சென்னை, மூன்று நாவல்கள்- நிஷா மன்ஸூர்

ஞானமும் கல்வியும் நாழி அரிசிக்குள்ளே
நாழி அரிசியை நாய்கொண்டு போய்விட்டால்
ஞானமுங் கல்வியும் நாய்பட்ட பாடே.
-சூஃபி ஞானி கல்வத்து நாயகம் ரஹிமஹுல்லாஹ்

கடந்த ஆறுமாதங்களில் நான் வாசித்த நூல்களில் மூன்று முக்கியமான நூல்களைப்பற்றியும் அதையொட்டி எனக்குள் எழுந்த சிந்தனைகளையும் இந்தக் கட்டுரை மூலமாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

ஜெயமோகனின் “வெள்ளையானை” எஸ்.ராமகிருஷ்ணனின் “யாமம்” தமிழ்பிரபாவின் “பேட்டை”ஆகியனவே அந்த மூன்று நூல்கள். இவை மூன்றுக்கும் ஒரு ஆழமான ஒற்றுமை இருக்கிறது. சென்னை என்கிற பெருநகரத்தின் வரலாற்றை அடிநாதமாகக் கொண்டவையே இந்த மூன்று நாவல்களும். நகரத்தின் வரலாறு ஊரின் வரலாறு நதியின் வரலாறு என்று எவற்றைப் பேசினாலும் உண்மையில் நாம் பேசமுயல்வது அங்கு வாழ்ந்த மனிதர்களின் வரலாற்றைத்தான்.

வெள்ளையானை
——————–

இந்த மூன்று நாவல்களில் ஜெயமோகனின் வெள்ளையானை என்கிற குறியீடு,இப்போதும் சென்னை மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள “ஐஸ் ஹவுஸ்” எனும் கிடங்கில் பிரிட்டிஷார் காலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு மதுவில் கரைத்துக் குடிக்க அனுப்பப்பட்ட ஐஸ்கட்டிகளைத்தான் குறிக்கிறது. அந்த ஐஸ்பார்கள் பெரும் பாளங்களாக லண்டனிலிருந்து கப்பலில் வரவழைக்கப்பட்டு இந்த ஐஸ் ஹவுஸில் பதப்படுத்தப்பட்டு விநியோகமாகி உள்ளன.

இந்தக் கிடங்கில் எளிய தமிழ்க்குடிகள்(பெரும்பாலும் தலித்துகள்) கடுமையாக ஈடுபடுத்தப்படுவதையும் அவர்கள் கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் அதிகாரிகளாலும் கங்காணிகளாலும் நடத்தப்படுவதையும் அதன் காரணமாக அங்கு முதன்முதலாக நிகழும் ஒரு புரட்சியையும் அதன் விளைவுகளையும் பிரிட்டிஷ் முதலாளிகளின் அடக்குமுறையையும் இங்குள்ள பிராமண மற்றும் இடைநிலை அதிகார சாதிகளின் மேலாதிக்கத்தையும் அப்பட்டமாகக் கண்முன் நிறுத்தும் நாவல் இது.

ஐரிஷ் நாட்டைச் சார்ந்த,கவித்துவமும் மனிதத்துவமும் மிகுந்த எய்டன் என்கிற பிரிட்டிஷ் அதிகாரியின் பார்வையாக விரியும் இந்த நாவலில் 1876 முதலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட மாபெரும் பஞ்சமும் அதன் வாயிலாக வெளிப்படும் மனித மனங்களின் கோரமும் சாதிய ஆதிக்கமும் அதிகார வெறியும் நிதர்சனமாகப் பதியப்பட்டுள்ளன.(1640 முதல் 1907 வரையிலான 267 வருடங்களில் 17 முறை அன்றைய சென்னை மாகாணத்தை கடும் பஞ்சம் தாக்கி பல லட்சக்கணக்கான மக்களைக் காவுவாங்கி இருக்கிறது. இன்று சென்னையில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் எனும் கூவம் நதிகூட பஞ்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேலை கொடுப்பதற்காக வெட்டப்பட்டதுதான்.)

பஞ்சத்தின் கோரம் தலைவிரித்தாடிய தருணங்களில் ஒரு ரொட்டித்துண்டுக்காக உயிரைக் கொடுத்தும் எடுத்தும் பரிதவிக்கும் எலும்புக்கூடு மனிதர்களும் பஞ்சத்தில் சாகக் கிடக்கும் குழந்தையைக் கவ்விக்கொண்டு ஓடும் நாய்களும் நாம் நினைத்துக்கூடப் பார்க்காத கீழான செயல்களை இலகுவாகச் செய்யும் மனிதர்களுமாக இந்த நாவல் வரலாற்றின் கருப்புப் பக்கங்களை ஆவணமாக்கியுள்ளது.

யாமம்
——–

இரண்டாவது எஸ்.ராமகிருஷ்ணனின் “யாமம்” நாவல். இரவின் பன்முக பரிணாமங்களை  கவித்துவத்துடன்  விவரித்துச் செல்லும் ஆழமும் விஸ்தீரனமும் மிகுந்த வார்த்தைப் பிரயோகங்களுடன் துவங்கும் யாமம் நாவல்,  நான்கு வெவ்வேறான தளத்தில் பயணப்படும் கதைமாந்தர்களுடன் ஊடாடிச் சென்று சென்னை நகரத்தின் ஆதிமூலத்தைக் கண்டடைகிறது.வெள்ளை யானை நாவலில் வாழ்வின் துயரம் பேசுபொருளாக இருக்கிறதெனில் யாமம் நாவலில் வாழ்வின் தத்துவ தரிசனமும் ஆன்மீக மலர்ச்சியும் மிளிர்வதாக அமைந்துள்ளது.

பண்டாரங்கள்,தேசாந்திரிகள்,சித்தர்கள் என்று காட்சிப்படுத்தப்படும் பகுதி முழுக்க ஒருவிதமான புதிர்த்தன்மை மிகுந்திருந்தாலும் ஆத்மார்த்தமான ஓட்டுதல் காணக்கிடைக்கிறது.அந்த ஒட்டுதல் எஸ்ராவின் தத்துவஞான ஈர்ப்பிலிருந்து ஆத்மார்த்தமாக வெளிப்பட்டிருக்கக்கூடும்.

துறவு வாழ்வில் ஈர்ப்பு கொண்ட சதாசிவம் என்கிற கதாபாத்திரம் தன் தாயையும் வீட்டையும் துறந்து கோவிலில் அடைக்கலமாகிப் பின் ஏதோ ஒரு உள்ளுணர்வு உந்தித்தள்ள நீலகண்டம் எனும் நாயைப் பின்தொடர்ந்து செல்ல உறுதியெடுத்துக் கொண்டு நாயின் பின்னால் இலக்கின்றி அலைந்து சந்தர்ப்ப வசத்தால் இல்லற வாழ்க்கையில் நுழைந்து துணைவியின் பிரசவத்தின் போது மருத்துவச்சியை அழைத்துவரச் செல்லும் வழியில் நாய் வேறு பாதையில் திரும்பியதால் சத்தியத்தை மீறமுடியாமல் துணைவியை அம்போவென விட்டுவிட்டு மனப் புழுக்கத்துடனும் சஞ்சலத்துடனும் நாயைப் பின்தொடர்ந்து மீண்டும் அடிபட்டு உதைபட்டு அசிங்கப்பட்டு வீடுபேறு அடையும் சதாசிவ பண்டாரம் ஒரு தளத்தில்.

*இரவு என்பது
கால்கள் இல்லாமலே
அலைந்து திரியும்
ஒரு பூனை;
அடையாளம் அழிந்துபோன
ஒரு நதி.*

அடுத்ததாக பத்ரகிரியின் வாயிலாக நாவல் விவரிக்கப்படுகிறது. அவனது கொடும் குணம்கொண்ட தந்தையால் சீரழிக்கப்பட்ட தாயாரின் நினைவுகளோடு தம் சித்தியால் வளர்க்கப்பட்டு  இளவயது தம்பியுடன் சிரமங்களுக்கிடையே பெரியவர்களாகி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நில அளவைப் பணியில் ஈடுபடுவான்.
அதன் பிறகு மேற்படிப்புக்காக லண்டன் செல்லும் தம்பி தன் மனைவியை அண்ணன் வீட்டில் விட்டுச் செல்லும் காட்சி முதல் அந்த அண்ணன் அவளுடன் உடல்ரீதியான பிணைப்பில் ஈடுபடுவது வரையிலான காட்சிகள் ஒரு வெகு நேர்த்தியான திரைப்படத்தை விடக் கூடுதலான செதுக்கல்களுடனும் உணர்வுத் ததும்பல்களுடனும் மிகு சுவாரஸ்ய துள்ளலுடன் மொழியாக்கப் பட்டிருக்கும்.

அதை வாசிக்கும் ஒவ்வொரு மனிதனும் அந்தத் தம்பதியினரின் காதலை,ரசனையை,மல்லிகைப்பூ வாசனையை,தாயக் காய்கள் விசிறப்படும் மென்னொலியை,அவளுடனான முதல் ஸ்பரிசத்தை,மார்புத் திரட்சியை,கூந்தல் அடர்த்தியை, ஏகாந்த நேசத்தைத் தூண்டிவிடும் பரந்த மனதை மானசீகமாக உணர்ந்து ரசிக்கத் துவங்கி விடுவான்.

அவள் இந்த உறவை நியாயப்படுத்தத் தேர்ந்தெடுக்கும் சொற்களின் தேர்வென்பது மிகு அபாரமான கலைஞனின் இசைக்குறிப்புகளைப் போல அவ்வளவு துல்லியமாக இருக்கும். சமூக நியதிகள், ஒழுக்கக் கோட்பாடுகள் அனைத்தையும் துறந்துவிட்டு நாமும் உடனடியாக இப்படியொரு காதலில் மனத்தடையின்றிக் குதிக்கலாமே என்று தோன்றச் செய்வதாக இருக்கும். (ஆனால் நாவலின் இரண்டாம் பாதியில் களவுக் காதலின் எதிர்மறை விளைவுகளையும் மனச்சிதைவுகளையும் ரத்தமும் சீழுமாகக்கூறி நம்மை அந்த மனவெழுச்சியிலிருந்து விடுவித்து விடுவார் எஸ்ரா).

லண்டனிலிருந்து திரும்பும் தம்பி இங்கு காண்பது களவொழுக்கத்தால் சிதைந்து போன ஒரு குடும்பத்தை என்பதாக நாவல் நிறைவுறும்.இடையில் லண்டனுக்கு மேற்படிப்புக்காகச் சென்ற தம்பி திருச்சிற்றம்பலம் எதிர்கொள்ளும் வாழ்வனுபவங்கள் காட்சிப்படுத்தப்படும். கேளிக்கைகள் கும்மாளங்கள் மிகுந்த ஒரு பெருநகரத்தில் குறிக்கோளுடன் வந்துசேரும் ஒரு எளிய மனிதன் வாழ நேர்வதன் முடிச்சுகள் மிக அழகாக அவிழ்க்கப்படும். மிகச் சாதாரண மனிதனாக வரும் திருச்சிற்றம்பலம் தனது கணிதப் புலமையினால் மேம்பட்ட நிலையை அடைவதையும் இவனோடு கப்பலில் ஒன்றாகப் பயணித்து வந்த சற்குணம் என்கிற சுகவாசி, லண்டனின் சகல இன்பங்களையும் நுகரத் துவங்கி காலப்போக்கில் ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களுக்கான போராளியாக எழுச்சி கொள்வதையும் நாவலில் வெகு நேர்த்தியாக சொல்லியிருப்பார்.

*பல்லக்கில் வருபவர்களுக்குத்தான் பாதை வேணும்.மலை எல்லாப் பக்கமும் திறந்தே கிடக்கிறது.எப்படி வேண்டுமானாலும் ஏறி வரலாம்*

மூன்றாவதாக கிருஷ்ணப்ப கரையாளர் என்கிற கதாபாத்திரம் வாயிலாக விரியும் தேயிலை தமிழ்நாட்டுக்கு வந்த சரித்திரம். பங்காளிகளுடனான தன் சொத்து தகராறைத் தீர்க்க வழக்கு தொடுத்திருந்த கிருஷ்ணப்பர் வழக்கு நீண்டு கொண்டே செல்ல,ஒரு காலகட்டத்தில் மன அமைதிக்காக சென்னையிலிருந்து ஆங்கிலோ இந்திய தாசி எலிஸபெத்தை அழைத்து தம் சொத்துக்களில் ஒன்றான தென்மலைக்குச் சென்று விடுகிறார். அந்த இயற்கை எழில் ததும்பும் மலையில் அவரது அகமும் புறமும் செழிக்கிறது.ஆன்மா புதுவிதமான அமைதியை அனுபவிக்கிறது. நோயும் தளர்ச்சியும் கொண்டிருந்த எலிஸபெத்தும் புத்துணர்வும் பொலிவும் பெற்று இளமை மீண்டதுபோல பெருமலர்ச்சி கொள்கிறாள். இந்த இயற்கையின் மடியில் கூடுமானவரை வாழ்க்கையைக் கழிக்க நாடிய கிருஷ்ணப்பா தனது சொத்து வழக்கை வாபஸ் வாங்கிவிட்டு இந்த மலையை மட்டும் பங்காளிகளிடம் தனக்காகக் கேட்டு வாங்கிக் கொள்கிறார்.

ஆசுவாசமாக நாட்களைக் கழிக்கும் அவர் அந்த மலையையும் எலிஸபெத்துக்கு எழுதி வைத்து விடுகிறார். தேயிலை செடிகளை விதைக்க வாகான இடம்தேடி  மலைக்கு வரும் ஆங்கிலேயர் ஒருவர் இந்த மலையில் தேயிலை வளர உகந்த மண்ணும் சூழலும் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். எலிஸபெத்திடம் மலையின் சிறுபகுதியை குத்தகைக்கு எடுத்து தேயிலை பயிரிடவும் துவங்குகிறார்.இப்படியாக தேயிலைத் தோட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்த கதையைப் பின்புலமாக வைத்து இந்தப்பகுதி நகரும். இந்தப்பகுதியில் மலையின் ஆச்சர்யத்தை,பூடகத்தை,மலைகள் உருவாக்கும் மனவெழுச்சியை மிக அழகாகக் கூறியிருப்பார் எஸ்ரா.

நான்காவது கதாபாத்திரமாக அப்துல்கரீம். இவர்தான் “யாமம்” என்கிற தலைப்பின் காரணவர். கடல் வணிகரான அப்துல் கரீம்,தன்னை மறந்த தருணங்களில் ஒரு சூஃபி ஞானியின்  வழிகாட்டுதலின் பேரில் அத்தர் தயாரிக்கிறார்.
அந்த அத்தரின் பெயர்தான் யாமம். ஒரு தவம்போல அவர் உருவாக்கும் அத்தர் மாபெரும் வரவேற்பைப் பெறுகிறது. மேற்கண்ட நான்கு கதாபாத்திரங்களையும் இணைக்கும் கண்ணியாக அத்தர் இருக்கிறது. மேலே நாம் பார்த்த கிருஷ்ணப்ப கரையாளராகட்டும் பத்ரகிரியாகட்டும் திருச்சிற்றம்பலமாகட்டும் எலிஸபெத்தாகட்டும் அனைவரும் இந்த அத்தரின் நேசர்கள். அந்த சூஃபிஞானி அப்துல் கரீமுடன் உரையாடும் பகுதிகள் அனைத்தும் அபாரமான ஞானப்பேச்சாக அமைந்திருக்கும். இரவுகள் குறித்தும் கடல் குறித்தும் உடல் குறித்துமான உரையாடல்கள் பிரபஞ்சத்தின் சூட்சுமத்தை அறியத்தரும் பாடமாகவே அமைந்திருக்கும்.

அத்தர் தயாரிப்பாளரான அப்துல் கரீம் காலப்போக்கில் குதிரை ரேஸில் ஈடுபட்டு தன் சொத்துக்களை இழந்து பின்னர் மனைவி மக்களை விட்டுவிட்டு காணாமல் போய்விடுகிறார். அவரது மூன்று மனைவியரும் வாழ்வின் துயரங்களை எதிர்கொள்வதை நுட்பமாக விவரிக்கும் நாவலாசிரியர் அந்தக் காலகட்டத்தில் சென்னையை ஆட்டிப்படைத்த கொள்ளை நோயான காலராவின் கோரத்தை பதிவு செய்திருப்பார்.

இப்படியாக ஆழமும் ஆகிருதியும் நுணுக்கமும்  கொண்ட ஒரு பாய்ச்சலாக யாமம் நாவல் அமைந்திருக்கிறது.

பேட்டை
——–
அடுத்ததாக தமிழ்பிரபாவின் பேட்டை. சென்னையின் ஒரு பகுதியான சிந்தாதிரிப்பேட்டைதான் நாவலின் களம். ஒடுக்கப்பட்ட எளிய தலித்துகள் வழியாக சென்னையின் சரித்திரத்தையும் தூக்கிச் சுமந்துகொண்டு நகர்கிறது நாவல்.

பேய்பிடித்து ஆட்டுவிக்கும் புதுமணப் பெண்ணின் குடிகாரக் கணவனின் வழியாகத் துவக்கம் பெரும் நாவல் அப்படியே வேகமெடுத்து கிறிஸ்துவ மதமாற்றம் மற்றும் சர்ச்சுகளின் அதிகாரத்தினூடேயான பாதிரியார்களின்  மேலாதிக்கம், ஒரு சேரியின் கதை,அந்தச் சேரி பின்னர் வீட்டுவசதி வாரியத்தின் குடியிருப்புகளான கதை,அந்தக் குடியிருப்பின் மாந்தர்களின் எளிய வாழ்வு, திருமணம்,களவொழுக்கம்,குடி,மரணம்,கானா கச்சேரிகள்,கொண்டாட்டம்,கேரம்போர்டு விளையாட்டு,ஓவியனின் கைவண்ணம்,ஃப்ளெக்ஸ் போர்டுகளுக்குப் பிறகான ஓவியர்களின் வீழ்ச்சி,தாதாக்கள் உருவாகும் விதம்  என்று ஒரு முழு வீச்சுடன் உலாவந்திருக்கிறது.

மேற்சொன்ன ஜெயமோகன், எஸ்ரா இருவரிடமும் இருக்கும் தத்துவ விசாரமோ வாழ்வனுபவங்களின் புதிர்களை எதிர்கொள்ளும் முன்தயாரிப்போ,ஒடுக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழும்போது உருவாகும் மனவெழுச்சியோ பேட்டையில் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எழுத்தாளனின் குறுக்கீடு சிறிதும் இல்லாத சித்திரமாக சரி,தவறு என்கிற பேதங்களை பின்னொற்றாமல் சமநிலையுடன் கதை சொல்லப்படுகிறது. மலையாள நர்ஸிடம் காதல் வயப்படும் நாயகன் அவளை வசீகரிக்க  முனையும் முயற்சிகள் அனைத்தும் நாவலின் ஈரமான பக்கங்கள்.எளிய மனிதர்களின் வடிகாலாக ஆக்கிரமித்திருக்கும் குடியின் பயங்கரம்,வாசிப்பவரை உறுத்தாமல் அதேசமயம் அதன் கோரத்தை துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

முழுமையாக வாசித்து முடிக்கும்போது ஒருவிதமான வெறுமை சூழ்ந்து கொள்கிறது நம்மை. அந்த வெறுமையானது கையறுநிலையின் வெறுமை ஆகும். வாழ்வானது ஒருசில சூதுமிகு மனிதர்களின் சுயநல விளையாட்டு என்றான பிறகு எளிய மனிதர்களுக்கு சொல்லிக்கொள்ள என்னதான் மிஞ்சும் ?

ஆக சென்னை நகரத்தின் சரித்திரத்தையும் வளர்ச்சியையும் பின்புலமாகக் கொண்ட  இந்த மூன்று நாவல்களையும் இப்போது பார்த்தோம். இவற்றின் வாயிலாக நாம் சொல்ல முனைவது என்ன ?
புனைவுகள் வழி வரலாற்றை ஆவணப்படுத்திய படைப்புகள் இவை. வறட்டுச் சர்ச்சைகளால் வரலாற்றைத் தொலைத்த சமூகத்தை அடுத்த இதழில் அலசுவோம்.

*பசுவின் காம்பிலிருந்து
பால் சொட்டிக் கொண்டிருப்பது போல
பிரபஞ்சத்தின் காம்புகளிலிருந்து
இரவு சொட்டி வடிந்து கொண்டிருக்கிறது.*

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48
அடுத்த கட்டுரைவங்கத்தில் என்ன நடக்கிறது?