வங்கத்தில் என்ன நடக்கிறது?

அன்புள்ள ஜெ,

உங்கள் தளத்தில் மேற்குவங்கம் மற்றும் கேரள இட்துசாரிகளைப் பற்றி எழுதியிருந்த கட்டுரையை வாசித்தேன். மேற்குவங்கத்தை இடதுசாரிகளின் கோட்டை என்பார்கள். அது ஏன் சரிந்தது என்பதைப்பற்றி ஒரு நல்ல ஆய்வு ஆங்கிலத்திலோ தமிழிலோ என் கண்களுக்குப் படவில்லை. உங்கள் குறிப்பு மிகப்பெரிய திறப்பை அளித்தது. அங்குள்ள சூழலை கண்முன் காட்டியது. 8 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது. அதற்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஜோதிபாசுவின் இறப்பை ஒட்டி எழுதிய கட்டுரையிலேயே விரிவாக இந்த சித்திரத்தை அளித்திருக்கிறீர்கள். திரும்பத்திரும்ப கூட்டணி அரசியலைத்தான் எழுதுகிறார்கள் இங்குள்ள செய்தியாளர்கள் . ஒரு கட்சி வேருடன் வீழ்ச்சி அடைய என்ன காரணம் என யோசிப்பதில்லை.

செந்தில்ராஜ்

***

அன்புள்ள ராஜ்,

நான் 2011ல் எழுதிய கட்டுரையில் உள்ளது இந்த பகுதி. முழுமையாகப் பார்க்க – மேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும். இதை நீங்கள் இங்கே ‘தேர்தல் ஆராய்ச்சி’ எழுதும் எவரிடமும் வாசிக்க முடியாது. இது நேரடியாகவே வங்கத்திற்குச் சென்று அலைந்து கண்டறிந்தது. அங்குள்ள இதழாளர்களிடமிருந்து மேலதிகமாக தெரிந்துகொண்டது. இதை எழுதும்போது கடுமையான எதிர்ப்புக்கள் உருவாகி வந்தன. மொட்டை வசைகள். அரசியல் அறியாதவன் என்னும் எள்ளல்கள். ஆங்கில நாளேடுகளில் எழுதுபவர்களிடமிருக்கும் எடுக்கப்பட்ட தகவல்கள் மற்றும் சில சித்திரங்களை கொண்டு என்னை மறுத்து வாதிட்டார்கள். நான் எதிர்வினையே ஆற்றவில்லை.

ஆங்கில நாளிதழ்களில் அரசியல் கட்டுரை எழுதுபவர்களின் சிக்கல்கள் இரண்டு. ஒன்று, அவர்களுக்கு நேரடியாக மக்களுடன், சூழலுட தொடர்பே இல்லை. வங்கம் பற்றி எழுதுவதனாலும் சரி காஷ்மீர் பற்றி எழுதுவதனாலும் சரி அந்த நிலம் மக்கள் பண்பாடு பற்றி எந்த நேரடிப் புரிதலும் இல்லாமல் சேகரித்த செய்திகளைக்கொண்டே எழுதுவார்கள். பெரும்பாலானவர்கள் மேட்டுக்குடிக் கல்வியாளர்கள். இரண்டு, அவர்கள் தங்களைச் செய்தியாளர்களாக நினைத்துக் கொள்வதில்லை. கொள்கைவடிவமைப்பாளர்களாக, ராஜதந்திரிகளாக, நாட்டை வழிநடத்துபவர்களாக எண்ணிக்கொள்கிறார்கள். ஆகவே தாங்கள் விரும்புவதையே செய்தியாக, வரலாறாக எண்ணிக்கொள்கிறார்கள். எழுதவும் துணிகிறார்கள். இவர்களின் கருத்துக்களும் கணிப்புகளும் அப்பட்டமான பொய்கள் மற்றும் திரிபுகள் என திரும்பத்திரும்ப நிரூபிக்கப்படும்போதும் சலிப்படைவதில்லை

ஆகவேதான் இந்த ஆங்கில அரசியல்கட்டுரையாளர்களை முழுமையாகவே தவிர்த்துவிட்டு நானே நேரில் செல்ல முயல்கிறேன். அது எப்போதுமே ஒரு தெளிவை அளிக்கிறது.  அது பெரும்பாலும் பொய்த்ததும் இல்லை. என் சித்திரங்கள் வரும்போது கடுமையாக வசைபாடுபவர்கள் மெல்லமெல்ல என் கருத்துக்களை என்னை சுட்டாமலேயே தாங்களும் எடுத்தாள்வதைக் காணலாம். ஆனால் தங்களுக்குச் சாதகமாக அதைக்கொஞ்சம் திரித்துக்கொள்கிறார்கள்.

உண்மையிலேயே இது மிக மிக விந்தையானது. எந்த ஒரு அரசியல் கட்டுரையும் முழுமையான ஆய்வுநூலும்கூட நேரில் சென்று ஒரு சுற்று சுற்றிவந்தால் அளிக்கும் தெளிவை கொடுப்பதில்லை. சின்னச்சின்ன விஷயங்கள் மிகப்பெரிய புரிதல்களை அளிக்கின்றன. நாம் அன்னியர், கண்கள் பழகாதவர் என்பதனாலேயே உள்ளூர்க்காரர்களுக்கு கன்ணில்படாத பல நம் கண்களுக்குத்தெரியும். அவர்கள் பொருட்படுத்தாத பல நமக்கு பெரிதாக இருக்கும். நாம் அடைந்த புரிதல்கள் உள்ளூர்க்காரர்களுக்கே திகைப்பூட்டுவதாக இருக்கும்.

ஏன் நேரில் செல்வது முக்கியமானது?

அ.இந்தியா மிகமிகச் சிக்கலான ஒரு நாடு. பண்பாட்டுப் பன்மை நிறைந்தது. நாம் எளிய குறைத்தல்நோக்குகளையே வாசிக்க முடியும். நேரில் சென்றால் நம்மால் மிக எளிதில் நம் பண்பாட்டு நுண்ணுணர்வால் பலவற்றை உணர முடியும். உதாரணமாக ஓர் ஊருக்குச் சென்றால் அரைநாளில் நமக்கே அந்த ஊரின் நிலஆதிக்க சாதி எது, வன்முறைச்சாதி எது என புரிந்துகொள்ளமுடியும். நம்முடைய சொந்த ஊரின் பண்பாட்டுச்சூழலில் இருந்து நாம் பெற்ற நுண்ணுணர்வைக்கொண்டு அங்கே நாம் புரிந்துகொள்கிறோம்

ஆ. இந்தியாவில் படித்தவர்க்கம் படிக்காத பெரும்பான்மை என இரண்டு உலகங்கள் உள்ளன. படித்தவர்க்கம் ஆதிக்கவர்க்கமும்கூட. அவர்கள் எளியமக்களைப் புரிந்துகொள்வதே இல்லை. தாங்கள் புரிந்துகொண்டபடி எளியமக்களை விளக்கவே முயல்க்கிறார்கள். ஆகவே இங்கே  ‘எழுதப்படும்’ இந்தியா அல்ல உண்மையான இந்தியா.இதை அரசியல் – சமூகவியல் நூல்களை வாசிக்கும்தோறும் மேலும் தெளிவாக உணர்கிறேன்.

உதாரணமாக, தமிழகத்தில் நான் எழுதுவது வரை காஷ்மீர் மாநிலம் ஒட்டுமொத்தமாக இந்தியாவிலிருந்து விடுதலையை தேடி போராடுகிறது என்றே எழுதப்பட்டது. நூற்றுக்கணக்கான கட்டுரைகளை என்னால் சுட்டமுடியும். அங்கு ஜம்மு, லடாக் இரு பகுதிகளுமே இந்து, பௌத்த மக்கள் வாழ்பவை, அவர்கள் இந்தியதேசிய பற்றுள்ளவர்கள். காஷ்மீர் சமவெளியிலேயேகூட ஷியாக்கள் இந்தியதேசியத்தை ஏற்பவர்கள். சுன்னிகளில் ஒரு பிரிவினர் மட்டுமே பிரிவினைக்கோரிக்கை வைக்கிறார்கள். இதை நான் எழுதியபோது வசைபாடினர். எள்ளி நகையாடினர். ஆனால் மெல்லமெல்ல இதையே மற்றவர்களும் சொல்ல ஆரம்பித்து இது இங்கே நிறுவப்பட்டது

வங்கத்தைப் பற்றி நான் எழுதியபோது நகையாடிய பலரும் இன்று  நான் ஊகித்தது உண்மையாகி வங்கத்தில் இடதுசாரிகள் வீழ்ச்சி அடைந்தபோது என் சொற்களை மீளக் கண்டடைகிறார்கள்.  வங்காளத்தின் கிராமங்கள் எப்படி நிலக்கிழார்களால் ஆளப்பட்டன, காவல்நிலையங்கள் இடதுசாரிகளால் கையகப்படுத்தப்பட்டிருந்தன என்பதை ’புதிதாக கண்டடைந்து’ எழுதுகிறார்கள். என் கட்டுரைகள் வந்த காலகட்டத்தில் எள்ளி நகையாடிய அரசியல் ‘ஆய்வாளர்கள்’ இவர்கள்.

இப்போது என்ன நடந்தது? 2010ல் நான் எழுதிய கட்டுரையில் ஒரு வரிகூட மாற்றவேண்டாம். கூடவே இரண்டு வரி சேர்த்துக்கொண்டால்போதும். இடதுசாரிகள் மேல் நம்பிக்கை இழந்த, அதேசமயம் மம்தாபானர்ஜி ஒருங்கிணைத்திருக்கும் வங்கதேச இஸ்லாமியக் குடியேறிகளின் மேலாதிக்கத்திற்கு எதிராக கசப்படைந்த மக்கள் பாரதிய ஜனதாவை நோக்கி நகர்ந்திருக்கிறார்கள். இந்த மாறுதல் நான் ஊகிக்காதது. ஆனால் பாரதிய ஜனதாக்கட்சியே அதை ஊகித்திருக்க வாய்ப்பில்லை.  அஸாம் போல வங்கத்திலும் ஒரு குடியேற்றக்கணக்கெடுப்பு தேவை என்பது அங்குள்ள முதன்மையான கோரிக்கையாக  அரசியல் மையத்திற்கு வரக்கூடும்

ஜெ

மேற்குவங்கச்சூழல் பற்றி….

மேற்கு வங்கச் சூழலைப் பற்றி நான் சொன்ன அந்த வரிகளுக்குப் பின்னால் இதுகாறும் நான் பேசி வந்த விஷயங்கள் உள்ளன. அவற்றை வாசிப்பவர்களுக்காகவே நான் மேலே பேசுகிறேன். இந்தத் தருணத்தில் அவற்றை மீண்டும் தொகுத்துச் சொல்லலாமென நினைக்கிறேன்.

இந்திய மாநிலங்களில் வேறெந்த மாநிலத்துக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு மேற்கு வங்கத்திற்கு உண்டு. அங்கே பிராமணர்களின் சதவீதம் பிற மாநிலங்களை விட  அதிகம். ஆகவே அவர்கள் ஒரு முதன்மை அதிகார சக்தி.  பொதுவாகத் தென்னிந்திய பிராமணர்களுக்கும், வட இந்திய பிராமணர்களுக்கும் ஒரு முக்கியமான வேறுபாடுண்டு. இங்கே பிராமணர்கள் குத்தகை வாங்கும் நில உடைமையாளர்களே ஒழிய நிலக்கிழார்கள் அல்ல. ஆனால் வடக்கே பூமிகார் பிராமணர்கள் நிலக்கிழார்கள். அதாவது வேளாளப் பண்பாடுள்ள பிராமணர்கள்.

மேற்கு வங்கத்தில் விளைநிலம் கணிசமான அளவுக்கு பிராமண நிலக்கிழார்களிடம் இருக்கிறது. அடுத்த படியாகக் காயஸ்தர்களிடம். மேற்குவங்கத்தில் உள்ள இரு ஆதிக்கச் சாதிகள் இவர்களே. வங்காள பிராமணர்கள் ஆரம்ப காலத்தில் காங்கிரஸில் செல்வாக்கு செலுத்தினர். ஆனால் அவர்களின் தலைவரான சுரேந்திரநாத் பானர்ஜி காந்தியிடம் முரண்பட்டு விலகிச் சென்ற போது அவர்களும் காங்கிரஸிடம் அன்னியமாகினர்.பின்னர் அவர்களில் பெரும்பாலானவர்கள் பிரிட்டிஷ் ஆதரவாளர்களாகவே நீடித்தனர். பிரிட்டிஷாருக்காக ஒரிஸாவையும், அஸ்ஸாமையும், பீகாரையும் ஆண்டவர்கள் அவர்கள்தான். வங்காள பிராமணர்கள் மேல் அந்தக் கசப்பு இன்னும் அஸ்ஸாமிலும், பீகாரிலும், ஒரிஸாவிலும் உள்ளதைக் காணலாம்.

ஆகவே வங்கக் காங்கிரஸ்  பெரும்பாலும்  காயஸ்தர்களின் கட்சியாக இருந்தது. ஆனால் ஒருபோதும் வலுவான நிலையில் இருக்கவில்லை. சுதந்திரத்துக்குப் பின்னர் பல்வேறு மாநிலக் கட்சிகளைத் திரட்டி மத்திய அரசின் பலத்தில் ஒரு அரசு அங்கே அமைந்தது. காயஸ்தரான விதான் சந்திர ராய் 62 வரை முதல்வராக இருந்தார். இக்காலகட்டத்தில் மெல்ல, மெல்ல வங்கப் பிராமணர்கள் இடதுசாரிகளாக ஆனார்கள். ஏற்கனவே அறிவுஜீவிமட்டத்தில் உருவாகியிருந்த இடதுசாரி அரசியலை இவர்கள் கையிலெடுத்துக்கொண்டார்கள். காயஸ்தர்களுக்கு எதிரான சமூகத் துருவப்படல் தான் அது. இடதுசாரிக் கட்சிகளில்  இன்று வரை இருக்கும் பிராமண ஆதிக்கம் அவ்வாறு உருவானது.

பங்க்ளா காங்கிரஸ் பார்ட்டி போன்ற மாநிலக் கட்சிகள் வழியாகவும் பிராமண நிலப்பிரபுக்கள் இடதுசாரி அரசியலுக்குள் நுழைந்தனர். அறுபதுகளுக்குப் பின் அரசியல் சமநிலை குலைய ஆரம்பித்தது. கூட்டணி ஆட்சிச் சதுரங்கம் ஆரம்பித்தது.  ஒருவருடம் கூட நீளாத கூட்டணி ஆட்சிகள் மற்றும் கட்சித் தாவல்கள் விளைவான ஆளுநர் ஆட்சிகள். ஒரு கட்டத்தில் வங்க அரசியல் இந்திய அரசியல் சூழலில் ஒரு பெரிய கேலிக் கூத்தாக ஆகியது.

இந்நிலையில் இரு முக்கியமான வரலாற்று நிகழ்வுகள் அரசியலைப்  பாதித்தன. ஒன்று, நக்சலைட் எழுச்சி. அறுபத்தேழில் சந்தால் போராட்டமாக வெடித்த அந்தக் கலகம் மெல்ல நகர்ப்புற இளைஞர்களின் கிளர்ச்சியாக ஆகியது. அவர்கள் பெரும்பாலும் முன்னாள் இடதுசாரிக் கட்சியினர். அவர்கள் சொன்ன முக்கியமான குற்றச் சாட்டே இடதுசாரிக் கட்சிகள் பிராமண நிலச்சுவான்தார்களால் கைப்பற்றப் பட்டு விட்டன, அந்நிலக்கிழார்கள் தலித்துக்களை மோசமாக அடக்கிச் சுரண்டுகிறார்கள் என்பதுதான்.

இத்தருணத்தில் 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போர் வெடித்தது. இந்தியாவுக்கு வங்க தேச அகதிகள் பெருகி வந்தனர். அவர்களைக்  காங்கிரஸ் ஊக்குவித்தது. பாகிஸ்தானை உடைக்க முடிவெடுத்திருந்த இந்திரா காந்தி, அவர்களை முன்னிறுத்தி ஒரு போரை ஆரம்பித்துக் கிழக்கு வங்கத்தைத் தனி நாடாக்கினார். இந்தத் தருணத்தைப்  பயன்படுத்திக் கொண்டு காங்கிரஸ் மாநிலத்தில் ஆளுநர் அரசை கொண்டு வந்தது. சித்தார்த்த சங்கர் ரே ஆளுநரானார்.

ரே 1972ல் தேர்தலில் வென்று முதல்வரானார். அந்த வெற்றிக்கான காரணங்களில் பாகிஸ்தான் போருக்குப் பின் இந்திரா காந்திக்கு இருந்த பிம்பம் ஒரு காரணம். ஆனால் அதற்கு இணையான இன்னொரு காரணம் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியைக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டது. ஆனால் அனைத்தையும் விட முக்கியமான காரணம் ஒன்றுண்டு. வந்து கொண்டே இருந்த வங்க அகதிகளுக்கு இடமளித்து சட்டபூர்வமற்ற முறையில் குடியுரிமை அளித்து அவர்களை வாக்கு வங்கியாக ஆக்கிக் கொண்டது காங்கிரஸ். அந்த உத்தி இன்று வரை அஸ்ஸாமில் காங்கிரஸுக்குக் கைகொடுக்கிறது.

ரே, நக்சலைட் புரட்சியைக் கொடுமையான முறையில் ஒடுக்கினார். இந்திய அரசு,இந்தியக் குடிமக்களை அதிகளவில் கொன்றது அப்போதுதான். கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் இளைஞர்களை ரேயின் அரசு கொலை செய்தது. 1975ல் நெருக்கடி நிலைப் பிரகடனம் செய்யப்படவே ரே ஒரு முக்கியமான காரணம் எனப்படுகிறது.

பலரும் அறியாத ஒன்றுண்டு. இந்தக் கொலைகளில் இடதுசாரிகள் ரேவுக்குத் துணை நின்றனர். இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி சித்தார்த்த சங்கர் ரேயுடன் கூட்டணி ஆட்சியில் இருந்தது அப்போது. நக்சலைட்டுகள் பெரும்பாலும் முன்னாள் கம்யூனிஸ்டுக் கட்சிக்காரர்கள் என்பதனால்  அவர்களை இவர்கள் அடையாளம் காட்டமுடிந்தது. நக்சலைட்வேட்டை வண்டிகளில் ஒரு உள்ளூர் தோழர் எப்போதும் இருப்பார் என்பதை எத்தனையோ நினைவுக் குறிப்புகளில் இன்று வாசிக்கலாம்.

ரே,இடதுசாரிகளைப் பயன்படுத்திக் கொண்டார். உண்மையில் இடதுசாரிகள் ரேயையும் பயன்படுத்திக் கொண்டார்கள். நக்சலைட்டுகள் அவர்களின் முதல் எதிரிகளாக அன்றும் இன்றும் கருதுவது இடதுசாரிகளையே. ஆகவே இடதுசாரிகள் தங்கள் எதிரிகளான  ரேயுடன் ஒத்துழைத்து நக்சலைட்டுகளை அழித்தனர். பலநூறு நூல்கள் வழியாக இன்று இது பதிவு செய்யப் பட்டுள்ளது.

இதற்கொரு சமூகத் தளம் உண்டு. இடதுசாரிகளான பிராமண நிலச் சுவான்தாரர்கள் தலித் உழைப்பை நம்பியே வேளாண்மை செய்து வந்தனர். தலித்துகளுக்கான கூலி, நில உரிமைக் குரல்கள் எழுந்து வந்ததை அவர்கள் ஒடுக்கினர்.  அவ்வாறு ஒடுக்கப் பட்ட தலித்துக்களின் குரலாகவே நக்சலைட்டுகள் எழுந்து வந்தனர். மேற்கு வங்கத்தில் இன்றும் அவர்களே தலித்துக்களின் குரல். அக்குரலை அழிக்க ரேயும் இடதுசாரிகளும் கைகோர்த்தனர்.

இந்திய அரசியலில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் நெருக்கடி நிலையின் போது இந்திரா காந்தியுடன் கைகோர்த்து நின்று, மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் அதிகாரத்திலும் பங்கெடுத்த இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி, நெருக்கடி நிலை முடியும் நிலையில் சட்டென்று எதிர்த் தரப்பாக ஆகிப் பழியில் இருந்து தப்பியதுதான். ரே நடத்திய படுகொலைகளால் வங்கத்தில் காங்கிரஸ் அழிந்தது. இடதுசாரிக் கட்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பெருங்கூட்டணியை அமைத்தன. 1977 தேர்தலில் ஜோதிபாசு முதல்வரானார். அன்றுமுதல் இவ்வருடம் வரை அங்கே நிகழ்ந்தது இடதுசாரிக் கூட்டணி ஆட்சிதான்.

நெருக்கடி நிலைக்கு எதிரான கோஷங்கள் ஜோதிபாசுவுக்கு உதவின. ஆனால் மிக முக்கியமான கோஷமாக இருந்தது ‘வங்காளம் அனைத்து வங்காளிகளுக்கும் தாய் நாடு’ என்ற கோஷம். வங்க அகதிகளின் வாக்குகளை அவருக்குச் சாதகமாக திருப்பியது அது. ஆட்சிக்கு வந்தபின் அந்த வாக்கு வங்கியைப் பெருக்குவதை இடதுசாரிகள் திட்டமிட்டுச் செய்தார்கள். எல்லைப்புற நிலம் முழுக்க வங்க அகதிகளுக்கு அளிக்கப் பட்டது. குடியுரிமை உட்பட எல்லாமே சட்ட விரோதமாக அளிக்கப் பட்டன. அது மிக வலுவான ஒரு வாக்கு வங்கியாக ஆகியது.

வங்க தேசத்தில் ராணுவ ஆட்சி வந்து அந்த நாடு அரசியல் சிக்கலுக்கும், பெரும் வறுமைக்கும் செல்லச் செல்ல அகதிப் பிரவாகம் அதிகரித்தது. இந்த சட்ட விரோதக் குடியேற்றத்தை இருபதாண்டுக் காலம் திட்டமிட்டு செய்தது வங்க அரசு. அது மேற்கு வங்க கிராம அமைப்பில் உருவாக்கிய விளைவு தான் இடதுசாரிச் செல்வாக்கை முப்பதாண்டுக் காலம் நிலை நாட்டியது.

மேற்கு வங்க கிராமப்புற பிராமண நிலச் சுவான்தாரர்கள், வந்து குடியேறிய வங்க தேச அகதிகளைக் கொண்டு ஒவ்வொரு ஊரிலும் ஒரு குண்டர்ப்படையை அமைத்துக் கொண்டார்கள். மேற்கு வங்கத்தில் சென்ற காலகட்டத்தில் நிலச் சீர்திருத்தம் என்ற பேரில் வழங்கப்பட்ட நிலம் முழுக்கக் குடியேறிகளான வங்க தேசத்தார்களுக்கே கொடுக்கப் பட்டது. தலித்துக்கள் அதே ஒடுக்கு முறைக்குள் நில அடிமைகளாகவே வைக்கப் பட்டார்கள். மொத்த கிராமமே நிலக்கிழார்களின் கட்டுப் பாட்டுக்குள் கால் நூற்றாண்டுக் காலம் இருக்க நேர்ந்தது.

மேற்கு வங்கத்தில் நிலவிய சூழல் பற்றி இப்போது விரிவாகவே எழுதப் பட்டு விட்டது. நில உடைமையாளர்கள், அரசு இயந்திரம், கட்சி ஆகிய மூன்றும் ஒன்றே ஆக மாறிய நிலை. காவல் நிலையங்களே உள்ளூர் மார்க்ஸியத் தலைவரான நிலப்பிரபுவின் கட்டுப்பாட்டில் செயல் பட்டன. மேற்கு வங்கத்தில்தான் இந்தியாவிலேயே அதிக அளவில் சட்ட விரோத வெடி ஆயுதங்கள் உள்ளன என்பது இந்திய உளவுத் துறை அறிக்கை. மம்தா பானர்ஜியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியே அந்த ஆயுதங்களைக் கைப்பற்றுவேன் என்பதே- செய்யவே முடியாதென்று அங்கே இதழாளர்கள் சொல்கிறார்கள்.

எதற்காக இத்தனை ஆயுதங்கள்?  சட்டம் ஒழுங்குப் பராமரிப்பை அரசே அந்தந்த ஊர் நிலக்கிழார்களுக்கு விட்டு விட்டது. அவர்களின் ஆதிக்கத்துக்கு கீழே அடிமைப் பட்டுக் கிடக்கும் மக்களைச் சுரண்டவும் ஒடுக்கவும்தான் அந்த ஆயுதங்கள். பீகாரில் கூட அப்படி ஒரு நிலை இருந்ததில்லை.

இந்தச் சூழலில் அங்கே தேர்தல் எப்படி நிகழ்ந்திருக்கும்? கணிசமான மேற்கு வங்க கிராமங்கள் நீர் சூழ்ந்து துண்டிக்கப்பட்டவை. ஒரு தீவு ஒருவர் கையில் இருக்கிறது. அங்கே வேறு கட்சியே இருக்க முடியாது. காங்கிரஸ் சின்ன நகரங்களில்தான் இருந்தது. கிராமங்களில் ஒட்டுமொத்த ஓட்டே குண்டர்களால் மொத்தமாகப் போடப்படும். தொழிற்சங்க அரசியலால் முழுக்கமுழுக்கக் கைப்பற்றப்பட்டுள்ள அரசு இயந்திரமும் அதனுடன் இணைந்து கொள்ளும் போது ஒன்றுமே செய்ய முடியாது. ஒரு சுதந்திர தேர்தலை நடத்த முயன்று தோற்ற சேஷன், அதைச் சொல்லிச் சொல்லிப் புலம்பியிருக்கிறார். தேர்தல்களில் எப்போதுமே தலித்துக்கள் ஓட்டுப் போட அனுமதிக்கப் பட்டதே இல்லை என நக்சலைட்டுகள் எழுதுகிறார்கள்.

இப்போது என்ன நிகழ்ந்தது? முக்கியமான ஒரு திருப்பம், இடதுசாரிகளின் ஆயுத பலமாக இருந்த வங்கதேசக் குடியேறிகளிடம் வந்த மனநிலை மாற்றம். அவர்களின் இரண்டாவது தலைமுறைக்கு முந்தைய தலைமுறையின் ’நன்றி உணர்ச்சி’ இல்லை. அவர்களைக்  குடியேற அனுமதித்த இடதுசாரிகளிடம் அவர்களுக்குக் கடப்பாடு ஏதும் இல்லை. அவர்கள் வேரூன்றி விட்டார்கள். ஆகவே அடுத்த கட்ட உரிமைக் குரல் எழுந்தது. இம்முறை அது மதவெறி சார்ந்தது.

இந்தக் குடியேறிகளிடம் வங்க தேசம் வழியாக வந்த ஜிகாதி அமைப்புகள் மதவெறியை ஊட்டின. அவை முழுக்க இன்று உள்நாட்டுத் தீவிரவாதத்தின் விளைநிலங்கள். இயல்பாகவே வங்கதேச பிராமண நிலச்சுவான்தார்கள் இதைக் கண்டு அஞ்சினார்கள். அவர்கள் பிரிவினையின் ரத்தத்தை அறிந்தவர்கள். ஆகவே குடியேறிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் வங்கம் முழுக்க மோதல்கள் உருவாயின.

சீனப் பின்புல ஆதரவுடன் வட கிழக்கில் இருந்து கடந்த சில ஆண்டுகளாக மாவோயிசம் கொஞ்சம், கொஞ்சமாக வங்கத்தில் செலுத்தப் பட்டது. வங்கத்தில் தலித் பகுதிகளில் எப்போதுமே நக்சலைட் அரசியல் உண்டு. அது மீண்டும் வளர்த்தெடுக்கப் பட்டது.  எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் மாவோயிஸ்டுகள் வங்கதேசக் குடியேறிகளின் மதவாத அரசியலுடன் கைகோர்த்துக் கொண்டனர்.

இந்தப் புதிய அரசியல் நகர்வு,திருணமூல் காங்கிரஸை உற்சாகம் கொள்ளச் செய்தது. அது முழுக்க, முழுக்க ஒரு நகர்ப்புற வணிகர் கட்சி.  அது கிராமத்துக்குள் ஊடுருவ இடதுசாரி நிலக்கிழார்கள் அனுமதித்ததே இல்லை. இப்போது இடதுசாரிகளின் கையில் இருந்த  குடியேறிகளின் குண்டர்ப்படைத் தரப்பு மாறுவதைத் திருணமூல் காங்கிரஸார் கண்டார்கள். அவர்களும் சேர்ந்து கொண்டார்கள். ஆக, மார்க்ஸிஸ்ட் நிலப் பிரபுத்துவத்துக்கு எதிராக ஒரு பெருங்கூட்டணி உருவானது.

சிறந்த உதாரணம், நந்தி கிராமம். அங்கே 60 சதவீதம்பேர் குடியேற்ற முஸ்லீம்கள். ஆனால் நில உடைமையாளர்கள் இடதுசாரிகளான பிராமணர்கள். ஓரு ரசாயன ஆலைக்கான நிலம் கையகப் படுத்தப் படுவதற்கு எதிராக எழுந்த பிரச்சினையை ஜமாயத் உலமா இ ஹிண்ட் என்ற [வங்க தேசத்தை மையமாக்கிய] இஸ்லாமிய தீவிரவாத அமைப்பும், மாவோயிஸ்டுகளும் சேர்ந்து கிளர்ச்சியாக ஆக்கினார்கள்.’ நந்தி கிராமம் ’விடுவிக்க’ப் பட்டது. அங்கே வாழ்ந்த மார்க்ஸிய நிலப்பிரபுக்கள் கொன்றே ஒழிக்கப் பட்டார்கள். பிறர் அடித்துத் துரத்தப் பட்டார்கள். அதை மார்க்ஸிய அராஜகத்துக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி என்று சித்தரிக்க நம்முடைய ஊடகங்கள் சிரத்தை எடுத்துக் கொண்டன.

இப்போது திருணமூல் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி என்பது மாவோயிஸ்டுகளுடனும், இஸ்லாமிய அடிப்படைவாதக் குடியேறிகளுடனும் செய்து கொண்ட சமரசத்தின் விளைவே. இன்று வரை மார்க்ஸிய ஆதிக்கத்தை நிலை நாட்டி வந்த குண்டர் படை இப்போது இந்த அம்மாளின் கைக்கு வந்து விட்டிருக்கிறது. எந்த நிர்வாகத் திறனும் இல்லாத, வறட்டுப் பிடிவாதமும் நிலையற்ற புத்தியும்கொண்ட, சந்தர்ப்பவாதியான மம்தா மேற்கு வங்கத்தை மேலும் இருளுக்குக் கொண்டு செல்லவே வாய்ப்பு

அதேசமயம் மம்தாவின் சரிவை இடதுசாரிகள் பயன்படுத்திக்கொள்ளவும் முடியாது. ஏனென்றால் அவர்கள்மேல் மக்கள் மேலும் மேலும் நம்பிக்கையிழக்கவே வாய்ப்பு மிகுதி. மம்தா உருவாக்கியிருக்கும் வங்கதேச குடியேறி இஸ்லாமியர்+ தீவிர இடதுசாரிகள் கூட்டணி வங்கத்தைக் கைப்பற்றலாம். அவர்களுக்கு எதிராக மக்கள் கையறுநிலையில் இருப்பார்கள்.

மேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்
மேலும் பார்க்க
ஜோதிபாசு,மரிச்சபி

முந்தைய கட்டுரைசென்னை, மூன்று நாவல்கள்- நிஷா மன்ஸூர்
அடுத்த கட்டுரைஅஸ்பெஸ்டாஸ் மனிதன்-ஸ்டீபன் லீகாக் – டி.ஏ.பாரி