தோப்பில் – கடிதங்கள்

அஞ்சலி- தோப்பில்

தோப்பில் முகமது மீரானுக்கு ஓர் இணையதளம்

மரியாதைக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

 

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

 

“ஆங்….கேட்டியா பிள்ளே..” எனும் வகையில் உரிமையோடு நம் கையில் தோள்போட்டுக் கதை சொல்லும் யதார்த்தவாதியாகவே நான் தோப்பில், ஆ. மாதவன் மற்றும் நாஞ்சில் ஆகியோரைக் காண்கிறேன்.  “சாய்வு நாற்காலி”யும் அடூரின் எலிப்பத்தாயமும் ஒன்றெனவேத் தோன்றும். நாற்காலியில் சாய்ந்தபடி இருக்கும் போதே உலகம் அசுர வேகத்தில் காலடியில் நழுவிச் செல்வதை அடூரும் தோப்பிலும் சொல்லியிருப்பர். அதிகம் பதிவு செய்யப்படாத இஸ்லாமிய வாழ்க்கையை நம் கண்முன் காட்டிய கலைஞன் தோப்பில்.  எளிய மனிதர்களின் வாழ்வினைச் சொல்லிய தோப்பில் யதார்த்தவாத இலக்கியவாதி.  இவரின் மறைவு என்போன்ற தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத வாசகர்களுக்கு பேரிழப்பு.

 

மிக்க அன்புடன்,

பாலா ஆர்

 

அன்புள்ள ஜெமோ

 

தோப்பில் முகமது மீரான் அவர்களின் மறைவு வருத்தமளித்தது. 1991ல் அவரை நான் சந்தித்திருக்கிறேன். எழுத்தாளர் போலவே தோன்றமாட்டார். ஒரு சாதாரண வியாபாரி போலவே இருப்பார். நெல்லை – குமரி வட்டாரத்தமிழ் பேசுவார். இயல்பான நகைச்சுவை ஒன்று அவரிடம் உண்டு.

 

நான் அவரைச் சந்தித்தபோது அப்போது உருவாகிக் கொண்டு வந்த வஹாபிய தீவிரவாதம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அது மிகவும் கவலைக்குரியது என்று சொன்னார். இஸ்லாமிய சமூகம் வியாபார சமூகம். வியாபாரம் மற்றசமூகங்களை சார்ந்து நடப்பது. இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தும் மதத்தீவிரவாதம் இஸ்லாமியரின்  பொருளாதாரத்தின் முதுகெலும்பை முறிக்கும் என்று சொன்னார். பழமைவாதம் ஆபத்தானது. அடிப்படைவாதம் அதைவிட ஆபத்தானது என்பது அவருடைய கருத்தாக இருந்தது.

 

அவருக்கு தமிழிலக்கியத்திலுள்ள பெரும்பாலான எழுத்துக்களைப்பற்றிய அறிமுகம் இல்லை என்பது தெரிந்தது.  அவர் தான் எழுதும் கதைக்களத்தைப்பற்றியே தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார். அவருடைய அஞ்சுவண்ணம் தெரு நாவலை பிற்பாடு படித்தபோது அவர் சொன்னவைதான் அதில் எழுதப்பட்டுள்ளன என்று புரிந்துகொண்டேன்

 

எம்.மாரிமுத்து

 

அன்புள்ள ஜெ

 

தோப்பில் முகமது மீரான் அவர்களின் மறைவு துயரளிப்பது. அவர் இடதுசாரிப் பார்வைகளை இஸ்லாமிய சமூகத்துடன் உரையாடவைக்கும் ஒருவராக இருந்தார். அவர் உறுதியான இஸ்லாமியர் என்றாலும் இடதுசாரிகளின் மனிதாபிமானப்பார்வையையும் ஏழைகளை சார்ந்த அரசியலையும் விரும்பியவர். இன்றைக்கு கேரளத்தில் அமைச்சர்களும் பங்குகொள்ள அவருக்கு அஞ்சலிக்கூட்டம் நடக்கிறது என்றால் அதற்குக் காரணம் அதுதான். இங்குள்ள இஸ்லாமிய எழுத்தாளர்கள் பொதுவாக திராவிட இயக்க ஆதரவாளர்கள். மீரானுக்கு அவர்களைப்பற்றி பெரிய மதிப்பு இருக்கவில்லை. திராவிட இயக்கத்தவர் இந்து மதத்தை  விமர்சிப்பதையும் அதை இஸ்லாமியர் மேடையில் சொல்வதையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. மீரான் அவுட்ஸ்போக்கன் என்று சொல்ல்லாம். பஸ்ஸில் சந்தித்தால்கூட உரக்க வெளிப்படையாகப் பேச ஆரம்பிப்பவர்

 

எம். ராதாகிருஷ்ணன்

தோப்பில் முகமது மீரான், கருத்துச்சுதந்திரம்

பேருந்தில் தோப்பில் முகமதுமீரான்..

அஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்

சிறுபான்மையினர் மலர்கள்

தமிழில் சிறுபான்மை இலக்கியம்

முந்தைய கட்டுரைநீதிக்கான சோதனை
அடுத்த கட்டுரைச. துரை- ஐந்து கவிதைகள்