உலகளந்தோனை அளக்கும் கரப்பான்- சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகம்- சுனில் கிருஷ்ணன்

‘தற்செயல் என்பது ஒரு சொகுசு அல்ல, அது விதியின் மறுபக்கம், அதைத் தவிரவும் வேறேதோவும்கூட… மறு எல்லையில் தற்செயல் என்பது பூரண சுதந்திரம். தற்செயல் எந்த விதிகளுக்கும் உட்பட்டதில்லை, ஒருவேளை அப்படியே கட்டுப்பட்டாலும் அவை எவை என்று நாமறிய முடியாது. தற்செயல், இந்த உவமையை பயன்படுத்த நீங்கள் அனுமதித்தால், நமது கோளில் ஒவ்வொரு நொடியும் கடவுளின் இருப்பை பறை சாற்றுவதை போன்றது. நோக்கமற்ற கடவுள் நோக்கமற்ற சமிக்ஞைகளை நோக்கமற்ற ஜீவராசிகளை நோக்கிப் புரிகிறார்.’ – ராபர்டோ போலனோ, 2666

 

‘எந்தப் போக்கும், வாழ்வினுடைய காலத்தினுடைய சூதாட்டங்களினால் கணிப்பிற்குட்படுவதில்லை. நடந்த காரியத்தின் காரணங்களை ஆராய்ந்து அடுக்குவது சுலபம். வலுவான காரணங்கள் இருக்க, அவற்றிற்கான காரியங்கள் ஏன் நடக்கவில்லை என்பதை எவரும் அறிய முடியாது. நடந்ததை நடக்க விதிக்கப்பட்டதாக நினைத்து ஏற்றுக்கொள்ள, சூதாட்டம் வெற்றிகரமாக ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது’- மாபெரும் சூதாட்டம், சுரேஷ்குமார இந்திரஜித்

 

தமிழ் சிறுகதை மரபு காத்திரமானது. புதுமைப்பித்தன், அழகிரிசாமி, கு.ப.ரா, மவுனி, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன் என பல்வேறு மாபெரும் எழுத்தாளுமைகள் புழங்கிய தளம். இன்றைக்கு தமிழில் எழுதத் துவங்கும் புதிய எழுத்தாளனுக்கு சிறுகதை களமே பெரும் சவாலாகவும் திகழ்கிறது. அனேக பேசுபொருட்களையும் உணர்ச்சிகளையும் துல்லியமாக கையாண்டிருக்கிறது. இந்த நூற்றாண்டுகால தமிழ் சிறுகதை பரிணாமத்தில் தவிர்க்க முடியாத கண்ணியாக சுரேஷ்குமார இந்திரஜித்தை சுட்ட முடியும்.

 

1953 ஆம் ஆண்டு பிறந்த சுரேஷ்குமார இந்திரஜித்தின் இயற்பெயர் சுரேஷ்குமார். தாசில்தாராக, பின்னர் சிரஸ்தாராக இருந்து ஒய்வு பெற்றவர். இளமை காலத்தை ராமேஸ்வரத்தில் கழித்தவர்.  1982 ஆம் ஆண்டு இவருடைய முதல் சிறுகதை தொகுப்பான ;அலையும் சிறகுகள்’ வெளியாகி கவனிக்கப்பட்டது. முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சிறுகதைகளை எழுதி வருகிறார். அலையும் சிறகுகள் (1982), மறைந்து திரியும் கிழவன் (1993), மாபெரும் சூதாட்டம் (2003- அதுவரையிலான சிறுகதைகளின் மொத்த தொகுப்பு), அவரவர் வழி (2009), நானும் ஒருவன் (2012), நடன மங்கை (2013), நள்ளிரவில் சூரியன் (2014) இடப்பக்க மூக்குத்தி (2017) என மொத்தம் எட்டு சிறுகதை தொகுதிகள் வெளியாகியுள்ளன. இத்தொகுப்புக்களில் மொத்தம் 83 சிறுகதைகள் உள்ளன.

தமிழில் தனித்துவமான கூறு முறை கொண்டவர். சிறுகதைகளை மட்டுமே புனைந்த சுரேஷ்குமார இந்திரஜித்தை எந்த ஒரு எழுத்தாள வரிசையிலும் கச்சிதமாக பொருத்திவிட முடியுமா என தெரியவில்லை. எழுத்தாளர்கள் சுகுமாரனும், கே.என் செந்திலும் அவரை மவுனியின் வழிவந்தவர் என அடையாளப் படுத்துகிறார்கள். கதைகளின் ஊடாக ஒருவித புலன் மயக்கத்தை ஏற்படுத்துபவர்கள் என்ற தளத்திற்கு அப்பால் அவர்களுக்குள் எந்த ஒற்றுமையும் இல்லை என்றே எண்ணுகிறேன். சுரேஷ்குமார இந்திரஜித் தன் நேர்காணலில் தன்னை பாதித்த எழுத்தாளர் என ஜெயகாந்தனை குறிப்பிடுகிறார். ஆனால் அவருடைய தாக்கமும் கூட பெரும்பாலான கதைகளில் தென்படவில்லை. பெண் பாத்திர வார்ப்புக்கள் மற்றும் சமூக விமர்சன கூறுகளை ஜெயகாந்தனிடம் இருந்து அவர் பெற்றிருக்கலாம்.

எழுத்தாளனின் இயங்கு விசையை ஒரு கிடைமட்ட கோடாக உருவகித்தால் அதன் ஒரு எல்லை கற்பனை, மறு எல்லை சமூக- வரலாற்று பிரக்ஞை எனக் கொள்ளலாம். ஒரு எல்லையில் மிகு புனைவுகள் உருவாகின்றன, மறு எல்லையில் அப்பட்டமான பிரகடன எழுத்துக்கள் வெளிப்படுகின்றன. சுரேஷ்குமார இந்திரஜித் கேலிக்கைத்தன்மை கொண்ட வாசிப்பின்பம் அளிக்கும் மிகு புனைவுகளை எழுதியிருக்கிறார், அரிதாக சற்றே அவருடைய இயல்புக்கு மீறி வலுத்து ஒலிக்கும் சமூக – அரசியல் சார்ந்த கதைகளையும் எழுதி இருக்கிறார், அதுவும் பிரகடனத்தின் எல்லையை அடையவில்லை. இவ்விரு இழுவிசைகள் சமன்படும் புள்ளிகளில் கதை உருவாகும்போது அபூர்வமான வாசிப்பனுபவத்தை அவை அளிக்கின்றன. சுரேஷ்குமார இந்திரஜித்தின் பல கதைகள் இத்தகையத்தன்மை உடையவை. கற்பனை ஆற்றலும், சமூக வரலாற்று பிரக்ஞையும் ஊடுபாவாக அவருடைய கதைகளை பின்னிச் செல்கின்றன. ‘எலும்புக்கூடுகள்’ கதை சட்டென நினைவுக்கு வருகிறது. கதைகளை தேர்ந்தெடுப்பதில் இறுதிவரை எனக்கு குழப்பங்கள் நீடித்ததற்கு காரணமும் இதுவே. முதல் வாசிப்பில் கவனத்தை ஈர்க்காத கதைகள் இரண்டாம் வாசிப்பில் வேறோர் கோணத்தை திறந்து காட்டி என்னை வியப்பில் ஆழ்த்தின.

சுரேஷ்குமார இந்திரஜித் நவீனத்துவ எழுத்தாளரா? பின் நவீனத்துவ எழத்தாளரா? என்றொரு கேள்வியும் எழுவதுண்டு. கூறு முறைகளில் புதுமையை புகுத்தியவர். ஒரு கர்நாடக சங்கீத பாடலின் வடிவத்தில் சாதிக் கலவரத்தின் கதையை அவரால் எழுத முடிந்திருக்கிறது. தமிழ் வணிக திரைப்படத்தின் திரைக்கதையுடன் இந்திய பொருளாதார அறிக்கையை சேர்த்து எழுத முடிந்திருக்கிறது. ஒரே கதைக்கு பலவிதமான முடிவுகளை, பல்வேறு சாத்தியக்கூறுகளை சுட்டிக் காட்டுபவர். தொன்மங்களை கட்டுடைப்பு செய்யும் சில கதைகளையும் எழுதி இருக்கிறார். நிலக்காட்சி விவரணைகள், சிந்தனை தத்தளிப்புகள் என அவருடைய மொழி எங்கும் கட்டற்று பாய்ந்தோடுவது இல்லை. நவீனத்துவத்திற்கு உரிய செறிவான, இறுக்கமான மொழி அவருடையது. இந்த பகுப்புகளின் மீதும், கோட்பாடுகளின் மீதும் நம்பிக்கையற்றவர். ஒருவகையில் அவருடைய பின் நவீனத்துவவாதியின் மனைவி இத்தகைய வரையறையாக்கத்தை பகடி செய்கிறது. கதையில் தோன்றும் போர்ஹெஸ் தான் நவீனத்துவரா பின்நவீனத்துவரா என கேள்வி எழுப்பிக் கொள்கிறார். ‘மாபெரும் சூதாட்டம்’ தொகுதியின் பின்னிணைப்பாக ‘மறைந்து திரியும் கிழவன்’ தொகுப்பின் முன்னுரை அளிக்கப்பட்டிருக்கிறது

. “அக உலகு, புற உலகு, ஃபாண்டஸி, குறியீடு, சர்ரியலிசம் மற்றும் இன்னோரன்ன சொற்கள்/ கலைச்சொற்கள் வெளிப்பாட்டு முறையை வகைப்படுத்த உருவாக்கப்பட்டவை. இவற்றைச் சார்ந்து எண்ணங்கள் உருவாகப் பழக்கம் ஏற்பட்டு விட்டது. இவற்றை விலக்கிவிட்டு வாசகனோ விமர்சகனோ படைப்பு எழுப்பும் உணர்வுகளையும் விஷயங்களையும் கூற முனையும்போது அவன் அதிகப் பிரயாசை எடுத்து கொள்ள நேரிடலாம். அந்தப் பிரயாசை படைப்பை, கலைச்சொற்கள் இறுக்கும் பிடியிலிருந்து விடுவிக்க சாத்தியம் உண்டு. புதிய வெளிப்பாட்டு முறை கலைச்சொற்களுக்குச் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.” என எழுதுகிறார். நவீனத்துவ பின் நவீனத்துவ பகுப்புக்கு அப்பால், அல்லது அவற்றை பொருட்படுத்தாமல் தன் கதைகளை சுரேஷ்குமார இந்திரஜித் எழுதி கொண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ‘நானும் ஒருவன்’ தொகுப்பின் முன்னுரையில் ‘இவை உத்திகளின் விளையாட்டு அல்ல. பல திறப்புகளுக்காக இக்கதைகள், உத்திகளை இவ்விதமாக தேர்வு செய்துகொண்டன.’ என்று எழுதுகிறார். அவருடைய பெரும்பாலான கதைகள் உணர்வு நீக்கம் செய்யப்பட்டவை. சில மெல்லிய கோடுகள் மட்டுமே தீட்டப்படுகின்றன. வாசகனே முழு உருவையும், விழைவையும் கற்பனை செய்து கொள்ள வேண்டும். உணர்வுகளின் தீவிரத்தை அடைய வேண்டிய பொறுப்பும் அவனைச் சார்ந்ததே.

வாசகன் சிறு சிறு குறிப்புகளைக் கொண்டு கதையை தன் மனதில் பின்னியபடி வருகிறான். நுட்பங்களின் சங்கிலிப் பிணைப்பு இதில் முக்கியம். நுட்பங்களைத் தவறவிட தவறவிட கதை அவனுக்கு பிடிபடாமல் ஆகிறது. இறுதியில் அவன் இலக்கை அடையும்போது அது கதாசிரியர் உத்தேசித்த இலக்காக இருக்க வேண்டியதில்லை. இன்னும் சொல்வதானால் எழுத்தாளன் எந்த இலக்கையுமே உத்தேசிக்கவில்லை என்பதே உண்மை. ஜெயமோகன் ‘இடப்பக்க மூக்குத்தி’ தொகுப்பின் வெளியீட்டின்போது சுரேஷ்குமார இந்திரஜித் வரைபடம் மட்டுமே அளிக்கிறார், வாசகரே பயணித்து தங்களது இலக்குகளை அடைய வேண்டும், என்று கூறினார். அவருடைய கதைகளின் ஒன்றிற்கு தலைப்பே அவருடைய கதைகளின் இந்தத் தன்மையை சுட்டுகிறது. ‘ஓர் இடத்திற்குப் பல வரைபடங்கள் ஒரு காலத்திற்குப் பல சரித்திரங்கள்’ (மாபெரும் சூதாட்டம் தொகுப்பு). ‘நடன மங்கை’ ‘இடப்பக்க மூக்குத்தி’ ‘புதிர்வழி பயணம்’ போன்ற கதைகள் இத்தகைய தன்மை உடையவை. நிகழ்தகவுகளின் தொகை என்று சில கதைகளை சுட்டிக்காட்டலாம். ‘நானும் ஒருவன்’ ‘ஒரு திருமணம்’ போன்ற கதைகள் இரண்டு வெவ்வேறு முடிவுகளை கொண்டிருக்கின்றன. தமிழில் வாசக சுதந்திரத்தை அதிகமாக அளிக்கும் எழுத்துக்கள் என்று சுரேஷ்குமார இந்திரஜித் மற்றும் யுவன் சந்திரசேகரின் எழுத்துக்களை கூறலாம். நாம் எண்ணுவது போல் வாழ்க்கையோ காலமோ நேர்க்கோட்டில் இல்லை. எத்தனையோ தளங்கள் உள்ளன. இணை வரலாறுகள் இயங்குகின்றன. ’மறைந்து திரியும் கிழவன்’, சமூரியா கதைகள், போன்றவை அப்படி அவர் உருவாக்க முனையும் இணை வரலாறின் பிரதிகள். நியதிகள் அற்ற அல்லது நியதிகள் பிடிபடாத இந்தச் சிடுக்குகள் மிகுந்த பேரியக்கத்தின் குறுக்குவெட்டு தோற்றத்தை காணும்போது ஏற்படும் பிரமிப்பை சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகள் வாசகருக்கு கடத்த முயல்கின்றன.

அவருடைய ‘புனைவுகளின் உரையாடல்’ கதையில் கதைசொல்லி ஒரு கதையை சொல்லிக்கொண்டே வருகிறார், அந்தக் கதை முடிவதற்குமுன் இப்படி எழுதுகிறார்- “நடந்த சம்பவமாக நான் கூறியது அனைத்தும் புனைவு என்று கூறினேன். நண்பர் சிகரெட்டை இழுத்து புகையை விட்டார். ‘உண்மையைச் சொல்லிவிட்டுப் புனைவு என்று ஏமாற்றுகிறீர்களா?’ என்றார். ‘இல்லை; புனைவை உண்மை போலச் சொன்னேன்’ என்றேன். நண்பர் மௌனமாக சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தார்”’. இது சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளை புரிந்துகொள்ள உதவும் மிக முக்கியமான பகுதி. நம்பகமற்ற கதைசொல்லி நம்முடன் விளையாடுகிறான் எனும் பிரக்ஞை வந்துவிடுகிறது. ‘நள்ளிரவில் சூரியன்’, ‘ஆங்கிலப் புத்தகம் வாசிக்கும் பெண்’ இப்படி பல கதைகளை இதற்கு உதாரணம் அளிக்கலாம். நேர்காணலில் அவரே தனக்கு ‘ரீல்’ விடுவது பிடிக்கும் என்று சொல்கிறார். புனைவு உண்மையை சொல்லவில்லை என்றாலும் உண்மையின் சாரத்தை வெளிப்படுத்துகிறது என்பது பரவலான கூற்று. ஆனால் சுரேஷ்குமார இந்திரஜித் உண்மை, பொய், புனைவு, எனும் பிரிவினையை அழித்து வாசகனுடன் நம்பிக்கையை கேள்விக்கு உட்படுத்துகிறார். ஒரு வகையில் காலம்காலமாக இலக்கியம் வலியுறுத்தும் சத்தியம், தரிசனம் போன்றவற்றை தலைகீழாக்குகிறது என இவ்வகை கதைகளை சொல்லலாம். இத்தன்மை காரணமாகவே அவரது எழுத்து பிற நவீனத்துவ எழுத்துக்களில் இருந்து பெரிதும் வேறுபடுகிறது. உண்மைக்கும் பொய்க்குமான இடைவெளிகள் மறைந்து, அவரவர் அவரவருக்கான உண்மையை உற்பத்தி செய்துகொள்ளும் இந்த காலகட்டத்தில் சுரேஷ்குமார இந்திரஜித்தை தமிழின் பின்னை வாய்மைக்கால (post truth) எழுத்தாளர் என்று அடையாளப்படுத்தலாமா என்பதை நாம் பரிசீலிக்க வேண்டும்.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் கதையான “அலையும் சிறகுகள்” கதையில் “இவளும் காலப்போக்கில் மூப்படைந்து, அந்தி வேலைக்கும் கட்டிடத்திற்கும் நீலவானத்திற்கும் அழகையுண்டுபன்னுகிற தனது சோபிதத்தை இழந்து போகப் போவதையும் துக்கமில்லாமல் செரித்துக்கொள்ள முடியவில்லை உலகின் எல்லாமே மாறிக்கொண்டுதான் இருக்கிறது. நமக்குப் பிடித்தமான இடத்தில் நின்று விடுகிற அளவுக்கு வாழ்க்கை அவ்வளவு வசதியாக இல்லை. நுணுக்கங்கள் நிறைந்த மனசு நுணுக்கங்கள் நிறைந்த துக்கங்களைத் தர வல்லதாக இருக்கிறது.” என்று எழுதுகிறார். ஏறத்தாழ அக்காலகட்டத்து பொதுவான நவீனத்துவ மனநிலையை பிரதிபலிக்கும் வரிகளாக இவை தோன்றினாலும், இந்த உணர்வுநிலை சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகில் ஏதோ ஒருவகையில் தொடர்ச்சியாக நீடிப்பதாக தோன்றியது. அவருடைய ஒரு கதையில் ஒருகாலத்து பேரழகி பொக்கை வாயுடன் கொட்டை பாக்கு வாங்க கிளம்பி வருகிறாள் (நள்ளிரவில் சூரியன்). சுரேஷ்குமார இந்திரஜித்தின் பல கதைகளில் கனவு கலைந்து நிதர்சனத்தை எதிர்கொள்ளும் சித்திரம் மீண்டும் மீண்டும் வருகிறது. அவருடைய கதை மாந்தர்கள் பகல் கனவு காண்பவர்களாக, கற்பனையில் திளைப்பவர்களாக இருக்கிறார்கள். ‘சந்திக்கும் இரு உலகங்கள்’ கதையில் வீணை கச்சேரியை காபரே நடனமாக கற்பனை செய்கிறான் ஜடாமுனி. ஒரு ஆட்டோவில் மயங்கி விழும் பெரியவரை ஏற்றிச் செல்லும் சிறிய இடைவெளிக்குள் முழு வாழ்க்கையைப் பற்றி ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ கனவு காண்கிறார்கள்.’கடந்து கொண்டிருக்கும் தொலைவில்’ ஒரு தொலைபேசி அழைப்பிற்கு எழுந்து செல்வதற்குள் முழு வாழ்வை வாழ்ந்து விடுகிறான். காலத்தை நீட்டவும் சுருக்கவும் தெரிந்த வித்தகராக சுரேஷ்குமார இந்திரஜித் திகழ்கிறார்.  ‘நள்ளிரவில்  சூரியன்’ அவ்வகையில் தமிழ் எழுத்தாளனின் வாழ்வில் நிகழ சாத்தியமற்றதை, ஒரு பகல் கனவை சொல்லும் பகடிக் கதை.

கற்பனையின் வீச்சில் சில அபராமான இடங்களை காட்சிப்படுத்துகிறார். “ ’உலகளந்த பெருமாள் ஒரு காலினால் உலகத்தை அளந்தார்…’ அப்போது உலகளந்த பெருமானின் கையிடுக்கில் இருந்து ஒரு கரப்பான் போச்சி வந்து அவர் மார்பில் ஊர்ந்தது.”(ஓர் இடத்திற்குப் பல வரைபடங்கள், ஒரு காலத்திற்கு பல சரித்திரங்கள்- மாபெரும் சூதாட்டம்). உலகளந்த பெருமானை ஒரு கரப்பான் அளந்து கொண்டிருக்கிறது எனும் காட்சி சட்டென வாசிக்கையில் ஒரு திடுக்கிடலை ஏற்படுத்துகிறது. இந்தக் காட்சி அவருடைய ஒட்டுமொத்த படைப்புலகையும் விளக்கும் படிமமாக என்னுள் உருப்பெற்றது. உன்னதங்களை பூச்சியைக்கொண்டு கொண்டு அளப்பது. இந்தக் காட்சி மனதில் மீண்டும் மீண்டும் ஊறிக்கொண்டே இருந்தது. மற்றுமொரு கதையில் ஒரு காவலரின் உடலை விராட வடிவமாக கற்பனை செய்கிறார். “கரியமாலின் உடல் சக்தியிழந்து கிடந்தது. வலது கையைத் தூக்கமுயன்றார்.முடியவில்லை. உடல் அவர் இச்சைக்கு உட்படாது கிடக்க, அதன் மேல் பெண்கள் சிறு உருவத்துடன் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.பெரும்பாலான பெண்கள் மூக்குத்தி ஒளிரும் கிராமப்பெண்களாக இருந்தனர். வலது உள்ளங்கையில் ஒரு பெண் விறகுக் கட்டை இறக்கிவைத்துவிட்டு வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தாள். இழுத்துச்செருகிய சேலைக் கட்டுடன் ஒரு பெண் அவர் தோள்பட்டையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அவர் காலில் ஒரு பெண் படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள்.”(அந்த  முகம், மாபெரும் சூதாட்டம்). ‘ஒரு திருமணம்’ கதையில் பாம்பணை பெருமான் கற்சிலையாக முழு உயரத்துடன் எழுந்து நிற்கும் காட்சியை விவரித்திருப்பார். சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் தொகுப்பில் உள்ள ‘பூமி’ கதையிலேயே கனவு அம்சம் வெளிப்படுகிறது. கற்பனையின் உந்துதலில் அவருடைய படைப்புலகம் முழுக்க ஆங்காங்கு கனவுக் காட்சிகள் விரவிக் கிடக்கின்றன.

சுரேஷ்குமார இந்திரஜித் இளமைகாலத்தை ராமேஸ்வரத்தில் கழித்தவர். நேர்காணலில் கடவுளின் மீதான தனது ஈர்ப்பு இளமையிலேயே கலைந்துவிட்டதை சொல்லியிருக்கிறார். புனித தலத்திற்கே உரிய கோட்டிகளால் நிறைந்த ஊர். கடவுளின் ஒரு வியாபார நிமித்த கருவியாக அவர்கள் பயன்படுத்துவதை அறிந்து வளர்ந்தவர். இந்த தாக்கம் அவருடைய கதைகளில் பலவகையில் வெளிப்படுகிறது. எந்தவிதமான உன்னதங்களையும், புனிதங்களையும் மறுக்கும், ஐயம் கொள்ளும் மனப்பாங்கை ஏற்படுத்துகிறது. முதல் தோற்றத்தில் உன்னதமாக தென்படும் எதுவுமே ஒரு முகமூடி என்பது அவருடைய படைப்புலகின் முக்கிய பார்வைகளில் ஒன்று. ஆகவே அவருடைய கதைகள் முகமூடியை கழட்டி ஆழத்தில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்ந்து வெளிக்கொணர முயல்கிறது. தனது பகுத்தறிவைக் கொண்டு கடவுளின் தேவை சமூகத்தில் என்னவாக இருக்கிறது என்பதையும் கதைகளின் ஊடே ஆராய்ந்து பார்க்கிறார். ஈழ இனப்படுகொலையின் காட்சிகளை பார்க்கும் தாயை இழந்த ஒருவன் “காலைத்தூக்கி நின்றாடும் தெய்வமே” என தெய்வத்திடம் அரற்றுகிறான் (அம்மாவின் சாயல்). மாபெரும் துயரத்தில் தோள் சாய தெய்வமும் தொன்மமும் இருந்துவிட்டுப் போகட்டும் எனும் நிலையை கதைகளின் ஊடாக அவர் அடைவதாக எனக்குத் தோன்றியது. சுரேஷ்குமார இந்திரஜித் இளமையிலேயே செவ்வியல் இசையில் பரிச்சயம் உடையவர். தனது இசை ரசனையை வளர்த்துக்கொண்டவர். “நான் கேக்கறது சாமி பாட்டில்லை. சங்கீதம். நானும் சாமி இல்லேங்கறவன்தான். சந்கீதந்தானே கேக்கறேன். பாட்டு எதைப் பத்தி இருந்தா என்ன? பாட்டு சங்கீதமா இருந்தா கேக்கலாம்.” என்று ஒரு பாத்திரம் ‘அம்மாவின் சாயல்’ கதையில் சொல்வதாக வரும் வரி அவருக்கும் பொருந்தும். ‘வழி மறைத்திருக்குதே’ போன்ற கதையை கர்நாடக சங்கீத தேர்ச்சியின் ஊடாக எழுதி இருக்கிறார். ‘சந்திக்கும் இரு உலகங்கள்’ ‘புதுவிதமான செடிகளும் வர்ணப்பூக்களும்’ உட்பட வேறு பல கதைகளில் கர்நாடக சங்கீதம் பற்றிய அவருடைய ஈடுபாடு புலப்படுகிறது. பகுத்தறிவின் பேரால் செவ்வியல் கலைகளை விலக்குவதை அவர் ஏற்கவில்லை.

சுரேஷ்குமார இந்திரஜித் தனது பணியின் காரணமாக குற்றங்களை விசாரிக்கும் அதிகாரம் படைத்தவராக திகழ்ந்திருக்கிறார். இந்த பணி அனுபவம் அவருடைய படைப்புலகில் மிக முக்கியமான தாக்கம் செலுத்தியிருக்கிறது. குறிப்பாக குற்றங்கள், அதற்கு பின்பான உளவியல் சார்ந்து பல நுண்மையான கதைகளை எழுதி இருக்கிறார். ‘மினுங்கும் கண்கள்’ ‘நானும் ஒருவன்’ ‘அந்த மனிதர்கள்’ ‘உறையிட்ட கத்தி’ ‘ரெட்டை கொலை’ ‘வழி மறைத்திருக்குதே’ ‘பங்குப் பணம்’ ‘பறக்கும் திருடனுக்குள்’ என பல கதைகளை சொல்லலாம். உன்னதங்களுக்கு பின் உள்ள அழுக்குகளை அடையாளம் காண்பது போல் கீழ்மை என சமூகத்தால் ஒதுக்கப்படும் ஒன்றின் மறுபக்கத்தை உன்னதப்படுத்தாமல் கரிசனத்தோடு எழுதி செல்கிறார். முன்பு எப்போதோ இறந்து போன சிறுமியின் புகைப்படத்தை புதைத்து வைத்திருக்கிறான் திருடன் மஞ்சக்காளை (பறக்கும் திருடனுக்குள்), கொலை செய்வதற்கு செல்லும் முன் வழியில் விபத்தில் அடிப்பட்டு கிடப்பவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறான் ஒருவன் (அந்த மனிதர்கள்). உணவு உண்ட வீட்டிலேயே கழுத்தை கீறிவிட்டு தப்பி செல்பவனை மனைவி சபிக்கும்போது அந்த சிறுவன் நன்றியுடையவன் என்பதால்தான் கொல்லாமல் விட்டான் என நம்புகிறார் அந்தோணி (மினுங்கும்கங்கள்). இப்படி குற்ற உளவியலை மிக நுட்பமாக பதிவு செய்த கதைகள் பலவற்றை சுரேஷ்குமார இந்திரஜித் எழுதி இருக்கிறார். உறவுக்குள் ஏற்படும் வன்மத்தை சொல்கிறது அவருடைய ‘உறையிட்ட கத்தி’.

சுரேஷ்குமார இந்திரஜித் ஈழ அரசியல் மற்றும் சாதிய மனநிலை என இவ்விரு தளங்களில் சமூக- வரலாற்று- அரசியல் பிரக்ஞை சார்ந்த கதைகளை அதிகமும் எழுதியுள்ளார். ‘எலும்புக்கூடுகள்’ ‘காலத்தின் அலமாரி’ ‘சந்திப்பு’ ‘அம்மாவின் சாயல்’ ‘கலந்துரையாடல்’ ஆகிய கதைகள் ஈழ போராடட்டத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் பேசுகிறது. சமூரியா, கரெஷியா, மறேலியா என கற்பனையான தேசங்களை புனைந்தாலும் நம்மால் அந்த கதைகளுடன் பிணைந்து கொள்ளமுடிகிறது. இந்த வகையான சிருஷ்டி சற்றே விலகல் தன்மையோடு சமூக வரலாற்று போக்குகளை அவதானிக்கப் பயன்படுத்துகிறார். கற்பனையான நிலப்பரப்பில் கதைகளை எழுதுவது நாம் எண்ணும் அளவிற்கு அத்தனை எளிமையானதும் அல்ல. சாதி பாகுபாடு சுரேஷ்குமார இந்திரஜித்தை வெகுவாக தொந்திரவு செய்கிறது. ‘அழியாத சித்திரங்கள்’ எளிய நினைவேக்க காதல் கதையாக பயணிக்கத் துவங்கி சாதியின் கோர முகத்தை சொல்லி முடிகிறது. ‘வழி மறைத்திருக்குதே’ சாதி கலவரத்தை முன்வைத்து நூதனமான முறையில் எழுதப்பட்ட கதை. ‘சிலந்தி வலை’ கதையும் சாதியத்தை பின்புலமாக கொண்டதே. ஆதிக்க சாதி- தலித் முரண்பாடை சுட்டிக்காட்டும் கதைகள் இவை. இவைத்தவிர பிராமணர்களின் வீழ்ச்சியை சித்தரிக்கும் சில கதைகளையும் அவர் எழுதி இருக்கிறார். ‘கோவில் பிரகாரம்’ ‘கணியன் பூங்குன்றனார்’ ‘மூன்று பெண்கள்’ ஆகிய கதைகளை அவ்வகையில் குறிப்பிட்டு சொல்லலாம்.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் தமிழ் புனைவு வெளியின் தனித்துவமான பங்களிப்பு என நான் கருதுவது ஆண்- பெண் உறவு சார்ந்து அவர் எழுதிய கதைகளைத்தான். இந்த வகையில் கணிசமான கதைகளை சினிமாத்துறையை பின்புலமாகக் கொண்டு எழுதி இருக்கிறார். இத்தனைக்கும் சினிமாவில் அவருக்கு எந்த நேரடி அனுபவமும் கிடையாது. முன்னரே சுட்டியது போல் பகற்கனவுகள் மற்றும் அவை கலைந்து போவது சுரேஷ்குமார இந்திரஜித்தின் படைப்புலகின் ஆதார அம்சங்களில் ஒன்று. இதைப் பேச சினிமாவைக் காட்டிலும் வேறு எந்த துறை பொருத்தமானதாக இருக்க முடியும்? அவருடைய சினிமா கதைகளில் பெரும்பாலான பெண்கள் வாய்ப்புக்களின் ஏணியை தவறவிட்டவர்கள். துணை நடிகைகளாக, குழு நடனக்காரிகளாக இருப்பவர்கள். ஆண்களின் உலகில் தங்களுக்கென அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள முனைபவர்கள். ‘நிகழ்காலமும் இறந்தகாலமும்’ ‘எழுத்தாளன், நடிகை, காரைக்கால் அம்மையார்’ ‘ரகசிய வார்த்தை’ ‘முற்றுப்புள்ளி’ ஆகிய கதைகளை குறிப்பிடலாம்.

மத்திய வயது மற்றும் முதுமை கால ஆண் பெண் சிக்கலை சுரேஷ்குமார இந்திரஜித் அளவிற்கு  எழுதியவர்கள் குறைவு. லா.ச.ரா எழுதியது போல் புலிக்கூண்டுக்குள் அடைப்பட்ட இரு புலிகள் மாதிரி கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பிராண்டிக் கொள்கிறார்கள். ‘அப்பத்தா’ கதையில் மருமகளின் தோற்றம் மனைவியை இழந்த ரத்தினகுமாருக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும். ஆகவே மூத்த மகனின் வீட்டுக்கு செல்வதை தவிர்ப்பார் என்பது மிக நுட்பமான இடம். ‘முற்றுபுள்ளி’ கதையில் ஒரு நோட்டு முழுவதும் தனக்குப் பிடித்த கவர்ச்சி நடிகையின் படத்தை ஒட்டி வைத்திருப்பவர், வயோதிகத்தில் நொடிந்து கிடக்கும் அவரைக் காண செல்வார். அவர் தன் அன்னையை நினைவுபடுத்துகிறார் என்று சொல்லி அழுதுவிட்டு அந்த நோட்டு புத்தகத்தை அவரிடம் கொடுத்து விட்டு வெளியேறுவார். இவற்றை விளக்கிக்கொள்ள முடியாது. ‘அப்பத்தா’ கதையில் வைஜெயந்தி மாலாவின் தோற்றம் கதைசொல்லிக்கு தன் அப்பத்தாவை நினைவூட்டும். அத்தனை நாட்களாக தள்ளிபோட்ட ஒரு முடிவை எடுப்பார். இந்தவகையான கதைகளில் ‘அவரவர் வழி’ மிக நல்ல கதை. ஒரு சின்ன சமிங்கை வழியாக அத்தனையாண்டுகால பிரிவும் அன்பும் குறிப்புணர்த்தப் படுகிறது. இதே போல் அபூர்வமான வாஞ்சை வெளிப்படும் மற்றொரு கதை ‘கால்பந்தும் அவளும்’.

கணவன் மனைவி உறவுக்கு இடையே வன்முறையை மட்டுமல்ல விந்தையான சமரசங்களையும் கதையாக்குகிறார். பரத்தையரும், திருமணத்திற்கு அப்பாலான உறவுகளும் பல கதைகளின் பெசுபோருட்கள் ஆகின்றன. ‘ஒரு காரும் ஐந்து நபர்களும்’, ‘ஒரு காதல் கதை’ ‘அவரவர் வழி’ ‘வீடு திரும்புதல்’ ‘கால்பந்தும் அவளும்’ ‘ கணவன் மனைவி’ ‘மனைவிகள்’ ‘மாயப் பெண்’ ‘காமத்தின் வாள்’ ‘மல்லிகைச் சரம்’ என பெரும் பட்டியலை இடலாம். எதுவுமே புனிதம் அல்ல எனும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் வாழ்க்கை தரிசனம் குடும்பம் எனும் அமைப்பின் உன்னதப் படுத்துதலையும் கேள்விக்கு உட்படுத்துகிறது. மனைவி பிற எந்த உறவையும் காட்டிலும் ஒரு படி நெருக்கமானவள். உடலையும் பகிர்ந்து கொள்பவள். ஆகவே இயல்பாக அகங்கார மோதல்களும் நெருக்கடிகளும் உருவாகின்றன. இரண்டாம் தாரமாக, வைப்பாக வரும் கதை மாந்தர்கள் ஆண்களால் பெரும்பாலும் கவுரவமாக நடத்தப்படுகிறார்கள். கைவிடப்படும் அச்சம் அவர்களை இயக்குகிறது.

‘கிளர்ச்சி’ சுரேஷ்குமார இந்திரஜித்தின் சில கதைகளில் பேசப்படும் உணர்வாக இருக்கிறது. ‘நடன மங்கை’ ஒரு அசைவு கொடுக்கும் கிளர்ச்சியை சொல்கிறது. ‘நடன மங்கைக்கு’ வெகுகாலம் முன் எழுதப்பட்ட கதை ‘இருள்’. அதிலும் ஒரு நடன மங்கை வருகிறாள். அவளுடைய நடனத்தின் போத அணிந்திருக்கும் மெட்டியும், சிலுவையும் கதை சொல்லியை தொந்திரவு செய்கிறது. ‘இடப்பக்க மூக்குத்தி’ கதையில் அந்த மூக்குத்தி அணிந்த பக்கவாட்டு தோற்றம் அவனை கிளர்த்துகிறது. அவள் யாரென வினவும்போது ‘ஆண்களின் ரகசிய வேட்கை’ என்றொரு விடை கிடைக்கிறது. ‘நானும் ஒருவன்’ வேறு வகையான கிளர்ச்சியை, வன்முறை முகிழும் கணத்தை, அதன் கிளர்ச்சியை சொல்கிறது.

சுரேஷ்குமார இந்திரஜித் அரிதாகவே தொன்மங்களை கதையாக்குகிறார். ஒரு திருமணம் அவ்வகையில் மிக முக்கியமான முயற்சி. காரைக்கால் அம்மையார் தொன்மத்தையும் ஒரு கதையில் பயன்படுத்துகிறார். தொன்மம் வழியாக ஒரு மனமாற்றம் நிகழ்கிறது. அவ்வகையில் அவருடைய ‘விரித்த கூந்தல்’ ஒரு அமானுஷ்யமான கதை. பாஞ்சாலியை பற்றிய நேரடியான தொன்மக் கதையாக இல்லாமல் ஒரு தொல் படிமத்தை சுரேஷ்குமார இந்திரஜித் அதிர்ச்சியோடு எதிர்கொள்ளும் தீவிரமான தருணம் பதிவான கதை.

சுரேஷ்குமார இந்திரஜித்தின் பகடி முகம் அவ்வளவாக இதுவரை அங்கீகரிக்கப் பட்டதில்லை. ‘அறிக்கை’ ‘பின் நவீனத்துவவாதியின் மனைவி’ ‘கமூரி ரிடாகவின் பேட்டி’ போன்ற கதைகள் நல்ல பகடி கதைகளும் கூட. இதைத்தவிரவும் ஆங்காங்கு நுட்பமான நகைச்சுவையை அவர் கதைகளில் கையாள்கிறார். ‘ரகசிய வார்த்தை’ கதையின் முடிவு அப்படியான புன்னகையை தருவிக்கும் தருணம். ‘பீகாரும் ஜக்குலினும்’ கதையில் ஜெர்மானிய தம்பதியர்களைப் பார்த்து நீங்கள் சார்த்தர் பிறந்த நாட்டிலிருந்து என்று தன் அறிவை பாவனையாக காட்டிக்கொள்வது ஒரு வேடிக்கையான தருணம். ‘பறக்கும் திருடனுக்குள்’ கதையில் திருடன் தன்னை அரசனாக கற்பனை செய்துகொண்டு அவை நடத்துவான். ‘உனக்குத் தப்பிப்பதற்குரிய திறமை போதாது. உனக்குத் திருடுவது தவிர வேறு தொழிலும் தெரியும்.எனவே திருடுவது தவறு’ என்பதாக பிடிபட்ட இன்னொரு திருடனைப் பார்த்து தீர்ப்பளிப்பான். ‘அமானுஷ்ய பயம் எதுவும் கிடையாது. ஆனால் நாய்களைப் பற்றிய பயம் யதார்த்தமானது என்பதால் அது மட்டும் உண்டு.’ (பூமி) என்ற வரி ‘ அவருடைய கூர்மையான அங்கத உணர்வுக்கு உதாரணம்  அவருடைய ‘மட்டாஞ்சேரி சிறீதரன் மேனன்’ ஊரெல்லாம் கடவுளாக வணங்கபப்டும் ஒருவனுக்கு யார் கடவுளாக தென்படுகிறார் என்பதை சொல்லும் கதை. ஒரு தீர்மானமான உறவுமுறையை தலைகீழாக்குவதன் வழியாக அங்கே ஒரு பகடி உருவாகிறது. எந்த ஒன்றையும் அப்பட்டமாக நுணுக்கமாக சித்தரிக்கும்போதே அதன் அபத்தம் வெளிப்பட்டு இயல்பாக கேலிக்கு உள்ளாகும் எனும் நம்பிக்கை தனக்குண்டு என்று நேர்காணலில் சொல்கிறார். இந்த உத்தியே ஒரு திரைக்கதை, ஒரு சாமியார் சடங்கு, பின் நவீனத்துவ கோட்பாடு விளக்கம் ஆகியவை கேலிக்குரியதாக ஆவதற்கு காரணமாகிறது.

பல கதைகள் மொத்த வாழ்வையும் ஆறேழ பக்கங்களில் சாரம்சப்படுத்தும் வகையில் எழுதப்படுகிறது. ஒரு முழு வாழ்வையும் சுருக்கி அளிக்கும்போது சிறுகதை அதன் பக்கங்களைக் காட்டிலும் அதிக அடர்வு உள்ளதாக, பிரம்மாண்டமாக விரிவதாக தோற்ற மயக்கத்தை உருவாக்குகிறது. மாபெரும் சூதாட்டம் தொகுப்பிற்கு பின்பான பல தொகுப்புக்களில் பல கதைகளில் இத்தகைய வாழ்க்கை சரிதைத்தன்மையை காண முடிகிறது. அவருடைய கதை சொல்லல் பாணியில் நிகழ்ந்த முக்கிய பரிணாமம் என இதைக் கொள்ளலாம். பீகாரும் ஜாக்குலினும் கதையில் வரும் இந்தப் பத்தி நம் கவனத்திற்கு உரியது. “புத்தரைக் கண்ட, மௌரியர்களைக் கண்ட, அசோகரைக் கண்ட, ஷெர்ஷாவைக் கண்ட பின்னர் வங்காள  நவாபிற்குச் சொந்தமாகி, 1764 ஆம் ஆண்டு நடைப்பெற்ற பக்ஸார் போரில் பிர்டிஷாருக்குக் கை மாறி, தற்போது சுதந்திர இந்தியாவில் உள்ள இந்தப் பூமியில் நான் கைகளைத் தூக்கிக்கொண்டே வெளியே வந்தேன்.” ஒரு பெரும் வரலாற்று பின்புலத்தில் அற்ப செயலை நிறுத்துவது. இந்த யுத்தியின் வழியாக கதைகளுக்கு கூடுதல் அடர்த்தியை அளிப்பது. ஒருவகையில் இந்த வரலாற்று மாற்றங்களை அற்ப செயலுக்கு இணையாக வைப்பதன் வழியே அதன் அதீத முக்கியத்துவத்தை, புனிதத்தன்மையை நிராகரிக்கிறார். கையைத் தூக்கிக்கொண்டு வெளியே வருவது போன்ற செயலைப் போன்றதுதான் போரும் என்கிறார்.

 

சுரேஷ்குமார இந்திரஜித்தின் சிறுகதை தொகுப்புக்களுக்கான முன்னுரைகள் கூர்மையானவை. தன் கதைகளில் தான் என்ன நிகழ்த்த முயல்கிறேன் என்பதைப் பற்றிய தெளிவு அவருக்கு எப்போதும் உண்டு. கதைகளை வாசித்துவிட்டு முன்னுரையை வாசிக்கும்போது முதல்முறை அவரை வாசிப்பவர்களுக்கு ஒரு பிடி கிடைக்கலாம். அவருடைய படைபூக்கத்தை காணும்போது பணி ஓய்வுக்கு பின் குறுகிய காலத்தில் அதிக கதைகளை எழுதியிருக்கிறார். நானும் ஒருவன், நடன மங்கை, இடப்பக்க மூக்குத்தி ஆகிய தொகுதிகள் 2011 பணி ஓய்வுக்கு பிந்தைய காலகட்டத்தை சேர்ந்தவை. அதேப்போல் அவருடைய படைபூக்கமும் ஒரு ஒரு காலகட்டத்தில் தீவிரமாக இருப்பதாக தோன்றியது. மறைந்து திரியும் கிழவன் தொகுப்பில் அடுத்தடுத்த கதைகள் அபாரமான வாசிப்பனுபவத்தை அளிப்பவை. நடன மங்கையும், இடப்பக்க மூக்குத்தியும் கூட குறுகிய காலத்தில் எழுதியவை.

ஒட்டுமொத்தமாக சுரேஷ்குமார இந்திரஜித் தற்செயல்களின் ஊடாட்டங்களை கதைகள் ஆக்கியவர், புனைவுக்கும் பொய்யுக்கும் உண்மைக்கும் இடையிலான உறவை கதைகளில் கையாண்டவர் எனும் இரு பரவலான சித்திரங்களுக்கு அப்பால் ஆண்- பெண் உறவின் நுட்பங்களை, குறிப்பாக வயோதிகத்தின் உறவு சிக்கலைப் பேசியவர், பிரியம் சுரக்கும் உறவுகளுக்குள் கரவாக ஒளிந்திருக்கும் வன்மத்தை எழுதியவர், குற்றங்களின் உளவியலை எழுதியவர், உன்னதங்களை, தொன்மங்களை தலைகீழாக்கியவர், கனவுகளையும் அவை கலைந்து நிதர்சனத்தை எதிர்கொள்வதைப் பற்றியும் எழுதியவர், வாழ்க்கை சரிதைத்தன்மை உடைய கதைகளை எழுதியவர், இணை வரலாறு கதைகளை எழுதியவர், பகடி கதைகளை எழுதியவர், சாதி மற்றும் ஈழம் குறித்து அக்கறைக்கொண்ட கதைகளை எழுதியவர் என அவருடைய பல்வேறு முகங்கள் கொண்டவரும் கூட. பொதுவாக மனிதர்களின் உன்னதங்களின் மீது அவநம்பிக்கை கொண்ட கதைசொல்லி என்றாலும் மானுட நேயத்தையும், அன்பின் வெம்மையையும் சுமந்து செல்லும் கதைகளையும் அவர் எழுதி இருக்கிறார்.

அவருடைய அனைத்து சிறுகதைகளையும் குறைந்தது இருமுறை வாசித்தவன் என்ற முறையிலும், அவருக்காக இந்த ஆண்டு பதாகை சிறப்பிதழை கொணர்ந்தவன் என்ற முறையிலும் அவருடைய சிறுகதைகள் குறித்து தீவிர இலக்கிய பரப்பிலேயே கூட சரிவர விவாதங்கள் நிகழவில்லை எனும் ஆதங்கம் எனக்கு உண்டு. இந்த தேர்ந்தெடுத்த சிறுகதை தொகுப்பு அவருடைய பன்முகத்தை வெளிக்கொணரும் நோக்கில் தொகுக்கப்பட்டுள்ளது. இதற்கப்பால் பல சிறந்த கதைகளை அவர் எழுதி இருக்கிறார். புதிய தலைமுறை வாசகனாக, எழுத்தாளனாக என்னை ஈர்த்த கதைகளை தொகுத்திருக்கிறேன். என்னைப் போன்ற புதிய தலைமுறை வாசகர்கள் அவரை கண்டுகொள்ளவும், வாசிக்கவும், அவருடைய முக்கியத்துவத்தை உணரவும் இத்தொகுதி உதவும் என நம்புகிறேன். இந்த வாய்ப்பை நல்கிய எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் மற்றும் காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

சுனில் கிருஷ்ணன்

[email protected]

 

 

முந்தைய கட்டுரைச. துரை- ஐந்து கவிதைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50