சொல்முகம் வாசகர் குழுமம் – கோவை

அன்புள்ள ஜெ.,

நலம்தானே? தங்கள் ஜப்பான் பயணம் இனிதே நிறைவுற்றது குறித்து மகிழ்ச்சி.

கோவையில் ஒரு “புக் ரீடர்ஸ் கிளப்” தொடங்குவதென்பது நீண்ட நாட்களாக மனதில் உருட்டிக் கொண்டிருந்த ஒரு எண்ணம். பல முறை இதைப் பற்றி பேசியும் செயல்படுத்த முடியாமல் போனது. நமது நண்பர்கள் சென்னையிலும் பாண்டியிலும் வெண்முரசு கூட்டங்களை மாதம்தோறும் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கிறார்கள். ஆனால் விஷ்ணுபுர வாசக வட்டம் மையம் கொண்டிருக்கும் கோவையில் வாசிப்பை முன்வைத்து தொடர்ச்சியான கூட்டங்களை நடத்த முடியாமலாகிக் கொண்டிருந்தது.

இந்த முறை ஊட்டியிலிருந்து மலையிறங்கும்போதே வாசிப்பு கூட்டங்களை கோவையில் கட்டாயம் ஒருங்கமைக்க வேண்டும் என்று மீண்டும் முன்வைத்தபோது, க்விஸ் செந்தில், செல்வேந்திரன், விஜய சூரியனும் இதை தீவிரமாகக் கையிலெடுத்துக் கொண்டார்கள். கோவையில் இருக்கும் நமது நண்பர்களை முதலில் தொடர்பு கொண்டு ஒன்றாக திரட்டினோம். அனைவருமே தங்களை இதில் இணைத்துக் கொண்டார்கள். தாமதிக்காமல் முதல் கூட்டத்தை 26ம் தேதி ஞாயிறன்றே கூட்டுவதாக முடிவெடுத்தோம். டைனமிக் நடராஜன் தனது தொண்டாமுத்தூர் பண்ணை இல்லத்தில் இடமளித்து தேநீருக்கும் இடைஉணவுகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார். குறுகிய கால அறிவிப்பென்பதால் முடிந்தவர்கள் மட்டும் வந்தாலும் பரவாயில்லை, பிரத்தியேக தயாரிப்பு இம்முறை தேவையில்லை என்று முடிவெடுத்தோம். அடுத்தடுத்த கூட்டங்கள் ஒரு மாதம் முன்னதாகவே திட்டமிடப்படும்.

திரு.டி. பாலசுந்தரம் அவர்கள் டைனமிக் நடராஜனின் அழைப்பின் பேரில் ஆர்வத்துடன் எங்களோடு முதல் கூடுகையில் கலந்துக் கொண்டார். கோவை நண்பர்கள் சுஷீல், வெங்கட், விக்ரம், ஜியார்ஜியா சுரேஷ், நவீன் சங்கு, பூபதி, சபரி, எல்வின், க்விஸ் செந்தில், செல்வேந்திரன் ஆகியோருடன் இன்று காலை கூடினோம். டி. பாலசுந்தரம் அவர்கள் உலகெங்கிலும் “புக் கிளப்” செயல்படும் முறைகள் பற்றியும் அவற்றின் அவசியத்தையும் முன் வைத்து ஒரு துவக்க உரை நிகழ்த்தினார். கோவையில் ஒரு சில வாசிப்பு கூட்டங்கள் உண்டென்றாலும் நாங்கள் அனைவரும் ஜெயமோகனின் கட்டுப்பாட்டிற்கு பழக்கப்பட்டு அதில் தேர்ச்சியும் கொண்டவர்கள் என்பதால் இக்கூட்டங்கள் சீராக அமையும் என்று கருதுவதாக கூறினார். உண்மையில் அதை நாங்களுமே உணர்ந்தோம். எந்த விதிகளையும் எடுத்துக் கூறாமலேயே நாங்கள் அனைவரும் ஒரு ஒழுங்கில் வந்து அமைந்தோம். அதாவது நமது கூட்டங்களின் வடிவங்களுக்கு ஒரு பெயரிட்டு சொன்னால் போதும் அதன் விதிகள் வார்த்தெடுத்து புரிந்து கொள்ளப்படுமென்பதைப் போல. விஷ்ணுபுர விருது விவாத அரங்க விதிகள் அல்லது ஊட்டி முகாம் அமர்வின் விதிகள் என்று மட்டுமே இனி அறிவித்துவிடலாம். இதன் பயனாக ஒரு நொடி கூட வீணடிக்கப்படாததை நாங்கள் இன்று மீண்டும் கண்டோம். நமது அமர்வுகளினாலும், விவாதப் பட்டறை போன்ற முன்னெடுப்புகளாலும் ஒரு புத்தகத்தின் மீதான தன் கருத்துகளை முன் வைக்கும் முறைமையும் எதிர் விவாதங்கள் அமைய வேண்டிய தன்மையும் ஒருவாறு பழக்கப்பட்டு வந்திருக்கிறது.

“சொல்முகம் வாசகர் குழுமம்” என்று பெயர் சூட்டிக் கொண்டு இக்கூட்டங்களுக்கான சில வழிமுறைகைளை இறுதி செய்தோம். மாதம் ஒரு செவ்விலக்கிய நாவல் தேர்வு செய்யப்படும். அதை வாசித்து அடுத்த கூடுகையில் பத்து நிமிடங்களுக்கு ஒவ்வொருவரும் தன் பார்வையினை சீராக முன் வைக்க வேண்டும். சுருக்காமாக ஊட்டி முகாமின் ஆய்வுரை விதிகள். கேள்விகளையோ கருத்துகளையோ கோர்வையாக முன்வைக்கும் பயிற்சியாகவும் இதை கொள்ளலாம். இவ்வுரைகளை சிறு கட்டுரை வடிவில் எழுதி பார்த்திருக்க வேண்டும். அக்கட்டுரைகள் ஒரு வலைப்பூவில் பதிவேற்றப்படும். இவ்வுரைகளின் மீதான விவாதங்கள் உரைகளுக்குப் பின் தொடரும். ஒரு நாவல் மீதான கவனத்தை குவித்து அதன் கட்டமைப்பு, அழகியல், வரலாற்றுப் பின்னணி என அத்தனை கோணங்களிலும் வாசிக்க இது வழி செய்யும். சில முக்கிய வசனங்களையோ, வர்ணனைகளையோ குறிப்பெடுத்து இங்கு கூட்டாக வாசிக்கும்போது அது மனதில் நிலைகொள்ளும். நட்பார்ந்த முறையிலேயே விவாதங்கள் நடக்க வேண்டுமென்பதும் அரட்டைகளுக்கோ புரட்டுகளுக்கோ இடமில்லையென்பதும் அடிப்படை விதிகள்.

முதல் கூட்டமென்பதால் கடந்த மாதத்தில் வாசித்தவற்றை பகிர்ந்துகொண்டோம். டி.பாலசுந்தரம் அவர்கள் பனைமரச் சாலை புத்தக வாசிப்பு அனுபவத்தை பகிர்ந்தார். புத்தகத்தை கையோடு கொண்டுவந்து அதிலிருந்து சில வரிகளை வாசித்து காட்டி அவற்றை தன் பார்வையில் விளக்கினார். உம்மாச்சி, ஓநாய் குலச் சின்னம், இடைவெளி, டால்ஸ்டாயின் குறுநாவல்கள், இ.ரா. முருகனின் 1975, சுரேஷ் ப்ரதிப்பின் சிறுகதைகள், பிரதமன் சிறுகதைத் தொகுப்பு என பலவாரியான புத்தகங்கள் மீதான வாசிப்பை விவாதித்தோம். அவற்றை கட்டுரை வடிவிலும் வலையேற்றும் வேலையை சுஷீல் எடுத்துக் கொண்டுள்ளார். அடுத்த மாதம் முதல் மேலும் சில இளம் வாசக நண்பர்கள் இணைந்து கொள்வதாக உறுதியளித்துள்ளார்கள்.

கோவையில் ஏதேனும் ஒரு இலக்கிய நிகழ்வுகளின்போதோ அல்ல எழுத்தாளர்களின் வருகையின்போது மட்டுமோ சந்தித்துக் கொள்ளும் இலக்கிய நண்பர்கள் இனி மாதந்தோறும் ஒன்று கூடப்போகிறோம் என்பதும் தீவிர இலக்கிய விவாதங்களாக அவை அமையப்போகிறதென்பதும் உவகையளித்தது. ஆனால் அதற்கான முறையான முதல் உந்துதலை இந்தக் காலை சந்திப்பு அளித்திருக்குமா என்று சந்தேகம் எழுந்தது. அடுத்த கூட்டம் ஜூன் 30 அன்று வைத்துக் கொள்வோம் என்றும் ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களையும் வாசித்து வரவேண்டுமென்றும் முடிவெடுத்து அறிவித்த உடனேயே “எனக்கு ஓக்கே, நான் வருகிறேன்” என்று தன் மொபைலில் அட்டவணையை சோதித்தபடியே முதல் குரல் டி.பாலசுந்தரம் அவர்களிடமிருந்து எழுந்தது. இது ஒரு நல்தொடக்கம் என்ற நம்பிக்கைப் புன்னகையோடு கலைந்து சென்றோம்.

நரேந்திரன்

கோவை

[email protected]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50
அடுத்த கட்டுரைமலைகளை அணுகுதல், இன்னொரு பதிவு- விஜயபாரதி