விமலரும் வராகரும்

இனிய ஜெயம்

ஜக்கி வாசுதேவ் அவர்களின் ஆதி யோகி சிலை, மினியேச்சர் ஒரு அலங்கார வண்டியில்  அவ்வப்போது ஒவ்வொரு ஊரிலும் சுற்றி வரும் நிலையை நீங்கள் பார்த்திருக்கக் கூடும்.

அப்படி வித்யாசமான ஒரு ஊர்வலம் ஒன்றினை இன்று காலை கடலூர் பாடலீஸ்வரர் கோவில் அருகே இருக்கும் ஸ்வேதம்பர சமணர்கள் கோவிலில் கண்டேன். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சிலை.பீடத்துடன் சேர்த்து பத்து அடி உயரம்.

பத்மாசனத்தில் அமர்ந்த கோலம். இடது கீழ் கையில் திரிசூலம். நடு கையில் நாகம். மேல் கையில் மழு. வலது கீழ் கையில் கதை.நடு கையில் உடுக்கை.மேல் கையில் அக்கமாலை.  தழல் கிரீடம் [அல்லது அப்படி ஒரு வடிவம்] . நெற்றியில் எந்தக் குறியும் இல்லை.  வராகமூர்த்தி. மூக்கு நுனியில் வீரப் பற்கள் கொண்டு ஒரு பொக்கிஷப் பெட்டியை ஏந்தி , நாற்புறமும் தாங்கும் யானைகளை பீடமாகக் கொண்டு அமர்ந்திருக்கிறார்.  ஸ்வேதம்பர  சமூக மக்கள் பெரியவர்களும் இளம் பெண்களும் எல்லாம் ஏதோ ஹிந்தி பக்தி பாடல் பாடியபடி பின்னால் சென்று கொண்டிருந்தார்கள்.

மிக வித்யாசமாக இருந்தது. ஸ்வேதம்பரர்களில் சிலர் சக்தி பீடம் சார்ந்த வழிபாட்டில் இருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் இது முற்றிலும் வித்யாசமாக இருக்கிறது. இந்து மதத்தில் பிரத்யங்கரா தேவி வழிபாடு எனில் அதை முன்னெடுக்க யாகங்கள் செய்ய ஒரு ஆளுமை அங்கே இருப்பார். அது போல இங்கு சமணத்தில் இத்தகு தனித்த போக்குகளை முன்னெடுக்க ஆளுமைகள் உண்டா? இவர்கள் சமணத்தில் எந்த மடங்களின் கீழே வருவார்கள். இத் தகு மூர்த்திகள் என்ன விதமான சேவைகளை கோரும்? பலியோ,யாகமோ, தீர்த்தவாரியோ இல்லாத சமணத்தில் இத் தகு தெய்வங்கள் எதைப் பெறும்? அனைத்துக்கும் மேல் இந்த தெய்வங்கள் இதன் வழிபாட்டாளர்களுக்கு என்ன தரும்? வராக மூர்த்தி ஸ்வேதம்பர சமணத்தில் எங்கே அமைந்திருக்கிறார்?

கடலூர் சீனு

அன்புள்ள சீனு

இதை எங்கோ சுருக்கமாக குறிப்பிட்டிருக்கிறேன், சமணப்பயணத்திலா என நினைவில்லை. சமணர்களின் 13 ஆவது தீர்த்தங்காரரான விமலநாதர் பன்றிவடிவிலும் வழிபடப்படுபவர். இவரை பொதுவாக திகம்பரர்கள் வழிபடுவதில்லை, ஸ்வேதாம்பரர் இவர்களைச் செல்வம் கொழிக்கச் செய்பவராக வழிபடுகிறார்கள்.

ஸ்வேதாம்பர சமணத்தின் நம்பிக்கைகள் பல. சமீபத்தில் ஓர் உரையாடலில் சிவராம் ஹரி என்னும் நண்பர் மல்லிநாதர் பெண்ணாக அவர்களால் வழிபடப்படுகிறார் என்றார். சமண நம்பிக்கையின்படி பெண்களுக்கு வீடுபேறு இல்லை. ஆகவே அதற்கு வாய்ப்பே இல்லை என நான் மறுத்தேன். ஆனால் பின்னர் தேடியதில் அது உண்மை எனத் தெரிந்தது. ராஜஸ்தானிலும் தமிழக ராஜஸ்தானிகள் நடுவிலும் அந்த நம்பிக்கை உள்ளது. சமண மதம் பற்றி நமக்குத்தெரிந்ததே கொஞ்சம்தான்

விமலநாதர் பாஞ்சாலத்தை ஆண்ட இக்‌ஷுவாகு ஷத்ரிய குலத்தில். கிராதவர்மனுக்கும் சியாமளாதேவிக்கும் மகனாகப்பிறந்தார்.உத்தரப்பிரதேசத்தில் காம்பில்யம் என்னும் ஊரில் அவருடைய ஆலயம் உள்ளது. ஜார்கண்டில் உள்ல சிகர்ஜி என்னும் மலையுச்சியில் வீடுபேறடைந்தார். அவர்களின் குலக்குறி பன்றி. பின்னர் ராஜபுத்திரர்கள், ராஷ்டிரகூடர்கள் போன்ற பல அரசகுடியினரின் குலக்குறி பன்றிதான்.

சில சமணநூல்களில் கூறப்பட்டுள்ளவற்றின்படி விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் என்னும் புராணம் சமணப்புராணங்களுக்குப் பிற்காலத்தில் உருவானது. அதாவது மகாபாரதக் காலகட்டத்தில். அவர்கள் பல சமணத் தீர்த்தங்காரர்களை உருமாற்றி தங்கள் நம்பிக்கைக்குள் இழுத்துக்கொண்டார்கள். அவ்வாறு விமலநாதர் இந்துமரபுக்குள் இழுத்துக்கொள்ளப்பட்ட போது வராக அவதாரமாக மாறினார்.

நீங்கள் கண்டது விமலநாதரின் விழாவாக இருக்கலாம்

ஜெ

முந்தைய கட்டுரைச.துரை -மேலும் நான்கு கவிதைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52