மலைகளை அணுகுதல், இன்னொரு பதிவு- விஜயபாரதி

மலைகளை அணுகுவது

ஊட்டி காவிய ஆய்வரங்கு நடந்து முடிந்த மூன்றாம் நாள் மாலை குடிலின் முன்னறையில் அறுவர் அமர்ந்திருந்தோம். உள்ளறைக்கு வந்து திரும்பிச்சென்ற ஓர் இளைஞரைச் சுட்டிக்காட்டி “சென்ற முறை ஊட்டி காவிய ஆய்வரங்குக்காக இங்கு வந்தவர். குருகுலத்திலேயே தங்கிவிட்டார்.” என்றனர். அதிர்ச்சியாக இருந்தது. அந்த இளைஞர் மறுமுறை கடந்து சென்றபோது ஓரிரு வார்த்தைகள் பேசினார். அவர் குரு முனி நாராயண பிரசாத்துடன் கேரளா செல்லப்போவதாக நினைவு.

இம்முறை பங்கேற்ற 110 பேரில் அங்கேயே தங்கிவிடும் யாரும் இல்லை என நினைக்கிறேன். 2002ல் இந்நிகழ்வு ஆரம்பித்ததிலிருந்து கணக்கிட்டால் ஆசிரமத்தினுள்ளே தடம்பதித்தோர் எண்ணிக்கை நிச்சயம் ஆயிரம் பங்கேற்பாளர்களைத் தாண்டியிருக்கும். ஆயிரத்தில் ஒருவர் தங்கிவிட்டதில் வியப்பில்லை என்று தோன்றியது.

காவிய அரங்கு நிறைவடைந்த மூன்றாம் நாள் மதிய உணவு முடியும் முன்பே பங்கேற்பாளர்கள் சிலர் மலையிறங்கிச் செல்லத் தொடங்கியிருந்தனர். வரப்பை வெட்டி வயலிலிருந்து மழைவெள்ளத்தை வடிப்பது போல சிலமணிநேரங்களில் குருகுலம் வெறுமை சூட ஆரம்பித்தது.

பெரும்பாலும் ஒருங்கிணைக்கப்பட்ட அமர்வுகளுக்கு வெளியே உங்களுடனான உரையாடல்களில் பல தலைப்புகளுக்குத் தாவிச்செல்லவும், கேள்விகள் வழியே தெளிவடையவும் வாய்ப்பிருக்கும். எனவே முடிந்தவரை அவசரமாகக் கிளம்பும் திட்டத்தில் வருவதில்லை. இம்முறை ஒரு நாளாவது தங்கிச்செல்ல வேண்டுமென்றே என் பயணத்தை வகுத்திருந்தேன்.

நிர்மால்யா அவர்கள் கடைசித் துரும்பை எடுத்துப்போடும்போதும், பின்னர் மாலையில் நீளும் உரையாடலின்போதும் உடனிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உடனே கிளம்பவில்லை. உண்மையில் மறுநாள் நிர்மால்யா அவர்கள் அமர்வுகள் நடந்த அரங்கத்தைப் பார்வையிட போனபோது உடனிருந்து நம்மவர்கள் விட்டுச் சென்ற கம்பராமாயணப் பிரதிகளை அப்புறப்படுத்தியதில் முதல் எண்ணம் நிறைவேறியது.

ஜப்பான் பயணத்தை முன்னிட்டு நீங்கள் மதியமே கிளம்ப நேர்ந்ததில் சற்று ஏமாற்றம்தான். கிளம்பும் முன் நீங்கள் “அஜிதன், சைதன்யா எல்லோரும் இருக்கிறார்கள், உடனிருங்கள்” என்று ஆறுதலோடு கைகுலுக்கிவிட்டுச் சென்றீர்கள். இளையோருடனான மாலை நடை மற்றும் க்ளென் மார்கன் எஸ்டேட் பயணம் இரண்டும் தங்கியது நல்லூழ் என உணரவைத்தன.

மாலை நடையின்போது அஜிதனை தத்துவம் பற்றி அறிமுகப்படுத்தச் சொல்லி நாங்கள் அழுத்தியதில் சற்று தயக்கத்தோடு ஆரம்பித்து பின்னர் சரளமாகப் பேசத்தொடங்கினார். ஸ்வேதா மற்றும் நிகிதாவின் கேள்விகள் உரையாடல் முன்னகர உதவின. நான்கு நாட்களில் மிக நீண்ட நடைப்பயணம் அதுதான். நடையின் பிற்பகுதியில் உதவி இயக்குநராக அஜிதனின் நேரடி அனுபவங்கள் பற்றி உரையாடல் கிளைத்தது. ஊட்டியின் பசுமைநிறைந்த வெளியின் நடுவில் நின்று தத்துவம் பேசும் இளையோர் ஐவரையும் அகன்று நின்று கவனிக்கும்போது வினோதமாக இருந்தது. குருகுலம் திரும்பும்போது நன்கு இருட்டியிருந்தது.

மீண்டும் தத்துவம், வரலாறு, நவீன், நிகிதா மற்றும் அஜிதனின் பயணங்கள், மதியம் மீந்த உணவோடு அப்போது சமைத்த சப்பாத்தி, வெண்முரசு என 11 மணி வரை உரையாடல் நீண்டது. நவீன் வரலாறு குறித்த உரையாடல்களில் ஆர்வமாகப் பங்கேற்றார். கவிதை அனுபவத்தை எய்துவது குறித்த எனது கேள்விக்கு “நாளுக்கொரு நல்ல கவிதை வீதம் வாசித்தால் போதும் அண்ணா” என்று எளிய வழிமுறையைக் காட்டினார். வெண்முரசு குறித்த உரையாடல்களின்போது கூட்டு வாசிப்பில் இல்லாமலிருப்பதைப் பற்றி ஸ்வேதா வருத்தப்பட்டார். ஆனாலும் விஷ்ணுபுரம் முடித்த பின்னரே வெண்முரசு ஆரம்பிப்பேன் என்று தீர்மானமாகச் சொன்னார். முதல் இரண்டு நாட்கள் பாடல்களில் ஆழ்த்திய எவரும் குருகுலத்தில் இல்லை. அன்றிரவு எஞ்சியிருந்தோரில் ஒருவர் கூட பாடத் துணியவில்லை.

காலையில் அஜிதனின் கைவண்ணத்தில் கருந்தேநீர் கிடைத்தது. தேயிலையின் கசப்பு ஏறிவிடாமல் இனிப்பும் மிகுந்துவிடாமல் சுவையாக இருந்ததில் அனைவருக்கும் மகிழ்ச்சி. “தேயிலைத் தூள் சேர்த்த பிறகு மிகுதியாகக் கொதிக்கவிடாமல் பார்த்துக்கோண்டாலே போதும்” என்றார் அஜிதன். ஊரில் இதனை “வரக்காப்பி” என்றழைத்தே வழக்கம். நிகிதாவுக்கு ஏன் டீயை காப்பி என்கிறார்கள் என்ற சந்தேகம். “வரட்டீ” என்று அழைக்கலாம்தான் ஆனால் அதன் ஒலிவடிவம் உணவுக்கு ஒவ்வாத வேறோன்றைக் குறிப்பது என்பதன் பொருள் விளக்கி க்ளென் மார்கன் எஸ்டேட் நோக்கிக் கிளம்பினோம். நான் நவீனின் அகன்ற ஈருருளியில் தொற்றிக்கொள்ள மற்றவர்கள் காரில் வழிகாட்டினர்.

மதியம் நெருங்கும் வேளை க்ளென் மார்கன் எஸ்டேட்டில் இருந்த குருகுலத்தை அடைந்தபோது சுள்ளென்ற வெயில். வேலிக்கு வெளியே இருந்தே உள்ளே இருவர் உரையாடலில் ஆழ்ந்திருப்பதை உணர முடிந்தது. அஜிதன் படலின் உள்ளே எட்டிப்பார்த்து அழைத்த பிறகு பூட்டைத் திறந்து எங்களை உள்ளே அழைத்துச்சென்றனர். அவர்களுக்கு தொலைபேசியில் தகவல் சொன்னவர் உங்கள் பெயரைச் சொல்லியிருப்பார் போலும். நீங்கள் வரவில்லையா என பலமுறை கேட்டு உறுதிசெய்துகொண்டனர். அவர்கள் முகபாவனையில் இளையோர் கூட்டத்தை எதிர்பார்க்கவில்லையோ எனத்தோன்றியது.

அறிமுக வார்த்தைகள் வழியே மெல்ல இலக்கியத்தினுள் நுழைந்து, வெண்முரசு என்ற நிகழ்வு பற்றி விளக்கி, பின் ஊட்டி காவிய முகாம் பற்றி அறிந்த பிறகே இருவரும் மடைதிறந்தது போல் உரையாடத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இருவரும் பேச நாங்கள் இரு குழுக்களாகப் பிரிந்து கவனிக்கலானோம். குரு ப்ரிஜெட் கனிவான ஆனால் உறுதியான குரலில் உரையாடினார். பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர். 20 வயதிலிருந்து (அல்லது 20 வருடமாக) இந்தியாவில் இருப்பதாகச் சொன்னார். குரு டேவிட் பிரிட்டனிலிருந்து வந்தவர். உற்சாகமும் குறும்பும் ததும்ப உரையாடினார். இருவரும் இந்தியப் பிரஜைகள் என்றனர். விரல்களில் கண்ட கருப்பு மை வாக்களித்ததற்கான சான்றென நினைக்கிறேன்.

ஆனால் இருவரும் எந்தக் கருத்தையும் வலிந்து திணிக்க முயலவில்லை. ப்ரிஜெட் ஒவ்வொரு கருத்தைப்பற்றிய உரையாடலின் இறுதியிலும் “இப்படி ஒரு சாத்தியமுள்ளது. நீங்கள் இதைப்பற்றி சிந்தித்துப் பாருங்கள்” என்றே முடித்தார்.

குரு டேவிட் அடிக்கடி இருமையியல்பு (Duality) பற்றி தொடர்புறுத்தினார். ஆழம் விழைவதற்கு எதிர்திசையில் வெகுதூரம் அகன்றிருக்கும் நிலையை குறும்புடன் கேலிசெய்தார். “மகிழ்ச்சியாக இருக்க ஊட்டிக்கு கிளம்பி வருகிறார்கள் எனில் இருக்குமிடத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்றுதானே பொருள். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதல்லவா இலக்காக இருக்க வேண்டும்.” என்றார். அப்படி வருபவர்களில் சிலர் கொண்டாட்டத்தின் பகுதியாக இசையை அலறவிட்டு அமைதியைக் குலைப்பதன் முரண் பற்றிப் பேசினார். “ஊட்டிக்கு வந்தாலும் சென்னையையும் கூடவே அழைத்து வந்துவிடுகிறார்கள்” என்றவாறு கண்களில் சிரிப்பு ததும்ப பகடி செய்துகொண்டிருந்தார்.

“சேர்ந்து முதிர்தல்” என்ற கட்டுரையில் நீங்கள் “ஊட்டிகுருகுலம் ‘பக்தர்களுக்கு’ உரியது அல்ல. அது ஓர் அறிஞர்கூடுகை மையம் மட்டுமே என அப்போது நான் அறிந்திருக்கவில்லை.” என்று உங்கள் முதல் பிம்பம் பற்றி எழுதியிருந்தீர்கள். நேரில் குருகுலத்தைப் பார்க்கும்வரை அதன் பொருள் புரியவில்லை.

ப்ரிஜெட் எங்களை அழைத்துச்சென்று காட்டிய முதல் அறை அவர்களது நூலகமே. பலவகையான பராமரிப்புப் பணிகள் தொடர்பான DIY (Do it yourself) வரிசைப் புத்தங்கள் முதல் யுவல் நோவா ஹராரி எழுதிய ஸேப்பியன்ஸ் வரையான வினோத வரிசையைப் பார்க்க முடிந்தது. ஊட்டியில் இலக்கிய ஆய்வரங்கு நடந்த குருகுலத்தின் நூலகத்திலும் இங்கும் அவர்கள் பயிலும் புத்தங்களின் விந்தை வரிசையில் நூற்றுக்கணக்கிலான தத்துவ நூல்களோடு கீதை, பைபிள் மற்றும் குரான் என அனைத்தையும் ஒன்றாகவே நிறுத்திப் பயில்கின்றனர்.

நாராயண குருவின் வாழ்க்கை நடராஜ குருவின் எழுத்தில் “The Word of the Guru” என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. அதனை வாசிக்கப் பரிந்துரைத்தனர். இப்போது உரை எழுதும் சிலர் நாராயண குருவின் வார்த்தைகளை மாற்றிவிடுவது பற்றி ஆதங்கப்பட்டார் ப்ரிஜெட். “சொல்ல சுயமாக ஏதேனும் இருந்தால் அவர்கள் பெயருக்குப் பின்னால் எழுத வேண்டும். குருவின் வார்த்தைகளை மாற்றவே கூடாது” என்றார்.

இணையத்தில் எண்மப்பதிப்பு:
http://www.advaita-vedanta.co.uk/index.php/content/2-content/biographies/3-the-word-of-the-guru

அத்தனை குடில்களின் முகப்பிலும் உள்ளறைகளிலும் உயரம் குறைவான வாசல்களே இருந்தன. குனிந்து செல்லுங்கள் என்று ஒவ்வொரு முறையும் அறிவுறுத்தியும் யாரேனும் ஒருவர் தலையில் இடிவாங்கிக்கொண்டே இருந்தோம்.

நூலக அறையை விட்டு வெளியே வந்துபோது குரு ப்ரிஜெட் நாங்கள் அமர்ந்திருந்த பந்தலின் எதிரில் இருந்த இரு குழிப்பேரி (Peach) மரங்களைச் சுட்டிக்காட்டினார். அவை கடந்த வருடம் ஏறக்குறைய 30 கிலோ பழங்கள் கொடுத்திருக்கின்றன. உண்டது, பகிர்ந்தது போக மீதியை பழஊறல் அல்லது ஊறுகாய் செய்து சேமித்து வைப்பது வழக்கம் என்றார்.

டேவிட் நாங்கள் சென்ற கொஞ்ச நேரத்திலேயே தேநீர் தயாரித்துவிட்டார். தேநீரை மீண்டும் சூடாக்கிக்கொள்ளலாம், முதலில் குருகுலத்தைப் பார்வையிடலாம் என்று முதல் குடிலை விட்டு வெளியில் அழைத்துச் சென்றனர்.

பெருமளவு இடம் காய்கறித் தோட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. கடைகளில் விற்கும் காய்கறிகளில் பூச்சிக்கொல்லி நிறைந்திருப்பதால் பெரும்பாலும் வெளியிலிருந்து வாங்குவதில்லை. மிகக் குறைவான அளவு பணமே போதுமானது என்றனர். ஆசிரமத்தின் உள்ளே விளைவனவற்றைக் கொண்டே அவர்களுக்கு பெருமளவு உணவின் தேவை நிறைவடைந்துவிடுகிறது. எவற்றுக்கெல்லாம் பணம் தேவைப்படும் என்ற கேள்விக்கே சற்று சிந்தித்து பதிலளிக்கும் நிலையில் இருக்கின்றனர். மின்சாரக் கட்டணத்துக்கும், அவ்வப்போது வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு வாங்குவதற்குமே அவர்களுக்குப் பணம் தேவைப்படுகிறது. உள்ளே விளைவதன் உபரியிலிருந்தும் மருத்துவ உதவிக்குக் கைமாறாக நோயுற்றோர் அளிக்கும் சிறிய நன்கொடையிலிருந்தும் அவர்களுக்குக் கிடைக்கும் பணம் போதுமானதாக உள்ளது.

குரு டேவிட் தோட்டத்தில் சற்று பின்தங்கிவிட குரு ப்ரிஜெட் எங்களை டேவிட் இருக்கும் தனிக்குடிலுக்கு அழைத்துச் சென்றார். அவரது குடில் முகப்பை பசுமையான கொடிகளும் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிற மலர்களும் அலங்கரித்தன.

டேவின் உடன் இல்லாததால் நான் அயலரின் அறைக்குள் நுழையும் தயக்கத்துடனே அறையினுள் சென்றேன். ஆனால் குரு ப்ரிஜெட்டிடம் எந்தத் தயக்கமும் இல்லை. இயல்பாக உள்ளே சென்று டேவிட்டின் பெட்டிகளைத் திறந்து காட்டினார். அவை ட்ரங்குப் பெட்டிகள் என்று அழைக்கப்படும் பழைய தகரப்பெட்டிகள். அறையினுள் கிட்டத்தட்ட 10 பெட்டிகள் இருந்தன. சிலவற்றை மட்டும் நிமிர்த்தி கதவு இடம் வலமாகத் திறக்குமாறு நிறுத்தியிருந்தார். ப்ரிஜெட் ஒரு பெட்டியைத் திறந்து காட்டினார். உள்ளே அது ஒரு சிறிய புத்தக அலமாரி. பெட்டியினுள்ளே அவரே மூன்றடுக்குகள் அமையுமாறு பலகைகளை வைத்து ஆணி அடித்திருந்தார்.

ப்ரிஜெட் அவற்றைச் சுட்டிக்காட்டி “சிக்கல் இல்லாத எளிய தீர்வு” என்று புன்னகைத்தார். பின்னர் தொடர்ந்த உரையாடலில் டேவிட்டும் இதையொட்டியே சில கருத்துக்களை முன்வைத்தார். அவர் பார்வையில் மக்கள் தேவையில்லாத சிக்கல்களுக்குள் தம்மைப் பிணைத்துக்கொண்டு பொருளில்லா பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்றார்.

12 வருடங்களுக்கு முன் வருவாய்த்துறையிடமிருந்து 65 குழி அளவுள்ள நிலம் ஒத்திக்கு வாங்கி குடில் அமைத்துள்ளனர். “நமக்கு ஏன் சொந்த நிலம் வேண்டும்? இவ்வுலகில் எதையேனும் நாம் சொந்தமாக்கிக்கொள்ள முடியுமா என்ன? நம் உடலே நமக்குச் சொந்தமில்லையே.” என்றனர். காட்டின் எல்லையில் இருந்த அந்த இடத்துக்கு ஒரு வருடத்திற்கான நில வரி 500 ரூபாய்க்கும் குறைவானதே. ஆனால் கடந்த 10 வருடங்களாக, வருவாய்த்துறை நிலங்களை ஒத்திக்குக் எடுக்க அனுமதிப்பதில்லை என்றனர்.

இருப்பதே இரு குடில்களில் ஒரு சில அறைகள்தான். அவற்றிலும் ஓர் அறையில் முன்னர் இருந்த குருவின் நினைவாக அவரின் படுக்கையைக் கூட இன்றும் பராமரித்து வருகின்றனர். ஒரு குடிலின் பின்புறமாக இருந்த அறைக்குள் மட்டும் செல்ல வேண்டாம் என்றனர். அது முன்னர் தச்சு வேலைக்கான பட்டறையாக அவர்கள் பயன்படுத்திய இடம். அங்கு குடியேறிய தேனீக்களுக்கு தனியறையாகக் கொடுத்துவிட்டனர். துறவிகள் போலவே காவி வரிகள் அணிந்த நன்கு பருத்த மலைத்தேனீக்கள் மெல்லிய ரீங்காரத்துடன் உள்ளே செல்வதும் வெளியே வருவதுமாக இருந்தன. உள்ளே தேனீக்களின் சத்தம் ஒன்றிணைந்து உருவாகும் அதிர்வொலியைக் கேட்க முடிந்தது. “அவற்றை விரட்ட ராணித்தேனீயைக் கொல்ல வேண்டியிருக்கும். அது எங்களுக்கு உவப்பானதல்ல. தேனீக்கள் எங்கள் தோட்டங்களில் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன, நாங்கள் அவற்றுக்கு எங்கள் அறையை விட்டுக்கொடுத்துவிட்டோம்” என்றனர். இதுவும் அவர்களைப் பொருத்தவரை ஒத்திசைந்து வாழ்வதே.

டேவிட் இருக்கும் குடிலின் பின்புற வாசல் வழியே இரு கட்டுகள் கொண்ட ஓர் அறை இருந்தது. ப்ரிஜெட் ஏற்கனவே நால்வரை உள்ளே அழைத்துச்சென்று பேசிக்கொண்டிருந்தார். நானும் நவீனும் அறையின் முகப்பிலேயே டேவிட்டுடன் நின்றுவிட்டோம். அங்கு ஒரு சிறு மேஜையின் மீது ஹோமியோபதி குறித்த ஒரு புத்தகம் இருந்தது. மேஜையின் இழுப்பறை நன்றாக வெளியே திறந்திருக்க உள்ளே சிறு குடைமிளகாய் அளவிலான முப்பதுக்குக் குறையாத பிளாஸ்டிக் குப்பிகள் உள்ளே திரவங்களுடன் நின்றிருந்தன.

டேவிட் ஹோமியோபதி சுவாரசியமான ஒரு துறை என்றார். இதன்மூலம் இங்குள்ள மக்களுக்கு முடிந்த அளவு உதவ முடிகின்றது என்றனர். அங்குள்ள பழங்குடிகளான தோடர்கள் கூட மருத்துவ உதவிக்காக வருவதுண்டு. “தோடர்களின் வாழ்க்கை அற்புதமானது” என்றனர்.

மருந்துகளையும் விளையும் காய்கறிகளையும் மக்களுடன் பகிர்ந்துகொள்ள நினைத்தாலும், எதையும் மலிவாகக் கொடுக்கக் கூடாது என்றனர். அவ்வாறு கொடுக்க ஆரம்பிக்கும்போது தேவையில்லாதோர் கூட வந்துவிடுகின்றனர் என்பது அவர்களது முடிவு.

உள்ளே நால்வரும் ப்ரிஜெட்டுடன் பேசிக்கொண்டிருக்க வெளியே நவீன் இரு கைகளாலும் தலையைப் பிடித்தபடி ஒரு நாற்காலியில் அமர்ந்துவிட்டார். உளவிசை மிகுந்துவிட்டதோ என்ற ஐயத்தில் சற்று நேரம் கழித்து அவர் தோளைத்தட்டி “என்ன நவீன், இங்கேயே தங்கிவிடத் தோன்றுகிறதா?” என்றேன். புன்னகையுடன் “அப்படியெல்லாம் இல்லண்ணா” என்று எழுந்து வந்தார். முகம் தெளிவாகவே இருந்தது.

குடிலின் பின்வாசலுக்கு அருகிலிருந்த இளம் அத்தி மரத்தினடியில் ஒதுங்கி நின்றோம். தரைக்கு மிக அருகில் கிளைகளில்லாமல் நேரடியாக பீட்ரூட் நிறத்தில் சில காய்கள் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்தன. டேவிட் “இந்த மரம் நல்ல நிழலைத் தருகின்றது” என்றவாறு உரையாடலைத் தொடர்ந்தார். அந்த மரத்தின் அகன்ற இலைகள் சிறு பந்தல் போல விரிந்து நின்றன. ஊட்டியாகவே இருந்தாலும் அன்றைய வெயிலுக்கு அங்கு நிழல் தேவையாக இருந்தது.

இருவரின் அறைகளிலும் அச்சிடப்பட்ட கால அட்டவணை ஒட்டப்பட்டிருந்தது. காலை 4.30 மணிக்கு ஆரம்பிக்கும் நாள் தியானம், தனி வாசிப்பு, தினசரி வேலைகளுக்கான நேரம், ஓய்வு நேரம் என ஓர் ஒழுங்கோடு சென்று இரவு 9 மணிக்கு ஓய்வெடுப்பதில் முடிந்தது. அதைப்பற்றிய உரையாடலில் டேவிட் எங்களிடம் “கால அட்டவணை மிகவும் தேவை. 97 விழுக்காடு அவற்றைப் பின்பற்ற வேண்டும். ஆனால் அவ்வப்போது அவற்றை மீறிப்பார்க்கவும் வேண்டும்.” என்றார் ஒரு கண்ணைச் சிமிட்டியபடி.

உள்ளிருந்து அனைவரும் வெளிவந்த பின்பு, டேவிட்டுடன் அவரது குடிலை வலம்வந்தோம். முகப்புக்குடிலுக்குத் திரும்பிவரும் வழியில் இடுப்பளவு உயரமுள்ள சிறு புதர்ச்செ டியின் அடர்ந்த கிளைகளுக்குள் கைவிட்டு ஒரு குருவிக்கூட்டைக் காட்டினார். “கொஞ்சநாள் முன்னர்தான் ஒரு குருவி இங்கு முட்டையிட்டு இரு குஞ்சுகளைப் பொரித்தது” என்றார். அந்தக் குருவி அருகே இருக்குமா என அவர் கண்கள் சுற்றியலைந்தன.

இரு குடில்களுக்கும் இடையிலிருந்த படலின் பூட்டைத் திறந்து உள்ளே குவிக்கப்பட்டிருந்த தழைகளை வெளியே நின்ற கன்றுக்கு உணவாகக் கொடுத்தார் டேவிட். குடிலுக்கு அருகிலிருக்கும் சாலையின் மறுபக்கத்தில் வரிசையாக மரக்கன்றுகளை நட்டு வளர்த்துள்ளனர். மரக்கன்றுகள் நம்மைவிட இருமடங்கு உயரமாகிவிட்டன. மிக அணுக்கமானவர்களைப் பார்ப்பது போல் கண்களில் கனிவுடனும் பெருமையுடனும் அந்த மரக்கன்றுகளைப் பற்றிக் கூறினர். வனத்துறையினருக்கும் இவர்கள் செயல்களால் மகிழ்ச்சி என்றனர்.

காடுகள் அழிக்கப்படுவதைப் பற்றி குறைகூறுவோர் பற்றிய சலிப்பை வெளிப்படுத்தினர். இருவரும் “ஒரே ஒரு மரத்தை நட்டுப் பராமரிப்பது மட்டுமே நாம் செய்யவேண்டியது. வெறுமனே குறைகூறித் திரிவது அல்ல. நேர்மறைச் செயல்பாடே பலனளிக்கும்.” என்றனர். வேலிக்கு வெளியே நின்று உரையாடிக்கொண்டிருந்தபோது சாலையில் ஜீப்பில் சென்ற வனத்துறையினரைப் பார்த்து ஆரவாரமாகக் கையசைத்து விடைகொடுத்தார் டேவிட், பதிலுக்கு அவர்களும் மரியாதை செலுத்தயபடி கடந்து சென்றனர்.

நாராயண குரு குறித்த கட்டுரையில் நீங்கள் எழுதிய “நாராயண குருவின் அணுகுமுறை முற்றிலும் நேர்நிலை கொண்டதாக, முழுக்க முழுக்க சாத்விகமானதாக இருந்தது. சத்யாக்ரகம் போன்ற அகிம்சைப் போராட்டங்களைக்கூட நாராயணகுரு ஏற்கவில்லை.” என்ற வரிகள் காந்திய வழியினும் மேலான நேர்மறை அணுகுமுறையை அறிமுகப்படுத்தின. இங்கு துறவிகள் இருவரும் நாராயண குருவின் கொள்கைகளை ஒட்டி வாழ்வை அமைத்துக்கொண்டதை கண்ணெதிரே பார்க்க முடிந்தது.

வேலிக்கும் சாலைக்கும் நடுவில் குறைவான கிளைகளுடனும் அவற்றில் சிக்கனமான அளவில் இலைகளுடனும் திருகியவாறு வளர்ந்து நின்ற விருட்சத்தை நான் தலை நிமிர்த்திப் பார்த்துக்கொண்டிருந்தேன். தண்டின் பருமனைப் பார்க்கும்போது கிளைகள் குறைவாயினும் அதன் நிழலில்தான் காரும் பைக்கும் நிறுத்தப்பட்டிருந்தன. டேவிட் அதனைப் பார்த்து `majestic` என்றார். பத்தாண்டுகளாக அருகிலேயே நிற்கும் மரத்தைப் பார்த்து வியக்கிறார்.

நாங்கள் வரும் வழியில் காட்டு மாடுகளைக் கண்டோம் என்றோம். “வெள்ளைக் காலுறை அணிந்தவை போலிருக்கும்” என்றார் டேவிட். உரையாடல் காட்டு விலங்குகள் பக்கம் திரும்பியது. குருகுலத்தின் சுற்றுப்புறத்தில் சிறுத்தை மற்றும் சிறுத்தைப் புலிகளை அடிக்கடி காண நேர்ந்தாலும் புலிகளே அவர்கள் சிந்தையை நிறைத்திருப்பதை உணர முடிந்தது. முன்னர் பசுக்களை வளர்க்கப் பயன்படுத்திய கொட்டில்களைக் காட்டினர். பசுக்கள் காட்டு விலங்குகளால் வேட்டையாடப்படுவதைத் தவிர்க்க முடியாமல் பசு வளர்ப்பதையே நிறுத்திவிட்டனர் என்றபோது அவர்கள் இருக்கும் சூழல் புரிந்தது.

டேவிட் கடந்த 12 வருடங்களில் ஆறு முறை புலிகளைப் பார்த்திருப்பதாகச் சொன்னார். ஒரே ஒருமுறை இணைப்புலிகளைக் கண்டது பற்றி கண்களில் வியப்பு ததும்ப விவரித்தார். ப்ரிஜெட் பக்கம் திரும்பி “அவை சுனையருகே நீரருந்த வந்திருக்கலாம்” என்றார். மற்றொரு முறை அவர் குடிலுக்கு வந்துகொண்டிருக்கும்போது மிக அருகே ஒரு புலியை எதிர்கொள்ள நேர்ந்ததைப் பற்றி பதற்றம் தொற்றுமளவுக்கு விவரித்தார். ஒரு மரத்தின் ஓரமாக மெல்ல மறைந்தவாறு நிற்பது மட்டுமே அப்போது தன்னால் இயன்றது என்றார். குறுக்காக சென்றுகொண்டிருந்த அந்தப் புலி அவர் கண்களை ஏறிட்டு நோக்கிவிட்டு எந்தச் சலனமும் இல்லாமல் சென்று மறைந்தது என்றபோது அவரது விரிந்த கண்களில் சற்று பெருமிதமும் மீதமிருந்தாகத் தோன்றியது.

சுற்றியிருந்த வேலியோ சிறுத்தைகளைத் தடுத்து நிறுத்திவிடும் அளவுக்கு இல்லை. ஆனால் அவர்கள் வேலிகளை நம்பி இல்லை என்பது புரிந்தது. “நாங்கள் அவற்றுக்குத் தீங்கிழைப்பவர்கள் அல்ல என்பதை அவற்றின் ஆழம் அறியும்” என்றனர். “விலங்குகளைக் காயப்படுத்தும் உடைந்த கண்ணாடிகளை எங்கு கண்டாலும் அப்புறப்படுத்துவேன்” என்றார் டேவிட். விலங்குகளின் நலம் நாடுவது, மரங்கள் வளர்ப்பது என நேர்மறையான செயல்களினூடே காட்டில் அவர்களுக்கான இடத்தை அடைந்துள்ளதாக நம்புகின்றனர்.

டேவிட்டின் குடிலைச் சுற்றிப் பார்த்த பிறகு அமர்விடத்துக்குத் திரும்பும்போது அஜிதன் “சரி, சொல்லிவிட்டுக் கிளம்புவோமா?” என்றார். மற்றவர்களும் ஆமோதித்தனர். நவீன் என்னிடம், “இப்போ உங்களைப் பார்த்தால் இங்கிருந்து கிளம்புவதுபோல் தெரியவில்லையே, அக்காவுக்குத் தகவல் சொல்லிவிடட்டுமா?” என்று சிரித்தார்.

அவர்களுக்கு ஏற்றுமதி பெறுமதி கொண்ட தேயிலை அருகிலுள்ள தோட்டங்களிலிருந்து கிடைக்கின்றது. சுவைமிகுந்த துளசிப்பசுந்தேநீரை மீண்டும் சூடாக்கிக் கொடுத்து எங்களை உபசரித்தனர். தேநீரை வெளியே எடுத்து வர உதவுவதற்காக சமையலறையினுள்ளே நுழைந்தோம். உள்ளே மின்சார அடுப்பு மற்றும் எரிவாயு அடுப்பு இரண்டும் இருந்தன. சிறு கண்ணாடி பாட்டில்கள் நிறைய தானியங்கள், பருப்புகள், பழச்சாறு மற்றும் ஊறுகாய் நிரம்பியிருந்தன. இரு பெரிய ஜன்னல்கள் மலைமுகட்டை நோக்கி திறந்திருந்தன. அப்போதுதான் ஒரு படம் கூட எடுக்கவில்லை என்ற உணர்வு வந்தது. தொலைபேசியைக் கொண்டு அந்த அழகிய இடத்தைப் பதிவு செய்யவும் முடியவில்லை. சமையலறையை படம்பிடித்தால் மலைமுகடு வெளிச்ச வெள்ளத்தில் மறைந்தது, மலைமுகட்டில் குவியத்தைப் பதித்தால் சமையலறை இருண்டு அகன்றது. உங்கள் வரிகளில் “இதனைப் பதிவுசெய்ய ஓவியரின் தூரிகை வேண்டும்” என்று விட்டுவிட்டேன்.

தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது உரையாடல் எங்கேயோ சென்று முட்டி நின்ற இடைவெளியில் டேவிட் இயல்பாக “உங்களை இங்கிருந்து அகற்ற வேண்டுமென முயலவில்லை, ஆனால் உங்களால் நீண்ட நேரம் இங்கே தங்க முடியுமா?” என்று கேட்டார். சைதன்யாவின் வார்த்தைகளில் “வேலியைத்தாண்டி உள்ளே வந்துவிட்ட புழுக்கள்”! “எங்களுக்கு நேரமிருக்கிறது, ஆனால் கார் ஓட்டுனருக்கு வேறு நிரல்கள் இருக்கின்றன” என்றவாறு கிளம்ப ஆயத்தமானோம்.

உள்ளிருந்து தடித்த அகன்ற குறிப்பேடு ஒன்றை எடுத்து வந்தனர். அது விருந்தினர்களின் பின்னூட்டத்தைப் பதிவுசெய்வதற்கான ஏற்பாடு. பெங்களூருவில் பெருமளவில் விளம்பரம் செய்து பொதுமக்களை அழைத்து ஆசிரமத்தை பார்வையிடச்செய்த அனுபவத்தைப் பற்றி “முயன்று தோற்றோம்” என்று விளக்கினர். வந்தவர்கள் அனைவரும் “வெறுமனே பார்வையிட” வந்ததே காரணம். அதன்பிறகு தேடல் உள்ளோர் தானாகவே வந்தடைவார்கள் என்று அமைந்துவிட்டனர். இப்போது பார்வையாளர்களை ஊக்குவிப்பதில்லை, ஆனால் புறக்கணிப்பதுமில்லை. நாங்கள் உள்ளே இருக்கும்போது கூட ஒரு கூட்டம் வேலிக்கு மேலே தலைதூக்கி எட்டிப்பார்த்தபடி கடந்து சென்றது.

எங்கள் அனுபவத்தை எழுதச்சொல்லி குறிப்பேட்டைக் கொடுத்தனர். சைதன்யா மட்டும் எழுதினால் போதும் என்று ஆரம்பித்து பின்னர் கிட்டத்தட்ட அனைவருமே ஓரிரு வரிகள் எழுதிவிட்டோம். அவ்வரிகள் எங்களை சற்று எடைகுறைத்து ஆற்றுப்படுத்தின என நினைக்கிறேன்.

ஆளுக்கொரு பழம் கொடுத்து “கண்டிப்பாக அருகிலிருக்கும் ஏரியைப் பார்த்துவிட்டு செல்லுங்கள்” என்றவாறு வழியனுப்பி வைத்தனர்.

ஆசிரமத்திலிருந்து கூப்பிடும் தூரத்தில் இருந்தது அந்த ஏரி. தடுப்பணை போல் கற்கள் பாவிய கரையின் ஒரு பக்கம் சரிந்த ஆழத்திலிருந்த நிலம் நோக்கிச் செல்ல, மறுபுறம் ஏரியைத் தடுத்து நிறுத்தியிருந்தது. பாதங்கள் நீரில் படும்படி இறங்கி அமர்ந்தோம். அவ்வப்போது வீசிய காற்றின் இருப்பை நீர்ப்பரப்பின் மீதான அலைகளாக உணர முடிந்தது. சிறு அலைகள் கூட்டமாக விலங்குகள் நீர் அருந்தும் ஒலியுடன் கரையை வருடிக்கொண்டிருந்தன. அந்த ஏரியின் மறுகரை பார்வைக்கு எட்டாதவாறு ஆசிரமத்துக்கு எதிர்திசையில் நீண்டு வளைந்து மறைந்தது. தூரத்தில் ஆங்காங்கே சிலர் தூண்டிலுடன் நின்றிருந்தனர்.

துறவிகள் இருவரிடமும் விடைபெற்று வந்த பின்பு நாங்கள் குருகுலத்தினுள் கண்டதையும் கேட்டதையும் உள்வாங்கிக்கொள்ளவும், மெல்ல மீண்டும் உலகியலுக்கே மீளவும் நீண்ட உரையாடல் தேவைப்பட்டது.

அஜிதன் “சிறுவயதில் பார்த்ததால் இந்த இடத்தை மீண்டும் சுற்றிப்பார்க்கலாம் என்று வந்தோம், ஆனால் இப்படி ஒரு அர்த்தமுள்ள சந்திப்பாக இது நீளுமென்று எதிர்பார்க்கவில்லை” என்றார். “ஆம், கொஞ்ச நேரம்தான் என்றாலும் செறிவான உரையாடல்” என்றேன். “அவர்கள் நம்மிடம் சொன்னதை யார் வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் அவர்கள் இருக்குமிடத்திலிருந்து சொல்வதுதான் அவ்வார்த்தைகளுக்கு உரம் சேர்க்கின்றது” என்றார். அஜிதனின் கூற்று ஒரு மெல்லிய அதிர்வாக என்னுள் இறங்கியது.

அக்கணம் வரை அதை உணரவில்லை. துறவியர் இருவரின் இருப்பிலும் சொல்லிலும் மனம் குவிந்திருந்ததில் வேறெங்கும் அவற்றைப் பொருத்திப்பார்க்கவில்லை. அவர்களுடனான உரையாடலின் சாரத்தை மீட்டெடுத்துப் பார்த்தபோது அஜிதன் சொன்னது உண்மையென உணரமுடிந்தது. சைதன்யா தனது கடிதத்தில் “அவை நாம் பல நூறு முறை வாட்ஸாப் ஸ்டேட்டஸ்’இல் பார்த்தவை தான். ஆனால் அந்த மலை உச்சியில் இருந்து கொண்டு அவர்கள் அதை கூறும்போதே அவை அர்த்தம் கொள்கின்றன.” என்று குறிப்பிட்டதை இதனுடன் இணைத்துப் பார்க்க முடியும்.

நேற்று [உலகம் யாவையும்] சிறுகதையை மறுபடியும் வாசித்துக்கொண்டிருந்தேன். டேவிஸ் உங்களிடம் “பல்லாயிரம் வரிகள் உள்ள புத்தகத்தில் அடிக்கோடிட்ட வரியே கவனிக்கப்படும். தினமும் கருத்துக்கள் குவியும் யுகத்தில் ஒரு புதிய கருத்துக்கு தியாகத்தால் அடிக்கோடிடுவதே நம்மால் செய்யக்கூடியது” என்ற ரீதியிலான விளக்கம் கொடுப்பார்.

துறவிகள் இருவரும் அவர்கள் வாழ்வைக் கொண்டு தங்கள் சொல்லை அழுத்தமாக அடிக்கோடிட்டுள்ளனர்.

உரையாடலில் ஆழ்ந்துவிட்டதால் வெயிலை முற்றிலுமாக மறைத்து கருமேகம் தலைக்குமேல் அடர்ந்திருந்ததை யாரும் கவனிக்கவில்லை. ஒரு சிலர் தூறல் என்று வியக்க, ஏரியின் நீர்ப்பரப்பின்மீது ஆங்காங்கே மழைத்துளிகள் விழுந்து விரியும் மெல்லிய வட்டங்களைப் பார்த்து கிளம்ப எத்தனித்தோம். காரில் செல்லும் வழியெல்லாம் மழைநீர் சாலையைக் கழுவி வைத்திருந்தது.

இம்முறை காரில் முன்னிருக்கையில் அமர்ந்தபோது பின்னாலிருந்து “இங்கிருந்து செல்லவே மனமில்லை” என்று ஒரு குரல் கேட்டது. சென்ற முறை ஊட்டி காவிய அரங்குக்கு வந்து அங்குள்ள அறிஞர்களின் மத்தியில் தனது இடத்தைக் கண்டுகொண்ட இளைஞரின் நினைவு வந்தது.

இவ்வினிய அனுபவத்துக்கு வித்திட்ட உங்களுக்கும் இளையோருக்கும் அன்பும் நன்றியும்.

வணக்கங்களுடன்
விஜயபாரதி

மலைகளை அணுகுதல் – கடிதங்கள்

முந்தைய கட்டுரைசொல்முகம் வாசகர் குழுமம் – கோவை
அடுத்த கட்டுரைஉடலின் ஆயிரம் உருவங்கள்- ச.துரை கவிதைகள்