ஊட்டி காவிய முகாம் – சந்திப்பு ஒரு கடிதம்

ஊட்டி குருநித்யா ஆய்வரங்கு- மீண்டும் ஒரு நினைவுத் தொகுப்பு

அன்பின் ஜெ,

வெள்ளியன்று காலை முதல் அமர்வு துவங்குவதற்கு முன் திருமூலநாதன் கோளறுபதிகத்தின் முதல் பாடலையும் நிறைவுப் பாடலையும் (அவருக்கேயுரிய கனமான, கணீர் குரலில்) பாடி முடித்தபின் (அரசாள்வார் ஆணை நமதே)  ஒரு நமட்டுச் சிரிப்பு அவரிடமிருந்து வெளிப்பட்டது. நான் யூகித்த காரணம் சரியே – அவருக்கும் அன்று தளத்தில் வெளியான வாட்ஸப் வரலாறுநினைவிற்கு வந்திருக்கிறது. அப்புறம் அதைப் பற்றிய ஒரு சிறு உரையாடல். உண்மையில் உங்கள் வாசகர்களுக்கும், குரு நித்யா அமர்வுகளுக்கும் இந்த நிகழ்ச்சி ஒரு முக்கியமான உரைகல் என்றே நினைக்கிறேன் – அன்று வெளியான உங்கள் இடுகைகள் வரை படித்திருந்தாலும் தங்களிடமும் தாங்கள் பங்கேற்கும் (முக்கியமாக இது போன்ற ‘பட்டறை’ நிகழ்வுகளிலும்) நிச்சயம் தாங்களும் கற்றுக் கொள்வதற்கு இன்னும் இருக்கின்றன என்றே கண்களையும் காதுகளையும் திறந்து வைத்துக் காத்திருப்பது – இது முக்கியமானதொரு அடையாளம்.

நான் தனிப்பட்ட முறையில் எந்தவொரு அமர்விலும் முன்னிலை வகிக்கவில்லையெனினும் இம்மூன்று நாள்களில் கற்றுக்கொண்டதையும் கவனித்ததையும் கீழ்க்கண்டவாறு தொகுத்துக் கொள்கிறேன்:

இடர்களின்றி சிந்திக்கும் முறை: சலியாமல் இதற்கு முயல்வது – நான் தங்களை வாசிப்பதற்கு முன்னோ, இக்கூடுகைகளில் கலந்து கொள்வதற்கு முன்னரோ, சிந்தனை என்பது சற்றே இளகிய தன்மையோடே, பேச்சு வழக்கிற்கும் கூடத் தகுதியற்ற ஒருமையில்லாத மொழியிலேயே இருந்து வந்ததைக் உணர்கிறேன். ஆனால் இன்று என் சிந்தனையோட்டம் நிச்சயம் கூரியதாகவும், பேச்சு மொழி இன்னும் கூர்மையாகவும் மாறியுள்ளதைக் கண்கூடாகக் உணர முடிகிறது.

விவாதிக்கும்/உரையாடும் முறை: ஞாயிறன்று நிகழ்ந்த உபநிஷதங்கள் குறித்த உரையாடலில் நீங்கள் உதாரணங்களோடு வலியுறுத்திச் சொன்னது இது. உரையாடலின் பேசுபொருள் குறித்து பெரும்பாலான (~அனைத்து) கேள்விகளையும் கீழ்க்கட வகையில் நிச்சயம் கேட்கவியலும்:
1. ‘நீங்கள் சொன்னது இது’
2. ‘நான் இதன் மூலம் புரிந்து கொண்டது/உணர்வது இது’
3. ‘எனவே இது குறித்து எனது கேள்வி இது’

இப்படிப்பட்டச் சட்டகங்கள் வழியே உரையாடும்போது நேரம் வீணாகாது; உரையாடல் தொய்வடையாது; எளிதில் சலிப்புத் தட்டாமலுமிருக்கும்.

கதைகளை கவனிக்கும் முறை: ‘குழந்தை’ கதைகளில் கூட அசோகமித்ரன் கதைகளில் வரும் (நகரத்து, அடம்/பிடிவாதம் ஏறிய) குழந்தைகளுக்கும் கு.அழகிரிசாமி/கிருஷ்ணன் நம்பி கதைகளுக்கும் இருக்கும் வித்தியாசம்.
கதைகளின் பின்புலத்தை மனத்தில் கொண்டே வாசிப்பது/விவாதிப்பது : ‘என்னைத் திருப்பி எடு’கதையில் (அ.மு. கதை – மாரிராஜ் அமர்வு) முதல் வாசிப்பில் குரூரமாகவும் துரோகமியற்றுபவளாகவும் தென்படும் காதலி, உண்மையில் உறவுகள் நாள்தோறும் நிறம்மாறும் அமெரிக்கப் பின்னணியில் வைத்துப் பார்க்கையில் அவள் செய்வது மிக சாதாரண ஒன்றாகவும் அடுத்த வாரமே அந்தக் காதலனிடமே திரும்பி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பதும் தெளிவாகிறது (அதனாலேயே அசோகமித்ரனின் ஐநூறு கோப்பைத் தட்டுகள் இதனுடன் பொருந்தக்கூடிய கதையன்று என்பதும் தங்கள் விளக்கம்).

விவாதம் கதை மையத்திலிருந்து விலகாமலிருப்பது: நீங்கள் எப்போதும் சொல்லும் உதாரணம் – ‘இது தொடர்பான ஒரு விஷயம்/சம்பவம்/என் நினைவு’ என்று சொல்லி கதைக்கும் விவாதத்திற்கும் சற்றும் தொடர்பற்றவறைப் பேசுவது (பேசுபவருக்கு அது ஏதோ விதத்தில் சுவாரசியம்; அவ்வளவே)

கதைகளை மதிப்பிடும் முறை: நபக்கோவின் சிக்கலான சம்பவங்கள்/தொடர்புகளிருக்கும் சிறுகதைகள் வாசிப்பவரிடம் ஏதோ ஒரு புதிரை இனங்காணும்/அவிழ்க்கும் வகையில் அவரது தனிப்பட்ட ‘ஈகோ’வைத் திருப்திப்படுத்துகிறதேயன்றி தன்னியல்பில் முகிழ்ந்து வரக்கூடிய சிறுகதைகளாக இல்லை. நபக்கோவின் சிறுகதைகளைத் தனக்கு உவப்பானதாக சுஜாதா குறிப்பிட்டது ஒரு தனி விவாதம் வைக்குமளவு முக்கியமான/சுவாரசியமான விஷயம்.

மேற்சொன்ன உதாரணங்களை வலிந்து பின்பற்றும் தமிழ் சிறுகதைகளுக்கு பதிலாக அசல் மர்மங்களே தமிழ் வரலாற்றில் தொடர்ச்சியாக இருப்பது – பாரதியாரின் வாழ்க்கையில் வரும் ஆவுடையக்கா போன்றவர்கள் ஒரு காலகட்டத்திற்குப் பின் திடீரென்று வரலாற்றில் மறைந்து விடுவது – இது போன்றவை இயல்பிலேயே புதிர்த்தன்மை கொண்டவை, எழுதத் தகுந்தவை.

‘லெனினை வாங்குதல்’ போன்ற அமெரிக்காவல்லாத (பல்கேரிய) சிறுக்தையாசிரியர்களால் எழுதப்படும் சிறுகதைகள் அதன் அதீதமான ஒருபக்கச்சார்பால் (இடதுசாரிகளை நக்கலடிப்பது) ‘நியூயார்க்கர்’ போன்ற அமெரிக்க நாளிதழ்களால் பெரிதும் விதந்தோதப்படுவதும் அமெரிக்க பொதுபுத்தியை மிக மென்மையாக விமர்சிக்கும் ஒரு வரிகூட அக்கதையின் பிரசுரத் தேர்வைத் தடுத்துவிடக்கூடிய அபாயமிருத்தலும்.

கவிதைகளின் சமீபகாலப் போக்கு – உயிரெழுத்து உள்ளிட்ட சிறுபத்திரிக்கைகள் ஒவ்வொன்றும் 25க்கும் மேற்பட்ட கவிதைகளைப் பிரசுரித்தாலும் அவை பெரும்பாலும் ஒருவித வறட்சித் தன்மையோடே சில ‘வார்ப்புரு’ விஷயங்களை மட்டுமே பேசும் (மது, பாலியல், அனைத்தின் மீதான நம்பிக்கையின்மை) கவிதைகள் மலிந்திருப்பதும் ஒரு கவிஞன் தான் மட்டுமே எழுதக்கூடிய கவிதைகளை எழுதாமலிருப்பது. இதற்கு மாறாக மரபுக் கவிதைகள் நெடுங்கலம் உயிர்ப்போடிருப்பது.

அறிபுனைக் கதைகளை தமிழில் வளர்த்தெடுக்க நீங்கள் பரிந்துரைக்கும் முறை – நூறு சிறந்த அறிபுனைக் கதைகளைப் (ஆங்கிலம் வழியாக) பற்றி விவாதித்து அதை ஒவ்வொருவரும் கட்டுரையாக்குதல் அறிபுனைக் கதைகளுக்கான வெளியை அதிகரிக்கும். அறிபுனைக் கதைகள் என்று வகைமைப்படுத்தப்பட்ட சுஜாதாவின் பெரும்பாலான சிறுகதைகள் நிகழ்காலத் தொழில்நுட்பத்தை எதிர்காலத்திற்கு நீட்டித்து அதன் கடைசி வரி/பத்தி திருப்பத்தை நோக்கி எழுதப்பட்ட ‘த்ரில்லர்’ வகைக் கதைகளே.

மலையாளத்திற்கும் தமிழுக்குமான ஒட்டு உறவாடல்கள் (பெற்றோர் வழியாக மலையாள-தமிழ் குடும்பங்களில் புழங்கிய எனக்கு இது பெரும் சுவாரசியமளிக்கக் கூடிய, வசீகரிக்கும் ஒன்று), பழமொழிகள், கம்பராமயணத்தின் பல (செவ்வியல்) சொற்கள், சொல்லாட்சிகள் தமிழைவிடவும் மலையாளத்தில் இன்னும் பரவலாக பேச்சு மொழியில் புழங்குதல்.

லகுலீசப் பாசுபதம் புத்தக அறிமுகத்திற்குப் பின் எந்தவொரு தமிழக பேராசிரியரை விடவும் சரளமாக, authentic-ஆக தன் நினவிலிருந்து சண்டிகேஸ்வரர்/சண்டேஸ்வரர் தொடர்பான ஒற்றுமை/வேற்றுமைகளை உதாரணம் காட்டி உரையாடிய சீனுவின் மேதைமைத்தந்தை அடிக்கோடிட்டது.

சுசித்ரா போன்ற அறிவியல் தொடர்பான அன்றடப் பணியிலிருக்கும் தமிழ் எழுத்தாளருடன் நாங்களும் நிகழ்வில் கலந்துகொண்டது நல்லூழ் என்றே நம்புகிறேன்.

கூடுகைக்கு வயது இருபத்தியைந்து – ஆனாலும் இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கும் இளமையான வாசகர்கள்(பங்கேற்பாளர்களின் சராசரி வயது 35 வயதுக்கு மிகாது என்பதே என் துணிபு), வம்பாக இல்லாமல் உண்மையிலேயே ஆரோக்கியமான கற்றல் சூழல் நிலவும் கூடுகை, நீங்களே முன்னெடுக்கும் இலகுத்தன்மை தொடர்ச்சியாக பேணப்படுவதை நிச்சயம் ஒரு சாதனையாகவே பார்க்கிறேன்

ஒவ்வொன்றும் அதற்குரிய ஒழுங்குடனும்/இயல்புடனும் நடைபெறுதல் – உணவு பரிமாறப்படும் முறையாகட்டும், இலக்கிய விவாதமாகட்டும், அனைவரும் அனைத்திலும் கலந்து கொள்ள வேண்டும் என்ற உங்களின் கண்டிப்பு (முதல் பார்வைக்கு அப்படித் தெரிந்தாலும் அதன் பின்னிருக்கும் அக்கறை) – இதற்கு ஒரு சிறு உதாரணத்தைக் குறிப்பிட்டால் பொருத்தமாயிருக்கும் – தன் மாமா தவறியதால் வெள்ளியன்று மதியம் அந்தியூர் கிளம்பிய தர்மராஜ் சனியன்று அதிகாலை திரும்பிவிட்டார் என்பதே வாசகர்களும் இதை சரியான வகையிலேயே பார்க்கிறார்கள் என்பதற்கான சான்று.

இரண்டரை நாட்களில் 10 அமர்வுகள் ஆரம்பநிலை (இலக்கிய) வாசகருக்கு குழப்பமோ/மலைப்போ ஏற்படுத்தக்கூடும். நாம் மிகவும் பின் தங்கியுள்ளோமா என்ற எண்ணம் வருவதைத் தவிர்ப்பது சிரமம் என்றே நினைக்கிறேன். நான் 2012இல் முதல் முறை வந்தபோது அவ்வாறே எண்ணி வருத்தப்பட்டேன். ஆனால் ஏழு வருடங்கள் கழித்து (நான்கு கூடுகைகளில் கலந்து கொண்டபின்) நிச்சயம் நான் கடந்து வந்த தூரம், இவ்வகையான அமர்வுகளன்றி சாத்தியப்பட்டிருக்காது என்றே தோன்றுகிறது.

பல வித்தியாசமான புள்ளிகளும் (லகுலீசப் பாசுபதம், உபநிஷதங்கள்), கலையிலக்கியத்தின் பல்வேறு துறைகளும் (கவிதை/சிறுகதை/நாவல்/சிற்பம்/ஓவியம்…) அதன் அதிகபட்ச ஆழத்துடன் அறிமுகமாகக்கூடிய ஒரு மிக முக்கியமான வாய்ப்பாகவே இக்கூடுகைகளை அவதானிக்க முடிகிறது. இதில் கலந்து கொள்ளும் வாசகர்கள் தங்களின் நண்பர்களுடன் (கணவன்/மனைவி/தோழர் – அவர் இலக்கிய வாசகராக இருப்பது மிக முக்கியம்) வரப் பெற்றால் அது அவர்களுக்கு துவக்ககாலக் கூடுகைகளில் ஏற்படும் பதற்றத்தையும் அன்னியப்படுதலையும் குறைக்கும் என்றே நினைக்கிறேன். நாள் முழுவதும் பணிபுரிந்து வீட்டிற்கோ/அறைக்கோ வந்து குடும்பத்தினருடனோ/நண்பருடனோ சற்றே ‘ரிலாக்ஸ்’ ஆவதைப் போல இரவுகளில் தாங்கள் கற்றவற்றை/உணார்ந்தவற்றை விவாதித்துக் கொள்வது இன்னும் சுலபமாகவும் உபயோகமாகவும் அமையலாம். ஆனால் இதனாலேயே புதிய நண்பர்களைத் (சஹிருதயர்களை) தவிர்க்கும் அபாயம் நிகழ்ந்துவிடலாகாது என்பதையும் நினைவில் கொள்வதும் நன்று. இது தொடர்பான என் மற்றொரு அவதானம் – முதலிரண்டு கூடுகைகளில் பங்கேற்கும் சிலர் அமர்வுகளின் கனம் & அடர்த்தி காரணமாக சற்றே ‘lagging behind’ ஆக உணரலாம். ஆனால் 2012இல் நான் முதல் கூடுகையில் பங்கேற்றபோது நான் அப்படி உணர்ந்தபோது எனக்கு நானே சொல்லிக்கொண்டது இதுதான் – இக்கூடுகைக்கும் பிந்தைய நான் அதற்கு முந்தைய என்னை விட நிச்சயம் மேம்பட்ட ஆளுமையாகவே உணர்கிறேன், எனில் அது நான் நுழைந்து வர வேண்டிய ஒரு உருமாற்ற காலகட்டமே என்பதே. மேலும் நான் உணர்ந்துகொண்டது இவ்வாறான கூடுகைகளின் பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் நிச்சயம் ஒரு ‘அவுட்லயர்’ தான்.

கோவையாக இல்லாவிடினும் இந்த அனுபவத்தை ஏதோ ஒரு விதத்திலாவது பதியவேண்டும் என்பதே இக்கடிதத்திற்கான தூண்டுகோல். இது பிரசுரம் கண்டால் மகிழ்ச்சி. இல்லையெனினும் கூடுகையை என்னளவில் தொகுத்துக்கொள்ளக்கூடிய ஒரு வாய்ப்பாக இது அமைந்ததில் திருப்தியே.

இவ்வளவு வாசகர்களின் அறிமுகங்களைச் சாத்தியப்படுத்திய தங்களின் முயற்சிக்கு கோடானுகோடி நன்றிகள்.

அன்புடன்
வெங்கட்ரமணன்.

 

ஊட்டி சந்திப்பு- கடிதம்

குரு நித்யா ஆய்வரங்கு, ஊட்டி – கடலூர் சீனு

ஊட்டி குரு நித்யா இலக்கிய முகாம் பற்றி

ஊட்டி சந்திப்பு -சிவமணியன்

ஊட்டி சந்திப்பு – நவீன்

ஊட்டி- கடிதம்

மலேசியாவிலிருந்து ஊட்டி முகாமுக்கு… – பவித்தாரா

முந்தைய கட்டுரைகோட்டி -கடிதம்
அடுத்த கட்டுரைஊட்டி 2019 – அறிவியல் புனைகதைகள் சார்ந்து நடந்த விவாதங்களின் தொகுப்பு.