(2019 ஊட்டி குரு நித்யா காவிய முகாமில் சுசித்ரா பேசியதன் கட்டுரை வடிவம்)
அறிவியல் புனைகதை என்ற வடிவை பற்றி சுறுக்கமாக பேசி அதனை ஒட்டி ஒரு விவாதத்தை முன்னடத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளேன். அறிவியல் புனைகதை என்ற இலக்கிய வடிவம் அடிப்படையில் நவீன அறிவியலைச் சார்ந்து உருவாகி வந்துள்ள ஒன்று. நவீன அறிவியல் மேற்கத்திய அறிவியக்கத்தின் குழந்தை. மேற்கத்திய அறிவியக்க வரலாற்றை புரிந்துகொள்ளாமல் அறிபுனையின் இடம், அதற்கான வரலாற்றுத் தேவை, அதன் வகைமைகள், எல்லைகளை நோக்கிச் செல்ல முடியாது. அங்கிருந்தே இந்திய பின்புலத்தில் அறிவியல் புனைவுக்கான இடம் என்ன என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ள முடியும். மேற்கத்திய அறிவியக்க வரலாற்றின் ஆழத்தில் உள்ள ஒரு அடிப்படை முரணின் புரிதல் இதற்கு தேவையாகிறது.
மேற்கத்திய அறிவியக்க வரலாற்றில் பொதிந்துள்ள அந்த மைய முடிச்சை மறுமலர்ச்சி காலகட்டத்து ஓவியர் ரஃபேல் வரைந்த ‘The School of Athens’ என்ற புகழ்பெற்ற ஓவியத்தில் காணலாம். கிரேக்க மரபின் இரு பெரும் தத்துவவாதிகளை மையத்தில் அமைத்து அவர்களை சுற்றி வடிவமைக்கப்பட்டுள்ள ஓவியம் இது. ஓவியத்தின் இடது பக்கத்தில் பிளாட்டோவும், வலது பக்கத்தில் அரிஸ்டாட்டிலும் இடம்பெருகின்றனர்.
இடது பக்கம் நிற்கும் பிளாட்டோ தன்னுடைய வலதுகையின் ஆட்காட்டி விரலை செங்குத்தாக தூக்கி வானை சுட்டும்படி காட்சிப்படுத்தப்பட்டுள்ளார். வலதுபுறமாக நிற்கும் அரிஸ்டாட்டில் தன்னுடைய உள்ளங்கையை கிடைமட்டமாக, நிலத்துக்கு சமதளமாக வைத்துள்ளார். பிளாட்டோ வானையும் நெருப்பையும் குறிக்கும் நிறங்களிலும், அரிஸ்டாட்டில் அதற்கு மாற்றாக நீரையும் நிலத்தையும் குறிக்கும் நிறங்களிலும் உடை அணிந்தபடி காட்சிபடுத்தப்பட்டுள்ளார்கள்.
பிளாட்டோவின் பக்கமாக ஓவியத்தின் இடதுபுறத்தில் பெரும்பாலும் தத்துவவாதிகள், கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவர்களை ஒருவிதத்தில் கனவுஜீவிகள் என்று சொல்லலாம். தத்துவதர்க்கமும் அகக்காட்சியும் கற்பனையும் உள்ளுணர்வும் சார்ந்து இயங்குபவர்கள் இவர்கள்.
அரிஸ்டாட்டிலின் பக்கமாக ஓவியத்தின் வலதுபுறத்தில் பெரும்பாலும் அறிவியலாளர்களையும், கணிதவல்லுனர்களையும், வானியல் ஆராய்ச்சியாளர்களையும் ரஃபேல் காட்சிப்படுத்தியுள்ளார். தூய அறிவின் பார்வையை சார்ந்து இயங்குபவர்கள் இவர்கள் என்று பொதுமைபடுத்தலாம்.
இரண்டு கலாச்சாரங்கள்
இந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள பிளாட்டோவின் தரப்புக்கும் அரிஸ்டாட்டிலின் தரப்புக்கும் பொதுவாக ஒரு முக்கிய அடிப்படை வேறுபாட்டை முன்வைக்கலாம். பிளாட்டோவின் தரப்பு அறிதலுக்கு தன் முக்கிய பிரமாணமாக உள்ளுணர்வையும் உபமானத்தையும் நம்பியிருக்கிறது. அரிஸ்டாட்டிலின் தரப்பு நேரடி புலன் அனுபவத்தை, பிரத்யட்சத்தை, மட்டுமே தன்னுடைய பிரதான அறிதல் பிரமாணமாக கொண்டுள்ளது.
தத்துவை-கலை-இலக்கிய நோக்குக்கும் அறிவியல் நோக்குக்கும் உள்ள முக்கியமான மைய வேறுபாடு இதுதான். மொத்த மேற்குலக அறிவியக்க வரலாற்றை இந்த முரணின் நீட்சியாக புரிந்துகொள்ளலாம்.
மேற்குலகில் இதே முரண் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வடிவங்களில் முளைத்து வருகிறது. கிறித்துவம் தோன்றிய பிறகு மதம் x அறிவியல் என்ற முரணும் இந்த அடிப்படை அறிதல்முறை விரிசலின் ஒரு தரப்பு என்று வாதிடலாம். 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் அறிவொளி காலம் தொடங்கியது. கற்பனாவாத பண்புகளை வலியுறுத்திய ரூஸோ ஒரு புறமும், தூய அறிவின் அதிகாரத்தை விதந்தோதிய வால்டேர் மறுபுறமும் அக்காலகட்டத்தின் முகங்களாக ஆகினர். தத்துவ தரப்பில் இதே முரண் கருத்துமுதல்வாதம் x பொருள்முதல்வாதம் என்று பரிணமித்ததாக சொல்லலாம்.
ஒரு வகையில் ரூசோவிலிருந்து கற்பனாவாத கவிஞர்களும், நவீன இலக்கியவாதிகளும் உருவாகி வந்ததாக சொல்லலாம். வால்டேரின் தூய அறிவுத்தறப்பின் நீட்சியாக தர்க்க நேர்நிலையாளர்கள் (logical positivists) உருவாகிவந்தனர். அவர்களிடமிருந்து நவீன அறிவியலாளர்கள் உருவாகி வந்தனர்.
இன்று நம் உலகத்தை கட்டமைக்கும் முரண் தத்துவம்-கலை-இலக்கிய நோக்குக்கும் அறிவியல்-தொழில்நுட்ப நோக்குக்குமானது. ஆனால் அடிப்படையில் இது அறிதல்முறை சார்ந்த, உலகுநோக்கு சார்ந்த முரண் என்பது இந்த விவரிப்பு மூலம் தெளிவாகியிருக்கும்.
இந்த முரணை முன்னிட்டு சி.பி.ஸ்னோ என்ற அறிஞர் 1950-களில் ‘இரண்டு கலாசாரங்கள்’ (The Two Cultures) என்ற பெயரில் ஒரு முக்கியாமன் கட்டுரையை எழுதினார். சி.பி.ஸ்னோ ஒரு அறிவியலாளர் மட்டுமல்லாது ஒரு புனைவெழுத்தாளரும் கூட. அவர் இந்த முரணை முன்வைத்து விரிவாக பேசிய காலம் குறிப்பிடத்தக்கது.
1950-கள் இரண்டு உலகப்போர்கள் முடிந்திருந்த காலகட்டம். போர் காலங்களில் எப்போதுமே தொழில்நுட்பம் வளர்ச்சி அடையும் என்பது வரலாற்றுண்மை. எனினும் இரண்டு உலகப்போர்களுக்குப் பின் ஏற்பட்ட மாறுதல்களின் வீச்சில் தான் நாம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற வகையில் அந்த காலகட்டம் நமக்கு முக்கியமானது. இந்த காலகட்டத்துக்கு பிறகு அறிவியலும் சரி, மானுடவியலும் (humanities) சரி, மேலும் மேலும் நுட்பமாகி தனித்தனி அறிவுத்துறைகளாக பிரிந்துசென்றது.
இன்று ஒரு சராசரி அறிவியலாளருக்கு மொழியியல் சார்ந்தோ குறியீட்டியல் சார்ந்தோ பின்நவீனத்துவம் சார்ந்தோ அடிப்படை அறிமுகம் இல்லை. மானுடவியல் தரப்பில் இயங்கும் எழுத்தாளர்கள் கலைஞர்கள் அறிஞர்களுக்கும் பெரும்பாலும் அறிவியலின் அறிதல்முறை சார்ந்த புரிதல் இல்லை. அறிவியலில் நிகழும் பாய்ச்சல்கள் ஒரு அறிவியக்கத்தின் வளர்ச்சியின் படிநிலையாக அல்லாமல் பெரும்பாலும் வெறும் தகவல்களாகவே ஒரு பொது வாசகருக்கு இன்று வந்து சேர்கிறது. இந்த பின்னணியில் தான் இன்று அறிவியல் புனைக்கதைகள் எழுதப்படுகின்றன.
அறிவியல் புனைவு என்ற இலக்கிய வகைமை
சி.பி.ஸ்னோ ‘இரண்டு கலாசாரங்கள்’ கட்டுரையை எழுதிய 1950-கள் அறிவியல் புனைவெழுத்தின் பொற்காலம் என்று இன்று சொல்லப்படுகிறது (‘Golden Age of Science Fiction’). அந்த காலகட்டத்தில் அறிவியல்புனைவு என்ற இலக்கிய வகைமை (genre fiction) ஓர் இயக்கமாக தொடர்ந்து எழுதப்பட்டது. அதன் பிறகு இன்று வரை தொடர்ந்து வெவ்வேறு வகையில் புனைவுக்குள் அறிவியல் புகுத்தப்பட்டு கதைகள் எழுதப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.
ஒவ்வொரு காலத்திலும் மானுடத்துக்கும் அறிவியலுக்குமான ஏற்பு-மறுப்பு உறவின் அடிப்படையில் அறிவியல் புனைவின் வடிவம் மாறுபடுகிறது. அடிப்படையிலேயே ஒரு அறிதல் முறை என்ற ரீதியல் அறிவியலுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள முரண், அறிவியல் புனைவின் கட்டுமானத்திலும் வடிவிலும் கதைச்சமைப்புகளிலும் பரிணமிக்கிறது. என்னேரமும் பூசலிட்டுக்கொள்ளும் இருவேறு ஆளுமைகளான அம்மா-அப்பாவுக்கு பிறந்த குழந்தையாக அறிபுனை வடிவை காணலாம். அவர்களது தனித்தன்மைகளும் சரி, முரண்களும் சரி, அதில் வெளிப்படுகிறது.
ஒரு உதாரணமாக, ஒரு எளிய கதைவடிவை முன்வைக்கலாம். எதிர்காலத்தில் ஒரு அவலச்சூழலின் (dystopia) பின்னணியில், மானுடரில் பலரும் படிப்படியாக தங்களது கண்பார்வையை இழக்கத்தொடங்குகிறார்கள். இதற்குக் காரணம் நாம் சாதாரணமாக காணும் நிற-ஒளிவரிசைப் பட்டையை உள்வாங்கும் கண்ணின் செல்கள் அறியமுடியா காரணத்தால் திடீரென்று மரித்துப்போகின்றன என்று கண்டுகொள்ளப்படுகிறது.
இதனை ஈடுசெய்ய ஒரு அறிவியலாளர் பாம்பின் கண்களிலிருந்து ஒரு புரோட்டீனை எடுத்து மனிதக்கண்ணுக்குள் பொருத்துகிறார். இந்த புரோட்டீன் நிறவரிசைப் பட்டையைத்தாண்டி, அகச்சிவப்பு (infra-red) ஒளியை வெப்பமாக கண்டடையக்கூடியது. இதன் மூலம் அந்த மனிதருக்கு வேறுவிதமான பார்வை கிடைக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது ஒரு அசலான அறிவியல் ஊகம். கண்பார்வை இழந்தவர்களுக்கு ஒரு மாற்று சிகிச்சையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இன்று இதை நோக்கி சோதனைகள் மேற்கொண்டுபட்டு வருகின்றன.
அதே நேரத்தில், புனைவின் பரப்புக்குள் இது எழுப்பும் கேள்விகள் எல்லாமே மேலதிக அர்த்தம் கொண்டது. கவித்துவமானது. பார்வை என்றால் என்ன என்ற அடிப்படை கேள்வியை கையாள்வது. ‘பாம்புக்கண்’ என்ற குறியீடு அந்த புனைவுலகில் என்ன பொருள் கொள்கிறது என்பதிலிருந்து விரியும் இக்கதை. சுற்றியிருக்கும் வெப்பத்தை மட்டும் உள்வாங்குகையில் ஒரு மனிதனின் பார்வை எப்படி மாறுபடும்? அவனால் காம-குரோத-மோகங்களை எளிதாக கண்டுகொள்ளமுடியுமா? இந்த நுண்ணுணர்வுக்கு புனைவு கட்டமைக்கும் உலகப்பரப்பில் அர்த்தமென்ன? அந்த உலகின் அறிவியல்நோக்கை பற்றிs இந்தக்கதையில் வரும் ‘மாற்றுப்பார்வை’ என்ன சொல்ல வருகிறது? இப்படியான கேள்விகளை அறிவியலாளர் ஆய்வுகூடத்தில் கேட்கமுடியாது ஆனால் புனைவெழுத்தாளர் புனைவுபரப்புக்குள் சோதனை நிகழ்த்தி கேட்டுப்பார்க்கலாம்.
சாராம்சமாக, அறிபுனை என்ற இலக்கிய வகைமையை மூன்று அலகுகளின் அடிப்படையில் புரிந்துகொள்ளலாம்:
- அறிபுனை என்பது அறிவியல் x கலை/இலக்கியம் என்ற முரணியக்கம் சார்ந்து இயங்கும் ஒரு வடிவம்
- இரண்டு பெரும் அறிதல் முறைகளின் செல்வாக்கு அதனில் இருக்கிறதென்பதால், வாழ்வின், மானுடத்தின் ‘பெரிய கேள்விகளை’ கேட்டு கண்டறியும் சாத்தியம் இவ்வடிவினில் இயல்பாகவே அடங்கியுள்ளது
- ஒவ்வொரு காலத்திலும் மானுடத்துக்கும் அறிவியலுக்குமான ஏற்பு-மறுப்பு உறவின் அடிப்படையில் அறிவியல் புனைவின் வடிவம் மாறுபடும்.
அறிவியல் புனைவு என்றால் என்ன?
அறிவியல் புனைவு என்றால் என்ன என்று வரையறுக்க முற்படும்போது ஒரு சிக்கல் உருவாகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இதன் வடிவம் மாறிவந்துள்ளது என்பதால் வரையறைகளும் அருதியாக இல்லை. ஒரு தொடக்கமாக, அறிபுனை என்னும் வடிவம் என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது என்று ஆராயலாம்.
அடிப்படையில், அறிபுனை என்பது:
- அறிவியல் கூறுகளை ஏதோ வகையில் தன்னில் கொண்டுள்ள ஒரு கதை
- ஆனால் அது அறிவியல் அல்ல. அதன் தர்க்க முறைமை அறிவியல் சார்ந்ததல்ல. நிரூபணவாதம், பொய்பித்தல்வாதம் போன்றவற்றுக்கு அறிவியல் புனைவில் மையமான இடம் இல்லை. அதன் தர்க்கமுறை புனைவு சார்ந்தது. குறியீடுகள் சார்ந்தது. அறிவியலின் தர்க்கத்தை போல அது புனைவுபடுத்தி கதைக்குள் ஒன்றை கட்டமைக்க முயலும் (அசிமோவின் மூன்று விதிகளைப்போல). இன்று எழுதப்படும் அறிவியல் கதைகள் அறிவியல் தர்க்கமே குறியீடு ஆகும் தளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன .
- பெரும்பாலும் அறிவியல் கதைகளில் யதார்த்தத்தை மீறிய புதிய உலகங்கள் உருவாக்கப்படுவதை நாம் காணலாம் (world-building). இந்த அம்சத்தில் இவை புராணன்க்கதைகள், உருவகக்கதைகள், ஃபாண்ட்ஸி கதைகளை ஒட்டி வருகின்றன.
- ஏதோ ஒரு வகையில் ஒரு ஊகத்தை முன்வைக்கின்றன.
ஒரு புனைவு வடிவமாக அறிவியல் புனைவின் இடம் என்ன? – ஒரு வரலாற்று பார்வை
அறிபுனை என்பது அடிப்படையில் ஒரு புனைவு வடிவு என்பதை நாம் பார்த்தோம். புனைவுபரப்பின் வரலாறில் அறிவியல் புனைக்கதைகளின் இடம் என்ன? அவை எப்போது எழுதத்தொடங்கப்பட்டன? அவற்றின் எல்லைகள் என்ன?
ஆதிகாலம் முதலாகவே மனிதன் தன்னையும் தன்னுடைய சுற்றத்தையும் புரிந்துகொள்ள கதைகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறான். தன்னால் அறியமுடியாதவற்றை, புரிந்துகொள்ள முடியாதவற்றை விவரிக்க புனைவை நாடுகிறான். புனைவின் நெகிழ்வில் நிகழ்தர்க்கத்துள் சிக்காத உண்மைகள் கனவாக கவித்துவமாக புரியக்கிடைக்கின்றன. ஆரம்பகாலத்தில் மனிதர்களின் புனைவுகள் புராணங்களாக, கட்டுக்கதைகளாக, தேவதைக்கதைகளாக, உருவகக்கதைகளாக, நாடகங்களாக, மிகைத்தருணங்கள் கொண்டவையாக இருந்தன. அவை யதார்த்தத்தை மீறியே இருந்தன.
நவீன காலகட்டத்தில் தான் யதார்த்தவாத புனைவுக்கான தேவை உருவானது. கூட்டுச்சமூகத்தில் மனிதனின் இடம், நவீனச்சமூகத்தின் அழுத்தம், சமூகத்தில் அவன் அன்னியமாதல் போன்றவற்றை பேச இந்த வடிவம் தேவைப்பட்டது. நவீன உலகம் மனிதனை ஆச்சரியத்துக்கும் அதிர்ச்சிக்கும் அயர்ச்சிக்கும் உள்ளாக்கியபடியே இருந்தது. இதை சொல்ல ‘முனையில் திருப்பம்’ வைத்த சிறுகதை என்ற வடிவம் உருவானது. மொத்த வாழ்க்கைப்பரப்பின் விரிவையும் பொருளையும் பொருளின்மையையும் சொல்ல நாவல் என்ற வடிவம் உருவானது.
பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை பெரும்பாலும் யதார்த்தவாத சிறுகதைகளும் நாவல்களும் தான். ஆனால் அதே நேரத்தில் இன்னொரு இழையாக மிகையதார்த்த கதைகளும் எழுதப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. கொல்ட்ரிட்ஜ், வில்லியம் பிளேக் முதலிய கவிஞர்களின் உலகப்பார்வை வழியாக உருவான படைப்புலகம் ஒன்று அமைந்தது. வாஷிங்டன் இர்விங், எட்கர் ஆலன் போ முதல் ஹெர்மன் மெல்வில் வரை மிகைப்புனைவு வடிவங்களை வெவ்வேறு வகைகளில் கையாண்டவர்களே. இன்றைய அறிவியல் புனைகதைகளை ஒரு விதத்தில் இந்த மரபின் நீட்சியாக பார்க்கலாம்.
உலகத்தின் முதல் அறிவியல் புனைகதை என்று கருதப்படும் மேரி ஷெல்லியின் ‘ஃபிராங்கின்ஸ்டை’னே அடிப்படையில் ஒரு பேய்க்கதையின் வடிவை கொண்டது. 1820களில் எழுதப்பட்ட இந்தக்கதையில் ஃபிராங்கின்ஸ்டைன் என்ற அறிவியலாளர் தன்னுடைய விஞ்ஞான சோதனைகள் வழியாக ஒரு பேயுருவை உருவாக்குகிறார். குழந்தை போன்ற தன்னுடைய ஆக்கத்தை தானே அழிப்பதா என்று விசனப்படுகிறார். பின்னாளில் எழுதப்பட்ட அனேக அறிபுனை வடிவங்களுக்கும் கேள்விகளுக்கும் இந்தக்கதை முன்னோடி. இந்தக்கதையில் அறிவியலின் கட்டற்ற வளர்ச்சிக்கு எதிரான ஒரு மனநிலையை காணமுடிகிறது. இத்தனைக்கும் இந்தக்கதை எழுதப்பட்ட காலத்துக்கு பின் தான் நவீனகாலகட்டத்தின் மிகமுக்கியமான அறிவியல் கருதுகோள்களான பரிணாம வளர்ச்சி, மின்காந்தவியல், மரபணுவியல் முதலியவை கண்டுகொள்ளப்பட்டன.
19ஆம் நூற்றாண்டின் பின்பகுதியில், காலனிய காலகட்டத்தில், தொழிற்நுட்ப வளர்ச்சிகள் உருவாகிக்கொண்டிருந்தன. உலகம் சுருங்கிக்கொண்டிருந்தது. அப்போது எழுதப்பட்ட அறிவியல் சார்ந்த புனைகதைகளெல்லாம் பெரும்பாலும் சாகஸக்கதைகள். புவியின் எல்லைகளை அறிய முயற்சிசெய்துகொண்டே இருந்தன. எச்.ஜி.வெல்ஸ், ஜூல்ஸ் வெர்ன் இவ்வகை புனைவுகளை எழுதியிருக்கிறார்கள்.
இந்த காலகட்டத்தைத்தொடர்ந்தும் அறிவியல் புனைகதைகள் தொடர்ந்து எழுதப்பட்டன. நவீன யுகம் உருவாகி வந்துகொண்டிருந்தது. எதிர்கால கனவுகள், கற்பனைகள், அறிவியல் மீதான நம்பிக்கை சார்ந்து நிறைய கதைகள் எழுதப்பட்டன.
இறுக்கமான அறிபுனைவும் நெகிழ்வான அறிபுனைவும்
அமெரிக்காவில் ‘அறிபுனையின் பொற்காலம்’ என்று கருதப்படும் காலகட்டம் இரண்டு உலகப்போர்களுக்கு பின்வந்த ஆண்டுகள் என்று முன்பு பார்த்தோம். இரண்டு பெரும்போர்கள் முடிந்திருந்தன. இரண்டுமே தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியால், பேரழிவை உருவாக்கி நிகழ்ந்துமுடிந்திருந்த போர்கள். போர் பதற்றம் அடங்காத காலகட்டம். பனிப்போரினால் அச்சுருத்தல் இருந்தது. ஆகவே அறிவியலாளர்களும் பொறியியலாளர்களும் புதுயுக நாயகர்களாக வழிபடபட்டார்கள்.
1950கள்-60களில் எழுதப்பட்ட அறிவியல் புனைவு இந்த காலகட்டத்தின் நம்பிக்கைகள் ஐயங்கள மொத்தத்தையும் தன்னுள் உள்வாங்கி கொண்டுள்ளதை காணலாம். அறிவியல்மீது பெருத்த நம்பிக்கை இருந்த காலம். இந்த காலகட்டத்தில் வல்லமையே அறம் என்ற நம்பிக்கை இருந்தது. அறிபுனை கதைகளும் தனிமனிதனை பிரதான படுத்தியபடி எழுதப்பட்டன. நவீனத்துவ கூறுகள் கொண்டிருந்தன.
அறிபுனைகதைகளும் அறிவியலை நேரடியாக அணுகின. விரிவான வகையில் அறிவியல் கருதுகொள்களை, சோதனைகளை, ஊகங்களை முன்வைத்தன. இக்கதைகளில் அறிவியல் நம்பகத்தன்மை என்பது ஒரு விமர்சனப்புள்ளியாகவே கொள்ளப்பட்டது. முக்கியமாக, இவை அறிவியல் சார்ந்து ஒரு ஊகத்தை முன்வைத்தன. இந்த காலகட்டத்து அறிவியல் கதைகள் genre fiction என்ற வகையில் சில குறிப்பிட்ட இதழ்களில் மட்டுமே பிரசுரம் கண்டன. எழுதியவர்கள் பெரும்பாலும் தொழில்முறை பொறியாளர்கள், அல்லது தொழில்நுட்பபின்னணி கொண்டவர்கள். பெரும்பாலும் ஆண்கள். சிறுபிள்ளையின் சாகஸ மனநிலையை கொண்டவர்கள். வாசகர்களும் இக்கதைகளை அறிவியல்ரீதியாக விமர்சிக்கும் பார்வையுடைய, சாகஸக்கதைகளை விரும்பி வாசிக்கக்கூடிய ஒரு சிறுவட்டத்தினர். ஐசக் அஸிமோவின் ‘எவிடென்ஸ்’ என்ற கதை இந்த வகைமைக்கு ஒரு சிறந்த மாதிரி. இன்று இதனை ‘இறுக்கமான அறிபுனை’ (Hard Science Fiction) என்ற பதத்தால் அழைக்கிறார்கள்.
1960கள்-70களில் அமெரிக்காவில் பல சமூக மாற்றங்கள் நிகழ்ந்தன. வியட்னாம் போருக்குப்பின் போர் மீதான் கசப்பு உருவானது. சமாதானத்துக்கான விழைவு ஏற்பட்டது. அதிகார அமைப்புகள் மீதான நிராசை உருவாகத்தொடங்கியது. பெண்ணியம், சூழியல் போன்ற மாற்று உலகப்பார்வைகள் உருவாகிவரத்தொடங்கின. வரலாறை ஒரு கட்டமைப்பு என்றும் அதிகாரம் என்றும் பார்க்கும் பின்நவீனத்துவ பார்வை உருவாகியது. கருணையே அறம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் அறிவியல் அதிகாரம் மீது ஏற்பட்ட ஐயமும் சமூகநலப்பார்வையும் அறிவியல் புனைகதைகளில் வெளிப்பட்டது.
இக்கதைகள் பொதுவாக அறிவியலின் ஒரு கூறை மட்டும் கதைக்களத்தை உருவாக்க எடுத்துக்கொண்டது. அறிவியல் புனைவென்றாலும் அவை முன்வைத்த கேள்விகளும் ஊகங்களும் மானுடமும் சமூகமும் சார்ந்தவை. இக்கதைகள் பொதுவான வாசகர் பரப்பை நோக்கி எழுதப்பட்டது. எழுதியவர்களில் நிறைய பெண்கள் இடம்பெறத்தொடங்கினார்கள். அறிவியலை நெகிழ்வுபடுத்தி ஒரு கதைகட்டுமான உக்தியாக மட்டுமே கதைப்பரப்பில் பயன்படுத்திய இவ்வகை புனைவுகளை ‘நெகிழ்வான அறிபுனை’ (Soft Science Fiction) என்ற பதத்தால் அழைத்தார்கள். அர்சுலா ல குவினின் ‘Solitude’ என்ற கதை இந்த வகைமைக்கு நல்ல உதாரணம்.
ஊகப்புனைவு – அறிபுனையின் நெகிழ்வுத்தன்மை
இன்று எழுதப்படும் அறிவியல் சார் புனைவுகள் அறிவியலை கதைக்குள் வெவ்வேறு நெகிழ்ச்சிநிலைகளில் கையாள்கிறன. ஆனால் அவற்றுக்கு பொதுவான கூறு அவை அனைத்துமே கதைக்குள் ஏதோ விதத்தில் ஓர் ஊகத்தை முனவைக்கின்றன என்பதாகும். அது அறிவியல் சார்ந்து இருக்கலாம், மானுடத்தை சார்ந்து இருக்கலாம், சமூகத்தை சார்ந்தும் இருக்கலாம்.
இன்று எழுதப்படும் இவ்வகை புனைவுகள் பலவற்றில் அறிவியல் கூறே இருப்பதில்லை. அல்லது ஒரு புதுவுலகை சமைத்து நம்பவைக்கும் அளவுக்கு மட்டுமே கதைக்குள் அறிவியல் இருக்கிறது. ஆனால் அவை மனிதனை பற்றி, மானுட மனத்தை பற்றி ஓர் ஊகத்தை முன்வைக்கின்றன். இவை பெரும்பாலும் மிகைப்புனைவம்சங்கள் கொண்டுள்ளன. ஆகவே இவற்றை ‘ஊகம் ஒன்றை முன்வைக்கும் மிகைப்புனைவு’ என்கிறார்கள் (Speculative fantasy). இறுக்கமான அறிபுனைவு, நெகிழ்வான அறிபுனைவு, மிகை ஊகப்புனைவு என்ற மூன்று வடிவங்களையும் மொத்தமாக ‘ஊகப்புனைவு’ என்ற குடைக்கடியில் இன்று பேசப்படுகின்றன.
ஆக இன்று அறிவியல் புனைகதைகள் கொண்டுள்ள மாற்றத்தை ஒரு எளிமையான சட்டகம் மூலமாக புரிந்துகொள்ளலாம். கதையின் அறிவியல் நம்கத்தன்மையின் அடிப்படையில் அவை மையத்திலிருந்து விரிந்துசெல்கின்றன. இறுக்கமான அறிபுனை, நெகிழ்வான அறிபுனை, மிகை-ஊகப்புனை என்று வட்டங்களை உருவாக்கலாம். இவை அனைத்தையும் ‘ஊகப்புனைவு’ என்று கொள்ளலாம். மிகைப்புனைவு, மாய-யதார்த்தவாதம் போன்ற வகைகள் இவற்றுக்கு மிக நெருங்கியவை, ஆனால் இவற்றில் அறிவியல் அம்சம் இருக்கவேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக இருப்பதுமில்லை. இன்று பரவலாக எழுதப்படும் dystopian fantasy கதைகள் இந்த வகைமையை சேர்ந்தவை. உதாரணம், இந்த ஊட்டி அரங்கிலேயே கமலக்கண்ணன் அவர்கள் விவாதத்துக்கு எடுத்த ‘சிவப்புநூலிழை’ என்ற கதை. இந்த வகைமைகள் அப்படியே விரித்தபடி சென்றால் பழைய கதைசொல்லல் முறைகளான புராணங்கள், பேய்க்கதைகள், உருவகக்கதைகள், தேவதைக்கதைகள் போன்ற வடிவங்களில் சென்று சேரும். ஆக அறிவியல் புனைவு ஒரு புனைவு வடிவமாக யதார்த்தவாத எழுத்தோடு கொண்டுள்ள உறவை விட பழையபாணி கதைசொல்லல் முறைகளுடனேயே இன்னும் நெருக்கமான உறவு கொண்டுள்ளது.
இன்றைய அறிபுனைத் திரைப்படங்கள் பலவும் இந்த கதைச்சட்டகத்தினுள் பொருந்துபவையே. ‘இண்டர்ஸ்டெல்லார்’ இறுக்கமான அறிபுனைக்கான உதாரணம். அறிவியல் நம்பகத்தன்மை கொண்ட அறிபுனைக் கதை. அசலான அறிவியல் ஊகம் ஒன்றை முன்வைக்கிறது. ஆனால் ‘கிராவிட்டி’ நெகிழ்வான அறிபுனை. அதன் அமைப்பு அடிப்படையில் ஒரு நவீன தேவதைக்கதையுடையது. கதாநாயகியின் மன அழுத்தத்தையும் மீட்சியையும் கவித்துவமாக சொல்வது. அதற்கு அறிவியல் உலகை ஒரு யுக்தியாக பயன்படுத்திக்கொள்கிறது. அக்கதையில் அண்டவெளி, அதன் எல்லையின்மை, கருமை, அழுத்தம் எல்லாமே குறியீடுகளாக இடம்பெருகின்றன. ‘இன்செப்ஷன்’ ஒரு சுவாரஸ்யமான ஊகத்தை முன்வைக்கிறது. ஆனால் கதைக்குள் அதற்கு எந்தவித அறிவியல் முகாந்திரத்தை அளிக்கவில்லை. ஒருவாரான ‘அறிவியல்தன்மை’யோடு கதை அமைக்கப்பட்டுள்ளது, அதுவே அதன் நம்பகத்தன்மையை உருவாக்குகிறது. அதனை ‘மிகை ஊகப்புனைவு’ என்று வகைப்படுத்தலாம்.
அறிபுனை இன்று
இன்று எழுதப்படும் அறிபுனை கதைகளில் உள்ள நெகிழ்ச்சி ஒருவகையில் இந்த எல்லைகளை கடந்து தூய கதைகளாக நிற்க முற்படுவதன் வழியாக உருவாகி வருகிறது. இன்று எழுதப்படும் அறிவியல் கதைகளின் மிகச்சிறந்த சாத்தியங்கள் மூன்று வகைகளில் வெளிப்படுகின்றன.
- கவித்துவம் – இன்றைய அறிவியல் கதைகள் அறிவியலை வலுவான கவித்துவ படிமங்களாக உருவகித்துக்கொள்கின்றன. கதைக்குள் அறிவியல் சோதனையை, அல்லது கோட்பாடை, குறுந்தகவல்களின் தொகையாக இயற்கைவாத பாணியில் முன்வைக்கின்றன. ஆனால் ஒவ்வொரு சிறு தகவலும் வேறொன்றை சுட்டுவதால் அது கவித்துவமாகிறது. இடைவெளிகளை உருவாக்குகிறது. அதன் வழியே தத்துவார்தமான விசாரங்களை கதைத்தளத்துக்குள் நிகழ்த்தப்படுவதற்கான சாத்தியத்தை உருவாக்குகிறது. செவ்வியல் ஆக்கங்களாக நிற்கும் சாத்தியத்தை உருவாக்குகிறது. டெட் சியாங்கின் ‘Exhalation’ என்ற கதை இந்தப்பாணிக்கதைக்கு ஒரு சிறந்த உதாரணம்.
- வகைமைகலப்பு – இப்போது எழுதப்படும் அறிவியல் கதைகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட வகைமைக்குள் தன்னை நிறுத்திக்கொளவதில்லை. இன்று அறிவியல் கதை சொல்ல முற்படுவது அறிவியலை அல்ல, அறிவியலை ஒரு யுக்தியாகக்கொண்டு மொத்த மானுடக்கதையை. ஆகவே இன்று ஒரு அறிவியல் கதைக்குள் யதார்த்தவாதம் வரலாம். மிகைபுனைவு வரலாம். மாய யதார்த்தவாதம் வரலாம். சர்ரியலிசம் வரலாம். வரலாறு வரலாம். புராணமும் வரலாம். டெட் சியாங்கின் ‘Story of your Life’ கதை இந்த பாணிக்கான ஒரு நல்ல உதாரணம். ஒரு யதார்த்தவாத கதையையும் ஒரு கவித்துவமான அறிபுனை கதையையும் ஒன்றோடொன்று ஊடுபாவும் வடிவம் கொண்டது. ஒரு விதத்தில் இவற்றை ‘அறிவியல் கதைகள்’ என்பதை விட ஒரு புதிய புனைவு சாத்திய வடிவம் என்றே நாம் பார்க்கத்தொடங்கலாம்.
- பிரபஞ்ச வரலாற்று நோக்கு – புனைவில் என்றுமே உள்ள ஒரு சவால் அதற்குள் வரலாற்றை எப்படி எழுதுவது என்பதுதான். ஆனால் இன்றுவரை புனைவுகள் கையாண்ட வரலாறு எழுதப்பட்ட வரலாறு. அகழ்வாராய்ச்சி, மொழியியல், சமூகவியல் போன்ற துறைகளிலிருந்து அதற்கான தரவுகளை பெற்றுக்கொள்கிறது. இன்னும் புனைவுப்பரப்பில் உயிரியல் வரலாறும் பிரபஞ்சவியல் வரலாறும் (biological history, cosmological history) எழுதப்படவில்லை. புனைவுக்குள் அறிவியல் தரிசனத்தளத்திலாவது வராமல் இவை எழுதப்படமுடியாது. இந்த உக்தியைக்கொண்டு டெரென்ஸ் மாலிக்கின் ட்ரீ ஆஃப் லைஃப் திரைப்படத்தில் வருவதுபோல் ஒரு யதார்த்தவாத நிகழ்வுக்கு பிரபஞ்சவியலில் காரணத்தை தேடலாம். அல்லது புனைவின் வழியாக ஒரு வரலாற்றுநிகழ்வுக்கு பின்னணியாக உள்ள மரபணுவியல் காரணங்கள் பரிசோதிக்கப்படலாம். மைட்டோகான்றியல் டி.என்.ஏ தரவுகளைச்சார்ந்து நம்முடைய குரங்கின முன்னோர்கள் வரை ஒரு வரலாற்றை புனைவுக்குள் எழுதிப்பார்க்கலாம்.
இவ்வாறு பல தளங்களில் பறந்து விரிந்து பேச எத்தனிக்கும் எழுத்துக்கள் அதுக்கான பிரத்யேக வடிவங்களை உருவாக்கிக்கொள்ளவேண்டிய சவால் இன்றுள்ளது. செவ்வியல் சிறுகதையின் வடிவம் இவற்றைச்சொல்ல போதாது. ஆகவே இந்த கூரல்முறைகள் வழியாக சிறுகதை இலக்கணமும் மாறுபாடு காணலாம். இன்றைய அறிபுனை எழுத்து அதை நோக்கிய ஒரு நகர்வென்று நினைக்கிறேன்.
இவ்வகை எழுத்துக்கள் கலைக்களஞ்சியங்களைப்போல இருக்கும். பழைய புராணகாவியங்களைப்போல் கிளைக்கதைகளும் ஊடுபாவுகளும் புனர்ஜன்மக்கதைகளும் மறுஜன்மக்கதைகளும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டிருக்கும். காலத்திலும் நிலத்திலும் வெளியிலும் தாவிச்செல்லும். நவீன அறிவியலையும் தத்துவத்தையும் தடையின்றி பேசும். நவீன செவ்வியலாகவும் நவீன புராணமாகவும் நிற்கும். இதைநோக்கியே இன்றைய அறிபுனை நகர்வுகொண்டுள்ளது.
சுசித்ரா ராமச்சந்திரன்