‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45

எட்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான துருதர் பாரதவர்ஷத்தில் மலைக்காடுகள் மண்டிய மணிப்பூரக நாட்டிலிருந்து வந்திருந்தார். மூங்கில்களை ஒன்றுடன் ஒன்று சேர்த்து அமைக்கப்பட்டிருந்த வேத்ரம் என்னும் இசைக்கருவியின் மீது சிறிய கழிகளால் விரைந்து தட்டி யாழ்நிகர் ஒலியெழுப்பி அவர் பாடத்தொடங்கினார். “தோழரே இக்கதையை கேளுங்கள். இது செவிகளினூடாக பரவி, புல்விதைகள் போல் பெருகி, அருகு போல் செழித்து, அனல் கடந்து, நீர்ப் பெருக்கை வென்று என்றும் இங்கு நின்றிருக்கும் சொல்லென்று உணர்க! இதைச் சொல்லும் நான் புல்லின் வேர். ஆலமரங்கள் சரியும், மலைகள் மடிந்து மண்ணாகவும் கூடும், புல் என்றும் இங்கிருக்கும். புல்லின் தழல் என என் நா எழுக! இச்சொல் இங்கு விளைக! ஓம், அவ்வாறே ஆகுக!

சூழ்ந்திருந்த சூதர்களும் கைகளைக்கூப்பி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று ஒலிக்க துருதர் தன் கதையை சொல்லத்தொடங்கினார். இது முன்பொரு நாள் நிகழ்ந்தது. பிருகு குலத்து அந்தணரும் மழுவேந்திய மாவீரருமான பரசுராமர் கோதை நதியின் கரையிலிருந்த தன்னுடைய குடிலிலிருந்து தன் மூதாதையருக்குரிய ஆண்டு நீர்க்கடன் செய்யும் பொருட்டு கிளம்பினார். அன்று அவருடன் இருந்தவன் இளைய மாணவனாகிய கர்ணன் மட்டுமே. ஆசிரியனின் நிழல் தன் மீது எப்போதும் விழும்படி, தன் காலடியோசை எழுந்து அவர் சித்த ஓட்டத்தை முறிக்காதபடி அணுகியும் அணுகாமலும் அவன் அவரைத் தொடர்ந்தான். அது அனலுக்குரிய நாள். வைகாசி மாதம் வளர்பிறை மூன்றாம்நாள். குறைவிலா மூன்றாம்பக்கம். பார்க்கவ குலத்து முனிவர்களுக்கு அவர்களின் வழித்தோன்றல்கள் நீரளிக்கும் பொழுது. பாரதவர்ஷம் எங்குமிருந்த பரசுராமர் நிலைகளில் பூசனைகள் நிகழும். அனல்குலத்து அந்தணர் அனலோம்பி அவியிட்டு குருநிரையை வழுத்துவர். அனல்குடி ஷத்ரியர்கள் குருபூசனைசெய்வர்.

அன்று முதற்கதிர் எழும் தருணத்தில் கோதையின் கரையை அடைந்த பரசுராமர் தன் வில்லை நிலத்தில் வைத்துவிட்டு நீரருகே சென்று அதை தன் சுட்டுவிரலால் தொட்டார். கோதையின் நீர் செவ்வொளி கொண்டு அனல்பெருக்காக மாறி ஓடத்தொடங்கியது. அதிலிருந்து வாள் என, நெருப்பென, தளிரென மின்னிய மீன்கள் துள்ளி எழுந்து விழுந்து அலைவட்டம் கிளப்பின. நீரை மும்முறை அள்ளி ஒளிர்ந்து வழியவிட்டு முன்னோருக்குச் சொல்லும் முறைவணக்கமும் முடித்தபின் பரசுராமர் நீர்மேல் கால்வைத்து நிலம்மேல் என நடந்து நடுஆற்றை சென்றடைந்தார். ஆற்றின் நடுவே மலரமர்வில் கால்களை மடித்து அமர்ந்தார். அவரைச்சூழ்ந்து அனற்கொழுந்தின் அலைவென கோதை ஓடிக்கொண்டிருந்தது. பொன்னுருகி வழிவதுபோல் பரசுராமரின் தாடியும் குழல்கற்றைகளும் பொன்னொளி கொண்டன. அங்கிருந்து நோக்கியபோது நீரில் பொற்றாமரை மலர்ந்ததெனத் தோன்றியது.

கரையில் இருகைகளையும் நெஞ்சோடு சேர்த்துக்கட்டி தன் ஆசிரியரை நோக்கியபடி கர்ணன் நின்றிருந்தான். குறையுணர்ந்து விழித்துக்கொண்ட பரசுராமர் தன் கையைத்தூக்கி அசைத்து  “வில்லை கொண்டு வருக!” என்று ஆணையிட்டார். தன் அருகே அவர் வைத்த வில் இருப்பதைக் கண்ட கர்ணன் அதை எடுக்கும்பொருட்டு சென்றபோது அதைச்சூழ்ந்து ஓர் அனல் வட்டம் எழுவதைக்கண்டு திகைத்து நின்றான். மீண்டும் ஆசிரியரின் பெயரை உளம் நிறுத்தி அதை அணுகி எடுக்க முயன்றபோது அவனை சுட்டு தூக்கி வீசியது சூழ மின் என துடிப்புகொண்டு எழுந்த அனல். மீண்டும் ஒருமுறை முயன்றபின் உடல் வெந்து உயிர் தளர்ந்து அவன் நிலத்தில் விழுந்தான்.

அதன் பின்னரே பரசுராமர் திரும்பி அவன் விழுந்துவிட்டதைக் கண்டார். எழுந்து நீர்மேல் நடந்து அருகணைந்து சுட்டுவிரலைக்கொண்டு அவ்வில்லை எடுத்தார். மூன்று முறை அம்பு தொடுத்து கோதையின் மீது எய்தார். மூன்று அம்புகள் மூன்று மீன்கொத்தி முத்தங்கள் என நீர்ப்பரப்பை தொட்டன. அவருடைய மூதாதையர்களான ஜமதக்னியும், ருசிகரும், ஊர்வரும், சியவனரும், பிருகுவும் எழுந்துவந்தனர். அலைவடிவான கைகள் விரித்து அவர் அளித்த அக்கொடையை பெற்றுக்கொண்டனர். வில்லை தோளிலிட்டபடி பரசுராமர் திரும்பி நடக்க கர்ணன் அவருக்குப் பின்னால் சென்றான். அவர் அன்று காலை உணவு உண்பதில்லை என்பதனால் ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தார். சற்று முன்னால் சென்று அவர் விழி முன் இல்லாமலும் நோக்கில் இருந்து அகலாமலும் கர்ணன் நின்றான்.

கண் மூடி நெடுநேரம் அமர்ந்திருந்தபின் அவர் தன் உணர்வு கொண்டு விழித்து அவனைப் பார்த்து சில கணங்கள் விழி கூர்ந்து நீள் மூச்செறிந்து “என் பிழைதான்” என்றார். கர்ணன் அவரை பணிவுடன் நோக்கி நிற்க “உன்னால் அது இயலாது என்று நான் எண்ணியிருக்கவில்லை. என் மாணவர்கள் அனைவரும் இயல்பாக அதை இயற்றக்கூடும் என்று நான் எண்ணினேன்” என்றார். கர்ணன் “தங்கள் மாணவர்களில் நான் எவ்வகையில் குறைவுடையவன், ஆசிரியரே?” என்றான். “இது அனல்குலத்து முன்னோர் தங்கள் கைகளில் சூடியிருந்த வில். நூற்றெட்டு பரசுராமர்கள் இதை ஏந்தியிருக்கிறார்கள். இன்னும் முடிவிலி வரை பரசுராமர்கள் இதை ஏந்துவார்கள். பரசுராமர் என்றாகும் தகைமை கொண்டவனே இதை தொட இயலும். நீ ஷத்ரியன் அல்ல, அந்தணனும் அல்ல. எளிய போர் வீரன். உன்னால் இதை தொட இயலாமல் ஆனது இயல்பே” என்றார் பரசுராமர்.

கர்ணன் கைகூப்பி “நான் இதை தொடவும் ஏந்தவும் விழைகிறேன், ஆசிரியரே” என்றான். “நீ ஏன் இதை தொடவேண்டும்? நீ சென்று நிற்கப்போகும் எந்தக்களத்திலும் இது உனக்கு உதவப்போவதில்லை. இது மண்ணை வெல்லும், விண்ணை வளைத்து அணையச்செய்யும். மாபெரும் யோகிகளுக்கு நிகராக உன்னை அமரவைக்கும். ஆனால் இவ்வுலகில் மானுடன் அடையப்பெறும் எளிய செல்வங்கள் அவன் இயற்றும் உலகியல் செயல் எதற்கும் இதை பயன்படுத்த இய்லாது” என்றார். கர்ணன் “ஆசிரியரே, மாணவன் ஆசிரியனாக மாறுவதே கல்வி என்பது. நான் தங்களைப்போல் ஆகவில்லை எனில் இத்தனை தொலைவு வந்து, இங்கு தங்கள் அடிபணிந்து, சொல்பெறுவதில் என்ன பொருள்? அது எனக்கு இழிவு. அவ்வண்ணம் கல்வி முழுமையடையாது நான் செல்வேனெனில் தங்கள் பெருமைக்கு குறைவும்கூட” என்றான்.

“மூடா! இது எளிய செயலுக்கு பயன்படாது என்று உணர்க! நீ இவ்வுலகில் திகழ்பவன், யோகம் தேடும் ஊழ் இல்லாதவன்” என்று பரசுராமர் மீண்டும் சொன்னார். “எளிய செயல் என்பது என்ன? பேரரசுகளை உருவாக்குவது, பல்லாயிரம் கோடி மக்களின் நலன் பேணுவது, வேள்வி நிறைய வைப்பது, வேதம் விளையச்செய்வது, எளிய செயலா என்ன?” என்று கர்ணன் கேட்டான். “ராஜசூயத்தில் தன் கருவூலம் ஒழியும்படி அள்ளி வழங்கும் அரசன் ஆயிரம் வேதியருக்கு நிகரானவன், ஏழு தலைமுறைக்காலம் அனல் புரந்த அந்தணர் சென்று அமரும் இட்த்தில் தானும் சென்று அமர்பவன் என பராசர ஸ்மிருதி சொல்வதை தாங்கள் அறிந்திருப்பீர்கள், ஆசிரியரே” என்று தொடர்ந்தான். “ஒவ்வொருவரும் தங்கள் உச்ச எல்லையில் சென்று நின்று செய்வதே பெருஞ்செயல். அது தன்நலம் கருதியதாக அமையாது.”

அவனை நோக்கிக்கொண்டிருந்த பரசுராமர் ஒருகணத்தில் வாய்விட்டு நகைத்தார். “நான் பராசர ஸ்மிருதியை சொன்னேன்” என்று கர்ணன் விழிதாழ்த்தினான். “எல்ல்லையற்ற ஆற்றல்கொண்ட இந்த வில்லால் எளிய வெற்றிகள் என்று தாங்கள் கூறும் இவ்வுலகத்துப் பொருட்களை வென்றெடுக்க இயலாதா என்ன?” என்றான். “இயலும். அவை இந்த வில்லையும் அம்பையும் கொண்டவனுக்கு மிக எளிய விளையாட்டுக்கள்” என்று பரசுராமர் சொன்னார்.  “எனில் எனக்கு இந்த வில்லை ஏந்தும் ஆற்றலை அளியுங்கள். தேக்கு மரங்களை வேருடன் பிழுதெடுக்கும் ஆற்றல் கொண்ட காட்டுவேழத்தின் முகக்கை மென்மலர்களை தொட்டெடுத்து சுருட்டிக்கொள்வதையும் நான் கண்டதுண்டு. பெரும்படைக்கலங்கள் அனைத்தும் எண்ணித்தீரா நுண்மை கொண்டவை” என்று கர்ணன் சொன்னான். இளஅகவையருக்குரிய உறுதியுடன் அவர்களுக்கே உரிய நம்பிக்கையுடன் அவன் ஆசிரியரிடம் பேசினான்.

“என் இலக்கு எதுவெனினும் இது என் படைக்கலமாகுக! இதை ஏந்துகையில் நான் தாங்களாக மாறுவேன். அத்தருணத்தில் மட்டுமே நான் முழுமை கொள்வேன்” என்றான் கர்ணன். பரசுராமர் அறிவுதெளியா இளமைந்தனை நோக்கும் தந்தையின் கனிவு நிறைந்த நகைப்புடன் அவனைப் பார்த்து “இதை பெறுவதற்கு நீ இயற்றவேண்டிய தவம் என்னவென்று அறிவாயா?” என்றார். “எத்தவமாயினும் ஆகுக! நான் இயற்றுவேன்” என்றான் கர்ணன். பரசுராமர் வாய்விட்டு நகைத்து தன் தொடையில் தட்டியபடி எழுந்தார். “நன்று எத்தவம் தேவை என்று அறிவாயா எனக் கேட்டதும் எதுவானாலும் ஆகுக என்று உரைப்பவன் மட்டுமே தவம் செய்ய இயலும். எண்ணிச் செயல்சூழ்பவன் அருந்தவம் செய்வதில்லை. தவநோன்பென்பது எண்ணிய அக்கணமே எஞ்சியவற்றை அறுத்தெறிபவர்களுக்குரியது” என்றார். “என் குடிலுக்கு இன்று மாலை வருக! இதன் பொருளென்னவென்று உனக்குச் சொல்கிறேன்” என்று அவன் தலைமேல் கைவைத்து வருடினார்.

அன்று மாலை பரசுராமரின் குடில் முற்றத்தில் பனை விதையின் சாரம் பிழிந்தெடுத்த நெய் ஊற்றிய கல்லகல் எரிந்துகொண்டிருக்க அதன் அருகே கர்ணன் கால்மடித்து கைகூப்பி அமர்ந்தான். அவன் முன் கல்பீடத்தில் அமர்ந்த பரசுராமர் அவனுக்கு ஐந்தனல் யோகத்தின் கதையை சொன்னார். அக்னி வித்யை, அக்ஷர வித்யை, ஆனந்த வித்யை, அதிம்ருத்யுபாஸன வித்யை, பாலாகி வித்யை, பூம வித்யை , ப்ரம்ம வித்யை, சாண்டில்ய வித்யை, தஹர வித்யை,. ஜ்யோதிர் வித்யை, கோச விஜ்ஞான வித்யை, மது வித்யை, மைத்ரேயி வித்யை, கௌரக்ஷ ஜ்யோதிர் வித்யை, ந்யாஸ வித்யை, பஞ்சாக்னி வித்யை, பர வித்யை, பர்யங்க வித்யை, ப்ரஜாபதி வித்யை, ப்ராண வித்யை, ப்ரதர்ன வித்யை, புருஷ வித்யை, புருஷாத்ம வித்யை, ரைக்வ வித்யை, புருஷோத்தம வித்யை, ஸத் வித்யை, ஸர்வ பர வித்யை,. ஷோடஸ கல ப்ரஹ்ம வித்யை, உத்கீத வித்யை , உபகோஸல வித்யை, வைஷ்ணவ வித்யை, வைச்வாநர வித்யை என முப்பத்திரண்டு வித்யைகளை யோகநூல்கள் சொல்கின்றன. அவற்றில் ஒன்றான பஞ்சாக்னி வித்யை வன்பாதை. ஷத்ரியர்களுக்கு மட்டுமே உரியது. அதை பிறர் அறிந்திருக்கவில்லை.

நெடுங்காலம் ஷத்ரியர் தங்கள் குல முறைப்படியும் குருமுறைப்படியும் அதை பேணினர். அதை பெற்ற முதல் அந்தணர் ஆருணியான உத்தாலகர். அதை ஆற்றி தகைவு கொண்டவர் அந்தணனின் தொழிலெல்லை கடந்து, அறிவெல்லை கடந்து, ஷத்ரியனும் ஆகி நிமிர்ந்தவராகிய அவர் மைந்தன் ஸ்வேதகேது. உத்தாலகரின் மைந்தரான ஸ்வேதகேது அந்தணருக்குரிய அனைத்தையும் கற்றபின் பாஞ்சாலநாட்டு அவைக்குச் சென்று அங்கே அரசுவீற்றிருந்த பிரவாகண ஜைவாலி என்னும் அரசருக்கு அறமுரைக்க முற்பட்டார். “அந்தணரே, உமது கல்வியின் தொலைவென்ன?” என்று உசாவிய பிரவாகணர் ஐந்து வினாக்களை தொடுத்தார். ஐந்துக்கும் மறுமொழி சொல்ல இயலாது உளம்நலிந்த ஸ்வேதகேது திரும்பிச்சென்று தந்தையிடம் அவற்றை கேட்டார்.

உத்தாலகருக்கும் அந்த விடை தெரிந்திருக்கவில்லை. அவர் பிரவாகணரிடம் சென்று அவ்வினாக்களுக்குரிய விடையை கேட்டார். ஷத்ரியர்களுக்கு மட்டுமே உரிய மெய்யறிதல் அது என்று பிரவாகணர் சொன்னார். அதை எய்துவதற்கும் ஷத்ரிய ஆற்றல் தேவை என்றார். “நான் ஷத்ரியனாகிறேன். என் மைந்தனும் ஷத்ரியனாகி அவ்வித்தையை கற்பான்” என்றார் உத்தாலகர். பாஞ்சாலனாகிய பிரவாகண ஜைவாலி ஆணவம் அகற்றி, குலமிழந்து தன் அடிபணிந்து அமர்ந்த ஆருணியாகிய உத்தாலகருக்கு ஐந்தனல்யோகத்தை கற்பித்தார். அது பின்னர் அனைவருக்கும் உரியதாகியது. பிருகுகுலத்து அனல்குடி முனிவர்கள் தங்கள் யோகமுறை என அதை கொண்டார்கள்.

பிரம்மத்தின் சுடர்வே அனல். அனல்களே இப்புடவியை சமைத்திருக்கின்றன. ஐந்துவகைகளில் அறியப்படுவதனால் அவ்வனல்வெளி ஐந்தனல் எனப்படுகிறது என்று பரசுராமர் சொன்னார். அனலை அறிவது புடவிமெய்மையை உணர்வது. அனலென்றாவது மாயையை அழித்து மானுட எல்லை கடப்பது. புடவியை ஆள்பவை ஐந்து அனல்கள். மின்வடிவில் விண் நிறைப்பது ஒன்று. பருவடிவப் பொருளென்றாகி நிலைப்பது பிறிதொன்று. விசையென்றாகி பொருள்களை ஆட்டுவிப்பது மூன்றாவது, இணைவும் பிரிவும் அழிவும் என்றாகி பொருள்களை ஆளும் நெறியாகி நிற்பது நாலாவது அனல். இன்மை என்றாகி இருள் வடிவில் சுழல்வது ஐந்தாம் அனல். இவ்வுடலை ஐந்தனல்கள் ஆள்கின்றன. மூலாதாரத்தில் காமம். சுவாதிட்டானத்தில் பசி. மணிபூரகத்தில் இதயம். அனாகதத்தில் மூச்சு. விசுத்தியில் சொல்.

இப்புவியை ஆள்கின்றன ஐந்தனல்கள். ஒன்று விண்ணில் ஒளியென உறைகிறது. பிறிதொன்று அனைத்துப் பருப்பொருட்களிலும் அனல் என உறைகிறது. நீரில் வாழ்கிறது மூன்றாவது. அன்னத்தை உயிர்பெறச்செய்வது அது. கருவில் தளிரில் குருதியில் நிறைந்திருப்பது. நான்காவது அனல் சொல்லில் பொருள் எனத் திகழ்கிறது. ஐந்தாவது அனல் யோகத்தில் வெறுமையென விரிகிறது. ஐந்து வகை கருவனல்களால் இவை படைக்கப்படுகின்றன. விண்ணின் தூயநீர்வெளி. அதிலெழுந்தவை விண்மீன்களும் சூரியனும் சந்திரனும். முகில்களில் விளைகின்றது மழை. மண்ணின் கருவிலெழும் அனலே உணவாகிறது. ஆணின் விந்துவிலும் பெண்ணின் கருப்பையிலும் வாழும் அனல்கள் உடலென உள்ளமென பொறிகளென சித்தமென மலர்ந்து நோக்கு கொண்டு புடவிசமைக்கின்றன.

பரசுராமர் சொன்னார் “கதிர் கொள் அனைத்திலும் எழுகிறது அனல். ஐந்து அனல்தெய்வங்களை வணங்குக! முன்பு பிரவாகண ஜைவாலி ஸ்வேதகேதுவுக்கு அளித்த ஐந்தனல் யோகநெறியை நான் உனக்கு உரைக்கிறேன். ஐந்து ஆற்றல்கள், ஐந்து அழிவின்மைகள், ஐந்து இன்மைகள். அவை உனக்கு அருள்க!” கர்ணன் அவர் காலடியை வணங்கி அச்சொற்களை பெற்றான். நூலறிவுறுத்திய நெறிகளின்படி கர்ணன் கோதையின் கரையில் ஏழுபனை என்று பெயர் கொண்ட குன்றின் மீது நூற்றெட்டு பாறைக்கற்களை கூம்பு வடிவில் அடுக்கி தனக்கென கற்சிதை ஒன்று அமைத்தான். அதனைச் சுற்றி விறகுகளை அடுக்கி அனல்மூட்டினான். கிழக்கு திசையின் அனலான ஜாதவேதனும் மேற்கின் அனலோனான வஹ்னியும் எழுந்தனர். தெற்கே சாவின் நெருப்பான கிரவ்யாதன் பற்றிக்கொண்டான். வடக்கே ஊழிநெருப்பான ருத்ரன். மேலே விண்நெருப்பான சூரியன் ஒளிசூடி நின்றான்.

அந்தச் சிதைபீடத்தின் மீதேறி கிழக்கு நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்தான் கர்ணன். ஜ்வாலை, கீலம், அர்ச்சிஸ், ஹேதி, சிகை என்னும் ஐந்து தழல்கள் எழுந்து சுழன்றாடின. ஃபூதி, ஃபஸிதம், பஸ்மம், க்ஷாரம், ரக்ஷ என்னும் ஐந்து சாம்பல்கள் தோன்றின. அனல் ஜ்வலனன், பர்ஹிஸ், கிருசானு, பாவகன், அனலன், தஹனன், தமுனஸ், விஃபவஸ், சூசி என்னும் தன் முடிவிலா வடிவங்களில் வண்ணவண்ணத் தோற்றங்களில் அவனைச்சூழ்ந்து எழுந்தான். அனல்பட்டு உடல் பொசுங்க பாறை கொதித்து தானும் அனலென்றாகி மெய்யுருக கர்ணன் நின்றான். உடலென்பது எரியும் நீரும் நிகர்செய்த கணமே இருப்பென்றாகி நீளும் காலம் கொண்டது என்று உணர்ந்தான். நீரும் அனலே என்று உணர்கையில் அனல் ஏந்திய அனலே உடலென்று அறிந்தான். அனலன்றி பொருளென்று ஏதுமில்லை. அனல்தலன்றி நிகழ்வென்று ஏதும் புடவியில் இல்லை. அனலாதலே தவம். அனல் மூன்று நிலை கொண்டது. எழும் அனல், அணையும் அனல். அனலின்மை, இன்மையென ஆன அனல். இன்மையனலில் இருப்புகொண்டுள்ளன அனைத்தும். கருவனல் அது. காண்பதற்கரியது. யோகத்தீ. அவன் அதை சென்றடைந்தான். அது அவனைத் தொட்டு தானாக்கிக் கொண்டது.

ஐந்தனல் மேல் தவம் செய்பவன் தன்னுள் ஒவ்வொரு அனலாக எழுப்புகிறான். அவை தன்னை கொதிக்க வைத்து, உருக வைத்து. முற்றழிப்பதை காண்கிறான். பின்னர் அனலின் ஆழத்தில் தண்ணிலவு ஒன்று எழுகிறது. விண்ணின் அமுதாக உருகிச்சொட்டிய துளி என நோக்குகையிலேயே உடல் தித்திக்கவைப்பது அது. எண்ண எண்ண சித்தம் குளிர வைப்பது. அதிலிருந்து பெருகி வழியும் வெண்ணிற தண்மையில் தன் உடலின் அனல்கள் ஒவ்வொன்றாக அணைவதை காண்கிறான். அனைத்து அனல்களும் அணைந்து குளிர்ந்த பாறை ஒன்று சுனையடியில் கிடப்பதுபோல் தான் அங்கு இருப்பதை அவன் உணர்கிறான். பின்னர் விழி திறந்து நோக்குகையில் அவன் தன்னைச் சூழ்ந்திருந்த அனல் குளிர்ந்த மென்மலர்களாக ஆகிவிட்டிருப்பதை காண்பான்.

கர்ணன் விழி திறந்தபோது தன் இரு கண்மணிகளும் பனிக்கட்டிகளென குளிர்ந்திருப்பதை உணர்ந்தான். கிழக்குத்திசையில் பொற்கொன்றை மரம் பூத்திருந்தது. மேற்கே செந்தழலென செண்பகம். வடக்கே பொன்பூசி நின்றது வேங்கை. தெற்கே செவ்வொளி கொண்டிருந்தது காந்தள். அவன் எழுந்து நான்கு பூமரங்களையும் வணங்கினான். தலைக்கு மேல் பொன்முகில்கள் அலைதிரண்டு ஒளி சூடி நின்றிருந்தன. தன் உடல் ஒளிகொண்டிருப்பதை, ஆகவே நிழலற்றிருப்பதை அவன் கண்டான். விழிமூடி ஆசிரியரின் காலடிகளை சித்தத்தில் நிரப்பி தொழுதான்.

கொன்றையில் எழுந்த முதல் அனலோனாகிய ஜாதவேதன் அவன் முன் தோன்றினான். பொன்னெரியாலான ஒளியுடல்கொண்டிருந்தான். வலக்கையில் அமுதகலமும் இடக்கையில் வேள்விக்குரிய நெய்க்கரண்டியும் ஏந்தியிருந்தான். அவன் நா எரிகுளத்தின் எழுதழலென பறந்தது. “உன் தவம் பொலிக! உன் அம்பில் நான் எழுவேன். உன் ஆணைப்படி நின்று ஆடுவேன். என் அருளை பெறுக!” கர்ணன் அவனை வணங்கினான். செண்பகத்தில் வஹ்னி எழுந்தான். வலக்கையில் தர்ப்பையும் இடக்கையில் மின்படையும் வைத்திருந்தான். “உன் படைக்கலம் என ஆவேன். உன்னுடன் நின்றிருப்பேன்” என அருள் அளித்தான். தெற்கே காந்தளில் எழுந்த கிரவ்யாதன் “நீ விழையும்வரை உனக்கு சாவில்லை. விழைந்தால் அழிவின்மையையும் அளிப்பேன்” என்றான். வடக்கே வேங்கையில் எழுந்த ஊழித்தீயான ருத்ரன் “வீரனே, உலகனைத்தையும் உண்ணும் பசியுடன் உன் அம்புகளில் வாழ்வேன்” என்றான்.

விண்ணிலிருந்து ஒளிரும் இளமழை என இறங்கி அவன் முன் நின்று ஐந்தாவது அனலோன் சொன்னான். “விண்ணெரிவடிவு கொண்ட என் பெயர் திரிகாலன். என்னை நீ எடுக்கையில் உருத்திரனுக்கும் ஆழிவெண்சங்கு கொண்டவனுக்கும் நிகராக ஆவாய். அவர்களும் உன்னை எதிர்த்து வெல்லமுடியாதவர்கள் என உணர்வார்கள். என்னை கையில் வைத்து நீ இவ்வுலகை ஏழு முறை அழிக்க இயலும். ஏழாயிரம் முறை புரக்கவும் இயலும். ஆம் அவ்வாறே ஆகுக!” கர்ணன் ஐந்தாம் அனலோனை வணங்கி தன் ஆசிரியரின் குடிலுக்கு திரும்பினான். அவர் காலடிகளைப் பணிந்து “நான் மீண்டேன், ஆசிரியரே” என்றான். அவர் புன்னகையுடன் தன் வில்லை சுட்டிக்காட்டினார். அவன் சென்று அதை எடுத்தபோது மென்மூங்கில்போல் எடையற்று குளிர்ந்திருந்தது.

எட்டாவது சூதரான துருதர் சொன்னார். “அன்று காலை கர்ணன் தன் விஜயத்தை எடுத்தபோது அதைச்சூழ்ந்து ஐந்து அனலவன்களும் ஒளிக்கதிர்களாக விரிந்திருப்பதை கண்டான். அப்போரில் அவர்கள் தன்னுடன் வருவார்கள் என்று உணர்ந்தான். சூதரே, மாகதரே, கேளுங்கள். அன்றைய போர் ஐந்தனல்கள் ஆற்றிய விளையாடலாக அமைந்தது.”

முந்தைய கட்டுரைசக்கரம் மாற்றுதல்
அடுத்த கட்டுரைரப்பர் -வாசிப்பு