அனல் பெருகிநின்ற குருக்ஷேத்ரப் பெருங்களத்தில் விஜயத்தை கையிலேந்தியவனாக அர்ஜுனன்மேல் அம்புடன் எழும்பொருட்டு திரும்பிய கர்ணனிடம் சல்யர் துயரும் ஆற்றாமையுமாக சொன்னார் “மைந்தா, என் சொற்களை கேள். நான் பெரிதும் கற்றறிந்தவன் அல்ல. நான் ஈட்டியவையும் குறைவே. ஆனால் எத்தனை எளியோன் ஆயினும் ஒவ்வொரு தந்தையும் தன் மைந்தனுக்கு அளிக்கும் பிறிதில்லாத மெய்மை என ஒன்று உண்டு. அதை நான் உனக்கு அளிக்கிறேன். கேள்.”
கர்ணன் நாணொலி எழுப்பி “செல்க… அவனை இன்றே கொல்கிறேன், செல்க!” என்றான். “அவன் தன் சாவு நோக்கி வந்துகொண்டிருக்கிறான். வல்லமைகொண்ட என் அம்புகளில் அவன் உயிர்குடிக்கவிருப்பது எது என பார்க்கிறேன்” என்று அறைகூவினான். சல்யர் “இது இக்களத்தை வகுக்கவிருக்கும் அறுதிப்போர் என நான் உணர்கிறேன். என்னிலெழும் சொற்களை நான் சொல்லியாகவேண்டும்… இவற்றை நான் பிற எங்கும் சொல்ல இயலாது போகலாம். தேர்ப்பாகனாக அமர்ந்து மட்டுமே சொல்லத்தக்கவை இவை எனத் தோன்றுகிறது” என்றார்.
“எனில் தேரை அவனை நோக்கி செலுத்துக… அவனை என் முன் நிறுத்துக… செல்லும் வழியில் நான் தடையென எழுந்துவரும் இப்படைகளை அழித்துக்கொண்டிருக்கையில் உங்கள் சொற்களை என்னிடம் சொல்லுங்கள்” என்று கர்ணன் சொன்னான். “ஆம், அவ்வாறே” என்றார் சல்யர். மூச்சுத்திணறலுடன் “என்னில் எழும் இச்சொற்களை எப்படி வகுப்பதென்று அறியேன். நூல்நவின்றுள்ளேன், எனினும் நூல்முறைமைகள் எவையும் மெய்வாழ்வின் தருணத்தில் சொல்லெடுத்துத் தருவதில்லை என்றும் அறிகிறேன்” என்றார். “நீ இப்போது வஞ்சினம் உரைத்து கிளம்புகிறாய். வெற்றி உறுதி என உனக்கே சொல்லிக்கொள்கிறாய். ஆனால் உன் நாணொலியில் நான் ஒரு தயக்கத்தை உணர்கிறேன். ஒருகணம், ஒரு மாத்திரை அது தொய்வடைந்துள்ளது.”
“அந்தத் தொய்வால்தான் நீ அவர்களுக்கு உயிர் அளித்தாய். எவ்வண்ணமேனும் வெற்றி, வெற்றிக்குக் குறைவாக ஏதுமில்லை என்பதே வீரன் கொள்ளும் முழுவிசை நிலை. அது உன்னில் இன்னமும் அமையவில்லை. அந்த ஒருகணத்தால் நீ வெல்லப்படுவாய் என நான் அஞ்சுகிறேன். ஆகவே இதை சொல்கிறேன்” என்று சல்யர் சொன்னார். அவர்களுக்குமேல் வெண்ணிற முகில்திரள் ஒன்று வந்து நின்றது. உச்சிநெருங்கும் பொழுது என்பதனால் அது மாபெரும் வெண்வைரம் என சுடர்விட்டது. அதன்மேல் ஏறிநின்று தேவர்கள் கீழே நோக்கினர். அவர்களின் மணிமுடிகளின் ஒளிர்வால் முகில்திரளின் விளிம்புகள் கூர்மின் கொண்டன. வானில் இடியோசை எழுந்தமைந்தது.
சல்யர் இடைவெளியில்லாது பேசிக்கொண்டிருந்தார். பேசப்பேச அவரிடமிருந்து சொற்கள் ஊறிக்கொண்டே இருந்தன. அவர் அதுநாள் வரை தன்னுள் பேசிய அனைத்தும் அவரிடமிருந்து எழுவதுபோலத் தோன்றியது. “நீ கொண்ட இழிவுகள் அனைத்தையும் நான் அறிவேன். துரோணரால் துரத்தப்பட்டாய். உன் ஆசிரியரால் தீச்சொல்லிடப்பட்டாய். உன் உடன்பிறந்தாரால் அவையிழிவு செய்யப்பட்டாய். உன் பிதாமகரால் சிறுமை செய்யப்பட்டாய். உன் அரசவையிலேயே ஷத்ரியர் உன்னை மதிக்காமல் அமர்ந்திருந்தனர். உன் குடிக்கு இன்னமும்கூட ஷத்ரியத் தகுதி இல்லை…” கைகளை வீசி மூச்சிரைக்க அவர் உரக்க சொன்னார். “ஆனால் அதை எண்ணி வருந்தினால் நீ ஆண்மகனல்ல. எவருக்கு இருந்தது அந்தத் தகுதி? ராவண மகாப்பிரபு அரக்கர்குலத்தில் பிறந்தவர் அல்லவா? யாதவர் அல்லவா கார்த்தவீரியர்?”
“ஏன், அதோ எதிரில் வெல்லற்கரியவனாக அமர்ந்திருக்கும் இளைய யாதவன் அவைமுன்பனாக அமைந்து நடத்தியதல்லவா யுதிஷ்டிரனின் ராஜசூயம்? அங்கே அத்தனை ஷத்ரியர்களும் சென்று அவனை வணங்கி மங்கலஅரிசி கொண்டு வேள்விநிறைவு செய்தார்கள் அல்லவா? எங்ஙனம்? அவன் தன் ஆழியை எடுத்தான். எதிர்கொள்வோர் எழுக என்றான். அதை எதிர்க்கும் ஆற்றல் எந்த ஷத்ரியனுக்கும் இருக்கவில்லை” என்றார் சல்யர். “கர்ணா, உன் விஜயம் அந்த ஆழியைப்போல் எழவேண்டிய தருணம் இது. வேள்விக்களத்திலும் போர்க்களத்திலும் முடிவாகிறது குலமூப்பு என உணர்க! அறைகூவி நில். எதிர்கொண்டு எழு. பணியாதோரைக் கொன்று முன்செல்… உனக்கு நான் சொல்வதற்கு பிறிதொன்றில்லை. இது தெய்வங்கள் உனக்கு அளிக்கும் களம்…”
அவர் நெஞ்சில் கைவைத்து கண்ணீர் நிறைந்த விழிகளுடன் திரும்பினார். “உனக்கு நானன்றி இதைச் சொல்ல எவருமில்லை என்று உணர்க! பிறர் உன் பெருமையையோ சிறுமையையோ மட்டுமே காண்பார்கள். இரண்டையும் காண்பவன் நான் மட்டுமே. பிறர் உன்மேல் கொண்ட அன்பில் துளியிலும் துளியேனும் தன்னலம் இருக்கும். உனக்காக உயிரையும் கொடுக்க இயல்பாக எழுபவன் நான் மட்டுமே.” அவர் உடல் விதிர்த்துக்கொண்டிருந்தது. “கேள், மானுடர் அனைவருக்கும் தெய்வங்கள் ஒரு வினைவட்டத்தை அளிக்கின்றன. ஆம், ஒரே ஒரு வினைவட்டத்தை மட்டுமே அளிக்கின்றன. அதை கர்மமண்டலம் என்கின்றனர் நூலோர். முன்வினை வந்து உறுவது, நிகழ்வினை கூர்கொள்வது, வருவினை தொடங்குவது அப்புள்ளியில்தான். பிரார்த்தம், சஞ்சிதம், ஆகாமியம் என்ற மூன்றும் அறுதியாகக் குவியும் அப்புள்ளியை கர்மபிந்து என்கின்றனர். நீ நின்றிருப்பது அங்கு. அதை தெளிக!”
“தன் வினைவட்டத்தை உணர்பவன், தன் வினைமையத்தில் உச்சவிசையுடன் எழுபவன் மட்டுமே தெய்வங்களுக்குரியவன். அவன் செல்வினையின் பயன்முடிக்கிறான். நிகழ்வினையை நிறைவுசெய்கிறான். வருவினையை தன் தோள்வலியால் உளவிசையால் வகுக்கிறான். மண்ணில் அனைத்தையும் அடைகிறான். விண்ணில் தேவர்களுடன் சென்றமர்கிறான். இந்த குருக்ஷேத்ரம் பல்லாயிரம்பேரின் கர்மபிந்து. இங்கு உச்சம்கொள்ளவேண்டியவர்கள் நீயும் அர்ஜுனனும். ஒருகணம் நீ பிந்தினால் அவன் எழுவான். ஒரு எண்ணம் உன்னில் தயங்கினால் நீ அனைத்தையும் இழப்பாய். இத்தருணத்தை வென்றெழுக!”
“மைந்தா, இக்கணத்தை தெய்வங்களுக்கு உகந்ததாக ஆக்குக! களம் ஒரு வேள்வி. இங்கே ஆற்றலே வேதம். அளியின்மையே சங்கல்பம். அம்புகள் நெய்க்கரண்டி. குருதியே நெய். உயிர்கள் ஆகுதியாகின்றன. இனியவனே, இங்கே வெற்றியே வேள்விப்பயன் என்று தெளிக!” என்றார் சல்யர். சொல்லிச்சொல்லி அவரிடம் சொல் ஒருமைகொண்டது. சொல்லொருமைகளில் வந்தமையும் காலம்கடந்து நின்றிருக்கும் மெய்மைகள் அதில் கூடின. அச்சொற்களை அவரும் நன்கறியவில்லை. அவரினூடாக அவை நிகழ்ந்தன. “அங்கனே, மீட்பென்பது தன்னிடமே என சொல்கின்றன வேதமுடிபின் நூல்கள். தானென்றுணர்தலே மெய்மையிலமர்தல். அதன்பொருட்டு கணந்தோறும் வாயில்களை தட்டுவதொன்றே நாம் செய்யக்கூடுவது. திறக்கும் கணமும் வாயிலும் ஒருங்கமையும் என்றால் மீட்பு நிகழ்கிறது.”
“கணந்தோறும் என நிகழும் ஆயிரம்கோடி அறிதல்களில் ஒன்றில் உள்ளது நமக்கான மெய்மை. அது கல்லில் தெய்வமென எழுந்து நம்மை ஆட்கொள்வதே விடுதலை. அங்கனே, எளியோருக்கும் பெரியோருக்கும் இல்லை இந்த அகக் குழப்பம். நீ எளியோர் என துயர்கொள்கிறாய். அறிந்தோர்போல் பேசுகிறாய். அறிக, துயரின்மையே மெய்மை எனப்படும்! இறந்தவர்க்கோ இருப்பவர்க்கோ துயர்கொள்ளார் அறிவர். உனக்கு வகுக்கப்பட்ட இக்களம் உனக்கான வாய்ப்பென்று கொள்க! உனக்கு அளிக்கப்பட்ட ஆற்றலும் அந்த எல்லைக்குட்பட்டதே. அவ்விரண்டும் முரண்கொண்டு முடைந்துகொண்டு மட்டுமே உன் வாழ்க்கையை உருவாக்க முடியும். நீ இன்று இக்கணத்தை மட்டுமே ஆள இயலும். எழும்காலம் உன்னிடமில்லை. அது உன்னை எவ்வண்ணம் வகுக்கும் என நீ அறியவே இயலாது. வரும்புகழுக்காக இக்கணத்தை தவறவிட்டால் நீ தெய்வங்களுக்கு முன் இளிவரலுக்கு உரியவனாய். நீ மானுடன். மானுடனுக்குரிய அனைத்தும் எல்லைக்கு உட்பட்டவை. எல்லைக்குட்பட்ட ஆற்றல்களுடன் எல்லையின்மை முன் எப்படி நிற்பாய்? கடுவெளிமுன் நறுமணம் என கரைந்தழிவாய்.”
“உடலால், உள்ளத்திறனால், பிறப்பால், சூழலால் வகுக்கப்படாது இங்கு வரும் மானுடர் எவருமில்லை. தனக்கு அளிக்கப்பட்ட அனைத்தையும் திரட்டி உச்சமென வெளிப்பட்டு தன் களத்தில் நின்றாடுபவன் நிறைவடைகிறான். அவனுக்கு இங்கே இருப்பது வெற்றியும் தோல்வியும் அல்ல. தன்னிறைவு. தன் செயலை முழுமைசெய்தவன் தெய்வங்களை அறைகூவி தனக்குரியவற்றை கோரலாம். ஏனென்றால் வெளிப்படுகையிலேயே அவன் வென்றவனாகிறான். அவன் அடைவன அவனுக்கு வெளியே இல்லை. வேழங்களைத் தடுக்கும் பெருங்கிளைகளை கீரிகள் அறிவதேயில்லை. சிறுதவளைகள் சிம்மங்களுக்குமேல் ஏறிவிளையாடுகின்றன. உனக்கு அமைந்த களத்தின் அனைத்து எதிர்விசைகளும் உன் ஆற்றலைக் கோரியே அப்பேருருக் கொண்டன என்று உணர்க! எழுக… தயக்கங்களை களைக!”
“இங்கனைத்திலும் நிறைந்திருக்கும் அழிவற்ற ஒன்றின் அலைகளே இவையென்று உணர்ந்தவன் துயரோ களிப்போ கொள்வதில்லை. எழுவதே அமையும். எரிவதே அணையும். எனவே இருமைகளற்று துலாமுள் என நிலைகொள்பவனுக்கு சோர்வென்பதில்லை. அங்கனே, உணர்வுகளில் உயர்ந்தது அஞ்சாமை. மானுடரில் சிறந்தவன் வீரன். தன் செயல்களில் ஐயமற்று, முழு விசையுடன் வெளிப்படுவதே வீரம் எனப்படுகிறது. இருத்தலில் முழுமைகொள்பவன் என்பதனால் வீரனுக்கு சாவுமில்லை. வில்லவர் அனைவரும் அறிந்த ஒன்றுண்டு. அம்பில்தான் அவர்களின் திறன் செல்கிறது. இலக்குகளை தெய்வங்கள் ஆள்கின்றன. ஆனால் அதை எண்ணி வில் தாழ்த்துவோர் கோழைகள் என்றோ அறிவிலிகள் என்றோ அழைக்கப்படுவர். இயற்றும் பொறுப்பே மானுடருக்கு, எய்துவது முடிவிலியை ஆளும் வல்லமையின் ஆணையால்.”
“ஆகவே, போர்புரிக! விழைவினால் அல்ல, வெறுப்பினால் அல்ல, செயலாற்றும் பொருட்டு இங்கு வந்திருக்கிறாய் என்பதனால் செயலாற்றுக!” என்றார் சல்யர். “அங்கனே, மானுடர் அடைந்த எதையும் இழப்பதில்லை. அறியாமையை, ஐயத்தை, சினத்தை, துயரைக்கூட அவர்கள் உடைமையென்றே கொள்கிறார்கள். கைவிட மறுக்கிறார்கள். இழக்க அஞ்சுகிறார்கள். நீ அடைந்த துயரை உடைமையென இடையில் சுமந்திருக்கிறாய். இழிவுகளை தொட்டுத்தொட்டு பெருக்கிக் கொள்கிறாய்.. கைவிடப்படாத எதுவும் சுமையே. இழக்கப்படாத எதுவும் தளையே. நிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. செயலை அறுதியாக தளரச்செய்வது தேவையற்ற இரக்கம். தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.”
“எழுக! உன் தோள்களில் வெல்லும்விழைவு நிறைக! உன் ஆற்றல் முழுமையும் களத்தில் நிகழ்க! வெற்றியால் இவ்வுலகனைத்தையும் அடைவாய். சிறுமைகளை அத்திருவால் நிரப்புவாய். வீழ்ந்தால் அச்சிறுமைகளை பெரும்புகழ் எழுந்து அழிக்கும். ஆகவே, போர்புரிக!” என்று சல்யர் சொன்னார். விண்ணின் கிழக்குச்சரிவில் மீண்டும் ஓர் இடிமுழக்கம் எழுந்து எதிரொலித்தொடராக மேற்குவான்சரிவுவரை சென்று அமைந்தது.
கர்ணன் சல்யரின் சொற்களை செவிகொண்டான். நெஞ்சில் கைவைத்து தலைவணங்கியபடி அவன் கேட்டான். “மத்ரரே, எல்லா வகையிலும் என் தந்தைக்கு நிகரானவர் நீங்கள். உங்கள் சொற்களைக் கடக்க விழைபவன் அல்ல நான். ஆயினும் ஒன்றை கேட்கிறேன். ஒருவன் தன் வாழ்நாளெல்லாம் கொண்டிருக்கும் அனைத்தையும் தன் வினைமையத்தில் துறந்தாகவேண்டுமா? அளிகொண்டவன் அளியை. கொடைபழகியவன் கொடையை. அறம்நிற்பவன் அறத்தை? அவ்வண்ணம் உச்சத்தில் கைவிடவேண்டியவை அவை என்றால் ஏன் மானுடனுக்கு அவை ஆணையிடப்பட்டுள்ளன? ஏன் அவற்றை மானுடன் வாழ்நாளெல்லாம் பயிலவேண்டும்?”
சல்யரின் முகம் கனிந்தது. “நான் இங்கு சொல்வன அனைத்தும் என் வாழ்நாளில் அறிந்தவை. தந்தையர் மைந்தரிடம் நூலில் கற்றவற்றை, பிறர் சொல்லி அறிந்தவற்றை சொல்வதில்லை. பட்டு உணர்ந்தவையே அவர்களிடம் சொற்களாகின்றன. இவை தந்தைசொல் என உளம்கொள்! நான் இவற்றை என்னுள் இருந்தே அறிந்திருக்கிறேன். நான் கொண்ட நடிப்புகள், நான் பூண்ட மாற்றுருக்கள், நான் வெளிப்பட்ட தருணங்கள் வழியாக நான் உணர்ந்தமைந்த மெய்மைகள் இவை. இவற்றை குருதிகொடுத்து அறிந்திருக்கிறேன். கண்ணீருடன் எனக்குள் சேர்த்துக்கொண்டிருக்கிறேன். அவ்வண்ணம் சொல்ல சில இல்லாத தந்தையர் இல்லை.”
“மைந்தா, மானுடரிடம் அவ்வாறு மாறாத தன்னிலை என ஒன்றில்லை. இங்கிருப்பது ஒரு மாபெரும் உரையாடல். உரையாடலில் நாம் பிறரை புரிந்துகொள்ள முயல்கிறோம். ஆகவே அறிந்த சிலவற்றைக்கொண்டு அவர்களை வகுக்கிறோம். அவ்வாறு வகுக்கப்பட்ட அவர்களுக்கு எதிர்வினையாக நம்மை வகுத்துக்கொள்கிறோம். அவர்களும் நம்மை வகுக்கிறார்கள், விளைவாக தங்களை வகுக்கிறார்கள். இருபுறமும் நின்று நம்மை நாமே சமைத்துக்கொள்கிறோம். எந்த உரையாடலையும் கூர்ந்து நோக்கு, அது நீளும்தோறும் ஒவ்வொருவரும் முற்றாக வரையறை செய்யப்பட்டிருப்பதையே காண்பாய். இங்கே நாம் என நாம் எண்ணிக்கொள்ளும் அனைத்தும் நம் மீது நம்மாலும் சூழலாலும் ஏற்றப்பட்டவையே. என்னை நோக்குக! ஆணவமும் மிடுக்கும் கொண்ட மலைமகன் என என்னை வரையறை செய்துகொண்டேன். பின்னர் அரசுக்கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கி அதை தலைமைதாங்கும் அரசியல்திறனாளனாக. பேரரசு ஒன்றை உருவாக்கும் தொடக்கவிசையாக. பின்னர் மெல்லமெல்ல குடிப்பெருமிதமும், குடிகளைப்பற்றிய பொறுமையின்மையும், குடிகளின் எதிர்காலம்பற்றிய பதற்றமும் கொண்ட பெருந்தந்தையாக.”
“இவற்றின் நடுவே நான் யார்? ஓர் உரு இன்னொன்றாக ஆகும்போது முந்தையது எங்கே செல்கிறது? எவராலும் சொல்ல இயலாது? நீர்நிழலை நதி எனக் கொள்ளலாமா? நீரோட்டத்தையே நதி எனக் கொள்ளலாமா? இல்லை இரு கரைகளை கொள்ளக்கூடுமா? நதி என்பதுதான் என்ன?” என்று சல்யர் சொன்னார். “நாம் கொண்டுள்ள அத்தனை அடையாளங்களும் விடைகள் என்று உணர்க! நம்மிடம் பிறர் கேட்பதற்கான விடைகள். நாமே நம்மிடம் கேட்டுக்கொள்வதற்குரிய விடைகள். அவ்வினாக்களே விடைகளை வடிவமைக்கின்றன. வினாக்கள் திட்டவட்டமான புலங்களிலிருந்து உருவாகின்றன. அறுதியான வடிவம் கொண்டிருக்கின்றன. விடைக்கான வாய்ப்புகள் என்னும் வடிவில் விடையையே உள்ளடக்கியிருக்கின்றன. அவ்வினாக்களை உருவாக்கும் புலங்களால் நாம் வடிவமைக்கப்பட்டிருக்கிறோம் எனில் அந்த வரையறை அறுதியானதா என்ன? அந்தப் புலங்களுக்கு அப்பால் அவற்றுக்கு என்ன மதிப்பு இருக்கமுடியும்?”
“எண்ணுக, நீ கொடையாளி! நீ சொல்பிறழாதவன். நீ அளிகொண்டவன். நீ அறம்தவறாத வீரன்… ஆம், இவையனைத்தும் நீயே. ஆனால் இவை நீ எவருக்கு அளிக்கும் விடைகள்? எந்தப் புலங்களில் நின்று உன்னை நீ வகுத்துக்கொண்டவை இவை? எந்தத் துலாவின் மறுதட்டில் இதை நிகரெடை என வைத்தாய்?” என்று சல்யர் கேட்டார். “தயங்காமல் உன்னை கிழித்துச்சென்று இதை உணர்க! இந்த உருவங்களை எவர்பொருட்டு சூடிக்கொள்கிறாய்? அனைத்து உருவங்களும் மானுடன் மூடிக்கொள்ளும் திரைகள்தான். இந்த உடலும் முகமும்கூட. நாம் பதுங்கி மறைந்திருக்கும் திரைகளை நாம் அஞ்சுகிறோம். ஏனென்றால் அவற்றை நம்மால் எளிதில் விலக்கிவிட முடியாது. திரையிட்டுக்கொண்டமைக்கு நாணுகிறோம், ஏனென்றால் அது சிறுமை என நாம் அகத்தால் அறிந்திருக்கிறோம்.”
“திரையிட்டுக்கொண்டவன் தெய்வங்களை ஏமாற்றுபவன். திரையணிந்தவனுக்கு ஊழ்கமில்லை. ஊழ்கம் முதிர்கையில் யோகம். யோகமில்லாமல் மெய்யறிதல் இல்லை. மெய்யறிவே விடுதலை. கர்ணா, யோகமென்பது அகத்தமைவதும் புறத்தமைவதும் ஒன்றென ஆதல். இருமுனை இசைவையே யோகம் என்றனர் நூலோர். யோகமில்லாதவனுக்குள் இருந்து அவன் ஆழம் தவிக்கிறது. ஆழ்கிணற்றில் நீர் நலுங்கிக்கொண்டிருக்கிறது. அது வான் தேடுகிறது. அந்த அமைதியின்மையால் நாம் திரைகளை அணிகளென்று ஆக்கிக்கொள்கிறோம். உடலுக்கு அணிபூட்டுகிறோம். உடலையே அணியென்று ஆக்கிக்கொள்கிறோம். உடல்சூடும் அனைத்தையும் அணியென்றே உணர்கிறோம். அனைத்து அடையாளங்களும் நம் அணிகளென்று உருமாறிக்கொள்கின்றன. ஆணவமும் அணியே. கர்ணா, அனைத்து அணிகளும் ஆணவத்தின் அழகுத்தோற்றங்களே.”
“அடையாளங்கள் பாதுகாக்கின்றன. அடையாளங்கள் வாயில்களை திறக்கின்றன, அவையில் அமரச்செய்கின்றன, முறைமைச் சொற்களாகின்றன. குடியில், குலத்தில், நாட்டில் நம்மை நிறுத்துகின்றன. அடையாளம் துறந்து உலகியலில் வாழ எவராலும் இயலாது. அடையாளம் துறப்பதே துறவு. இவ்வுலகு அளித்த அடையாளங்களைத் துறப்பதன் உருவகமே ஆடைதுறத்தல். தன்னிலெழுந்த அடையாளங்களைத் துறப்பதன் உருவகமே மயிர்துறத்தல். அனைத்து அடையாளங்களையும் துறப்பவன் தெய்வங்களுக்குமுன் நிற்கிறான். தெய்வம் என்பது அடையாளமாகி வந்த அடையாளமின்மை என்றனர் நூலோர். இங்குள்ள ஒவ்வொருவரும் அறியப்படும் அடையாளங்களே. அரசன் என்பவன் அடையாளங்களின் மையமாக அமைந்த அடையாளம்.”
“ஆனால் அடையாளங்களை நாம் சுமக்கலாகாது, கர்ணா. கவசங்களால் நடக்கமுடியாமலாவது போன்றது அது. அணிகள் மின்னலாம், விழிகளுக்கு அவை மாற்று என ஆகாது. அடையாளங்களை அணிகளாக்கிக் கொள்பவன் ஆணவம் கொள்கிறான். அது அவனை அழிக்கும். ஆணவம் காயில் இனித்து கனியில் கசப்பது. நீ கொண்டுள்ள இவ்வடையாளங்கள் அல்ல நீ. இவையனைத்தும் உன்னை தளையிடுகின்றன என்று உணர்க! நீ வாழ்நாளெல்லாம் இயற்றியது என்பதனால் ஒன்று உன் வாழ்க்கையென்றாவதில்லை. நீ சுமந்தவை என்பதனால் தளைகள் உன் உடைமைகளும் அல்ல” என்றார் சல்யர். “இத்தருணம் ஓர் அறைகூவல். ஒரு வினா. இதற்கு இங்கே நீ அளிக்கும் விடை என்ன என்பதே உன்னை வடிவமைக்கட்டும். வாழ்வின் வினைமையங்கள் அனைத்தும் ஒற்றைவினாக்களே. அதற்கான விடையாக தன்னை அக்கணம் உருக்கி உருமாற்றிக்கொண்டு எழுபவனே வெல்கிறான்.”
“நம்மை எப்போதும் சிறப்பாக ஏமாற்றுபவர்கள் நாமே. ஒவ்வொரு உருவும் எங்கோ உள்ள ஒரு தெய்வத்தின் உருவம்தான் என்கின்றன நூல்கள். கடுவெளியில் கருத்துருவாக உள்ள அவை எங்கோ எவரோ கொண்ட கனவில் உருவம்கொள்கின்றன. பின்னர் இங்கு இப்புவியில் தங்களை நிகழ்த்த அவ்வுருவையே கருவியெனக் கொள்கின்றன. நாம் அணிந்த மாற்றுருக்களுக்குரிய தெய்வங்கள் நம்முடன் எப்போதும் உள்ளன. அவ்வுருவே நாம் என நம்மிடம் சொல்கின்றன. ஒவ்வொரு உருவுக்கும் அவற்றுக்குரிய இயல்புகள் உண்டு. அவ்வியல்புகளை அவை நமக்கு அளிக்கின்றன. அவற்றையே நாம் என நாம் மயங்கும்படி செய்கின்றன. தெய்வங்களிடமிருந்து மானுடர் எளிதில் விடுபட இயலாது.”
“அங்கனே, இதை நீயே அறிந்திருப்பாய். அறியாதோர் எவருளர் இங்கு? தீமையில் ஊறிய ஆணவம் எளிமையானது. அது தீயது என அறியும் வாய்ப்பை நமக்கு அளிக்கிறது. நன்மையில் விளையும் ஆணவம் மேலும் கொடியது. அது நாம் வெளியேறும் வாய்ப்புகள் அனைத்தையும் மூடிவிடுகிறது. அன்னை என்னும் ஆணவம் தன் உடலே மைந்தர் என எண்ணச் செய்கிறது. தந்தை எனும் ஆணவம் மைந்தர் வடிவில் தான் வாழவிருப்பதாக நம்பவைக்கிறது. பிதாமகன் என்னும் ஆணவம் குடியை தன் மைந்தர் என கருதச்செய்கிறது. அறத்தோன் என உணர்பவன் அளியிலாதவன் ஆகிறான். கொடையாளி என உணர்பவன் மடமையை தன் பெருமை எனக் கொள்கிறான். அவை ஒவ்வொன்றின்பொருட்டும் மானுடர் உயிர்துறக்கிறார்கள். மைந்தா, மெய்மையறியாமல் மயங்கி துறக்கப்படும் உயிர் வீணானதே. உடலில் உயிர் குடிகொள்வதே அறிதலென ஆகி மெய்மையில் அமையும்பொருட்டு என்கின்றன நூல்கள். ஆணவத்தின்பொருட்டு அதைத் துறப்பவன் எவ்வகையிலும் தன் இலக்கை எட்டாதவனே.”
“அளிகொண்டவனின் கீழ்நிலை ஒன்றுண்டு, தகுதியற்றவனிடம் இரக்கம் காட்டுவது. கொடையாளியின் சிறுமை ஒன்றுண்டு, கோரப்படாதபோது அளிப்பது. பசிக்காதபோது உண்ணப்படும் உணவும் நோயிலாதபொழுது உண்ணப்படும் மருந்தும் உசாவப்படாதபோது சொல்லப்படும் உண்மையும்போல அது நஞ்சென்று ஆகும். அளிப்பவனுக்கும் பெறுபவனுக்கும் அழிவை கொண்டுவரும்” என்று சல்யர் சொன்னார். “நீ அளித்த சொற்கள் உனது ஆணவத்தின் வெளிப்பாடு. நீ கொடுத்தவை உனது வீண்தருக்கையே காட்டுவன. அதை இப்போதேனும் உணர்ந்தால் நீ விடுபடுவாய். இத்தருணத்தை இன்று புதிதெனப் பிறந்தாய் என எண்ணி எதிர்கொள்க! உலைக்குள் நுழையும் இரும்பிலிருந்து அழுக்கும் துருவும் அகல்கின்றன. அனல்கொள்கையில் அதுவும் அனலாகின்றது.”
“அங்கனே, இக்களம் உன்னை எவ்வண்ணம் வடிவமைக்கிறது? உணர்க, இங்கு நீ வில்கொண்டு எழுந்த வீரன்! பரசுராமரின் அம்புகளை தோளிலேற்றியவன். வென்று முன்செல்லவேண்டியவன். இத்தருணத்தை மறைக்கும்படி உன்னில் எழும் நேற்றைய உன் வடிவங்கள் அனைத்தும் தடைகளே. நேற்று அளித்த சொற்கள், நேற்று கொண்ட உணர்வுகள் அனைத்தும் உன்னை இதிலிருந்து பின்னிழுக்கின்றன. எளிய மானுடருக்கு பெருவெற்றிகள் இல்லை என அறிக! எளிய மானுடரை ஆளும் உணர்வுகளிலிருந்து எழுந்தவர்களே பேருருவர்கள்” என்றார் சல்யர். “நோக்குக, மறுபுறம் எழுந்து வருபவனை! நாளை அவனை அருஞ்செயல்புரிந்தவன் என காவியங்கள் பாடும். அவன் தன் ஆசிரியரை கொன்றான். தன் பிதாமகரை கொன்றான். அவன் வில் தழையவில்லை. அம்புகள் இலக்கு பிறழவுமில்லை. ஏனென்றால் அவனுக்கு அவனுடைய தேர்ப்பாகனால் வெற்றிக்கான சொல் உரைக்கப்பட்டிருக்கிறது.”
“ஆகவே, போர்புரிக! பேரறத்தை எவரும் ஐயமின்றி உணரவியலாது. பேரறத்தில் எப்பகுதியில் பொருத்திக்கொள்வதென்று உணர்தல் அதனினும் அரிது. அறம் உசாவுபவன் செயலாற்றுவதில்லை. செயலாற்றாதவனின் உள்ளம் இருளும் தூசும் தேங்கி நாற்றம் கொள்கிறது. மானுடர் அறியக்கூடுவது தன்னறம் ஒன்றையே. தன்னறத்தில் எவருக்கும் ஐயமிருப்பதில்லை. செயலாற்றுக! செயலாற்றுவதற்குரிய ஒரே வழி அதுவே. தன்னறம் நின்று செய்யும் போரைவிட உயர்ந்த நன்மை அரசர்க்கில்லை. தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது இத்தருணம். இதில் முதன்மைகொண்டு எழுக!” என்று சல்யர் சொன்னார்.
கர்ணன் அவரையே நோக்கிக்கொண்டிருந்தான். பின்னர் பெருமூச்சுடன் “நீங்கள் சொல்லும் இச்சொற்களை என்னுள் அமர்ந்து எவரோ சொல்வதுபோல், நான் என்றென்றும் அறிந்திருப்பதுபோல் உணர்கிறேன். இச்சொற்களை இங்ஙனம் பரிந்து எனக்கு இப்புவியில் பிற எவரும் சொல்லப்போவதில்லை என்றும் அறிவேன். ஆயினும் நான் நிலைகொள்ளவில்லை. என் வில்லுக்கே அனைத்தையும் விட்டுவிடுகிறேன். அது களத்தில் முடிவெடுக்கட்டும்” என்றான். சல்யர் “மீண்டும் என் சொற்களை எண்ணுக! அவை உன்னுள்ளத்தில் நிலைகொள்ளட்டும்” என்றார்.
மறுபக்கம் அர்ஜுனனின் தேர் நடுவே இருந்த கௌரவப் படையின் சுவரை உடைத்துக்கொண்டு தோன்றியது. வெடித்து புகைமரங்கள் என எழுந்து முகிலென மாறி விண்ணில் பரவிய எரியம்புகளின் நடுவே அவன் தேர்மகுடம் மின்னி மின்னி அணைந்தது. செம்புகைத்திரை காற்றில் அள்ளப்பட்டு அகல வெளித்த இடையில் அவனுடைய தேர் உச்சிவானின் ஒளியில் சுடர்ந்தபடி உதிர்ந்து பரவிய பிணங்களின்மேல் ஊர்ந்து உலைந்தாடியபடி வந்தது. அதன் ஏழு புரவிகளும் குஞ்சிமயிர் அனலென பறக்க, கவசங்களில் பாவைச்செவ்வெரி அலைபாய, புகைக்கு மூக்குவிரித்து கனைப்பில் பல்தெரிய வாய்திறந்து விழிகள் வெறித்து உருண்டிருக்க குளம்புகளால் மிதித்து உந்தி ஏறி அமைந்து அணுகின.
அத்தேரின் அமரத்தில் ஒரு கையால் கடிவாளக் கற்றைகளைப் பற்றியபடி அமர்ந்திருந்த இளைய யாதவர் மறுகையைச் சுட்டி அர்ஜுனனிடம் சொல்லாடிக்கொண்டிருந்தார். அவருடைய சொற்களை செவிகொண்டபடி காண்டீபத்துடன் நின்றிருந்த அர்ஜுனனின் விழிகள் கனவிலென மயங்கியிருந்தன. இளைய யாதவரின் தலையில் சூடப்பட்டிருந்த பீலி காற்றில் நலுங்கியது. நோக்கா விழி என நீலம் கொண்டிருந்தது.