ஊமைச்செந்நாய்– 1
ஊமைச்செந்நாய் -2
ஊமைச்செந்நாய் -3
தங்களின் ஊமைசெந்நாய் குறுநாவலை வாசித்தேன்.குறுநாவல் செம்மையாய் இருந்தது.நாவலின் தொடக்கமே, “யானை துப்பாக்கி” என ஆரம்பிக்க மொத்த நாவலுமே துப்பாக்கியும் யானையும் தான் ஆக்கிரமிக்க போகிறது என வாசகனுக்கு முன்னறிவிப்பு அளிக்கிறீர்கள்.
கதையின் நாயகனை ஊமைசெந்நாய் என உருவகப்படுத்த அவன் ஒரிரு இடங்களில் மட்டுமே பேசுவது, சிங்கத்தின் வேட்டை மிச்சத்தை செந்நாய் தின்பது போல்,துரையின் எச்ச உணவுகளை தின்பது நிகழ்த்தி காட்டியுள்ளீர்கள்.
நாவலில் பெண் பாத்திரமாக சோதி மட்டும் வந்திருந்தாலும் துப்பாக்கி,பாம்பு என பலவற்றை பெண்ணுக்கு உவமையாக்கி கதை முழுவதும் பெண்களை உலவவிட்டிருப்பது தங்களின் சிறந்த படைப்யூக்கம்.
துரை ஊமைசெந்நாயை, “நீ வெளளை பெண்ணை புணர்ந்துள்ளயா? என கேள்வி எழுப்பி புணர்ந்திருந்தால் உன்னை கொன்று விடுவேன் என கூறுவதன் மூலம் அவன் தன் இன பெண்களின் காப்பாளன் என்றும் தன் இனம் பிறவற்றுடன் கலக்க விரும்பாதவன் என நிறுவப்பட்டுள்ளான்.
துரை தன் துப்பாக்கியையும் தன் இன பெண்களையும் ஒரு தட்டில் பார்ப்பதாகவும்,பாம்பையும் சோதியையும் ஒரு தட்டில் பார்ப்பதாக, என் துப்பாக்கியில் கைவைத்தால் கொன்று விடுவேன் என்றும் வெள்ளை பெண்ணை புணர்ந்தால் கொன்று விடுவேன் என்பதும்,பாம்பை கையில் வைத்து விளையாடி கொல்வதும், சோதி பயன்படுத்திய பின் அடித்து விரட்டுவது என கொள்ளலாம். துரை அவன் சமூகத்தில் அடிமையாய் நடத்தப்பட்டான் என கூறுகிறான்.அதற்கு காரணமாய் அவன் சமூக பெண்கள் அவனை பார்க்கும் பார்வையை கூறுகிறான். இதன் மூலம் பெண்கள் சமூக படிநிலைகளை நிர்ணயிப்பர்களாகிறர்கள். இது ஆங்கில சமூகத்துக்கு மட்டுமே பொருந்தும் போல. தற்சமயம் இது இந்திய சமூகத்திலும் நடைப்பெறுகிறது என நினைக்கிறேன்.
இறுதியில் தன் சாவின் மூலம் துரைக்கு நரகத்தை அளிப்பது முன்னரே நாவலில் கூறப்பட்டுள்ளது.
சாவின் மூலம் மிருகம் மனிதனை வென்று விடுகிறாது என கூறுவது,கொம்பனின் சாவையும் ஊமைசெந்நாயின் சாவும் பிணைக்கப்படுகிறது.
கதையில் காட்டின் வர்ணனை என்னை அங்கே கொண்டுபோய் நிறுத்தியது.
மணி பாபு
அன்புள்ள ஜெ
நான் உங்கள் நீண்டநாள் வாசகன். ஆனால் ஊமைச்செந்நாய் நாவலை இப்போதுதான் வாசிக்கிறேன். தமிழ்ச்சிறுகதைகளில் இதற்கு ஒரு முக்கியமான இடம் உண்டு என நினைக்கிறேன். 90களுக்குப்பின் உலக அளவில் இலக்கியத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களை உணர்ந்தவர்களால்தான் இச்சிறுகதையை சரிவர உள்வாங்கிக்கொள்ள முடியும். அது வரை இலக்கியச்சிறுகதை என்பது அடர்த்தியானதும் நுட்பமானதும் ஆக இருக்கும் என்பதுதான் பொதுவான எண்ணம். இலக்கியவாசகர்கள் பொதுவாகச் சுவாரசியத்தை எதிர்பார்ப்பதில்லை. சுவாரசியமானவை மேலோட்டமானவை என்ற எண்ணமும் அவர்களுக்கு உண்டு.
தொண்ணூறுகளுக்குப்பின் இலக்கியத்தில் இத்தகைய நம்பிக்கைகள் இல்லாமலாயின. ஏனென்றால் திடீரென வாசிப்புக்கு ஏராளமாக கிடைக்க ஆரம்பித்த்து. கதை என்றால் அது சுவாரசியமாக இருந்தே ஆகவேண்டும் என்று ஒரு நிலை வந்தது. ஆழம் எல்லாம் அதற்குப்பின்னர்தான் முக்கியமானவை. [சிலர் இங்கே சுவாரசியமான கதைகளைக்கூட மொழியாக்கத்தில் படிக்கமுடியாதபடி சிக்கலாக்கி அளிக்கிறார்கள். அதையும் சொல்லியாகவேண்டும்] ஆகவே துப்பறியும் கதை, வேட்டைக்கதை, பேய்க்கதை என எல்லா வடிவங்களிலும் இலக்கியக்கதைகள் வரத்தொடங்கின. அந்த ஃபார்மாட்டுகளை எடுத்துக்கொண்டு சுவாரசியமான கதைகளைச் சொல்லி கூடவே ஆழமான குறியீட்டு அர்த்தங்களையும் தத்துவப் பார்வைகளையும் உருவாக்குவதுதான் இன்றைய இலக்கிய பாணி. மிகச்சிறந்த உதாரணம் உம்பர்த்தோ இகோவின் நேம் ஆஃப் த ரோஸ்.
இது ஒரு சுவாரசியமான வேட்டைக்கதை. வேட்டைக்கதை மட்டும்தான் என்று கூட படிக்கலாம். ஆனால் கூர்மையான அரசியல், சமூக விமர்சனமாக வாசிக்கலாம். ஆங்கில ஏகாதிபத்தியம் அடிமை இந்தியர்கள் இந்தியா என்ற மித் என்று துரை, ஊமைச்செந்நாய், யானை ஆகியவற்றை பார்க்கலாம். அவர்கள் மூன்றுபேருக்குமான உறவை தத்துவார்த்தமான குறியீடுகளாகவும் பார்க்கலாம். இந்தவகை எழுத்து தமிழுக்கு புதியது. இங்கே இன்னமும் யதார்த்தம் என்ற பேரில் ரிப்போர்ட்டிங் எழுதி சலிப்பூட்டிக்கொண்டிருக்கிறார்கள். இந்தவகை எழுத்தின் இலக்கியத்தகுதியையும் இதன் ஆழத்தையும் இனிமேல்தான் வாசகர்கள் புரிந்துகொள்வார்கள் என நினைக்கிறேன்
ஆர்.முத்துக்கிருஷ்ணன்
ஊமைச்செந்நாய் மலையாளத்தில்…
ஊமைச்செந்நாய் – மலையாளத்தில்
ஊமைச்செந்நாய்- ஒரு கடிதம்
“ஊமைச்செந்நாய்”: தமிழில் ஒரு பின்-காலனியக் குரல்
ஊமைச்செந்நாய் -வாசகர் கடிதம்
ஊமைச்செந்நாய் – அ.முத்துலிங்கம் உரையாடல்
ஊமைச்செந்நாய்- ஒருகடிதம்