ஜப்பான் – ஷாகுல் ஹமீது

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,

தற்போது கப்பல் காரன் டைரி என சில கப்பல் அனுபவங்களை பதிவு செய்து வருகிறேன் .ஜப்பான் குறித்து எனது பார்வையை எழுதவேண்டுமென நினைத்து நீண்ட நாட்களாக தள்ளிப்போய்கொண்டிருந்தது.உங்கள்  ஜப்பான் பயணம் பற்றி தளத்தில் கண்டதும் நீங்கள் ஊர் திரும்பும் முன் எழுதிவிட வேண்டுமென நினைத்ததால் எழுந்த வேகத்தில் எழுதிய பதிவு இது .

அன்புடன் ,

ஷாகுல் ஹமீது .

டோக்கியோ உரை பற்றி…
ஜப்பானிலிருந்து திரும்பினோம்…

கப்பல் காரன் டைரி   -ஜப்பான்

‘Land of the rising sun’ என ஆங்கிலத்தில் சொல்வது ஜப்பானுக்கு மிக பொருத்தமானது. உலகின் முதல் கதிரெழுதல் இங்குதான்.

இரண்டாயிரத்தி ஐந்து ஜூலையில் கப்பல் பணியில் சேர்ந்தபின் இரண்டாயிரத்தி ஆறாம் ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் முதல் முதலாக ஜப்பானுக்கு (நகோயா துறைமுகம் )வந்தேன்.அன்று  முதல் இப்போதுவரை எல்லா வருடங்களும் ஜப்பானுக்கு வரும் வாய்ப்பு கிடைத்துக்கொண்டே இருக்கிறது .

ஜப்பான் தீவுகளின் நாடு.நான்கு முக்கிய பெரிய தீவுகளும்(ஹோன்சு ,ஹொக்கைடோ,கைஷு,ஷிகோகோ)ஏராளமான(ஆயிரத்து நானூறு என நினைக்கிறேன்) சிறுதீவுகளும் கொண்டது.ஜப்பானின் மொத்த (377837 km)பரப்பளவில் எழுபத்தைந்து முதல் எண்பது சதம் மலைகளால் சூழ்ந்துள்ளது. மலைகளையும் ,தீவுகளையும் இணைக்க பிரமாண்டமான பாலங்களும் ,சுரங்க பாதைகளும் நவீன தொழில்நுட்ப உதவியுடன் கட்டியுள்ளார்கள்.அந்த அதி நவீன பாலங்களுக்கு அடியில் கப்பலில் செல்வோம்.

கடல் முடிவில் இருக்கும் மலைகள் கப்பல் துறைமுகத்தை நெருங்கும்போது விரியும் மலையின் அழகு எனக்கு எப்போதும் பிரமிப்பையே தருகிறது. மலை அடியடிவாரத்திலேயே கப்பலை கட்டிவிட்டு பச்சை பசுமைக்குள்  வளைந்து,நெளிந்து,ஏறி,இறங்கி செல்லும் பாதைகளில் பயணித்துதான் வெளியில் செல்லமுடியும் .கடவுளின் தேசத்தை சேர்ந்தவர்களிடம்  நீங்களெல்லாம் இதுவரை ஜப்பானை பார்க்கவில்லை அதனால் தான் உங்கள் ஊரை கடவுளின் தேசம் என்கிறீர்கள் என சொல்வேன்.ஒத்துகொள்ளாமல் சண்டைக்கு வருவார்கள்.

கடந்த ஆண்டு(2018) ஏப்ரல் மாதம் முதல் தேதி ஜப்பானின் கோபே துறைமுகத்தில் இருந்தேன் .வெளியே செல்லும் வாய்ப்பு கிடைத்தது .கப்பலிலிருந்து இறங்கியதுமே துறைமுகத்தினுள் இருந்த மரங்களில் வெள்ளையும்,இளம் ரோஸ் நிறமும் கலந்து மலர்ந்திருந்த பூக்களை முன்பு எப்போதும் கண்டதில்லை.விஷ்ணுபுர குழும நண்பர் டோக்கியோ செந்திலை அழைத்தேன் .பணிகாரணமாக தாய்லாந்தில் இருந்த அவர் அது சக்குரா என்றார் .  “அது ஒரு வாரம் தான் இருக்கும் நல்ல ஒரு காத்து அல்லது மழை பெய்தால் அனைத்தும் உதிர்ந்திடும் மிக சரியான நேரத்தில் அங்கு இருக்கீர்கள்”என்றார் டோக்கியோ செந்தில்.

அன்று   அருகிலிருந்த NANKAI ISHIZUGAWA ரயில் நிலையத்திலிருந்து அருகிலிருந்த சிறு நகரமான  NANKAI SHICHIDO சென்று சேர்ந்தோம் .ரயில் நிலையம் ஒட்டிய வணிக வளாகத்துக்குள் சக கப்பல் பணியாளர்களுடன் சென்றேன்.வணிக வளாகம் உயர்தர பன்னாட்டு விமான நிலையத்துக்கு இணையாக இருந்தது .மதிய உணவு நேரமாததால் அங்கிருந்த உணவு விடுதியில் உணவுண்ண சென்றோம் எல்லோரும் வழக்கமான மெக்டொனல்ட் பர்கரும் ,பிரெஞ்ச் பிரைசும் சாப்பிட நான் ,சுஷி இருக்கிறதா என கேட்டேன் .அதற்கான கடை ஐந்தாவது மாடியில் இருப்பதாக சொன்னதை கேட்டு அங்கு சென்றேன் .ஜப்பானிய உணவான சுஷிக்கான பிரத்யேக உணவு விடுதி அது .ஜெயமோகனின் ஒரு பதிவில் சுஷி பற்றி படித்ததால் 2015  ஆண்டு நகோயா விமான நிலையத்தில் சுஷியை முதன்முறையாக சுவைத்திருந்தேன் .அந்த குச்சியை வைத்துதான் சாப்பிட முடியவில்லை .

வணிக வளாகத்தில் பொழுதுபோக்க விரும்பாமல் வெளியில் வந்து கால்போன போக்கில் நடந்தபோது சக்குரா பூக்கள் பூத்து குலுங்கும் ஒரு சாலையில் நின்றுகொண்டிருந்தேன் .சிறு பூங்காவை ஒட்டிய சாலையின் இரு புறமும் நின்ற மரங்களிலிருந்த கிளைகள் வானை மூடியிருக்க இலைகளே இல்லாமல் பூக்கள் மட்டுமே இருந்தது .உதிர்ந்த பூக்கள் சாலையில் கம்பளம் போல் விரிந்துகிடந்ததை பார்கையில் மனம் மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தது.அவசரமாக் மீண்டும் வணிக வாளகதிற்குள் சென்று முதல் முறையாக கப்பல் பணிக்கு வந்திருந்த இளம் பொறியாளர் இருவரை அழைத்துவந்து காண்பித்தேன்.நாங்கள் புகைப்படம் எடுத்துகொண்டிருக்கும் போது ஒரு வயதான தம்பதி எங்களை கடந்து சென்றது அந்த தாத்தா ஒருகையில் மிதி வண்டியை பிடித்திருக்க மறுகையை பாட்டி இறுக்கமாக பற்றியிருந்தார்கள்,எண்பது வயதில் நல்லா பழுத்த பழமான பின்புதான் அன்பு உறுதியாகுமோ? தாத்தா  ஜப்பானிய மொழியில் எங்களை பார்த்து எதோ சொன்னார்கள்.அவர்களுடைய புன்னகை எங்களை வாழ்த்துவதுபோல் இருந்ததால்,அவர்களுக்கு பணிவாய் “அரிகொத்தோ” என சொன்னேன் .இங்கு ஏப்ரல் ,மே மாதங்களிலும் லேசான குளிர் இருக்கும்.ஜூலை மாதத்தில் அதிக பட்ச வெப்பம் இருபத்தியைந்து பாகை .காலையில் புறப்படும்போது குளிருக்கான வெப்ப ஆடையை பைக்குள் வைத்திருந்தேன் .இரவு கப்பலுக்கு திரும்பும்போது அதை அணிந்துகொண்டேன் .

இரண்டாயிரத்து எட்டு ,இரண்டாயிரத்து ஒன்பதுகளில் இங்கு வந்தபோது ஜப்பானின் அதிநவீன தொழில்நுட்பம் ஜப்பானில் கல்யாண ராமன் திரைபடத்தில் வரும் ‘இந்தியாவும் இப்படி மாறினாக்கா எப்படி’ எனும் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தது. கட்டண  கார் நிறுத்துமிடங்களில் காரை நிறுத்தினால் தானியங்கி உயர்த்திகள் அதை உயரமான கட்டிடத்தின் மேலே கொண்டு செல்வதும்,உரியவர் வந்ததும் அதை கீழிறக்கி கொடுப்பதையும் கண்டபோது  நம்மூரும் இப்படியாகவேண்டும் எனும் ஏக்கம் இருந்தது ..

பொருளாதரத்தில் முன்னேறிய நாடு ஜப்பான் இங்கு மூலபொருட்கள் என ஏதும் இல்லை எனலாம் .மிக குறைந்த கனிம வளம்,மற்றும் நாட்டின் மொத்த தேவையில் ஒரு சதவீதம் மட்டுமே பூர்த்திசெய்யும் வகையில் எண்ணெய் வளம்.அதி நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் வாகனங்கள்,மின்சாதன பொருட்கள்,புகைப்பட கருவிகள்,தொலைக்காட்சி பெட்டிகளை ஏற்றுமதி செய்து உலகின் பொருளாதரத்தை ஜப்பானுக்கு கொண்டு வருவதை தான் அனைவரும் அறிவோம் .

கப்பல் துறையில் ஜப்பானியர்கள் முன்னோடிகள் எனலாம், .அதிகமான கப்பல்கட்டும் தளங்களும் ,துறைமுகங்களும்உள்ளன .தொழிற்சாலைகள் துறைமுகங்களை ஒட்டியே உள்ளன முன்னோடி கார் தயாரிக்கும் நிறுவனமான டோயோட்டோவும் மற்ற பல நிறுவனங்களும் தங்களுக்கு சொந்தமாக துறைமுகங்களையும் வைத்திருக்கின்றன. தங்கள் தயாரிப்புகளை அப்படியே கப்பலில் ஏற்றி ஏற்றுமதி செய்ய வசதியாக உள்ள ஏற்பாடு . கப்பலுக்கு வேண்டிய உதிரி பாகங்களும் இங்கே பெருமளவில் தயாரிக்கிறார்கள். ஒரு கப்பலை செய்து விற்றபின் அதன் ஆயுள் உள்ள வரை (இருபத்திஐந்து அல்லது அதற்கு மேல்) அந்த  கப்பலுக்கு  தேவையான அனைத்து பாகங்களும் இவர்களிடம் தான் வாங்க வேண்டும்.ஜப்பானின் உதிரி பாகங்களை கண்ண மூடிட்டு நம்பி வாங்கலாம் .

கடமை தவறாத பணியாளர்கள்,இந்நாட்டு தொழிலாளி ஒருவரிடம் பணியை கொடுத்தால் மேற்பார்வையாளர் தேவையேயில்லை.கொடுத்த பணியை மிக நேர்த்தியாக செய்யும் திறமையானவர்கள் .

ரயில் தொழில்நுட்பத்திலும் ஜப்பான் முன்னிலை எனலாம். இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு நகோயா ரயில் நிலையத்தில் நின்றிருக்கையில் (அதுதான் நான் முதன் முறையாக வெளிநாட்டில் பார்க்கும் ரயில் நிலையம்)தானியங்கி பயண சீட்டு வழங்கும் இயந்திரமும்,பயண சீட்டை செலுத்தியபின்தான் ரயில் நிலைய வாயிற் கதவுகள் திறக்கும் முறையையும் கண்டேன்.டிக்கெட் வாங்காம,ஓடும் ட்ரைன்ல சாடி ஏறுது எல்லாம் இங்க முடியாது என நினைத்துகொண்டேன்  இரண்டாயிரத்து பத்தாம் ஆண்டு தில்லி மெட்ரோ ரயிலில் பயணிக்கையில் ,கொஞ்சம் ஆறுதலாக இருந்தது நாங்களும் முன்னேறுகிறோம் என.

இரண்டாயிரத்தி பதினைந்தாம் ஆண்டு அக்டோபர் மாதம் நகோயாவில் இருக்கும் ரயில் மியுசியத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது .1905 ஆண்டு முதல் தற்போதைய தாயரிப்புகளான என் 370 புல்லட் ரயிலின் இன்ஜினும், ரயில் பெட்டிகளும் நிறுத்தபட்டிருந்தது.முதல் தளத்திலிருந்த பார்க்கையில் பாம்பே ,விக்டோரியா டர்மினசை நினைவு படுத்தியது .1937 ஆண்டிலேயே  நூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்  CLASS C 57 STEAM LOCOMOTIVE இன்ஜினை தயாரித்துள்ளனர்.புல்லெட் ரயில்கள் இயக்கும் விதம் ஒளி படமாக காட்டினார்கள்.தண்டாவளத்தில் அது மிதந்துகொண்டுதான் செல்கிறது .புல்லெட் ரயிலின்  மாதிரி ஒன்றில் பத்து நிமிடங்கள் அமர்ந்து பயணித்தோம் .

இங்குள்ள விவசாயிகள் பணக்காரர்கள் .விளைபொருட்களுக்கு நல்ல விலை இருக்கிறது இங்கே .கடந்த ஆண்டு சக்கரை கிழங்கு கிலோவிற்கு  இந்திய மதிப்பில் நூறு ரூபாய்க்கு மேல் வாங்கிய நினைவு.மொத்த நிலபரப்பில் பதிமூன்று சதம் மட்டுமே விளைநிலங்கள் ,அதில் நாற்பது சதம் அரிசி விளைவிக்கிறார்கள் ,கோதுமை,பார்லி,முக்கிய விளைபொருட்கள் ,உருளைக்கிழங்கு,முட்டைகோஸ் இன்னப்பிறவும் பயிரிடுகிறார்கள்.

இயற்கை தொடர்ந்து ஜப்பானை அழிக்கவும் செய்கிறது.பூகம்பம்,சுனாமிக்கு பஞ்சமேயில்லை.பூகம்பத்தில்  உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு எடை குறைந்த மென்மரங்களால் வீடுகளை கட்டியிருக்கிறார்கள் பூகம்ப ஆபத்து மிகுந்த இடங்களில் .ஆனால்  எளிதில் தீ பற்றிகொள்ளும் ஆபத்தும் அதில் இருக்கிறது .இரண்டாயிரத்தி பதினோராம் ஆண்டு மார்ச் மாதம் புகுஷிமாவை தாக்கிய சுனாமியால் ஜப்பானும் உலக பொருளாதாரமும் பெரிதும் பாதித்தது எனலாம் .அணுமின் நிலையம் பாதிக்கபட்டதால் அதன் கதிர்வீச்சு கடலில் கலந்தது.ஜப்பானுக்கு செல்லும் கப்பல்கள் இருநூறு கடல் மைல் தொலைவுக்கு முன்பே கடல் நீரிலிருந்து நன்னீர் தயாரிப்பதையும்,ஜப்பான் துறைமுகங்களில் நன்னீர் நிரப்பவும் தடை செய்யபட்டிருந்தது கப்பல் நிறுவனங்களால் . மிகப்பெரிய அளவில் உற்பத்தியும்,ஏற்றுமதியும் ஸ்தம்பித்தது .கப்பல்கள் பலவும் சில மாதங்கள் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைத்திருந்தோம் .சுனாமியில் அலைகழிக்கபட்டு சின்னாபின்னமான சில கப்பல்களை யார்டுகளில் கண்டேன்.இயற்கை இடர்களிருந்து இம்மக்கள் விரைவில் மீண்டெழுகிறார்கள் .

ஊரில் பார்த்த பைக்கின் பெயர்களெல்லாம் இங்குள்ள ஊர்களின் பெயர்களாக இருப்பது சிரிப்பை வரவழைத்தது.கவாசாகி,நக்கானா சாகி ,இம்மாரி,கோபே ,ஷிபா,யக்கோகாம,நரிட்டா, நகோயா,டோயோ காஸி,ஒசாகா என்பன இந்நாட்டின் ஊர்களின் பெயர்கள் .டோக்கியோ இதன் தலைநகரம் .ஜப்பானின் பணம் ‘யென்’ நூற்றி பதினைந்து யென் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகர்.

ஜப்பானிய கப்பல்களில் ஒரு பொம்மை இருக்கும் .அது மிக விலையுயர்ந்தது என்பார்கள்.ஜெயமோகன் எழுதிய ‘கெய்ஷா’ கதை வந்த அன்று ஜப்பானின் துறைமுகம் ஒன்றில் நின்றுகொண்டிருந்தோம் .ஜப்பானியர்கள் சிலர் கப்பலிலில் இருந்தார்கள்.அவர்களிடம் கப்பலிலிருந்த அந்த  பொம்மையை காட்டி “இது கெய்ஷா வா” எனக்கேட்டேன். “ஆம்” என்றனர் .

நேரமும் ,கடமையும் தவறாதவர்கள்,பணிவும் புத்தி கூர்மையும் உடையவர்கள் .இங்கு ஷிண்டோ,புத்தமதத்தை பின்பற்றுகிறார்கள் கொஞ்சம் கிறித்தவர்களும் இருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா லிட்டில் பாய்,பேட் மேன் என இரு அணுகுண்டுகளை வீசி  ஹிரோஷிமா,நாகசாகி எனும்  நகரங்களை சிதைத்தது. இருமுறை ஹிரோஷிமா துறைமுகத்திற்கு வந்துள்ளேன் ஆனால் அந்த நினைவிடத்தை பார்க்க செல்லும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.உலகின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான டோக்கியோவிற்கும் செல்லும் வாய்ப்பு நழுவி போனது.என் 370 புல்லெட் ரயிலில் ஒருமுறை பயணிக்க வேண்டுமென்ற ஆசையும் உள்ளது .

ஷாகுல் ஹமீது ,

16 May 2019.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் கடிதம்
அடுத்த கட்டுரைதக்கவைக்கும் இயந்திரம்-பிலிப் கே டிக், டி.ஏ.பாரி