அறம், சோற்றுக்கணக்கு-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நேற்று சோற்றுக்கணக்கு படித்து நெகிழ்ந்து போனேன்..எவ்வளவு நாட்கள் அந்த
ருசியை அனுபவித்திருப்பேன்..இன்றும் திருவனந்தபுரம் போனால் சாலையில்
சிறிய சந்துக்குள் இருக்கும் கேத்தல் சாயிப்பின் உணவகத்தில் போகாமல்
திரும்புவதே கிடையாது. கேத்தல் சாயிப்பின் நிஜ பெயர் முஹம்மது அப்துல்
காதர்..கிழக்கே கோட்டை புத்தரிக்கன்டம் மைதானத்தில் கெட்டிலில் (kettle)
சாயா விற்பனை செய்து தன் வியாபரத்தை தொடங்கியவர் பின்னர் சாலையில் ஒரு
சிறிய ஓட்டலை தொடங்கினார். அவர் வாழ்ந்த காலத்தில் அங்கே உணவருந்திய
ஒவ்வொருவருக்கும் அவரைப் பற்றி சொல்லத்தான் எத்தனை எத்தனை
கதைகள்…ஒப்புக்கு சாப்பிடுபவர்களைக் கண்டாலே அவருக்குப்
பிடிக்காது..ரசித்து ரசித்துச் சாப்பிடுபவர்களுக்கு மேலும் மேலும்
பரிமாறுவது அவரின் குணம். அவர் நடத்தி வந்த ஓட்டல் இன்றும் அதே இடத்தில்
அதே சுவையுடன் இயங்கி வருகிறது. இன்றும் அதே சிறிய சந்துக்குள் அதே சின்ன
ஓட்டல், மர பெஞ்சுகளும் மேசைகளும் அப்படியே…( அதன் பெயர் முபாரக்
இல்லை…ரெஹ்மானியா). கேத்தல் சாஹிபின் மகன் மாஹீன் அதை நடத்தி
வருகிறார். அது மட்டுமல்லாமல் கொல்லம், கொச்சின், கோழிக்கோடு போன்ற பிற
நகரங்களிலும் அதன் கிளைகள் இயங்கி வருகிறது. என்ன..அவை எல்லாம் கொஞ்சம்
ஆடம்பரமான ஓட்டல்களாக இருக்கிறது ( www.kethelschicken.com). ஆனால்
சாலையில் அந்த சிறிய உணவகத்தில் உணவருந்தும் போது வயிறு மட்டுமல்ல மனமும்
நிறைந்து விடுகிறது.. ஒரு பெரியவரின் எல்லையற்ற கருணை தலைமுறைகளைத் தாண்டி
அந்த இடம் முழுவதும் வியாபித்திருப்பதால் தானோ? இனி அந்த இடத்துக்குப்
போகும் போதெல்லாம் கேத்தல் சாஹிப் எங்கோ மறைந்திருந்து ‘கழிக்கெடா
எரப்பாளி’ என்று சொல்லுவதைப்போல் தோன்றும்…நிச்சயம்..நன்றி
ஜெயமோகன்…இந்த உன்னதமான அனுபவத்திற்கு..

அன்புடன்,

லியோ முகேஷ், திருச்சூர்

அன்புள்ள முகேஷ்

நான் கேள்விப்பட்டதுதான். அவரைப் பார்த்ததில்லை. அவர் கையால் உண்டதுமில்லை

ஆனால் கண்ணுக்குத்தெரியாமல் மாமனிதர்கள் எங்கும் இருந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களால்தான் மனிதம் உருவாக்கப்படுகிறது, நிலைநாட்டப்படுகிறது.

ஜெ

=================

அன்பின் ஜெ,

உங்கள் அறம்,சோற்றுக்கணக்கு பற்றி நான் எழுதிய பதிவுகளுக்கு எனக்குக் கிடைத்த பின்னூட்டங்களில் சில.
நான் நகலெடுத்துச் சொல்வதற்கே இப்படியென்றால் அசலான தங்கள் எழுத்து எப்படி அவர்களை ஈர்க்கக்கூடும்..?

www.masusila.com

=====================

எழுத்தாளர் அவர்களுக்கு,

அறம் கதையிலே கோளாம்பி என்று வருகிறது. தஞ்சாவூரில் படிக்கம் என்றுதான் சொல்வார்கள் என்று கேள்விப்பட்டேன். இந்த மாதிரி பிழைகளை தவிர்க்கலாமே

R. சரவணன்

ஆர்.சரவணன்,

கூர்ந்த வாசிப்பு. தொடருங்கள். பிழைதிருத்தத் துறையில் எதிர்காலம் இருக்கிறது.

தஞ்சையில் படிக்கம் என்று சொல்பவர்கள் பிராமணர்கள். பிறர் கோளாம்பி என்றுதான்.

மேலும் கதையில் கோளாம்பி என்று சொல்பவர் நாகர்கோயிலைச்சேர்ந்த எழுத்தாளர்தான்

நன்றி

ஜெ

=========

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
தங்கள் அறம் சிறுகதை , தமிழில் நான் படித்த மிக
சிறந்த சிறுகதை என சொல்வேன் , எனக்கு “கண்ணகியும்” , “கண்ணகி ஏன்
தெய்வம் ஆனாள் ” என்பதும் தெளிந்தது . தங்கள் பணி மேன்மேலும் தொடர
வாழ்த்துக்கள் .

-சிவகுமார்

=============

அன்புள்ள ஜெ

ஓய் மேதாவி மாதிரி எழுதுவீரா’ன்னார் பெரிய செட்டியார். ’நானே மேதாவிதானே’ன்னேன்.

இந்தவரியை நான் மீண்டும் வாசிக்கும்போதுதான் கவனித்தேன். பிச்சைகேட்கப்போவதுபோல போய் நிற்கும்போது கூட என்ன ஒரு கம்பீரம். நகைச்சுவையாக சொன்னாலும் அவருக்குள் இருந்த எழுத்தாளன் அல்லவா பேசியிருக்கிறான்

நன்றி

சிவம்

===============

ஜெ,

மீண்டும் ஒரு வாசிப்பில் ‘எத்தனை காலமோ? ஒளிவரும்போது நாம் இருக்கவேண்டும் என்ற அவசியமுண்டா?’ என்ற வரியில் நின்றுவிட்டேன். புபி எழுதியது. அந்த வரி அந்தக்கால எழுத்தாளர்கள் அனைவருக்குமே ஒரு பெரிய ஆதர்சமாக இருந்திருக்கிறது இல்லையா?

சிவம்

================

ஜெ,

மீண்டும் சிவம். பெரியவரோட சம்சாரம் திண்ணையிலே உக்காந்து யாரோ பக்கத்துவீட்டுக் கொழந்தைக்கு இட்லி ஊட்டிகிட்டிருக்கா

அந்த வரியில் ஆச்சி யார் என்று தெரிகிறது. ஓர் அன்னை. அவ்வளவுதான்

சிவம்

முந்தைய கட்டுரைமத்துறுதயிர்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைமத்துறு தயிர் -கடிதங்கள்