற்றி விட்டிருந்தார். கோட்டின் கைகளை சுருட்டி மடித்து முட்டுக்குமேலெ கொண்டு வந்து வைத்திருந்தார்.

’அண்ணைக்கு எனக்கு அவரு ஆருண்ணு தெரியாது. ஆனா முதல்பார்வையிலே அவரு ஆருண்ணு எனக்க ஆத்மா கண்டுபிடிச்சு போட்டு. இண்ணைக்கும் அவரு அங்க வந்ததும் இருந்ததும் காலை ஆட்டிகிட்டு இருந்து சாயாவ ஊதிக்குடிச்சதும் கண்ணுலே நிக்குதே… நிப்பும் நடப்பும் கண்டா ஒரு அசல் காட்டுநாடாரு. சட்டைய களட்டிப்போட்டா பத்து பனைய இந்நாண்ணு ஏறுவாருண்ணு தோணிப்போடும். ஒரு அடின்னா நிண்ணு அடிப்பாருன்னு தோணும்…சாயாவ அப்பிடி சுத்தி சுத்தி ஊதிக்குடிக்குதத கண்டா மங்களாதெரு வக்கீலுமாரு சிரிப்பாவ’ என்றார் அப்பா.

பணம் கொடுத்துவிட்டு ‘ஏபிரகாம் சாறுக்க ஆப்பீஸ் ஏதாக்கும்?’ என்று அப்பாவிடம் கேட்டு விட்டு அவர் கையில் இருந்த புத்தகத்தை பார்த்தார் அவர். ‘என்ன புக்கு?’ என்று விளவங்கோடு பாணி நீட்டலுடன் கேட்டார். ‘மெட்ரிக்கு…பரிச்சைக்கு பணம் கெட்டியிருக்கு’ ‘ஓ’ என்றபின் வழியை தெரிந்துகொண்டு சென்றார். அவர் பெயர் ஏ.நேசமணி. தக்கலை அருகே பள்ளியாடி என்ற ஊரைச்சேர்ந்தவர். கொஞ்சம் நிலங்களும் தோப்புகளும் கொண்ட பெருவட்டர் குடும்பம். அவரது அப்பாபெயர் அப்பாவுபெப்ருவட்டர். திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் பீஏ படித்து திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் பி.எல் படித்து முடித்து நாகர்கோயில் பாரில் வக்கீலாக பதிவுசெய்திருந்தார்

ஆம், அவரேதான். மார்ஷல் நேசமணி என்ற பேரில் கன்யாகுமரியில் நாடார்களின் தலைவராக இன்றும் பக்தியுடன் நினைக்கப்படுபவர். அவர் காலத்தில் திருவிதாங்கூரில் அவர் வேறு காங்கிரஸ் வேறு என்றிருக்கவில்லை. திருவிதாங்கூர் சட்டச்சபை உறுப்பினராகத் தேர்தலில் வென்று சென்றார். கன்யாகுமரிமாவட்டம் உருவாகி தமிழ்நாட்டுடன் இணைவதற்காக திருவிதாங்கூர் காங்கிரஸ் என்ற அமைப்பை உருவாக்கிப் போராடினார். தமிழக காங்கிரஸின் தலைவராக இருந்தார். கடைசிவரை பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.

நீதிமன்றத்துக்கு நேசமணி சென்ற முதல் நாளே பெரிய பிரச்சினை எற்பட்டது. கையில் வக்காலத்து பேப்பர்களுடன் அவர் நீதிமன்றத்தில் நுழைந்தார். நீதிமன்றத்திற்குள் ஏழெட்டு நார்காலிகளும் நான்கு முக்காலிகளும் போடப்பட்டிருந்தன. முக்காலிகள் ஜூனியர்களுக்கு என்பது பேச்சு வழக்கானாலும் நாடார்கள் முக்காலிகளில்தான் அமரவேண்டும் என்பது ஒரு வழக்கமாக பேணப்பட்டது. நேசமணி நேராகச் சென்று ஒரு நாற்காலியில் அமர்ந்தார். வழக்குக்கு வந்த அரசு வழக்கறிஞர் எம்.சிவசங்கரன்பிள்ளை அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு முகம் சுளித்து திரும்பிச்சென்றுவிட்டார். அவர் அருகே எவருமே அமரவில்லை. அரைமணிநேரம் தானே தனியாக அமர்ந்திருப்பதை அவர் உணர்ந்தபோது ஏதோ தப்பாக இருப்பதைப் புரிந்துகொண்டார்.

பெஞ்ச்கிளார்க் பரமசிவம் வந்து அவர் அருகே குனிந்து விஷயத்தை சொன்னார். நாடார்கள் முக்காலிகளில் உட்காரலாம். அதுதான் வழக்கம். சீனியர் நாடார் வக்கீல்கள்கூட அப்படித்தான் உட்கார்வது. எம்.கெ.செல்லப்பன் கூட இன்று வரை நாற்காலியில் அமர்ந்ததில்லை… ஒரு நிமிடத்தில் ரத்தமெல்லாம் தலைக்கு ஏற நேசமணி எழுந்து கத்த ஆரம்பித்தார். ‘லே இங்க பாவப்பெட்டவனுக்கு இருக்க எடமில்லேண்ணா பின்ன நீதி எங்கலே கிட்டும்? நாயிப்பயலுவளே…’ என்று கூவியபடி முக்காலிகளை தூக்கிக் கொண்டு வந்து நீதிமன்ற முற்றத்தில் வீசினார். ஒவ்வொரு அறையாக போய் முக்காலிகளை தூக்கிக் கொண்டு வந்து வீசிக்கொண்டே இருந்தார்

அப்பா டீக்கடையில் இருக்கும்போது ஒரு வக்கீல் குமாஸ்தா ஓடிவந்து ‘அந்த பள்ளியாடிப் பெய அங்க எளகி நிக்கான்…தலைக்கு சுகமில்லாத்த பயலாக்கும்’ என்றார். இன்னும் பலர் ஓடிவந்தார்கள். கொலைநடக்கப்போகிறது என்றார்கள். ‘பள்ளியாடிப் பெருவட்டருக்க மவனாக்கும். மரியாத அறியாத்தவன்…எளவயசுல்லா’ என்று ஒரு கிழவர் சொன்னார்.கொஞ்ச நேரத்தில் சட்டையெல்லாம் கலைந்திருக்க வியர்த்து மூச்சிரைத்து நேசமணி வந்துசேர்ந்தார். ‘சாய எடுலே’ என்று அதட்டினார். அப்பா டீயை கொடுத்ததும் ஒரே மிடறில் உள்ளே இழுத்துவிட்டு, சக்கரத்தை வீசிப்போட்டுவிட்டு கிளம்பிச் சென்றார்.

கொஞ்சநேரத்தில் வெள்ளமடம் பகுதியைச்சேர்ந்த இருபதுக்கும் மேற்பட்ட ரௌடிகள் கையில் கம்புகளுடன் டீக்கடைக்கு வந்து நேசமணியை தேடினார்கள். அப்பாவை இழுத்து நிறுத்தி அவரைப்பற்றி கேட்டு மிரட்டினார்கள். நாகர்கோயில் முழுக்க அவர்கள் அவரை தேடி அலைந்தார்கள். அன்று நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. நகர்முழுக்க இதுவே பேச்சாக இருந்தது.’ வெள்ளமடம் பயக்களாக்கும்லே.. வெட்டும் கொலையும் அவனுகளுக்கு வெளையாட்டாக்கும்’என்றார்கள். ஒரு நல்ல கொலை நகரில் நடந்து நெடுநாட்களாயிற்று என்றார்கள்.

மறுநாள் பள்ளியாடியில் இருந்து கம்புகளும் அரிவாட்களும் ஏந்திய ஐம்பது ஆட்களுடன் நேசமணி திருவனந்தபுரம் பயோனியர் பஸ்ஸில் வந்து இறங்கினார்.அவர்கள் சூழ வர வக்காலத்தை தூக்கிக்கொண்டு நீதிமன்றத்துக்குள் சென்றார். அவருடைய ஆட்கள் நீதிமன்றத்துக்கு வெளியே நிறைந்திருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக நீதிமன்றம் முன்னால் கூட்டம்சேர ஆரம்பித்தது. ஒருகட்டத்தில் வெள்ளாள வக்கீகளும் நாயர் வக்கீல்களும் பின்பக்கம் வழியாக தப்பி ஓடவேண்டியிருந்தது.

நாலைந்துநாள் நீதிமன்றம் இல்லை. நகரமெங்கும் பதற்றமாகவே இருந்தது. எல்லா டீகக்டைகளிலும் எல்லா வீடுகளிலும் இதே பேச்சு. விஷயத்தில் சர்ச் தலையிட்டது. பிஷப் வந்து நீதிபதிகளிடம் பேசினார். ரெசிடெண்ட் துரைக்கு மனுகொடுக்கப்போவதாக பேச்சு அடிபட்டது. அந்த செய்தி வெள்ளாளநாயர் வக்கீல்களை அச்சுறுத்தியது. ஆரம்பத்தில் வீரமாக நின்ற பலர் பின்வாங்கினார்கள். கேஸ் இல்லாத இளவட்டங்கள் சிலர் கத்தினாலும் எல்லா சீனியர்கலும் ஒதுங்கிக்கொண்டார்கள்.

மீண்டும் நீதிமன்றம் கூடியபோது புதிய நாற்காலிகள் வாங்கி எல்லாருக்கும் போடப்பட்டிருந்தது. நேசமணியும் அவரது நண்பர்களும் பெரும்கூட்டமாக வந்து டீக்கடை முன்னால் சாலையில் நின்று டீகுடித்தார்கள். அப்பாதான் அன்றைக்கு டீ போட்டார். நூற்றி எழுபத்தெட்டு டீ.

[மேலும்]

முந்தைய கட்டுரைமத்துறு தயிர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவணங்கான் [சிறுகதை] – 2