‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48

படைகள் பெருகி எழுந்து தாக்கிய கணத்தில் விருஷசேனன் இயல்பாக வானை அண்ணாந்து நோக்கினான். அங்கே அனல் பற்றி எரிவதைக் கண்டு ஒருகணம் அவன் உள்ளம் திடுக்கிட்டது. கானாடலுக்கும் வேட்டைக்கும் செல்லும்போதெல்லாம் காட்டெரி குறித்த எச்சரிக்கையை பயிற்றுநர்கள் அளித்திருந்தார்கள். சொல்லிச்சொல்லி விழிகளில் அந்தக் கூர்வு எப்போதுமே இருந்தது. காட்டுமரங்களுக்கு அப்பால் செவ்வானத்தை கண்டால்கூட உள்ளம் பற்றிக்கொள்ளும் அளவுக்கு. ஒரு கணத்திற்குப் பின் அகம் அமைந்தபோதும் அது எரி என்றே தோன்றியது. நாணிழுத்து அம்புகளைத் தொடுத்தபடியே அவன் மீண்டும் நோக்கியபோது எரிமுகில் ஒரு முகம் சூடியிருப்பதுபோலத் தோன்றியது.

மழை முற்றாக நின்றுவிட்டிருந்தது. மேலும் மேலும் களத்தில் ஒளி பெருகி நிறைந்தது. புழுதியை மென்மழை முற்றாக அகற்றி விட்டிருந்தமையால் ஒவ்வொன்றும் மும்முறை கழுவப்பட்டவை என துலங்கின. யானைகள் மின்னும் கருமை கொண்டிருந்தன. கொடிகள் புதியவை என படபடத்தன. வண்ணங்கள் மேலும் துலங்க வடிவங்கள் மேலும் அண்மை கொள்ள படைக்கலங்கள் அனைத்தும் கண்களை மின்னிச்சுழன்றன. “முன்னேறுக! முன்னேறுக! வெல்க! வென்று மேலும் செல்க!” என்று முரசு ஆணையிட்டுக்கொண்டிருந்தது. மழை நின்ற பின் ஒலிகளும் கழுவப்பட்டு தெளிவுகொண்டிருந்தன. ஒவ்வொரு வாளுரசல்களும் நாண்முறுகல்களும் வில்நெரிவுகளும் அம்புத்தொடுகைகளும் தனித்தனியாக செவியில் விழுந்தன.

கர்ணனின் கையசைவுகளுக்கு ஏற்ப அவனைச் சூழ்ந்து சென்றுகொண்டிருந்த ஆணை முரசர்கள் ஓசையிட அதற்கேற்ப அவனை பின்தொடர்ந்து சென்ற படைகள் களத்தில் இயங்கின. சூரிய வியூகத்தின் மையத்தில் எரியும் நீல வட்டமென கர்ணன் விளங்கினான். சூழ்ந்து சென்ற படைவீரர்கள் கதிர்களைப்போல் அரைவட்டமாக விரிந்து அவனை பாதுகாத்து சென்றனர். கர்ணன் கை நீட்டி அர்ஜுனனை நோக்கி செல்ல ஆணையிடுவதை விருஷசேனன் கண்டான். அவன் எண்ணியதைவிட விரைவில் அர்ஜுனனும் கர்ணனும் அம்புகளால் சந்தித்துக்கொண்டார்கள். சென்ற முறை எங்கு நிறுத்தினார்களோ அங்கிருந்து போரை அவர்கள் தொடங்குவதுபோல் தோன்றியது.

திவிபதன் மறுபுறத்திலிருந்து கையை அசைத்து “நான் இளைய பாண்டவர்களில் ஒருவனை இன்று கொல்வேன்!” என்றான். விருஷசேனன் “நமது பணி இன்று தந்தையின் புறம் காப்பது மட்டுமே” என்று கூறினான். திவிபதன் “இந்தப் போரில் எனக்கென வெற்றி ஒன்றாவது வேண்டும், மூத்தவரே” என்றான். கர்ணனின் விசை கௌரவப் படையில் எதிரொலித்தது. படையினர் கூச்சலிட்டபடி திரண்டுசென்று தாக்கினர். அம்புகள் எழுந்தமைவதிலேயே படைகளின் ஊக்கம் தென்படும் என்பதை விருஷசேனன் கண்டிருந்தான். ஊக்கம் கொண்ட படையின் அம்புகள் நெடுந்தொலைவு மேலெழுந்து வளையும். அவை சீரான பேரலைகள் என தெரியும். ஊக்கமிழந்த படையிலிருந்து எழும் அம்புகள் சிதறுண்ட சிறிய கொப்பளிப்புகளெனத் தெரியும்.

பாண்டவப் படை காளை வடிவில் அணிவகுத்திருந்தது. காளையின் இரு கொம்புகளாக பீமனும் அர்ஜுனனும் திகழ்ந்தனர். விருஷசேனன் படைமுகப்பில் அர்ஜுனன் இடியென முழங்கும் அம்புகளால் கௌரவப் படையை அறைந்து பின்னடையச் செய்வதை பார்த்தான். அவனுடைய அம்புகள் கண்ணைப் பறிக்கும் மஞ்சள் ஒளியுடன் வெடித்தெழுந்து, ஓசையுடன் நிலத்தை அறைந்து, அனல் வளையங்களை எழுப்பின. மும்முறை வெடித்து தீப்பொறிகளை சீறவைத்து அமைந்தன. அவை விழுந்த ஒவ்வோரிடத்திலும் பூத்த மலர்க்கொன்றை ஒன்று முளைத்து சில கணங்களில் விண்ணில் திகழ்ந்து மறைவதுபோல் தோன்றியது. முதற்கணத்திலேயே தன்னிலிருக்கும் ஆற்றல்மிக்க அம்புகளை எடுக்கிறார். எனில் அஞ்சியிருக்கிறாரா? அல்லது, பாண்டவப் படைகள் அஞ்சியிருக்கின்றன, அவ்வச்சத்தை போக்க எண்ணுகிறார்.

கர்ணனைச் சூழ்ந்து வந்து விழுந்து வெடித்து தேர்வில்லவர்களை சிதறடித்தன அர்ஜுனனின் எரியம்புகள். கர்ணனை நேருக்குநேர் அம்புகளால் தாக்க இயலாது என அறிந்திருந்தமையால் அவ்வாறு செய்கிறார். கர்ணனை அவன் பின்னணிப் படையிலிருந்து தனித்து பிரித்துக்கொண்டு போவதே அர்ஜுனனின் நோக்கம் என்று தெரிந்தது. கர்ணன் மையப்படையிலிருந்து விடுபட்டு பாண்டவப் படைகளுக்குள் சென்றுவிட்டால் காளையின் இரு கால்களென சற்று அப்பால் நின்றிருக்கும் சாத்யகியும் திருஷ்டத்யும்னனும் முன்னெழுந்து அவனை வளைத்துக்கொள்வார்கள். காளையின் கொம்புகளெனத் திகழும் அர்ஜுனனும் பீமனும் இருபுறமும் போரிட சாத்யகியாலும் திருஷ்டத்யும்னனாலும் வளைக்கப்படுகையில் கர்ணன் முற்றிலும் செயலிழந்து சிக்கிக்கொள்ளக்கூடும்.

ஆனால் அத்தகைய கணக்குகளின் பொருளின்மை என்ன என்பதை விருஷசேனன் ஒவ்வொரு முறையும் களத்தில் பார்த்தான். சிலந்தி வலைகள் சிறுபூச்சிகளுக்குரியவை. வண்டுகள் வலையில் சிக்குகையில் சிலந்தியே அவற்றை அறுத்து விடுவிக்கின்றது. அத்தகைய சூழ்கைகளின் பயன் ஒன்றே, நம்பிப் போரிட ஒரு முறைமை அமைகிறது. வல்லவர்கள் சூழ்கைகளை முறிக்கவும் கடக்கவும் கற்றிருப்பார்கள். அம்முறை பாண்டவர்கள் ஐவருமே கர்ணனை மிகவும் அஞ்சிக்கொண்டிருந்தார்கள் என்பதை அவர்கள் முகங்களிலிருந்து காண முடிந்தது. அவர்கள் அனைவருமே அவன் மேல் உச்சநிலை வஞ்சமும் சினமும் கொண்டிருந்தார்கள். நேற்றிரவு அவர்களில் எவரும் துயின்றிருக்க வாய்ப்பில்லை. களத்தில் அவர்களை இறப்புக்கு நிகரான ஆணவ அழிப்புக்கு கொண்டு சென்றிருந்தார் தந்தை. அவர்கள் இன்று வெறிகொண்ட இருள்தெய்வங்களென உருமாறியிருக்கிறார்கள்.

ஆணவம் புண்படுகையில் மானுடரில் நிகழ்வது விழிச்சாவு. அதன்பின் முன்னர் இருந்த விழிகள் அவர்களுக்கு அமைவதே இல்லை. அவர்கள் ஒவ்வொருவரும் அந்த ஆணவ முறிவை மிக ஆழத்தில், மிக தனிமையில் அடைந்திருப்பார்கள். ஆணவம் அழிந்த நிலையில் தென்படும் உண்மைகள் எப்பொழுதும் கசப்பானவை. அவை அவர்களுக்கே தெரியாமல் ஆழத்தில் மறைந்திருக்கையில் மட்டுமே வாழ்க்கை இயல்பாக முன்செல்ல இயலும். ஆணவமென்பது அதன் பொருட்டே உருவாகிறது, அது ஒரு பெருந்திரை. புண்ணுக்குமேல் தோல் தடித்து காய்ப்பு கொள்வதுபோல். அதை இழந்தவர்கள் ஒவ்வொரு கல்லிலும் முள்ளிலும் உரசிப் புண்பட்டு தவிக்கிறார்கள்.

அவர்களது விழிகளின் வெறிப்பு அவன் உள்ளத்தை இளகச் செய்தது. அர்ஜுனன் “சூதன் மகனே, இன்று இக்களத்திலிருந்து நீ செல்ல மாட்டாய். இல்லையேல் நான் செல்லமாட்டேன். அவ்வஞ்சினத்துடன்தான் வில்லெடுத்து வந்தேன்!” என்று கூவினான். கர்ணன் புன்னகையுடன் “இக்களத்திலிருந்து வெற்றியுடன் மீள்வேன் என்று நான் அறிவேன்” என்றான். “விண்ணிலிருந்து நம் தந்தையர் இறங்கி வந்து நோக்கட்டும் இந்தப் போரை. இது என்றுமென நிகழும் போர். எவர் வென்றாலும் இங்கு இது முடியப்போவதில்லை” என்று அர்ஜுனன் அறைகூவினான். போர்வஞ்சினங்களையும் அறைகூவல்களையும் ஏன் அத்தனை உரக்க கூச்சலிடுகிறார்கள்? அவை அவர்களுக்கே சொல்லிக்கொள்பவை. அவர்களின் ஆழம் அவர்களின் நாவிலிருந்து அத்தனை தொலைவிலா உள்ளது?

அர்ஜுனனின் எரியம்புகளை கர்ணன் விண்ணிலேயே தடுத்தான். காற்றிலேயே வெடித்து அனல் மழையென அவை படைகள் மீதிறங்கின. யானைகளின் கவசங்கள் மேல் வெடித்து சிறு சுடர்கள் என துள்ளி எரிமலர்களென பொழிந்தன. கர்ணனின் அம்புகள் இடியோசையுடன் எழுந்த விசையிலேயே ஒன்று நான்கு எட்டு பதினாறெனப் பெருகி பாண்டவப் படைகளின் மேல் விழுந்தன. விழுந்த இடங்களில் நிலம் வெடித்ததுபோல் படைவீரர்களும் புரவிகளும் உடல் சிதறித் தெறித்தனர். யானைகளும் தேர்களும்கூட உடைந்து சிதறின. கர்ணனின் அம்புகளை இளைய யாதவர் திறமையுடன் தேர் திருப்பி தவிர்த்தார். அர்ஜுனனின் அம்புகள் அதற்கிணையான தேர் நுட்பத்துடன் சல்யரால் தவிர்க்கப்பட்டன.

அந்தப் போர் எரியுமிழும் அரிய அம்புகளால் ஆனதென்பதனால் தேர்வலர்களின் கைத்திறமையாலேயே நிகழ்த்தப்படுவதாக இருந்தது. அவற்றில் ஒரு அம்பு ஒருவர் மேல் விழுந்தால்கூட அக்கணமே போர் நின்றுவிடும். ஒவ்வொருவரும் அதை மயிரிழை இடையில் தவிர்த்துக்கொண்டிருந்தனர். மிகச் சிறிய இடைவெளிகளுக்குள் சல்யர் தேரை கொண்டுசென்றார். அவருடைய புரவிகள் மண்ணில் கால் தொடுவன போலவே தோன்றவில்லை. தேர் ஒற்றைச்சகடத்தில் விழுந்துவிடுவதுபோல் சரிந்து இரு யானைகளுக்கு நடுவே சென்று அப்பால் சென்று நிலை கொள்ளமுடியுமென்பதை, யானை திரும்பும் இடம்கூட இல்லாத இடத்தில் ஏழு புரவிகளும் குளம்படி மாற்ற தேர் நேர் எதிர் திசைக்கு திரும்பி வட்டமிட்டு அகலமுடியுமென்பதை, விழுந்து கிடந்த யானைகளின் மேல் தேர் ஏறிச்சென்று அப்பால் சென்று இறங்க முடியுமென்பதை, சீறி எழும் அம்பொன்றுக்கு தன்னை ஒழிந்துகொள்ளும்பொருட்டு அனைத்துப் புரவிகளும் ஒருகணத்தில் கால் மடித்து நிலத்தில் அமைய தேர் முற்றாகவே சரிந்து நிலம் தொட்டு அதன் சகடங்கள் காற்றில் சுழல சற்று நேரம் சென்று புரவிகள் எழுந்து பாய்ந்து செல்ல அவ்விசையில் மீண்டும் எழ முடியுமென்பதை அதற்கு முன் விருஷசேனன் எண்ணி நோக்கியதே இல்லை. இளைய யாதவரே அவ்வப்போது சல்யரின் தேர்த்திறன் நோக்கி உளம் மலைத்தவர் போலிருந்தார்.

புகையடங்கி காட்சிகள் தெளிந்து மீண்டும் புகையெழும் இடைவெளியில் அர்ஜுனனைச் சூழ்ந்திருந்த பாஞ்சாலப் படைவீரர்கள் களமெங்கும் சிறு துண்டுகளாகி தெறித்திருந்தனர். அர்ஜுனன் தன் படைத்திரளிலிருந்து தனித்து கர்ணன் முன் தோன்றாமலிருக்கும் பொருட்டு அம்புகளால் அறைந்தபடி மேலும் மேலும் பின்னடைந்து கொண்டிருந்தான். அவனை தனித்து விடக்கூடாதென்பதற்காக பின்னிருந்து ஆணைகள் எழ இருபுறத்திலிருந்தும் பாஞ்சாலப் படைகள் தொடர்ந்து வந்து இறந்தவர்களின் இடைவெளிகளை நிரப்பின.

கர்ணன் அனலம்பால் அர்ஜுனனை அறைந்தான். அவன் வில்லே அனல்கொடியாலானதுபோல் தோன்றியது. விண்ணில் துடிக்கும் மின்கதிர்போல் தேரில் நின்றதிர்ந்தது. அதிலிருந்து எழுந்த ஒவ்வொரு அம்பும் எழுகையிலேயே பற்றிக்கொண்டது. அனல் பெருகி முழங்கியபடி சென்று பாண்டவப் படைகள் மேல் விழுந்தது. மேலும் மேலும் அர்ஜுனனை பின்னடையச் செய்து கர்ணனின் தாக்குதல்களிலிருந்து அவனை காத்தார் இளைய யாதவர். “சூழ்ந்துகொள்க! இளைய பாண்டவரை சூழ்ந்துகொள்க! இடைவெளி விடாதொழிக!” என்று பாண்டவப் படைகளின் பின்னாலிருந்து திருஷ்டத்யும்னின் எச்சரிக்கை வந்துகொண்டே இருந்தது.

என்ன நிகழ்கிறதென்று நோக்க இயலாதபடி புகையும் தூசும் நிறைத்திருந்தன களத்தை. அம்புகள் சென்றறைந்த மண்ணிலிருந்து செம்புழுதி குமிழியெனக் கிளம்பி, இதழ்களென மலர்ந்து, நிலத்திலமைந்தது. புகை எழுந்து வானில் கரைந்து சாம்பல் நிற நீர்போல் பரவி களத்தை மூடியது. அதற்குள் எரியம்புகள் சென்னிற மலர்வுகள் என எழுந்தெழுந்து அமைந்தன. உடல் உருகி விழுந்தவர்களின் அலறல்கள் சூழ்ந்தன. உடைந்து சிதறிய தேர்களில் மரத்தூண்களும் பீடங்களும் பற்றிக்கொண்டு எழுந்த தழல்களும், அலறி நிலையழிந்து சுழன்று விழுந்த யானைகளின் முழக்கங்களும் செவிகளையும் விழிகளையும் நிறைத்திருந்தன.

அர்ஜுனனின் இரு மைந்தர்களும் ஒருகணம்கூட பின்னடையாது தந்தையைக் காத்து பொருதி நின்றிருந்தனர். இருபுறத்திலிருந்தும் வில்லவர்களை இரு கைகளென ஆக்கி கர்ணனின் பின்னணிப் படையை உடைக்க திருஷ்டத்யும்னன் முயன்றான். வலப்பக்கமிருந்தும் இடப்பக்கமிருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்த எரியம்புகளை விருஷசேனனும் திவிபதனும் பிற மைந்தர்களும் தடுத்தனர். சுருதகீர்த்தியின் அம்புகள் விசைமிகுந்து வந்து வலப்பக்கம் தாக்க விருஷசேனன் அவனை நோக்கி திரும்பி தாக்கினான். அவன் அம்புகளை தடுக்கமுடியாமல் சுருதகீர்த்தி பின்னடைந்தான்.

கர்ணனின் அம்புகளில் எழுந்த அனலை விருஷசேனன் வியப்புடன் நோக்கிக்கொண்டிருந்தான். அதற்கு முன் எங்கும் அத்தகைய பேரனலை பார்க்க நேர்ந்ததில்லை. ஒரு கணத்தில் காட்டெரி எழுந்து முழுப் படையையும் சூழ்ந்துகொண்டது போலிருந்தது. எரி வானை முழுமையாக நிரப்பி கூரைபோல மூடியது. எரிக்குள் இருந்து எரி எழுந்தது. எரி முகில்கள்போல குமிழ்த்தது, கரும்புகைபோல இருண்டது. உடனே அதை ஏந்தியபடி செம்முகில் என அடுத்த அனல் வெடிப்பு எழுந்தது. செந்தழலுக்குள் மலைவெள்ளப்பெருக்கில் சருகுகள் தெரிவதுபோல மானுட உருவங்கள் தோன்றித்தோன்றி மறைந்தன. யானைகளும் தேர்களும் தெரிந்தன. வானிலிருந்து உடற்துண்டுகளும் சிதைந்த தேர்ச்சிம்புகளும் பொழிந்தன. தன்னருகே வந்து விழுந்த ஒரு பித்தளைத் தேர்மகுடம் உருகி உருவழிந்திருப்பதை விருஷசேனன் கண்டான்.

எரியெழுந்த போர் அங்கே துரோணரின் வஞ்சம்கொண்ட அம்புகளில் இருந்தே தோன்றியது. முதல் நாள் அந்த எரியம்புகளைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். எரி எவ்வாறு எழுகிறது என ஒவ்வொருவரும் சொல்லிக்கொண்டார்கள். “எரி அல்ல அது. நம் உளமயக்கே” என்றார் ஒருவர். “நம்மை அந்த அம்புகள் கனவுக்குள் நிறுத்திவிடுகின்றன. அக்கனவில் நாம் கதைகளை நேரில் காண்கிறோம்.” இன்னொருவர் “களமெங்கும் வெந்து கிடக்கும் உடல்களும் கனவா என்ன?” என்றார். “கனவுகளில் இருந்து நாம் விடுபடுவது எளிதல்ல” என்றார் முதலில் சொன்னவர்.

படுகளத்தில் படைவீரர்களின் உடல்கள் வெந்து தசையுருகி, எலும்புகள் வெளித்தெரிய கிடப்பதை விருஷசேனன் பார்த்தான். பற்கள் வெறித்து அவற்றில் பல முகங்கள் இளிப்பு கொண்டிருந்தன. பொசுங்கும் தசையின் குமட்டும் கெடுமணம். உயிர் எஞ்சியவர்கள் உரிந்து கழன்றுகிடந்த தோலுடன் பொசுங்கிய மயிர்களுடன் கதறிக்கொண்டிருந்தனர். “கொல்க! என்னைக் கொல்க! மூத்தவரே, மைந்தரே, என்னைக் கொல்க…” என்று மன்றாடினர். “நீர்! நீர்!” என நா நீட்டி கதறினர். நாவுகள் வெந்து வாயை நிறைத்திருந்தன.

அந்தக் களத்தில் நீரெனக் கிடைத்தது புரவிகளின் குருதி மட்டுமே. எரியும் உடல்களுக்குமேல் குருதியையும் கொழுநிணத்தையும் அள்ளிச் சொரிந்தனர். குருதிச்சேற்றில் கிடந்து வெந்த உடல்கள் புளைந்தன. கவசங்கள் உருகி வளைந்திருந்தன. ஆடைகள் பொசுங்கி அகல பெரும்பாலானவர்கள் வெற்றுடலுடன் கிடந்தனர். ஒரு முதிய வீரர் “இது போரல்ல… போரின் எந்நெறியும் இதை ஒப்புவதில்லை” என்று கூவினார். “போரே ஒரு மாபெரும் நெறியழிவு” என்று எவரோ சொன்னார்கள்.

அத்தனை பெரிய அனல் எங்குள்ளது? எதில் அது பற்றி எரிகிறது? “அனைத்திலும் அனல் உள்ளது. அனலம்பு காற்றில் ஒளிந்திருக்கும் அனலை எழுப்புகிறது. நீரிலும் பனிக்கட்டியிலும் குளிர்பாறையிலும்கூட அனலை எழுப்ப இயலும்” என்றார் ஒரு முதிய வீரர். “அனல் எழக் காத்திருக்கிறது… இந்த மானுட உடல்களைப் பொசுக்கிய அனல் எங்கிருந்து எழுகிறது? இது இவ்வுடல்களுக்குள்ளேயே உள்ளது. உடலுக்குள் நீராலும் அன்னத்தாலும் அது நிகர்செய்யப்பட்டுள்ளது. வெளியே இருந்து வந்து தொடும் அனல் உள்ளிருக்கும் நிகர்நிலையை அழிக்கிறது. கட்டுண்ட அனல்கள் எல்லைகடந்து எழுகின்றன.”

அவன் எரிந்த உடல்களை பார்த்துக்கொண்டிருக்கையில் தெற்குக்காட்டின் சிதைகளைத்தான் எண்ணிக்கொண்டிருந்தான். முதலிரு நாட்கள்தான் அங்கே சிதைகூட்ட விறகுகள் தேவைப்பட்டன. எரி நிலைகொண்ட பின்னர் உடல்களே உடல்களுக்கு விறகாயின. உடலில் இருக்கும் நெய் முதலில் எரிகிறது. வெம்மை தசைகளையும் நெய்யாக்குகிறது. உடல்கள் தங்களைத் தாங்களே கொளுத்திக்கொண்டன. தங்களைத் தாங்களே எரித்தழித்து சாம்பலாயின.

“அங்கே சிதையில் எரியும் அனல் கிரவ்யாதன். அதுவே வைஸ்வாநரன் என்ற பேரில் மானுட உடல்களில் எரிகிறது. வயிற்றில் அது பசி. நாவில் அது ருசி. எண்ணத்தில் அது விழைவு. தசைகளில் அது ஆற்றல். குருதியில் வெம்மை” என்றார் முதிய சூதர். “அன்னத்தை உண்டு அன்னம் வாழ்கிறது. அன்னத்தை முற்றெரிக்கும் அனலே அன்னம் என்று நூல்கள் சொல்கின்றன. வேட்டை விலங்கின் சினமே அதன் வயிற்றின் அமிலம். இங்கு எரிவதும் அந்த எரிதான் எனக் கொள்க!”

அனலம்புகளைத் தொடுக்க முதல் அனல் உள்ளத்தின் ஆழத்தில் இருந்தாகவேண்டும் என்றார் முதிய வில்வீரரான சுவீர்யர். “அகத்தில் இல்லாத அம்பு எதையும் கைகளில் எடுக்க இயலாது. துரோணரில் எழுந்தது புல்லின் தழல். அங்கரில் எழுவது புரவிச்சவுக்கின் சீற்றம். ஆனால் அர்ஜுனனில் எழுவது சொல்லின் அனல். சொல்லனல் கூரியது, ஆனால் வஞ்சத்தின், சீற்றத்தின் அனல்போல மூண்டெழுவது அல்ல. முற்றழிப்பதும் அல்ல.”

மீண்டும் விழிதூக்கி மேலே பார்த்தான். அந்த முகம் அசைவிலாது கீழே நோக்கி நின்றிருந்தது. ஆனால் ஊழ்கத்திலென கனவுநிறைந்த அமைதி அதில் தெரிந்தது. தேர் வட்டமாக சுற்றிச் செல்ல நோக்குகோணம் மாறியபோது அது பூத்த கொன்றை என உருமாறியது. யார்? வேதச் சொல்லில் எழும் ஜாதவேதனா? அன்னத்தை அனலாக்கி வானாக்கி இன்மையாக்கி பிரம்மத்திடம் கொண்டுசேர்க்கும் தூதனா? இன்று ஏன் வானை அடிக்கடி நோக்கிக்கொண்டிருக்கிறேன்? முன்பெப்போதும் இப்படி வானை நோக்கியதில்லை. களத்தில் வானை நோக்குதல் பிழை என்பார்கள். போருக்குரியவை மண்ணாழத்திலிருந்து காட்டின் இருளில் இருந்து எழுந்துவரும் கொடுந்தெய்வங்கள். மேலே நோக்குபவன் விண்ணிலிருந்து குனிந்து நோக்கும் தேவர்களின் விழிகளை சந்திக்க நேரும். அக்கணமே அனைத்தும் பொருளின்மை கொள்ளும். புண்பட்டு விழுந்தவர்கள் விண்நோக்குவார்கள் எனப்படுவதுண்டு. விண்ணில் தேவர்களும் மூதாதையரும் நிரந்திருப்பதை அவர்கள் காண்பார்கள். ஆனால் நான் இன்னமும் புண்படவில்லை.

அம்புகளில் இருந்து அனல் தெறித்து எழுந்தது. பல்லாயிரம் நாக்குகள் என்றாகியது. பெருகிப்பெருகி எழும் கைகள் என்றாகியது. அள்ளி அணைத்து இறுக்கியது. பற்றி நிறுத்தி பொசுக்கியது. நக்கி உண்டது. அறைந்து சிதறடித்தது. மேலும் மேலும் உடல்கள் சிதறிவிழ இளைய யாதவர் அர்ஜுனனின் தேரை பின்னுக்கிழுத்து அம்புகளின் எல்லைக்கு அப்பால் கொண்டு சென்றார். கர்ணன் அர்ஜுனனை துரத்திச்செல்ல அவர்கள் நடுவே எழுந்த எரிபரப்பும் தரையை நிரப்பியிருந்த உடல்களும் உடைவுகளும் அரண் என்றாயின. தேர்த்தட்டில் அர்ஜுனன் தளர்ந்து அமர்வதை புகையலைவின் இடைவெளியினூடாக ஒருகணக் காட்சிமின்னல் என காணமுடிந்தது.

கர்ணன் கைகாட்ட சல்யர் தேரை பின்னுக்கிழுத்தார். அவருடைய புரவிகள் முன்னால் செல்லும் அதே விசையில் பின்னடி எடுத்து வைத்தன. அவர் அதே விரைவில் தேரை பின்னெடுக்க விருஷசேனனும் தம்பியரும் தங்கள் தேர்களை பின்னால் கொண்டுசென்றார்கள். கௌரவப் படையும் உடன் சேர்ந்து விலக எதிர்பாராத வெறியுடன் சகதேவன் அம்புகளைத் தொடுத்தபடி முன்னோக்கி வந்து அந்த இடைவெளியில் புகுந்துகொண்டான். “சூதன் மகனே, கொல் என்னை… உன் அம்புகளுக்கு ஆற்றலிருந்தால் என்னை கொல்!” என்று கூவினான். “என் மூத்தவர்களை நீ சிறுமைசெய்தாய். நான் வீணே நோக்கி நின்றேன் என்னும் பழி அகலட்டும்… கொல் என்னை ! கீழ்பிறப்பே, கொல் என்னை!”

கர்ணனின் அம்புகள் அவனை எதிர்கொண்டன. சகதேவனின் இருபுறமும் எரியம்புகள் சென்று அறைந்து அனற்புழுதி கிளப்பின. ஆனால் அவன் இறப்பதற்கென்று முடிவெடுத்து அங்கே வந்ததுபோல் தோன்றினான். அது ஒரு கண எழுச்சி என விருஷசேனன் உணர்ந்தான். முந்தைய நாள் யுதிஷ்டிரனும் பீமனும் களத்தில் சிறுமைசெய்யப்பட்டதை அவர் வெவ்வேறு சொற்களினூடாக கடந்துசென்றிருப்பார். நேற்று அவையில் உணர்வெழுச்சிகள் வெளிப்பட்டிருக்கலாம். பழிச்சொற்கள் எழுந்திருக்கலாம். அனைத்தையும் மேலும் மேலும் எடைமிக்க சொற்களைக் கொண்டு மூடியிருக்கலாம். ஒரு தருணத்தில் அந்த விசை தடைகளை உடைத்து எழுந்துவிட்டிருக்கிறது.

கர்ணன் சகதேவனை தொடர்ச்சியாக அம்புகளால் அறைந்தாலும் அவற்றை எல்லாம் விண்ணிலேயே தடுத்து பொறிமழையென உதிரச்செய்ய சகதேவனால் இயன்றது. அவன் வெறியாலேயே ஆற்றல் கொண்டுவிட்டிருந்தான். அவன் புலன்கள் ஒவ்வொன்றும் பலமடங்கு கூர்கொண்டன. கர்ணனின் அம்புகள் அவனை தொடவில்லை. ஆனால் அந்த விசை சற்றுநேரமே நீடிக்கும் என அனைவரும் அறிந்திருந்தனர். அதை உணர்ந்தவன்போல சுருதகீர்த்தியும் சுருதசேனனும் இரு பக்கங்களிலும் இருந்து அம்புகளைச் செலுத்தியபடி அணுகினர்.

கர்ணன் அக்கணத்தில் சற்றே திரும்பி அகல, இடைவெளியில் விசையுடன் முன்னெழுந்த சுருதகீர்த்தி மிகவும் நெருங்கி வந்துவிட்டான். தன் ஆவநாழியிலிருந்து எரியம்பு ஒன்றை எடுத்த கணம் மிக அருகே சுருதகீர்த்தியை விருஷசேனன் பார்த்தான். அவனுடைய எரியம்பின் மிக அணுக்கவளையத்திற்குள். ஊதியே அவனை சாம்பலாக்கிவிடக்கூடும் என்பதைப்போல். ஒருகணம் அவன் உள்ளம் வெறிகொண்டு எழுந்தது. “மூத்தவரே, கொல்லுங்கள் அவனை! கொல்லுங்கள்!” என திவிபதன் கூச்சலிட்டான். அதே தருணம் அப்பால் சகதேவனின் தேரை தன் எரியம்பால் அடித்து இருபுறமும் பிளந்து விழச்செய்தான் கர்ணன். தேரிலிருந்து பாய்ந்திறங்கி நின்ற சகதேவன் வெறும் கைகளுடன் திகைத்து விழிகள் வெறிக்க நின்றான். கர்ணன் அவனை நோக்காதவன்போல திரும்பிக்கொண்டான்.

சுருதகீர்த்தியை நோக்காதவன்போல விருஷசேனன் திரும்பிக்கொண்டான். “மூத்தவரே…” என்று கூவிய திவிபதன் விருஷசேனனின் விழிகளைக் கண்டு சொல் அமைந்தான். நாணொலி எழுப்பியபடி முன்னால் சென்ற கர்ணனை அம்புகளால் வேலியிட்டபடி விருஷசேனன் தொடர்ந்தான். வில்தாழ்த்தி தேர்த்தட்டில் நின்றிருந்த சுருதகீர்த்தியை பாகன் பின்னால் கொண்டு செல்ல அப்பால் சகதேவன் தளர்ந்த நடையுடன் பாண்டவப் படை நோக்கி சென்று அங்கு வந்த தேர் ஒன்றில் தொற்றி ஏறிக்கொண்டான்.

முந்தைய கட்டுரைதேவதேவனின் ஏஞ்சல்
அடுத்த கட்டுரைசென்னை, மூன்று நாவல்கள்- நிஷா மன்ஸூர்