எல்லாத்துறைகளிலும் (கல்வி, இசை, நடனம், விளையாட்டு, என) விருதுகளும் பரிசுகளும் இருந்தாலும் எழுத்துத் துறையில் மட்டும் ஒரு கலைஞன் பரிசும் விருதும் பெறும்போது பொதுமக்கள்/ரசிகர்கள் எல்லோரும் அவரைப்பற்றி சிலாகிக்க, அவரது சககலைஞர்களிடமிருந்து மட்டும் ஏன் இவ்வளவு மாற்றுக்கருத்துகள்? எழுத்தும் அதற்கான ஊடகங்களும் எழுத்தாளர்களுக்கு சுலபமாக இருப்பதாலா? பரிசுகள் அளிக்கப்படும் தருணங்களில் சமரசமற்ற திறனாய்வுதான் என்று இல்லை, குறைந்தபட்சம் சமரசமுள்ள, சார்புநிலையுள்ள திறனாய்வாவது படைப்பின்மீது செய்யப்படுகிறதா? இதை நான் வைரமுத்துவிற்காகக் கேட்கவில்லை.
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
எழுத்து தவிர எல்லாத் துறைகளிலும் பரிசுகள் சாதாரணமாக ஏற்கப்படுகின்றன என்பது சரியல்ல. கலை இலக்கியம் போன்ற அகவயமான [subjective], கருத்தியல் [Ideology] உள்ளடக்கம் கொண்ட தளங்களில் எப்போதுமே எல்லா அங்கீகாரங்களிலும் மாற்றுக் கருத்துகள் இருக்கும்.
தடகளப்போட்டிகள் போன்ற கறாரான விதிகள் கொண்ட, புறவயமான [Objective] தளங்களில் வெற்றி தோல்விகளைப்பற்றி ஐயமே எழ முடியாது. கங்குலியை விட டெண்டுல்கர் மேலான ஆட்டக்காரர் என்று ஆரம்பப்பள்ளிச் சிறுவனும் சொல்லிவிட முடியும். ஆனால் கலை இலக்கிய தளங்களில் அனுபவம் அகவயமானது, ஆகவே பொதுவாக வரையறை செய்யப்பட்டு அனைவராலும் ஏற்கப்பட்ட விதிகள் ஏதும் இல்லாதது. உலகப்பெரும் படைப்பாளியாக, இந்த மூன்று நூற்றாண்டுகளின் மாபெரும் இலக்கியவாதிகள் இருவரில் ஒருவராகக் கருதப்படும் ஃபயதோர் தஸ்தயேவ்ஸ்கியை அவரது தேசத்தைச் சேர்ந்தவரான விளாடிமிர் நபக்கோவ் ஒரு நல்ல படைப்பாளியாகக் கருதவேயில்லை. கடுமையான மறுப்புகளை அவர் வெளியிட்டிருக்கிறார். அதேபோலத்தான் திறனாய்விலும். நவீன திறனாய்வின் பிதாமகனாகக் கணிக்கப்படும் மாத்யூ அர்னால்டை அவரது வரிசையில் வந்த பெரும் திறனாய்வாளரான டி.எஸ்.எலியட் நல்ல திறனாய்வாளராகவே ஏற்கவில்லை. அதாவது இலக்கியத்தின் எந்தக் கிளைக்கும் புறவய அளவுகோல்கள் இல்லை.
இசை, ஓவியம் போன்ற நுண்கலைகளும் அகவய அனுபவங்களையே அளிக்கின்றன. ஆகவே திட்டவட்டமான அளவுகோல்கள் அங்கும் இயல்வனவல்ல. உதாரணமாக மேதை என்று பரவலாகக் கருதப்பட்ட டி.என்.ராஜரத்தினம் பிள்ளையின் நாதசுர இசை தன்னைக் கவரவில்லை என்றும் தன்னைக் கவர்ந்தவர் திருவெண்காடு சுப்ரமணியம் தான் என்றும் இசைஆர்வலரான பேராசிரியர் ஜேசுதாசன் தன் பேட்டியில் சொல்கிறார் [சொல்புதிது]. ஆனால் நுண்கலைகளில் ஒரு புறவயத்தளம் உள்ளது. அது பயின்று மேம்படுத்தக் கூடிய தொழில்நுட்பத் தளம்தான். அதை ஓர் எல்லைவரை புறவயமாகக் கற்பிக்க இயலும். ஆகவே தொழில்நுட்பத்தை வைத்து நுண்கலைகளை ஓரளவு புறவயமாக மதிப்பிட்டுவிட முடியும். நுண்ணிய தளங்களில் மட்டுமே பிரச்சினை வரும்.
ஆனால் இலக்கியத்தில் உள்ள தொழில்நுட்பப் பயிற்சிக் கூறு மிகமிகக் குறைவானதே. தன்னை வெளிப்படுத்திக் கொள்ளத் தேவையான அளவுக்கு மொழிப்பயிற்சி போதும். பிறகு உள்ள பயிற்சி முழுக்க அகவயமானது. அதாவது தன் அகத்தை, தனித்துவத்தை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி. இந்த அளவுக்கு நேரடியாக ஓர் ஆளுமையின் [Personality] தனித்தன்மையை மட்டும் சார்ந்துள்ள கலை வேறு இல்லை. ஆகவே புறவய மதிப்பீடு சாத்தியமேயல்ல.
அப்படியானால் இலக்கியத்தில் பொது மதிப்பீடே இல்லையா? உண்டு. அது நிறுவப்பட்ட, மாற்றுத்தரப்பற்ற ஒன்றாக இருக்காது. மாறாக ஒரு விவாதத்தின் விளைவாக உருவாகிவந்த சமரசப்புள்ளியாக இருக்கும். ஒரு படைப்பை அது வெளிவந்த சூழலில் உள்ள எல்லாத் தரப்பினரும் மதிப்பிட்டுத் தங்கள் தரப்பைச்சொல்ல அதன் மூலம் உருவாகும் பொது விவாதம், அது வாசக மனதில் அந்தரங்கமாகவும் நிகழும், மெல்லமெல்ல படைப்புகளைப் பற்றிய மதிப்பை நிறுவுகிறது. எழுதிய காலத்தில் தஸ்தயேவ்ஸ்கி பெரிதாக மதிக்கப்படவில்லை. அவரை விட இவான் துர்கனேவ்தான் மதிக்கப்பட்டார்.
ஆகவே எல்லாரும் தங்கள் தரப்பை நேர்மையாகப் பதிவு செய்வதுதான் அவசியம். ‘விஷ்ணுபுரம்‘ வெளிவந்தபோது அதை சக எழுத்தாளர்கள் பலர் கடுமையாக மறுத்து எழுதியிருக்கிறார்கள். இன்றும் பலர் அதை முழுக்க நிராகரிக்கிறார்கள். அதற்கு உள்ள முக்கியத்துவம் அதை வாசித்த நுண்வாசகர்கள் தங்கள் தரப்புகளை முன்வைத்ததன்மூலம் மெல்லமெல்ல உருவாகி நிறுவப்பட்ட ஒன்றாகும்.
பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் எல்லோரும் பரிசு பெறும் எழுத்தாளார் குறித்து சிலாகிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அது ஓரளவு உண்மைதான். தமிழ்நாட்டில் மரபிசை தவிர வேறு எந்த தளத்திலும் நுண்ணிய ரசனைக்குப் பரவலான தளம் இல்லை. நாம் கலைகளை ரசிப்பதற்கு மனப்பயிற்சி தேவை என்பதையே அறியாத சமூகமாகவே இருக்கிறோம். எந்தக் கலையானாலும் அதில் உள்ள பெரும் ஆக்கங்களை அறியும்போதுதான் நம் ரசனை தரமானதாக ஆகிறது. இலக்கியத்தில், ஓவியத்தில், திரைப்படங்களில் பெரும்படைப்புகளை அறிந்தவர்கள், ஆர்வம் கொண்டவர்கள் நம்மில் மிகமிகக் குறைவென நாம் அறிவோம். காரணம் கலை இலக்கியங்களை வெறும் பொழுதுப்போக்காகக் கொள்ளூம் பயன்மதிப்பு சார்ந்த, உலகியல் சார்ந்த நோக்கு நம்மிடம் வேரூன்றியுள்ளது.
ஆகவே இங்கே பொதுவாகக் கலையிலக்கியங்களை ரசிப்பவர்கள் மேலோட்டமான அணுகுமுறை கொண்டவர்கள்தான். அவர்களுடைய ரசனையைத் திருப்தி செய்யும் மேலோட்டமான ஆக்கங்களுக்குப் பெரும் வரவேற்பு உள்ளது. நுண்ணிய ரசனைக்குரிய விஷயங்களையோ, ஆழமான விஷயங்களையோ முன்வைப்பவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் கடந்த அரை நூற்றாண்டாக நடத்திய போராட்டத்தின் விளைவாகவே இன்று அவர்களுடைய குரல் சிலரையேனும் சென்றடைகிறது. ஒவ்வொரு முறையும் பெரும்புகழ்பெற்ற படைப்பாளிகளையும் படைப்புகளையும் மறுத்து மேலும் நுட்பமானவற்றை முன்வைத்துத்தான் அவர்கள் இதை சாதித்துள்ளனர். கடந்த ஐம்பதாண்டுகளில் இதற்காகத் தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்களாக க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, வெங்கட் சாமிநாதன், நா.வானமாமலை, கைலாசபதி போன்ற திறனாய்வாளர்களைச் சொல்லலாம். எம்.ஏ.நு·மான், தமிழவன், எம்.வேதசகாயகுமார், ராஜ்கௌதமன், ராஜமார்த்தாண்டன் போல அடுத்தகட்டத் திறனாய்வாளார்களும் பலர் இதற்காகப் பணியாற்றுகின்றனர்.
இவ்வாறு நுண்ணிய ரசனை அல்லது ஆழ்ந்த அறிவுத்தளத்தை முன்வைக்கும்போது எப்போதுமே ‘என்ன, ஊரே அங்கீகரிக்கிறது, உங்களுக்கென்ன?” என்ற வினா எழுகிறது. நேற்று அகிலனை, நா.பார்த்தசாரதியை முன்வைத்து. இன்று இன்னொருவரை முன்வைத்து. ‘மன்னிக்கவும் இது எங்கள் பணி, எங்கள் இலட்சியம்’ என்று அவர்கள் பதில் சொல்வார்கள்.
நீங்கள் நினைப்பதுபோல ஊடகங்கள் தீவிர எழுத்தாளர்களுக்குச் சாதகமாக இல்லை. வைரமுத்து பிரபல ஊடகங்களுக்குத் தீனி போடுபவர். பரவலான அங்கீகாரம் கொண்டவர். நல்ல தொடர்புகளைப் பேணுபவர். அனைத்துக்கும் மேலாக பிரபல இதழ்கள் மற்றும் ஊடகங்கள் உருவாக்கும் பரப்புக் [Pop] கலாசாரத்தை வளர்க்கக் கூடியவர். அதாவது அவர் அவர்களின் ஆள். ஆகவே அவரை அவை முன்னிறுத்துகின்றன, புகழ்கின்றன. மாற்றுக்குரல்களை குமுதம், விகடன் மட்டுமல்ல தீராநதி கூட பிரசுரிக்கவில்லை. இந்தியா டுடே மட்டுமே அதில் கவனம் செலுத்தியது, காரணம் அது சற்று மேல்தரமான நுகர்வுக்கலாசாரத்தை முன்வைக்கும் இதழ் என்பதே.
வைரமுத்து குறித்த எனது கட்டுரை ‘தீம்தரிகிட‘ என்ற சிற்றிதழில்தான் வெளியாயிற்று. அது பொதுவாசகர்களில் ஒருசாராரை முன்னிலையாகக் கொண்ட சிற்றிதழ் என்பதனாலேயே நான் அடிப்படைகளைப் பற்றிப் பேசித் திறனாய்வு செய்ய நேர்ந்தது. சிற்றிதழ்களைப் பொருத்தவரை வைரமுத்துவின் நாவல் ஏன் இலக்கியமல்ல என்பது பேசி நிறுவப்படவேண்டிய ஒரு கருத்தல்ல, அவற்றின் வாசகர்கள் சாதாரணமாக அறிந்த விஷயம் மட்டுமே. ஆகவே கண்டனத்துடன் அவை நின்றுவிட்டன.
மாற்றுக்கருத்துக்கள் வரட்டுமே. விவாதம் நிகழட்டுமே. விளைவாக வைரமுத்து அங்கீகாரம் பெற்று மேலெழவும் கூடுமே. விவாதம் மட்டுமே பொதுவான மதிப்பீட்டை உருவாக்கும். இங்கே சிக்கலே வைரமுத்துவுக்கு கிரீடம் சூட்ட ஊடகங்களின் பால்லாயிரம் வாட் மஞ்சள் மின்னொளி சொரியப்படுகையில் மறுதரப்பு தங்கள் கையகலால் மட்டும் தங்கள் தரப்பைச் சுட்டிக்காட்ட வேண்டியிருப்பதுதான்.
-*-
படைப்பைக் குறைசொல்லும் கருத்துகளைவிட படைத்தவனின் அந்தரங்க நட்புகளும் செயல்பாடுகளுமே அதிகம் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதேன்? உங்களைத்தவிர எத்தனைபேர் படைப்பைத் திறனாய்வு செய்கிறார்கள்? திறனாய்வாக இல்லாமல், படித்துமுடித்த வாசகர்கள் அனைவருமே ஒருபடைப்பை சிலாகித்தே சொல்வதும், படைப்பிலிருந்து வெகுநாட்களுக்கு வெளிவரமுடியாமல் தவிப்பதும் அந்தப் படைப்புக்கு இலக்கிய அந்தஸ்து தராதா? இதை நான் ‘கள்ளிக்காட்டு இதிகாச’த்திற்காகத்தான் கேட்கிறேன்..
— ஜெயஸ்ரீ கோவிந்தராஜன்.
அந்தரங்க நட்புகள் பலசமயம் மதிப்பீடுகளை தீர்மானிப்பவையாக உள்ளன என்பதே அவை திறனாய்வில் சுட்டிக்காட்டபடுவதற்குக் காரணம். தமிழில் தரமான திறனாய்வுகள் வந்தபடித்தான் உள்ளன. பிரச்சினை அவை பரவலாக வாசகர்களுக்குக் கொண்டுசேர்க்கபடுவதில்லை, அதற்கான வாய்ப்புகள் நம் சூழலில் இல்லை என்பதே.
படித்து முடித்த வாசகர்களின் கருத்துகள் கண்டிப்பாக முக்கியமே. அவர்கள் எதையுமே சொல்லாமல் மௌனமாக நீடித்தால்கூட அவர்களின் தரப்பு படைப்பை இலக்கியமாக நிலைநிறுத்தும். உதாரணமாக ப.சிங்காரம் எண்பதுகளின் தொடக்கத்தில் புயலிலே ஒரு தோணியை வெளியிட்டபோது தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழல் அதை ஏற்கவில்லை. ஆனால் அதற்கு மௌன வாசகர்கள் இருந்தனர். அவர்கள் மூலம் மெல்ல அந்நாவல் அடுத்தத் தலைமுறைக்குச் சென்றது. அதன் இலக்கிய இடம் நிறுவப்பட்டது.
அதேசமயம் அகிலனுக்கும் நா.பார்த்தசாரதிக்கும் தமிழில் மிகமிக அதிக எண்ணிக்கையில் வாசகர்கள் இருந்தனர். அவர்களுக்கு இருந்த செல்வாக்குடன் இன்றைய வைரமுத்துவை ஒப்பிடவே இயலாது. குழந்தைகளுக்கெல்லாம் அகிலன் என்றும் மணிவண்ணன் என்றும் பெயர் போடப்பட்டது. அன்று குறிஞ்சிமலர் வாசித்து பரவசமடைந்தவர்கள், பாவை விளக்கு வாசித்து அழுதவர்கள் இன்னும்கூட இருக்கலாம். அவர்களைப் பற்றி பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டன. ஞானபீடம் உள்ளிட்ட விருதுகள் குவிந்தன. அகிலனைப் பற்றி ஆராய்ச்சிநூல் எழுதியே சாகித்ய அகாதமி விருது பெற்றார் எழில்முதல்வன்.
இன்று இவர்களின் இலக்கிய இடம் என்ன? இன்றைய தலைமுறை இவர்களை எங்கே வைத்திருக்கிறது? சென்ற இருபது வருடங்களில் இலக்கிய விவாதங்களில் இவர்கள் பெயர்கள் எங்காவது மேற்கோள் காட்டப்பட்டுள்ளனவா? தமிழின் சிறந்த நாவல்களின் பட்டியலை வெவ்வேறு திறனாய்வாளார்கள் சொல்ல முன்பு குமுதத்தில் வந்ததே நினைவிருக்கிறதா? அதில் அகிலனும் நா.பார்த்தசாரதியும் இருந்தனரா? ஏன் இல்லை? எப்படி அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்? இவர்கள் கோலோச்சிய நாட்களில் ஊர்பேர் தெரியாமல் இருந்த சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளிய மரத்தின் கதை’ போன்ற நாவல்கள் நீல பத்மநாபனின் ‘தலைமுறைகள்’ பள்ளி கொண்டபுரம்’ போன்ற நாவல்கள் க.நா.சுப்ரமணியத்தின் ‘பொய்த்தேவு’ போன்ற நாவல்கள் அரை நூற்றாண்டைத் தாண்டியும் மூன்றாம் தலைமுறை வாசகர்களிலும் செல்வாக்காக இருக்கின்றனவே எப்படி? உங்களுக்குத் தெரியுமோ என்னவோ வடுவூர் துரைசாமி அய்யங்கார் அளவுக்குப் புகழுடன் பணத்துடன் இருந்த எழுத்தாளர் பிறகு தமிழில் உருவாகவே இல்லை. தமிழில் ஒரு நூலை வாங்க மக்கள் ரயில்பிடித்து வந்து வரிசையில் நின்றது அவரது நாவலான ‘கும்பகோணம் வக்கீல்லல்லது திகம்பர சாமியாரை’ வாங்கத்தான்.
ஆகவே ஒரு காலகட்டத்தில் வாசக்ர்களில் பெரும்பாலானவர்கள் விரும்பியதனாலோ புல்லரித்ததனாலோ இலக்கியத் தகுதி வந்து விடாது. அவ்வாசகர்களின் தரம் மேலும் முக்கியம். தெளிவாகவே கேட்கிறேனே, கள்ளிக்காட்டு இதிகாசத்தைவிட அதிகமானவர்கள் மெட்டி ஒலியின் திரைக்கதையை மேலான இலக்கியமாகக் கூறக்கூடும். அது அழவைத்ததற்கு மேலாகவா கள்ளிக்காட்டு இதிகாசம் செய்தது?
இலக்கியத் தகுதி உருவாவது உடனடி எதிர்வினைகளினாலல்ல. ஒரு சமூகத்தின் அழகியல் [Aesthetics] கருத்தியல் [Ideology] தளத்தில் அப்படைப்பு உருவாக்கும் ஆழமான பாதிப்புகளினால்தான் இலக்கியப் படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உலகில் எங்குமே பரபரப்பாக கவனிக்கப்பட்ட ஆக்கங்கள் உண்டு. பெரும் மனக்கிளர்ச்சியை உருவாக்கிய நூல்கள் உண்டு. இன்றைய சூழலில் ஊடகங்கள் பிரசார அலை [Hype] மூலம் அப்படிப்பட்ட பரபரப்பையும் மனக்கிளர்ச்சியையும் உருவாக்கிவிட முடியும். அவை இலக்கியப் படைப்பின் அளவுகோல்களல்ல.
இலக்கியப் படைப்பின் பாதிப்பு அப்படி வெளிப்படையானதாக இருக்காது. ஒற்றைப்படையான ஒன்றாக இருக்காது. மெல்ல மெல்ல நுட்பமாக அதன் பாதிப்பு நிகழும். தொடர்ச்சியான விவாதங்கள் மூலம் அது தன்னை நிறுவிக்கொள்ளும். விவாதங்கள் அதற்கு நன்மையையே செய்யும்.
எல்லாருக்கும் பிடித்திருக்கிறது என்பதை விடுங்கள். உங்களுக்கு கள்ளிகாட்டு இதிகாசம் மிகவும் பிடித்திருந்தது என்றால் அதைப்பற்றி ஆழ்ந்து சிந்தியுங்கள். உலகப்பேரிலக்கியங்களுடன் ஒப்பிட்டுப்பாருங்கள். அதன் உணர்வுகளையும் கருத்தியல்தளத்தையும் ஆராயுங்கள். அது உங்களை ஏன் கவர்கிறது, அதன் மூலம் உங்கள் வாழ்க்கைக் கோணமும் ஆன்மிகமான ஆழமும் எப்படி மாறுகின்றன என்றும் பாருங்கள். தொடர்ந்தும் அது ஒரு பெரும் இலக்கிய ஆக்கம் என்று உங்களுக்குப் பட்டதென்றால் அக்கருத்தை முன்வைத்து வாதிடுங்கள். விவாதக் களனில் அதை நிறுவ முயலுங்கள். என் தரப்பை நான் சொல்கிறேன். நீங்கள் மறுக்கலாம். நாளை உங்கள் தரப்பை காலம் ஏற்கலாம். என் தரப்பு செல்வாக்கிழக்கலாம். அதில் எனக்கு ஒன்றுமில்லை, நான் இப்போது உண்மையிலேயே எண்ணுவதை நான் சொல்கிறேன். யாரும் சொல்லலாம்.