«

»


Print this Post

ஏழாம் உலகம் :கடிதங்கள்


பெருமதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..,
                                                              உங்கள் மற்றும் குடும்ப நலம் அறிய விருப்பம். சார், நான் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் ஏழாம் உலகம் படித்து முடித்தேன்.. அப்போவே கடிதம் எழுதி இருக்கலாம் ஆனால் கை நடுக்கமாகவே இருந்தது. கடந்த இரண்டு நாட்களாக என்னுடைய day to day வாழ்க்கையை ரொம்பவே பாதித்துவிட்டது. இன்னும் கூட அதிலிருந்து வெளியில் வர முடியவில்லை. இந்த கடிதம் எழுதும் வேளையில் கூட ஏழாம் உலகம் என்னை இறுக்க பிடித்து கொண்டு ஒரு 30 சதவீதம் தான் என்னை அனுமதிபதாக உணருகிறேன்.கோடிக்கணக்கான தமிழ் பேசும் சனத்தொகையில் எனக்கு ஏழாம் உலகம் படிக்க கிடைத்த என்னை அதிர்ஷ்டசாலியாக நினைக்கிறேன். பிரமாதபடிதிட்டிங்க சார். இன்னமும் என்னால் நம்ப முடியல இந்த படைப்பு எழுதிய படைப்பாளியை; கைகுழந்தை  முதன் முதலாக யானையை பார்ப்பது மாதிரி நான் நினைச்சிகிட்டு இருக்கேன். ஆனா அந்த யானை நாகர்கோவில்  அருகில் ஏதோ ஒரு ஊரில்  வாழ்ந்து கொண்டு எங்கள மாதிரி சாதரணமாக ஆபீஸ் போயி கொண்டிருப்பவர் என்பதை என்னால் நம்ப முடியல.இப்படி ஒரு புத்தகம் தமிழில் வாசிக்க கிடைக்கும் போது தான் என் மொழியின் மீது பெருமிதம்.ஏற்படுகிறது.இதற்கு முன்னாடி   வார்த்தைகளை அலங்கார படுத்துவது தான் இலக்கியம் என்று நினைத்திருந்தேன்.ஆனா இதுல உள்ள எல்லா வார்த்தையும் அன்றாட வாழ்கையில் இருந்து எடுக்க பட்டிருக்கிறது. எழுத்துக்கு இவ்வளவு சக்தியா!!  கனவுல, குளிக்கிறப , பஸ்ல போறாப்ப,  ஆபீஸ்ல, யார்கிட்டயாவது பேசிகிட்டு இருகிறப இன்னும் இன்னும்.., உங்க எழுத்து என்னுடைய  எல்லா செயலையும் ஆக்கிரமித்து அப்படி அப்படிய நிக்க வைக்குது.greattttt sir .
 
இணையத்தில மேயும்போது கிடைத்த தகவல் “ஜெயமோகன் தன்னகங்காரம் உள்ள படைபாளி” என்ற விமர்சனம் , அட போங்கபா!  இவரோட இந்த ஒரு நாவல படிச்ச நானே ரெண்டு நாளா  கர்வபட்டுகிட்டு கிடகேன். அப்படினா இத எழுதியவருக்கு எப்படி இருக்கும். அப்படி ஒரு அம்சம் இருந்த அதுதான்யா அவருக்கு அழகு, மற்றும் பொருத்தம்., விஷ்ணுபுரம், கொற்றவை எல்லாம் அவருடைய classic என்று
கேள்விப்பட்டேன். அப்படினா அதுலாம் எப்படி இருக்கும். அதை எல்லாம் பின்னால் படிக்க போவதை நினைத்தால் மலைப்பாக இருக்கு. தமிழ் மொழியை எவ்வளவு லாவகமாக பயன்படுதிகிறார் நினைக்கிற, சொல்லவர எல்லா விஷயத்தையும் இந்த மொழி சிறப்பாக செய்கிறது இவருக்கு.

பின்னிடீங்க சார் வேற என்ன சொல்றது உங்களுக்கும் ஏழாம் உலகத்தை Recommend பண்றேன். படிங்க.

       இந்த புத்தகத்தை பற்றி சொல்ல வந்த விஷயங்கள் 99% .இன்னமும் மனசுக்குள்ள அலைஞ்சு கிட்டே இருக்கு அதற்கு மொழி வடிவம் கொடுக்க எனக்கு தெரியல. மனம் போன போக்குல டைப் பண்ணிட்டேன் . ஏதாவது மரியாதையை குறைவான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தால் மன்னிச்சிருங்க சார் .
 

நன்றி
தினேஷ் நல்லசிவம்.

 
பின்குறிப்பு:
பொதுவாக உங்கள் புத்தகத்தை மற்றும் கட்டுரைகளை ஒரு தடவை மட்டும் படிப்பதில்லை. குறுகிய கால இடைவெளியில் திரும்ப திரும்ப வாசிப்பேன். இதில் ஏழாம் உலகம் விதிவிலக்கு ஆமாம். சில வருடம் கழித்து தான் மறு வாசிப்பை தொடங்க நினைக்கிறேன்.  அவ்வளவு உக்கிரமான படைப்பு .
8888
அன்புள்ள ஜெ,
ஏழாம் உலகம் நான் கடவுள் படத்தின் மூலமாக இருக்கிறது என்று சொன்னதில் இருந்து அதைத்தேடினேன். கடைகளில் கிடைக்கவில்லை. நண்பரிடம் இரவலாகப் பெற்று வாசித்தேன். என்னை மிகவும் அதிர்ச்சி அடையச்செய்த நாவல் அது. இப்படி ஒரு உலகமா? இப்படி ஒரு வாழ்க்கையா ? என்று எண்ணினேன். மனிதர்கள் ஏன் இப்படி வாழ்கிறார்கள்? ஏன் இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தபிறகும்கூட அவர்கள் மேலும் வாழவே ஆசைப்படுகிறார்கள்? என்ற எண்ணங்கள் எனக்குள்ளே எழுந்தன. ஆனால் பிறகு நாவலை முழுக்க வாசிக்கும்போது தெரிந்துகொண்டேன் . அவர்களின் வாழ்க்கையிலும் எத்தனை உல்லாசங்களும் வேடிக்கைகளும் எல்லாம் இருந்துகொண்டிருக்கின்றன என்று அறிந்தேன். அவர்களும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறார்கள். மனிதர்கள் ஏதோ கொஞ்சம் அன்பு கிடைத்தால்கூட சந்தோஷமாக இருப்பார்கள். அன்பு இல்லாத மாளிகையில் வாழ்வதைவிடவும் அன்புள்ள தெருவிலே பிச்சைக்காரனாக வாழலாம். எனக்கு அந்த நாவலிலேயே பிடித்த கதாபாத்திரம் என்றால் அது அகமதுதான். எத்தனை தன்னம்பிக்கையான மனுஷன் அவன். அவனைப்போல ஒருவன் எந்த இடத்திலும்  சுயமரியாதைக்கு குறைவு இல்லாமல் பிறர்மேல் பாசமும் கருணையும் கொண்டுதான் வாழ்வான். அகமது ”நான் தீனிலே விசுவாசம் உடைய முசல்மான்’ என்று சொல்லும் இடத்தில் எனக்கு மெய்சிலிர்த்தது. ஒரு பிச்சைக்காரர் நான் பிச்சைக்காரர் என்று சொல்லாமல் வேறு எதைச்சொன்னாலும் அது உயர்ந்தவிஷயம் அல்லவா? நல்ல நாவல். மிகவும் மனம் ஒன்றி வாசித்தேன். குய்யனுக்கு அத்தனை பிச்சைக்காரர்களும் சாப்பாடு வாங்கிக்கொண்டு கொடுக்கும் இடம் காவியமாக இருந்தது
சண்முகம் எதிராஜ்

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/1220

Comments have been disabled.