விஷ்னுபுரம் நாவல் வாங்க
https://vishnupuram.com/
ஜெயமோகன் ,
எப்படி இந்த பேரூவகையை வார்த்தைகளில் கடத்துவது என தெரியவில்லை. விஷ்ணுபுரம் நாவலை இன்றுதான் வாசித்து முடித்தேன். எட்டு நாட்கள் நூறு நூறு பக்கங்கள் என கணக்கிட்டு அண்ணா நூலகத்தில் அமர்ந்து வாசித்து முடித்தேன். கடந்து போகவே முடியாத கனவு என்று இந்த நாவலை நினைத்திருந்தேன். இந்த விடுமறை அந்த கனவை சாத்தியப்படுத்திவிட்டது.
சேமித்து வைக்கப்பட்ட வாசிப்பின் அற்றலை இந்த நாவல் கோருகிறது. அந்த ஆற்றல் வெறும் எண்ணூறு பக்க நாவல் மீதான நேரக் கணக்கு அல்ல. வாசிப்பின் ஆற்றல் ஒரு யுகத்தை உள்வாங்க வேண்டியிருக்கிறது. ஒரு மணி நேரம் இன்று செலவிட்டால் போதும் என நாவலை அணுகினால் முதல் அதிகாரத்திலேயே திருவடியைப் போன்று மனம் பித்து நிலைக்கு சென்று விடுகிறது.
சென்ற வருடம் நாவலை இம்முறை முடித்து விடவேண்டும் என்ற கங்கனத்தில் வாசிப்பை ஆரம்பித்தேன். பிரமிப்ப்பில் அப்படியே வாசிப்பை ஒரே அத்தியாயத்தில் நிறுத்தி விட்டேன். முன்னேறி செல்ல முடியவில்லை. இம்முறை வாசிப்புக்கு மனம் பக்குவப்பட்டுவிட்டது. அல்லது இந்த பிரதிக்கான ஆற்றலை சேமித்து வைத்திருந்தது.
வாசிப்பில் ஓர் இடத்தில் என் மரணத்தை நானே உணருவது போன்று இருந்தது. அச்சம் ஏற்படுத்தும் மரணம் அல்ல. ஒருவன் தன் வாழ்நாளின் அந்திமத்தில் போய் சேரும் முடிவு. அஜிதனின் சக்கரம் மீண்டும் சுழல்கிறது. விஷ்ணுபுரத்தில் எதுவும் புதிதாக நடப்பதில்லை. முன்பு நடந்தது மீண்டும் ஆரம்ப புள்ளிக்கு வந்து இன்னொரு சுழற்சிக்கு நகர்கிறது.
நம் வாழ்க்கையின் மரணத்தருவாயே ஒரு யுகத்தின் முடிவு. இந்த கால கணக்கு நாள்காட்டியின் படி மிகவும் சொர்ப்பம். இந்த பாரதவர்ஷத்தின் பிரபஞ்ச கணக்குக்கு இது ஒன்றும் இல்லை. ஆனால் நாவல் அப்பேர்ப்பட்ட பாரதவர்ஷத்தின் யுக கணக்கை நம் கண்முன் நிறுத்துகிறது. இந்த காலம் என்னும் சோனா நதியின் நீண்ட நெடும் பிரவாகத்தில் என்னுடைய காலம் அளத்தலுக்கு உட்பட்டதுதான்.
கால நதியான சோனாவின் முடிவும் ஆலயத்தின் உச்சியுன் ஏதோ ஒரு இடத்தில் வாசகன் பார்வையில் சேர்ந்தடைய வேண்டிய இடங்களாக இருக்கின்றன. விஷ்ணுபுரத்தின் உச்சம் சோனாயின் முடிவெல்லை. இதைக் கன்டடைந்தவன் நாவலில் வரும் சித்தன். அவன் உச்சத்தில் இருந்து முழுமையைக் கண்டவன். அஜிதனோ கிழே இருந்து உச்சத்தை தரிசிக்கிறவன். முழுமை அங்கு இல்லை. விஷ்ணுபுரத்தின் ஒரு பகுதிதான் அவன் கண்ட தரிசனம். மலையின் பின்பகுதி அவனுக்கு தெரியாது. தான் கண்டதைக் கொண்டு அஜிதன் தர்க்கிக்கலாம். சித்தனே முழுமையைக் கண்டவன். அவனுக்கு மாத்திரமே அஜிதனின் மறுபக்கமான நிழல் படிந்த பகுதியும் தெரியும்.
சுடர்கள் எரியும் போதும் கிருஷ்ண பருந்து வரும்போதும் வாசகனுக்கும் மன்றத்தினருக்கும் அஜிதனின் வெளிச்சத்தின் பக்கம் தான் தெரியும். ஏன் தன்னுள் இருக்கும் அந்த இருளான பகுதியின் பெயர், இருப்பு, அர்த்தம் என எதுவும் அஜிதனுக்கே தெரியாது. சித்தனே அதனை கண்டு எள்ளி நகையாடுகிறவன். அவனே விஷ்ணுபுரத்தின் உச்சியை ஏறிச்சென்று அமர்ந்தவன். பாரதவர்ஷ்த்தின் அகண்ட பரப்பும் அதன் யுக கணக்கும் சித்தனுக்கு மாத்திரமே புலப்படக் கூடியவைகள். மரணத்தின் ஆரம்ப எல்லையும் அவனுக்கே தெரியும் அதன் மறு எல்லையும் தெரியும்.
குடியின் குல மூப்பன் திரும்பி படுக்கும் போது திரேத யுகம் முடிந்து மகாபாரதத்தின் துவாபர யுகம் ஆரம்பிக்கும் எனவும் அதுவே நாவலில் வெண்முரசாக காவியமாக்கப்படும் எனவும் சித்தனே அறிவான். காரணம் அவன் விஷ்ணுபுரத்தின் உச்சிக்கு ஏறிச்சென்றவன் அங்கிருந்து சோனாவின் முடிவெல்லையைக் கண்டவன்.
அருள் ஸ்காட்