மென்மழை நின்றுகொண்டிருந்த குருக்ஷேத்ரக் களத்தில் கௌரவப்படைகள் அணிவகுத்து சூழ்கை அமைத்தன. படைக்கலங்களும் தேர்களின் உலோகமுகடுகளும் ஒளியென்றும் மெல்லிருளென்றும் மாறி மாறி விழிமாயம் காட்டிய நீர்த்திரைக்குள் மின்னி திரும்பின. புரவிகளின் குளம்படி ஓசைகளும் சகட ஒலிகளும் ஆணைகளின் பொருட்டு எழுந்த கொம்பொலிகளும் சங்கொலிகளும் நீர்த்திரையால் மூடப்பட்டு மழுங்கி கேட்டன. கூரையிடப்பட்ட காவல்மாடங்களில் எழுந்த முரசொலிகள் இடியோசைகளுடன் கலந்து ஒலித்தன.
முரசுத்தோற்பரப்பு சாரல் ஈரத்தில் மென்மை கொள்ளாதிருக்கும்பொருட்டு காவல் மாடத்தில் அனல்சட்டிகளை கொளுத்தி தோலை காய்ச்சிக்கொண்டிருந்தார்கள். மழைக்குள் நூற்றுக்கணக்கான காவல் மாடங்களில் எரிந்த பந்தங்களின் ஒளி எரிவிண்மீன் நிரைகள் எனத் தெரிந்தது. அனலொளி மழைச்சாரலில் குருதிபோல் கரைந்து பரவுவதுபோலத் தோன்றியது. படைகள் இடம்மாறிக்கொண்டிருக்கையில் நின்றுகொண்டிருப்பன போன்றும் சென்றுகொண்டிருப்பன போன்றும் விழிமயக்கு ஏற்பட்டது. ஒட்டுமொத்தமாக நோக்கும்போது கட்டற்ற முட்டிமோதலாகவும் ஒவ்வொன்றும் சென்றமைகையில் முன்னரே வகுக்கப்பட்ட வடிவம் என்றும் தன்னை காட்டியது படை. பெருந்திரள் வடிவம் கொள்கையிலேயே அது இயற்கை என்று ஆகி இயற்கையின் இயங்குமுறையையே தானும் கொண்டுவிட்டிருந்தது.
விருஷசேனன் தன் புரவியிலிருந்து இறங்கி கர்ணனின் குடில் வாயிலில் காத்து நின்றான். மழையின் ஈரத்தில் தரையில் காலடித்தடங்கள் நீர்ச்சுவடுகளாக மாறி ஒளிகொண்டிருந்தன. அங்கிருந்த புரவிச்சுவடு சல்யருடையது என அவன் எண்ணினான். அவர் வந்து சுழன்று நின்று இறங்கிச்சென்றதை அதிலேயே பார்க்கமுடிந்தது. அப்பகுதியில் வயல்சேறென நிலம் கலக்கப்பட்டிருந்தது. எடைமிக்க குறடொலி கேட்டது. அவன் நன்கறிந்த ஓசை. மெல்லிய மெய்ப்புடன் அவன் உடல்நீட்டி நின்றான். கவசங்கள் அணிந்து முழுதணிக்கோலத்தில் குடிலில் இருந்து வெளிவந்த கர்ணன் கிழக்கு நோக்கி கைகூப்பி வணங்கிவிட்டு மைந்தனை அணுகினான். இயல்பாக அவன் கை வந்து விருஷசேனனின் தோளில் பதிந்தது.
விருஷசேனன் உளஎழுச்சி அடைந்து மெல்ல நடுக்கம் கொண்டான். சிறு குழந்தையென அவன் தோள்கள் முன் வளைந்தன. கர்ணன் அவனைத் தொடுவது மிக அரிது. இளநாட்களில் நீர்விளையாடும்பொழுது அவன் மைந்தர்களை தூக்கி வீசுவதுண்டு. கானாடச் செல்கையில் மரங்களில் கை பிடித்து ஏற்றுவதுண்டு. அம்பு பயில்கையில் பிழை நிகழும்போது மட்டும் கண்களில் சிறு சினம் தெரிய எழுந்து வந்து கைபற்றி வில்லுடன் சேர்த்து திருத்துவது வழக்கம். அத்தனை தொடுகைகளும் விருஷசேனனுக்கு நன்கு நினைவிருந்தன. ஒருகணத்தில் அத்தனை தொடுகைகளுமே நினைவிலெழ அவன் மேலும் மேலும் அகம் நெகிழ்ந்தபடியே சென்றான்.
கர்ணன் அவனை நோக்கி வந்தபோது முகத்தில் இருந்த உணர்வு அவன் எதையோ சொல்லப்போவதுபோல் தோன்றியது. ஆனால் தோளைத் தொட்டதுமே அனைத்துச் சொற்களையும் மறந்துவிட்டவன்போல அவன் முன்னால் சென்றான். விருஷசேனன் தொடர்ந்தான். கர்ணன் தன் புரவியை அணுகி அதன் கழுத்தை தடவிவிட்டு கால் வளையத்தில் மிதித்து மறுகால் சுழற்றி அமர்ந்தான். மீண்டும் அவன் எதையோ சொல்லப்போகிறான் என்ற எண்ணத்தை விருஷசேனன் அடைந்தான். ஆனால் கர்ணன் புரவியை மெல்ல தட்டி செல்லும்படி பணித்தான்.
மழை ஓங்குவதுபோல் ஓசை எழுந்தது. ஆனால் விசையுடன் தெற்கிலிருந்து வீசிய காற்று மழைப்பிசிறுகள் அனைத்தையும் ஒற்றை அலையென அள்ளிச் சுழற்றி வடமேற்காக கொண்டு சென்றது. பின்னர் ஒரு குளிர்காற்று மேலும் சுழல்விசையுடன் வந்து அனைத்துக் கொடிகளையும் படபடக்கச்செய்து கூடாரத்தோல்கள் உப்பி எழுந்து உடனே வளையும்படிசெய்து, தேர்மணிகளையும் புரவிகளின் கவசங்களையும் மணிக்குச்சங்களையும் குலுங்க வைத்து கடந்து சென்றது.
காற்றில் ஒரு நீர்ப்பிசிறுகூட இல்லை என்பதை விருஷசேனன் கண்டான். அங்கு அதுவரை இளம்ழை பெய்ததற்கான தடயங்கள் தரைச் சேற்றில் மட்டுமே இருந்தன. புரவிக்குளம்புகள் பதிந்த பள்ளங்களில் தேங்கிய நீர் மான்விழிகள் போல் ஒளி கொண்டிருந்தது. பல்லாயிரம் விழிகள் எழுந்து குருக்ஷேத்ரம் அவர்களை நோக்கிக்கொண்டிருந்தது. மழை நின்றதும் அனைத்து ஒலிகளும் கூர்மை கொள்ள அதுவரை அங்கிலாத பெரும் படையொன்று வந்து தன்னை சூழ்ந்துகொண்டதைப்போல விருஷசேனன் உணர்ந்தான். அந்த ஒலியே குளம்புக்குழிவிழிகளில் நீரின் நலுங்கல் என உள்ளம் மயங்கியது.
கர்ணன் புரவியைத் தட்டி ஊக்கி மென்நடையில் மரப்பலகை பாதை மீது எழுந்தான். நோக்கியிருக்கவே அனைத்து வண்ணங்களும் மேலும் துலங்கி புடைப்புகொண்டு எழுவதுபோல் விருஷசேனன் உணர்ந்தான். காட்சி கூர்கொண்டபோது அதையே உள்ளமென போலிசெய்துகொண்டிருந்த அகமும் தெளிவடைந்தது. சூழ நோக்கியபோது யானைகளின் கவசங்களும் முகபடாம்களும் சுடர் கொண்டிருந்தன. கொடிகள் முற்றாக ஈரத்தை இழந்து படபடத்தன. படைவீரர்கள் அந்தக் காற்றால் அதுவரை இருந்த உளஅமைப்பு மாறுபட நகைத்தபடியும் சிறுசொற்கள் பேசிக் களியாடியபடியும் சென்றுகொண்டிருந்தனர்.
அவன் அண்ணாந்து நோக்கியபோது வானம் மிக மெல்ல பிளவுபடுவதை கண்டான். கருமுகில் திரை விலகி வானின் பெரும்பகுதி மேற்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. கிழக்கு வானில் திறந்த பெருவாயிலினூடாக கண்கூசாத இனிய ஒளி குருக்ஷேத்ரத்தின்மேல் பெய்தது. படைகளின் வியப்பொலியைக் கேட்டு அவன் திரும்பிப்பார்த்தபோது ஒரு கணம் மெய்ப்பு கொண்டு அறியாது கடிவாளத்தை இழுத்தான். அவன் புரவி தயங்கி நிற்க கர்ணன் மட்டும் காற்றில் மிதந்து செல்வதுபோல் மரப்பலகை பாவிய பாதையில் சென்றான்.
கர்ணன் மீது விண்ணிலிருந்து பொன்னிற ஒளி ஒன்று இறங்கியிருந்தது. அவன் அணிந்திருந்த கவசங்களும் அணிகளும் விழிமலைக்கும்படி மின் கொண்டிருந்தன. அவன் புரவியின் கடிவாள மணிகளும் சேணத்தின் பித்தளை வளையங்களும் அது அணிந்திருந்த வெள்ளி அணிகளும்கூட பொற்சுடர் பெற்றிருந்தன. புரவியின் கால்கள் நிலம் தொடுவதுபோல் தோன்றவில்லை. அவை காற்றைத் துழாவி சென்றுகொண்டிருந்தன. முகில் ஊர்வது போல் அவன் படைகளின் நடுவே சென்றான்.
படைவீரர்கள் வாழ்த்தொலி எழுப்பவில்லை. ஆனால் இயல்பாக அவர்கள் வாயிலிருந்து எழுந்த வியப்பொலிகளும் மகிழ்ச்சிக் கூச்சல்களும் கலந்து பெரும் கார்வையென கர்ணனை சூழ்ந்திருந்தது. விருஷசேனன் நடுங்கிக்கொண்டிருந்தான். கண்களிலிருந்து நீர் வழிந்து மார்பில் சொட்டியது. இருகைகளையும் கூப்பி நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.
கூடி நின்ற படைவீரர்களில் எவனோ ஒருவன் தன் வேலை தூக்கி வானிலெறிந்து பற்றி வெடிப்புறு பெருங்குரலில் “மணிக்குண்டலன் வாழ்க! கதிர்க்கவசத்தோன் வாழ்க! விண்ணூர்பவன் மைந்தன் வாழ்க! வெற்றிகொள் வேந்தன் வாழ்க!” என்று கூவினான். “மணிக்குண்டலன் வாழ்க! ஒளிக்கவசன் வாழ்க! கதிர்மைந்தன் வாழ்க!” என்று சூழ்ந்திருந்த கௌரவப்படையினர் கைவீசி ஆர்ப்பரித்தனர். திகைப்புடன் திரும்பி கர்ணனின் உடலை விருஷசேனன் பார்த்தான். சற்று முன் அவன் அணிந்திருந்த அதே இரும்புக்கவசங்களும் வழக்கமான அருமணிக் குண்டலங்களும்தான் தெரிந்தன.
தேவதேவனுக்கு அளிக்கப்பட்ட மணிக்குண்டலங்களும் கதிர்க்கவசமும் மீண்டு வந்துவிட்டனவா? இப்படை வீரர்கள் எதை பார்க்கிறார்கள்? அவன் புரவியைத்தட்டி தந்தையின் அருகே சென்றான். விழிகளால் தந்தையின் உடலையும் சூழ்ந்து அவனை நோக்கி படைக்கலங்களை வீசி துள்ளி குதித்தெழுந்து ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த படைகளையும் மாறி மாறி பார்த்தான். இவர்கள் பார்ப்பதென்ன? இவர்கள் உணர்வதென்ன? ஏன் அதை நான் பார்க்கவில்லை? இவர்கள் பார்ப்பதை பார்க்கும் அளவுக்கு எனக்கு அயல்கை இல்லையா? அறியாமை இல்லையா? அல்லது அது அணுக்கமும் அறிவும்தானா?
பின்னர் நீள்மூச்சுடன் அவன் மெல்ல தளர்ந்து அமைந்தான். ‘ஆம்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டான். மானுடம் எனும் அழியாப் பெரும்திரைச்சீலையில் வரையப்பட்ட கதிர்மைந்தனின் ஓவியத்தை எவர் அழிக்க இயலும்? என்றும் அது அங்குதான் இருக்கும். அதைத்தான் இந்திரன் அச்சுனைக்கரையில் நின்று சொன்னான். அது என்றென்றும் அழியாது அங்கு இருக்கும்.
போர் முனையில் சல்யர் நின்றிருந்தார். தொலைவிலேயே அவரை விருஷசேனன் கண்டான். கைகளை விசையுடன் ஆட்டி ஏவலர்களுக்கும் சூதர்களுக்கும் ஆணைகளை பிறப்பித்துக்கொண்டிருந்தார். படையில் எழுந்த ஆரவாரத்தை அவர் அறியவில்லை. தன்னைச் சூழ்ந்திருந்த அனைவரும் தன் ஆணைகளை முற்றாகவே கேட்பதை நிறுத்திவிட்டு விழிநட்டு நோக்கும் திசையை உணர்ந்தபின்னர் அவர் திகைப்புடன் திரும்பிப் பார்த்தார். கர்ணனைக் கண்டதும் அவர் கையிலிருந்த சவுக்கு மெல்ல தாழ்ந்தது. முதிய முகம் வியப்பில் விரிய வாய் திறந்து கண்கள் நிலைத்தன. கர்ணன் புரவியில் அவரை அணுகும் வரை அவர் சொல்லிழந்து செயலற்று நின்றார்.
கர்ணன் புரவியிலிருந்து கால் சுழற்றி இறங்கியதும் சல்யர் உயிர்கொண்டு சிறிய தாவல்களுடன் அவனை நோக்கி வந்து “பிந்திவிட்டாய்! சற்று பிந்திவிட்டாய்!” என்றார். கர்ணன் “ஆம், மத்ரரே. சற்று பிந்திவிட்டேன். இங்கு விரைந்து வர எண்ணினேன், இயலவில்லை” என்றான். சல்யர் “நீ அணியூர்வலம்போல வந்தாய்… உன் இயல்பாகவே அது ஆகிவிட்டது. நீ அழகன் என அனைவரும் சொல்லிச்சொல்லி உன்னில் ஆணவத்தை ஏற்றிவிட்டனர். அவர்களின் விழிகளுக்கு முன் நடிக்கிறாய்” என்றார்.
கர்ணன் “பொறுத்தருளவேண்டும்” என்று மட்டும் சொன்னான். சல்யர் “ஆயிரம் விழிகளில் ஒருவிழி நச்சுவிழி என்றாலே போதும்… இவர்கள் அத்தனை பேரும் நல்ல உள்ளம் கொண்டவர்கள் அல்ல” என்றபின் மீண்டும் தன்னை தொகுத்துக்கொண்டு “சரி, வெகுவாக பிந்தவில்லை. இன்னும் பொழுதிருக்கிறது. நமது படைகள் ஒருங்கமைந்துகொண்டுதான் இருக்கின்றன. இப்போது எஞ்சியிருக்கும் படைகளில் திறன் மிகுந்த வில்லவர்கள் இருப்பது காந்தாரர்களிடம்தான். அவர்களை நமக்குப் பின்னால் நிறுத்தியிருக்கிறேன். அஸ்தினபுரியின் காலாட்படையினர் நமது நிரையின் இருபுறமும் இரு கைகளென வருவார்கள். உனது மைந்தர் உனக்குப் பின்னால் பிறை வடிவுகொண்டு புறம் காக்கட்டும்” என்றார்.
கர்ணன் “ஆம், தங்கள் ஆணைப்படி” என்றான். சல்யர் “இன்று நம்மை எவரும் நிறுத்தப்போவதில்லை. பாண்டவப்படைகளை ஊடுருவிச் செல்லவிருக்கிறோம். ஐவரும் இன்று அடிபணிந்தாகவேண்டும். அன்றேல் யுதிஷ்டிரனின் தலைகொண்டு மீள்வோம். அர்ஜுனனின் நெஞ்சு பிளந்த பின்னரே அது ஆகுமெனில் அவ்வாறே ஆகட்டும்” என்றார். கொந்தளிப்புடன் கைகளைத் தூக்கி அசைத்து “இன்றுடன் இப்போர் முடிந்தாகவேண்டும். அது நம் கடமை” என்று கூவினார். கர்ணன் “ஆம், அவ்வாறே ஆகுக, மத்ரரே!” என்றான்.
அந்த அழைப்பு சல்யரின் விழிகளில் சிறிய ஒளி ஒன்றை அணையச் செய்வதை விருஷசேனன் கண்டான். சல்யரின் உடலசைவு, பேச்சு, தோற்றம் என எதிலும் கர்ணனின் எந்தச் சாயலும் இல்லை என்றாலும் எவ்வகையிலோ அவர் அவனுக்கு கர்ணனை நினைவுறுத்திக்கொண்டே இருந்தார். அது ஏனென்று அப்போதும் அவனால் உணரமுடியவில்லை. சல்யர் சவுக்கால் தன் தொடைக்கவசத்தை தட்டியபடி ஏவலர்களிடம் “என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள், அங்கே? அனைத்துக் குளம்புகளையும் இறுதியாக சரிபார்த்துவிட்டீர்களா? “என்றார்.
புரவிக்குளம்புகளை தரையிலமர்ந்து நோக்கிக்கொண்டிருந்த ஏவலன் “பார்த்துவிட்டோம், அரசே” என்றான். கர்ணன் இடையில் கைவைத்து நின்று புரவிகளைப் பார்த்து ‘சற்று சிறியவை” என்றான். “ஆம், சிறியவை. ஏற்கெனவே இங்கு கட்டப்பட்டிருந்த புரவிகள் நீண்ட பேருடல் கொண்டவை. அப்புரவிகளால் இந்தத் தேரை மிகுந்த விசையுடன் இழுத்துச்செல்ல முடியும். ஆனால் நெடுநேரம் அவை செல்வதில்லை விரைவிலேயே அவை களைத்துவிடுவதை பார்க்கலாம். ஏனெனில் அவை கடுகிச்செல்பவை. இவை மலைப்புரவிகள். இவற்றால் அந்த அளவுக்கு விரைவுகூட்ட இயலாது. ஆனால் நிகர்நிலத்தில் இன்று அந்திவரை ஒருகணமும் கால்தளராமல் நுரை கக்காமல் தேரை இழுக்க முடியும்.”
“ஏனென்றால் எடைகளுடன் மலையேறிச்செல்லும் தொடைவல்லமை கொண்ட புரவிகள் இவை. என் கைகளில் பிறந்து வளர்ந்தவை. ஒவ்வொன்றையும் கருப்பையிலேயே இலக்கணம் நோக்கி தெரிவு செய்து ஒன்றுடன் ஒன்று இசைவுபடும்படி பயிற்றுவித்து வளர்த்தேன். நோக்குக, என் ஆணை பிறந்ததும் இவ்வேழு புரவிகளும் ஒன்றென்றாகும்! ஒற்றை எண்ணமும் இயல்பும் மட்டுமே கொண்டவை ஆக மாறும். இந்தத் தேர் அவற்றுக்குப் பின்னால் தெய்வங்களால் உள்ளங்கையில் ஏந்திச்செல்லப்படுவது போல செல்லும்” என்றார் சல்யர். உள ஊக்கம் எழ கைதூக்கி “ ஐயம் வேண்டாம், இன்று இந்தக்களத்தில் நானே சிறந்த தேர்ப்பாகன்” என கூவினார்.
கர்ணன் “நன்று, மத்ரரே. இந்நாளில் வெற்றி நம் அரசருடன் நிலைகொள்க!” என்றபடி தேரை நோக்கி சென்றான். விருஷசேனன் சூழ்ந்திருந்த கௌரவப்படையை பார்த்தான். எழுகதிரோன் வடிவத்தில் சூழ்கை அமைக்கப்பட்டிருந்தது. புரவியில் அமர்ந்தவாறே படையின் இரு எல்லைகளையும் பார்க்க இயன்றது. வலது எல்லையில் கிருபர் தன் பின்னால் அஸ்தினபுரியின் படைப்பிரிவுகளுடன் நின்றார். இடது எல்லையில் கிருதவர்மன் யாதவபடைப்பிரிவுகளுடன் நின்றான். இருபுறமும் அஸ்வத்தாமனும் சுபாகுவும் அணிவகுத்து நின்றிருந்தனர். கதிரோனின் நீல மையம் என கர்ணன நின்றிருக்க அவனிலிருந்து எழும் கதிர்களின் வடிவில் கௌரவப்படைப்பிரிவுகள் அமைந்திருந்தன.
விருஷசேனன் துரியோதனன் படைமுகப்புக்கு வந்துவிட்டாரா என்று பார்த்தான். அவர் காலையில் புத்துணர்வுடன் துயிலெழுந்துவிட்டார் என்றும் படைபயிற்சி எடுத்துவிட்டு உணவு அருந்திக்கொண்டிருக்கிறார் என்றும் தந்தையின் குடில் நோக்கிச் செல்லும்போது ஏவலன் சொல்லி அறிந்திருந்தான். புத்துணர்ச்சியுடன் எழுவதா என்று ஒருகணம் தோன்றினாலும் துரியோதனனின் இயல்பை அறிந்திருந்தமையால் அது நிகழக்கூடியதே என்றும் தோன்றியது.
படைசூழ்கை முழுமையடைந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு படைப்பிரிவும் அதற்குரிய இடத்தில் வந்து பொருந்த, தேர்ந்த ஓவியன் தூரிகையில் வண்ணம் தொட்டு வரையும் ஓவியம் உருதிரண்டு முழுமை கொள்வதுபோல் படைசூழ்கை தெளிந்து வந்தது. எத்தனை முறை இப்படி படைசூழ்கைகள் துளிகளென இணைந்து ஒருங்கமைவதை பார்த்திருக்கிறோம் என்று விருஷசேனன் எண்ணிக்கொண்டான். முதல் நாள் படைசூழ்கை அவ்வாறு ஒத்திசைவதைக் கண்டபோது எழுந்த உளஎழுச்சியை நினைவு கூர்ந்தான். அன்று அவன் தேர்ப்பாகனாக இருந்தான். அணிவித்தொருக்கிக்கொண்டிருந்த தேரின் மேல் நின்று படைசூழ்கையை பார்த்தான்.
பல்லாயிரம் மானுடரை அவ்வாறு ஒரு பெரிய போர்ப் பொறியாக ஆக்க முடியும். ஒற்றைச் சொல்லில் இயக்க முடியும். பெரும்பூதம் போல் ஆணைகளுக்கு அது கட்டுப்படும். ஒருகட்டத்தில் ஆணையிடுபவன் உள்ளத்தையே உணர்ந்து பல்லாயிரம் கைகளும் படைக்கலங்களுமாக நின்று போரிடும். எண்ண எண்ண அன்று உள்ளம் கொந்தளித்தது. படைசூழ்கையே மானுடர் வகுத்தவற்றில் தலை சிறந்தது என்று அவன் நூல்களில் பயின்றிருந்தான். மானுடர் குடிகளை அமைத்தனர். குலங்களென திரண்டனர். அரசுகளாயினர். நகரங்களை அமைத்தனர். அவை அனைத்திலுமிருந்து கற்றவற்றைக் கொண்டு படைசூழ்கையை வடிவமைத்தனர். படையில் வெளிப்படும் செயல்கூர்மையும் ஒழுங்கமைவும் மானுடர் கூடிச்செயல்படும் வேறெங்கும் வெளிப்படுவதில்லை.
மானுடர் படைகளில் மட்டுமே முழுமையாக தானற்றவர்களாகிறார்கள். தாங்கள் என்று உணராமல் தன்னை அப்பேருருவென்று முற்றிலும் எண்ணி மயங்குகிறார்கள். படைகளில் தன்னழிவு கொள்ளும் வீரன் புடவியில் தன்னைக் கரைத்து அமரும் முனிவருக்கு நிகரானவன். பிறிதொரு இடத்திலும் அப்பேருருவை அவன் அடைய இயலாது என்பதனால்தான் பெரும்போரில் உயிர் பிழைத்தவர்கள்கூட மீண்டும் போருக்கெழ விழைகிறார்கள். போரை எப்போதும் கனவு காண்கிறார்கள். போரிலேயே மானுடனின் அனைத்து உச்சங்களும் வெளிப்படுகின்றன என்பதனால்தான் கவிஞர்கள் எழுதிய காவியங்கள் அனைத்துமே போரைப்பற்றி அமைந்துள்ளன.
ஆனால் அன்று அந்தப் படைசூழ்கை அவனை சிறிய ஏமாற்றத்தை நோக்கி கொண்டுசென்றது. போர் தொடங்கியதுமே அப்படைசூழ்கை பொருளற்றதாகிவிடுவதை அவன் கண்டான். ஒரு படைசூழ்கையை நிகரான இன்னொரு படைசூழ்கையால் தாக்கமுடியும் என்றால், படைசூழ்கையை தக்க வைப்பதே அதை அமைத்தவர்களின் முழுப்பொறுப்பாக போரின்போது ஆகிவிடுமெனில் அதனால் என்ன பயன்? ஒழுங்கின்மையை படைத்துப் பரப்பியிருக்கும் பிரம்மத்தின் முன் ஒழுங்கு ஒன்றை அமைத்துக்காட்டி தானும் படைப்பாளியே என்று தருக்குகிறான் மானுடன். அல்லது பிரம்மத்தின் பேரொழுங்கிற்கு மாற்றாக தன் சிற்றொழுங்கை முன்வைக்கிறான். ஒழுங்கின்மை என பேருருக் கொண்டெழுந்த மலைகளுக்குக் கீழே சிறிய ஒரு மாளிகையை கட்டுபவன் போல். கட்டற்ற காட்டைத் திருத்தி சதுரக் கழனியாக்குபவன் போல.
அது மானுடனின் எல்லையை மட்டுமே காட்டுகிறது. அதன் செயலின்மை அவன் சிறுமைக்கு சான்று. போர் படைசூழ்கைகளால் நிகழ்வதில்லை. சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் கோடி மானுடரின் உள விழைவுகளால், தெய்வங்களின் ஊடாட்டங்களால், ஐம்பெரும் பருக்களின் ஆடலால், அவையனைத்தையும் ஆட்டுவிக்கும் பிறிதொன்றின் விருப்பத்தால் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அது உள்ளங்கையில் ஏந்தி உற்று நோக்கும் சிறு குமிழி மட்டுமே.
முதல் நாள் போர் முனையில் புலரி எழுவதற்குமுன் அவன் மயிர்ப்புகொண்டு உடல் தசைகள் இறுகி உச்சத்தில் நின்றிருந்தான். எக்கணம் முரசுத்தோலில் கோல் விழும் என அவன் கைகால்கள் வலிப்புற்று நின்றன. இதோ இதோ இதோ என அக்கணம் நீண்டுகொண்டிருந்தது. அங்கு சென்றிருந்த அத்தனை படைவீரர்களும் அவ்வண்ணமே நாண் ஏற்றிய அம்பின் இறுக்கத்துடன் அசைவற்றிருந்தனர் அவன் விழி சுழற்றி நோக்கியபோது அப்பால் பீஷ்மபிதாமக்ர் தேரில் நின்றிருக்கக் கண்டான். அவர் மட்டுமே அந்தக்களத்தில் அச்சூழ்கைக்கு அப்பாலென நின்றிருந்தார். அங்கிருந்த எதையுமே உணராதவர் போல். அப்போரிலேயே ஆர்வமற்றவர் போல்.
அவன் அணிவித்த தேரை ஊர்ந்த கலிங்க நாட்டு படைத்தலைவனாகிய பர்ஜன்யன் “எங்கு நோக்குகிறாய், அறிவிலி?” என்றான். ஒன்றுமில்லை என்பதுபோல் அவன் தலைவணங்கினான். மீண்டும் பீஷ்மரின் முகத்தை நோக்கியபோது அதுவரை எழுந்த உளஎழுச்சி முற்றணைந்து சலிப்பும், பின் சினமும் ஏற்பட்டது. இத்தனை பெரிய உளக்கொந்தளிப்பை எழுப்பி, பல்லாயிரம் பேரில் நிரப்பி, அதைக்கொண்டு அவர்களை தொடுத்து, ஒற்றை விசையென்றாக்கி களத்தில் கொண்டு வந்து நிறுத்தியபின் அதன் தலைமையில் சற்றும் உளம் குவியாத முதியவர் ஒருவரை கொண்டுவந்து நிலைகொள்ள வைத்த அறிவின்மையை அவன் எண்ணி வியந்தான்.
இங்கு நின்றிருக்கும் இப்பல்லாயிரவரின் உணர்வெழுச்சியில் ஒரு துளி கூட அவரை சென்றடையவில்லை. எனில் அவரிலிருந்து ஒரு துளி ஊக்கத்தை கூட இப்படையும் பெற்றுக்கொள்ளப்போவதில்லை. இது ஓர் உரையாடல் என்று அவன் நூல்களில் பயின்றிருந்தான். படையினர் படைத்தலைவனை நடத்துகிறார்கள், படைத்தலைவன் படையினரை ஆள்கிறான். இன்னும் சற்று நேரத்தில் அவர் உடலிலிருந்து அந்த ஆர்வமின்மையை கௌரவப்படைகளும் பெற்றுக்கொள்ளும். அவருடைய சலிப்பே படைகளின் ஒவ்வொரு வாள்வீச்சிலும் ஒவ்வொரு போர்க்கூச்சலிலும் வெளிப்படும்.
அவன் பீஷ்மரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர் ஓர் அடையாளம். இத்தனை பெரிய படையும், இத்தனை உளக்கொந்தளிப்பும் அறுதியாக தோல்வியடையும் என அவர் காட்டுகிறாரா என்ன? அவரை அறியாமல் அவர் ஆழம் அதை முன்னுணர்ந்துவிட்டதா? பர்ஜன்யன் “எங்கு நோக்குகிறாய்? பிறிதொரு முறை புரவிகளின் குளம்புகளை நோக்கு” என்று ஆணையிட்டான். அத்தருணத்தில் அந்த ஆணை அத்தனை உவப்பானதாகத் தோன்றியது. விழிதாழ்த்தி புரவிகளின் குளம்புகளை பிறிதொரு முறை பார்த்தான். அவை பொறுமையிழந்து நிலத்தை தட்டிக்கொண்டிருந்தன. மிக அப்பால் முரசுத்தோல்மேல் கழிகள் அதே போல் பொறுமையிழந்து தொட்டுக்கொண்டிருக்கின்றன.
அவனால் மீண்டும் விழிதூக்கி பீஷ்மரை நோக்காமலிருக்க முடியவில்லை. பீஷ்மரின் வில்லின் நாண் தளர்ந்திருப்பதை அப்போதுதான் பார்த்தான். இன்னமும் வில்லை நாண் இழுத்து பூட்டக்கூட இல்லை இம்முதியவர். இவர் பெருவீரர் என்றே ஆகுக! இக்களத்தில் இவர் எவரும் நிகழ்த்தாத விந்தையை காட்டுவார் என்றே ஆகுக! ஆயினும் இறுதியில் எஞ்சப்போவது இந்த ஆர்வமின்மையே. இத்துளியே இக்களத்தில் கௌரவரை வீழ்த்தும் நஞ்சு. இதையே அவர்கள் அறுதியில் தங்கள் போர்ப்பரிசென பெறுவார்கள்.
இல்லை, இவ்வாறு எண்ணக்கூடாது. இது வீண் எண்ண ஓட்டம். இது தோல்வியை வரிந்துகொள்ளும் முயற்சி. ஆனால் இச்சலிப்பும் அவரிடமிருந்தே வந்தது. விழிகளால் அவரிடமிருந்து நஞ்சை தொட்டெடுக்கிறேன். தன் உடலிலிருந்து அவர் அதை பரப்பிக்கொண்டிருக்கிறார். அத்தருணத்தில் போர் முரசு ஒலித்தது. படைகள் ஒருகணம் திகைத்து அசைவிழந்து நின்றன. எங்கிருந்தோ “வெற்றிவேல்! வீரவேல்! அமுதகலக்கொடி வெல்க! கௌரவப்படை வெல்க!” என்று வாழ்த்தொலி எழுந்தது. மலையிறங்கும் வெள்ளமென கௌரவப்படை பெருகி பாண்டவப்படை நோக்கி சென்றது.
கலிங்கப் படைத்தலைவன் பர்ஜன்யனின் தேரை விட்டு விலகி உடல் குனித்து முன்னேறி வந்த படைகளின் இடைவெளியினூடாக சென்று விருஷசேனன் படைகளின் பின்நிரையை அடைந்தான். அங்கு நின்று நோக்கியபோது அவனுக்கு முன்னால் படைக்கலங்களும் மானுட உடல்களும் புரவிகளும் யானைகளும் தேர்களும் கலந்து கொப்பளித்த பெரும் திரையை பார்த்தான். அதுவரை படையென்றும் போரென்றும் அவன் உருவாக்கிக்கொண்டிருந்த அத்தனை உளஓவியங்களும் கலைந்தன. அவன் முற்றிலும் அறியாத பிறிதொன்று நிகழ்ந்துகொண்டிருந்தது. எவ்வகையிலும் எச்சொற்களாலும் பொருள் அளிக்க இயலாத ஒன்று.
விருஷசேனன் நீள்மூச்சுடன் தன்னைச்சூழ்ந்து முழுமைகொண்டுவிட்ட கௌரவப்படையின் அமைப்பை பார்த்தான். கதிர்முகச் சூழ்கை பழுதற அமைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றியது. முழுப்படையையும் கொண்டு முதல்நாள் பெரும்படை சூழ்கை அமைத்த அஸ்வத்தாமனின் பணி ஒப்பு நோக்க எளிது என்று தோன்றியது. இது இன்னும் கடினமானது. வறுமையில் ஐந்தறைப் பெட்டியில் எஞ்சும் பொருட்களைக் கொண்டு கையளவு அரிசியை களைந்து அடிசில் சமைக்கும் இல்லத்தரசியின் பொறுமை அதற்கு தேவை. அவன் அஸ்வத்தாமனை விழிகளால் தேடினான். அஸ்வத்தாமனின் உருவத்தைக் கண்டதும் முதற்கணம் அவன் உள்ளம் அதிர்வு கொண்டது. அவன் அதில் பீஷ்மரின் அதே உடல் மொழியை கண்டான்.